அரசுக்கு எதிராகப் போர் தொடுப்பதாக என் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு டெல்லி காவல்துறைக்கு நீதிமன்றம் இன்று வெளியிட்டுள்ள ஆணைக்கு எனது எதிர்வினை: ஒரு வேளை ஜவஹர்லால் நேரு மீது கூட அவர்கள் குற்றச்சாட்டைப் பதிவு செய்யக்கூடும். காஷ்மீர் குறித்து அவர் (நேரு) பேசியது.
1. இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு பாகிஸ்தான் பிரதமருக்கு அனுப்பிய தந்தியில் கூறியதாவது: “இந்த நெருக்கடியான நிலையில் காஷ்மீருக்கு உதவுவது எந்த வகையிலும் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் நோக்கத்தில் அந்நாட்டின் மீது செல்வாக்கு செலுத்துவதற்காக அல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். தகராறுக்குட்பட்ட ஒரு நிலப்பகுதி அல்லது மாநிலத்தை இணைப்பது என்ற கேள்வி அம்மக்களின் விருப்பப்படிதான் முடிவு செய்யப்பட வேண்டும் என்ற எமது கருத்தைத் திரும்பத் திரும்ப பகிரங்கமாக வெளியிட்டு வருகிறோம். அத்துடன் இக்கருத்தையே பின்பற்றுகிறோம்.” (தந்தி எண்.402 பிரதமர் 2227 நாள் 27 அக்டோபர் 1947. பாகிஸ்தான் பிரதமருக்கு அனுப்பப்பட்ட இதே தந்தி பிரிட்டிஷ் பிரதமருக்கும் அனுப்பப்பட்டது).
2. பாகிஸ்தான் பிரதமருக்கு ஜவஹர்லால் நேரு அனுப்பிய இன்னொரு தந்தியில் கூறியதாவது : “(காஷ்மீர்) மகாராஜா அரசின் வேண்டுகோள், இசுலாமியர்களை முதன்மையாகவும், பெரும்பாலானோரின் பிரதிநிதித்துவம் கொண்ட பிரபலமான அமைப்பின் வேண்டுகோள் ஆகியவற்றின்படியே காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படுவது எங்களால் ஏற்கப்பட்டது. அத்துடன் காஷ்மீரில் சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்பட்ட பிறகு இணைப்பு குறித்து காஷ்மீர்மக்கள் முடிவு செய்வர் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இணைப்பு ஏற்கப்பட்டது. எந்த அரசுடன் (இந்தியா அல்லது பாகிஸ்தான்) இணைவது என்பது அவர்களைப் பொருத்தது. (தந்தி எண். 255 நாள் 31-10-1947).
இணைப்பு விவகாரம்
3. 1947 நவம்பர் 2 ஆம் நாள் அகில இந்திய வானொலியில் நாட்டிற்கு ஆற்றிய உரையில் பண்டித நேரு கூறியதாவது: “காஷ்மீர் மக்கள் தங்கள் கருத்தைச் சொல்வதற்கு முழு வாய்ப்பளிக்காமல் நெருக்கடி ஏற்படும் தருணத்தில் எதுவொன்றும் குறித்து இறுதிமுடிவெடுக்க நாங்கள் ஆர்வம் காட்டவில்லை. இறுதியாக முடிவெடுக்க வேண்டியவர்கள் அவர்களே (காஷ்மீர் மக்கள்). எந்த அரசுடன் இணைப்பது என்பது குறித்துத் தகராறு இருந்தால், இணைப்பு முடிவு அந்த நாட்டு மக்களால் செய்யப்படவேண்டும் என்பதே எங்கள் கொள்கை என்பதைத் தெளிவுபடுத்துகிறேன். இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் இணைப்பு ஆவணத்தில் இது குறித்த பிரிவைச் சேர்த்திருக்கிறோம்.”
4. 1947 நவம்பர் 3ஆம் நாள் நாட்டிற்கு ஆற்றிய இன்னொரு வானொலி உரையில் பண்டிதநேரு “காஷ்மீரின் தலைவிதி இறுதியாக காஷ்மீர் மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டும் எனப் பிரகடனப்படுத்துகிறோம், காஷ்மீர் மக்களுக்கும் உலகிற்கும் இந்த உறுதிமொழியை மட்டுமே நாங்கள் வழங்கவில்லை. இதிலிருந்து பின்வாங்க மாட்டோம்; பின் வாங்க முடியாது என்றும் அறிவிக்கிறோம்” என்றார்.
