“நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ சொல்வீர்” தேமதுரத் தமிழோசை உலகமெலாம் செழிக்கச் செய்வீர்” என்று தேசிய கவிஞர் பாரதி வினாவும் விடையும் ஒருசேரத் தந்து போனார்.
23-06-2010 முதல் 27-06-2010 வரை ஐந்து நாட்கள் கோவை மாநகரில் வெள்ளம் போல் தமிழர் கூட்டம் திரண்டது உலகமெங்கணும் வாழும் தமிழர்களை மட்டுமல்லாமல் எல்லாத் தமிழ்நாட்டு மக்களையும் ஈர்த்துச் சிந்திக்கும்படி தூண்டிய மாநாடு நிறைவுபெற்றது. ஒவ்வொரு தமிழனும் பெருமிதமும். மகிழ்ச்சியும் கொள்ள வேண்டும் அரசியல், கருத்து வேறுபாடின்றி.
அரசியல் மேடையோ தமிழ் மாநாடோ என்று ஐயுறா வண்ணம் மாநாடு நடத்தப்பெறுமா என நியாயமாக ஐயப்பட்டோர் உளர். ஆனால் தமிழகத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடு எதுவும் அரசியலுக்கு அப்பாற் பட்டதாக இருந்ததில்லை என்பது உண்மை.
தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் கருணாநிதி மாநாடு முடிந்தபின் கோவையில் பத்திரிகையாளர்களை நேர்கண்டபோது ஏழு லட்சத்துக்கு அதிகமானவர்கள் பங்கேற்றனர், தொடக்க விழாவிலும் நிறைவு விழாவிலும் இரண்டு லட்சம் மக்கள் பங்கு பெற்றனர், ஐந்து லட்சம் பேர் பேரணியைக் கண்டு களித்தனர், கருத்தரங்கம், கவி யரங்கங்கள், பட்டிமன்றம் ஆகியவற்றை ஒன்றரை லட்சம் மக்கள் கண்டு களித்தனர், கண்காட்சியை 1,70,000 பேர் வந்து கண்டனர், சிறப்புமலர் 129 கட்டுரைகளையும்
34 கவிதைகளையும் வெளியிட்டுள்ளது. அரங்கங்களில் 2300 ஆய்வுக் கட்டுரைகள் வழங்கப்பட்டன. அரசு உணவுக் கூடத்தில் முப்பது ரூபாய் சலுகை விலையில் 4 லட்சம் பேருக்கு ஐந்து நாட்கள் உணவு வழங்கப்பட்டது. மொத்த மாநாட்டுக்காக 68 கோடி செலவிடப்பட்டு, பிற செலவுகள் 243 கோடி செலவிடப்பட்டது. ஆய்வரங்கங்களில் 239 அமர்வுகளில் 913 கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. ஐம்பது நாடுகளிலிருந்து எண்ணூற்று நாற்பது பிரதிநிதிகள் பங்கேற்றனர் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். உண்மையிலேயே தமிழக வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய மிகப்பெரும் சாதனை இது. எல்லாக் கட்டுரை களும் முறையாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட வேண்டும்.
ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி, 1952 முதல் 1957 வரை இயங்கிய சென்னை மாகாண சட்ட சபையில் தோழர் ப.ஜீவானந்தம், பி.இராமமூர்த்தி இருவரும் மொழிவழி மாநிலம் அமைவது பற்றியும், தாய்மொழிக் கல்வி கற்பித்தல் பற்றியும் வலிமையாகக் குரல் எழுப்பியது நினைவுகூரத்தக்கது. பொட்டி ஸ்ரீராமுலு, சங்கரலிங்க நாடார் உண்ணாநோன்புகளை மக்கள் மறந்திருக்க முடியாது. இந்தப் போராட்டங்களின் பின்புலமாக உறுதியாக நின்றவர்கள் பொதுஉடைமையாளர்கள்.
அரசியல், வரலாறு, பொருளாதாரம், சட்டம், விஞ்ஞானம், மருத்துவம், மெய்யியல், அறிவியல் நுண் கலைகள் எல்லாத் துறைகளிலும் கற்பிக்கும் பயிற்றுவிக்கும் திறன் தமிழுக்குண்டு. தமிழால் முடியும் என்னும் கொள் கையை வலியுறுத்தி 1963ஆம் ஆண்டு நியூ செஞ்சுரி நூல் பதிப்பகம் “தமிழில் முடியும்” என்னும் நூல் வெளி யிட்டதனை அனைவரும் அறிவர். இந்தக் கொள்கையில் உறுதியாக நின்றது.
தமிழ்மொழியைப் பயிற்சிமொழியாக ஏற்றுப் படிக்கும் காலத்தே பிறமொழியைக் கற்கும் வாய்ப்பை அரசு உருவாக்கித் தரலாம்.
அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து தமிழ்வழிக் கல்வி பயிற்றுவிக்க ஊக்குவிக்க வேண்டும். இல்லையேல் அரசாங்க வருவாயில் வாழ்ந்து தீங்கு தரும் தனியார் துறைக்குச் சேவகம் செய்வதற்கு வழிவகுக்கும். தமிழ்வழிக் கல்வி கற்றவர்க்கு அரசு பணிகளிலும் வேறு சில பணிகளிலும் முன்னுரிமை வழங்க ஏற்ற சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களில் ஆங்கிலவழிக் கல்வி கற் பிக்கப்பட்டால் தமிழ் கட்டாய பாடமாகவும் ஆங்கிலத் தோடு சமஉரிமை பெற்றதாகவும் ஆக்கப்பட வேண்டும். பிற மாநிலத்தவர் தமிழ் மாநிலத்தில் குடிமக்களாக இருக்குங்கால் தமிழ் பயிலுதல் மாணவர்க்குக் கட்டாய மாக்கப்பட வேண்டும். இல்லையேல் தமிழ்க் கல்வி என்பது பொருளற்றுப் போகும். “உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்பதற்கிணங்க தமிழ் நூல்கள் பிறமொழிகளில் ஆக்கம் பெற்று வெளியிடப்பட வேண்டும். அதுபோலவே பிறமொழி இலக்கியங்கள் தமிழில் கிடைத்தல் வேண்டும். இவற்றுக்கான திட்டங்கள் முறையாக வகுக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட வேண்டும்.
பிறமொழித் தாக்கம் இருந்தபோதும் வரலாற்று நெடுகிலும் தமிழ்மொழி செத்தும் பிழைத்தும் வாழ்ந்தது என்னும் நிலைமாறி செம்மொழி ஆன நிலையில் தமிழ், கல்வி நிலையங்களில் செம்மாந்து நிற்கவேண்டும்.
தமிழ், தமிழ்நாட்டு வரலாற்றை உற்று நோக்கு வோர்க்குக் கலைகள் அனைத்தும் விஞ்ஞானம் உட்பட, ஒரு காலத்தில் பழந்தமிழ்நாட்டில் தமிழில்தான் இருந்தன என்பதை உணர்வர். சித்த மருத்துவம், தாவரம், வேர், மரம், கனிகாய்களிலிருந்தும் கல்லும் மண்ணும் உற்பத்தி செய்த எல்லாப் பொருள்களும் தமிழில்தான் ஆராயப்பட்டன. இயற்கைப் பொருள்களை மலை, கல், நிலம், மண் அவற்றில் கிடைக்கும் பொருள்களை விஞ்ஞான வழிப்படி ஆய்ந்து சித்த மருத்துவத்தை உருவாக்கினர். ஆழ்ந்து சிந்திப்பார்க்கு ஆயுர்வேதமும், ஓமியோபதியும் இயற்கையின் பாற்பட்ட வையே. மேலும் ஆழ்ந்து ஆய்வார் அலோபதியும் இறுதிப் பகுப்பாய்வில், அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டிபயாடிக் என்னும் உயிர்க் கொல்லி மருந்துகளைத் தவிர பிறவெல்லாம் மருத்துவமுறைக்கு இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தியதன் விளைவே என உணர்வர். காலமாற்றத்துக்கேற்பச் சித்த மருத்துவம் வளர்த் தெடுக்கப்பட வேண்டும். இதனைப் பழமையின் மீட்டுருவாக்கம் எனக் கருதலாகாது. நாட்டு மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் குறிப்பாக வரும் தலை முறையினர் இது பற்றிச் சிந்தித்து மருத்துவம் பற்றிய விழிப்பினை ஏற்படுத்த வேண்டும்.
