சொன்னதைச் சொல்லும் ‘கிளிப்பிள்ளை’ கல்விமுறை, தகவல்களை இட்டு நிரப்பும் ‘வங்கியியல்’ கல்விமுறை, சுய சிந்தனை உள்ளவர்களையும் அடிமைகளாக இருக்க மறுப்பவர்களையும் சலித்தொதுக்கும் ‘வடிகட்டல்’ கல்விமுறை என்று, நிலவும் கல்விமுறைகள் குறிந்த உலக அறிஞர்களின் விமர்சனங்களை உள்வாங்கிக்கொண்டு, ஒரு முற்போக்கான, மாற்றுக் கல்விமுறையை நோக்கிச் சர்வதேசச் சமூகங்கள் விவாதத்தை முன்னெடுத்திருக்கும் காலமிது.

ஆனால், கற்றலையும் கற்பித்தலையும் பற்றியெல்லாம் கவலையில்லாமல், கற்பிக்கும் மொழியில் - கல்வி மொழியில் - ஒரு எதிர்ப் புரட்சியைத் தொடக்கி வைத்துள்ளது தமிழக அரசு. மொழிப் போருக்கு சிறப்பான பாரம்பரியமுடைய தமிழ்நாட்டில், அனைத்து பொதுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியை தமிழக அரசே அறிமுகப்படுத்தியுள்ளது. 1985-ல் கூட, மத்திய அரசால் ‘நவோதய வித்தியாலய’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்தி-ஆங்கிலத் திணிப்பிற்கான பள்ளிகள் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. ஆனால் தற்பொழுது ‘ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா’ என்ற பெயரில், அரசு மற்றும் தனியார் கூட்டில் ‘தனியார்களால்’ துவங்கப்படவுள்ள 2500 மாதிரிப் பள்ளிகளில் தமிழ்நாட்டில் மட்டுமே 356 பள்ளிகள் தொடங்கப்படவிருப்பதாக, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ‘தமிழ்’ பயிற்று மொழியாக மட்டுமல்ல, ஒரு பாடமாகக் கூட இருக்க வேண்டிய கட்டாயமில்லாத இப் பள்ளிகள் பற்றிய அறிவிப்பு, தமிழ்ச் சமூகத்தில் ‘தமிழ்வழிக் கல்வியா - ஆங்கில வழிக் கல்வியா’ என்ற நெடுநாள் விவாதத்திற்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

இச்சிக்கலைக் ‘குணம் நாடிக் குற்றமும் நாடி’ அறிவியல் பூர்வமாகவும் அணுகுவதற்கு ஏற்றவாறு, ஆங்கில வழிக் கல்வி என்பதை அயல்மொழி வழிக் கல்வி என்றும், தமிழ் வழிக் கல்வி என்பதை தாய்மொழி வழிக் கல்வி என்றும், அடிப்படையில் பிரித்து விளங்கிக் கொள்வது நல்லது. இது உணர்ச்சிவயப்பட்ட கருத்துகளையும் அறிவியல் பூர்வமாக அணுக உதவக் கூடும். அயல் மொழி என்பதைத் தாண்டி, ஆங்கிலத்திற்கு இருக்கும் முக்கியத்துவத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறப்போவதில்லை. அதேபோல் ‘தாய் மொழிக்கு’ இருக்கும் முக்கியத்துவத்தையும்!

தமிழ்ச் சமூகத்தில், தாய்மொழி வழிக் கல்விக்கு ஆதரவாகத் தமிழ் உணர்வாளர்கள் மொழி அறிஞர்கள் சமூக ஆர்வலர்கள் கல்வியியலாளர்கள் முற்போக்காளர்கள் என்று அறிவுசார் வட்டங்களில் ஆதரவு இருக்கிறதே தவிர, பொது மக்களில் பெரும்பான்மையினர் ஆங்கில வழிக் கல்வியையே விரும்புகின்றனர் என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

மேலோட்டமாக நோக்குமிடத்து, கணினியுகத்தில் / உலகமயச் சூழலில் ஆங்கிலத்தின் தேவையும், ஆங்கிலம்தான் ‘உலக மொழி’ ‘பொது மொழி’ ‘அறிவியல் மொழி’ போன்ற கருத்துருக்களும் தான், ஆங்கில வழிக் கல்விக்கு ஆதரவான மனநிலையை தமிழ்ச் சமூகத்தில் விதைத்திருப்பதாகத் தோன்றலாம். ஆனால், ஒரு சமூகம் முழுமைக்குமே, தன் தாய் மொழியைக் கை-கழுவிவிட்டு, அயல் மொழியில் பயில முனைப்புக் காட்டுவதும் - மேல்தட்டு மக்கள், நடுத்தர வர்க்கம், பாட்டாளிகள் என்று வர்க்க பேதமில்லாமல், துறை / தொழில் பேதமில்லாமல், சிறுவர்கள் இளைஞர்கள் பெரியவர்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல், ஆங்கில மோகத்தில் திளைத்திருப்பது, காரிய நோக்கம் கொண்டது அல்ல. அது அந்த சமூகம் சந்தித்திருக்கும் உளவியல் நெருக்கடி! அதிகார வர்க்கம் காரிய நோக்கத்தோடு ஏற்படுத்திய உளவியல் நெருக்கடி!

