நகர அரசுகளும் மொழி அடையாளமும்:

3000 ஆண்டுகளுக்கு முன்பே நகர நாகரிகத்தையும் நகர அரசுகளையும் கொண்ட நாடாக தமிழ்நாடு இருந்து வந்துள்ளது. அன்றே நூற்றுக்கணக்கில் சிறு குறு நகர அரசுகளும் பெரு நகர அரசுகளும் தமிழகத்தில் இருந்துள்ளன. அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து, உற்பத்தி பெருகி, சந்தை விரிவடைந்து, உலகளாவிய அளவில் வணிகம் நடைபெற்று, வணிக முதலாளித்துவத்திற்கான கூறுகள் வளர்ச்சியடையத் தொடங்கும் பொழுது மட்டுமே ஒரு சமூகம் தன்னை மொழியால் அடையாளப்படுத்திக்கொள்ளும். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய நாகரிகங்களில் சீனம், கிரேக்கம் தமிழகம் ஆகிய மூன்று சமூகங்கள் மட்டுமே அன்றே தங்களை மொழியால் அடையாளப்படுத்திக்கொண்டன. இவை தவிர பிற பண்டைய நாகரிகச் சமூகங்கள் தங்களை மொழியால் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.

தொல்கபிலரும் இரும்புக்காலமும்:

தமிழ்ச் சமூகம் இன்றைக்கு 4500 வருடங்களுக்கு முன்பே இரும்பை உருக்கி இரும்புப் பொருட்களை உற்பத்தி செய்யும் இரும்புக்காலத்தைக் கொண்ட நாடாக ஆகியிருந்தது. உலகில் இருந்த நாடுகள் அனைத்திலும் இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்புகூட இரும்புக்காலம் தோன்றவில்லை. இதன் காரணமாக பழந்தமிழகம் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகவும், அன்றே வரலாற்றுக்கால உயர்நிலைச்சமூகமாகவும் மாறியிருந்தது. தமிழ் அறிவு மரபின் தந்தை எனக் கருதத்தக்க தொல்கபிலர் தமிழகத்தில் தோன்றி கி.மு. 800 வாக்கில் எண்ணியம் என்ற தத்துவார்த்த அறிவியல் மெய்யியலைத் தோற்றுவித்திருந்தார். பழந்தமிழகத்தின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான அடித்தளத்தை இந்த தொல்கபிலரின் எண்ணிய மெய்யியல்தான் தோற்றுவித்திருந்தது. இவை போன்றவற்றின் காரணமாகவே பழந்தமிழ்ச்சமூகம் அன்ற தன்னை மொழியால் அடையாளப்படுத்திக் கொண்ட சமூகமாக இருந்தது.tamil nadu mapதமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணி:

தமிழ்ச்சமூகம் தன்னை தமிழர்கள் என அடையாளப்படுத்திக் கொள்வதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே ‘தமிழ்நாடு’ என்ற வரையறுக்கப்பட்ட நிலவியல் பகுதிகளையும் தனக்கே உரித்தான எல்லைகளையும் கொண்ட ஒரு சமூக அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு உருவாகி விட்டது. பழந்தமிழகத்தின் மூவேந்தர்கள் கி.மு. 750க்கு முன்பே தங்களுக்குள் ஒரு ஐக்கியக் கூட்டணியை உருவாக்கிக்கொண்டு தங்களைதவிர வேறு யாரும் வேந்தர்களாக ஆக முடியாது என்ற சூழ்நிலையைத் தோற்றுவித்திருந்தனர். இதனை உறுதி செய்வதற்கான மிக முக்கியச் சான்றாக கலிங்க (இன்றைய ஒரியா) நாட்டுக் காரவேலனின் அத்திக்கும்பாக் கல்வெட்டும் மாமூலனாரின் அகம் 31ஆம் பாடலும் அமைந்துள்ளன. கலிங்க மன்னன் காரவேலன் தனது கி.மு. 165ஆம் ஆண்டைய கல்வெட்டில் தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணி 1300 வருடங்களாக இருந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளான். கி.மு. 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுப் பெரும்புலவர் மாமூலனார் தனது அகம் 31ஆம் பாடலில் தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணியின் கட்டுப்பாட்டில்தான் தக்காணம் (மராட்டியம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய பகுதிகள்) எனப்பட்ட மொழிபெயர்தேயம் இருந்தது எனக் கூறியுள்ளார். ஆகவே குறைந்த அளவில் கி.மு. 750க்கு முன்பிருந்து தமிழரசுகளின் ஐக்கியக்கூட்டணி இருந்து வருவதாக உறுதி செய்யலாம்.

