வர்ணாஸ்ரமத்துக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற குரல் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளே இருந்தது
• ஜாதி அமைப்பை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று 1930லேயே கம்யூனிஸ்ட் கட்சி வேலைத் திட்டமாக ஏற்றது.
• ‘பிராமணர்’களுக்கு வர்க்க உணர்வு இருப்பது இல்லை என்றார் மூத்த தலைவர் விரேந்திர நாத் சட்டோபாத்தியாயா.
• மார்க்ஸ், தனது ‘மூலதனம்’ நூலிலேயே ‘மனு சாஸ்திரம்’, சூத்திரர்களின் மூளையில் திணிக்கப்பட்டதை சுட்டிக் காட்டுகிறார்.
குமரி மாவட்டம் குழித்துறையில் ஜன.24, 2021 அன்று ‘பெரியாரும் மார்க்சியமும்’ என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை இது.
எம்.சி.பி.அய்.(யு) என்ற மார்க்சிய கட்சி - தமிழ்நாட்டில் மார்க்சியர்கள் - பெரியாரியலை உள்வாங்கிக் கொள்ளவில்லை என்ற விமர்சன அறிக்கையை வைத்திருந்தது.
அதைத் தொடர்ந்து இக்கட்சி வெளியிட்டுள்ள கொள்கை அறிக்கையில், “சாதி - மதப் பிரிவினை சக்திகள் வலிமை பெற்றிருக்கும் இக்காலக்கட்டத்தில் பெரியார், அம்பேத்கரின் தேவையை கட்சி பூரணமாக உணர்ந்துள்ளது” என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
அந்தப் பின்னணியில் இந்தக் கருத்தரங்கையும் ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கொளத்தூர் மணி ஆற்றிய உரை.
பார்ப்பனியம் ஒரு பாசிசம்தான் என்ற கருத்துடைய கம்யூனிஸ்டுகளும் இருந்தார்கள். அதில் இருவர் பற்றிக் கூற வேண்டும். அப்துல் ராப் என்ற ஒருவர் இங்கிருந்து மூன்றாம் அகிலத்திற்கு பார்வையாளராகத் தான் போகிறார். பிரதிநிதியாகப் போகவில்லை. அவர் அறிக்கை ஒன்றை இங்கிருந்து அனுப்பி இருக்கிறார்.
அந்த அறிக்கையில் அவர் சொல்லுகிறார். “இந்திய தொழிலாளர்கள் ஒன்பது கோடி என்று மதிப்பிடப்பட்டது - பாகிஸ்தான் அப்போது இந்தியாவோடு (பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்) இருந்தது - அவர்கள் செய்யும் வேலையின் தன்மையின் காரணமாக அவர்கள் ஒரு வர்க்கம் என்று சொல்லலாம். ஆனால் அவர்கள் இந்தியாவில் எத்தனை ஜாதிகளும் சமயங்களும் உள்ளன வோ, அத்தனை ஜாதியினராகவும் மதத்தினராகவும் உள்ளனர்.
வைதீக பார்ப்பனர்களைப் போலவே அவர்களும் (தொழிலாளர்களும்) ஜாதிப் பிணைப்பில் உள்ளனர். தொழிலாளர்களைக் குறிப்பிடுகிறார். இந்த பாட்டாளி வர்க்கம் ஜாதி உணர்வை மட்டுமே கொண்டுள்ளது வர்க்க உணர்வை அல்ல. மறுபுறம், அது ஆழமான அறியாமையிலும் பெரும் மூடநம்பிக்கையிலும் ஆழ்ந்துள்ளது. இந்த பாட்டாளி வர்க்கம் விரும்புவது, சோசியலிசப் புரட்சி அல்ல. மாறாக தங்களை முதலாளிகள் ஆக்கும் புரட்சியைத் தான்” என அவ்வறிக்கையில் அப்துல் ராப் எழுதியுள்ளார்.
