தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்கள் ஆங்கிலம் கற்க எது தடையாக உள்ளது? ஆங்கில வழிக் கல்விதான் தடையாக உள்ளது. தாய் மொழிக் கல்வி மறுக்கப்படுவதால் ஆங்கில வழிக் கல்விதான் அதற்குத் தடையாக உள்ளது. இரு மொழிக் கொள்கைதான் தடையாக உள்ளது.
சமூகநீதியை அழிக்கும் ஆங்கிலம்:
ஆங்கிலம் இணைப்பு மொழி, தொடர்பு மொழி, அறிவியல் மொழி எனப் பல்வேறுக் காரணங்களைச் சொல்லி ஆங்கில வழிக் கல்வியை நியாயப்படுத்தும் முயற்சிகள் தொடர்கின்றன. இவை சமூக நீதிக்குப் புறம்பான கற்பிதங்கள். ஆங்கில வழிக் கல்வி பெரும்பாலான மக்களின் இணைப்பையும், தொடர்பையும் துண்டித்து அவர்களின் அறிவியல் கண் திறப்பதற்குத் தடையாக உள்ளது என்பதை உணர்ந்தோமா?.
லோக் அமைப்பு – ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் - இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (Lok foundation - CMIE) மேற்கொண்ட கணக்கெடுப்பின் தரவுகள் ஆங்கிலம் பேசும் திறன் எவ்வாறு உயர் சாதியுடனும், பணக்காரர்களுடனும் ஒட்டுறவு கொண்டுள்ளது என்பதை மெய்ப்பிக்கிறது.
கீழ்க்காணும் தரவுகளை இந்த ஆய்வின் மூலம் அறியப் பெறுகிறோம்., பட்டியல் சாதியினர், பழங்குடிகளைக் காட்டிலும் 'உயர்சாதியினர்' மூன்று மடங்கிற்கும் அதிக அளவில் ஆங்கிலம் பேசுபவர்களைக் கொண்டுள்ளனர். பட்டதாரிகளில் மூன்றில் ஒரு பங்கினர் ஆங்கிலம் பேசுபவர்களாக உள்ளனர். பெண்களை விட ஆண்களே பெருமளவில் ஆங்கிலம் பேசுபவர்களாக உள்ளனர் என்பதை இந்த ஆய்வின் மூலம் அறியப் பெறுகிறோம்.
இந்தியாவின் மக்கள் தொகையில் 6 சதவீதத்தினரே ஆங்கிலம் பேசும் திறன் கொண்டுள்ளனர். வெவ்வேறு சமூகக் கூறுகளின் அடிப்படையில் ஆங்கிலம் பேசுவோரின் விகிதாசாரம் பின்வருமாறு
சாதி அடிப்படையில்:
ஆங்கிலம் பேசுவோர்
உயர் சாதியினரில் - 11%
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் - 5.2%
தலித்துகளில் (SC,ST) - 3.6%
சூழல் அடிப்படையில்:
ஆங்கிலம் பேசுவோர்
நகர்ப்புறத்தில் - 12%
கிராமப்புறத்தில் - 3%
பொருளாதார அடிப்படையில்:
ஆங்கிலம் பேசுவோர்: பணக்காரர்களில் -41%
உயர் இடைத்தட்டு வகுப்பினரில் - 9.8%
இடைத்தட்டு வகுப்பினரில் - 2.5%
ஏழைகளில் - 2%
மத அடிப்படையில்:
ஆங்கிலம் பேசுவோர்
கிறித்தவர்களில் - 15%
இந்துக்களில்- 6%
இஸ்லாமியர்களில்- 4%
பொருளாதார / சாதிய / பாலின அடிப்படையில் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையான மக்களின் கல்விக்கு, சமூகநீதிக்கு, ஜனநாயகத்திற்கு ஆங்கிலவழிக் கல்வி தடையாக அமைந்து இந்த ஏற்றத் தாழ்வுகளை இன்னும் அதிகப்படுத்துமே ஒழிய ஒருபோதும் குறைக்க வழிவகுக்காது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
எது அறிவியல்மொழி?
இன்று அரசுப் பள்ளிகளிலே ஆங்கில வழிக்கல்வி என்ற முறையில் நேரடியாகவும், இருமொழிக் கல்வி என்ற முறையில் சுற்றடியாகவும் வலிந்து ஆங்கிலத்தைத் திணிக்கும் போக்கு பெருகியுள்ளது. இது முற்றிலும் சமூகநீதிக்குப் புறம்பானது.