ஆங்கிலப் பட்டறைகளும் - ஆளனுப்பும் ஊடகங்களும்

பன்னாட்டுத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான, ஆங்கிலம் தெரிந்த 'அதிசயக் கருவி'களை உற்பத்திசெய்வதற்கும், உற்பத்தியாகும் பொருட்களை நுகர மேற்கத்திய மோகச் சமூகத்தை உருவாக்குவதற்கும் தான், நம் நாட்டுத் தரகு முதலாளிகளின் கல்வி நிறுவனங்களும் ஊடகங்களும் இரவு பகலாக கண்விழித்து வேலை செய்து வருகின்றன. எதிர்கால இந்தியாவின் தூண்களில், யார் 'அதிசயக் கருவி'யாகத் தேறிவருவார்கள் என்பது நிச்சயமில்லாத நிலையில், அத்தனை பேருக்கும் ஆங்கில மோகத்தை விதைப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

ஏனென்றால், நிச்சயத் தன்மையோடு, தேவையான எண்ணிக்கையில் மட்டும் 'கருவி'களை உற்பத்திசெய்துகொள்ளுமளவிற்கு, இன்னும் நமது கல்வி நிறுவனங்களின் 'தரம்' உயர்த்தப்படவில்லை. மனித சமூகமும், இன்னும் அந்த அளவிற்கு மடச் சமூகமாக்கப்படவில்லை. அதற்கான முயற்சியில் தான், தொலைக்காட்சி ஊடங்கள் இறங்கியுள்ளன. இருபத்து நான்கு மணிநேரமும் மக்களை அதற்காகப் பயிற்றுவித்துக் கொண்டிருக்கின்றன.

முதலாளித்துவத்தின் சாதனைகளைப் பாருங்கள்... (தொழில் வளர்ச்சி இல்லையென்றால் என்ன) தொழில்நுட்பத்தின் மகத்துவத்தைப் பாருங்கள்... அமெரிக்கர்கள் ஆவது ஒன்றும் அவ்வளவு சிரமமில்லை, அவர்களுக்கென்ன கொம்பா முளைத்திருக்கிறது? இனி... விளையாட்டு, பயணம், உரையாடல், பொழுதுபோக்கு, ஓய்வு, வாசிப்பு எல்லாம், தொலைக்காட்சியில் வருபவை. நீங்கள் எதற்கும் சிரமப்பட வேண்டியதில்லை, எல்லாம் தொலைக்காட்சிகளே பார்த்துக்கொள்ளும், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தொலைக்காட்சி பார்ப்பது மட்டும்தான். மொத்தத்தில் நீங்கள் எங்களுக்கு வேண்டும், எப்படி வேண்டுமோ அப்படி! அதனால் தொடர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே இருங்கள். இதற்குப் பிறகும் உங்களுக்குச் சிந்திக்கத் தோணுகிறதா, தவறில்லை, அது மனித இயல்பு. ஆனால் கிழக்கு தெற்கு வடக்கு எல்லாம் சூலம், ‘மேற்கே’ மட்டும் சிந்தியுங்கள் - என்று மூளையை முடமாக்கும் லேகியம் விற்றுக்கொண்டிருக்கின்றன ஊடகங்கள்.

ஆங்கிலம் தெரியாத எந்த ஒரு கிராமமும் விடுபட்டுவிடக்கூடாது என்ற சிறப்புக் கவனத்தோடு, தமிழ்நாடு முழுமைக்கும், ‘தமிழர்களுக்காக’ ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், முடிந்தவரை ‘ஆங்கிலத்தில்’ இருக்கும்படி பார்த்துக்கொள்ளப்படுகின்றன. எந்நேரமும் திரையை ஆக்கிரமித்திருக்கும் சிறிய மற்றும் பெரிய திரைக் கலைஞர்கள் சேர்ந்து அடிக்கும் ஆங்கிலக் கூத்தும், கிண்டலாக உச்சரிக்கப்படும் உரைநடைத் தமிழும், பார்க்கும் பார்வையாளர்களை, கழுத்தில் கத்தியை வைத்து ஆங்கிலப் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கின்றன. தொலைக்காட்சியை அனைத்துவிட்டு, வீட்டின் கதவைத் திறந்து வெளியில் பார்த்தால், ஆங்கிலம் நிற்குமோ என்ற அச்சத்தை உண்டு பண்ணுகின்றன.

