மார்க்சு, ஏங்கெல்சு ஆகிய இருவருக்கும் இடையில் ஓர் அற்புதமான வேலைப் பிரிவினை நிலவியது. பொதுவான பல வேலைகளை அவர்கள் இணைந்து செய்தது போக, அவர்கள் தனித்தனியாகவும் பல வேலைகளைச் செய்து முடித்தனர். மார்க்சைப் பொறுத்தமட்டில், அவரது கவனம் பெருமளவில் மார்க்சியக் கோபாட்டு உருவாக்கத்திலும் அடுத்த கட்டத்தில் “மூலதனம்” நூலிலும் குவிந்திருந்தது. வரலாறு குறித்த பொருள் முதல்வாதப் புரிதலும், உபரிமதிப்பு குறித்த  அரசியல் பொருளாதாரக் கோட்பாடும் மார்க்சின் இரண்டு மேதமை கொண்ட கண்டுபிடிப்புகள் என்று ஏங்கெல்சு எடுத்துக்காட்டுவார்,

வரலாறு குறித்த பொருள்முதல்வாதப் புரிதல் மார்க்சின் காத்திரமான தத்துவ உழைப்பை அடிப்படையாகக் கொண்டது. “கம்யூனிஸ்ட் அறிக்கை” வெளிவந்த 1848ஆம்  ஆண்டிற்கு முன்னதும் பின்னதுமான ஆண்டுகளில் மார்க்சு இந்தத் தத்துவப் பணியைச் செய்து முடித்தார். மார்க்சின் வாழ்க்கைக் காலத்தில் நடுப்பகுதியிலிருந்து இறுதிக் காலம் வரையிலான அவரது உழைப்பு. சமகாலச் சமுதாயமான முதலாளித்துவம், அதன் பொருளாதார உற்பத்தி முறை ஆகியவை தொடர்பானது. அவைதாம் உபரி மதிப்பு குறித்த கோட்பாட்டின் எல்லைகளையும் குறித்தன. மார்க்சின் வாழ்க்கை முழுவதையும் மேற்குறித்த இரண்டு கண்டுபிடிப்பு களும் அவற்றுக்கான உழைப்பும் ஆக்கிரமித்திருந்தன என ஒரு வசதிக்காகச் சொல்லலாம்.

ஏங்கெல்சைப் பொறுத்தமட்டில், அவர் மார்க்சின் இணைபிரியாத நண்பர். மார்க்சு என்ன செய்து கொண்டிருந்தார்; அவருக்கு என்ன தேவைகள் இருந்தன; வேலை களுக்கு நடுவில் இட்டு நிரப்ப வேண்டிய இடைவெளிகள் யாவை என்பவற்றை அவர் நன்கு அறிந்திருந்தார். மார்க்சை ஏங்கெல்சு எப்போதுமே அணைத்து நின்றார். மார்க்சு என்ற இளம் தத்துவ அறிஞரில் முதலாளியப் பொருளாதாரம் குறித்த ஆர்வங்களை ஏற்படுத்தியவர் ஏங்கெல்சு என்று ஒரு சித்தரிப்பு உண்டு. வரலாற்றுப் பொருள்முதல்வாதப் புரிதலை உருவாக்கிக் கொள்ள மார்க்சு போராடிக் கொண்டிருந்த காலங்களில், 1843இல் “அரசியல் பொருளாதார விமர்சனம்  குறித்த பொது வரையறைகள்” என்று ஒரு கட்டுரையை ஏங்கெல்சு எழுதினார்.

இன்னும் சில ஆண்டுகளில், 1845இல் ஏங்கெல்சு “இங்கிலாந்தில் தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கைச் சூழல்கள்” என்றொரு நூலை எழுதி வெளி யிட்டார். இந்த இரண்டு படைப்புகளும் அவை சார்ந்த கலந்துரையாடல்களுமே மார்க்சிடம் அரசியல் பொருளாதார ஆர்வங்களை ஏற்படுத்தின என்று ஆய்வாளர்கள் குறிப்பிடு கின்றனர். இது மார்க்சு ஏங்கெல்சு உறவுகளில் ஒரு பரிணாமம். இதுபோலப் பல வேளைகளில் அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் அறிவுப்புல வட்டாரங்களில் புதிய ஆர்வங்களை ஏற்படுத்திக் கொண்டனர். நூல்களைச் செய்திகளைப் பகிர்ந்து கொண்டனர்.