மொழிவழி தேசிய இனங்கள்:

இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட மொழிவழி தேசிய இனங்கள் இருந்த போதிலும் தங்களை அவர்கள் அனைவரும் மொழி அடிப்படையில் அடையாளம் காணத் தொடங்கியது என்பது கடந்த மூன்று, நான்கு நூற்றாண்டுகளுக்குள்தான் என்பதை ஒப்பிடும்பொழுதுதான் தமிழகத்தின், தமிழ்நாட்டின் தொன்மையை அதன் பெருமையைப் புரிந்து கொள்ளமுடியும். வங்காளி, மராத்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற சில மொழிகள் 1000 ஆண்டுகள் அல்லது அதற்கு முன்பே உருவாகி இருந்த போதிலும் அம்மொழிச் சமூகங்கள் தங்களை மொழி அடிப்படையில் அடையாளப் படுத்திக் கொள்ளத் தொடங்கியது என்பது கடந்த மூன்று, நான்கு நூற்றாண்டுகளுக்குள்தான். பெரும்பாலான நவீன ஐரோப்பிய நாடுகள் கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்குப் பின்தான் தங்களை மொழி அடிப்படையில் அடையாளப்படுத்திக் கொண்டன. ஆனால் தமிழ்ச்சமூகம் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தன்னை மொழி அடிப்படையில் அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு சமூகமாக இருந்துள்ளது. தமிழகத்தோடு ஒப்பிடும்பொழுது சீனம், கிரேக்கம் ஆகிய இரு மொழிவழித் தேசிய இனங்கள் மட்டுமே தமிழகம் அளவு மிகப்பண்டைய காலத்திலிருந்தே தங்களை மொழியால் அடையாளப்படுத்திக் கொண்ட தேசிய இனங்களாகும்.

அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து, உற்பத்தி பெருகி, சந்தை விரிவடைந்து, உலகளாவிய அளவில் வணிகம் நடைபெற்று, வணிக முதலாளித்துவத்திற்கான கூறுகள் வளர்ச்சியடையத் தொடங்கும் பொழுது மட்டுமே ஒரு சமூகம் தன்னை மொழியால் அடையாளப்படுத்திக்கொள்ளும் என்ற வரையறையை உலக நாடுகளோடும், இந்தியாவில் உள்ள தேசிய இனங்களோடும் ஒப்பிடும்பொழுது மட்டுமே, 2500 ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய தமிழகம் அறிவியல் கலை, இலக்கியம், கல்வி அறிவியல் தத்துவம், தொழில், வணிகம் போன்ற பல்வேறு துறைகளில் அடைந்த உன்னத வளர்ச்சியை, உச்சகட்ட வளர்ச்சியைப் புரிந்துகொள்ள இயலும்.