இப்படி, மேற்கத்திய மற்றும் ஆங்கில மோகம் சமூகத்தில் முதலாளித்துவ ஊடகங்களால், தொடர்ந்து வன்முறையாகத் திணிக்கப்படுகின்றது. இத் தொடர் வன்முறை, தமிழ்ச் சூழலில், பல அசிங்கமான உளவியல் விளைவுகளை உண்டு பண்ணியிருக்கின்றது.

தமிழ்ச் சமூகத்தின் ஆங்கில உளவியல்

தமிழ்ச் சமூகத்தில், ஒரு பட்டதாரி, ஆய்வுகள் செய்து முனைவர் பட்டமே பெற்றிருந்தாலும், ஆங்கிலம் பேசத் தெரியவில்லை என்றால், சான்றிதழைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு தற்குறிகளின் வரிசையில் அமர்ந்துகொள்ள வேண்டும். அவரை இச்சமூகம் ஒருபோதும் படித்தவராகப் பார்க்காது. அந்த முனைவரும் கூட, உளவியளாக அதற்குப் பழக்கப்படுத்தப்பட்டு விடுவார். மொத்தத்தில், ஆங்கிலம் என்பது படித்தவர்கள் பேசும் மொழியாகவும் பட்டதாரிகளுக்கு இருக்கவேண்டிய அறிவாகவும் கருதும் மனப்பான்மை, நமது சமூகத்தில் பரவலாக நிலவுகிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டிலேயே படித்துப் பட்டமும் பெற்ற ஒரு பச்சைத் தமிழனின் உச்சபட்ச மரியாதை 'தமிழ் அவ்வளவாக எழுதவராது' என்பதில் இருக்கிறது.

இந்த அசிங்கமான உளவியல், ஆங்கில மோகத்தோடு நின்றுவிடவில்லை. தாய் மொழியை இகழவும், தாழ்வானதாக தரமற்றதாக நம்பவும் கற்றுக்கொடுத்துள்ளது. ஒரு கடைக்காரரிடம் brown sheet என்று ஆங்கிலத்தில் கேட்டுப்பாருங்கள். அவர், விலை மற்றும் தரம் உயர்வான பளபளப்பான (polyurethane coated) அட்டையைத் தருவார். அதையே 'காக்கி அட்டை' என்று தமிழில் கேட்டுப்பாருங்கள், தொகற்சேர்ப்ப பயினுரை (polyurethane) இல்லாத, விலை குறைவான, மட்டமான அட்டையைத் தருவார். சமூகத்தின் அனைத்து மட்டத்திலுமான, இந்தப் பாரதூரமான தாக்கம், அமெரிக்கர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்தி உருவாக்கும் நகைச்சுவைகளைப் (self deprecating jokes) போன்றது அல்ல. இது, அமெரிக்கக் கனவோடு proud to be an Indian என்று குறுஞ்செய்தி (SMS) அனுப்பும், முரண்நகை உளவியலைக்கொண்ட ஒரு சமூகத்தின் அவல நிலை!

வெண்டைக் காயை ladies finger என்பதற்குச் சிரிக்காத தமிழன், சேனைக் கிழங்கை elephant foot என்பதற்குச் சிரிக்காத தமிழன், ‘கைப்பேசி’ என்ற அழகான ‘காரணப்பெயர்’ஐக் கேட்டுத்தான் சிரிக்கின்றான். ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைக் கேட்டு, தன் மொழியைத் தானே ஏளனம் செய்து மகிழ்கிறான். இந்தக் கேள்விகள் பெரும்பாலான நேரங்களில் ‘அதிசயக் கருவிகளின்’ அறிவைப் போலவே மொன்னையாகத்தான் இருக்கின்றன. SIMக்கு நிகரான தமிழ்ச் சொல் கேட்டு குறுஞ்செய்திகளைப் பறக்கவிடுகின்றான். Subscriber Identity Module என்பதன் சுருக்கமான எஸ்.ஐ.எம் என்பதை ‘சிம்’ என்று சேர்த்து வாசிப்பதில் அவனுக்குச் சிக்கல் இல்லை. வார்த்தையல்லாத ஒன்றுக்கு இணையான தமிழ் வார்த்தையைக் கேட்டுவிட்டு, அறிவார்ந்த கணையைத் தொடுத்துவிட்டதாகப் புளங்காகிதம் அடைவதிலேயே குறியாய் இருக்கின்றான். (S.I.M. - உறுப்பாண்மையர் அடையாள மட்டுளி).

புதிய கண்டுபிடிப்புகளுக்குப் புதிதாய்த்தான் பெயரிட முடியும் என்ற அடிப்படை அறிவு அவனுக்கு இல்லாமலில்லை. தன் தாய் மொழியைத் தானே ஏளனம் செய்து புளங்காகிதம் அடையும் பரவச நிலையில், அதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதற்கு அவனுக்கு நேரமில்லை. அல்லது அவன் எடுத்துக்கொண்ட உளவியல் பயிற்சி அவனை சிந்திக்க அனுமதிப்பதில்லை.

