தாய்மொழிக் கல்வி:

தமிழ் மொழியை முதல் மொழி, இரண்டாம் மொழி என்னும் இரு நிலைகளில் கற்பிக்கும் சூழல் எனக்கு அமைந்தது. முதன்முதலில் தமிழை இரண்டாம் மொழியாகத் தான் கற்பித்தேன். அது வட இந்தியாவிலும், ஜெர்மனியிலும் உள்ள சில உயர்கல்வி நிறுவனங்களில் நிகழ்ந்தது.புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர்பட்ட ஆய்வாளராக இருந்த காலகட்டத்தில் பகுதிநேரமாக தமிழ் கற்பித்தேன். வரலாறு, சமூகவியல், தெற்காசியவியல் முதலிய துறைகளைச் சார்ந்த முதுகலை மாணவர்களும், முனைவர் பட்ட ஆய்வாளர்களும் அவர்களது ஆய்வு சார்ந்து தமிழ் மொழியைப் படிக்க வந்தார்கள். அதேபோன்று ஜெர்மனியில் கொலோன் பல்கலைக்கழகத்தில் வருகைதரு ஆய்வாளராக இருந்த காலகட்டத்தில், அப்பல்கலைக்கழகத்தில் உள்ள இந்தியவியல் மற்றும் தமிழியல் ஆய்வு நிறுவனத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் மாணவர்களுக்கு தமிழ் கற்பிக்கும் சூழல் வாய்த்தது. புகழ்பெற்ற இவ்விரு கல்வி நிறுவனங்களிலும் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கும் போதும், தமிழ் குறித்து விவாதிக்கும் போதும் நான் எதிர்கொண்ட அனுபவங்கள் புதுமையானவை.

students 286ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும், கொலோன் பல்கலைக்கழகத்திலும் என்னிடம் தமிழ் படிக்க வந்த மாணவர்களில் சரிபாதி ஈழத்தமிழர்கள். போரின் நிமித்தம் ஈழத்திலிருந்து வெளியேறி ஐரோப்பா, அமெரிக்கா, கனடா என உலகின் பல பகுதிகளில் சிதறிக் கிடக்கும் ஈழத்தமிழர்கள். புலம்பெயர்ந்தவர்கள் தங்களின் வேராக, மூலமாக உணர்வது மொழியைத் தான். மொழி வழியிலான இன அடையாளம் வலிமையானது. எனவே கடந்த நாற்பது ஆண்டுகளாக வெவ்வேறு சூழல்களில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து உலகின் பல பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் அடுத்தடுத்த தலைமுறைகள் தங்கள் வேரைத் தேடி தமிழ் படிக்க வருகிறார்கள். இத்தேடுதல் புலம்பெயர்ந்த நாடுகளில் மட்டும் நிகழவில்லை, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கல்வி கற்கச் செல்லும் எல்லா நாடுகளிலும் நிகழ்கின்றது. அப்படித்தான் அமெரிக்காவிலும், கனடாவிலும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் பிள்ளைகள் இந்தியாவின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலும், சமூகவியலும் கற்க வந்த போது, பகுதிநேரமாகத் தமிழ் படிக்க என்னிடம் வந்தார்கள். “எங்கள் பெற்றோருக்குத் தமிழ் தெரியும்; எங்களுக்குத் தான் தெரியவில்லை, தமிழ் எங்கள் தாய்மொழி; எங்கள் அடையாளம்” என்னும் அவர்களின் உணர்வை அவர்களுடன் உரையாடும் போது உணர்ந்திருக்கிறேன். இதே உணர்வோடு கொலோன் பல்கலைக்கழகத்தில் உள்ள இந்தியவியல் துறையில் தமிழ் படித்த ஈழத்தமிழர்களையும் நான் அறிவேன். ஈழத்தமிழர்களைத் தவிர்த்துத் தமிழை இரண்டாம் மொழியாகப் படிக்க வந்தவர்களில் முக்கியமானவர்கள் மலையாளிகளும், வங்காளிகளும்.திராவிட மொழிக்குடும்பத்தின் தாயான தமிழின் மீது உள்ள ஆர்வத்தால் உந்தப்பட்டவர்கள் அவர்கள்.

