thiruvalluvar statue kanyakumariஅண்மைக் காலமாகத் தமிழ்த் தேசியம் பற்றிய எழுச்சி ஏற்பட்டு வருவதை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும். அத்துடன் நில்லாமல் திராவிடத் தேசியத்தை எதிர்ப்பதும், அதற்குத் துணை நின்றதாக பெரியார் ஈ.வெ.ராவைத் தாக்கும் போக்கும் தொடர்ந்து வருகிறது.

திராவிடம், ஆரியம் என்ற சொற்கள் பல இடங்களில் பல மாதிரியான பொருளில் வழங்கி வருகின்றன. இந்தப் பிரிவினையை கால்டுவெல்தான் கொண்டு வந்தார் என்று அவரைத் தாக்கும் போக்கும் தொடர்கிறது. தாக்கதலும், எதிர்த் தாக்குதலும் ஒரு தீர்வை நோக்கிப் போக வேண்டும்.

மொழி ஆராய்ச்சியைத் தொடங்கிய ராபர்ட் கால்டுவெல் இந்திய மொழிகளை ஆரிய மொழிக்குடும்பம் என்றும், திராவிட மொழிக்குடும்பம் என்றும் இருவகைப் படுத்தினார். தமது நுட்பமான மொழியாய்வின் காரணமாக ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ மூலம் தமிழின் பெருமையை உலகறியச் செய்தார்.

‘திராவிட மொழிகள் என்று வகுத்துக் கொண்டது ஏன்?’ என்ற அதிகாரத்தில் அதற்கான காரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ளார். திராவிடம் என்ற சொல் கால்டுவெல் கண்டுபிடித்தது இல்லை. அவருக்கு முன்னதாகவே அது வழக்கில் இருந்தது என்பதைப் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளார்.

வடமொழியில் தென்னிந்திய மொழிகளைக் குறிப்பதற்குப் பண்டைய நாளில் இது வழங்கப்பட்டதாகத் தெரிய வருகிறது. ‘ஆந்திர - திராவிட பாஷா’ என்ற சொற்றொடர் வடமொழி வாசகரான குமாரில்பட்டர் என்பவரால் எடுத்தாளப்பட்டுள்ளது,

அத்துடன் மனுஸ்மிருதியில் 10ஆம் பிரிவில் திராவிடர்’ என்று கூறப்பட்டுள்ளது. இதனால் தென்னிந்திய பகுதியிலுள்ள பலதிறப்பட்ட மக்களையும் பொதுப்படையாகக் குறிப்பதற்குத் ‘திராவிடம்’என்ற குறியீடு எடுத்தாளப்பட்டுள்ளது.

இனி, இந்தியப் பெரு மூதாதைகளில் ஒருவரான சத்திய விரதர் என்பவரைக் குறிக்குமிடத்து பாகவத புராணம், ‘திராவிட மன்னர்’ என்றே குறிக்கின்றது.

கால்டுவெல் திராவிட மொழிகளின் தாயாகத் தமிழ்மொழியையும், அதன் கிளை மொழியாக தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, குடகு ஆகிய மொழிகளையும் ஒப்பிட்டு இலக்கணம் வகுக்கிறார். இவற்றைத் திருந்திய மொழிகள் என்றும் வேறு ஆறு மொழிகளைத் திருந்தாத மொழிகள் என்றும் குறிப்பிடுகிறார்.

“ஆற்றலிலும் எண்ணிக்கையிலும் மிக்கவர்களாகக் கருதப்படும் ஓரினத்தாரின் மொழியாகிய வடமொழியைச் சென்ற 2000 ஆண்டுகளாக எதிர்த்து நின்று போராடி வருவன திராவிட மொழிகள். மற்றெந்த அயல்மொழியும் தம்மிடைத் தலைசிறவாதபடி எதிர்த்து நின்று தடுத்துக்கொள்ளும் என்று எளிதில் நம்பலாம்” என்று அறுதியிட்டு உறுதியாக உரைக்கிறார்.