1848ஐ ஒட்டிய ஆண்டுகள் மார்க்சு ஏங்கெல்சுக்கு மிக நெருக்கடியான ஆண்டுகள். ஹெகல், ஃபாயர்பாக் ஆகியோரின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு புதிய சிந்தனை அவர்களிடத்தில் உருவான ஆண்டுகள்  அவை. இளம் ஹெகலியர் போன்ற அமைப்புகளில் இணைந்து வேலை செய்த நண்பர்களையும் தோழர்களையும் மார்க்சும் ஏங்கெல்சும் கடந்து நடந்த காலங்கள் அவை. புதிய நிலைகளை எட்டிய போது பலருடன் அவர்களுக்கு மோதல்கள் ஏற்பட்டதுண்டு. மார்க்சு ஆக்ரோஷத் துடன் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடுவார் என்ற தகவலை அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

புதிதாக உருவான “மார்க்சிய”த்தை மார்க்சின் நண்பர்களே அங்கீகரித்துவிடவில்லை. “மார்க்சியம்” ஓரளவு அங்கீகரிக்கப்பட்டு பரவிய நாள்களில், முதலாம் கம்யூனிஸ்ட் அகிலம் உருவான போது, அதனுள் நிகழ்ந்த கருத்துப் போராட்டங்களும் காத்திரமானவை. இத்தகைய சூழல்களில்தான் ஏங்கெல்சு என்ற மார்க்சின் நண்பரின் மற்றுமொரு பரிமாணம் வெளிப்பட்டது. புரூனோ பௌவர், டூரிங்க், ப்ரௌதன், மாக்ஸ் ஸ்டனர், மிகயில் பகூனின் போன்ற பலருடன் மார்க்சு ஏங்கெல்சுக்கு கருத்து வேறு பாடுகள் திரண்டன. அது உக்கிரமான ஒரு விவாதச் சூழல், உரையாடற் சூழல், மோதல் சூழல், மார்க்சை அத்தகைய சூழல்களில் வியூகம் கட்டிப் பாதுகாப்பது போன்ற ஒரு பணியை ஏங்கெல்சு செய்துவந்தார். ஏங்கெல்சு இராணுவ உத்திகள் தெரிந்தவர். எனவே போராட்ட வியூகங்கள் வகுப்ப திலும் அவர் திறன்கொண்டவராக இருந்தார். இது அவரது இரண்டாவது முக்கியமான பரிமாணம் என்று கொள்ள வேண்டும்.

marx angelsm 6001848-50களில் செர்மனியிலும் இன்னும் சில ஐரோப்பிய நாடுகளிலும் ஒரு தொழிலாளர் எழுச்சியை மார்க்சும் ஏங்கெல்சும் எதிர்நோக்கினர். ஐரோப்பியத் தொழிலாளர் எழுச்சி திரளும் போது, பூர்ஷ்வா வர்க்கம் எத்தகைய நிலைப் பாட்டை எடுக்கும்? பூர்ஷ்வா வர்க்கம் ஐரோப்பிய நாடுகளின் நில உடைமை வர்க்கத்தோடு எத்தகைய உறவினைக் கொண்டிருக்கும்? பூர்ஷ்வா வர்க்கம் மாற்றங்களை விரும்பும் ஒரு வர்க்கம் என்ற முறையில் பழமைவாத நில உடைமைச் சக்திகளைப் புறந்தள்ளும் என்றும் மார்க்சு எதிர்பார்த்தார். ஆயின் 1848-50ஆம் ஆண்டுகள் மார்க்சுக்கு அதிர்ச்சிகளை ஏற்படுத்தின. செர்மனியிலும் பிரான்சிலும் பூர்ஷ்வா வர்க்கம் நில உடைமையாளர்களோடு உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டது. இரண்டு ஆளும் வர்க்கங்களும் சேர்ந்து விவ சாயிகளையும் தம்பக்கம் சேர்த்துக் கொண்டன. தொழிலாளர் வர்க்கம் தனிமைப்பட்டது. எழுச்சிகள் தோற்கடிக்கப்பட்டன.