ஆங்கில வழிக் கல்விக்கான, இச் சமூகத்தின் ஆகப் பொது ஆதரவுக் கருத்தும் கூட, கிட்டத்தட்ட இதே ஞானத்தோடுதான் இருக்கிறது. அது, 'தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது' என்பது.

சரி, ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு?

நமது மாணவர்களுக்கு எழுதப்படிக்கத் தெரியுமா!

ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள், எத்தனை வருடங்கள்... எத்தனை பாடங்கள்... எத்தனை வகுப்புகள்... எத்தனை தேர்வுகள்... எத்தனை படித்திருப்பார்கள்... எத்தனை எழுதியிருப்பார்கள்... அத்தனையும் ஆங்கிலத்தில்! அத்தனையிலும் தேர்ச்சியும் பெற்று வந்தவர்களுக்கு, ஆங்கிலம் தெரியும் என்று சொல்வதற்குத் திராணி இருக்கிறதா?. உண்மையில், ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள, அந்த மொழி வழியிலேயேதான் கல்வியே கற்க வேண்டும் என்பதே அபத்தம், மடத்தனம். ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆங்கில வழிக் கல்வி என்றால், ஸ்பானிஷ் கற்க? அல்லது வேறு மொழி ஏதேனும் கற்றுக்கொள்ள?

சமீபத்திய ஆய்வு ஒன்று தமிழ்நாட்டு மாணவர்களைத் தற்குறிகள் என்கிறது. PISA (program for international student assessment) என்பது அந்த ஆய்வு. மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச மாணவர்களுக்கு, எழுத்தறிவு கணிதவியல் அறிவியல் ஆகிய பிரிவுகளில் தேர்வுகள் நடத்தி, மதிப்பிட்டு, ஆறிக்கை தருவது அதன் வழக்கம். 2009-10-ல், 74 economies (பிரதேசங்கள்) கலந்துகொண்ட தேர்வில், முதல் முறையாக ‘இந்தியாவிலிருந்து’ இமாச்சலப் பிரதேசமும் தமிழ்நாடும் கலந்துகொண்டன. எழுத்தறிவுத் தேர்வில், தமிழ்நாடு 72-வது இடத்தையும் இமாச்சலம் 73-வது இடத்தையும் பெற்றுள்ளன. கணிதவியல் அறிவியல் தேர்வுகள் முறையே, தமிழ்நாடும் இமச்சலமும் 72, 73 - 72, 74வது இடங்களைப் பெற்றுள்ளன. எழுத்தறிவு (Literacy) என்பதற்கு PISA கொடுத்த விளக்கம் - ‘படித்த பொருளைப் புரிந்துகொண்டு, அதை வெளிப்படுத்தத் தெரிந்திருப்பது’. இதன் அடிப்படையில், இந்திய மாணவர்கள் பெரும்பான்மையினர் தற்குறிகளாக (illiterate) இருக்கிறார்கள் என்கிறது, அந்த ஆய்வு.

பொறியியல் மருத்துவம் போன்ற மேற்படிப்புகளைக்கூட தாய்மொழியில் கற்கும் சீன மாணவர்களால்தான் முதலிடம் பெற முடிந்தது. எப்படி?

மொழியும் தாய்-மொழியும்

முதலில், ‘மொழி’ என்பதை எவ்வாறு விளங்கிக்கொள்வது என்பதைப் பார்ப்போம். அயல் மொழியாக இருந்தாலும் தாய் மொழியாக இருந்தாலும் இரண்டும் மொழிகள்தான் என்றும், மனிதர்கள் தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கான 'ஒரு கருவி' என்பதைத் தாண்டி, மனித வாழ்க்கையில் மொழிக்கு வேறெந்தப் பங்கும் இல்லை என்றும், பொதுவாக நிலவும் கருத்துக்கள் சரியா? என்றால், 'இல்லை' என்கிறார் தலைசிறந்த மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி.

சர்வதேச துணை மொழிக் (International auxiliary language) கனவோடு, போலந்து நாட்டைச் சேர்ந்த எல்.எல்.சாமின்ஹோஃப் என்பவரால் கட்டமைக்கப்பட்ட மொழி 'எஸ்பெரான்டோ'. இன்று இம் மொழியை, உலகெங்கும் 20 லட்சம் பேர் அறிந்துவைத்திருக்கிறார்கள். கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள உதவினாலும், மொழிக்கான இயற்கைச் சமூகம் (native speakers) இல்லாத வகையில், எஸ்பெரான்டோ (Esperanto) மொழியே அல்ல! என்கிறார் சாம்ஸ்கி.