அவ்விரு பல்கலைக்கழகங்களிலும் தமிழ் சார்ந்து ஆய்வு செய்பவர்கள், அதன் நிமித்தம் தமிழ் படிக்க வருபவர்களின் தமிழ் குறித்த எண்ணமும், கருத்தியலும் அவர்களுக்கு தமிழ் கற்பிக்கும் ஆசிரியருக்கு மிகுந்த ஊக்கம் அளிப்பவை. அவை தமிழ் படிப்பவர்கள் மீதும், தமிழ்ப்பட்டதாரிகள் மீதும், தமிழாசிரியர் மீதும் நம் தமிழ்ச் சமூகம் கொண்டிருக்கும் எண்ணங்களுக்கு நேரெதிரானவை. தமிழின் வளத்தையும் வரலாறையும் நன்கு உணர்ந்திருந்தவர்கள் அவர்கள். அதனால் தான் அவர்களுக்கு தமிழின் மீது தனிப் பற்று இருக்கிறது.தமிழ் மொழியின் இயல்பையும், இலக்கியங்களையும் கற்கும் போது உள்ளம் களிப்புற்று தமிழாசிரியர் மீது மிகுந்த அன்பு கொள்வார்கள். அதனால் தான் அவர்களுக்கு தமிழ் கற்பிப்பது கரும்பு தின்னுவது போல இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக, தமிழை முதல் மொழியாக தமிழகத்தில் உள்ள சில தனியார் கல்லூரிகளில் கற்பித்து வருகிறேன். தமிழத்தில் தமிழ் கற்றுக்கொடுப்பது வெளிநாட்டில் கற்றுக்கொடுப்பதை விட கடினமானதாகவே உணர்கிறேன். இந்த உணர்வு தமிழ் படிக்க வரும் மாணவர்களையும், தமிழ் வகுப்பையும் அடிப்படையாகக்கொண்டு எழுகிறது.அவ்விரு கூறுகளுக்குப் பின்னணியாக சமூகமும், அச்சமூகத்திற்கு கல்வி புகட்டும் (தனியார்/அரசு) கல்வி நிறுவனங்களும் இருக்கின்றன. தமிழகத்தின் இருவேறு பகுதிகளில், அதாவது ஈரோடு, கோவில்பட்டி என்னும் இரு ஊர்களில் (சிறு நகரங்கள்) உள்ள தனியார் கல்லூரிகளில் தமிழ்க் கற்பித்தேன். அவ்விரு கல்லூரிகளிலும் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அதிர்ச்சியூட்டுபவை.

தமிழை முதல் மொழியாகவும் இரண்டாம் மொழியாகவும் கற்பிக்கையில் இவ்விரு வகுப்புகளுக்கும் உள்ள சில யதார்த்தங்களை இங்கு ஒப்பிடுகிறேன்.

தமிழை இரண்டாவது மொழியாகப் படிக்க வரும் மாணவர்களிடம் இருக்கும் ஆர்வம், தமிழை தாய்மொழியாகப் படிப்பவர்களிடம் இல்லை என்னும் அடிப்படை உண்மையை நான் நேரடியாக உணர்ந்தது இந்தத் தனியார் கல்லூரிகளில் தான். தமிழை தாய்மொழியாக, அல்லது முதல் மொழியாகப் படிக்கும் கல்லூரி மாணவர்கள், தனக்குத் தமிழ் பேசத்தெரியும் என்னும் நிலையிலேயே திருப்தி கொள்ளும் மனநிலை உடையவர்களாக இருக்கிறார்கள். அதுதான் அவர்களின் தமிழ் மொழித்திறனைக் குறைக்கும் முதல் காரணியாக நான் கருதுகிறேன். அவர்கள் தன் சிந்தனையை அல்லது பேச்சை எழுத்தில் எழுதச்சொன்னால் திணறுகிறார்கள். தமிழை பேச்சு வழக்கில் அழகாகப் பேசும் மாணவர்கள், தமிழ் எழுத்து வழக்கிற்கு உள்ள இயல்புகளையும், முறைகளையும் அறியாதவர்களாக இருக்கிறார்கள். அதனால் பேச்சு வழக்கில் தேர்ச்சி பெற்றும், எழுத்து வழக்கில் தன் கருத்தைக் கச்சிதமாக விளக்கத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் எழுத்து வழக்கு தான் கற்றவரையும், கல்லாதவரையும் பிரிக்கும் மொழி­யியல் கோடு. ஆங்கில மொழியைப் போன்றதல்ல தமிழ், அதாவது பேசுவது போன்றே எழுதுவதில்லை.தமிழ் இரட்டை வழக்குடைய மொழி.பேச்சுத்தமிழும் எழுத்துத்தமிழும் வெவ்வேறான வடிவம் கொண்டவை. தமிழ் மொழியைப் பற்றிய இந்த அடிப்படைப் புரிதல் அவசியம். என்னிடம் தமிழை இரண்டாம் மொழியாகப் படித்த மாணவர்கள் முதல் வகுப்பிலேயே வியப்புடன் எழுப்பிய கேள்வியும் இதுதான்.

கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் தமிழை பகுதி ஒன்றாகப் படித்த மாணவனை தமிழில் ஒரு விண்ணப்பக் கடிதம் எழுதச் சொன்னால் எழுதத் தெரிவதில்லை. இந்தத் திறன் அவர்களுக்கு தாய்மொழியாகிய தமிழிலும் இல்லை, ஆங்கிலத்திலும் இல்லை. தாய்மொழியை தவறின்றி எழுதத் தெரிந்தால் தான் ஆங்கிலத்தை தவறின்றி எழுத முடியும் என்னும் தர்க்கம் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.மாணவர்களின் இந்த மொழித்திறன் குறைபாட்டை அங்குக் கல்வி போதிக்கும் பொறுப்புடையவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. மாணவர்களை அந்த அவலத்திலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியோ, பயிற்சியோ அளிக்காமல் அவர்களின் மொழித்திறனை மேலும் சீரழிக்கும் சில நிகழ்வுகளைக் கண்டு நான் அதிர்ச்சியுறுகிறேன். “மாணவர்களுக்கு விண்ணப்பக்கடிதம் கூட எழுதத் தெரியவில்லை” என்று குறைகூறும் துறைத்தலைவர்கள் விண்ணப்பக் கடிதத்தை தகவல் சொல்லும் படிவமாக மாற்றுகிறார்கள். பெயர், வகுப்பு, விடுப்பு நாள், விடுப்பிற்கான காரணம் ஆகியவற்றை மட்டும் நிரப்பிக் கொடுக்கும் வகையில் அப்படிவத்தை வடிவமைத்திருக்கிறார்கள். இதில் மற்றொரு துரதிர்ஷ்டமான விஷயம் என்னவென்றால், இந்த மாணவர்களுக்கு பகுதி -1 தமிழ் பாடத்தில், ‘விடுப்புக்கடிதம்’ எழுதும் பயிற்சி ஒரு பாடமாக இருக்கிறது என்பதுதான். விடுப்புக்கடிதத்தைக் கற்பிக்கும் என்னைப் போன்ற மொழியாசிரியர்களுக்குத் தான் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் கல்லூரிகள் மாணவர்களின் தாய்மொழியாகிய தமிழ் மொழியையும், தமிழ்ப்பாடத்தையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதில் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது.

தற்காலத் தமிழிலக்கியத்தில் வட்டார வழக்குகள் பெற்றிருக்கும் செல்வாக்கின் பின்னணியில், அம்மாணவர்களின் பேச்சு வழக்கில் உள்ள வட்டாரத் தன்மையை மொழித்திறன் நோக்கில் அறியும் சோதனையும் அவ்வப்போது செய்வதுண்டு. தமிழ் வட்டார வழக்கு இலக்கியத்தில் கரிசல் வழக்கின் செல்வாக்கிற்கு வித்தாக விளங்கும் கோவில்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் பணியாற்றியபோது, மாணவர்களிடம் புகழ்பெற்ற கரிசல் வட்டார எழுத்தாளர்களான கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், பூமணி, சோ.தர்மன் முதலியோரின் படைப்புகளைக் கொடுத்து வாசிக்கச் சொல்லுவேன். அம்மாணவர்கள் தான் பேசும் வட்டார வழக்கிலேயே உள்ள அப்படைப்புக்களை பிழையில்லாமல் அழகாக வாசிப்பார்கள். ஆனால் அவ்வட்டார வழக்கை அப்படியே எழுத்தில் எழுதச்சொல்லும் போது அவர்களால் துல்லியமாக எழுதமுடியவில்லை. இது கொஞ்சம் கடினமானதுதான், ஆனால் இந்தப்பயிற்சி மொழித்திறன் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதோடு, மாணவர்களை வட்டார வழக்கில் இலக்கியம் படைக்கத் தூண்டுவதாகவும் இருக்கிறது. இது ழ-ல-ள, ண-ன, ர-ற ஆகிய ஒலிகளுக்கு இடையிலுள்ள ஒலிப்பியல் வேறுபாடுகளை துல்லியமாக அறியாதிருத்தல் என்னும் தமிழர்களின் பொது ஒலிப்பியல் சிக்கலைக் களைவதோடு, பேச்சு வழக்கை எழுத்துக்கு மடைமாற்றுவதால் வட்டார இலக்கியங்கள் பெறும் வீரியத்தைப் பற்றிய புரிதலையும் உணர்த்துகிறது. தமிழை இரண்டாம் மொழியாகக் கற்றவர்கள் தமிழின் இரட்டை வழக்கைப் பற்றி விழிப்புணர்வு உடையவர்களாக இருந்தார்கள். ஆனால் பேச்சுவழக்கின் வட்டாரத்தன்மையை அறியாதவர்களாக இருந்தார்கள்.அவர்களுக்கு அவ்வழக்கின் வட்டார அடையாளத்தை இனம்காட்டுவது எனது பணியாக இருந்தது.

