வல்லபாய் பட்டேலை விமர்சிப்பது கட்சியின் கொள்கைக்கு எதிரானது என்று கூறி மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கை கட்சியிலிருந்து நீக்கிவிட்டது பாரதிய ஜனதா. காந்தியை இழிவுபடுத்திவிட்டு, பா.ஜ.க.வில் இருக்க முடியும். ஆனால், பட்டேலை குறை கூற முடியாது; அதுதான் பா.ஜ.க.

1947 இல் பிரிந்து போன பாகிஸ்தானுக்கு காரணமாக இருந்தது ஜின்னாவா? நேருவா? பட்டேலா? என்று பா.ஜ.க. பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறது. குற்றவாளி ஜின்னா அல்ல என்கிறார் ஜஸ்வந்த் சிங். நேருவும், பட்டேலும் தான் குற்றவாளி என்று கூறி, நூல் ஒன்றையும் எழுதினார். அதற்காகவே கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜின்னாவை அவர் புகழ்வது பற்றி கவலை இல்லை. ஆனால் பட்டீலை குறைகூறக் கூடாது என்கிறது, பா.ஜ.க. இது ஜின்னா மீது பா.ஜ.க. காட்டும் மரியாதை என்று எவரும் தவறாகக் கருதிவிடக் கூடாது. ஏற்கனவே இப்படி ஜின்னாவைப் புகழ்ந்து பேசி அதன் காரணமாக ஆர்.எஸ்.எஸ். கண்டனத்துக்கு உள்ளாகி, கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகி, மீண்டும் ‘பாவமன்னிப்பு’ பெற்றவர் அத்வானி. எனவே, அத்வானியைக் காப்பாற்றுவதற்காக ஜின்னாவைப் புகழ்வதையும் பா.ஜ.க. அங்கீகரித் துள்ளது என்பதே உண்மை!

இது தொடர்பாக ஜஸ்வந்த்சிங் எழுதியுள்ள நூலை காங்கிரஸ் கட்சியும் எதிர்த்துள்ளது. நரேந்திர மோடி இந்த நூலை குஜராத்தில் தடை செய்து விட்டார். இந்தியா முழுதும் தடை செய்ய வேண்டும் என்கிறார், வெங்கய்யா நாயுடு!

உண்மையில் பாகிஸ்தான் பிரிவினைக்கு யார் காரணம் என்று கேட்டால், இந்தியாவின் அதிகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் நிறுத்திக் கொண்டு விட்ட பார்ப்பன - பனியாக்கள் தான். இவர்களின் இந்து - பார்ப்பனப் பிடியின் கீழ் சிக்கிக் கொண்டு இரண்டாம் தர குடிமக்களாகிட முஸ்லீம்கள் தயாராக இல்லை என்பதே பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணம் என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

பல்வேறு மொழி கலாச்சாரங்களைக் கொண்ட பல்வேறு தேசங்களை உள்ளடக்கிய உபகண்டமே இந்தியா. மன்னராட்சிக்கு உட்பட்ட சுமார் 600 ‘சமஸ்தானங்களும்’ அதில் இருந்தன. நேருவும், பட்டேலும் இந்த கலாச்சார வேறுபாடுகளை அங்கீகரிக்காமல் ‘ஒரே இந்தியா’ என்ற கற்பனையில் மூழ்கிக் கிடந்தனர்.

