கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு தமிழ்நாடு நாள் விழாக் கொண்டாட்டங்கள் மிகவும் சிறப்பாகவே பல ஊர்களில் நடைபெற்றன. ஒரே வடிவத்தில் அல்லாமல் பல்வேறு வடிவங்களில் பெரும்பாலான இயக்கங்கள் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டாடின. தமிழ்நாடு கொடியை ஏந்தியபடி தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து முழக்கமிட்டது; தெருமுனைக் கூட்டங்கள் நடத்தியது; கருத்தரங்குகள் நடத்தியது; பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியது; இந்தியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியது; பேரணி நடத்தியது என்று பலவகையான நிகழ்ச்சிகள் எழுச்சியுடன் நடைபெற்றன.

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் அமைப்புகள், தமிழ் இயக்கங்கள், தமிழ்த் தேசிய உரிமை இயக்கங்கள், அடக்கப்பட்ட மக்களின் உரிமை இயக்கங்கள், குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மட்டுமன்றி நாம் தமிழர் கட்சியும் இந்த நாளை முன்னிட்டு இந்தி எதிர்ப்புப் பேரணியை நடத்தின. கொள்கையளவில் வேறுபாடுகள் இருப்பினும் தமிழ்நாடு நாள் விழா தமிழ்நாட்டுத் தமிழர்களின் தமிழ்த் தேசிய அடையாளத்திற்குரிய விழா என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

கருநாடகத்தைச் சார்ந்த கன்னட இனத்தினர் ‘கன்னட தேச விழா’வாகக் கருநாடக நாள் விழாவை நடத்துவது வேறு யார் நடத்தும் விழாவினும் சிறப்பானது. அவர்கள்,

* கருநாடக விழாவை மிகப் பெரும் தேசிய விழாவாகக் கொண்டாடுகின்றனர்.

* கருநாடகா எங்கும் கன்னட தேசக் கொடியை (மஞ்சள் சிவப்புக் கொடியை) ஏற்றுகின்றனர்.

* கருநாடக அரசு அலுவலகங்களில், கர்நாடகாவில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களில் எல்லாம் கன்னடக் கொடியை ஏற்றுவதைக் கட்டாயப்படுத்துகின்றனர்.

* இந்தியக் கொடி ஏற்றப்படுவதற்கு இணையாக அல்லது அதைவிட அதிகப்படியாகக் கன்னட தேசக் கொடியை மதிக்கின்றனர்.

* கர்நாடகாவில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களில் பணி செய்வோர் யாராக இருந்தாலும் கன்னடம் பயின்ற பிறகே பணியாற்றிட வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகின்றனர்.

* கன்னட நாளை அரசு விடுமுறை நாளாகக் கருநாடக அரசு அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப் படுகிறது.

* கருநாடக அளவில் சிறப்பாளர்களுக்கு அரசே அந்த நாளையொட்டி விருதுகளை வழங்குகிறது. இந்த அளவில் தமிழ்நாட்டில் தமிழ்நாடு நாள் -விழா கொண்டாடப்படுவதில்லை.

தமிழ்நாடு தோற்றங்கொண்டது நவம்பர் 1ஆம் நாள்தானா? அந்த நாள் தமிழ்நாட்டிற்கு உரிமையுள்ள தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்துவந்த பகுதிகளை இழந்து விட்ட நாளல்லவா? அந்த நாளை எப்படித் தமிழ்நாடு நாள் விழாவாகக் கொண்டாடுவது? என்ற வகையிலான கேள்விகள் நியாமானவையாகக்கூட இருக்கலாம். தமிழ்நாடு என்பது ஓர் அரசாக, நாடாகத் தோற்றங் கொள்வதற்கு எத்தனை எத்தனைத் தடைகள் இருந்தன.