இன்றைய நவீன உலகில், உலகமயச் சூழலில் ஆங்கிலம் இல்லையென்றால் எப்படி? எனக் கேட்டு, அறிவியல் தொழில்நுட்பக் கல்வியை ஆங்கிலத்தில் மட்டும்தான் அடையப்பெற முடியும் என்று அடம் பிடிக்கின்றனர். ஆங்கிலம் மட்டும்தான் அறிவியல் மொழியா? ஆங்கிலத்தில்தான் மனித மூளை அறிவியல் தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ளுமா? அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தனதாக்கிக் கொள்ளும் எந்த மொழியும் அறிவியல் மொழியே.
உலக அளவில் அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கக் குறியீட்டின் தர வரிசையில் முன்னிலையில் இருப்பவை நான்கு ஆட்சிமொழிகளைக் கொண்ட குட்டி சிங்கப்பூரும், தாய்மொழிக் கல்வி தரும் ஜப்பானும், எஸ்தோனியா, ஃபின்லாந்தும்தான். ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பிரிட்டன் 17ஆவது இடத்தில்தான் உள்ளது.
பன்னாட்டு மாணவர் மதிப்பீட்டுத் திட்டத்தின் (PISA) தரவரிசையிலும் சிங்கப்பூர், ஹாங்காங், ஜப்பான், எஸ்தோனியா, ஃபின்லாந்து, கனடா முன்னிலையில் உள்ளன. பிரிட்டனோ 23வது இடத்தில்தான் உள்ளது. நம் அறிவியல் தமிழ் தினந்தோறும், துறைதோறும் பல்லாயிரக் கணக்கான அறிவியல் கலைச் சொற்களைத் தனதாக்கி வளர்ந்து வருகிறது.
ஒடுக்கப்பட்ட எளிய மக்களுக்கு ஆங்கிலத்தினால் எட்டாக் கனியான அறிவியல் தொழில்நுட்பம் அறிவியல் தமிழினால் மட்டுமே கைகூடும். எந்தத் துறையாக இருந்தாலும் முதன்மைப் பயிற்றுமொழி தாய்மொழியாகவே இருக்க வேண்டும்.
தாய்வழிக் கல்வி:
குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது ஏழரை மாதத்திலிருந்து, பிறப்பதற்கு 10 வாரங்கள் முன்பிருந்தே தாய்மொழியைப் பிரித்தறிய, தனதாக்க, கற்கத் தொடங்குகிறது. பாசப் பிணைப்புதான் மொழி கற்பதில் முக்கிய உந்துதலாக உள்ளது. பிறந்த குழந்தைகள் தாம் கேட்கும் மொழியின் ஓசை நயத்திலே அழுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
தாய்மொழி குழந்தையிடம் வளர்ச்சி பெறுவதற்கு முன்பே இரண்டாம் மொழியைத் திணித்தோமானால், இரண்டு மொழிகளிலுமே அக்குழந்தை சரியாகத் தேர்ச்சி பெற இயலாது.
எப்போது இரண்டாம் மொழி?
சரி, இரண்டாம் மொழியைக் குழந்தைகளுக்கு எப்பொழுதிலிருந்து கற்றுக் கொடுக்கலாம்? பொதுவாகக் கற்றலை இருவகையாகப் பிரிக்கலாம்;
1) முனைந்து கற்றல் (explicit learning) என்பது. நாம் கற்கிறோம் என்ற விழிப்புடன் முறையாகப் பாடசாலையில், வகுப்பறையில் கற்பது.
2. முனையாக் கற்றல் (implicit learning) என்பது. கற்கிறோம் என்ற விழிப்புணர்வே இல்லாமல், விளையாட்டின் மூலம், அனுபவத்தின் மூலம் அடையப் பெறுவது.
குழந்தைளிடம் தெரிந்து கற்றல்/ நேரடிக் கல்வி முறைகள் எடுபடாமல் தோற்றுப் போகின்றன. வகுப்பறைக் கல்வி குழந்தைகளிடம் எடுபடுவதில்லை. வகுப்பறைச் சூழலை விட குடும்பத்தினர், சுற்றத்தார் மூலமே குழந்தைகள் இரண்டாம் மொழியை நன்றாகக் கற்கிறார்களாம்.
இந்த அடிப்படையிலே பலமொழி பேசும் பெற்றோர்களின் குழந்தைகள் பன்மொழி பேசுபவர்களாகவும் இருக்கலாம். இது விதிவிலக்குதானே ஒழிய விதியல்ல. எப்படிப் பார்த்தாலும் யாருமே பன்மொழி வல்லுநர்களாகப் பிறப்பதில்லை. ஒரு மொழியராக இருந்த பின்பே இரண்டாம் மொழியைக் கற்கிறோம் என்பதே பொதுவான உண்மையாக உள்ளது.