பிரிட்டிஷ் ஆட்சியில் முஸ்லீம்களுக்கு உரிய அரசியல் உரிமைகள் (தனித் தொகுதிகள்) வழங்கப்பட்டிருந்தன. அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதங்களில் பட்டேலும், ராஜகோபாலாச்சாரியும் சட்ட ரீதியாக, இந்த உரிமைகள் அவர்களுக்கு கிடைக்கப் பெறாமல், நீர்த்துப் போகச் செய்துவிட்டனர். 1946-47 இல் இந்தியாவின் இடைக்கால அமைச்சரவையில் காங்கிரசும், முஸ்லீம் லீக்கும் இடம் பெற்றிருந்தன. அப்போது, ஒவ்வொரு பிரச்சினையிலும் ஜின்னா, காங்கிரசாரின் முரட்டுத்தனத்தோடு போராட வேண்டியிருந்தது. அந்த அமைச்சரவையில் முஸ்லீம் லீக்கைச் சார்ந்த லியாகத் அலி நிதியமைச்சராக இருந்தார். அவரது நேர்மையான கண்டிப்பான நிர்வாகம் பட்டேலுக்கு கசப்பை உருவாக்கியது.

லியாகத் சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில் பெரும் தொழிலதிபர் களுக்கு கடுமையாக வரிகளை விதித்தபோது காங்கிரசுக்குள்ளேயே இருந்த சோஷலிஸ்டுகள் வரவேற்றாலும், பனியாக்களின் பாது காவலராக இருந்த பட்டேல் ஆத்திரமடைந்தார். பெரும் தொழிலதிபர் களில் முஸ்லீம்கள், பார்சிகள் இருந்தாலும்கூட, பிர்லாக்களுக்கு எதிராகவே இந்த வரி விதிக்கப்பட்டதாகவும் அவர்கள் எல்லாம், காங்கிரசுக்கு நன்கொடை வழங்கக்கூடியவர்கள் என்றும், பட்டேல் வகுப்புச் சாயம் பூசினார்.

இந்தியாவின் ஒவ்வொரு பிரதேசத்துக்கும் முழுமையான சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என்பதே ஜின்னாவின் கருத்து. நெகிழ்ச்சிப் போக்கோடு மாநிலங்கள் செயல்படவேண்டுமே தவிர, “வலிமை மிக்க ஒற்றை இந்தியாவாக” இறுகி விடக் கூடாது என்று தொடர்ந்து ஜின்னா முன்வைத்த நியாயங்களை நேருவும், பட்டேலும் ஏற்கவில்லை. ‘இந்து மகாசபை’, முஸ்லீம்கள் தனித் தேசத்தவர் என்றே தீர்மானம் போட்டது; அதன் பின்னரே ஜின்னா, தனிநாடு கேட்கத் தொடங்கினார். ஆக, பார்ப்பன-பனியா அதிகார மய்யத்தின் இந்த அதிகாரக் குவிப்புக்குள் அடங்கிப் போக மறுத்ததின் விளைவுதான் பாகிஸ்தானின் உருவாக்கம்.

இந்து மதம் ஒன்று தான், பிற மதங்களையும் வெறுக்காத சகிப்புத் தன்மை கொண்டது என்று ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் குருமூர்த்தி, அண்மையில் ஒரு ஆங்கில நாளேட்டில் எழுதியிருக்கிறார். அது உண்மையானால், இந்துத்துவ கட்சியான பா.ஜ.க.வின் இந்த நடவடிக்கைகள் அதன் சகிப்புத்தன்மையையா பிரதிபலிக்கிறது? என்று கேட்க விரும்புகிறோம்.

இதில் காங்கிரசும், பா.ஜ.க.வும் இப்போது ஒரே குரலில் பேசுகின்றன. பட்டேலையும் நேருவையும் உயர்த்திப் பிடிப்பதில் இருவரும் கரம் கோர்த்து நிற்கிறார்கள். மதச்சார்பின்மை - இந்துத்துவம் என்ற முகமூடிகள் இந்திய தேசியம் என்று வரும்போது கழன்றுவிடுகின்றனவே!

இவர்களால் இனி இந்தியாவையும் ஒட்ட வைக்க முடியாது; இந்திய தேசியத்தை உயர்த்திப் பிடிக்கும் கட்சிகளையும் ஒட்டி வைக்க முடியாது! இதை கல்லில் செதுக்கி வைத்துக்கொள்ளட்டும்!

Pin It