மொழியறிவு என்பது ‘மனித’ இனத்தின் இயற்கையான திறன் என்றும், மூளையில் அதற்கென தனிக் கட்டமைப்பே (Language Faculty) இருப்பதாகவும் கூறுகிறார் சாம்ஸ்கி. இதை ஏற்றுக்கொள்வதற்கு அல்லது புரிந்துகொள்வதற்கு சற்றே கடினமாக இருக்கலாம். ஆனால், (பரிணாம வளர்ச்சியில்) உருவாகிக்கொண்டிருந்த மனிதர்கள், தங்களுக்குள் சொல்லிக்கொள்ள ஏதோ இருந்தது - மொழியைப் படைத்தது என்னும் எங்கெல்ஸின் கூற்றோடு பொருத்திப் பார்த்தால், ‘மனித’ ‘இனம்’ தான் தோன்றிக்கொண்டிருந்த காலம்தொட்டே, சிந்தனையை ஒழுங்கமைக்கவும், கருத்துக்களை வளர்த்தெடுக்கவும், பரிமாறிக்கொள்ளவும், பதிவு செய்யவும் மொழியை தன் வரலாறு நெடுகப் பயன்படுத்தியதன் பரிணாம விளைவு (சாம்ஸ்கியின் மொழியில்- biological evolution), மூளையில் மொழிக்கென ஒரு கட்டைமைப்பை உருவாக்கியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். மனித இனத்திற்கே உரிய ‘உழைப்பு’ அதன் உடல் அமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவந்த போது, மனித இனத்தின் பிரிக்க முடியாத அங்கமான ‘மொழி’யும் மூளையில் அதற்கென ஒரு கட்டமைப்பைக் கோரியதில் வியப்பென்ன இருக்க முடியும்?

செவ்வாய் கிரகத்து மொழியியலாளர் ஒருவர், நமது மொழிகளை நோக்கினாரேயானால், பூமியிலுள்ள மொழிகள் அனைத்தும் சிறு வேறுபாடுகளுடைய ‘ஒரே மொழி’ என்ற முடிவுக்கு வரலாம் என்கிறார் சாம்ஸ்கி. ஏனென்றால் மனித மொழிகள் ஒரு பொதுவான அடிப்படையில் வளர்ச்சியடைந்தவை என்றும், அவற்றிற்கிடையிலான வேறுபாடுகள் மேம்போக்கானவையே என்றும், அவற்றின் இலக்கணங்களுக்குப் பொதுக் கூறுகள் (Universal grammar) இருப்பதாகவும் கூறுகிறார்.

இதன் அடிப்படையில்தான், ‘குழந்தைகள் மனதளவில் எந்தத் தொல்லையுமில்லாமல், ஒரு மிதிவண்டியை ஓட்டிப் பழகுவதைப்போல், தாய் மொழியை எளிமையாகக் கற்றுக்கொள்கிறார்கள்’ என்கிறார் சாம்ஸ்கி. மேலும், தாய் மொழியைக் கற்றுக்கொள்ளும் குழந்தைகள், வாக்கியங்களை அப்படியே பிரதி எடுப்பதில்லை. இலக்கணங்களை விதிகளை ஊகித்துணர்கிறார்கள் (they deduce rules from it) என்கிறார். அறிவு வளர்ச்சியின் முன் தேவையாக, இயற்கையான சிந்தனைப் பசியால் உள்வாங்கிக்கொள்ளப்படும் 'முதல்' மொழி என்பதால், விதிகளை ஊகிப்பது (rules deduction) இயல்பாகவே நடந்துவிடுகிறது. எனவேதான் குழந்தைகள் தங்கள் தாய் மொழியைப் பயில்வதை குறிக்கும் இடங்களில், கற்றல் என்ற சொல்லுக்குப் பதிலாக முயன்று அடைதல் (acquisition) என்னும் சொல்லையே அதிகம் பயன்படுத்துகிறார் சாம்ஸ்கி. இவ்வாறு மொழியை உள்வாங்கிக்கொள்ள குழந்தைகளுக்கு இயற்கையாக அமைந்துள்ள மூளைத் திறனுக்கு அல்லது திறனுக்கான தொகுதிக்கு Language acquisition device என்றே பெயரிட்டுள்ளார் சாம்ஸ்கி.

குழந்தைகள், மரத்தைக் காட்டி ‘என்ன’ என்று கேட்கும் போது ‘மரம்’ என்று சொல்லி முடித்துக்கொள்கிறோம். (நாம் வேறு எதுவும் செய்ய முடியாதுதான்). நாம் அதை மரம் என்று ஏன் சொன்னோம்? அதுதான் அந்தப் பொருளின் பெயர். ஆனால் ஒரு பொருளுக்கு ‘பெயர்’ இருக்கும் என்பதே குழந்தைகளுக்குத் தெரியாதே! இங்கேயும் ஊகித்துணரும், முயன்றடையும் செயல்கள் நடைபெறுகின்றன. (ஆம், நாம் சொன்ன பதில் குழந்தைகளுக்கு நிறைவைக் கொடுத்திருக்காது) வாக்கியக் கட்டமைப்பில் இருக்கும் விதிகளையும் குழந்தைகள் தாங்களாகவேதான் முயன்றடைகிறார்கள். இரண்டாவது மொழியில் இப்பணி நடைபெறுவதில்லை. boyன்னா பையன், girlன்னா பொண்ணு என்று, தாய் மொழி வழியாகத்தான் எந்த மொழியும் மூளையைச் சென்றடையும். இல்லையில்லை, நான் அயல் மொழியையும் வலிந்து ஊகித்துணரும், முயன்றடையும் செயல்களுக்கு உட்படுத்தப்போகிறேன் என்றால், அதற்கு முதலில் நீங்கள் அந்த மொழியைக் கற்றாக வேண்டும். ஏனென்றால் நீங்கள் செய்யப்போவது மொழி ஆராய்ச்சி!

