சென்னை மாகாணத்திலிருந்து பிற மொழி பேசுவோர் தனித்தனியாக பிரிந்து போன நாள் நவம்பர் 1.தமிழ் மக்களுக்கு என்று தனி மாநிலம் கிடைத்த நாள். ஆனால் தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற்றிருக்கிறார்களா?
இந்தியா என்பது பல தேசியங்களின் கூடாரம் என்பதை புரிந்து கொண்டு மொழி வழி மாநிலம் உருவான நாள் நவம்பர் ஒன்று. இன்று அறுபது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தமிழ் மொழியும், தமிழர்களும் தங்களுக்குரிய உரிமைகளோடு வாழ்கிறார்களா? இந்தியாவில் இந்தி பேசும் மக்கள் பெற்றிருக்கும் உரிமைகளையாவது தமிழர்கள் பெற்றிருக்கிறார்களா என்று பார்ப்போம்.
இந்தியாவில் பட்டைய கணக்காயர் (CA) என்ற படிப்பை இந்தி அல்லது ஆங்கிலம் வழியாக மட்டுமே படித்திட முடியும். இந்தியாவில் நிறுவனச் செயலாளர் (ACS) என்ற படிப்பை இந்தி அல்லது ஆங்கிலம் வழியாக மட்டுமே படித்திட முடியும்.
இந்தியாவில் அடக்கவிலை மற்றும் பணிக் கணக்காயர் (ICWA) என்ற படிப்பை இந்தி அல்லது ஆங்கிலம் வழியாக மட்டுமே படித்திட முடியும்.
இந்தியாவில் நடத்தப்படும் அஞ்சல் வழி பொறியியல் (AIME) படிப்பை இந்தி அல்லது ஆங்கிலம் வழியாக மட்டுமே படித்திட முடியும்.
இதுபோல் இந்திய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளின் வினாக்கள் அனைத்தும் இந்தி அல்லது ஆங்கிலம் வழி மட்டுமே அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தி பேசும் மக்களுக்கு உள்ள உரிமைகள் தமிழ் பேசும் மக்களுக்கு கல்வித்துறையில் மறுக்கப்பட்டே வருகிறது.
தமிழகத்திலிருந்து தேர்ச்சி பெற்று வேறு மாநிலங்களில் பணி புரியும் மத்திய அரசுப் பணியாளர்களின் எண்ணிக்கையை விட இந்தி மாநில அதிகாரிகள் தமிழகத்தில் தமிழ் தெரியாமல் தமிழர்களை அவதிக்குட்படுத்தும் நிலையே தொடர்கிறது. இந்தி மொழி தெரியாமல் இந்திபேசும் மக்களிடத்தில் பணியாற்றுவதே அச்சத்திற்குரியது. ஆனால் தமிழ் தெரியாமல் எவ்வித அச்சமும் இன்றி தமிழ்நாட்டில் பணியாற்றும் நிலையே தொடர்கிறது.
இந்திய அரசு அலுவல் பணி படிவங்கள் அனைத்தும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசு அலுவலக இணையதளங்களில் எல்லாம் இந்தியும் ஆங்கிலமுமே கோலோச்சுகிறது.
இந்தி பேசும் மாநில மக்கள் வேறு பகுதிகளுக்குச் சென்றால் அவர்களின் வசதிக்காக தொடர்வண்டி நிலையங்களில் எல்லாம் இந்தியிலும் ஊர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இந்திய ஒன்றியத்தின் அரசு திட்டங்களின் பெயர்கள் அனைத்தும் இந்தி மொழியிலேயே வைக்கப்படுகிறது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் தமிழர்களின் பங்களிப்பு அளப்பரியது. அப்படி இருந்தும் இந்தியா உருவாக்கி அனுப்பும் செயற்கைக் கோள்களின் பெயர்கள் அனைத்தும் இந்தியில்...
தமிழகத்திலிருந்து தமிழ் மக்களிடம் வரியைப் பெற்றுக்கொள்ளும் வணிக வரி, வருமானவரி அலுவலகங்களில் கூட இந்தியின் ஆதிக்கம் அளவுக்கதிகமாக இருக்கிறது.
