ஆங்கிலேயர் ஆட்சியின் போது சென்னை மாகாணமாக பிற தென்னிந்திய மொழிகள் பேசிய மக்களுடன் இணைந்திருந்த நாம் வாழும் இந்த நிலப்பரப்பு, ஆங்கிலேயர் வெளியேற்றத்திற்கு பிறகு, இந்திய குடியரசில் மொழிவழி மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. அவ்வாறு, தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசிய பிற தேசிய இனங்கள் சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து தங்களுக்கான மொழிவழி நிலப்பரப்பை அமைத்துக்கொண்ட பின்பு, தமிழ்த்தேசிய மக்கள் தங்களுக்கென தனித்த நிலப்பரப்பை அடைந்த நவம்பர் 1-ம் நாள் தமிழ்நாடு நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

tamilnadu flagமொழி பிணைப்பால் தமிழர்களாக இணைந்தோம் என்பதைத் தமிழினம் கொண்டாட ஒரு நாளே தமிழ்நாடு நாள். தமிழர்கள் தங்கள் கைகளில் "தமிழ்நாடு தமிழருக்கே" என பச்சைக் குத்திக் கொள்ள வேண்டும் என்ற பெரியாரின் ஏக்கத்தினை நிறைவேற்றும் நோக்கத்தை நெஞ்சத்தில் பதிய வைத்த தமிழர்கள், முன்னெடுக்கும் உரிமை முழக்கத்திற்கு சிறப்பு செய்யும் நாளே நவம்பர் 1-ல் கொண்டாடப்படும் தமிழ்நாடு நாள்.

நிலங்கள் இழப்பினைக் கொண்டாட வேண்டுமா? என்று ஒரு சில தரப்புகள் தமிழ்நாடு நாளின் கொண்டாட்டத்திற்கு சர்ச்சைகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

"வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத்
தமிழ் கூறும் நல் உலகம்"

என்கிற தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரம் மூலமாகவும், புறநானூறு முதலான சங்க இலக்கிய நூல்களிலும் தமிழ்நாட்டின் எல்லைகள் வடக்கே வேங்கடம் வரை விரிந்திருந்த சான்றுகள் உள்ளது. இருந்த போதும், தமிழினத்திற்குள் புல்லுருவிகளாய் நுழைந்து மொழியிலிருந்து பண்பாடு வரை அனைத்துக் கட்டுமானங்களையும் சிதைத்த பார்ப்பனீயத்தினால், தன்மானம் இழந்து, மூடத்தனங்கள் பெருகிய இனமாக தமிழினம் அறியாமையில் அமிழ்ந்து போனோம். இதன் விளைவாக சிறுகச் சிறுக நிலப்பரப்புகளை இழந்தோம். இன்று தமிழ்நாடு என்ற குறுகியப் பிரதேசத்தில் சுருங்கிப் போனோம்.

மொழி வழி மாகாணம் பற்றிய பேச்சுவார்த்தை எழுந்து தென்னிந்தியப் பகுதிகளை தட்சணப் பிரதேசமாக பிரிக்கலாம் என முடிவெடுத்த பொழுது பெரியார் தலைமையில் திராவிடர் கழகம், ‘தமிழ்நாடு தனி மாநிலம்’ அமைக்க வேண்டிப் பிரச்சாரம் செய்தது. பெரியாரின் அழுத்தத்தின் காரணமாக காமராஜர் நேருவிடம் தனி மாநிலக் கோரிக்கையை முன்வைத்தார்.

திருத்தனை விநாயகம், தந்தை பெரியார், ம.பொ.சிவஞானம், மார்சல் நேசமணி ஆகிய தலைவர்களுடன் கட்சி, இயக்க வேறுபாடுகள் கடந்து பலரும் இணைந்து நடத்திய தொடர் போராட்டத்தினால் வடக்கே திருத்தணியும், தெற்கே குமரியும் தமிழ்நாட்டோடு இணைந்தன. 11 தமிழர்கள் துப்பாக்கி சூட்டினில் இறந்தனர். பலர் சிறைப்பட்டனர். இருவர் சிறையில் உயிர் நீத்தனர். எல்லையோர நிலங்களின் மீட்பிற்கு தன்னுயிர் ஈந்த போராளிகள் போற்றுதலுக்குரியவர்கள். நிலத்தின் எல்லைகளை சட்டப்படி பிரித்துக் கொண்டு மாநிலங்களின் வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது.