அவர் இன்னும் எழுதுகிறார். இந்த பாட்டாளி வர்க்கம், வர்க்க உணர்வு கொண்டது அல்ல. உண்மையிலேயே அது வர்க்கமே அல்ல. சோசியலிச கருத்துக்களை பரப்புரை செய்ய முன் வருபவரைக் கண்ட உடனே, அவர்களை நசுக்குவதில் முதலாவதாக இருப்பது இந்த தொழிலாளி வர்க்கம்தான். வீடோ அடுப்பங் கரையோ இல்லாத - ஜாதியோ மதமோ வரலாறோ, பாரம்பரியமோ இல்லாத 5.3 கோடி தீண்டத்தகாதவர்கள் தான் இந்தியாவின் உண்மையான பாட்டாளிகள். சோசியலிசத் துக்கான வளமான மண் இவர்கள்தான்.
ஒரு வர்க்கமாக அமையக்கூடியவர்கள் வர்க்க உணர்வு பெற்றுவிட்டால், இந்தியாவில் உள்ள சமூகத் தீமைகளுக்கும், பிற வர்க்கங்கள் அனைத்திற்கும் எதிரான சக்திவாய்ந்த ஆயுதமாக அமைவர். எனவே சாதீயத்திற்கு எதிராக அவர்களை பிணைத்து வைத்திருக்கிற வர்ணாசிரமத்திற்கு எதிராக நாம் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று அறிக்கை தருகிறார்.
இன்னொருவர் விரேந்திர நாத் சட்டோபாத்தியாயா. அவர் எழுதுகிறார். இந்த சமுதாயத்திலுள்ள அனைத்து வர்க்கங்களும் பாரம் பரியமான நான்கு முக்கிய வர்ணங்களான, பார்ப்பன, வைசிய, சத்திரிய, சூத்திரர் என்று பிரிக்கப்பட்டுள்ளனர்.
ஓர் ஏழைப் பார்ப்பனன் தனக்கும் தன் சொந்த சாதியை சேர்ந்த பணக்காரர்களுக்கும் பொதுவாக நலன்கள் இருப்பதாக உணர்கிறானேயன்றி, தனக்கும் தன் வர்க்கத்தை ஒத்த இன்னொரு ஜாதியை சார்ந்த ஏழைக்கும் பொது நலன்கள் இருப்பதாக உணர்வதே இல்லை. அப்படி தான் இங்கே தொழிலாளர் வர்க்கம் இருக்கிறது. அப்படி தான் அவர்களை வைத்திருக்கிறார்கள் என்று அவர் எழுதுகிறார்.
இந்த இரண்டு அறிக்கை சொல்வது மட்டு மில்லாமல், தோழர்களே, இன்னொரு செய்தி. அதோடு 1930-ம் ஆண்டில் இந்தியா குறித்து மூன்றாம் அகிலம் Draft Platform of the Action of the Communist Party என்று வழிகாட்டல் ஒன்றினைக் கொடுக்கிறார்கள், அதனை 1930களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது வேலைத் திட்டமாக ஏற்றுக் கொண்டது.
அந்த ஆவணம் கூறியது, ஜாதி அமைப்பை, - சீர்திருத்தப்பட்ட காந்திய வழியில் நிலவும் ஜாதி அமைப்பை - ஈவிரக்க மின்றி ஒழித்துக் கட்டுதல் என்பதே மூன்றாம் அகிலம் கொடுத்த அறிவுரை யாகும். விவசாய புரட்சி, பிரிட்டீஷ் ஆட்சி பலாத்காரமாக தூக்கி எறிதல் ஆகியவை மட்டுமே, உழைக்கும் பறையர்கள் அடிமைகள் ஆகியோரின் முழுமையான சமூக பொருளாதார பண்பாட்டு விடுதலைக்கு இட்டுச்செல்லும்.
எனவே ஜாதி அமைப்பை முக்கியமாக காந்திய வகையில் நிலவும் ஜாதி அமைப்பை, அதை ஒழிப்பதற்கு நீங்கள் முயற்சி செய்யவேண்டும் என்று சொல்கிறார்கள்.
அப்படி நடக்கவில்லை என்பதுதான் இங்கு நடந்தது. அப்பொழுது எப்படி அதை பெரியார் மாற்றிப் பார்த்தார் என்பதற்கு தான். அதில்லா மல், எங்கோ தொலை தூரத்தில் இருக்கிற மார்க்ஸ், எங்கோ இருந்து எழுதுகிறார். அவருக்கு இங்கே மனு சாஸ்திரம் சொல்வ தெல்லாம் தெரிந்திருக்கிறது.
இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய தன்னுடைய ‘மூலதனம்' நூலில் அவர் என்ன எழுதுகிறார் என்றால், சூத்திரன் பார்ப்பானையும் பசுவையும் காப்பாற்றுவதற்காக உயிர்த்தியாக செய்வதையே மோட்சத்திற்கு போவதற்கு வழி என்று நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று சொல்லி விட்டு, மனு சாஸ்திரம் அத்தியாயம் பத்து, சுலோகம் 62இல் சொல்லியிருக்கிறது என்று மார்க்ஸ் சொல்லியிருக்கிறார் ‘Das Capital’ Volume II - வில் எழுதுகிறார். ஆனால் இங்கிருக்கிறவர்கள் அதை ஏன் புரிந்துக் கொள்ளவில்லை என்று ஒரு கேள்வியாகத் தான் பார்க்கிறோம்.
இன்னொன்று, அப்படியே நாம் இங்கே பொறுத்திப் பார்த்து விட முடியுமா? பெரியார் அதைத் தான் அடிக்கடி கேட்டார். துருவக் காடுகளில் இருக்கிற ஊசி இலைக் காட்டை பார்த்துவிட்டு, இராமநாதபுரத்தில் நடுவதற்கு கம்யூனிஸ்ட்காரர்களெல்லாம் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள், என்று. அவர் சொல்கிறார்.
பனி பிரதேசத்தில் இருக்கிறதய்யா ஊசி இலைக்காடு. அதைக் கொண்டுவந்து இராமநாத புரத்தில் நடுவதென்றால், அது எப்படியய்யா வரும் அதைத் தான் அவர் சொல்கிறார். இன் னொரு எடுத்துக் காட்டு, லெனின் அவர்களின் துணைவியார் க்ருப்ஸ்கயா குறிப்பு ஒன்று எழுதுகிறார்.
“1860-லேயே மார்க்சின் நூல்கள் ரஷிய பாஷையில் மொழி பெயர்க்கப்பட்டுவிட்டன. ஆனால் ரஷிய நிலைக்கு ஏற்றவாறு மார்க்சிய நூல்கள் எழுதப்படவில்லை.
ஆனால் ‘ரஷியா வில் முதலாளித்துவ வளர்ச்சி’ என்னும் நூலை எழுதி, இந்த காரியத்தை லெனின் பூர்த்தி செய்தார்” என்று எழுதுகிறார். அதை அப்படியே இங்கு பொருத்திப் பார்க்க முடியவில்லை என்கிறார். அதுபோலவே பெரியார் சொன்னதைத் தான் இங்கு பொருத்திப் பார்க்கவேண்டும்.
விவசாய தொழிற்சங்கத்தை சேலத்தில் சிவதாபுரம் என்கிற ஊரில் பெரியார் கூட்டுகிறார். அந்தக் கூட்டத்தில் பேசுகிறார்:
“மார்க்சும் லெனினும் சதிக்கென்று ஒரு ஜாதி இல்லாத நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆதலால், அவர்கள் சதிகாரர்களின் சதிச் செயலுக்கும் தொழிலாளர் ஜாதி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அழுத்தப்பட்டு கிடப்பதற்கும் பரிகாரம் சொல்ல வேண்டிய அவசிய இல்லாதவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அது இல்லை.
சதிக்கென்றே ஒரு ஜாதி இங்கே இருப்பதைப் போல அவர்கள் நாட்டில் இல்லை. மார்க்சும் பார்க்கவில்லை லெனினும் பார்க்கவில்லை. ஆதலால் முதலாளி - தொழிலாளி பேதம் மட்டும் இல்லாமல் முதலாளித் தன்மையில் ஜாதி உயர்வு - தாழ்வு பேதம் நடப்பு இருக்கிற போதும், மார்க்ஸ் சொன்னபடி தான் செய்யவேண்டும், லெனின் என்ன சொன்னாரோ அதன்படி தான் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தால், என்ன அர்த்தம். இது சதிகார ஜாதிக்கு அனுகூலமாகத்தானே ஆகும்?” என்று பெரியார் கேட்கிறார்.