பழஞ் சேர, சோழ, பாண்டியர்களுக்குப் பிறகு அவர்கள் ஆண்ட பகுதிகளை இணைத்தத் தமிழ்நாடு உருவாகிடாத வகையில் அல்லவா ஆரியப் பார்ப்பனர்களும், களப்பிரர் களும், பல்லவர்களும், முகலாயர்களும், நாயக்கர்களும், மராட்டியர்களும், ஆங்கிலேயர்களும் தொடர்ந்து தமிழ் கூறும் நல்லுலகத்தைத் தங்கள் தங்கள் அதிகாரத்தின் கீழ் அடக்கி அடிமைப்படுத்தி வந்திருந்தனர். தமிழ்நாட்டைச் சூறையாடி வந்திருந்தனர்.

இறுதியாக, ஆங்கிலேயர்கள் அதிகாரத்தின் கீழ் தமிழர் களும், தமிழ்நாடும் அடிமைப்பட்டிருந்தாலும் ஆயிரக்கணக் கான ஆண்டுகளுக்குப் பின்னர் வெகுமக்களுக்கான கல்வியும், விழிப்புணர்வும் ஆங்கிலேயர்கள் காலத்திலேயே கிடைத்தன.

உருவாக்கிய சென்னைத் தலைமாநிலமும் (மெட்ராசு பிரசிடென்சியும்), கல்வி உள்ளிட்ட சில உரிமைகளுமே ஆரிய, பிற அதிகார வெறியர்களிடமிருந்து தமிழர்களைத் தங்களின் தனி நாட்டுரிமையை நோக்கி நகரும் தெளிவைக் கொடுத்தது. தமிழ்நாடு தமிழருக்கே-என தமிழகத் தலைவர்கள் பேசத் தொடங்கினர்.

தமிழர்களாய் வாழ்ந்து, பின்னர் பிராகிருத, சமசுக்கிருத மொழிக் கலப்பால், பண்பாட்டுச் சிதைவுகளால் வேறு வேறு தேசிய மக்களாய் மாறிப் போன தெலுங்கு, கன்னட, மலையாள மக்கள் தங்கள் தங்கள் மொழி, இன நாட்டுப் பிரிவுகளுக்குக் குரல் எழுப்பினர். ஆனால், அனைவரையும் இந்தியா என ஆங்கிலேய அதிகார வகுப்பினர் கட்டி ஆண்டு வந்ததும், அவர்களோடு உறவு கொண்ட நிலையில் இந்திய அதிகார வகுப்பு ஆரியப் பார்ப்பன சார்பு உருக்கொண்டு இந்தியாவைத் தங்களுக்குரியதாக மாற்றிக் கொண்ட பின்னர் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மொழி இனத் தேசங்களும் அவர்களுக்கு அடிமைப்பட்டன.

இறுதியாக, இந்திய அரசுக்கு அடிமைப்பட்ட மொழி மாநிலமாகவே தமிழ்நாடு கிடைத்தது. மொழிவழி மாநிலங்களின் பகுப்பிலான முறையற்ற நடைமுறையில் ஒவ்வொரு மாநிலமும் சில நிலப் பகுதிகளை இழந்தன. ஆனால், தமிழ்நாடு தன் விரிந்த நிலத்தைப் பெருமளவில் இழந்துவிட்டது. ஆயினும், நீண்ட நெடிய காலங்களுக்குப் பின்னர் தமிழ்நாடு என அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் ஒரு நிலப்பரப்பும் ஓர் அரசும் அதற்குக் கிடைத்தது. கிடைத்தும் முழு அதிகாரம் கொண்ட அரசாக அது இல்லாமல் இந்திய அரசிற்குக் கட்டுப்பட்ட அரசாகவே அமைந்தது.

இந்த நிலையில் கிடைத்திருக்கிற அரசைக் காப்பதும், இழந்த அதிகார உரிமைகளை மீட்பதும் தமிழ்நாட்டிற்குக் கடமையாகின்றது.