ஒரு குறிப்பிட்ட வயதிற்குள்ளே குழந்தைகளுக்கு இரண்டாம் மொழியைக் கற்க வைக்க வேண்டும். இல்லையெனில் அவர்களால் இரண்டாம் மொழியில் தேர்ச்சி பெற இயலாது என்பது கற்பிதம் என்கிறார் பிரிட்டிஷ் கொலம்பியப் பல்கலைக்கழக ஆய்வாளர் ஸ்டெஃப்கா மாரிமோவா.
முதன்மை மொழியறிவிற்குக் காரணமான நரம்பமைவுகளின் மூலமே இரண்டாம் மொழியும் கற்கப்படுகிறது என்றும், முன்னதாக இரண்டாம் மொழி கற்பவர்களின் (early starters) நரம்பமைவு, பின்னதாக இரண்டாம் மொழி கற்பவர்களின் (late starters) நரம்பமைவிலிருந்து வேறுபடவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.
17,000 பிரிட்டானியக் குழந்தைகளைக் கொண்டு செய்த ஆய்வு 11 வயதில் பிரெஞ்சு கற்கத் தொடங்கிய குழந்தைகள், 8 வயதில் கற்கத் தொடங்கிய குழந்தைகளைக் காட்டிலும் சிறப்பாகத் தேர்ச்சியடைந்ததாகக் கூறுகிறது.
இரண்டாம் மொழியைக் கற்பதில் மழலைகளை விட சிறுவர்களே சிறப்பாய்த் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதே ஆய்வுகள் கண்டறிந்த உண்மை. இதற்குக் காரணம் மழலைகளிடம் சிந்தனை, கவனம் அவர்களது கட்டுப்பாட்டில் இல்லை. மற்றும் சிந்திக்கும் திறன், நினைவுத் திறன், வகைபடுத்தும், பொதுமைப் படுத்தும், பிரித்தறியும், ஊகிக்கும் திறன் வளர்ச்சியடையாத நிலையில் உள்ளது என்பதே ஆகும்.
ஆகவே மூன்று வயதிலே மழலைகளுக்கு இரண்டாம் மொழியைத் திணிக்க வேண்டிய அவசியமே இல்லை என்பதுடன் நம் சமூகச் சூழலில் அது வன்முறை என்பதையும் உணர வேண்டும். 8 வயதிலிருந்து இரண்டாம் மொழியை முறையாகக் கற்றுக் கொடுத்தாலே அவர்களால் விரைவாக அதில் தேர்ச்சி பெற முடியும்.
குழந்தைகள் ஒரு புதிய மொழியில் தேர்ச்சி பெறுவதில் 17-18 வயது வரையிலும் அதிகத் திறன் வாய்ந்தவர்களாக இருப்பார்கள் என்று போஸ்டன், எம்.ஐ.டி, ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தம் ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர்.
பொதுவாக பிரிவுபசார விழாவில் கல்விச்சாலைக்கும், நண்பர்களுக்கும் விடை கொடுப்பதோடு கல்விக்கும் விடை கொடுக்கும் பழக்கமே கற்றலுக்குத் தடையாக உள்ளது. மாணவப் பருவத்தைத் தாண்டியவுடன் குடும்பப், பொறுப்பு, சமூக அழுத்தம், வேலைப்பளு போன்ற பல்வேறு காரணிகளால் கற்பதற்கான வாய்ப்புகள் குறைந்து போகின்றன.
ஒருவருக்கு இரண்டாம் மொழி / புதிய மொழி கற்க உந்துதலும், தன்னார்வமும், முயற்சியும் இருந்து கற்பதற்கான சூழலை அவர் ஏற்படுத்திக் கொண்டால் வயது என்றுமே அதற்குத் தடையாகாது. உலக வரலாற்றைப் புரட்டிப் போட்ட மாமேதை கார்ல் மார்க்ஸ் 51 வயதில் ருஷ்ய மொழி கற்கத் தொடங்கினார். ஆங்கிலமோ புதிய மொழியோ கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை
எந்த மொழி இரண்டாம் மொழி?
இருமொழிக் கொள்கையில் இரண்டாம் மொழி கட்டாயம் ஆங்கிலமாகத்தான் இருக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது. இரண்டாவது மொழியாக ஏன் ஆங்கிலம் மட்டுமே இருக்க வேண்டும்?