தமிழ்நாடு உருவான நாள்:

3000 ஆண்டுகால வரலாறு கொண்ட தமிழகம், ஆங்கிலேயக் காலனி ஆட்சியின் விளைவாக இந்தியாவின் ஓர் அங்கமாக 1947இல் சுதந்திரம் அடைந்தது. சுதந்திரத்துக்குப்பின் மொழிவழி மாநிலம் என்ற அடிப்படையில், தமிழ் மொழிக்கான மாநிலமாக, 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் சென்னை மாநிலம் உருவானது. சென்னை மாநிலம் 1968இல் தமிழ் நாடு என்ற முறையான பெயரைப் பெற்றது. இந்திய அரசியல் சட்டப்படி, இந்தியா என்பது நடுவண் அரசு, மாநில அரசு ஆகிய இரு அரசுகளை உடைய, இரட்டை ஆட்சி முறையைக் கொண்ட ஓர் ஒன்றியம். அதாவது இந்தியா என்பது தமிழ்நாடு போன்ற பல மொழிவழி நாடுகளும் பாண்டிச்சேரி போன்ற பல யூனியன் பிரதேசங்களும் இணைந்து உருவான ஓர் ஒன்றியம். ஆகவே தமிழக மக்கள் ஒரு தனி தேசிய இனம் என்ற அங்கீகாரத்தின் அடிப்படையில் இந்திய ஒன்றிய அரசில் இணைந்துள்ள மாநில அரசுதான் ‘தமிழ்நாடு’. தமிழ் நாடு உருவாகி(1956) 66 வருடங்கள் முடிந்து வருகிற நவம்பர் 1 அன்று 67ஆம் வருடம் தொடங்குகிறது. தமிழ்நாடு அரசு உருவான இந்த நாளை விடுமுறை நாளாக அறிவித்து வருடா வருடம் இந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாடவேண்டும்.

தமிழ்நாடு நாள் விழாவின் தேவை:

வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக்கொண்ட தனி அரசையும், வரையறுக்கப் பட்ட எல்லைகளைக்கொண்ட தனி நிலப்பரப்பையும், நீண்ட நெடியப் புகழ்மிக்க வரலாற்றையும், சிறப்புமிக்கத் தனிப் பண்பாட்டையும், சீர்மிகு பழம்பெருமைமிக்க மரபையும், வளமிக்கத் தமிழ்மொழியையும் உடைய நமது தமிழ் நாடு உருவாகிய நாளான நவம்பர் 1 என்பது தமிழக மக்கள் அனைவராலும் வருடா வருடம் கொண்டாடப்பட வேண்டிய, நினைவூட்டப்பட வேண்டிய ஒரு முக்கிய நாள். இந்திய அரசு சுதந்திரம் அடைந்த நாளும், இந்திய அரசு குடியரசு ஆன நாளும் கொண்டாடப் படுவதற்கான அதே அடிப்படையில்தான் தமிழ் நாடு அரசு உருவான நாளும் கொண்டாடப்பட வேண்டும். கர்நாடக மக்களும், அதன் அரசும் கர்நாடக அரசு உருவான நாளை விடுமுறை நாளாக ஆக்கி, அதனை மிகப்பெரும் விழாவாகக் கொண்டாடி அவர்களின் ஒற்றுமையை வலிமைப்படுத்தி வருகின்றனர். அவ்விழா ஒரு மாதம் கொண்டாடப் படுகிறது. கேரளம் போன்ற பிற மாநிலங்களிலும் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆகவே, இந்நாளைத் தமிழக அரசும், தமிழக மக்களும் ஒரு பெருவிழாவாகக் கொண்டாடித் தமிழக மக்களை ஒன்றிணைத்து, வலிமைப்படுத்த வேண்டும்.

காவிரிப் பிரச்சினை, கன்னட மொழிப் பாதுகாப்பு போன்ற கன்னட தேசம் சார்ந்த பிரச்சினைகளில் கன்னடர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள், ஆனால் தமிழ் தேசம் சார்ந்த நியாயமான பிரச்சினைகளில் கூட தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்ற கருத்து இருக்கிறது. அது உண்மையே. ஆனால் அதற்கான அறிவியல் காரணங்களைக் கண்டுணர்ந்து அதனை நீக்குவதன் மூலமே தமிழர்களிடம் ஒற்றுமையைக் கொண்டுவர முடியும். கிரேக்கர்கள் கி.மு. 776 வாக்கிலேயே, தாங்கள் கிரேக்கர்கள் என அடையாளப்படுத்திக்கொள்ளவும், தங்களுக்கிடையே ஒரு வலுவான ஒற்றுமையைக் கொண்டு வரவும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்தினார்கள். இன்றைய ஒலிம்பிக் போட்டிகள்கூட உலக நாடுகளிடையே ஒற்றுமையைக் கொண்டு வரவே நடத்தப்படுகிறது. ஆக விழாக்கள் மக்களிடையே ஒற்றுமையைக் கொண்டுவரும். ஆனால் தமிழர்கள் கொண்டாடும் விழாக்கள் அனைத்தும் மதம் சாதி சார்ந்த விழாக்களாக ஆக்கப்பட்டுள்ளன. அதனால் அவ்விழாக்கள் மக்களிடையே ஒற்றுமைக்குப் பதில் வேற்றுமைகளையே கொண்டுவருகின்றன.