“இத்தமிழ் மொழியை உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பலவற்றையும் குறிப்பதற்குக் குறியீடொன்று இன்றியமையாது வேண்டப்படுமாதலின் ‘திராவிடம்’ என்று அதனை வகுத்துக் கோடல் எடுத்துக் கொண்ட ஒப்பிலக்கண முறைக்குப் பொருத்தமாம்” என்று கூறியுள்ளார்.

இந்த நிலைதான் தமிழக அரசியல் களத்திலும் நிலவியது. ஆங்கில ஆட்சிக் காலம் முதல் 1953ஆம் ஆண்டுவரை தமிழகம் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. ஆந்திராவின் பகுதிகள். மலபார் மாவட்டம். தென்கன்னட மாவட்டம் போன்றவை அதனுடன் இணைக்கப்பட்டிருந்தன.

ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தின் பிரதமர்களாக தெலுங்கர்களே தொடர்ந்து இருந்து வந்தனர். எனினும் அவர்கள் அதனால் திருப்தியடையவில்லை. தங்களுக்கென தனிமாநிலம் வேண்டுமென்று 1920 முதல் குரல் கொடுத்து வந்தனர். அதற்காக அவர்கள் ‘ஆந்திர மகாசபை’ என்ற அமைப்பை உருவாக்கினர்.

மலையாளிகளும் தனி மாநிலக் கோரிக்கைக்காக ‘கேரள சமாஜம் என்ற அமைப்பை உருவாக்கி கட்சி வேறுபாடு இல்லாமல் ஒன்றுபட்டனர். தமிழர்கள் மட்டும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ‘வந்தது வரட்டும்’ என்று காலம் கடத்தினர்.

1953ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் அமைக்கக் கோரி பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். அதன் பிறகுதான் நேரு மொழிவழி மாநிலப் பிரிவினைக்கு ஒத்துக் கொண்டார். 1953ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரா தனிமாநிலமாகப் பிரிந்தது.

1956ஆம் ஆண்டு மலபார் மாவட்டம் பிரிந்து கேரள மாநிலத்தில் இணைந்தது. தென்கன்னட மாவட்டம் பிரிந்து கர்நாடகத்துடன் சேர்க்கப்பட்டது. மிச்சம் இருந்ததே சென்னை மாகாணமானது. பல தமிழ்ப்பகுதிகள் பறிகொடுத்த கதை இதுதான்.

இந்தப் பகுதிக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்கக்கோரி போராட்டங்கள் நடந்தன. சங்கரலிங்க நாடார் சாகும் வரை உண்ணா நோன்பு இருந்து 1956 அக்டோபர் 13 அன்று உயிர் துறந்தார்.

மொழிவழி மாநிலப் போராட்டத்தில் ம.பொ.சி,யின் பணியை நன்றியுடன் பாராட்ட வேண்டும். அவருடைய முன் முயற்சியினால் 20-12-1960 இல் சென்னை கோகலே மன்றத்தில் தமிழரசுக் கழகம் சிறப்பு மாநாடு நடத்தியது. 30-01-1961இல் அறப்போர் நடத்த இம்மாநாடு முடிவு செய்தது. இந்தப் போராட்டத்திற்குப் பிறகு முதலமைச்சர் காமராசர் காலத்தில் சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதற்கு ‘சென்னை ராஜ்யம்’ என்று தமிழில் எழுதி வருகிறோம். இனி தமிழில் எழுதும்போது ‘சென்னை ராஜ்யம்’என்பதற்குப் பதிலாக ‘தமிழ்நாடு’ என்று எழுத வேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்பதே அந்த அறிவிப்பாகும்.

1967இல் அண்ணா தலைமையில் தி.மு.க.ஆட்சி ஏற்பட்ட பிறகு ஆங்கிலத்திலும் ‘தமிழ்நாடு’ என்று மாற்றினார். இந்திய அரசும் இதனை ஏற்றுக் கொண்டு அரசியல் சட்டத்தைத் திருத்தியது.