நவீன பூர்ஷ்வா வர்க்கத்தின் வரலாற்று ரீதியான முற் போக்குப் பாத்திரம் மிகக் குறைந்த ஓர் எல்லைக்குட்பட்டது என்பதை மார்க்சும் ஏங்கெல்சும் உணர்ந்து கொண்ட சந்தர்ப்பம் என அதனைக் கொள்ள வேண்டும். மார்க்சும் ஏங்கெல்சும் விவசாயிகளைப் பற்றிய தமது சிந்தனைகளை விரிவுபடுத்த முடிவு செய்தனர். மார்க்சு, சமகால உடனடி அரசியலில் ஆளும் வர்க்கங்களின் சூதாட்டங்களைப் பற்றிக் கோபத்தோடு எழுதினார். நகர்ப்புறத் தொழிலாளர் வர்க்கம் மற்றொரு பிரதான உழைக்கும் வர்க்கமான விவசாயி களோடு நிரந்தரமான சமூக அரசியல் கூட்டணியை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு மார்ச்சு வந்து சேர்ந்தார்.

மற்றொருபுறம், ஏங்கெல்சு, செர்மானிய வரலாற்றில் விவ சாயிகளின் பாத்திரம் பற்றிய ஆய்வுகளில் அக்கறை காட்டினார். வரலாறு முழுவதிலும் விவசாயிகள் நில உடைமைக்கு எதிரான கலகங்களிலும் எழுச்சிகளிலும் இரகசிய சங்கங்களை உருவாக்குவதிலும் ஈடுபட்டு வந்திருப்பதை அவரால் இப்போது காணமுடிந்தது. நில உடைமையை ஆதரித்து நின்ற அரசாங்கத்தையும் கத்தோலிக்க கிறித்தவ சமயத்தையும் விவசாயிகள் விட்டு வைக்கவில்லை. ஆயுதமேந்திய போராட் டங்களையும் அவர்கள் முன்னெடுத்தனர்.

விவசாயிகளின் எழுச்சிகள்தாம் வரலாற்றின் மிகப்பெரும் நிறுவனமான கிறித்தவ சமயத்தை இரண்டாகப் பிளந்தன. கத்தோலிக்கம், சீர்திருத்தக் கிறித்தவம் என்ற இரண்டு சமயங்கள் உரு வாயின. இதுகுறித்த ஆய்வுகளைக் கொண்டுதான் ஏங்கெல்சு “செர்மனியில் விவசாயிகளின் போர்” என்ற நூலை எழுதி வெளியிட்டார். ஒரு முக்கியமான அரசியல் வேலைத் திட்டத் தைத் தன்னுள் கொண்டுள்ள நூல் அது. விவசாயிகளால் முடியுமா? என்ற கேள்விக்கு இந்நூல் பதில் சொல்லியது. இந்நூல் உருவாக்கம் ஏங்கெல்சின் மூன்றாவது பரிமாணத் தைக் குறித்து நிற்கிறது. முக்கியமான சந்தர்ப்பங்களில் இது போன்ற நூல்களை ஏங்கெல்சு எழுதி வழங்கினார் என்பதைக் கவனத்தில் கொள்வோம்.

மார்க்சு, “மூலதனம்” நூலின் உருவாக்கத்தில் இயங்கியல் தத்துவத்தின் முழு ஆற்றலையும் பயன்படுத்தியிருந்தார். இயங்கியலைப் பற்றித் தனியாகவே - ஒரு நூலை எழுத அவர் நினைத்திருந்தார். ஆயின் அவரது முடிவுறா வேலை களுக்கு இடையில் அது சாத்தியப்படவில்லை. இத்தகைய சூழல்களில் ஏங்கெல்சு இயங்கியல் பற்றிய தகவல்களைத் திரட்டத் தொடங்கினார். குறிப்பாக, நவீன விஞ்ஞானங்கள் இயங்கியல் குறித்து வழங்கும் ஆதாரங்களில் அவர் கவனம் செலுத்தினார். “இயற்கையின் இயங்கியல்” என்ற தலைப்பில் இன்று கிடைக்கும் நூல் அத்தகைய முயற்சியில் உருவான நூலே. அது முழு வடிவம் பெறாமல் பல இடங்களில் குறிப்புகளாகவே உள்ளது. மார்க்சியத்திற்கு விஞ்ஞானங்களின் ஆதரவை இந்நூல் கோரி நின்றது. இந்நூலின் உருவாக்க முயற்சி ஏங்கெல்சின் நான்காவது பரிமாணத்தைக் குறித்து நிற்கிறது எனலாம்.