நில எல்லைகளை வரையறுத்துக் கொண்ட பின்பு அதில் வாழும் மக்களின் உரிமைகளின் நிலவரம் பற்றியும், சுயமரியாதையுடன் கூடிய அவர்களின் வாழ்வியல் நிலை பற்றியும் சிந்திக்க வேண்டிய அடுத்த கட்டத்திற்கு வந்து விட்டோம். நில வளம், நீர் வளம், தொழில் வளம், இயற்கை வளம் என மாநில நிலப்பரப்புக்குள் இருக்கக் கூடிய வளங்கள் அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்குச் சொந்தமானதாக இருக்கிறதா என்கிற மிகப் பெரிய கேள்விக்குள் தான் இந்தியக் கூட்டமைப்பிற்குள் இருக்கும் பல தேசிய இனங்களின் இறையாண்மை சிக்கலாக உள்ளது.

தமிழ்நாட்டின் மலைகளிலிருந்து வெட்டி எடுத்துப் போகும் கனிம வளங்கள், நிலத்திலிருந்து உறிஞ்சி எடுத்துப் போகும் நீர்ம வளங்கள், மண்ணிலிருந்து பிளந்து எடுத்துப் போகும் நிலக்கரி போன்ற எரிபொருள் வளங்கள் என இந்தியம் தேசிய உணர்வை ஊட்டி எடுத்துச் செல்லும் இவை மட்டுமே பல லட்சம் கோடிகளைத் தாண்டும். எந்த ஈவுத் தொகையும் தராமல் தமிழ்நாட்டிலிருந்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு இந்த வளங்களைத் தானே கையாளும் நிலைமையிருந்திருந்தால் உலகின் செல்வாக்குள்ள, செழிப்பான மக்கள் வாழும் நாடுகளில் ஒன்றாக தமிழ்நாடு எப்பொழுதோ மாறியிருக்கும்.

தமிழ்நாடு மட்டுமல்ல பல மாநிலங்களின் வளங்களும் இதைப் போலவே கொள்ளையடிக்கப்படுகிறது. உலகின் பட்டினிப் பட்டியலில் இந்தியா 101-வது இடத்தையும், உலகின் பணக்காரர் பட்டியலில் அம்பானி முதல் இடத்தை அடைவதற்குமான திட்டங்களைத் தான் ஒன்றிய அரசு கொள்கைகளாக வகுக்கிறது. தமிழ்நாட்டின் வளங்கள் தமிழர்களுக்கே என்னும் முழக்கம் தமிழ்நாடு தமிழருக்கே என்னும் உரிமை முழக்கத்தின் ஒரு பிரிவாகவும், இறையாண்மை மீட்பின் ஒரு பகுதியாகவும் உள்ளது.

தமிழ் மீனவர்கள் உயிர் பறிக்கும் அண்டை நாட்டுடன் கூடிக்குலாவுகிறது ஒன்றிய அரசு. மாணவர்களின் உயிர் குடிக்கும் நீட் தேர்வைத் தடை செய்யாமல் பயிற்சி நிறுவனங்களை வளர்க்கிறது. நமது வரியைப் பறித்து திருப்பித் தர மறுத்து பொருளாதாரச் சுரண்டலை நடத்துகிறது. தமிழ்நாடு அரசின் அதிகாரத்தையும் பறிக்கும் வகையில் அதிகார மீறல் செய்யும் ஆளுநரையும் நியமிக்கிறது. பார்ப்பனீய அதிகாரத்துடன் கைக்கோர்த்துக் கொண்டு தமிழர்கள் மீது ஒன்றிய அரசு தொடுக்கும் இந்த அநீதிகளை எதிர்க்கும் கூட்டுணர்வுடன் தமிழர்கள் இணைவதை அடையாளப்படுத்த ஒரு நாள் கட்டாயம் தேவை.