தமிழ்நாடு ஒரு நாடாக, ஓர் அரசாக-தமிழ் இனம் ஓர் இனமாக அடையாளப் படுத்திக் கொள்ள இயலாத நிலையில் இந்திய அரசு பெரும் தடையாக உள்ளது. அதிலும் ஆரியப் பார்ப்பனிய பாசிச வெறி கொண்ட பாஜக அரசும், ஆர்.எஸ்.எஸ்.ம் மொழித் தேசங்களின்-மாநிலங்களின் அடையாளங்களையே சிதைக்கின்றன. மாநிலங்களின் மொழிகளை, பண்பாட்டை, வரலாற்றை அழிக்கின்றன. இந்நிலையில் மொழித் தேசங்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது கட்டாயமாகின்றது. எனவேதான், ஒவ்வொரு மொழி மாநில மக்களும் தங்களது மாநிலம் தனி மாநிலமாக உருவான நாளைப் பெரிய அளவில் கொண்டாடுகின்றனர்.

கருநாடக அரசு தங்கள் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக விழாவை நடத்தி வருகிறது. தங்களுக்கென்று தனிக் கொடியை அடையாளப்படுத்திக் கொண்டு, அரசு அலுவலகங் களின் முன்புறங்களில் ஏற்றுகின்றது. மிசோரம், நாகலாந்து, கேரளம், ஆந்திரம் எனப் பெரும்பான்மை மாநிலங்களில் விழாக் கொண்டாட்டங்கள் நடத்தப் பெறுகின்றன. நாமும் தமிழ்நாட்டளவில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடியாக வேண்டியிருக்கிறது.

1956இல் மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப் பட்டதற்குப் பின்னர் தமிழ்நாடு என இந்த மாநிலத்திற்குப் பெயர் வைத்துக்கொள்ளவும், தமிழ்நாடு இழந்த பகுதிகளை மீட்டுக் கொள்ளவும் எண்ணற்ற போராட்டங்கள் நடை பெற்றன. கன்னியாகுமரி மாவட்டத்திலும், மேற்கு மாவட்டங் களிலிலும், பழைய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலும் பல வட்டங்களைப் மீட்க எண்ணற்றோர் போராடி உயிர் ஈந்தனர்.

சங்கரலிங்கனார் ‘தமிழ்நாடு' எனப் பெயர் வைக்க வேண்டும் என்பதோடு பன்னிரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாநோன்பிருந்து 76ஆம் நாளில் உயிர் துறந்தார். இவையன்றிப் பல போராட்டங்கள் நடந்தன. இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினரும் தி.மு.க.வினரும் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் போராடினர். இறுதியாக அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையிலேயே சென்னை மாநிலம் தமிழ்நாடு எனப் பெயர் பெற்றது.

தமிழ்நாட்டை ஒரு மாநிலமாகப் பெறமுடிந்ததே அல்லாமல், முழு அதிகாரங்களையும் கொண்ட ஓர் அரசாக அதனால் பெறமுடியவில்லை. இருந்த அதிகாரங்களைக் கூட இந்திய வல்லாட்சி அரசு படிப்படியாகப் பறித்து வந்திருக்கிறது. கனிம நிலங்களை, கடல் வளங்களை, நில விளைச்சல் வளங்களை இந்திய அரசிடம் பறிகொடுத்து வருவதுடன், விற்பனை வரியும் ஜிஎஸ்டி எனும் பெயரில் பறிக்கப் பட்டுள்ளது. கல்வி உரிமையை, உயர் கல்வி நிறுவனங்கள் தொடங்கும் உரிமையை என தமிழ்நாடு அரசின் அதிகார உரிமைகளை படிப்படியாக பறித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், மாநில அரசுகள் தங்களின் அனைத்து உரிமைகளையும் போராடிப் பெற வேண்டியுள்ளது. ஒவ் வொரு மாநில மக்களும் தங்களின் இன அடையாளங் களைக்கூடப் பதிந்து கொள்ள முடியாத அளவிற்கு அடிமை நிலையிலேயே உள்ளனர்.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் தங்களைத் தமிழர்கள் என்றுகூட பதிவு செய்து கொள்ள முடியவில்லை.

இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் இந்தியக்குடி மக்களாக நாமெல்லாம் இருக்கலாம். ஆனால், இந்தியர் களாக இருக்க இயலாது.. இந்தியக் குடிமகன் என்பது வேறு; இந்தியர் என்பது வேறு.

