தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கான சேது சமுத்திரத் திட்டத்தை மதத்தைக் காரணம் காட்டி எதிர்க்கும் பார்ப்பனர்கள் எடுத்து வைத்த வாதங்கள் அனைத்துக்கும் மறுப்புகள் தெரிவிக்கப்பட்டு அவர்களின் வாதங்கள் தவிடுபொடியாக்கப்பட்ட பிறகும், இது ‘இந்துக்களின் நம்பிக்கை’ என்று கூறி திட்டத்துக்கு எதிராக, மதவெறி இயக்கத்தை நடத்துகிறார்கள்.

இந்துக்களின் காவலர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் இவர்களைப் பார்த்து கேட்கிறோம், தமிழ்நாட்டில், காமராசர் ஆட்சி, அண்ணா ஆட்சி, கலைஞர் ஆட்சி, எம்.ஜி.ஆர். ஆட்சி என்று ஆட்சியிலிருந்த அனைத்து ஆட்சிகளும், ஒருமித்து வலியுறுத்திய திட்டம் தானே, சேது சமுத்திரத் திட்டம்? தமிழகத்தின் அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமித்து குரல் கொடுத்த திட்டம் தானே, சேது சமுத்திரத் திட்டம். நாங்கள் கேட்கிறோம், உங்களுடைய பார்வையில், இத்தனை முதலமைச்சர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும், ‘இந்துக்கள்’ தானே!

இந்த சேது சமுத்திரத் திட்டம் அமுலாகும்போது, அதனால் உருவாகக்கூடிய தொழில், பொருளாதார வளர்ச்சியில் பயனடையப் போவது, தென் பகுதியில் வாழும் நீங்கள் கூறும் இந்துக்கள் தானே! உண்மையிலே இந்துக்களின் காவலர்கள் நீங்கள் தான் என்றால், ‘இந்து’க்கள் பயனடையும் திட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்? நீங்கள் வெகு இந்து மக்களின் உரிமைகளுக்காக இயக்கம் நடத்துபவர்கள் அல்ல. வெகு மக்களை அடக்கியாளத் துடிக்கும் பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக ‘ராமனை’த் தூக்கிக் கொண்டு வருகிறீர்கள். நீங்கள் பேசும் ‘இந்துத்துவா’வும், ‘இந்து ராஜ்யமும்’ - கோடானுகோடி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இந்துக்களின் உரிமைகளுக்காக அல்ல; மாறாக பார்ப்பனர்களின் மேலாண்மைக்காகத்தான் என்று நாங்கள் குற்றம்சாட்டுகிறோம்.

மதநம்பிக்கையும், கடவுள் நம்பிக்கையும், அவரவரின் தனிப்பட்ட நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால் இந்த நம்பிக்கைகள், சமுதாயத்தின் வளர்ச்சியிலோ அரசின் திட்டங்களிலோ குறுக்கிடக்கூடாது என்பதற்குத்தான் மதச்சார்பின்மை கொள்கையை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். கடவுள், மத நம்பிக்கையைக் காட்டித்தான் ‘தீண்டாமை’ நிலைநிறுத்தப்பட்டது. கோயில்களுக்குள்ளும் அதே நம்பிக்கையில் தான் தீண்டாமை கோலோச்சியது.

உடன்கட்டை ஏறுதலும், பால்ய விவாகமும், தேவதாசி முறையும் கடவுள், மத நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே நியாயப்படுத்தப் பட்டன. இந்த மத நம்பிக்கைகளுக்கு எதிராகத் தான் இந்த சமூக அவலங்கள், சட்டம் போட்டு தடுக்கப்பட்டன. குழந்தைகளைத் தருவது ஆண்டவன் செயல் என்ற மத நம்பிக்கைக்கு எதிராகத்தான் குடும்பக் கட்டுப்பாடு திட்டமே வந்தது. மத நம்பிக்கையில் அரசு தலையிடக் கூடாது என்று, தோள் தட்டி தொடை தட்டிப் புறப்பட்டிருக்கும், பார்ப்பனக் கூட்டத்தைக் கேட்கிறோம்: நீ கூறும் மத நம்பிக்கையை ஏற்றுக் கொண்டிருந்தால், இந்த சமூகக் கொடுமைகள் தடுக்கப்பட்டிருக்குமா? இதைச் செய்வதற்கு கடமைபட்டதுதானே மதச் சார்பற்ற அரசு!