சென்னை மாநிலத்தை தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்து 1956 ஜூலை 27-ல் விருதுநகர் அருகில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய சங்கரலிங்கனார், ஆகஸ்ட் 13-ல் மரணமுற்றார். அவருடைய தியாகம் அப்போதைய இந்திய தேசிய உணர்வு கொண்ட காமராசர் முதற்கொண்ட தமிழர்களால் கண்டு கொள்ளப்படவில்லை. ஆனால் மொழி உணர்வும், இன உணர்வும் வளர்த்து தமிழகத்தில் ஆட்சி பிடித்த அண்ணா, அப்போது எழுந்த கடும் எதிர்ப்புகளுக்கு பதிலடியும் கொடுத்து, ‘சென்னை மாநிலம்’ எனும் பெயரைத் ‘தமிழ்நாடு’ என மாற்றும் தீர்மானத்தை 18-07-1967 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். இந்த நிகழ்வை, “தன் தாயின் பெயரைத் தனயன் மீட்டளித்த நாள்” என்று குறிப்பிட்டார் அண்ணா.

அண்ணா எடுத்த இந்த முடிவிற்கு முக்கியக் காரணமாக அமைந்தது 1955-ம் ஆண்டிலேயே வெளியிட்ட பெரியாரின் அறிக்கை. "‘தமிழ்நாடு’ என்ற பெயர் கூட இருக்கக் கூடாதென்று பார்ப்பானும், வட நாட்டானும் சூழ்ச்சி செய்து நம்நாடு எது? நமது மொழி எது? நமது இனம் எது? என்பதையே மறைத்து சென்னை நாடு என்று பெயர் கொடுத்திருப்பதாகத் தெரிய வருகிறது. இக்கேடு முளையிலேயே கிள்ளப்பட்டு விடும் படி முயற்சி செய்யும்படியாக எல்லாத் தமிழர்களையும் உண்மையிலேயே வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.” என்று விளக்கமாகவும், விரிவாகவும் எழுதினார். அவரின் விருப்பத்தை பதவியேற்றதும் நிறைவேற்றினார் அண்ணா.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு, தாய் மொழிப் பற்று, இட ஒதுக்கீடு, நலத்திட்டங்கள், பெண் கல்வி, தொழில் வளர்ச்சி எனப் பலவற்றிலும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கும் தமிழ்நாட்டிற்கென்று தனிக்கொடி இல்லாமலிருப்பது ஏற்கத்தக்கது அல்ல. இதனைக் கருத்தில் கொண்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக மே பதினேழு இயக்கம் உட்பட 160 இயக்கங்கள் ஒன்று சேர்ந்து, இனி நவம்பர் 1 அன்று தமிழ்நாடு விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்றும், தமிழ்நாட்டிற்கென தனிக்கொடி அவசியம் எனவும் 2020-ம் ஆண்டு முடிவெடுத்தார்கள். அதன்படி ஒரு கொடியையும் அறிமுகம் செய்தார்கள். அனைத்துத் தரப்பு சமூகங்களும் ஏற்றுக் கொண்ட ஒரு கொடியை தமிழ்நாடு அரசு அறிவிக்க முன் வந்தால் அதனையும் தயக்கமின்றி ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார்கள். ஆனால் தமிழ்நாடு விழா கொண்டாடப்படும் என அரசாணை வெளியிட்ட அப்போதைய எடப்பாடி அரசோ தமிழ் நாட்டின் கொடி ஏற்றியவர்களை அடக்கு முறைகளை ஏவி கைது செய்தது.

முற்போக்காளர்களின், தமிழுணர்வாளர்களின் கருத்திற்கு மதிப்பளிக்கும் புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு, கடந்தாண்டு போலல்லாமல், நவம்பர் 1-ம் நாளை அரசு சார்பாகவே விழாவாக கொண்டாடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தான், தமிழ்நாட்டின் நிலப்பரப்பிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார். எத்தனை இழப்புகள் இருந்தாலும், பிற்பாடு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட, தமிழ் மக்களுக்கென ஒரு தனித்த நிலப்பரப்பை தமிழர்களுக்கு உறுதிசெய்த நாளே தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுவதற்கு தகுந்த நாள் என தமிழ் ஆர்வலர்களும், தமிழறிஞர்களும் கூறிப்பிடுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, திமுக தன்னுடைய முடிவை பரிசீலனை செய்து, நவம்பர் முதல் நாளை தமிழ்நாடு நாள் விழாவாக கொண்டாட முன்வரும் என்று நம்புவோம்.