மலையாள இனத்தினர் மலையாளி, தெலுங்கு இனத் தினர் தெலுங்கர், வங்காள இனத்தினர் வங்காளி, பஞ்சாபிய இனத்தினர் பஞ்சாபி என்பனர் போல, இந்தி இனத்தினரே இந்தியராக இருக்க முடியும். தமிழர்களோ, மலையாளிகளோ பிறரோ அந்தந்த இனத்தினராகவே பதிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த ஒபாமா அமெரிக்கக் குடிமகன்தான். ஆனால், அவர் கென்யன் ­என்றே தன் தேசிய இனத்தைப் பதிவு செய்திருந்தார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதுபோல்தான், தமிழ்நாட்டின் தமிழர்கள் தமிழ்த்தேசிய இனத்தினர் என்றோ, தமிழர்கள்-என்றோ பதிவு செய்திடலாமேயல்லாமல் - இந்தியர் - என்று பதிவு செய்திடுவது கூடாது.

இந்நிலையில், தமிழர்கள் தங்களின் தாய்மொழி உணர்வுக்கும், தமிழ்நாட்டு உரிமை உணர்வுக்கும் தமிழ் நாடு நாள் விழா - மிகப்பெரும் தூண்டலாகவே இருக்க வேண்டும். அதற்காகத்தான் ‘தமிழ்நாடு நாள்' விழாவைத் தமிழர்கள் முன்னெடுத்து நடத்த வலியுறுத்துகிறோம். கடந்த நான்கு ஆண்டுகளாகப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்ட மைப்பு நவம்பர் முதல் நாளைத் தமிழ்நாடு நாள் என்பதாகப் பெரிய அளவில் கொண்டாடி வருகிறது.

தமிழ்நாடு நாள் - நிகழ்ச்சி என்பது நவம்பர் முதலாம் நாளுக்குரியதான விழாவாக ஏறத்தாழ ஐம்பதாண்டுக் காலமாக நடந்து வருகிறது. கன்னியாகுமரி தமிழ்நாட்டோடு இணைக்கப்பட்ட விழாவாக அந்த மாவட்டத்தில் நவம்பர் முதல் நாளை சிறப்பாக நடத்தி வருகின்றனர். 1990ஆம் ஆண்டுக் காலந்தொட்டு மாணவர் நகலகம் ஐயா நா. அருணாசலம் அவர்கள் தமிழ்நாடு நாள் விழாவைத் தொடர்ந்து நடத்தி வந்தார்கள். அதன் பிறகும் முந்தியும் தமிழ் இயக்கங்கள் பலவும் அண்ணல்தங்கோ, சி.பா. ஆதித்தனார் உள்ளிட்ட பலரும் தமிழ்நாட்டிற்கெனத் தனிக்கொடி ஒன்று தேவை என வலியுறுத்தி வந்தனர்.

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பில் இணைந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இயக்கங்கள் கூடி வெள்ளை நிறக் கொடியில் சிவப்பு நிறத்தில் தமிழ்நாடு நிலப்படம் அமைந்துள்ளதான கொடியை முன்மொழிந்து, அறிவிப்பு செய்து அதையே தாங்கியபடி தமிழ்நாடு விழாவைக் கடந்த நான்கு ஆண்டுகளாகக் கொண்டாடி வருகின்றனர்.

அதற்கு முன்பிருந்தே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழ்நாடு கொடி என ஒரு கொடியை அறிமுகப்படுத்திக் கொண்டாடி வருகின்றது. நாம் தமிழர் கட்சியும் சில ஆண்டு களாகத் தங்கள் கட்சியின் சார்பில் தமிழ்நாட்டிற்கென ஒரு கொடியை அறிமுகப்படுத்தி, ஏந்தி விழா நடத்தி வருகிறது.

இதற்கிடையில் என்ன காரணத்தினாலோ, சூலை 18ஆம் நாளையே தமிழ்நாடு நாள் என ஏற்க இருப்பதாகத் திமுக அரசு அறிவித்தது. சூலை 18ஆம் நாள் தான் தமிழ் நாடு எனப் பெயர் சூட்டப்பட்ட நாள் என்கின்றனர் சிலர்.

