மனித சமுகம் தொடர்ந்து மாறிக்கொண்டே தான் இருக்கிறது. மாற்றம் என்பது மட்டுமே மாறாமல் நிகழ்ந்து வருகிறது. அத்தகைய  மாற்றம் அனைவருக்கும் சமமான நன்மை தருவதாக இருக்க வேண்டும் என்பது எல்லா காலங்களிலும் சமுக ஆர்வலர்களின், முற்போக்காளர்களின் விருப்பம். சமூகத்தின் மாற்றங்கள், ஒரு பகுதி மக்களை மட்டும் உயர்த்த உதவும் பொழுது அதை எதிர்க்க வேண்டியுள்ளது. அத்தகைய எதிர்ப்புகளையும் உரிய காலத்தில், உரிய வடிவத்தில் வெளிப்படுத்தி, உரிய மாற்றையும் சொல்லி, மக்களின் நம்பிக்கையைப் பெற்றாக வேண்டும். நியாயமானதானாலும், காலம் கடந்த பின் தெரிவிக்கப்படும் எதிர்ப்புகள், மக்களிடம் உரிய வரவேற்பையோ, ஆதரவையோ பெறுவதில்லை..

            அரசு என்ற அமைப்பு தோன்றியது முதல் அதன் எல்லைகள், இன்றுவரை நிரந்தரமானதாக இருந்தது இல்லை. காலனிய ஆட்சி முறை வரை ஆட்சியாளர்களின் தோள் வலிமையும், படை வலிமையும் அரசு எல்லைகளை  தீர்மானித்தன. அதனால் வலிமைகள் மாறும்பொழுது எல்லைகளும்  மாறின. காலனிய ஆட்சி முறைகளின் கொடுமையும், வறுமையும் மக்களை கிளர்ந்து எழச் செய்தது.

அத்தகைய மக்களின் எழுச்சியை ஒன்று திரட்டவும், மக்களின் நம்பிக்கையைப் பெறவும், தேசம், தேசியம், சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம் போன்ற கருத்தாக்கங்களும் நடைமுறைகளும், சமூகப் போராளிகளால் அக்காலங்களில்  முன்வைக்கப்பட்டுள்ளது. இக்கருத்தாக்கங்களில் நாடுகளின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டது. அதே வேளையில் மனிதனின் அடிப்படை உரிமையாக பிறப்புரிமையாக, இருந்து வந்த குடிபெயரும் உரிமை, தேசியத்தால் பறிமுதல் செய்யப்பட்டது. எந்த ஒரு கருத்தாக்கமும் வெற்றி பெறுவது என்பது அக்கால சமுகத்தின் வரலாற்று தேவையால் தீர்மானிக்கப்படுகிறது.                                                                                                 

காலனிய ஆட்சி முறைக்கு எதிராக மக்களின் கிளாச்சி துவங்கிய காலத்தில் தேசங்கள் உருவாக, தேசிய இனம் என்ற கருத்தும், தேசிய கலாச்சாரம் என்ற கருத்தும் அடிப்படையாக  உருவானது. இந்தியாவில் சுதந்திரத்திற்குப் போராடிய கட்சிகள் எதுவும் (காங்கிர‌ஸ், கம்யூனிஸ்ட்) தேசிய இன கருத்தாக்கத்தை முன் வைக்கவில்லை. மாறாக கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திய தேசியம் என்ற கருத்தாக்கத்தையே முன்வைத்தனர் அல்லது ஏற்றுக்கொண்டனர். அதனால் பல தேசிய இனங்கள் இருந்தும், பல மொழி பேசும் மக்கள் இருந்தும், ஒற்றைத் தேசியம் மலர்ந்தது. தென் இந்தியப் பகுதியில் தேசிய இன உணர்வுகள் துளிர் விட்டபொழுது, அதை தேசியப் பிரிவினை என்று இரண்டு வர்க்க அரசியல் தலைமையினரும் எதிர்த்தனர். அப்போராட்டங்களின் விளைவாக மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. தமிழ்நாடு தோன்றியபொழுது, தமிழ் பேசும் பாண்டிச்சேரி அடிமைநாடாக இருந்தது. அந்த நாடு சுதந்திரம் பெற்ற பொழுது தமிழ்நாட்டோடு சேர்க்கப்படாமல் தனி மாநிலமாக உருவானது. நிகழ்ந்துவிட்ட வரலாற்றுத் தவறுகளை  இப்பொழுது திருத்திவிட முடியாது. ஏனெனில் அதற்குரிய சமுக, வரலாற்று சுழலும் தேவையும் இல்லை.