இந்நூலுக்கு “இயற்கையின் இயங்கியல்” எனத் தலைப்பிட்டிருப்பது பொருத்தம் தானா? என்ற கேள்வியில் நியாயம் உண்டு. இந்நூலுக்கு, “இயற்கை விஞ்ஞானங் களின் இயங்கியல்” என்ற தலைப்பிட்டிருக்கலாம். ஏனெனில், மொத்த இயற்கையின் இயங்கியலை இந்நூல் பேசிவிட வில்லை. மாறாக, நவீன விஞ்ஞானங்கள் வழங்கும் தகவல் கள், வகைப்படுத்தல்கள், விஞ்ஞானக் கோட்பாடுகள் முத லானவற்றில், விஞ்ஞானிகள் தம்மை அறியாமலேயே வெளிப்படுத்தும் இயங்கியல் உண்மைகளை ஏங்கெல்சு இந்நூலில் பதிவு செய்துள்ளார். விஞ்ஞான அறிஞர்கள் தன்னிச்சையாகப் பயன்படுத்தும் இயங்கியல் முறைமை களை ஏங்கெல்சு எடுத்துக்காட்டுகிறார்.

மார்க்சின் மறைவுக்குப் பிறகு, “மூலதனம்” நூலின் பிற்பகுதி எழுத்துக்களைப் பதிப்பித்து வெளியிடும் ஏங்கெல்சின் மீதொரு மிகப்பெரிய பரிமாணத்தைச் சந்திக்கிறோம். மார்க்சின் வாழ்நாள் முழுவதும் அவருக்குப் பொருளாதார உதவிகள் செய்து, அவருடன் நின்ற ஏங்கெல்சு பற்றிய தகவல்களையும் இங்கு மற்றுமொரு பரிமாணமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். மார்க்சை எப்போதுமே அணைத்து நின்று ஏங்கெல்சு மேலெடுத்துச் செய்துவந்த மேற்குறித்த வேலைகளின் தொடர்ச்சியாகத்தான் “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற இந்நூலையும் காண வேண்டும்.

அமெரிக்க மானுடவியல் அறிஞரான மோர்கனின் “பண்டைய சமூகம்” என்ற நூலைப் (1877) படித்து மார்க்சு எழுதி வைத்திருந்த குறிப்புகள் இப்போது “இனவியல் நோட்டுப் புத்தகங்கள்” என்ற தலைப்பில் நமக்குக் கிடைக் கின்றன. மோர்கனின் நூலின் முக்கியத்துவத்தை உணர்ந்து மார்க்சும் ஏங்கெல்சும் அதுகுறித்து எழுதவேண்டும் என ஏற்கெனவே திட்டமிட்டிருந்தனர் என்பதை உணர முடிகிறது. ஆயின் மார்க்சின் பிற பணிகளும் பின்னர் அவரது மரணமும் அத்தகைய ஒரு நூலை வரவிடாமல் ஆக்கிவிட்டன. எனவே அப்பணியைத் தான் ஒருவரேயாயினும் செய்துமுடிக்க வேண்டும் என்ற முனைப்பிலேயே ஏங்கெல்சு அதனை மார்க்சின் மறைவுக்குப்பின் செய்து முடித்துள்ளார். மார்க்சு தனது கையெழுத்துப் பிரதிகளில் எழுதி வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டே ஏங்கெல்சு இந்நூலை உருவாக்கி யுள்ளார் என்பதையும் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

ஏங்கெல்சு எந்தத் தயக்கமும் இன்றி, மார்க்சிய சிந்தனை உருவாக்கத்தில் மார்க்சு வகிக்கும் இடம் குறித்துத் தெளிவாகச் சொல்லுகிறார்: மார்க்சு ஒரு மேதை. நாங்கள் திறமைசாலிகள். நாங்கள் இல்லாமலே கூட நாங்கள் செய்துள்ளவற்றை மார்க்சால் செய்திருக்க முடியும்; ஆயின் அவரின்றி எங்களில் எவரும் அவர் செய்துள்ளவற்றைச் செய்திருக்க முடியாது என்று அவர் குறிப்பிடுகிறார்.

மார்க்சைப் பற்றி ஏங்கெல்சு நட்புணர்வுடனும் உண் மையுடனும் கூறியுள்ளவற்றை ஏங்கெல்சுக்கு எதிராகவே பயன்படுத்துபவர்கள் இருக்கின்றனர். மார்க்சிய உருவாக்கத் தில் ஏங்கெல்சின் பங்களிப்பைப் பின்னுக்குத் தள்ளி அவர் மீது குற்றச்சாட்டுகளை அவர்கள் சுமத்துகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கு வரிசைப்படுத்துவோம்.