1967 சூலை 18ஆம் நாள் சட்டமன்றத்திலே சட்ட முன்வரைவு இயற்றப்பட்ட நாள் என்ற போதும், இந்திய நாடாளுமன்றத்தில் 1968 நவம்பர் 22ஆம் நாள் தீர்மானம் இயற்றப்பட்டு, கலைவாணர் அரங்கில் (அன்றைய பாலர் அரங்கில்) 1968 திசம்பர் முதல் நாளில் மகிழ்ச்சி விழா நடைபெற்ற போதும் குழந்தை பிறந்தது விழா நாளா? பெயர் சூட்டப்பட்ட நாள் விழா நாளா? எனச் சிலர் தருக்கமிடுகின்றனர்.

இதற்கிடையில், சூலை 18ஐத் தமிழ்நாடு பெயர் சூட்டப்பட்ட நாள் என்றும், நவம்பர் முதல் நாளைத் தமிழ்நாடு நாள் என்றும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடிட வேண்டும் எனப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டது. கடந்த ஆண்டு நவம்பர் முதல் நாளை காட்டிலும் இந்த 2022ஆம் ஆண்டின் நவம்பர் முதல் நாள் விழாவைப் பரவலாகப் பலரும் முன்னெடுத்து நடத்தினர். இந்தச் சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் நவம்பர் முதல் நாளை எல்லைப் போராட்ட ஈகியர்கள் நாளாக அறிவிப்புச் செய்தார்.

எது எப்படியாயினும், இன்றைக்கு இருக்கும் தமிழ்நாட்டு நிலையை எண்ணி தமிழ்நாட்டு அரசு விரைந்தும் தெளி வாகவும் சில முடிவுகளை எடுத்தாக வேண்டும். அதாவது,

* தமிழ்நாடு நாள் விழாவைத் தமிழ்நாடு அரசு மிக எழுச்சியாக-மக்கள் விழாவாக கொண்டாடும் வகையில் உருவாக்க வேண்டும்.

* அன்றைய நாளை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்.

* தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிகளையும் அழைத்துக் கலந்து பேசி நாட்டிற்கென ஒரு கொடியை அறிவிக்க வேண்டும். (அந்தக் கொடியில் இந்திய அரசுக்குரிய எந்த அடையாளங்களும் இருந்திடக் கூடாது. தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் சிறப்பு அடையாளங்களில் ஒன்றை அனைவரின் முடிவின்படி அமைக்கலாம்).

* அப்படி அறிவிக்கப்படும் கொடியைத் தமிழ்நாடு அரசு அலுவலகங்களில், தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களில் அனைத்திலும் ஏற்றிட வேண்டும்.

* தமிழ் மொழி, இன, தமிழ்நாட்டு உரிமைகளுக்காகப் பாடாற்றிடும் அறிஞர்களையும், செயற்பாட்டாளர்களை யும் தமிழ்நாடு அரசு பாராட்டி, பரிசுகள் தரலாம்.

இந்த வகையில் தமிழிய உணர்வை வளர்ப்பது தமிழர் மீதும் தமிழ்நாட்டின் மீதும் தமிழர்களுக்கு ஈடுபாட்டை வளர்க்கும். தமிழ்நாடு நம் தேசம் எனும் தன்மான உணர் வைப் பெருக்கும். அது ஒரு வகையில் பெருமளவில் பார்ப்பனிய பாசிச வெறியாட்டங்களுக்கு எதிராக நின்று அவற்றை வீழ்த்தும்.

எனவே தமிழ்நாட்டரசு தமிழ்நாடு நாள் விழா அறிவிப்பதையும் தமிழ்நாட்டிற்கென ஒரு கொடியை அடையாளப்படுத்தி அறிவிப்பதையும் அதன் வலிமையை விளங்கிக் கொண்டு விரைந்தும் உறுதியுடனும் செய்திட வேண்டும் என வலியுறுத்திக் கோருகின்றோம்.

- பொழிலன்

Pin It