            சமீப காலங்களில் தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியம் என்ற கருத்தாக்கம் உயர், மத்திய தரவர்க்க, இடதுசாரி அறிவுஜீவிகள் மத்தியில் அதிகம் பேசப்படுகிறது. குறிப்பாக ஈழ  விடுதலைப் போராட்டத்தின் தோல்வி, இவர்களை தமிழ்த் தேசியக் கோட்பாட்டின் மீது பெரும் அழுத்தத்தை தர வலியுறுத்துகிறது. இக்கருத்தாக்கத்தின் அவசியத்தையும், அடிப்படையையும் அதற்கான சமுக சூழல்களையும் பரிசீலிக்க இவர்கள் தரும் அழுத்தம்  நம்மைத் தூண்டுகிறது. ஈழ விடுதலைப் போராட்டம் தோன்றிய காலமும், சூழலும், ஈழ மக்களின் வரலாற்றுத் தேவையில் இருந்து எழுந்தது தான். ஆனால் அதன் போராட்ட முறையிலும், போர்த்தந்திர யுக்தியிலும் நிகழ்ந்து விட்ட தவறுகளினால் தோல்வியைத் தழுவ நேர்ந்தது.

            ஒரு தேசியம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவும், பிற தேசிய இனத்தில் இருந்து வேறுபடுத்திக் கொள்ளவும், மொழி, பண்பாடு போன்றவற்றை பயன்படுத்திக் கொள்கிறது. அதே போல அவற்றைப் பாதுகாக்க, சுதந்திரத்தையும், தனி அரசமைப்பையும் வேண்டி, அடக்குமுறையாளர்களுக்கு எதிராகப் போராடுகிறது. தேசிய இனங்களின் அடிப்படையிலான  தேசங்கள் தோன்றுவதற்குத் தேவையானது, அதன் மீது தொடுக்கப்பட்டுள்ள அடக்குமுறையும், அடக்குமுறையின் மீது மக்களுக்கு கொழுந்து விட்டு எரியும் வெறுப்பும் ஆகும். இத்தகைய அம்சங்கள் இன்றைய தமிழினத்தின் மீது தமிழகத்தில் உள்ளதா என்பதைப் பரிசீலனை செய்ய வேண்டும்.

           எல்லா தேசிய இனங்களின் மொழியைப் பாதுகாப்பதும், வளர்ப்பதும் அவ்வின மக்களின் குடும்பமும், கல்விச் சாலைகளும். இன்றைய தமிழகத்தில் உள்ள குடும்பங்களும்,கல்விச் சாலைகளும், தமிழ் மொழியை விட ஆங்கில மொழியின் மீது மோகம் கொண்டு, குழந்தைகளை உருவாக்கி வருகின்றன. என்ன காரணம்? தாய் மொழி மீது பற்று இல்லை என்பதாலா? அல்லது நடைமுறை வாழ்வில் வளரவும், அதிக பணம் சம்பாதிக்கவும், ஆங்கில மொழியும், அறிவும் பயன்படுகிறது என்பதாலா? உலகில் பல நாடுகள் புதிதாக ஆங்கில மொழியை தற்பொழுது தம் மக்களுக்கு கற்றுக்கொடுப்பது ஏன்? இந்த உணர்வு சமுகத்தின் உயர்குடி மக்களுக்கு மட்டுமல்ல எல்லாப் பகுதி மக்களுக்கும் உள்ளது என்பதை அனைவரும் அறிவோம். அதனால்தான் தமிழகத்தில் ஆங்கில மொழிப் பள்ளிகள் புற்றீசல் போல் நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை பெருகிக் கிடக்கிறது. ஆக மொழியின் மீது அடக்குமுறை உள்ளது என்று கூற முடியாது. உலக மக்கள் பலவிதமான கலப்புக்கும் ஆளாகி, மொழி என்பதை இனத்தின் அடையாளம் எனும் அடிப்படையை மாற்றியும் மறந்தும் உள்ளனர்.