இதைப் பற்றிச் சற்று திறந்த மனதுடன் யோசித்துப் பார்ப்போம். இங்கு ஆங்கிலம் திணிக்கப்படுவது ஏற்கெனவே இயல்பாக்கப்பட்ட சூழலில், மீண்டும் ஆங்கிலத்தையே கட்டாயமாக்குவது, மறைமுகமாக ஆங்கிலவழிக் கல்விக்கே அடிகோலுவதுடன் வேறு எதையும் கற்பதற்கும் தடையாகவே உள்ளது.
உலகிலே அதிகம் பேசப்படும் மொழி ஆங்கிலம் மட்டும்தானா?. உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் முதலிடத்தில் சீனமும், இரண்டாம் இடத்தில் ஸ்பானியமும் உள்ளன. ஆனால் எந்த மொழிக்கும் வழிவிடாமல் ஆங்கிலம் மட்டுமே முழு இடத்தையும் ஆக்கிரமித்துள்ளது. இரண்டாம் மொழி என்பது விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யும் மொழியாகவே இருக்க வேண்டும்.
எல்லோருமே ஒரே காரணத்திற்காக ஒரு மொழியைக் கற்க விரும்புவதில்லையே! ஒருவர் வேலைவாய்ப்பிற்காகவோ, வரலாற்று ஆய்விற்காகவோ, மொழி ஆய்விற்காகவோ, தன் தாய்மொழியோடு தொடர்புடைய மொழியை அறியும் ஆர்வத்திலோ, இல்லை தம் வட்டாரத்தில் உள்ள நண்பர்களின் நட்பிற்காகவோ ஒரு புதிய மொழியை இரண்டாம் மொழியாகக் கற்க விரும்பலாம்.
ஜப்பானியத் தொழில்நுட்பத்திற்காக ஜப்பானிய மொழியையையோ, கார்ல் மார்க்ஸின் ஆய்வுகளை அவரது மொழியிலேயே கற்க ஜெர்மானிய மொழியையோ, இல்லை ஆப்பிரிக்க நட்பிற்காக ஸ்வாஹிலி மொழியையோ ஒருவர் விரும்ப வாய்ப்பே இல்லையா? ஏன், ஹொசே மார்த்தியை அறிய ஸ்பானிய மொழியையோ, இல்லை கலீல் ஜிப்ரானைக் காண லெபனிய மொழியையோ, இல்லை உமர் கய்யாமுடன் உரையாட உருது மொழியையோ ஒருவர் தேர்ந்தெடுக்கக் கூடாது?.
சரி போகட்டும் விடுங்கள். நாம் அவ்வளவு தூரம் போக வேண்டாம், அருகில் பேசப்படும் தாகூரின் வங்காள மொழியையோ இல்லை கண்ணெதிரே கேட்கும் சுந்தரத் தெலுங்கையோ, தமிழின் தங்கை மலையாளத்தையோ தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு எங்களுக்கு இல்லவே இல்லையா? அது ஏன் இரண்டாம் மொழி எப்பொழுதும் எல்லோருக்கும் ஆங்கிலமாகத்தான் இருக்க வேண்டும்?. அவசியமே இல்லையே.
இரண்டாம் மொழியை விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க அனுமதித்து விட்டால் அதைக் கற்றுக் கொடுப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் வரும் என நினைக்கக் கூடும். இரண்டாம் மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களை நாம் வெளிநாட்டிலோ, வெளிமாநிலத்திலோ தேட அவசியம் இல்லை.
தமிழ் நாட்டிலேயே ஆசிரியர்கள் கிடைக்கவில்லை என்றாலும் தகவல் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதுவும் முடியாவிட்டால் மாணவர்கள் இரண்டாம் மொழியாகத் தேர்வு செய்ய குறைந்தபட்சம் மூன்று மொழிகளையாவது தேர்வுப் பட்டியலில் வழங்க வேண்டும்.
நமக்கு அருகில் இருக்கும் ஆந்திராவிற்கும், கேரளத்திற்கும் அவரவர் மொழியில் தொடர்பு கொள்ளாமல் ஆங்கிலத்தையே பயன்படுத்துவதைக் கண்டு ஆங்கிலேயரே அதிசயிக்கக் கூடும். அதற்குத்தான் நம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் உள்ளது. மாநிலங்களுக்கிடையே ஆங்கிலம், இந்தி தவிர வேறு எந்த மொழிக்கும் தொடர்பு மொழியாக இருக்க அனுமதி இல்லை.