இந்திய மக்களின் ஒட்டு மொத்த செல்வக் கருவூலமாக இருக்கக்கூடிய ஆயுள் காப்பீட்டுக் கழக திட்டங்கள் அனைத்தும் இந்தியில் பெயர் சூட்டப்பட்டு தமிழர்களிடம் விற்பணை செய்யப்படுகிறது.
ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் தனிநபரின் விருப்பத்திற்குட்பட்டது. ஆயுள் காப்பீடு திட்டம் தொடர்பான விவரங்களை முழுவதுமாகத் தெரிந்த பின்னரே திட்டத்தில் சேரவும் என்று விளம்பரம் செய்யும் ஆயுள் காப்பீட்டு கழகத்தில் வழங்கப்படும் திட்டச் சான்றிதழில் ஆங்கிலம், இந்தி இரண்டில் மட்டுமே திட்டம் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டிருக்கும்.
இந்திய ஒன்றிய அரசால் வெளியிடப்படும் விளம்பரங்கள் அனைத்தும் தமிழ் நாளிதழ்களில் கூட ஆங்கிலத்திலோ இந்தியிலோ வெளியிடப்படுகிறது.
தமிழர்களிடம் உள்ள தமிழின் ஆளுமையைக் குறைக்க அவர்களின் தாய் மொழி அல்லாத இந்தி மற்றும் ஆங்கிலத்தை அவர்களிடம் திணித்து தமிழின் அழிவுக்கும், தமிழர்களின் பண்பாட்டு அழிவுக்கும் காரணமாக இந்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டு உயர் நீதி மன்றத்தில் தமிழில் அலுவல்களை மேற்கொள்ள முடியவில்லை என்பதே எவ்வளவு இழிவுக்குரியது என்பதை நாம் சிந்திப்பதில்லை.
பிற மொழியிலேயே அலுவல் பணிகளைச் செய்யக் கற்றுக்கொண்ட தமிழர்களும், தமிழின் பெருமையை உணராமல் தமிழை அலுவல் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தாமல் தமிழின் அழிவுக்கு காரணமாகி வருகிறார்கள்.
மொழி வழி தேசியம் அமைக்கப் பாடுபட்ட, தியாகம் செய்த தலைவர்களை போற்றும் அதே நேரத்தில் மொழி வழி தமிழ்தேசிய மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பிற்கு இதுவரை தமிழகத்தை ஆண்ட ஆளுகிற கட்சிகள் எவ்வித முன்னெடுப்புகளையும் எடுத்ததாக தெரியவில்லை.
இவர்களின் ஆளுகைக்குட்பட்ட நிர்வாகத்திற்குள்ளேயே தமிழை முழுமைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவிலை.
தமிழ்நாடு அரசால் கட்டப்பட்ட பக்தர்கள் குடிலுக்கு யாத்ரி நிவாஸ் என்று பெயர் சூட்டும் நிலையில்தான் தமிழக ஆட்சியாளர்களின் தமிழார்வம் உள்ளது.
திருவள்ளுவருக்குச் சிலை வைப்பதாலோ, தமிழன்னைக்குச் சிலைவைப்பதாலோ தமிழர்கள் பூரித்துப் போகலாம்,தமிழ் வாழாது, தமிழர்களின் பண்பாடும் வாழாது.
தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கையாக மட்டுமே ஆட்சியாளர்களின் மொழியார்வம் இருக்கிறது, தமிழின் உயர் தனிச்சிறப்பு குறித்தோ, தமிழ்வழி கல்வி குறித்தோ ஆட்சியாளர்களின் ஆளுமைகளுக்கு நம்பிக்கையோ, சிந்தனையோ இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ் குறித்த சிந்தனை இருந்தால், யாத்ரி நிவாஸ் என்ற பெயரைச் சூட்டுவார்களா?
இப்போதைய ஆட்சியாளர்களின் தமிழார்வத்திற்குப் பின்னால் தமிழர்களிடம் ஓட்டு வாங்க வேண்டும் என்ற எண்ணமும், தமிழர்களின் நிலங்களை உலக வர்த்தக நிறுவனங்களுக்குத் தாரை வார்க்க வேண்டும் என்ற எண்ணமும், தமிழர்களிடம் உலக வர்த்தகச் சந்தையை திணிக்க வேண்டும் என்ற ஆர்வமுமே முன்னணியில் உள்ளது.