அதே போல மக்களின் உணவு, உடை, பழக்க வழக்கங்கள் உலகளாவிய கலப்பினால் மறைந்தும், புதியதாய் வளர்ந்தும் வருவது அனைவரும் ஒப்புக் கொள்ளக் கூடியது. இத்தகைய மாற்றங்கள் உலக மனிதர்களின் நுகர்வுப் பண்பையும் கலாச்சாரத்தையும், ஏன் மொழியையும் கூட தேசிய இனத்திற்கான அடையாளம் என்ற அடிப்படையில் இருந்து மாற்றி உள்ளது. இவைகள் அனைத்தும் தங்களின் பயன்பாட்டிற்கான வாழ்வின் உயர்விற்கான கருவிகளாக பாவிக்கும் மனோபாவம் மக்களிடையே  உருவாகி உள்ளது. அதே போல இவைகளைப் பாதுகாக்கும் அரசு என்ற அமைப்பும் அதன் தனித்துவத்தை, சுயாதிபத்தியத்தை இழந்து உலகை சார்ந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால் இன்றைய உலக, சமுக, சூழல் தமிழ் தேசியம் அல்லது வேறு எந்த தேசியமும்  தோன்றுவதற்கான வரலாற்றுத் தேவை இல்லாமல் உள்ளது.

         தேசிய இனங்களின் மொழியும் கலாச்சாரமும் சுதந்திரமாக உள்ளதா  என்றால் இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டும். அப்படியானால் இவைகளின் சுதந்திரத்திற்கு என்னதான் வழி? மக்களின் மொழிகளும், கலாச்சாரமும் பாதுகாக்கப்பட வேண்டாமா? கண்டிப்பாக செய்யப்படவேண்டிய வேலை தான். எதை, யார், எப்படி, செய்வது என்பது தீர்மானிக்கப்பட வேண்டும்.

             தமிழ்த் தேசியம் பேசும் ஒரு பகுதியினர் தமிழ்நாட்டையும், ஈழத்தையும் இணைத்து தமிழ்த் தேசம் உருவாக்கப்படவேண்டும் என்ற கருத்து கொண்டுள்ளனர். அவர்கள் பக்கத்தில் உள்ள பாண்டிச்சேரி, தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை சேர்த்து சிந்திக்கிறார்களா என்பதைத் தெளிவுபடுத்தியது இல்லை. இவைகள் சாத்தியமா? உண்மையான ஜனநாயகம் என்பது அரசியல் அதிகாரத்தை மக்களுக்கு அளிப்பதில் தான் காண முடியும். அப்படியானால், மக்களின் ஈடுபாடும் பங்களிப்பும் தினசரி அரசியல் நிகழ்வுகளில் வெளிப்பட வேண்டும். அதற்கு அரசமைப்பு என்பது மக்களின் கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பது அவசியம். இன்றைய நிலையில் அரசியல் அதிகாரங்கள் மத்திய அரசிடமும் மாநில அரசிடமும் குவிக்கப்பட்டுள்ளது. அதை அரசமைப்பின் அடிமட்டத்தில் உள்ள கிராம சபை வரை பகிர்மானம் செய்யப்படவேண்டும். அதற்கு போராடுவதும், திட்டமிட்டு செயல்படுவதும் தான் தேசிய இன ஆர்வலர்களின் கடமையாக இருக்கும்.

Pin It