anna periyar and karunanidhiபிரிட்டிஷ் ஆட்சி அதிகாரத்தில் பங்கு போட்டுக் கொண்ட பார்ப்பனர்கள், சமூக சீர்திருத்தச் சட்டங்களைக் கொண்டு வந்த நிலையில், ‘தேச பக்தர்களாகி’, ‘சுதந்திரப்’ போராட்டம் நடத்திய காங்கிரசுக்குள் புகுந்து கொண்ட வரலாறுகளைப் பார்த்தோம். எதிர்பார்த்தது போலவே, ‘சுதந்திரம்’ – பார்ப்பன - பனியாக்களுக்கானதாகவே இருந்தது. இதைத் தான் பெரியார் எச்சரித்தார். சுதந்திர நாளை துக்க நாள் என்றார். இந்தப் பின்னணியில் பாகிஸ்தான் எப்படி உருவானது என்ற வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.

முந்தைய பகுதி: ‘திராவிட நாடு’ கேட்டு காங்கிரசில் தீர்மானம் கொண்டு வந்தார் ராஜாஜி

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பா.ஜ.க. ஆட்சி வரை (7)

  • முஸ்லிம் லீக் - பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிய வேண்டும் என்ற கோரிக்கையை தொடக்கத்தில் வற்புறுத்தவே இல்லை. முழுமையான மாநில சுயாட்சி தான் தங்களது கொள்கை என்றும், முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தனி மாகாணங்களை உருவாக்கி ஒன்றுபட்ட இந்தியாவுக்குள் முஸ்லிம் மாகாணங்களுக்கு சுயாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும் என்றே வலியுறுத்தி வந்தது.
  • 1937இல் லக்னோவில் நடந்த மாநாடு; 1938இல் கராச்சியில் நடந்த மாநாடுகளில் மாகாண சுயாட்சியை வலியுறுத்தியே தீர்மானங்கள் போடப்பட்டன.
  • காங்கிரசில் இருந்த பார்ப்பனர்கள் காங்கிரசோடு இரண்டறக் கலந்து நின்ற ‘இந்து மகாசபை’யினர், இஸ்லாமியர்களோடு இணைந்து வாழ்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தியாவில் இந்து, இஸ்லாமியர் என்று இரு இனங்கள் உண்டு. இரு இனமும் இருவேறு தேசங்கள் என்று 1935இல் சாவர்க்கார் இந்து மகாசபை மாநாட்டில் வெளிப்படையாகவே பேசினார்.
  • 1937ஆம் ஆண்டு வரை முஸ்லிம்களுக்கு தனித் தொகுதி இருந்தது. (இந்தியாவிலேயே தேர்தலில் முதன்முதலாக தனித் தொகுதி ஒதுக்கீடு பெற்றவர்கள் முஸ்லிம்கள் தான்) அரசுப் பதவிகளில் தனி ஒதுக்கீடு, முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட மாகாணங்கள் என்ற உரிமைகளை அவர்கள் பெற்றிருந் தார்கள். ஒன்றுபட்ட இந்தியாவுக்குள் முழுமையான சுயாட்சி என்ற கோரிக்கையை அரசியல் சட்டம் உறுதி செய்தால் போதும் என்பதே ஜின்னாவின் கருத்து; தனிநாடு கோரிக்கையை நோக்கி ஜின்னாவை விரட்டியது காங்கிரஸ் கட்சியி லிருந்த மதவாதிகளும் - இந்து மகாசபையினரும் தான். நேருவுக்கும் இதில் பங்கு உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை. 1937ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நேரு மேற்கொண்ட முஸ்லிம் எதிர்ப்பு அணுகுமுறையே ஜின்னா வின் தனிநாடு கோரிக்கையை தீவிரமாக்கியது.