இறைமையிழந்த தமிழ்நாடு:
தமிழகத்தில் தொடர்ந்து தமிழ்வழிக் கல்வி புறக்கணிக்கப்பட்டு வருவதற்கும், தமிழக மக்கள் ஆங்கில மயக்கத்தில், ஆங்கில மயமாக்கத்தில் அமிழ்த்தப்பட்டதற்கும் எது காரணம்? தமிழகம் பிரிட்டானியக் காலனியின் ஒரு பகுதியாக இருந்தது என்பது மட்டும்தான் காரணமா? தமிழக அரசு தமிழகத்தின் இறைமையை மீட்கத் தவறி விட்டது என்பதே முக்கியக் காரணம். இந்தியாவின் ஆட்சி மொழிகளில் தமிழ் இல்லை என்பதும், ஆங்கிலம் துணை ஆட்சி மொழியாகவும், தொடர்பு மொழியாகவும் தொடர்கிறது என்பதுமே முக்கியக் காரணம்.
தமிழக மக்கள் ஆங்கிலம் கற்றால், வேலைவாய்ப்பு கிடைக்கும், எப்படியாவது பிழைத்துக் கொள்ள முடியும் என்று சமூகம் அவர்களை நிர்ப்பந்திக்கிறது, ஆங்கிலம் கற்றால் மட்டுமே வேலை கிடைக்கும் என நம்புகிறார்கள், நம்ப வைக்கப்படுகிறார்கள். இதற்கு மக்களை மட்டுமே குறை சொல்ல முடியுமா? தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசுப்பணி, நடுவணரசுப் பணி, தனியார் நிறுவனப் பணி எதுவாயினும் தமிழ் வழிக் கல்வி கற்றவர்களுக்கே அளிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டு நடைமுறைபடுத்தியிருந்தால் நாம் இந்த இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கவே மாட்டோமே!
என்ன நீங்கள், 21ஆம் நூற்றாண்டில் இது நடைமுறை சாத்தியமே இல்லை என்பவர்களுக்கு, தன் மொழியின் இறைமையைக் காக்கும் ஜப்பானும், சீனாவும், ஃபின்லாந்தும் நாம் வாழும் இதே பூமியில்தானே உள்ளது! அந்த நாடுகளில் செய்ய முடிந்தது தமிழ்நாட்டிற்கு மட்டும் எப்படி நடைமுறை சாத்தியமில்லாமல் போகும்?
ஒடுக்கும் ஒன்றியம்:
இந்தியா ஒரே நாடு, நம் தாய்நாடு, வேற்றுமையில் ஒற்றுமை காணும் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் ஜனநாயகத்தையும் கொண்டது என்பார்கள். இந்தியா ஒரே நேரத்தில் ஒன்றியமாகவும் இருக்கிறதாம் கூட்டுறவுக் கூட்டாட்சியாகவும் இருக்கிறதாம்.
இது உண்மை என்றால் 830 மொழி பேசும் இந்தியா ஏன் இந்தியை மட்டும் ஆட்சி மொழியாகவும், ஆங்கிலத்தைத் துணை ஆட்சி மொழியாகவும் கொண்டுள்ளது? 22 மொழிகளுக்குப் பெயரளவில் வெறும் அங்கீகாரம் கொடுத்தால் மட்டும் போதுமா? 22 மொழிகளையும் ஆட்சிமொழிகளாக்கவும், தொடர்பு மொழிகளாக்கவும் எது தடையாக உள்ளது?.
விடுதலை அடைந்து 73 ஆண்டுகள் கழித்தும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இதே நிலை தொடர்கிறது என்றால் என்ன பொருள்? 6 ஆட்சி மொழிகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் அவையில் கூட சரியான மொழி பெயர்ப்பைக் கொடுத்தால் நீங்கள் எந்த மொழியிலும் கருத்து கூற வாய்ப்பு உண்டு. இந்திய நாடாளுமன்றத்திலோ அது கேள்விக்குறிதான்.
உண்மையிலே இந்தியா ஒரு ஜனநாயகக் கூட்டுறவுக் கூட்டாட்சியாக இருக்கும் என்றால், பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை வழங்கியிருக்கும் என்றால், இந்தியாவுடன் இணைந்திருக்கத்தான் காஷ்மீர் கூட விரும்பியிருக்கும். இந்தியக் கட்டமைப்பிற்குள் தமிழ்நாட்டின் சுயாட்சியை, சமூகப்பொருளாதார இறையாண்மையை, இனஉரிமைகளை இழந்து நிற்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
உண்மையில் இந்தியா சமூக நீதிக்குப் புறம்பான ஒரு சனாதனப் பெருமுதலிய சர்வாதிகார ஒன்றியமாகத்தானே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது? எந்த ஒன்றிய அமைப்பு இந்திய துணைக்கண்டத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காப்பதாகக் கூறப்படுகிறதோ அதே ஒன்றிய அமைப்புதான் அதன் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் சிதைப்பதாக உள்ளது.