இந்த அறிவியல் விளக்கங்களை ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ, நாம் நமது குழந்தைகளுக்கு, ஐம்பது வார்த்தைகளுக்கு மேல் கற்றுக்கொடுத்திருக்க மாட்டோம் என்பது நமக்குத் தெரியும். இலக்கணமும் அப்படியே! எந்த ஒரு குழந்தைக்கும் தாய்மொழி பிறரால் வலிந்து கற்றுக்கொடுக்கப்படுவதில்லை. குழந்தைகள் தங்கள் தாய் மொழியை, தாங்களே தங்கள் சமூகத்தோடு சேர்ந்து இயல்பாகக் கற்றுக்கொள்கிறார்கள், அல்லது முயன்று அடைகிறார்கள் என்பது தெளிவு. (தாய் மொழி என்பதற்கான சரியான விளக்கம் இதற்குள்ளாகத்தான் இருக்க முடியும்)

எனவே மொழி என்பது கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் கருவியாக மட்டும் இருக்க முடியாது. அதிலும் தாய் மொழியை அல்லது முதல் மொழியை ‘வெறும் கருவி’ என்ற வரையறைக்குள் அடைப்பது அறிவுடைமையாகாது. தாய் மொழியானது கிட்டத்தட்ட ஒரு மனிதனின் அடிப்படை அறிவுத் திறனாக அமைகிறது. மற்ற எதையும் அவன் இதன் வழியாகத்தான் கற்கிறான், அது இன்னொரு மொழியாகவே இருந்தாலும். கற்றலில் அவன் தொடும் எல்லையைத் தீர்மானிப்பதில் ‘தாய் மொழித் திறன்’ முக்கியப் பங்காற்றுகிறது. இங்கு ‘கற்றல்’ என்று நாம் குறிப்பிடுவது, கல்வி கற்றல், அறிவுசார் கற்றலைத் தான். மிதிவண்டி கற்றலை அல்ல. அது கற்கக் கூடியதும் அல்ல, பயின்று, பழகக் கூடியது. இரண்டையும் போட்டுக் குழப்பிகொள்ளக் கூடாது.

குழந்தைகள் மீதான வன்முறை

இயற்கையாக, அனைத்தையும் தங்கள் தாய் மொழியில் புரிந்துவைத்திருக்கும் குழந்தைகளுக்கு, பள்ளிக் கூடங்களில் அயல் மொழியில் கற்பிக்கும் போது, அவர்களின் சிந்தனை தொந்தரவிற்குள்ளாகிறது. இது, குழந்தைகளின் சிந்தனையில் நாம் செலுத்தும் கொடிய வன்முறை ஆகும். தொடர்ந்து கட்டாயப்படுத்தி திணிக்கப்படும் அயல் மொழி வழி கற்பிக்கும் ‘முயிற்சி’, குழந்தைகளுக்குள் வளர்ந்துகொண்டிருக்கும் தாய் மொழித் திறனையும் படிப்படியாக காலி செய்துவிடுகிறது. மாணவர்கள் தற்குறிகளாகும் புள்ளி இதுதான். முடிவாக அவர்கள் கற்பதையே நிறுத்திவிடுகின்றனர். ஆசிரியர்களும் கற்பித்தலை நிறுத்திவிடுகின்றனர். பிறகு நடப்பதெல்லாம் மதிப்பெண்களை நோக்கிய பயிற்சிதான். அவர்கள் எடுக்கும் பயிற்சி, புத்தகங்களில் இருப்பதைப் பிரதி எடுப்பதற்குத்தான். எடுக்கப்படும் பிரதிகள் ஆங்கிலத்தில் இருந்துவிடுகின்றன அவ்வளவுதான். மற்றபடி ஆங்கிலப் புலமையெல்லாம் ஆங்கிலம் கற்பதால் சாத்தியமே தவிர, ஆங்கில வழியில் பிரதி எடுப்பதால் (கற்பதால்?) அல்ல.