அந்தத் தேர்தல் முடிவுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த மாநிலங்களில் முஸ்லிம் களுக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் முஸ்லிம் லீக்கிற்கு சிறுபான்மையாக வாழ்ந்த மாநிலங்களில் முஸ்லீம் லீக்கிற்கு அதிக ஆதரவு கிடைத்தது. இந்த மாகாணங்களில் முஸ்லிம்கள் லீக் கட்சி சார்பின்றி சுயேச்சையாகவும் போட்டியிட்டனர். அவர்களைவிட முஸ்லீம் லீக்கினர் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர். அப்போது அய்க்கிய மாகாணம் என்று அழைக்கப்பட்ட உ.பி. மாநிலத்தில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றது. ஆறு பேர் கொண்ட அமைச்சரவை அமைத்தது. 1935ஆம் ஆண்டு சட்டப்படி முஸ்லிம்கள் எண்ணிக்கைக்கேற்ப அமைச்சரவையில் இடம் தந்தாக வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சியோ வெற்றி பெற்ற இறுமாப்பில் முஸ்லிம் லீக்கினருக்கு அமைச்சரவையில் இடம்தர மறுத்து விட்டது. அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் இப்படி திட்டமிட்டு முஸ்லிம் லீக்கைப் புறக்கணித்ததோடு தேர்தலில் தோற்றுப் போன முஸ்லிம்களுக்கும் சுயேச்சையாக போட்டியிட்ட முஸ்லிம்களையும் காங்கிரசில் சேர்த்துக் கொண்டு அமைச்சராக்கினார்கள். வெற்றி பெற்ற எல்லா முஸ்லிம் லீக்கினரும் கூண்டோடு காங்கிரசில் சேர்ந்தால், அமைச்சராக்கலாம் என்று நேரு திமிர்வாதம் பேசினார். ஜின்னா சொன்னார், “காங்கிரஸ் எங்களைக் கூட்டணி சேர அழைக்க வில்லை; தற்கொலை செய்ய அழைக்கிறது” - இதனுடைய விளைவுதான் ஜின்னா காங்கிரசின் பார்ப்பன இந்தியாவை இனியும் நம்ப முடியாது என்ற முடிவுக்குத் தள்ளப்பட்டார். பாகிஸ்தான் தனி நாடு முழக்கத்தை உயர்த்திப் பிடித்தார்.

1946இல் அரசியல் நிர்ணய சபை கூடியபோது 10 கோடி முஸ்லிம்களின் பிரதிநிதிகள் அதை புறக்கணித்தனர். வராமல் இருந்தால் போகட்டும் என்ற எண்ண ஓட்டமே நிர்ணய சபையில் மேலோங்கியிருந்தது. முஸ்லிம் லீக்கை சமாதானம் செய்து அரசியல் நிர்ணய சபைக்குள் கொண்டு வரலாம் என்று நிர்ணய சபை உறுப்பினர் எம்.ஆர். ஜெயகர் கொண்டு வந்த தீர்மானத்தை கடும் கோபத்துடன் சபை நிராகரித்தது. நேருவும் முஸ்லிம் எதிர்ப்பில் தீவிரமாகவே இருந்தார்.

இந்த வரலாற்றுப் பின்னணியில் பாகிஸ்தான் பிரிவினையின் மீது எழுந்த கோபம், அரசியலமைப்பு உருவாக்கத்திலும் எதிரொலித்தது. முஸ்லிம் லீக் மட்டுமல்ல; சோஷலிஸ்ட் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் அரசியல் நிர்ணய சபையில் இடம் பெறவில்லை. வயது வந்தோருக்கு வாக்குரிமை வழங்கி, தேர்தல் நடத்தி, அதற்குப் பிறகு அரசியல் நிர்ணய சபையை உருவாக்க வேண்டும் என்பதே சோசலிஸ்ட் கட்சி முன் வைத்த நியாயமான கோரிக்கை. இந்த நிலையில் அரசியல் நிர்ணய சபை காங்கிரஸ் கட்சியினர் நிறைந்த சபையாகவே இருந்தது. பார்ப்பனர்கள், நிலப் பிரபுக்கள், சுதேச சமஸ்தானப் பிரதிநிதிகள், இந்தி வெறியர்கள், நிறைந்த இந்த சபை பற்றி அரசியல் நிர்ணய சபை ஆலோசகராக செயல்பட்ட பி.என். ராவ், “அரசியல் நிர்ணய சபையினர் அனைத்து விவகாரங்களும் காங்கிரஸ் கட்சியின் சொந்த வீட்டு விவகாரகமாகவே கருதப்பட்டது என்று குறிப்பிடுகிறார். (The whole thing was treated as the family affair of the Indian National Congress) அதன் விளைவுகள் என்ன?