வரலாற்று வழியில் இந்தியா அந்நியர்களை வெளியேற்றுவதில் ஒரு முற்போக்கான பங்காற்றியது, அந்த முற்போக்குத் தன்மை தொடர்ந்திருக்க வேண்டுமானால், அது பல்வேறு தேசிய இனங்களின் இறைமைக்கு வழி தந்திருக்க வேண்டும். ஆனால் அது ஏற்றத்தாழ்வுகளை அதிகப்படுத்தும், சமூகநீதிக்குப் புறம்பான, மாற்றம் என்பதற்கே வழியில்லாத, தேசிய இனங்களின் வளர்ச்சியைத் தடை செய்யும் ஒரு இறுகிய சிறைக் கூடமாகவே உள்ளது. இங்கு சட்ட முன்வரைவை மாநிலங்களும் முன்னெடுக்க முடியாது, மக்களும் முன்னெடுக்க முடியாது.
உலகெங்கும் இதுதானா நிலை?
இந்தோனேசியாவில்:
அப்படியே சற்று தென்கிழக்கில் பார்த்தீர்களானால் 700க்கும் மேற்பட்ட மொழிகளைக் கொண்ட இந்தோனேசியாவைக் காண்பீர்கள். உருதுவை ஆட்சிபீடத்திலிருந்து கீழிறக்கிய இந்தி எப்படி இந்தியாவில் பல மொழிகளை அழிக்கக் காரணமானதோ அதே போல் இந்தோனேசியாவிலும் இந்தோனேசியன் என்ற ஒற்றை ஆட்சிமொழி பல மொழிகளை அழித்துக் கொடுங்கோலாட்சி புரிந்து வருகிறது.
நைஜீரியாவில்:
கொஞ்சம் வடமேற்கே பாருங்கள். பிரிட்டிஷ் காலனியாக இருந்த 520 மொழிகளைக் கொண்ட நைஜீரியாவைக் காண்பீர்கள். உலகில் அதிகமாக ஆங்கிலம் பேசுவோரைக் கொண்ட நாடுகளில் நைஜீரியா 3ஆம் இடத்தில் உள்ளது.
நைஜீரியாவின் மொழிகளை அழிக்கும் ஒற்றை ஆட்சி மொழியாக ஆங்கிலம் அரியணையில் அமர்ந்துள்ளது. தமது இறையாண்மையை இழந்து மொழி, பண்பாட்டை இழந்து வாழும் அவலநிலைக்கு நைஜீரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அங்கு ஒரு இஷெக்ரி மொழியினர் தன் இனத்தை சேர்ந்தவரிடம் இஷெக்ரி மொழியில் பேசினாலும், அவர் இஷெக்ரி மொழி பேசினால் தன் உயிருக்கு ஆபத்து வந்து விடுவோமோ என அஞ்சி ஆங்கிலத்தில்தான் பதிலுரைப்பாராம். அந்த அளவிற்கு அங்கு இனக்குழுக்களின் மோதல் உள்ளதாம்.
இங்கு தமிழ்நாட்டிலோ குழந்தைகள் கல்வியாளர்களுக்கு அஞ்சி தமிழில் பேச முடியாமல் ஒடுங்கும் அவல நிலை தொடர்கிறது. தமிழ்நாடு இன்னொரு நைஜீரியா ஆக வேண்டுமா? ஆங்கிலத்தைக் கட்டாயமாக்கினால் அதற்கே வழி வகுக்கும்.
இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும், இந்தோனேசியாவிலோ, நைஜீரியாவிலோ இங்குள்ளது போன்ற சாதிப் படிக்கட்டுகள் இல்லை என்பதால் நம் நிலை அவர்களை விட மோசம் அல்லவா?
ஐரோப்பிய ஒன்றியம்:
இந்தியாவிற்கு வடமேற்கே ஐரோப்பிய ஒன்றியத்தைப் பாருங்கள். ஐரோப்பா ஒரே நாடு என்றோ, வேற்றுமையில்ஒன்றுபட்ட கலாசாரம், பாரம்பரியம் என்றெல்லாமோ அவர்கள் கதை கட்டுவதில்லை. ஐரோப்பிய ஒன்றியம் ஒரு நாடுகடந்த அரசியல் பொருளாதார ஒன்றியம். இருப்பினும் அங்குள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் இறைமை உண்டு. 26 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆட்சிமொழிகள் 24. ஒரு பன்னாட்டுக் குடியாட்சிய அமைப்பு என்ற முறையில் அதன் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று பன்மொழித்துவம்.