பிற்காலத்தில் தங்களை ‘அதிசயக் கருவி’களாகிக்கொள்வதற்கு ‘எப்படிச் சிரிப்பது’ ‘எப்படி கை-குலுக்குவது’ ‘எப்படிப் பார்ப்பது’ ‘எப்படி தன்னை விற்பது!’ (Personality Development) என்று பட்டைதீட்டி நிமிர்த்துவதற்கு முன் நிபந்தனையாக - குழந்தைகளின் ‘சுய மரியாதை’ ‘சுய சிந்தனை’ ‘படைப்புத்திறன்’ அனைத்தையும் அடித்து நொறுக்கி அழித்தொழித்துப் புடம்போடப்படும் இடமாகத்தான் இந்தப் பள்ளிக் கூடங்கள் இருக்கின்றன.

கற்றலில் மொழி

பள்ளி என்பது கற்றலைக் கற்பிக்கும் இடம் தான், உண்மையான கல்வி பள்ளியை விட்டு வெளியேறிய பிறகே நடக்கிறது - என்கிறார் கல்வியியலாளர் ஜான் டூவி (John Dewey). அயல் மொழி வழியில் கற்கும் மாணவர்களைப் பொறுத்தவரையில், பள்ளிக்குள்ளும் சரி, பள்ளிக்கு வெளியிலும் சரி, 'கற்றல்' அதன் உண்மையான பொருளில் நடப்பதே கிடையாது. என்னதான் படித்தவராக இருந்தாலும், எந்த ஒரு மொழியிலும் பாண்டித்தியம் இல்லாத ஒருவரால், எதையும் முழுமையாகக் கற்க இயலாது. ஒரு ஆழமான புத்தகத்தைக் கூட படித்துப் புரிந்துகொள்ள முடியாது. ‘வாசிக்கும் மொழியில் பாண்டித்தியம்’ அல்லது ‘வாசிக்கப்படும் பொருளில் அடிப்படை அறிவு’ இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றாவது இல்லாமல், தினத்தந்தி செய்தியைக் கூட முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.

PISA தேர்வில் நமது மாணவ மணிகளின் நிலை இதுவாகத்தான் இருந்திருக்கின்றது. சீன மாணவர்களுக்கு தாய்மொழி வழிக் கல்வி கொடுத்த மொழிப் பாண்டித்தியம், தேர்வுப் பொருள் பற்றிய அடிப்படை அறிவிற்கு ஆதாரமாக இருந்து கைகொடுத்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் PISA 2012 ஆம் ஆண்டிற்கான தேர்வு முடிவுகளும் வெளியாகிவிட்டன. இம்முறையும் சீன மாணவர்கள் தான் அசத்தியுள்ளனர். (இம் முறை, இந்தியா பங்கேற்கவில்லை! ) ஏதேனும் ஒரு மொழியில் பாண்டித்தியம் என்பது கற்றலுக்கு அவசியமான ஒன்று. தாய்மொழியில் பாண்டித்தியம் பெறுவதே இயற்கையானதும் எளிமையானதும் இயல்பானதும் ஆகும். அதற்கு தாய்மொழி வழிக் கல்வியே சிறந்த வழி.

இப்படிக் கூறுவதானது, தாய் மொழியைத் தவிர வேறு மொழிகளில் பாண்டித்தியம் பெற முடியாது என்பதாகுமா? அப்படியில்லை. ஒரு நூலை எவ்வாறு கற்பது என்பதற்கே, 1000 பக்கங்களில் விளக்கப் புத்தகங்கள் தேவைப்படுகிற நூல், காரல் மார்க்ஸின் மூலதனம் (Das Capital). அவ்வளவு கடினமான நுட்பமான நூலை, ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்க, பதின்ம வயதில் தன் வாழ்வைப் புரட்சிப் பணிக்கு அர்பணித்த தோழர் தியாகுவிற்கு முடிந்திருக்கின்றது. Das Capital -ஐப் பொருத்தவரை, இந்திய மொழிகளில் இது தான் முதல் முழுமையான மொழி பெயர்ப்பு. (தோழர் தியாகு தான், தமிழகத்தின் முதல் தாய்த் தமிழ்ப் பள்ளியைத் தொடங்கியவர். அதே பள்ளியில் தனது மகளை முதல் மாணவியாகச் சேர்த்தவரும் கூட). ஆக, அயல் மொழியில் பாண்டித்தியம் என்பது சாத்தியமே. ஆனால் இது போன்ற அரிதிலும் அரிதான சாத்தியப்பாட்டை நோக்கி, ஒரு சமூகத்தையே அயல்-மொழியில் நகர்த்துவது முட்டாள்த் தனம் என்கிறோம். பில் கேட்ஸ் (ஹாவார்டு) பல்கலைக்கழகப் படிப்பை இடைநிறுத்தியும் சாதிக்க முடிந்தது என்பதற்காக, கணினித்துறையில் சாதிக்க விரும்புபவர்களெல்லாம், கல்லூரிகளை விட்டுப் பாதியிலேயே ஓடிவந்துவிடுவதில்லையே!

அன்பிற்கினிய உழைக்கும் மக்களே!

