1940 ஆகஸ்டு 24, 25 தேதிகளில் திருவாரூரில் நடை பெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் பெரியார் ஆற்றிய தலைமையுரை - சென்ற இதழ் தொடர்ச்சி.

ஆரிய திராவிட நாட்டுப் பிரிவினை

இனி நம் கட்சி நோக்கங்கள், திட்டங்கள் ஆகியவை நிறைவேற்றப்படுவதற்கு ஆகவும் நம் மக்கள் உண்மையான விடுதலையும் சுதந்தரமும் பெறுவதற்கு ஆகவும் நாம் செய்ய வேண்டிய, வேலைகளில் முக்கியமானது ஆரியப் பிணைப் பில் இருந்து அதாவது இந்தியா, இந்தியர் என்ற பிணைப்பிலிருந்து திராவிட நாட்டையும் திராவிட மக்களையும் பிரித்துக் கொள்ள வேண்டியது அவசியமான காரியமாகும். இதைப்பற்றி சென்ற மகாநாட்டின் எனது தலைமை உரையில் விவரித்துக் கூறியிருக்கிறேன்.

இந்த ஒன்றரை வருஷ காலமாகவும் ஒவ்வொரு கூட்டங்களிலும் எடுத்துப் பேசி மக்களினது ஆதரவு பெற்றும் வந்திருக்கிறேன். இதுவரை இந்த எனது அபிப்பிராயத்திற்கு மாறாக யாரும் சரியான காரணங்காட்டி எவ்வித மறுப்போ ஆnக்ஷபணையோ சொன்னது கிடையாது என்றாலும் மக்களுடைய ஒழுக்கத்துக்கும் பகுத்தறிவு ஆராய்ச்சிக்கும் மாறுபாடு இல்லாவிட்டாலும், மத சம்பந்தமான உணர்ச்சியின் பயனாய் “ஹா! பறையனைத் தொடுவதா” என்பது போல எப்படி சில காரியங்களில் திடீரென்று வெறுப்பு கொண்டு விடுகிறார்களோ அதுபோலவே இவ்விஷயத்தில் “ஹா! பிரிப்பதா” என்று மக்கள் ஒரு திகில் அடையும்படி எதிரிகள் விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள். அப்படிப்பட்ட பிரச்சாரங்களுக்கு ஆதரவெல்லாம் “தாயை வெட்டுவதா?”, “பிள்ளையை அறுப்பதா?”, “பசுவைக் கொல்வதா?”, “கூரையைப் பிரிப்பதா?” என்பன போன்ற திடுக்கிடத்தகுந்த பொருத்தமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொள்வதல்லாமல் பிரிப்பதால் என்ன நஷ்டமென்றோ, பிரிக்கப்பட்ட நாடுகள் என்ன கேடு அடைந்தனவென்றோ, ஒரு சிறு ஆதாரத்தையும் எடுத்துக்காட்டினார்களில்லை.

நாம் திராவிட நாடு பிரிக்கப்பட வேண்டுமென்று சொல்லுவதற்குள்ள காரணங்களெல்லாம் ஒரு நாட்டு மக் களுக்கும் ஒரு சமுதாய மக்களுக்கும் முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டுமானால் அந்த மக்களுக்கு முதலில் தாங்கள் யார் என்ற உணர்ச்சி பிறந்து தங்களைப் பற்றித் தெளிவாய் தெரிந்துகொண்டு அதன் பயனாக, நாட்டுப் பற்றும் சமுதாயப் பற்றும் ஏற்பட்டாக வேண்டும். அது இல்லாத நாடோ மக்களோ முன்னnற்றமடைந்ததாக சரித்திரச் சான்றுகளே கிடையாது.

உலகிலுள்ள மற்ற நாடுகளெல்லாம் ஒவ்வோர் அளவுக்காவது முன்னேற்றம் அடைந்து வரவும் நம் நாடும் மக்களும் மாத்திரம் எவ்வித முன் னேற்றமில்லாமல் தேங்கி இருப்ப தற்கு இதுவே காரணமாகும். மற்றும் வெளிநாட்டு மக்கள் ஏராளமாய் இந் நாட்டிற்கு வந்து நம்மை அடிமைப் படுத்தியும் நம் செல்வங்களைச் சுரண்டிக் கொண்டும் போகவும் நம்மக்கள் இங்கு பிழைப்பும் போதிய வரும்படியும் இல்லாமல் வெளிநாடுகளுக்குப் போய் கூலி யாயும் அடிமையாயும் இருந்து இழிவுபடவும் இதுவே காரணமாகும்.