மார்க்சியத்தில் பொருளாதார நிர்ணயவாதம் உருவாவ தற்குக் காரணமாக அமைந்தவர் ஏங்கெல்சு. பொதுவாகவே மார்க்சியத்தைச் சில சூத்திரங்களாகச் சுருக்கிக் காட்டியவர் அவர். ஏங்கெல்சின் எழுத்துக்களில் மார்க்சியம் அதன் படைப்புத் தன்மையை இழந்து வாய்ப்பாடாக மாறிவிட்டது. சமூக வாழ்க்கைக்குச் சொந்தமான இயங்கியலை ஏங்கெல்சு இயற்கைக்குச் சொந்தமானதாகச் சித்தரித்தார். மனிதப் பங்கேற்பின்றி இயங்கியல் கிடையாது. ஏங்கெல்சு ஒரு புறவயவாதி. ஏங்கெல்சு ஒரு விஞ்ஞானவாதி. மார்க்ஸ் மனிதநேயவாதி. கிட்டத்தட்ட சோவியத் அறிஞர்கள் “எளிமைப் படுத்தி” வழங்கிய ஸ்டாலினிய மார்க்சியத்திற்கு முன்மாதிரி யாக ஏங்கெல்சின் மார்க்சியம் அமைந்தது. இவையெல்லாம் ஏங்கெல்சின் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள்.

ஏங்கெல்சு மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை மீறி நிற்கும் நூல் “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” எனும் இந்நூல். இந்த நூலின் மிகப்பெரிய சிறப்பு, இது மார்க்சு தனது முழுக் கவனத்தையும் செலுத்திய நவீன முதலாளிய யுகத்திற்கு முந்திய (Pre-Capitals) மிக நீண்ட வரலாற்றுக் காலக்கட்டத்தைப் பரவி நிற்கிறது. ஏடறியா வரலாற்றுக் காலம் என அழைக்கப்படும் புராதன சமூக அமைப்பில் தொடங்கி சில அபூர்வமான தொடர்ச்சிகளின் காரணமாக மத்திய காலத்தின் பிற்பகுதி வரை நீடிக்கும் வரலாற்றுக் காலத்தை ஏங்கெல்சின் நூல் தழுவி நிற்கிறது. முதலாளியத்திற்கு முந்திய யுகம் பற்றிய இந்நூலின்றி உண்மையில் இன்றைய மார்க்சியத்தை முழுவடிவில் உருவகிப்பதே சாத்தியமில்லாத ஒன்றாகும். பண்டைய வரலாறு சார்ந்த ஒரு மிகப்பெரிய இடைவெளியை இட்டு நிரப்பும் நூலாக இது அமைந்துள்ளது.

மோர்கன் எனப்படும் மானுடவியல் அறிஞரின் நூலில் தரப்பட்டுள்ள புராதன குடும்பம், ஆண்-பெண் பாலியல் உறவுகள், அரசு நிறுவனம் ஆகியன குறித்து கள ஆய்வு களின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட தகவல்கள், விளக்கங்கள் ஆகியவற்றை மார்க்சிய வரலாற்றுப் பொருள் முதல்வாதப் புரிதல் அடிப்படையில் மறு வாசிப்பு செய்து எழுதப்பட்ட நூல் இது, பலவகை மண உறவுகள், குலம், குடும்பம் சார்ந்த இரத்த உறவுகள், தாய்வழிச் சமுதாயம், அது உடைந்து சிதறுதல், தனிச் சொத்துரிமையின் தோற்றம், குலம் சார்ந்த தன்னாட்சி முறை, வர்க்கங்களின் தோற்றமும் மோதல் களும், அரசு எனும் அடக்குமுறை எந்திரத்தின் தோற்றம் எனப் பலவகையான பழம் வரலாற்று நிகழ்வுகளை இந்நூல் விரிவாகப் பேசுகிறது. கிரேக்க, ரோமானிய, செர்மானிய மற்றும் அமெரிக்கச் செவ்விந்தியப் பழங்குடிகளின் வாழ்க்கைத் தரவுகளை இந்நூலில் மோர்கனைப் பின்பற்றி ஏங்கெல்சு எடுத்தாளுகிறார்.