(இதைப் பேசிக் கொண்டிருந்தால், பார்ப்பானுக்குத் தான் அனுகூலமாக இருக்கும். இதைப் பேசினால் அவனுக்கு வசதிதான். என்னை தொடாமல் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள். ஒரு பிரச்சனையும் கிடையாது எங்களுக்கு, என்று இருந்து விடுவார்களே என்று அவர் கேள்வி வைக்கிறார்.
ஏனென்றால், எதனால் இந்த மாற்றம் என்பதற்கு, சில எதிர்பார்ப்புகள் தவறாகப் போய் விடுகின்றன.) அந்த நாட்டின் நிலைமைக்கு ஏற்ப ஏங்கல்ஸ் சொன்னார், “பாட்டாளி வர்க்கப் புரட்சி எல்லாம் முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் ஒரே சமயத்தில் நிறைவேற்ற முடியும்” என்று அவர் நினைத்தார். அதைத் தான் அங்கே ட்ராட்ஸ்கியும் சொல்லிக் கொண்டிருந்தார்.
பின்னாளில் அது மாறியது. லெனின் அதை மாற்றிக் கொண்டார். புதிய வரலாற்று நிலைமை களில் ஏகபோக முதலாளித்துவ காலப் பகுதியில் சோசியலிசப் புரட்சியானது ஒரு சில நாடுகளில் அல்லது தனிநாட்டில்கூட வெற்றி பெற முடியும் என்றார். அதை எதிர்த்து பேசிய ட்ராட்ஸ்கி தான் தனியாகப் போக ஆரம்பித்தார். அவர் Permanent revolution என்று சொன்னார். லெனின் தனியாகக்கூட நடத்த முடியும் என்று சொன்னார்.
அதற்குப் பின்னால் வந்த மாவோ இன்னும் வேறுபட்டவராக இருந்தார். அவர் நேபாளக் கல்விக் குழுவோடு பேசிய உரையாடல் ஒன்று, அது ஒரு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது, தமிழ் வடிவத்தை நான் சொல்ல விரும்புகிறேன்.
“நான் ஏற்கனவே சொன்னது போல், சாதாரண மக்களிடமிருந்து நாம் கற்றுத் தெரிந்ததைத் தவிர நம்மிடம் வியக்கத்தக்கது ஏதுமில்லை”. மாவோ சொல்கிறார். நேபாளத்திலிருந்து ஒரு கம்யூனிச கல்வியாளர் குழு ஒன்று போகிறது. அவர்களோடு விவாதிக்கிறார்.
“நாம் சிறிதளவு மார்க்சிய லெனினியம் கற்றி ருந்தாலும், மார்க்சிய லெனினியம் மட்டுமே பயன்படாது. Of course, we have learnt a little Marxism and Leninism, but Marxism and Leninism alone won’t do” என்று சொல்லுகிறார். நாம் சீனாவின் உண்மைகளை மற்றும் பண்புகளிலிருந்து சீனப் பிரச்னைகளை ஆராய்ந்தாக வேண்டும், என்பதை நான் கொள்கையாகக் கொண்டேன்.
நான் படித்தேன், உண்மைதான், அந்த கருத்து வைத்திருக்கிறேன், ஆனால் சீனாவின் நிலைகளிலிருந்து தான் இந்தப் புரட்சி தொடங்க முடியும் என்பதை அறிந்துக் கொண்டேன். மக்களிட மிருந்து தெரிந்துக் கொண்டுதான், போராட்டத்தை கட்டினேனே தவிர, வெறும் அதில் சொன்னதை அப்படியே நான் செய்யவில்லை, என்பதை நேபாளத்திலிருந்து போன போராட்டக் குழுவின் தத்துவ சிந்தனையாளர்களுக்காக அவர் சொல்லுகிறார்.
நீங்கள் உங்கள் நாட்டில் அதைச் செய்ய வேண்டுமென்றால், உங்கள் நாட்டு சூழலுக்காக மாற்றிக் கொள்ளுங்கள், நான் சொல்லுகிற அறிவுரைகளை எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று சொல்லி அனுப்புகிறார்.
- கொளத்தூர் மணி