இங்கு நம் நாட்டு மக்கள் 100க்கு 97 பேர்களாக உள்ள பெருமித எண்ணிக்கை உள்ளவர்களாக இருந்தும் 100க்கு 3 பேர்களாக உள்ளவர்களும் வெளிநாட்டி லிருந்து வந்து குடியேறினவர்களுமான ஆரியர்கள் மிக சிறுபான்மையினராக இருந்தும் அரசியலில், பதவிகளில், உத்தியோகங்களில், சமுதாய உயர்வுகளில் அவர்கள் மெஜாரிட்டிகளாகவும் மேன்மையானவர்களாகவும் இருப்பதற்கும், நாம் மைனாரிட்டிகளாகவும் கீழ்மையாகவும் இருப்பதற்கும், அரசாங்கத்தார் அரசியல் அபிப்பிராயங் களுக்கு இந்நாட்டு பழம்பெரும் மக்களாகிய நம்மை லட்சியம் செய்யாமல் போவதற்கும் ஆரியர்களை லட்சியம் செய்வதற் கும் நம் நாட்டு பொது ஸ்தாபனங்கள் என்பவைகள் யாவற்றிலும் தொழில், பொருளாதாரம் யாவற்றிலும் ஆரியர்களே தலைமையும் ஆதிக்கமும் செலுத்துவதற்கும், நாம் அவர் களைப் பின்பற்றுவோராக இருப்பதற்கும் காரணம் இந்த ஆரிய திராவிட நாட்டுப் பிணைப்பே யாகும். நாம் இனியும் கவனித்துத் தக்கது செய்துகொள்ளாவிட்டால், ஆரீயர்களால் தமிழ்நாட்டில் சிறிதாவது மீதியுள்ள எல்லாத் துறைகளும் கைப்பற்றப்பட்டு நாம் அடிமைகளாகவே ஆக்கப்பட்டுவிடு வோம் என்பது உறுதி.

கேவல நிலைக்குக் காரணம்

ஆகவே திராவிட நாடானது ஒரு ஐம்பது வருஷ காலத் துக்கு முன்னாவது ஆரியத்தினிடம் இருந்து பிரிந்து தனி நாடாக இருந்திருக்குமானால் இன்று அதன் செழிப்பும் மேன்மையும் திராவிட மக்களின் உயர்வும் உலகம் மெச்சக் கூடியதான நிலை அடைந்திருக்கும். அப்படி பிரிக்கப்படாத தானால் முன்னேற்றம் அடைவது தடைப்பட்டது என்பது மாத்திரமல்லாமல் இந்தியா என்ற உபகண்டத்தில் உள்ள மற்ற நாடுகள் சுரண்டுவதற்கு ஓர் சந்தை போலவும் மற்ற நாடுகள் ஆதிக்கம் செலுத்தி, தங்கள் வாழ்வுக்குப் பயன்படுத்தி கொள்வதற்கு ஒரு கருவியாகவும் இது இருந்து வருகிறது. திராவிட நாடும் திராவிட சமுதாயமும் சரித்திரங்களுக்கு முற்பட்டவை என்பதை நான் எடுத்துக்காட்ட வேண்டிய தில்லை. அதுமாத்திரமல்லாமல் சமீபகாலம் வரை இந்த உபகண்டத்திலுள்ள மற்ற எல்லா நாடுகளுக்கும் சமுதாயங் களுக்கும் மேம்பட்டதும் வழிகாட்டியானதுமான சமுதாயமாய் இருந்து வந்திருக்கிறது. இவை மாத்திரமல்லாமல் திராவிடர் களின் பழங்கால நிலைமையைப் பார்த்தோமானால் திராவிடர்கள் சிறந்ததும் மேலானதுமான செழிப்பும் நாகரி கமும் உள்ளவர்களாக விளங்கி இருப்பதும் தெரியவரும். இப்படிப்பட்ட நாட்டு மக்கள் இன்று இருக்கும் கேவல நிலைக்குக் காரணம் ஆரிய நாட்டோடு திராவிட நாடு பிணைக்கப்பட்டிருப்பது என்பதல்லாமல் வேறு என்ன சொல்லக்கூடும்?