கன்னடர்கள் கர்நாடக அரசு உருவான நாளை பெரும்விழாவாக கடந்த 60 வருடங்களாகக் கொண்டாடி வருவதுதான் அவர்களிடையே உள்ள ஒற்றுமைக்கு மிக முக்கியக் காரணம். ஆகவே தமிழக மக்கள் தமிழ் நாடு உருவான நவம்பர் 1 ஆம் நாளை பெருவிழாவாகக் கொண்டாடுவதன் மூலம் மட்டுமே தமிழக மக்களிடையே ஓர் உறுதியான ஒற்றுமையை கொண்டுவர முடியும். இந்திய சுதந்திர தினமும், குடியரசு தினமும் கொண்டாடப்படுவது என்பது இந்திய ஒற்றுமையை வளர்த்தெடுக்கிறது. அதே அடிப்படையில் தமிழ்நாடு அரசு உருவான நாளும் கொண்டாடப்படுவது தமிழர் ஒற்றுமையை வலுப்படுத்தும்.

இந்நாளில் தமிழ் நாட்டு மக்கள் தங்களது மொழி, வரலாறு, பண்பாடு, கலைகள், அரசியல், பொருளாதாரம், கல்வி, சமூகம் முதலிய அனைத்தும் குறித்தும், தமிழகத்தின் நிறை குறைகள் குறித்தும், அதனது பலம், பலவீனம் குறித்தும், தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், தமிழ்தேச மக்களுக்கிடையேயான ஒற்றுமை வேற்றுமைகள் குறித்தும் தமிழகத்தின் வளங்கள், இழப்புகள் குறித்தும், பேச வேண்டிய, நினைவு கூற வேண்டிய, முடிவெடுக்க வேண்டிய நாள் இந்நாள். நமது தமிழகத்தின் கடந்தகால வரலாற்றைப் படித்தறிந்து, நமது நிகழ்கால நடப்புகளை கூர்ந்து நோக்கி, நமது வருங்காலத்திற்கான திட்டங்களைத் தீட்டவேண்டிய நாள் இந்நாள். தமிழகத்தலைவர்கள் ஒவ்வொருவரும் தமிழகம் சார்ந்த விடயங்கள் குறித்தத் தங்களது திட்டவட்டமான கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டிய நாள் இந்நாள். பொது மக்களும், அரசும், அரசு நிறுவனங்களும், பள்ளி கல்லூரிகளும், தனியார் நிறுவனங்களும் தமிழகத்தின் வளர்ச்சியில் அதன் முன்னேற்றத்தில் ஆற்ற வேண்டிய பங்களிப்பு குறித்துத் திட்டமிடவேண்டிய, முடிவெடுக்க வேண்டிய நாள் இந்நாள். தமிழக மக்கள் அனைவரும் சாதி, மதம் கடந்து ஒன்று திரண்டு தங்கள் வலிமையை, பலத்தை, ஒற்றுமையை பறைசாற்ற வேண்டிய நாள்

தமிழ்நாட்டின் பெருமை:

நமது பண்டைய தமிழ்நாட்டு மக்கள் பெரும் கடலோடிகளாகவும், உலகளாவிய வணிகமேலாண்மை மிக்க மக்களாகவும் இருந்துள்ளனர். மிளகு, மஞ்சள், சந்தனம், இஞ்சி, அகில், தந்தம், முத்து, மயில்தோகை போன்ற பலவிதமான இயற்கைப் பொருட்களையும், துணிகள், பலவிதமான கல்மணிகள், இரும்பு எஃகு முதல் பிற உலோகங்களால் செய்த பொருட்கள் போன்றவற்றையும் பெருமளவில் உற்பத்தி செய்து அவைகளைத் தங்கள் சொந்தக் கப்பல்களில் உலகம் முழுவதும் கொண்டு சென்று 2500 ஆண்டுகளுக்கு முன்பே வணிகம் செய்து வந்தனர்.

1800 ஆண்டுகளுக்கு முன் ஒரு கப்பலில் ஒரு தமிழ் வணிகன் ஒருதடவை அனுப்பிய பொருட்களின் இன்றைய மதிப்பு சுமார் ரூ 150 கோடி என கிரேக்க மொழியில் எழுதப்பட்ட ஒரு ஒப்பந்தம் கூறுகிறது. இவ்வணிகத்தை உறுதிப்படுத்தும் வகையில் எகிப்து, அரேபிய வளைகுடா, தாய்லாந்து ஆகிய இடங்களில் பண்டைய ‘தமிழி’ எழுத்துக்கள் கிடைத்துள்ளன. பெருமளவிலான பொருள் உற்பத்தியை உறுதிப்படுத்தும் வகையில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற “ஆதிச்சநல்லூர்” நகரம் இன்றைக்கு 3500 வருடங்களுக்கு முன்பே ஒரு தொழில் நகரமாக இருந்துள்ளது என்பதை அங்கு நடத்தப்பட்ட அகழாய்வு உறுதி செய்துள்ளது. கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வு, 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் பெருநகரங்கள் இருந்துள்ளன என்பதை உறுதி செய்கிறது. வேளாண்மையிலும் தமிழர்கள் உயர்நிலையில் இருந்தனர். நீர்வளத்தைப் பெருக்க 2000 ஆண்டுகளுக்கு முன்பே கல்லணை போன்ற அணைகளும், பலவிதமான அணைக்கட்டுகளும், நூற்றுக்கணக்கான ஏரிகளும், குளம் குட்டைகளும் உருவாக்கப்பட்டன.

தங்களது உலகளாவிய வணிகத்தைப் பாதுகாக்க, தமிழரசுகள் அன்று பெரும் கடற்படைகளைக்கொண்டிருந்தன; இந்தப் பெரும் கடற்படைகொண்டு தக்காண அரசுகளையும், அதன் துறைமுக நகரங்களையும், இந்தியாவின் கிழக்கு, மேற்கு கடற்கரை வணிகத்தையும் இந்தோனேசிய வரையான கிழக்காசியத் தீவுகள் வணிகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் தமிழரசுகள் வைத்திருந்தன. மேற்கே பாரசீக வளைகுடா முதல் செங்கடல் வரையான நாடுகளோடும் கிரேக்க-உரோம நாடுகளோடும், கிழக்கே சீனா வரையிலும் தங்கள் சொந்தக் கப்பல்களில் பல நூற்றாண்டுகளாகத் தமிழர்கள் வணிகம் செய்து வந்தனர். அன்று வட இந்தியர்களிடம் கடலோடும் திறனோ, கடற்படைகளோ, கடல்வணிகமோ இருக்கவில்லை. தமிழர்களிடம் மட்டுமே அவை இருந்தன. கடல்வணிகத்தால், பழந்தமிழகம் செல்வவளமும், பொருள் வளமும் மிக்க, தனித்துவமான பண்பாடும் நாகரிகமும் கொண்ட நாடாக இருந்தது. அன்று சாதாரண மக்கள் முதல் உயர் வேளிர்வரை அனைவரும் கல்வி கற்றவர்களாக இருந்தனர். அறிவியல் மனப்பான்மையும், மதச் சார்பின்மையும் கொண்டவர்களாகவும், சாதி சமயமற்ற சமூகமாகவும், அறத்தோடு கூடிய இன்ப வாழ்வை வாழ்பவர்களாகவும் அவர்கள் இருந்தனர். அவர்களிடம் நவீனச் சிந்தனையின் கூறுகள் பல இருந்தன. கிரேக்க, உரோம, சீன நாகரிகங்களுக்கு இணையான பெருமைமிக்க வாழ்வை அவர்கள் வாழ்ந்தனர் என்பதோடு இவ்வுலகுக்கு உன்னதமான விழுமியங்கள் பலவற்றை அவர்கள் வழங்கியுள்ளனர்.