அதன் உறுப்பு நாடுகளின் குடிமக்கள் அனைவரும் தத்தமது தாய்மொழியில் கேள்வி கேட்கவும், தாய் மொழியிலேயே பதில் பெறவும் உரிமை பெற்றுள்ளனர். ஐரோப்பிய நாடாளுமன்றம் 22 ஆட்சிமொழிகளையும் செய்மொழியாக ஏற்றுக்கொள்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சார்ந்த மக்கள் தத்தமது தாய்மொழியிலே அதன் நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. அதன் ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆங்கிலம் இருப்பதற்கு அது ஒரு சர்வதேச மொழி என்பது மட்டுமே காரணம் அல்ல.
ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஐக்கிய முடியரசு (பிரெக்சிட் வரை), மால்தா, அயர்லாந்து அதன் உறுப்பு நாடுகள் என்பதும் காரணமாகும். பல்வேறு தேசிய மொழிகளை ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்துவது அதன் வெளிப்படைத் தன்மைக்கும், திறன் வாய்ந்த செயல்பாட்டிற்கும் உதவும் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் மொழிபெயர்ப்புத் துறையே மிகவும் பெரியது. ஐரோப்பிய ஒன்றிய அலுவலர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மொழி தொடர்பான வேலைகளிலே பணி புரிகின்றனர். (இங்கு நாம் கருத்தில் கொள்வது ஐரோப்பிய ஒன்றியத்தின் மொழிக் கொள்கையே ஒழிய பொருளாதாரக் கொள்கை அல்ல).
ஐரோப்பிய ஒன்றியம் என்ற ஒரு பொருளாதார ஒன்றியம் தரும் மொழி உரிமைகளைக் கூட ஒரே நாடு எனத் தன்னைக் காட்டிக் கொள்ளும் இந்தியா வழங்கவில்லை என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு!
அமெரிக்காவில்:
ஸ்பானிய, போர்த்துக்கீசியக் காலனி ஆதிக்கத்தால் மெக்சிகோவிலிருந்து அர்ஜெண்டினா வரை பெருமளவில் ஸ்பானிய மொழி கோலோச்சிப் பூர்விக மொழிகளைத் தொடர்ந்து அழித்து வருகிறது.
அங்குள்ள பூர்வகுடியினரும் பிரிவினைவாதங்களைத் தவிர்ப்பதற்காகத் தம் குழந்தைகளுக்கு சொந்த மொழிகளைக் குறைவாகவே சொல்லிக் கொடுக்கின்றனர். இருப்பினும் சமீபகாலமாக அரசு முயற்சிகளால் அங்கு பூர்விக மொழிகள் மறுமலர்ச்சி பெற்று வருகின்றன.
ஐந்நூறு ஆண்டுகளாகச் சொந்த மண்ணில் ஏதிலிகளாக ஒடுக்கப்பட்ட பெருமளவு மக்களும் புத்தெழுச்சியுடனும், பெருமையுடனும் தம் மொழிகளைப் புத்தாக்கம் செய்து மறுமலர்ச்சி பெற்று வருகின்றனர்.
உதாரணங்களாக:
மெக்சிகோ: மெக்சிகோவின் அரசு 69 மொழிகளை ஆட்சி மொழிகளாகவும், தேசிய மொழிகளாகவும் அங்கீகரித்துள்ளது. பூர்வ குடியினரின் மொழி உரிமைகளை அங்கீகரித்து, பூர்விக மொழிகளைப் பாதுகாக்கவும், அதில் கல்வி பெறச் செய்யவும் 2002இல் மொழியுரிமைச் சட்டத்தை இயற்றியுள்ளது.
பூர்விக மொழிகளின் பாதுகாப்பிற்காகவும், வளர்ச்சிக்காகவும் பூர்விகமொழிகளுக்கான தேசிய அமைப்பை (INALI) உருவாக்கியது. இந்த அமைப்பின் செயல்பாடுகளால் பூர்விக மொழிகளைப் பேசுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
பொலிவியா:
லத்தீன் அமெரிக்காவில் அதிபரான முதல் மண்ணின் மைந்தன், ஐமாரா இனத்தைச் சேர்ந்த நம் எவொ மொரேல்ஸ். அவரது தலைமையில் 2009ல் உருவாக்கப்பட்ட புதிய அரசமைப்புச் சட்டம், பொலிவியாவை பல்தேசிய நாடாகப் பிரகடனப்படுத்தி, 38 மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரித்துள்ளது.