தமிழ்நாடு பெயர் மாற்றுவதற¢கு ஏற்பட்ட தடையைக் கண்டு வருந்திய பெரியார் ஈ.வெ.ரா 10-11-1955அன்று விடுதலையில் ஓர் அறிக்கையினை வெளியிட்டார். ‘தமிழ்நாடு இல்லையேல் உயிர் எதற்கு?’ என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

“தமிழ்நாடு என்கின்ற பெயர்கூட இந்நாட்டுக்கு சமுதாயத்துக்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்று விட்டார்கள் என்கின்ற நிலைமை ஏற்பட்டு விடுமானால் பிறகு என்னுடையவோ, என்னுடைய கழகத்தினுடையவோ என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை.”

இந்தக் காரியம் மாபெரும் அக்கிரமமான காரியம் என்பதோடு மாபெரும் சூழ்ச்சி மீது செய்யப்பட்ட காரியம் என்றே கருதுகிறேன். நம் நாடு எது? நமது இனம் எது? என்பதையே மறைத்து விடுவதென்றால், பிறகு தமிழன் ஏன் உயிர் வாழ வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை.

ஆகவே இக்கேடு முளையிலேயே கிள்ளப்பட்டு விடும்படி முயற்சி செய்யும் படியாக எல்லாத் தமிழர்களையும் உண்மையிலேயே வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வாறு பெரியார் ஈ.வெ.ரா உருக்கமான வேண்டுகோளைத் தமிழா¢களுக்கு விடுத்துள்ளார். 1944ஆம் ஆண்டு சேலம் நகரில் தம் இயக்கத்துக்கு ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் மாற்றினார். ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்ற அவரது முழக்கத்தைப் பிற்காலத்தில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று மாற்றிக் கொண்டார்.

திராவிடம் என்னும் தென்னிந்திய நிலப்பரப்பு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று மொழி வழியாகப் பிரிந்து விட்ட பிறகு தமிழர்களுக்குத் தமிழ்த் தேசியமே நிலையானது என்பதில் ஐயமில்லை. ஆனால் மொழிவழி மாநிலப் பிரிவினையின் போது தமிழர்கள் விழித்தெழவில்லை என்பதால் ஏற்பட்ட இழப்பு கொஞ்ச நஞ்சமல்ல.

‘தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகள் பறிபோயின. அரசியல் செல்வாக்குப் பெற்ற அண்டை மாநிலத்தார் அபகா¤த்துக் கொண்டனர். காவிரி முதல் கண்ணகி வரை நமது உரிமைகளை இழந்து நிற்கிறோம்.’

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடை 
தமிழ் கூறு நல்லுலகத்து...”

என்று தொல்காப்பியம் தமிழக எல்லையை வரையறுத்துக் கூறுகிறது. இதனை ஏற்றுக் கொள்வார் யார்? ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்பதுபோல ஆகிவிட்டது. இப்போது வேங்கடம் ஆந்திராவின் செல்வம் கொழிக்கும் சொத்தாகிவிட்டது,

ஏமாந்த தமிழர்களின் இழிந்த நிலையைப் பற்றி 1937இ¢ல் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் கூறியது நினைவுக்கு வருகிறது:

“தமிழனுடைய நாடு படையெடுப்பால் இழக்கப்பட்டது
தமிழனுடைய நூல்கள் கடல்நீரால் அழிக்கப்பட்டது
தமிழனுடைய கல்வி பிறமொழியினரால் ஒழிக்கப்பட்டது
தமிழனுடைய ஒற்றுமை சாதியால் பிரிக்கப்பட்டது
தமிழனுடைய உரிமை உபாயத்தால் ஒடுக்கப்பட்டது
தமிழனுடைய பதவி வஞ்சனையால் கவரப்பட்டது
தமிழனுடைய வீரம் உபதேசத்தால் அடக்கப்பட்டது”

இதனை ஒருமுறை எண்ணிப் பார்த்தால் நமது இழப்பின் அருமை தெரியும். இப்போது இந்திய தேசியம் ஆள்கிறது; திராவிடம் தேசியம் ஆண்டது, தமிழ்த் தேசியம் ஆள வேண்டும், இது வரலாறு காட்டும் வழியாகும்.

- உதயை மு.வீரையன்

Pin It