கர்நாடகா, காஷ்மீர் போன்ற பல மாநிலங்களிலும் தனியான கொடி நடைமுறையிலிருக்கிறது. ஆகவே மாநில சுயாட்சி பற்றி அதிகம் பேசிய திமுக அரசு தமிழ் நாட்டுக் கொடியை அனைத்து தரப்பு அறிஞர்களிடமும் கலந்தாலோசித்து மக்கள் உணர்வுக்கு ஏற்ப வடிவமைக்க வேண்டும். அல்லது பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு உருவாக்கிய கொடியை அங்கீகரிக்க வேண்டும் என்பதே முற்போக்கு தமிழ் அறிஞர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.

கீழடி முதல் கொற்கை வரையிலான சமீபத்திய தொல்லியல் ஆய்வுகளில் கூட மதம் குறித்தான எந்த தடயமும் கிடைக்கவில்லை என்று நிபுணர்கள் கூறி விட்டார்கள். இவ்வாறு ஆய்வுப் பூர்வமாக நிரூபித்த பின்னரும் தமிழர்களை மதச்சாயத்தில் கரைக்க பல திரிபு வேலைகளும் பார்ப்பனீயத்தின் கைப்பாவைகளான தமிழர்களால் முன்னெடுக்கப்படும் சூழல் நிலவுகிறது. அவற்றை எதிர்க்கவும், தமிழர்களின் உண்மையான வரலாற்றினை பரப்பவும் உரிய நடவடிக்கைகளை நாம் இணைந்து செயல்படுத்தும் பணியும் இக்கால கட்டத்தில் முக்கியமானது. அதற்கேற்ற பணிகளை வேகப்படுத்தவும் தமிழ்நாடு விழாவை மாவட்டங்கள் தோறும் முன்னெடுப்பது அவசியமானது. தமிழ்நாடு விழாவினை பரந்துபட்ட அளவில் கொண்டாடும் முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசே மேற்கொள்ள வேண்டும்.

தமிழினம் தனித்த தேசிய இனம். தனித்துவமான பண்புகளை தனது மொழி மூலம் பெற்றுக் கொண்ட சீரிய இனம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நோக்கத்தினில் ஒன்றிணைந்த இந்தியக் கூட்டமைப்பிற்குள் ஓர்மை என்னும் முற்றதிகாரத் தன்மையில் மோடி அரசு மக்களை பிளவுபடுத்திக் கொண்டிருக்கையில் நமக்கான உரிமைகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும், இழந்த உரிமைகளை மீட்க வேண்டும் என்கிற உறுதிப்பாடுகளை நினைவுபடுத்திக் கொள்ள ஒரு நாள் தேவைப்படுகிறது.

அரசியல் விடுதலை, மொழி விடுதலை, சமூக விடுதலை பொருளாதார விடுதலை, பண்பாட்டு விடுதலை போன்ற விடுதலை அடைந்த இனமே இறையாண்மையுடைய இனம். அதனை மீட்டெடுக்க உரிமைகளை உரக்கப் பேச வேண்டும். பார்ப்பனிய அதிகாரம், பனியா முதலாளித்துவம், பன்னாட்டு ஏகாதிபத்தியம் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இணைந்து மக்களின் உழைப்பைச் சுரண்டுகிறது. அதற்கு ஏற்றவாறு நிர்வாக வசதிகளை செய்து தரும் அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசுக்கு நம் உரிமையை வலிமையாக உணர்த்த வேண்டிய தேவையில் கொண்டாடப்பட வேண்டிய நாளே தமிழ்நாடு நாள்.

- மே பதினேழு இயக்கம்

Pin It