ஒன்றிய அரசு அலுவலர் -பணியாளர் தேர்வுகளுக்கான வினாத் தாள்களில் ஆங்கிலம் இடம்பெறுவதை அகற்றிவிட்டு, இந்தி மொழி மட்டுமே இடம்பெற வேண்டும்.

இப்போது ஒன்றிய அமைச்சகப் பணிகளில் உள்ள அலுவலர்கள், பணியாளர்கள் அலுவல்களில் இந்தி மொழி யைப் பயன்படுத்தாமல் ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒன்றிய அரசால் நடத்தப்படும் தில்லியிலும் இந்தி மொழி மாநிலங்களிலும் உள்ள மத்தியப் பல்கலைக் கழகங்கள், இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (I.I.Ts), இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் (I.I.Ms), அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனங்கள் (A.I.I.M.S.), கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள் அனைத்திலும் இந்தி மொழி மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.

இந்தி மட்டுமே அலுவல் மொழி; ஆங்கிலம் தொடர்பு மொழியாக உள்ளது அகற்றப்பட வேண்டும். இவை போன்ற 112 பரிந்துரைகளை பா.ச.க. மோடி அரசின் உள்துறை அமைச்சர் அமித்சா தலைமையிலான அலுவல் மொழிக்குழு 9.9.2022 அன்று குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ளது. 1963ஆம் ஆண்டு அலுவல் மொழிச் சட்டத்தின் பிரிவு 4இன்படி அமைக்கப்பட்ட அதிகாரம் வாய்ந்தது இந்த அலுவல் மொழிக் குழு. அக்குழுவின் பரிந்துரைகளை முழுமை யாகவோ, ஒரு பகுதியோ செயல்படுத்தப்பட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட அலுவல் மொழிக் குழு பரிந்துரைகள், 1963ஆம் ஆண்டு அலுவல் மொழிச் சட்டம் பிரிவு 3இன்படி ஆங்கிலம் இணை அலுவல் மொழியாகத் தொடரலாம் என்று உள்ளதை புறந்தள்ளுவதாக உள்ளது. ஒன்றியத்தின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் ஒன்றிய அரசுத் துறைகளின் பணிவாய்ப்புகளில் உரிய நியாயமான பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதை இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராத மாநில மக்களுக்கு மறுப்பதாகும். பணியாளர் பணியமர்த்தத்திற்கான தேர்வுகள் இந்தியில் மட்டுமே நடத்தப்படுமாயின் இந்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கும் இந்தி மொழியல்லாத மற்ற மொழி களைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கும் இடையே சமனின்மையை அதிகப்படுத்தி அதனால் குடிமக்களிடையே பகையை வளர்ப்பதில் முடியும்.hindi agitation in punjab

(பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இந்தியைத் எதிர்த்து மாணவர்கள் போராட்டம்)

இந்தி பேசாத மற்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட பெரும்பான்மை மாநிலங்களிலிருந்து பல்வகை வரி - சா.குப்பன் வருவாயை அதிகம் பெற்று அந்த நிதியால் நிர்வகிக்கப்படும் ஒன்றிய அரசுப் பணிகளில், ஒன்றிய பொதுத் துறை நிறுவனங்களின் பணிகளில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராதவர்கள் உரிய விகிதாசாரப் பிரதிநிதித்துவம் பெறும் வாய்ப்பைத் திட்டமிட்டுத் தடுப்பதற்கு என்றே ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட அமைப்புகள் நடத்துகின்ற பணியாளர் பணியமர்த்தத்திற்கான தேர்வு வினாத் தாள்களில் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு, இந்தியில் மட்டுமே இடம்பெற வேண்டும் என்பதற்கான திட்டம் இதுவாகும்.