கீழடி அகழாய்வு கி.மு. 6ஆம் நூற்றாண்டு அளவிலேயே தமிழகத்தில் நகர நாகரிகம் இருந்துள்ளது என்பதையும், அன்றே தமிழக மக்களிடம் பரவலான கல்வியறிவும் எழுத்தறிவும் இருந்துள்ளது என்பதையும் சமயம் சார்ந்த பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதையும் உறுதி செய்துள்ளது. அதன் மூலம் பண்டைய தமிழக மக்கள் சாதி சமயம் அற்ற மக்களாக இருந்துள்ளனர் என்பதை உறுதி செய்துள்ளது. இவ்வளவு பழஞ்சிறப்புகளை உடைய நமது மக்கள் இன்று தங்களது அடையாளங்களை இழந்து நிற்கின்றனர். அதனால் காவிரி பிரச்சினை, முல்லை-பெரியார் பிரச்சினை, பாலாற்றுப்பிரச்சினை, மீனவர் பிரச்சினை, ஈழப்பிரச்சினை, தமிழ்மொழி தமிழகத்தின் கல்வி மொழியாக, ஆட்சி மொழியாக, வழிபாட்டு மொழியாக, நீதிமன்ற மொழியாக இல்லாத பிரச்சினை, கூடங்குளம் போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகள், சாதி மதம் சார்ந்த பிரச்சினைகள் என அளவற்ற பிரச்சினைகளை நமது மக்கள் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. அவைகளை தமிழக மக்கள் எதிர்கொண்டு, தங்களது வாழ்வை வளமும் நிறைவும் கொண்டதாகவும் சமத்துவமும், சமூக நீதியும் கொண்டதாகவும் ஆக்க வேண்டும். அதற்கு தமிழக மக்கள் தங்களது பண்டைய அடையாளங்களை மீட்டெடுத்து, சாதி மத வேற்றுமைகளைக் களைந்து ஒன்றிணைய வேண்டியதும் அவசியம்.

புகழ்பெற்ற செவ்விலக்கியங்களை உடைய தமிழ் மொழியும், 3000 ஆண்டுகால நீண்ட நெடிய வரலாறும், தனித்துவமிக்க பண்பாடும், இசை நாட்டியம் போன்ற கலைகளும், சிறப்புமிக்க விழுமியங்களும், சீர்மிகுமரபுகளும், அறிவியல் அடிப்படை கொண்ட தொழில்நுட்பங்களும் பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகளும், சாதிகளற்ற சமூகமும், மதச்சார்பற்ற தன்மையும்தான் நமது தமிழகத்தின் அடையாளங்கள். நமது இந்த அடையாளங்களை மீட்டெடுக்கவும், சாதிகளற்ற, மத ஒற்றுமைமிக்க, சமத்துவமும், சமூக நீதியும் கொண்ட அனைத்து மக்களும் அனைத்தும் பெறத்தக்க ஒரு நவீன, முன்னேறிய, உயர்வளர்ச்சி பெற்ற தமிழகத்தை உருவாக்கவும் சபதமேற்று நவம்பர் முதல் நாளை அரசு விடுமுறை நாளாக அறிவித்து அந்நாளை வருடா வருடம் தமிழ் நாடு நாள் விழாவாகக் கொண்டாட வேண்டும்!

- கணியன் பாலன், ஈரோடு

Pin It