பிரிட்டிஷ் அரசாட்சி காரணமாகத் திராவிடர்களாகிய நாம் இந்நிலையில் இருக்கிறோமென்று சொல்லப்படுமேயானால், இந்நாட்டிலுள்ள திராவிடரல்லாத ஆரிய மக்கள், மேலே குறிப்பிட்டபடி உயர்நிலையில் இருப்பதற்குக் காரணம் என்ன? அரசியல் காரணமாக இந்நாட்டு மக்கள், கல்வி அறிவு இல்லாமல் கீழ் மக்களாய் இருக்க நேரிட்டது என்று சொல்லப்படுமானால் இந்நாட்டிலுள்ள ஆரியர்கள் 100க்கு 100 பேரும் கல்வி பெற்றவர்களாகவும் மேன் மக்கள் என்பவர்களாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன? அரசியல் காரணத்தால் இந்நாட்டு மக்கள் உடல் உழைப்பாளிகளாகவும் வறியோர்களாகவும் தினம் ஒருவேளைக் கஞ்சி கூட வயிறு நிறைய சாப்பிடுவதற்கு இல்லாமல் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுமானால் இந்நாட்டு ஆரியர்கள் உடல் உழைப்பு இல்லாமலும் போக போக்கியத்தோடும் தினம் 4 வேளை ஆகாரத்தோடும் வாழுவதற்குக் காரணம் என்ன? ஆகவே இவைகளை எல்லாம் கவனத்தோடு ஆழ்ந்து பார்ப்போமேயானால் நமது நாடு, உள்நாட்டிலுள்ள மற்றொரு வர்க்கத்தாராலேயே ஏய்க்கப்பட்டு, சுரண்டப்பட்டு மற்ற அன்னிய நாட்டார்களுக்கும் சுரண்ட இடங்கொடுத்து வரும் காரியங்களாலேயே, இப்படி இருக்கிறதென்பதும் இவற்றிற்கு பிரிட்டிஷ் ஆட்சியே காரணம் அல்ல என்பதும் விளங்கும். இந்தக் கொடுமையிலிருந்து விலகி மனிதத் தன்மை பெற வேண்டுமென்பதற்காகத்தான் திராவிட நாடு தனியாகப் பிரிக்கப்பட வேண்டுமேயொழிய மற்றபடி வேறு எவ்வித குரோத புத்தியாலோ, நாட்டுப்பற்று, சமுதாயப்பற்று இல்லாததாலோ அல்ல.

வர்க்க உணர்ச்சியே இல்லாத மக்களுக்குத் தங்கள் நாட்டில் கூட அவரவர் தனிப்பட்ட நலம் தவிர வேறு எவ்வித பொதுநல உணர்ச்சியும் இருப்பதற்கு இடமிருக்காது. ஆரியர்கள் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கென்று ஒரு தனி நாடு இல்லாவிட்டாலும் அவர்களது இன (வர்க்க) உணர்ச்சியானது அவர்களை இவ்வளவு உயர்வாழ்க்கை நிலைமைக்குக் கொண்டு வந்திருக்கிறது. இப்போதும், நமது நாட்டில் சமீபகாலம் வரை மிக பின்னணியில் இருந்த வகுப்பார் என்பவர்கள் யாராவது ஏதாவது முற்போக்கு உணர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்றால் அது வகுப்பு உணர்ச்சி ஏற்பட்டு, அவர்கள் “வகுப்புவாதம்” பேசமுன்வந்த காரணமேயாகும். ஆதலால் சுமார் 4ஙூ கோடி ஜனத்தொகை கொண்ட சென்னை மாகாணமாகிய திராவிட நாடு தனி அரசியல் நாடாகப் பிரிந்து கொள்ள வேண்டியது மிகவும்  அவசியமென்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதை எனது 20, 30 வருஷத்திய அனுபோகத்தைக் கொண்டே சொல்லுகிறேன்.

இந்தப் பிரிவினைத் திட்டத்துக்கும் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்தோ சம்பந்தத்திலிருந்தோ விடுவித்துக் கொள்வதா என்பதற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. இந்தப் பிரிவினைத் திட்டமானது உண்மையான நாட்டுப் பற்றும் நாட்டு மக்கள் நலப்பற்றும் ஏற்பட்டதால் உண்டான உணர்ச் சியே தவிர மற்றபடி எதிரிகள் சொல்லுவது போல் தேசாபி மானம், சுதந்தர உணர்ச்சி இல்லாததால் ஏற்பட்டது அல்ல. ஆகவே பிரிவினை வேண்டுமென்பது பிரிவினை அடைந்து அதன் மூலம் பொருளாதாரம், கல்வி, சமுதாயம், தொழில் முதலிய துறைகளில் முன்னேற்றமடைந்து அன்னியர் சுரண்டலுக்கும் ஆதிக்கத்துக்கும் ஆளாகாமல் தன் காலி லேயே  தான் நிற்கும்படியான சுயநிர்ணயத்தையும் பூரண சுதந்தரத்தையும் அடைய வேண்டுமென்பதற்கேயாகும். இக்காரியத்துக்கு பிரிட்டிஷ் ஆட்சி நமக்குப் பயன்பட்டால் நாம் அதில் இருக்க வேண்டியதும் பயன்படாவிட்டால் வேறு மார்க்கம் பார்க்க வேண்டியதும் இயற்கையேயாகும்.

- (தொடரும்)

Pin It