காஷ்மீரைப் பாருங்கள்!

நம்மால் அறியப்பட்ட காஷ்மீர்!

நாம் அறிய வேண்டிய காஷ்மீர்!

‘காஷ்மீரைப் பாருங்கள்’ என்ற தொடர் கட்டு ரையின் முதலாவது பகுதி 2015 சூலை இதழில் வெளிவந்தது. இனி, இது இரண்டாவது பகுதி.

முதலாவது பகுதியின் முடிவில், “இந்த நிலையில் தான் 1947 ஆகத்து 14 அன்று பாக்கித்தானுக்கும், ஆகத்து 15 அன்று இந்தியாவுக்கும் சுதந்தரம் அளிக் கப்பட்டு - இந்தியா, பாக்கித்தான் என்னும் புதிய இரு நாடுகள் உருவாயின” என நாம் குறிப்பிட்டிருந்தோம்.

இதன் பின்னணியில் உள்ள பல பொருந்தாத அரசியல் நிகழ்வுகளை நாம் அறிதல் நல்லது.

அன்றைய இந்திய சுதந்தரம் பற்றிய - இரண்டு நாடுகளாக இந்தியாவைப் பிரிப்பது பற்றிய சட்டம், பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் 18-7-1947இல்தான் நிறைவேற்றப்பட்டது. இதுபற்றிய முதலாவது அறி விப்பை, பிரிட்டன் 3-6-1947இல் வெளியிட்டிருந்தது.

ஆனால் இந்தியாவில் என்ன நடந்தது?

சுதந்தர இந்தியாவுக்கான இந்திய அரசமைப்பை எழுதுவதற்கான செயலை, 9-12-1946லேயே -  அதாவது சுதந்தரம் வருவதற்கு 248 நாள்களுக்கு முன்னரே நேரு தலைமையிலான காங்கிரசு அரசினர் தொடங்கிவிட்டனர்.

அதாவது இந்திய மத்திய சட்டமன்றத்துக்கு (Central Legislative Assembly) 1946இல் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும், மாகாண சட்டப் பேரவை களுக்கு (Provincial Legislative Councils) மாகாண மக்களால் 1946இல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளையும் கொண்ட அவை - சுதந்தர இந்தியா வுக்கான அரசமைப்பை எழுதுவதற்கான அவையாக (Constituent Assembly) மாற்றப்பட்டு, இந்திய அரசமைப்பை எழுதத் தொடங்கிவிட்டனர்.

இது காங்கிரசுக் கட்சி 1934 முதல் அறிவித்த வாக்குறுதிக்கு முற்றிலும் எதிரானது. மேலும், உல கத்தில் சுதந்தரம் பெற்ற எந்த ஒரு நாட்டிலும் நடக் காதது. பிள்ளை பிறப்பதற்கு முன்னரே இருக்கிற சொத் துக்களைப் பிள்ளைகளுக்கு எப்படிப் பிரித்துக் கொடுப் பது என்று சொத்துப் பிரிவினை ஆவணம் எழுது வதற்கு ஒப்பானது.

இந்த மோசடியை அன்றே அம்பலப்படுத்தியவர் பெரியார் ஈ.வெ.ரா. ஒருவரே ஆவார்.

மேலும், 8-1-1940இல் பம்பாயில் டாக்டர் அம்பேத்கருடனும் தம் குழுவினருடனும் முகமது அலி ஜின் னாவைக் கண்டு பேசிய ஈ.வெ.ரா., “ஒரே அரச மைப்பு அவையை உருவாக்கும் ஏற்பாட்டை எப் போதும் ஒத்துக்கொள்ளாதீர்கள்” என்று ஜின்னாவிடம் ஈ.வெ.ரா. கோரியிருந்தார் என்பதும், அதுவரையில் தனிநாடு கோரிக்கையை முன்வைக்காமல் இருந்த ஜின்னா, 1940 மார்ச்சு 23இல் லாகூரில் கூடிய முஸ்லிம் லீக் மாநாட்டில் தான் தனிநாடு கோரினார் என்பதும் உண்மை வரலாறு.

இனி காஷ்மீரில் நடந்தது பற்றிப் பார்ப்போம்.

பண்டித நேரு முதலாவதாக காஷ்மீரில் சுற்றுப் பயணம் சென்ற போது, ஷேக் அப்துல்லாவுடன் சேர்ந்தே பயணம் செய்தார்; கூட்டங்களில் பேசினார்.