5. 1947 நவம்பர் 21 நாளிட்டு பாகிஸ்தான் பிரதமருக்கு எழுதிய 368ஆம் எண் கடிதத்தில் “சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்ட உடனேயே பொது வாக்கெடுப்பு வழியாகவோ அல்லது பிரதிநிதிகளின் வாக்கெடுப்பு வழியாகவோ Plebiscite or Referendum அய்.நா. போன்ற பன்னாட்டு அமைப்புகளின் மேற்பார்வையில் இணைப்பு குறித்து காஷ்மீர் (அரசு) முடிவெடுக்க வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்பக் குறிப்பிட்டிருக்கிறேன்” என்றார் பண்டித நேரு.
அய்.நா. மேற்பார்வை
6. “காஷ்மீர் மக்களின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கும் வாய்ப்பு அம்மக்களுக்கு வழங்கப்பட்டவுடன் அய்.நா. போன்ற நடுநிலையான தீர்ப்பாயத்தின் மேற்பார்வையில் முடிவெடுக்கப்படவேண்டும் என்ற ஆலோசனையை எங்களது நேர்மையை நிலைநாட்டும் பொருட்டு முன் வைத்திருக்கிறோம். காஷ்மீரில் உள்ள பிரச்சினை எதிர்காலத்தைத் தீர்மானிப்பது வன்முறையா அப்பட்டமான பலாத்காரமா அல்லது மக்களின் விருப்பமா என்பதே” என்று 1947 நவம்பர் 25ஆம் நாள் பண்டித நேரு இந்திய அரசியல் நிர்ணய சபையில் அவரது அறிக்கையில் கூறினார்.
7. பண்டித நேரு 1948 மார்ச் 5 ஆம் நாள் இந்திய அரசியல் நிர்ணய சபையில் அவரது அறிக்கையில் “பொதுவாக்கெடுப்பிலோ அல்லது பிரதிநிதித்துவ வாக்கெடுப்பிலோ பிரகடனப்படுத்தப்படும் காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்குக் கட்டுப்படுவோம் என்பதை இணைப்பு நடந்த நேரத்தில் கூட ஒருதலைப்பட்சமாக சிறப்பு முயற்சி எடுத்து நாங்கள் அறிவித்தோம். மேலும் காஷ்மீர் அரசு உடனே ஒரு மக்கள் அரசாக மாறவேண்டும் என்பதை வலியுறுத்தினோம். நாங்கள் அப்போதும் இப்போதும் இந்த நிலைப்பாட்டையே பின்பற்றுகிறோம். எல்லா வகையிலும் பாதுகாப்புடன் கூடிய நியாயமான பொதுவாக்கெடுப்புக்கும் காஷ்மீர் மக்களின் விருப்பப்படியான முடிவுக்குக் கட்டுப்படவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” எனக் குறிப்பிட்டார்.
பிரதிநிதித்துவ வாக்கெடுப்பு அல்லது பொது வாக்கெடுப்பு
8. 1951 ஜனவரி 18ஆம் நாள் ஸ்டேட்ஸ்மேன் நாளிதழில் வெளியானவாறு 1951 ஜனவரி 16 ஆம் நாள் லண்டனில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் பண்டித நேரு குறிப்பிட்டார் : காஷ்மீர் மக்கள் அவர்களது விருப்பத்தைத் தெரிவிக்க ஏதுவாக அய்.நா.வின் அவசியமான பாதுகாப்பு ஏற்பாடுகளில் பணியாற்றவும் அவ்வாறு செயல்படவும் தயாராய் இருப்பதை இந்தியா திரும்பத் திரும்பக் கூறியுள்ளது. காஷ்மீர் மக்கள் தங்கள் தலைவிதியைப் பொது வாக்கெடுப்பு மூலமோ அல்லது பிரதிநிதித்துவ வாக்கெடுப்பு மூலமோ தீர்மானித்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அய்.நா. இந்த விவகாரத்தில் தலையிடுவதற்கு வெகுகாலம் முன்பே இதுதான் எங்கள் முன் மொழிதலாக இருந்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக எட்டப்பட வேண்டிய இறுதித் தீர்வுக்கான கடைசி முடிவு, அடிப்படையில் காஷ்மீர் மக்களால்தான் செய்யப்படவேண்டும். இரண்டாவதாக இந்தியா பாகிஸ்தான் இடையில் நேரடியாக முடிவெடுக்கப்பட வேண்டும். நாங்கள் (இந்தியா, பாகிஸ்தான்) முன்னரே பெருமளவில் ஒரு உடன்பாட்டை எட்டிவிட்டோம் என்பது நிச்சயமாக நினைவில் கொள்ளப்பட வேண்டும். நான் சொல்வதன் பொருள் பல அடிப்படைக் கூறுகள் பற்றி முடிவெடுக்க விவாதம் நடந்துள்ளது என்பதே. புறநிலையாகவோ அகநிலையாகவோ காஷ்மீரின் எதிர்காலத்தைத் தங்களுக்குள் முடிவு செய்துகொள்ள வேண்டியவர்கள் காஷ்மீர் மக்களே என்பதில் நாங்கள் அனைவரும் ஒன்றுபடுகிறோம். எங்களது உடன்பாடு இல்லாமல், காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு எதிராக எந்த நாடும் காஷ்மீரில் கை வைக்க முடியாது என்பது ஒரு வெளிப்படையான உண்மை.