உலகின் முதல் மொழி, பல்லாயிரம் சொற்களை உடைய மொழியான தமிழ் மொழிக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் உருவான இந்தி மொழியில் இந்தியாவின் ஒட்டு மொத்த கல்வியையும் வழங்க முடியுமானால், தமிழில் மருத்துவம் படிக்க முடியாது, பொறியியல் படிக்க முடியாது என்று புலம்பிக்கொண்டிருக்கும் தமிழர்களின் நிலையை நினைத்தால் கவலையளிப்பதாக உள்ளது. தமிழர்களை ஊனப்படுத்தி வைத்திருப்பது இந்திய அரசு மட்டுமல்ல, தமிழ் வழிக் கல்வியை விரிவாக்கம் செய்யாத தமிழ்நாட்டு அரசும்தான்.
குறைந்தபட்சம் தமிழர்களின் பகுதியில் மட்டுமாவது…
ஊர்களின் பெயர்களை, வணிக நிறுவனங்களின் பெயர்களை, அரசு திட்டங்களின் பெயர்களை தமிழில் அமைத்திட தமிழ்நாட்டு அரசு முடிவெடுக்க வேண்டும்.
தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை தமிழ் மொழியில் வழங்கிட வேண்டும்.
தமிழ் வழி படித்தவர்களுக்கே தமிழ்நாட்டரசு வேலை வழங்க நடவடிக்கை வேண்டும்.
இந்திய அரசு கல்வித்திட்டத்திலும் தமிழ் வழிக் கல்வியை வழங்க தாய் மொழி வழிக் கல்விச் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய அரசுத் தேர்வுகளை தமிழில் எழுதவும், வினாத்தாள்கள் தமிழில் அச்சடித்து வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டயக் கணக்காயர் போன்று இந்திய அரசு நடத்தும் தொழில் நுட்பப் படிப்புகளை தமிழ் வழியில் நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய அரசுக்குச் சொந்தமான ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களில் தமிழ் வழியை நடைமுறைப்படுத்த தாய் மொழிவழிக் கல்விச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அன்னிய மொழியறிவை தொழில் நுட்ப அறிவாக, மருத்துவ அறிவாக, மேலாண்மையியல் அறிவாக, கலையியல் அறிவாகப் பார்க்கும் மக்களின் மூட நம்பிக்கையை அகற்ற உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். மாறிவரும் அறிவியல், தொழில் நுட்ப, தகவல் தொடர்பு வளர்ச்சிக்கேற்ப மாநில கல்வித்திட்டத்தை சீரமைக்க வேண்டும்.
இந்திய ஒன்றிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளை மாநில மொழிகளில் மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும்.
இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவதும் சமமான உரிமைகளைப் பெற்றிருந்தால் மட்டுமே உண்மையான விடுதலையை பெற்றதாகப் பொருள். இந்தி மொழி ஆதிக்கத்தின் கீழ் நாம் எப்படி விடுதலையைப் பெற்றுவிட்டோம் என்று கூட முடியும்.
இந்தியாவுக்கு அன்னிய மொழியான ஆங்கிலத்தின் ஆதிக்கத்தின் மீது இந்திய தலைமை அமைச்சர் மோடிக்கு ஏற்படும் மன உறுத்தல் உணர்வுதான் தமிழர்களுக்கு அன்னிய மொழியான இந்தி மற்றும் ஆங்கில ஆதிக்கத்தின் மீதும் ஏற்படும் என்பதை இநதிய ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.
மொழி வழி தேசிய மாநிலங்கள் அமைக்கப்பட்ட இந்தநாளை கொண்டாடுவதோடு தேசிய இனத்தின் உரிமைகள் மீதும் கவணம் செலுத்தி உரிமைகளைப் பெற உழைக்க வேண்டும். போராடுவதால் மாத்திரமே உரிமைகளைப் பெற முடியும். ஒத்துப் போவதால் அடிமையாக மட்டுமே வாழ முடியும். இந்தி மொழிக்கு தமிழ் மொழியை அடிமையாக வைத்திருக்கும் நிலையை மாற்றுவோம்.
- நா.வெங்கடேசன், ஆசிரியர்-மெய்ச்சுடர், பேராவூரணி