நேருவின் முன்னோர் 18ஆம் நூற்றாண்டிலேயே காஷ்மீரிலிருந்து வெளியேறி அலகாபாத்தில் குடி யேறிவிட்டனர். ஆனாலும், “காஷ்மீர் என்னுடைய பூர்விக மண்” என்று, காஷ்மீரில் கூட்டங்களில் பேசும்போது நேரு குறிப்பிட்டார். “நேருவின் இந்த பூர்விக மண் பற்றுத்தான்” காஷ்மீர் சிக்கலுக்கு முதலாவது அடிப்படை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

இரண்டாவது முறையாக, 1944இல் ஜின்னா காஷ்மீரில் பயணம் மேற்கொண்டார். அவர் மன்னர் அரிசிங்கைச் சந்திக்க முயன்றும் முடியவில்லை.

அச்சமயம் ஷேக் அப்துல்லா காஷ்மீரில் செல் வாக்கு உள்ள ஒரே தலைவராக இருந்தார்.

அந்நேரம் அரிசிங்கிடம் பிரதம மந்திரியாக இருந்த இராமச்சந்திரகக், அரிசிங் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை முடக்குவதில் தீவிரம் காட்டினார். ஷேக் அப்துல்லா தன் பேரில் நடவடிக்கை வரும் என அஞ்சி, தக்க ஆலோசனை பெறுவதற்காக நேருவைச் சந்திக்க தில்லிக்குப் புறப்பட்டார். ஆனால் வழியி லேயே அப்துல்லா கைது செய்யப்பட்டார். அவருடைய கட்சியின் மற்ற தலைவர்கள் தப்பித்து லாகூருக்கு ஓடிவிட்டனர்.

கைதாக்கப்பட்ட ஷேக் அப்துல்லாவுக்கு வாதாடுவதற்காக, நேரு காஷ்மீருக்குப் புறப்பட்டார்; ஆனால் காஷ்மீரில் நுழைந்தவுடன் நேரு கைது செய்யப் பட்டார். காங்கிரசுப் பெருந்தலைவர்களும் பிரிட்டிஷ் பெரிய அதிகாரிகளும் வற்புறுத்திய பிறகு, நேருவை விடுதலை செய்தனர். அவர் அப்துல்லாவைச் சந்தித்தார். ஆனால் நேருவைச் சந்திக்க அரிசிங் மறுத்து விட்டார்.

அரிசிங் இடம் பிரதமராக இருந்த இராமச்சந்திர கக் என்கிற காஷ்மீரி - இந்தியா, பாக்கித்தான் என்கிற இரண்டு நாடுகளில் எதனோடும் இணையாமல், “தனிநாடாகவே காஷ்மீர் இருக்கலாம்” என்கிற எண்ணத்தை அரிசிங் மனதில் ஊன்றினார்.

ஆனால் காஷ்மீர் கள நிலைமை அதற்கு நேர் மாறாக இருந்தது.

அதாவது டோக்ரா அரசக் குடும்ப ஆட்சி உருவான காலம் தொட்டே, பூஞ்ச் பகுதி மக்கள் அரசுக்கு எதிராக இருந்தனர். அரிசிங் ஒரு ‘கொடுங்கோலன்’ என்றே பூஞ்ச் பகுதி மக்கள் கருதினர். அது உண்மையுங்கூட.

மேலும் இரண்டாம் உலகப்போரில் சண்டையிட காஷ்மீரிலிருந்து அனுப்பப்பட்ட 71,667 போர் வீரர் களில், 60,000 பேருக்கு மேற்பட்ட எண்ணிக்கை யினர் பூஞ்ச், மீர்பூர் பகுதிகளிலேயே இருந்தனர். இவர்களிடமிருந்த ஆயுதங்கள் மன்னரால் பறிக்கப் பட்டிருந்தன. எனவே இவர்கள் அரிசிங் ஆட்சி மீது வெறுப்படைந்தனர்.

அரிசிங் ஆட்சியில் சட்ட அதிகாரியாக இருந்த முகமது இப்ராஹிம்கான் என்கிற இளைஞர் இந்த நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு, 2 மாத காலத்தில் 50,000 பேர் கொண்ட ஒரு படையையே திரட்டிவிட்டார். உடனே அரசருக்கு எதிரான போராட்டம் வெடித்தது.

அரசரின் படைகள் மக்களைச் சுட்டுக் கொன்றன.

ஆனாலும் மக்களைக் காப்பாற்ற விரும்பிய முகமது இப்ராஹிம் கான், பாக்கித்தான் அரசிடமிருந்து ஆயுத உதவி கோரினார். 500 துப்பாக்கிகள் கேட்ட அவருக்கு-4,000 துப்பாக்கிகளை, ஜின்னாவுக்குக் கூடத் தெரியாமல், பாக்கித்தான் அதிகாரிகள் அனுப் பினர்.

இந்தியாவும் காஷ்மீரும் அதிர்ச்சி அடைந்தன.