தோழர்களே! நன்றாக சிந்தித்துப் பாருங்கள்! காமராசர் ஆட்சிக் காலத்திலிருந்து கலைஞர் ஆட்சி காலம் வரை மக்களின் ஒருமித்த உணர்வோடு முன் மொழியப்பட்ட, சேது சமுத்திரத் திட்டம் இன்று உச்சநீதிமன்றத்தால் முடக்கப்பட்டுக் கிடக்கிறது. எதற்காக? சுப்பிரமணியசாமி என்ற ஒற்றைப் பார்ப்பான் வழக்கு தொடுத்ததற்காக! என்ன சொன்னார், இந்த மனிதர்? ஆதம் பாலம் - புராதன வரலாற்றுச் சின்னம். வரலாற்றுச் சின்னத்தை அழிக்கக் கூடாது என்று வழக்குப் போட்டார். அப்படி வழக்கு மனுவில் போடப் பட்டிருந்ததால் தான், மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறை, இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டிய அவசியமே வந்தது.

இது பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள் என்ற பட்டியலிலே வராது. இப்படிப்பட்ட, மணல் திட்டுகள் பல பகுதிகளில் இருக்கின்றன என்று கூறிய தொல் பொருள் ஆய்வுத் துறை, அது வரலாற்றுச் சின்னம்தானா என்ற கேள்விக்கும் பதிலளிக்க வேண்டியிருந்தது. அதனால்தான் இராமாயணம் என்பது மதிக்கப்படக்கூடிய காவியமாக இருந்தாலும், அது வரலாறு அல்ல; அதில் வரும் பாத்திரங்கள் வரலாற்றுப் பாத்திரங்கள் அல்ல என்று தொல்பொருள் ஆய்வுத் துறை விளக்கம் தர வேண்டிய அவசியம் நேர்ந்தது. ஆனால், என்ன நடந்தது?

அடுத்த நாளே - குஜராத்தில், இந்துக்கள் ஓட்டு கிடைக்கா மல் போய்விடுமோ என்ற அச்சத்தில், காங்கிரஸ் ஆட்சி அந்த பிரமாண பத்திரத்தை திரும்பப் பெற்றது. அதற்காக தமிழக அரசையோ, கப்பல் துறை அமைச்சரையோ கலந்து ஆலோசித்ததாகவும் தெரியவில்லை. உச்சநீதிமன்றத்தில், உண்மையைச் சொன்னதற்காக இரண்டு அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டார்கள். அதில் ஒரு அதிகாரி தமிழர். எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் பார்ப்பன மிரட்டலுக்கு பணிந்து போய் நிற்கிறது என்பதற்கு, இதைவிட உதாரணம் வேண்டுமா? பிரமாண பத்திரத்தை திரும்பப் பெற்றதால், குஜராத்தில், காங்கிரஸ் கட்சி வெற்றிகளை வாரி குவித்து விட்டதா? இத்தகைய ஊசலாட்டமான ‘மென்மை இந்துத்துவா’ ஆதரவுப் போக்கினால் பார்ப்பன இந்துத்துவா சக்திகளை வெற்றிக் கொள்ள முடியாது என்பதை காங்கிரஸ் கட்சி புரிந்து கொள்ள வேண்டும்.

குஜராத் முதல்வர் மோடியைக் கொலை செய்ய வந்ததாக ஷராவுதீன் ஷேக் என்ற அப்பாவி முஸ்லீமை ‘போலி என் கவுண்டரில்’ மோடியின் காவல்துறை சுட்டுக் கொன்றது. ‘ஆம், அது போலி என் கவுண்டர் தான்’ என்று உச்சநீதிமன்றத்திலேயே குஜராத் அரசு ஒப்புக் கொண்டது. அதற்குப் பிறகும் அந்த மோசடி படுகொலையை நியாயப் படுத்திப் பேசினார் மோடி. இவரை ‘மரண வியாபாரி’ என்று சொல்லாமல், வேறு எப்படி அழைப்பது? அப்படி சோனியா பேசலாமா என்று காங்கிரசுக்குள்ளே யிருந்தும் பார்ப்பன சக்திகள் கேட்கின்றன. மோடிகள் ‘போலி என்கவுண்டர்’ என்றாலும் அதை நியாயப்படுத்துகிற அளவுக்கு தங்களது, மத வெறியில் உறுதியாக இருக்கிறார்கள்.

காந்தியை சுட்டுக் கொன்றான் கோட்சே! அதற்காக கோட்சேயைக் கண்டித்து சங்பரிவார் பொதுக் குழுவிலோ, மாநாட்டிலோ, இதுவரை, ஒரு கண்டனத் தீர்மானமாவது போட்டுள்ளார்களா?கிடையாது. காந்தி கொலை சரிதான் என்பதில் அவர்கள் உறுதியாகவே இருக்கிறார்கள். அதே பாசிச மரபில் தான் மோடியும் கொலைகளை நியாயப் படுத்துகிறார். இந்த கொலை வெறிக் கூட்டத்திடம் ‘மென்மையான இந்துத்துவா’ பேசி, வெற்றி பெற முடியுமா?

நெல்லை மனித நீதிப் பாசறைக் கூட்டத்தில் விடுதலை இராசேந்திரன் (டிச.30)