தில்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட மத்தியப் பல்கலைக் கழகங்களுக்கு ஒன்றிய அரசு அளிக்கும் நிதி இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராத மாநிலங்களின் மக்கள் செலுத்தும் வரி வருவாயில் இருந்து செலவிடப்படுகையில், அம்மாநிலங்களின் மக்கள் உரிய விகிதாசார இடங்கள் பெற்று கல்வி கற்கும் வாய்ப்பை மறுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தி மொழி மட்டுமே பயிற்று மொழி ஆக்கப்பட வேண்டும் என்ற அலுவல் மொழிக் குழுவின் பரிந்துரையை இந்தி பேசாத மாநிலங்களின் மக்கள் எப்படி ஏற்க முடியும்?

இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களுக்கு எதிராக இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராத மக்களை நிறுத்தி, மதத்தால் மக்களைப் பிளவுப்படுத்துவதைப் போல மொழி வேற்றுமையை வைத்து பிளவுபடுத்தும் திட்டமாகவே பா.ச.க. மோடி அரசு இப்போது முயல்வதாகத் தெரிகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் இந்தி பேசும் மக்களைக் கவர்ந்து ஆதாயம் அடையும் உத்தியாகவும் இது இருக்கலாம். இந்தி பேசுகின்ற மக்கள் ஒன்றிய வருவாய்க்குப் பங்களிப் பதைவிட, இந்தி பேசாத மக்கள் அதிகம் பங்களிக்கும் நிதியிலிருந்து இந்தி மொழி வளர்ச்சிக்கு அளவற்ற நிதிச் செலவிடுதல் நியாயமற்றதும் கேலிக்குரியதும் ஆகும்.

ஒன்றிய அரசு கீழ்க்காணும் கோரிக்கைகளை ஏற்று செயல்படுவதை உறுதி செய்வதே நியாயமானத் தீர்வாகும்.

1.           அரசமைப்புச் சட்டத்தின் எட்டாம் அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அலுவல் மொழிகளாக, நீதிமன்ற வழக்காடு மொழிகளாக அறிவிக்க வேண்டும்.

2.           ஒவ்வொரு மாநில அரசு எல்லைக்குள்ளும் இயங்கு கின்ற ஒன்றிய அரசின் துறைகளான அஞ்சலகங்கள், தொடர்வண்டித் துறை, வருமான வரித்துறை, பொதுத் துறை வங்கிகள், ஆயுள் காப்பீட்டுக் கழகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் அலுவலகங்களிலும் உயர் நீதிமன்றங்களிலும் அந்த மாநில அலுவல் மொழியே அலுவல் மொழி என உறுதி செய்திட வேண்டும்.

3.           ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்திய ஆட்சிப் பணிக்கானத் தேர்வு உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளும் மற்றும் ஒன்றியப் பொதுத் துறை நிறுவனங்களின் பணியாளர் அமர்த்தத்திற் கானத் தேர்வுகளும் எட்டாம் அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும். முப்படைகளுக்கான ஆள்சேர்ப்பு, எல்லைக்காவல் படை, நடுவண் ரிசர்வ் காவல் படை முதலானவற்றுக்கானத் தேர்வுகளும் 22 மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும்.

4.           இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (I.I.T.), இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் (I.I.M), இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனங்கள் (A.I.I.M.S.) மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் 22 மொழிகளும் பயிற்று மொழிகளாக இருக்க வேண்டும். கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள் எந்தெந்த மாநிலத்தில் உள்ளதோ, அந்த மாநில மொழியும் பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.

5.           இவற்றிற்கு ஏதுவாக அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 343 முதல் 351 வரை உள்ள 9 பிரிவுகளையும் திருத்தம் செய்திட வேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் “தேசிய மொழி” என ஒன்று குறிப்பிடப்படவில்லை. ஆனால், பா.ச.க.வின் தலைவர்கள் மேல் இருந்து கீழ்வரை இந்தி மொழியை தேசிய மொழி எனக் கூறிவருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இது வெகுமக்களை ஏமாற்று வதாகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு -ஒன்றிய அரசின் புள்ளி விவரப்படி மொத்த இந்திய மக்கள் தொகை 102.86 கோடி.

