காங்கிரசுத் தலைவர் ப. சிதம்பரம் சொன்னது என்ன? பரூக் அப்துல்லா கோருவது என்ன?

பிரதமர் மோடியின் கூற்று பொய்யானது

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு என்று தனி அரசமைப்புச் சட்டம் உண்டு. அது ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்ட அவையால், 17-11-1956இல் நிறைவேற்றப்பட்டது.

அது, இந்திய அரசமைப்புச் சட்டம் விதி 370 இன்படி ஜம்மு-காஷ்மீருக்குத் தனி உரிமையை வழங்கியது.

அந்தத் தனி உரிமை என்பது ஜம்மு-காஷ் மீருக்குப் பிரதமர் உண்டு; குடிஅரசுத் தலைவர் உண்டு; தனிக்கொடி உண்டு.

இவ்வளவு தனி உரிமைகளையும், பிரதமர் நேரு பறித்துக் கொண்டார். அப்போது முதற்கொண்டு, ஜம்மு-காஷ்மீர் மக்கள் அந்தத் தன்னுரிமையை முழுவதுமாகத் திருப்பிக் கேட்கிறார்கள்.

ஆனால் நாளது அளிக்க வரையில் இந்திய அரசு அந்த உரிமையை அளித்திட மறுத்து வருகிறது.

காங்கிரசுக் கட்சி ஆட்சி 2014 வரை மறுத்தது. பாரதிய சனதாக் கட்சி ஆட்சி 2014 முதல் மறுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டுக் காங்கிரசுத் தலைவர் ப.சிதம்பரம், 28.10.2017 சனிக்கிழமை, குசராத்தில், ராஜ்கோட்டில், செய்தியாளர்களிடையே பேசும் போது பின்வரும் கருத்தைக் கூறியுள்ளார்.

“ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும். அதேவேளையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370 ஆவது பிரிவின்படி, காஷ்மீருக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பாக, ஜம்மு-காஷ்மீர் மக்களுடன் கலந்துரையாடினேன். அவர் களில் பெரும்பாலோர் காஷ்மீருக்குத் தன்னாட்சி வழங்கப்பட வேண்டும் என்று கூறினர். அதுவே என் விருப்பமாகவும் உள்ளது” என்று கூறியிருந்தார்.

ப. சிதம்பரம், “ஜம்மு-காஷ்மீர் நாட்டைத் தனிநாடு ஆக்கிடுங்கள்” என்று கூறவில்லை.

இச்செய்தி அவருடைய சொந்தக் கருத்து என்று காங்கிரசுத் தலைவர்கள் கூறுகிறார்கள். அதையும் ப. சிதம்பரம் மறுக்கவில்லை.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, 29.10.2017 ஞாயிறு அன்று, பெங்களூரில் வானூர்தி நிலையத்தில் பாரதிய சனதாக் கட்சித் தொண்டர்களிடையே பேசும் போது, “காங்கிரசுத் தலைவர்கள், காஷ்மீரிகள் சுதந்தரம் (ஆசாதி) கேட்கி றார்கள் என்று பேசுகிறார்கள் என்று பொத்தாம் பொதுவாகக் கூறுகிறார். இது இந்திய நாட்டைக் காப்பாற்றிப் போராடும் இராணுவத்தை அவமானப்படுத்துவது ஆகும்” என்று இட்டுக்கட்டிப் பொய் பேசுகிறார்.

பிரதமர் மோடி கூறுவது பொய். ஏன்?

ஷேக் அப்துல்லாவின் மகனும், காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரசுக் கூட்டில் இந்திய மத்திய அரசில் அமைச்சராக இருந்தவருமான பரூக் அப்துல்லா, 15 ஆண்டுகளுக்குப் பிறகு 29.10.2017 ஞாயிறு அன்று ஸ்ரீநகரில் கூடிய, தம் தேசிய மாநாட்டுக் கட்சிப் பிரதிநிதிகள் 1000 பேர் கொண்ட கூட்டத்தில் பேசிய போது, “ஜம்மு-காஷ்மீர் மக்கள் இந்தியாவின் பகுதியாக இருக்கிறோம்; இனியும் இருப்போம். ஆனால் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-இன்படி, எங்களுக்கு முழுத் தன்னாட்சியைத் திருப்பிக் கொடுங்கள். அதுவே எங்கள் கோரிக்கை” என்று உறுதிபடக் கூறிவிட்டார்.

இதுவே இன்று வேண்டப்படும் தீர்வு.

அதை விட்டு விட்டு, காங்கிரசு ஆட்சியில் 7 இலட்சம் கொண்ட இந்தியப் படையை நிறுத்தி ஜம்மு-காஷ்மீர் மக்களை அடக்கி ஆண்டதும்-இப்போது அதைவிடக் கூடுதலான எண்ணிக்கையில் இந்தியப் படை வீரர் களை அனுப்பி ஜம்மு-காஷ்மீர் மக்களை அடக்கி வைப்பதும், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி மூலம் ஜம்மு-காஷ்மீர் மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்திட இந்திய அரசு ஏற்பாடு செய்திருப்பதும் தீர்வு ஆகமாட்டா.

ஜம்மு-காஷ்மீருக்கு, முழுத் தன்னாட்சி (Full Autonomy) அளித்திடுங்கள்!

தமிழகத்துக்கு முழுத் தன்னாட்சி அளித்திடுங்கள்.

ஒவ்வொரு இந்திய மொழி மாநிலத்துக்கும் முழுத் தன்னாட்சி அளித்திடுங்கள்!

இந்தியாவை உண்மையான கூட்டாட்சியாக அமைத் திடுவோம், வாருங்கள்!

07-01-2018இல் நடைபெறும் சென்னை கூட்டாட்சி மாநாட்டுக்கு, அனைவரும் வாருங்கள்!

Pin It