தாய்மொழிவழிக் கல்வி:

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் மொழித்திறனைப் பற்றிய புரிதல் நமக்கு அவசியம். திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களும் கிராமங்களால் நிறைந்தவை. கிராமப்புறங்களில் அதிகமான கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட 89 கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் பெரும்பான்மையினர் கிராமப்புறத்தைச் சார்ந்தவர்கள். இக்கல்லூரிகளில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ‘நாம் கிராமப்புற மாணவர்களுக்கும், முதல்தலைமுறை மாணவர்களுக்கும் கற்பித்துக்கொண்டிருக்கிறோம்’ என்ற உணர்வை வகுப்பறையின் அக,புற சூழல்கள் தொடர்ச்சியாக வழங்கிவருகின்றன.

நம் கல்லூரிகளில் தமிழைத் தவிர்த்த பிற பாடங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன. ஆங்கிலத்தில் உள்ள பாடங்களை ஆங்கிலத்தில் நடத்துவதற்கான சூழல் இங்கே இருக்கிறதா? என்பதை ஆராய்கையில் இரண்டு வாதங்கள் விவாதங்களாகின்றன. அவற்றுள் ஒன்று வாதம், மற்றொன்று பிடிவாதம்.

முதலாவது ‘மாணவர்களுக்குப் புரியாது’ என்னும் வாதம். இது கற்றுக்கொடுக்கும் ஆசிரியரின் நேரடி அனுபவத்தில் உருவானது. இதை நீங்கள் ஏறத்தாழ எல்லாக் கல்லூரியிலும் பார்க்கலாம். ஏனென்றால் இதற்கான காரணத்தில் நியாயமிருக்கிறது. வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவரும் பள்ளிக் கல்வியை ஆங்கில வழியில் கற்றவர்கள் அல்ல. பெரும்பான்மையினர் தமிழ்வழியில் கற்றவர்கள். வகுப்பறைக்குள் ஆசிரியர் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்சினையினால் அவர் தமிழ்வழியில் பாடம் நடத்துகிறார். சில வகுப்புகள் தமிழும், ஆங்கிலமும் கலந்து நடத்தப்படுகின்றன. ஆனால் வணிகவியல் போன்ற ஒரு சில கலைத் துறைகளைச் சார்ந்த பாடப்புத்தகங்களே தமிழில் உள்ளன. அறிவியல், கணிதம் முதலிய துறைசார்ந்த பாடங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன. ஆசிரியர் அவற்றை தமிழில் விளக்குகிறார். வணிகவியல் போன்ற சில துறைகளுக்கு பாடநூல்கள் தமிழில் இருந்தாலும், மாணவர் பயிலும் கல்லூரி எந்த மொழியில் கற்பிப்பதற்கு பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றிருக்கிறதோ அந்த மொழியில் தான் அவர் தேர்வு எழுதவேண்டும். இங்கு பெரும்பாலான கல்லூரிகள் ஆங்கில வழியை தான் வாங்கிவைத்திருக்கின்றன. அதற்குக் காரணம் ஆங்கிலமும், ஆங்கிலவழியும் இன்று பெரும் வணிகப் பொருளாக மாறியிருப்பதே. 2018-ஆம் ஆண்டு வரை ஆங்கிலவழியில் அங்கீகாரம் வாங்கிவைத்திருந்த கல்லூரிகளிலிருந்து தமிழ்வழியில் எழுதப்பட்ட தேர்வுத்தாள்களையும் பல்கலைக்கழகம் ஏற்று வந்தது.