இதில் இந்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண் டோர் 25.79 கோடி மட்டுமே. இந்தியுடன் கலப்படமுள்ள 49 தாய்மொழிகளையும் சேர்த்து இந்தி என்கிற தலைப்பில் 42.20 கோடிப் பேர் என ஒன்றிய அரசு கூறுகிறது. போஜ்புரி, இராசத்தானி, மகதி, அவத், அரியான்வி, மார்வாரி, மேவாரி, மால்வி முதலான 49 மொழி பேசுவோர் இந்தி என்ற தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனை ஒன்றிய அரசே பட்டியலிட்டுள்ளது தான் வேடிக்கை. இந்தி பேசாத மாநிலங்களே அதிகம்; இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராத மக்களே பெரும்பான்மை; ஒன்றிய அரசின் நிதிக்கு இந்தி பேசாத மக்களின் பங்களிப்பே அதிகம். குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் பங்கு கணிசமானது. இருந்தும் தமிழ் உள்ளிட்ட மொழிகளையும் இந்தி பேசாத மாநிலங்களின் மக்களையும் இரண்டாம்தர குடிமக்களாக ஒன்றிய அரசு நடத்துவதை அனுமதிப்பதா? எப்படிப் பார்ப்பன மேலாண்மையை நிலை நிறுத்த பட்டியல் வகுப்பு-பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களை ஒடுக்கிட பா.ச.க.-மோடி அரசு துடிப்புடன் செயலாற்றுகிறதோ அதேபோல் இந்தி மேலாண்மையை நிலைநிறுத்த மற்ற மொழிகளை ஒடுக்குகின்றது. இப்போது எதிர்க்கவில்லை என்றால் எப்போது எதிர்ப்பது?

இந்தியாவுக்குப் பொது மொழியாக இந்தி என்ற பேச்சு எப்போது எழுந்ததோ அப்போது முதலே தமிழர்கள் இந்தியை எதிர்த்து வந்துள்ளனர். 7.3.1926 குடிஅரசு இதழில் பெரியார் “தமிழுக்கு துரோகமும் இந்தி பாஷையின் இரகசியமும்” என எழுதியுள்ளார். 1938 இந்தி எதிர்ப்புப் போர், 1948 இந்தி எதிர்ப்பு, 1965இல் தமிழர்கள் இரு நூறுக்கு அதிகமானோர் உயிரீகம், 1986 இந்தி எதிர்ப்புப் போர் என இந்தி மொழித் திணிப்பை எதிர்ப்பதில் இத் துணைக் கண்டத்தில் தமிழர்களே முன்னோடிகள். 1965இல் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த 15ஆம் ஆண்டில் ஆங்கிலம் இந்தியுடன் இணை அலுவல் மொழி என்பதை அகற்றிய நிலையில் தமிழ்நாட்டு மாணவர்கள் எழுச்சியே அதனை தடுத்து நிறுத்தியது; ஒன்றிய அரசைப் பணியச் செய்தது.

அந்த மரபிற்கு உரியவர்களான தி.மு.கழகம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்த வேண்டும். 1986 நவம்பர் 9 முதல் திசம்பர் 15 வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புதுவையிலும் அரசமைப்புச் சட்டத்தின் 17ஆம் பகுதி முழுவதையும் அச்சிட்டு எரித்தது தி.மு.க. அதே போன்றதொரு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை இப்போது முன்னின்று நடத்த தி.மு.க. முன்வர வேண்டும்.

இப்போது கர்நாடகம், கேரளம், மராட்டியம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் இந்திக்கு எதிர்ப்பு எழுந் துள்ளதைப் பயன்படுத்தி-இந்தி பேசாத மாநில மக்களின் பிரதிநிதிகளையும் அரசியலாளர்களையும் ஒருமுகப்படுத்தி இந்தித் திணிப்பு வல்லாண்மையை முறியடிக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும்.

- சா.குப்பன்