9. 1951 ஜூலை 9ஆம் நாள் ஸ்டேட்ஸ்மேன் நாளிதழில் வெளியிடப்பட்ட, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு அளித்த 1951ஜூலை 6ஆம் நாள் அறிக்கையில் பண்டிதநேரு கூறியது, “காஷ்மீர் இந்தியாவுக்கோ பாகிஸ்தானுக்கோ கிடைக்கப் போகும் பரிசு போலத் தவறாகக் கருதப்பட்டு வருகிறது. விற்பதற்கோ அல்லது பண்டமாற்று செய்வதற்கோ காஷ்மீர் ஒரு வணிகப் பொருளல்ல என்பதை மக்கள் மறந்துவிட்டாற்போல் தெரிகிறது. காஷ்மீர் தனித்த இருப்பைக் கொண்டது, அதன் மக்களே அதன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இறுதி அதிகாரம் பெற்றவர்களாக இருக்கவேண்டும். இன்று இங்கே ஒரு போராட்டம் பலனடைந்திருக்கிறது. போர்க்களத்தில் அல்ல மனிதர்களின் மனதில்” என்பதாகும்.
10. அய்.நா.வின் பிரதிநிதிக்கு 1951 செப்டம்பர் 11ஆம் நாளிட்ட கடிதத்தில் நேரு, “இந்தியாவுடனான ஜம்மு காஷ்மீர் அரசின் இணைப்பு தொடரப்படுவது குறித்த கேள்வி அய்.நா.வின் மேற்பார்வையின் கீழ் சுதந்திரமான, நடுநிலையான பொது வாக்கெடுப்பு என்ற ஜனநாயக முறையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை ஏற்பை இந்தியா மீண்டும் உறுதிப் படுத்துவது மட்டுமல்ல, அத்தகைய பொது வாக்கெடுப்புக்குத் தேவையான சூழ்நிலையை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக உருவாக்க வேண்டும் என்பதிலும் ஆர்வமாக உள்ளது” என்று எழுதினார்.
உறுதிமொழி
11. கல்கத்தா அமிர்தபசார் பத்திரிகாவில் 1952 ஜனவரி 2ஆம் நாள் வெளியான செய்தியின்படி “இன்றும் பாகிஸ்தான் கையிலிருக்கும் காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதி நிலப்பரப்பை காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது” என்ற னுச.முகர்ஜியின் கேள்விக்கு இந்திய சட்டமன்றத்தில் பண்டித நேரு பதிலளிக்கும்போது “காஷ்மீர் இந்தியாவினுடைய சொத்தோ பாகிஸ்தானுடைய சொத்தோ அல்ல. அது காஷ்மீர் மக்களுக்குச் சொந்தமானது. காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது அவர்களது பொது வாக்கெடுப்புத் தீர்ப்பிற்கு நாங்கள் முழுவதுமாகக் கட்டுப்படுவோம் என்பதைக் காஷ்மீர் மக்களின் தலைவர்களிடம் தெளிவுபடுத்திவிட்டோம். அவர்கள் எங்களை வெளியேறச் சொன்னால் அவ்வாறு வெளியேறுவதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இருக்காது. இந்த விவகாரத்தை அய்.நாவுக்கு எடுத்துச் சென்றிருக்கிறோம். அமைதியான தீர்வை மதிப்போம் என்ற உறுதியையும் தந்திருக்கிறோம். ஒரு பெரிய தேசம் என்ற முறையில் எம்மால் அதிலிருந்து பின்வாங்க முடியாது, இந்த விவகாரம் குறித்து இறுதித் தீர்வைக் காஷ்மீர் மக்களிடம் விட்டிருக்கிறோம். அவர்களின் முடிவுக்குக் கட்டுப்படுவதில் உறுதியாயிருக்கிறோம்” என்று கூறினார்.