ஏங்கெல்சை சில விமர்சகர்கள் பொருளாதார நிர்ணய வாதியாகச் சித்தரிக்கின்றனர் என்று மேலே குறிப்பிட்டோம். இந்நூலில் அப்படிப்பட்ட பொருளாதார நிர்ணயவாதத்தைக் காணமுடியாது. மாறாக, 1884ஆம் ஆண்டு இந்நூலுக்கு ஏங்கெல்சு எழுதிய முன்னுரையில், இரண்டு வகையான உற்பத்தி வடிவங்களைச் சுட்டிக்காட்டுகிறார். அவை பொருளாதார உற்பத்தி மற்றும் மனித இனம் தன்னைத் தானே உற்பத்தி செய்து கொள்ளுதல். பொருளாதார உற்பத்தி மிகக்குறை வாகவே இருந்த பண்டைக்காலத்தில் குலமரபு உறவுகள் ஆதிக்கம் செலுத்தின. ஆயின் படிப்படியாக உற்பத்தி வளர்ந்த போது, பொருளுற்பத்தி உறவுகள் அவற்றை மீறி வளர்ந்து, குல மரபு உறவுகள் இரண்டாம் நிலைக்குச் செல்லுகின்றன.

இவ்விரண்டு வகையான உறவுகளுக்கும் பொருந்தாநிலை ஏற்பட்டு அவை ஒரு புரட்சிக்கே இட்டுச் சென்றன என ஏங்கெல்சு எழுதுகிறார். ஏங்கெல்சின் நூல், குலமரபு உறவுகள் நிலவிய காலத்திய சமூக நிறுவனங்களையும் அவற்றிலிருந்து பொருள் உற்பத்தி உறவுகள் மீறி வளர்ந்த காலத்தையும் சித்தரிக் கின்றது. பொருளாதார அமைப்பு இன்னும் வலுப்படாத, வெளிப்படையாகத் தன்னை அறிவித்துக் கொள்ளாத காலத் தின் சமூக உறவுகளை, அச்சமூக உறவுகளின் இயங்கியலை இந்நூல் பேசுகிறது. பண்பாடு, அரசியல், பொருளாதாரம், வரலாறு ஆகிய பல பரிமாணங்களை மிக நுட்பமாக ஏங்கெல்சு இந்நூலில் ஒன்றிணைக்கிறார். இது வேறு எந்த ஒரு மார்க்சு-ஏங்கெல்சு நூலிலும் காணக்கிடைக்காத சித்திரம்.

வரலாறு என்ற துறையும் மானுடவியல் என்றதொரு துறையும் இந்நூலில் சங்கமமாகின்றன. வரலாறு, பழங்கால மக்கள் கூட்டங்களின் வாழ்க்கையைப் பேசத் தொடங்கும் போது, அது மானுடவியலுடன் இணைவது தவிர்க்க முடியாது என்பது உண்iதான். இருப்பினும், மார்க்சியத்தின் முதலா சிரியர்களில் ஒருவரான ஏங்கெல்சே நேரடியாக இப்பணியை முன்னெடுத்துச் செய்துள்ளார் எனும் போது இந்நூலின் சிறப்பு பலமடங்கு உயர்கிறது.

மானுடவியல் என்ற ஒரு துறை ஐரோப்பாவில் தோற்றம் பெற்ற பல்வேறு சூழல்களுக்கு இடையில், குறிப்பிடத்தக்க அதன் ஒரு பங்களிப்பினைப் பற்றி இங்கு சொல்ல வேண்டும், 18-19ஆம் நூற்றாண்டுகளின் அறிவு முதல்வாதத்தின் (Rationalism) ஒற்றை நேர்கோட்டுப் போக்கைத் திசைதிருப்பி ஆய்வுலகின் கவனத்தைப் பண்பாட்டு ஆய்வுகளை நோக்கி இட்டு வந்ததில் மானுடவியலுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. அறிவு முதல்வாதிகள் முன்வைத்த அறிவுக்குப் பொருந்தாத பழம் சரக்குகளைப் புறம் தள்ளுங்கள் என்ற கோஷத்தை மௌனமாக மறுதலித்து நாட்டார் சமயங்கள், சடங்குகள், பழக்கவழக்கங்கள், வாய்மொழி வழக்காறுகள் ஆகியவற் றைப் பண்பாடு, சமூக உறவியல் மற்றும் பண்பாடு சார்ந்து விளக்கமளிக்கும் ஒரு துறையாக மானுடவியல் பரிணமித்தது. இந்த வகையில் அறிவு முதல்வாதத்தின் ஒற்றை நேர் கோட்டுப் போக்கிலிருந்து விலகிய ஒரு செழுமையான அணுகுமுறை மானுடவியலில் காணப்பட்டது. அறிவு முதல்வாதத்தை நெகிழ்வாக்கும் ஓர் இயங்கியல் மானுட வியலுக்கு அமைந்திருந்தது.

மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த நம்மைப் பொறுத்த மட்டில் மானுடவியலின் ஆய்வுப் பரப்பு, பெருமளவில் ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளைச் சார்ந்தது என்பது கவனிக்கத்தக்கது, அதாவது, ஐரோப்பிய அறிஞர் களால் அநாகரிகமானவை, வளர்ச்சி அடையாதவை. மூடத் தனமானவை, அழுக்கானவை என்றெல்லாம் புறம் தள்ளப் பட்ட வாழ்க்கைக் கூறுகள் மானுடவியலின் மறுமதிப்பீட்டுக்கு ஆட்படுகின்றன. மானுடவியலும் மார்க்சியமும் சந்தித்துக் கொள்ளும் இவ் அணுகுமுறையை “குடும்பம், தனிச்சாத்து...” நூலில் ஏங்கெல்சு தொடங்கி வைத்தார் என்று கூறவேண் டும். பல ஐரோப்பிய அறிஞர்கள் மார்க்சிய ஆதரவு நிலைப் பாடுகளுடன் மானுடவியல் ஆய்வுகளில் ஈடுபட்டனர்.

மூன்றாம் உலக நாடுகளின் பல்கலைக்கழகங்களில் மானுடவியல், நாட்டார் வழக்காற்றியல் துறைகள் விருப்புடன் பயிலப்படுகின்றன. பேராசிரியர்கள் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, நா. வானமாமலை, ஆ. சிவசுப்பிரமணியன் போன்றோர் இந்தியச் சூழல்களில் தமது மார்க்சிய நிலைப்பாடுகளுடன் ஊடும் பாவுமாக மானுடவியலின் பயன்பாட்டை உணர்ந் திருந்தனர். இன்றுவரை சமூக மானுடவியல், பண்பாட்டு மானுடவியல், பொருளாதார மானுடவியல், சூழல்சார் மானுடவியல், பெண்ணிய மானுடவியல் போன்ற துறைகள் இவ்வட்டாரத்தில் செழித்து வளர்ந்துள்ளன என்று கூறமுடியும்.

“மூலதனம்” நூலின் கறாரான பொருளாதார அணுகு முறையைக் கொண்டு, மூன்றாம் உலக நாடுகளின் பொரு ளாதார அரசியலைப் புரிந்துகொள்ளுதல் ஒருவிதமான மார்க்சியம். ஆயின், “குடும்பம், தனிச்சொத்து...” நூலில் பேசப்பட்டுள்ள விடயங்களைக் கொண்டு மூன்றாம் உலக நாடுகளின் கலாச்சார அரசியல், அடையாள அரசியல், மத அரசியல், சாதியம், அரசு எந்திரத்தின் வட்டாரச் செயல்பாடுகள் போன்றவற்றைப் பயில்வது இன்னொரு வகையான மார்க் சியம். மூன்றாம் உலக அரசியலில் இவை கூட்டாகப் பய ணிக்க முடியும்.

ஏங்கெல்சின் நூலிலிருந்து ஒரு மார்க்சியப் பெண்ணியத்தை உருவாக்க முடியும்; அது உருவாக்கப்பட்டுள்ளது. வரலாற் றின் முதல் வேலைப்பிரிவினையாக ஆண்-பெண் பிரிவினை அமைந்த போது, பாலியல் மண உறவுகள் புராதனச் சமூகத்தின் ஒழுங்கமைப்பை நிர்ணயித்த காலங்களில் அவற்றின் மொழியிலேயே ஆணாதிக்கமும் உருவான நிகழ்வை ஏங்கெல்சின் இந்நூலிலிருந்து வருவிக்க முடியும். வேலைப்பிரிவினைகளுக்கும் மண உறவு முறைகளுக்கும் பின்னால் ஆணாதிக்கச் சமூகத்தின் தனிச்சொத்துரிமை நலன்கள் அமைந்திருந்ததையும் ஏங்கெல்சு எழுதுகிறார்.