இந்த இக்கட்டான நிலைமையிலிருந்து மீளுவ தற்கு அரிசிங்குக்கு இருந்த ஒரே வழி ஷேக் அப்துல் லாவை சிறையிலிருந்து விடுவித்து, அவரை அரசுக்கு ஆதரவாளராக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பது தான். அவ்வாறே முடிவு செய்யப்பட்டது. அதற்கு அப்துல்லாவும் இணங்கினார். அவர் 9-9-1947இல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

அரிசிங்கின் ஆதரவாளரான ஷேக் அப்துல்லா வுக்கு, பாக்கித்தான் பெருநில உடைமைக்காரர்களும் பணக்காரர்களும் அழுத்தம் தந்து காஷ்மீரை பாக்கித் தானுடன் சேர்த்துவிட முயலும் படித்தூண்டினர்; மேலும் காஷ்மீரில் அப்போதே நிலங்களை வாங்கிப் போடவும் அவர்கள் எத்தனித்தனர். ஷேக் அப்துல்லா, குலாம் முகமது சாதிக் மூலம் “இப்போது அவசரப்பட வேண்டாம்” என்று, பாக்கித்தான் பிரதமர் லியாகத் அலி கானுக்குச் செய்தி அனுப்பினார்.

“ஷேக் அப்துல்லா ஒரு இந்திய ஏஜெண்ட்” என்று பாக்கித்தான் கணித்தது.

அதேபோல், இந்தியாவின் பக்கம் நிற்கவே ஷேக் அப்துல்லா முடிவு செய்தார். இந்த  நேரத்தில் குசராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா பகுதியிலிருந்த ஜுனாகரை ஆண்ட சுல்தான் பாக்கித்தானுடன் சேர விரும்பினார். ஜுனாகர் மக்கள், சுல்தானின் முடிவை எதிர்த்தனர்.

“பாக்கித்தானோடு - காஷ்மீர்; இந்தியா வோடு - ஜுனாகர்” என்று எல்லோரும் பேசத் தொடங்கினர்.

இதைப் புரிந்துகொண்ட இந்திய அரசு, காஷ்மீருக்கு வரும் அனைத்துப் போக்கு வரவு வசதிகளையும் நிறுத்தியது; குறிப்பாக உணவுப் பொருள்கள், பெட் ரோல், உப்பு போன்ற பொருள்களைப் பாக்கித்தான் சாலைகள் வழியாக அனுப்ப வேண்டும் - எனவே இது இப்படியே தடைப்பட்டு நிற்க இந்திய அரசினர் திட்டமிட்டனர்.

பாக்கித்தானின் இந்நிலைமையை அரிசிங் கண்டித்தார்; பயன் இல்லை.

இந்தச் சூழலில் 15-10-1947 அன்று, அரிசிங் அரசின் புதிய பிரதமராக மெஹர் சந்த் மகாஜன் பொறுப்பேற்றுக் கொண்டார்; இராமச்சந்திர கக் மாற் றப்பட்டார்.

இப்போது, “தனி ஜம்மு-காஷ்மீர் தேசமாக இருப்போம்” என்று சொல்லிக் கொண்டிருந்த அரிசிங், “இந்தியாவோடோ அல்லது பாக்கித்தானோடோ சேர்ந்து கொள்ளலாம்” என்று மனம் மாறியிருந்தார்.

“எந்த நாட்டுடன் சேருவது என்பது பற்றி மக் களின் கருத்தை அறிய ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தலாம்” என்பதற்குச் சம்மதிக்கும் அளவுக்கு அரிசிங் மாறியிருந்தார். ஆனாலும் அதற்கு ஒரு தடை இருந்தது.

“பொது வாக்கெடுப்பின் முடிவு எதுவாக இருந் தாலும்-அதற்குப் பிறகும் இந்தியாவிலிருந்து காஷ்மீருக்கு வரவும் போகவும் தடையற்ற சாலைப் போக்கு வரவு வசதி செய்து தர வேண்டும்” என்பதே அந்தத் தடை.

காஷ்மீரின் புதிய பிரதமர் மகாஜனுடன் பேசிட, பாக்கித்தான் பிரதமர் லியாகத் அலிகான் தம் பிரதி நிதிகளை அனுப்பினார். ஆனால் மகாஜன், அவர் களைச் சந்திக்க மறுத்துவிட்டார். ஏன்?

பாக்கித்தான் எல்லையில் காஷ்மீருக்கு எதிராகக் கலவரங்களைத் தூண்டிவிட்டு விட்டு, ஒன்றுமே தெரியாதது போல் நட்புப் பாராட்டுவது சரி அல்ல என்று கூறிவிட்டார். மேலும், “உடனடியாகக் கலவரங்களை நிறுத்தாவிட்டால், அதை  அடக்க அண்டை நாடுகளிடம் இராணுவ உதவி கோரப்படும்” என்று எச்சரித்து லியாகத் அலிகானுக்கு மகாஜன் ஒரு மடலும் அனுப்பி னார்.

(தொடரும்)

Pin It