பொலிவிய மக்கள் தாய்மொழியில் கற்கவும், தன் கலாச்சாரத்தோடு தொடர்புடைய மொழியை இரண்டாம் மொழியாகக் கற்கவும், அழியும் தறுவாயிலுள்ள மொழிகளைப் பாதுகாக்கவும் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெரு:
பெருவிய அரசு பூர்விக மொழிகளின் பாதுகாப்பு, வளர்ச்சி, மறுமலர்ச்சிக்கான சட்டத்தை 2011ல் நடைமுறைப்படுத்தியுள்ளது. 80 பூர்விக மொழிகளையும் அலுவல் மொழியாக, ஆட்சி மொழியாக அங்கீகரித்துள்ளது. மக்கள் தம் தாய்மொழியிலே அரசின் சேவைகளைப் பெறுவதற்கான உரிமையைப் பெற்றுள்ளனர்.
பொது நிர்வாகம் 80 மொழிகளிலும், மக்களுடன் தொடர்பு கொள்ளக் கடமைப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அவை பரிந்துரைக்கும் பூர்வக்குடி மக்களுக்கான மாந்த உரிமைகளைப் பெருவிய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் பண்பாட்டு அமைப்பு (UNESCO), 2019ஆம் ஆண்டைப் பூர்விக மொழிகளுக்கான பன்னாட்டு ஆண்டாக அனுசரிக்கிறது. இதற்கு முற்றும் முரணாக இதே ஆண்டில் இந்திய ஒன்றியம் பூர்விக மொழிகளை, இந்தியால் ஒடுக்கும் முறையைத் தீவிரப்படுத்தியுள்ளது. உலக அரங்கில் எவ்வளவு பெரியஅவமானம்.
எது நம் மொழிவழி?
நாம் நல்ல முன்னுதாரணங்களின் வழியில் செயல்படப் போகிறோமா? இல்லை, மோசமான முன்னுதாரணங்களைக் காட்டி நம் அவல நிலைக்கு நியாயம் கற்பிக்கப் போகிறோமா? ’போலச் செய்தல்’ என்ற பழக்கம் நம்மிடம் அதிகமாக உள்ளது. மேட்டுக்குடியினர், ஆதிக்க வகுப்பினர் என்ன செய்கிறார்களோ அதையேதான் நாமும் செய்ய வேண்டும்,
அப்பொழுதுதான் சமூக மதிப்பும் அங்கீகாரமும் பெறலாம் என்பது நமக்கு நாமே விதித்துக் கொள்ளும் தீய பழக்கம்.
அவர்களைப் போல் பொது வெளியில் ஆங்கிலத்திலோ, குறைந்தது தமிங்கிலத்திலோ பேச வேண்டுமென்றும், பிள்ளைகளைத் தனியார் கல்வியகங்களில் அதீதக் கட்டணத்தில் ஆங்கிலவழியில் படிக்க வைக்க வேண்டுமென்றும் நமக்குப் பொருந்தாத விதிகளை நாமே வலிந்தேற்று சமூக அநீதியின் பொறியில் சிக்கிக் கொள்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பகுத்தறிவின் அடிப்படையில் இந்தத் தீய பழக்கத்திலிருந்து விடுபட வேண்டியது சமூகநீதி நமக்கு விடுக்கும் பணி.
ஏற்கெனவே ஆங்கிலம் வலிந்து திணிக்கப்படும் போது மீண்டும் இருமொழிக் கொள்கை வாயிலாக ஆங்கிலத்தைக் கட்டாயமாக்குவது, இங்குள்ள ஆதிக்க வர்க்கத்தினருக்கு சாதகமாக இருக்குமே ஒழிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே தொடரும். இங்குள்ள சமூக ஏற்றத்தாழ்வுகளை அதிகப்படுத்தி ஜனநாயகத்தைப் பொசுக்கும் இந்தக் கொடுந்தீயைத் தமிழால் மட்டுமே தணிக்க முடியும்.
தமிழ் வழிக் கல்வி, தமிழே முதன்மை மொழி, இரண்டாம் மொழி விருப்ப மொழி என்ற அடிப்படையில் அமைந்த ஒருமொழிக் கொள்கையே இன்றைய சூழலில் நம் மொழிச் சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும். அதுவே சமூக நீதி காக்கும் ஜனநாயகக் கல்விமுறையை மலரச் செய்யும்.
- சமந்தா