தமிழ் வரலாறும் தமிழ்நாட்டு வரலாறும் முழுதும் சரியாக எழுதப்படவில்லை. காரணம் கிரேக்க, ரோமா புரியில் வாழ்ந்த வரலாற்று ஆசிரியர்கள் போல இந்தியாவில் எவரும் தோன்றவில்லை. அப்படி யாராவது தோன்றி யிருந்தால் அவர்கள் நால்வருணப் பாகுபாட்டை வற் புறுத்திய மனு, சாணக்கியன் போன்றவராக இருந்திருப்பர். வரலாறு என்று ஏதாவது இருந்தால் அது கற்பனை வளம் மிகுந்த, ஆன்மிக வழிபட்ட சைவர், வைணவர் தல புராணங்களாக இருக்க வேண்டும். ஆனால் சங்க காலம் முதல் ஆங்கிலேயர் வருகை வரை ஆண்ட தமிழ் மன்னர் களும் விஜய நகர மன்னரும் பிறரும் ஏராளமான கல்வெட்டுகளை கோயில்களிலும், வயல்வெளிகளிலும், நடுகற்களாகவும் விட்டுச் சென்றுள்ளனர். தமிழ்நாட்டின் வரலாறு முறையாகக் கற்றுணர்ந்து எழுதப்பட வேண்டுமானால், சைவர் வைணவர் கோயில்களையும் தலபுராணங் களையும் நிராகரிக்க முடியாது. இவ்வாறு கூறும்போது நாம் ஆன்மிகத்துக்கு அடிமையாகிவிட்டோம் என்பது பொருளன்று. கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து விஜய நகர மன்னர் ஆட்சிக் காலம் வரை நிறுவப்பட்ட கல்வெட்டுகள் வயல்வெளிகள், கோயில்கள் பலவற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் நிலஉடைமைச் சமுதாயத்தை அறிய முயல்வோர் இவற்றைப் புறக்கணிக்க முடியாது. எடுத்துக்காட்டாக தருமை ஆதின் வெளியீடு களான தேவார திருமுறைகளுக்கு உரை வகுத்தவர்கள் ஒவ்வொரு தேவாரத் திருத்தலத்தைப் பற்றிய பாடல்களுக்கு உரை எழுதும்போது ஆங்காங்குக் கண்டெடுக்கப்பட்ட கோயில், கிராமப்புறக் கல்வெட்டுகளை ஆராய்ந்து அவ்வூரில் மக்களிடை நிலவியிருந்த பல்வேறு ஒழுகலாறு களையும் வாழ்க்கை நிலைமைகளையும் சடங்கு சம்பிர தாயங்களையும் எடுத்துச் சொல்லியுள்ளார்.
பேராசிரியர் முனைவர் இராசமாணிக்கனார் தம்முடைய சைவ வரலாறு, பெரியபுராண ஆராய்ச்சி என்னும் நூல்களில் இதனைச் சொல்லியுள்ளார்.
ஒவ்வொரு வைணவ திருத்தலத்துக்கும் வரலாறு உண்டு. தென்னிந்தியக் கல்வெட்டுகள் பற்றிய ஆராய்ச்சி ஏசியாடிக் சொசைட்டி ஆப் பெங்கால் தொடங்கிய வில்லியம் ஜோன்ஸ் காலத்திலேயே ஆரம்பமாயிற்று தொல் எழுத்தியல் துறை. தொல்லியல் ஆய்வுத்துறை கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் பற்றி ஆண்டறிக் கைகள் வெளியிடப்பட்டன. 1968-69 வரை கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் 59569 . இவற்றில் பல இன்னும் படித்தறிந்து கொள்ளப் படவில்லை. இவை தவிர பல கல்வெட்டுகள் கடந்த நாற்பதாண்டுகளாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை முறையாக வெளியிடப்பட்டுப் படித்தறியப்படுமேயானால் தமிழகத்தின் ஆயிரமாண்டுக் கால வரலாறு கிட்டும். இது பற்றி இம்மாநாட்டில் கல்வெட்டுத்துறை ஆய்வாளர்கள் தக்க கவனம் செலுத்தியிருப்பதாகத் தெரிகிறது.
2010 ஜூன் நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம் தலையங்கத்தில் பல எதிர்பார்ப்புகளைக் கோடிட்டுக் காட்டியுள்ளோம். அவை நிறைவேறினால் தமிழகமும் தமிழும் முன்னேறும்.
மாநாட்டின் சிறப்புமிக்க பகுதி. மென்பொருள் பற்றிய ஆய்வரங்கம். இவ்விஞ்ஞான யுகத்தில் சமுதாய மாற்றத்தை உறுதி செய்வது விஞ்ஞானமே, முதலாளித்துவம் வென்று காலனியம் உருவான காலத்தில் கப்பல், ஆகாய விமான போக்குவரத்தினால் நில உலகம் சுருங்கிற்று.
கடந்த நூற்றாண்டில் ஐம்பதுக்குப் பின் ஏற்பட்ட நுண்பொருள் புரட்சி மென்பொருள். கணினி பயன்பாடு உலகைத் தலைகீழாக மாற்றி விண்வெளியையே சுருக்கி விட்டதெனலாம். இந்தப் பின்புலத்தில் மென்பொருள் புரட்சி தமிழ் மொழி வளர்ச்சிக்கு மிகத் தேவை என்னும் உண்மையைக் கருத்தரங்கம் உணர வைத்ததும் வரவேற்கத் தக்கது. தமிழில் இக்கால இலக்கியங்களும் கலைகளும் விஞ்ஞானமும் காலத்திற்கேற்ப - தக்கவாறு வளர்க்கப்பட வேண்டும், எல்லா மக்களுக்கும் அளிக்கப்பட வேண்டும். இதற்கு மென்பொருள் பயன்பாடு மிக முக்கியம் என்றும் தமிழில் வருவதால் வளர்ச்சிக்காகத் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் உ™ரப்பட்டது இம்மாநாட்டின் சிறப்பு எனலாம். இயங்கிவரும் உலக வரலாற்றில் தமிழும் இயங்கி உயர்ந்தோங்கி வளரவேண்டும் என நியூ செஞ்சுரி உங்கள் நூலகம் விழைகிறது.