இரண்டாவது வாதம் பிடிவாதம். அதாவது ‘ஆங்கிலத்தில் தான் படிக்க வேண்டும்’, ‘ஆங்கிலத்தில் தான் தேர்வு எழுத வேண்டும்’ என்பது. இதை ஆங்கிலத்தை வைத்து சம்பாதிக்கும் தனியார் கல்லூரிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன. அதைத்தான் 2018-க்குப் பின் பல்கலைக்கழகம் கட்டாயமாக்கியிருக்கிறது.

ஆனால், பல்கலைக்கழகத்தின் 29-ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு துணைவேந்தர் அளித்த பேட்டியில் சொன்ன காரணம் இது: “1990-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் ‘பி’ கிரேடு அந்தஸ்திலிருந்து தற்போதுதான் ‘ஏ’ கிரேடு அந்தஸ்தைப் பெற்றுள்ளது. ஆங்கிலப்புலமையில் சிறந்து விளங்கிய தமிழகம், தற்போது பின்தங்கியிருக்கிறது.” அதோடு, மற்றொரு உண்மையையும் போட்டு உடைத்திருக்கிறார், “ஆங்கில வழியில் கற்பிப்பதாக அனுமதி வாங்கும் பல கல்லூரிகள், தமிழ் வழியில் கற்பித்து, தமிழில் தேர்வெழுத வைக்கின்றன. ஆனால் ஆங்கில வழியில் பயின்றதாகச் சான்றிதழ் கொடுக்கின்றன.”

பட்டப்படிப்பு என்னும் கனவோடு கல்லூரிக்கு வரும் கிராமப்புற மாணவர்களின் சிந்தனையும், செயல்திறனும் நகர்ப்புற மாணவர்களிலிருந்து நிறைய வேறுபட்டிருக்கின்றன. கற்றலுக்கான முக்கியத்துவம் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் குறைவு. இதுபோன்ற பல சமூகப் பின்னணியில் இருந்து வரும் மாணவர்களிடம் ஆரோக்கியமான சிந்தனையும், கற்கும் திறனும், கற்றதை அவர்கள் மொழியில் வெளிப்படுத்தும் திறமையும் அபாரமாக இருக்கின்றன. ஆனால் நாம் அமெரிக்காவையும், ஐரோப்பிய நாடுகளையும் முன்மாதிரியாகக் கொண்டு நம் கிராமப்புற கல்வி நிறுவனத்திற்குள் கற்றல்-கற்பித்தல் என்னும் பெயரில் புதுப்புது அளவுகோல்களைக் கொண்டு வருகின்றோம். இந்த அளவுகோல்கள் திறமையுடைய மாணவர்களையும் திறனற்றவர்களாக மாற்றிக் கொண்டிருப்பதை என்னுடைய ஆசிரிய அனுபவத்தில் நேரடியாக உணர்ந்திருக்கின்றேன்.அப்படிப்பட்ட அளவுகோல்களில் ஒன்றுதான் ஆங்கில வழியில் தான் தேர்வு எழுத வேண்டும் என்று மாணவர்களைக் கட்டாயப்படுத்துவது. இதை யார் கட்டாயப்படுத்துகிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் கல்விமுறைச் சட்டங்களில் பெரும்பாலானவை கற்பவர், கற்பிப்பவர் வழியில் உருவாகாமல், கல்வியை நிர்வகிப்பவர் வழியில் உருவாவதன் விளைவு இது.

ஆசிரியரையும் அவர் கற்பிக்கும் பாடத்தையும் மாணவர்கள் தங்கள் கற்றல் முறையில் நாள்தோறும் எதிர்கொள்கிறார்கள். ஆனால் அவையிரண்டும் மாணவர்களின் மொழியில் இருக்கின்றனவா? கல்வியில் மிகச்சிறந்து விளங்கும் பின்லாந்து முதலிய நாடுகளில் ஆசிரியரும், அவர் கற்பிக்கும் பாடமும் மாணவர்களின் மொழியில் இருக்கின்றன. ஆனால் இந்தியா போன்ற பன்மொழிச்சூழலுள்ள நாட்டில் அது சாத்தியமில்லை என்றே நாம் வாதிட்டுக் கொண்டிருக்கிறோம்.மாணவர்களின் மொழித்திறன்களையும், வாழ்வியல் பின்புலத்தையும் உணர்ந்து அவர்களுக்கான கற்பிக்கும் மொழியையும், பாடத்திட்டத்தையும் உருவாக்கத் தவறியிருக்கிறோம்.

த.சுந்தரராஜ்

Pin It