எனவே ஏங்கெல்சின் இந்நூலை சோசலிசப் பெண்ணியத் தின் முதல் நூலாகக் கொள்ளுவோர்கள் உண்டு, ஏங்கெல்சு குடும்ப அமைப்பின் பல்வேறு வரலாற்று வடிவங்களைப் பெண்-நலன்களின் நோக்கிலிருந்து அணுகியுள்ளார் என்ற கருத்து நிறுவப்பட்டுள்ளது. புராதனக் குடும்பம், நில உடைமைக் குடும்பம், பூர்ஷ்வா குடும்பம், உழைப்பாளிக் குடும்பம் எனக் குடும்ப அமைப்புகளை வித்தியாசப்படுத்திப் பார்க்கும் முறையியலை ஏங்கெல்சின் நூல் வழங்குகிறது.

உடைமைச் சமுதாயம் பெண்ணின் வரலாற்றுத் தோல்வியை நிர்ண யித்தது. பாலியல் உறவுகள் மற்றொரு சமூக ஏற்றத்தாழ்வின் காரணியாக மாறியது என்று ஏங்கெல்சு எழுதுகிறார். இந்திய, தமிழ்ச் சூழல்களில் கம்யூனிஸ்டுகள், கம்யூனிஸ்ட் அறிவாளிகள் குடும்பங்களை அவற்றின் வர்க்கப் பண்பு களைக் கொண்டு பகுத்து ஆய்வு செய்துள்ளார்களா? முதலாளியக் குடும்பம் என்பது இன்னும் கூடுதலாகச் சிக்கல் நிறைந்த ஓர் அமைப்பு.  தனி உடைமையால், பண உறவு களால் குடும்பம் சீரழிக்கப்படுவது முதலாளியச் சூழல்களில் உச்சக்கட்டத்தை எட்டுகிறது.

ஏங்கெல்சு இந்நூலின் முதற்பதிப்புக்கு 1884இல் எழுதிய முன்னுரையையும் நான்காம் பதிப்புக்கு 1891இல் எழுதிய முன்னுரையையும் மொழிபெயர்ப்பாளர்கள் தமிழ்ப் பதிப் போடு சேர்த்துத் தந்துள்ளார்கள். இம் முன்னுரைகள் சில குறிப்பிடத்தக்க மதிப்பீடுகளைக் கொண்டுள்ளன. மோர்கன் பற்றிய மதிப்பீடு முதன்மையானது. “நாற்பது ஆண்டுகளுக்கு முன் மார்க்சு கண்டுபடித்திருந்த வரலாற்றுப் பொருள்முதல் வாதக் கருத்தோட்டத்தைத்தான் மார்கன் தன்னுடைய வழியில் அமெரிக்காவில் மறுபடியும் கண்டுபிடித்தார்.”

இது மோர்கனின் நூல் குறித்து ஏங்கெல்சு வழக்கும் அற்புதமான, பெருந்தன்மையான மதிப்பீடு. இதே கருத்தை மார்க்சும் கொண்டிருந்தார் என்பதையும் ஏங்கெல்சு உறுதிப்படுத்து கிறார். மோர்கன் பற்றிய மதிப்பீட்டை மார்க்சு “மக்கள் முன்பாக வைத்து, அதன் மூலம் அவற்றின் முக்கியத்துவம் முழுவதையும் தெளிவாக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந் தார்.”

மார்க்சு, ஏங்கெல்சு ஆகியோரின் அறிவுப்புல நேர் மைக்கு இவ்வரிகளெல்லாம் சான்றாக நிற்கின்றன. இன்னும் கூடுதலாக, மோர்கன் பண்டைய உலகின் கூறுகளைக் கொண்டு, தற்கால முதலாளிய சமூகத்தின் அடிப்படையான பண்ட உற்பத்தி முறையை விமர்சனம் செய்துள்ளார் என்பதை எடுத்துக்காட்டுகிறார். “மட்டுமின்றி, கார்ல்மார்க்சு உபயோகப்படுத்தியிருக்கக் கூடிய சொற்களில் சமூகத்தின் எதிர்கால மாற்றத்தைப் பற்றிப் பேசியுள்ளார்.” நேரில் சந்தித்துக் கொள்ளாத ஓர் அறிஞரோடு, அவரது கண்டுபிடிப்புகளுக்காகவும் கருத்துக்களுக்காகவும் மார்க்சும் ஏங்கெல்சும் தோழமை பாராட்டும் பண்பை இங்கு காணுகிறோம்.

நன்றி : உங்கள் நூலகம், 2017 நவம்பர்

Pin It