  • 1935ஆம் ஆண்டு பிரிட்டிஷ்காரர்கள் உருவாக்கித் தந்த சட்டத்தில் இடம் பெற்றிருந்த ‘கூட்டாட்சி’ என்ற வார்த்தை சுதந்திர இந்தியாவின் சட்டத்தில் காணாமல் போய்விட்டது. திட்டமிட்டே நீக்கப்பட்டது.
  • அம்பேத்கர் எந்த மாநிலமும் பிரிந்து போய்விடக் கூடாது என்பதற்காகவே ‘யூனியன்’ என்ற சொல்லை சேர்த்திருக்கிறோம் என்று வெளிப்படையாகவே அறிவித்தார். கூட்டாட்சி என்ற சொல்லை சேர்க்கக் கோரி கொண்டு வரப்பட்ட இரண்டு திருத்தங்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. (அதற்குப் பிறகு மொழி வழி மாநிலங்கள் குறித்து அவர் எழுதிய நூலில் இந்தியாவுக்கு தெற்கில் ஒரு தலைநகரம் கூடுதலாக வேண்டும் என்றும், வடநாடு பிற்போக்கானது; தென்னாடு முற்போக் கானது என்றும் எழுதி ஒரே இந்தியாவுக்குள் இருந்த முரண்பாடுகளை சுட்டிக் காட்டினார்)
  • இந்தியாவில் ‘யூனியன்’ என்கிற மத்திய அரசுதான் அழிக்க முடியாதது. ஆனால் மத்திய அரசோ மாநிலங்களை படைக்கிற ‘பிரம்மா’வாகவும், காக்கின்ற ‘திருமாலாக’வும் அழிக்கின்ற ‘சிவனாக வும்’ இருக்கிறது. மத்திய அரசுக்கு இத்தகைய அதிகாரங்கள் இருப்பதால் மாநிலங்கள் சம உரிமை படைத்தவையாக உருவாக்கப்பட வில்லை” என்கிறார், அரசியல் சட்ட ஆய்வாளர் அசோக்சந்தா (Federalism in India - நூல்).
  • மத்திய அரசு, மாநில அரசு அதிகாரப் பட்டியல் தயாரிக்கப்பட்டு மாநில அரசு உரிமைகளைப் பறிக்கும் பொதுப் பட்டியலையும் உருவாக் கினார்கள்.

‘சுதந்திரம்’ - பார்ப்பன பனியாக்களிடம் கைமாறிய பிறகு முதல் அடி வகுப்புவாரி உரிமை மீது விழுந்தது. 1920ஆம் ஆண்டு முதல் நீதிக் கட்சி ஆட்சிகளில் வளர்த்தெடுக்கப்பட்ட வகுப்புவாரி பிரநிதித்துவம் என்ற பங்கீட்டு உரிமையை எதிர்த்து பார்ப்பனர்கள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங் களிலும் வழக்குத் தொடர்ந்தது செல்லாது என்ற தீர்ப்பைப் பெற்றனர். அரசியல் வரைவுக் குழுவில் இடம் பெற்றிருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரே மரபுகளுக்கு மாறாக வகுப்புவாரி உரிமையை எதிர்த்து ஒரு வழக்கறிஞராக நேர் நின்று வாதாடினார். தமிழ்நாட்டில் பெரியார் போர்ச் சங்கு ஊதினார். தி.மு.க.வும் களத்தில் குதித்தது. முதன்முறையாக அரசியல் சட்டம் திருத்தப்பட்டு, சமூக கல்வி ரீதியான பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு உறுதிப்படுத்தப் பட்டது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே சென்னை மாகாணத்தில் மட்டும் அஞ்சல் துறை, துறைமுகம் போன்ற மத்திய அரசுக்கு உட்பட்ட துறைகளில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வந்தது. ‘சுதந்திர இந்தியாவில்’ ஒரே ஆண்டில் பார்ப்பனர்கள் நீதிமன்றம் சென்று இந்த உரிமையைப் பறித்தார்கள்.

1967ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் மாநிலங் களில் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் அதிகாரத்துக்கு வரத் தொடங்கின. அதற்கு முன் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிகளே ஆட்சி செய்த காரணத்தால் மாநில உரிமைகள் பற்றிய கவலையோ எதிர்ப்புகளோ எழவில்லை.

1967இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு சென்னை மாகாணத்துக்கு முதல்வர் அண்ணா, தமிழ்நாடு என்று பெயர் சூட்டியதோடு தமிழ்நாட்டிலிருந்து இந்தியை விரட்டி இரு மொழிக் கொள்கையை அறிவித்தார். வேத மந்திரங்களை மறுக்கும் திருமணங்களான பெரியார் அறிமுகப்படுத்திய சுயமரியாதைத் திருமணம் முன் தேதியிட்டு சட்ட வடிவம் பெற்றது. தமிழகம் தொழில் துறையில், நிதித் துறையில், விவசாயத் துறைகளில் தொடர் வண்டி சேவை போன்ற போக்குவரத்துத் துறைகளில் புறக்கணிப்பதற்கு எதிராக உரிமைக் குரல்கள் அரசு சார்பில் வெடித்துக் கிளம்பின. மாநில சுயாட்சி முழக்கங்கள் கேட்கத் தொடங்கின.

(தொடரும்)

- விடுதலை இராசேந்திரன்