ஆங்கிலத்தையோ வேறு ஏதேனும் அயல் மொழியையோ கூட கற்றுக்கொள்வது, இக் காலங்களில் அவ்வளவு கடினமானது அல்ல. கைப்பேசி போன்ற பல மின்னியல் உபகரணங்கள், எப்போதும் கைகளில் இருக்கும்படியான மின்னியல் அகராதிகள், இணையதளப் பயன்பாடு, ஆசிரியர்களைத் தொடர்புகொள்ள எளிமைப்படுத்தப்பட்ட வசதிகள், பன்மொழித் திரைப்படகளையும், செய்திகளையும் பார்க்கும் வாய்ப்புகள் போன்றவை, அயல் மொழி கற்றலை எளிமைப்படுத்தக் கூடியனவாக இருக்கின்றன. எனவே ஆங்கிலத்திற்காக, ஆங்கில வழியிலேயே கல்வியைத் தேர்ந்தெடுத்து, 'தற்குறி'களாக வேண்டிய அவசியமில்லை.

நம் சமூகத்திற்கு ஆங்கிலம் பயன்படலாமே தவிர, ஆங்கில - அயல் - மொழிக் கல்வி, கேடு விளைவிக்கவே செய்யும். எந்த ஒரு சமூகத்திற்குள்ளும், அதன் சமூக (தாய்) மொழியைப் புறக்கணித்துவிட்டு, அயல்மொழி வழிக் கல்வியைத் திணிப்பது, அச்சமூகத்தின் ஆளுமையைச் சீரழிக்கக் கூடியது. சமூகத்தோடு ஒன்றி வாழாத, உற்பத்தியில் பங்குகொள்ளாத, மேல்தட்டு கனவான்களுக்குச் சாதகமானது. உழைக்கும் பாட்டாளி மக்களைப் பலகீனப்படுத்தக்கூடியது. சமூகத்தின் பெருவாரி மக்களை அறிவிலிகளாக்கி, போராட்ட உணர்வை மழுங்கடித்து, ஒட்டச் சுரண்ட வழிவகுக்கக் கூடியது.

ஜெர்மனி, பிரான்ஸ், சீனா, ஜப்பான், ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகளில், மேற்படிப்புகள் கூட, தாய் மொழியில் கற்க முடிகிறது. (ஆங்கிலமே இயல்பு மொழியாகவுள்ள (de facto), இங்கிலாந்து அமெரிக்கா ஆஸ்திரேலியாவையும் கூட இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம் தானே?). உலகிலேயே, வளமையான மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்ட தேசிய இனங்களுக்கு, அடிப்படைக் கல்வியையே அயல் மொழியில் கற்பிக்கும் நாடு ‘இந்தியா’ மட்டும் தான்! வேறெந்த நாட்டிலும் இந்த அவலம் இல்லை. இதை மக்களின் விருப்பம் என்பது, எல்லோரையும் சொல்லி ராசா குசு விட்ட கதை (சொலவடை) தான்.

அன்பிற்கினிய உழைக்கும் மக்களே, இது நமக்கான உரையாடல். நமது மொழி - நமது பலம், நமது கல்வி - நமது உரிமை. அமெரிக்கா சென்றால் என்ன செய்வது... ஆஸ்திரேலியா சென்றால் என்ன செய்வது... டெல்லியில் குடியேறினால் என்ன செய்வது... குஜராத்தில் குடியேறினால் என்ன செய்வது... போன்ற, சொற்ப மேல்தட்டுக் கனவான்களின் சுய அரிப்பிற்காக, நமது உரிமைகளை விட்டுக்கொடுத்துச் சீரழிய முடியாது. இக் கனவான்கள், அங்குள்ள உழைக்கும் மக்களோடும் கூட, ஒன்றி வாழப் போவதில்லை, ஒட்டச் சுரண்டும் ஒட்டுண்ணிகளாகவே செல்கிறார்கள் என்பது திண்ணம். இவர்களின் சர்வ தேசியமும் பொது மொழிச் சிந்தனையும், ஒருபோதும் மக்கள் நலன் கருதி உதயமானது அல்ல.

ஸ்டீவ் ஜாப்ஸ்-காக கண்ணீர்விடும் இக் கனவான்களுக்கு, நமது ஆறுகளின் அவலநிலையைப் பற்றிக் கவலையில்லை. பில் கேட்ஸ் எந்தத் தேதியில் எங்கே ஒண்ணுக்குப் போனார் என்று தெரிந்த இவர்களுக்கு, தனது மாவட்டத்தில் எத்தனை ஆறுகள் ஓடுகின்றன என்பது தெரியாது. இவர்களின், ஐரோப்பிய அத்தை தேடும் கனவிற்கு, சர்வதேசியத்தைச் சாட்டையால் அடித்தா சாத்தியப்படுத்த முடியும்? சிந்தியுங்கள் தோழர்களே...!

Pin It