12. “காஷ்மீரின் எதிர்காலம் அம்மக்களின் விருப்பம் மற்றும் நல்லெண்ணத்தின்படியே இறுதியாகத் தீர்மானிக்கப்பட இருக்கிறது என்ற அடிப்படை நிலைப்பாட்டை நாம் ஏற்கிறோம் என்பதைத் தெளிவாகக் கூறுவேனாக. இந்த நாடாளுமன்றத்தின் விருப்பமோ, நல்லெண்ணமோ ஒரு பொருட்டல்ல. காஷ்மீர் விவகாரம் குறித்து முடிவெடுக்கும் வலிமை இந்த நாடாளுமன்றத்திற்கு இல்லையென்ற காரணத்தாலல்ல; மாறாக எந்தவகையான திணிப்பும் இந்த நாடாளுமன்றம் கையிலேந்தியிருக்கும் கொள்கைகளுக்கு எதிரானது என்பதால்தான். காஷ்மீர் நம் இதயத்தோடும், சிந்தையோடும் மிக நெருக்கமாக இருக்கிறது. ஏதேனும் சில தீர்ப்புகளாலோ பாதகமான வாய்ப்புகளாலோ காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாது போனால் அது நமக்குப் பறிபோனதாகவும், வலியும் வேதனையும் மிக்கதாகவும் இருக்கும். ஆயினும் காஷ்மீர் மக்கள் நம்மோடு இருக்க விரும்பவில்லையானால் எவ்வகையானும் அவர்கள் போகட்டும்.
நமக்கு எவ்வளவு வலிமிக்கதாக இருப்பினும் அவர்களது விருப்பத்திற்கு எதிராக நாம் அவர்களை (நம்மோடு) வைத்திருக்க மாட்டோம். காஷ்மீர் மக்களே காஷ்மீரின் எதிர் காலத்தைத் தீர்மானிக்க முடியும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். இதை அய்.நா.வுக்கும் காஷ்மீர் மக்களுக்கும் வெறுமனே சொல்லியிருக்கிறோம் என்பதல்ல, இது நமது உறுதியான நம்பிக்கை. காஷ்மீர் மட்டுமல்ல, எந்த இடத்திலும் இது நாம் பின்பற்றும் கொள்கையால் உறுதி செய்யப்பட்டது. இந்த அய்ந்து ஆண்டுகள் தொல்லைகளும், செலவும் மிகுந்ததாயினும், நாம் செய்தவைகள் பல இருந்தும், காஷ்மீர் மக்கள் நாம் விருப்பபூர்வமாக வெளியேறுவோம். வெளியேறுவது குறித்து நாம் எவ்வளவு துயரமாக உணர்ந்தாலும் மக்களின் விருப்பத்திற்கு எதிராக நாம் அங்குத் தங்கப் போவதில்லை. துப்பாக்கி முனையில் அவர்களிடம் நம்மை நாம் திணித்துக் கொள்ளப் போவதில்லை” என்று 1952 ஆகஸ்ட் 7ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தில் பண்டித நேரு தனது அறிக்கையில் கூறினார்.
காஷ்மீரின் ஆன்மா
13. 1955 ஏப்ரல் 1 ஆம் நாள் புதுடெல்லி இந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டில் வெளியிடப்பட்டவாறு, 1955மார்ச் 31 அன்று மக்களவையில் பண்டித நேரு தனது அறிக்கையில் கூறியது, “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள பிரச்சினைகளில் காஷ்மீர் தான் மிகவும் கடினமானது. காஷ்மீர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ள விளையாட்டுப் பொருளல்ல, அது தனக்கேயுரிய ஆன்மாவையும், தனித்துவத்தையும் கொண்டது. காஷ்மீர் மக்களின் நல்லெண்ணமும் இசைவுமில்லாமல் எதுவும் செய்ய முடியாது” என்பதாகும்.
14. 1957 ஜனவரி 24ஆம் நாள் (அய்.நா) பாதுகாப்பு அவையின் 765 வது கூட்டத்தில் காஷ்மீர் குறித்த விவாதத்தில் பங்கேற்று இந்தியப் பிரதிநிதி திரு. கிருஷ்ணமேனன் தனது அறிக்கையில் கூறியது: “எங்களைப் பொருத்தவரை இதுவரை இந்த அவையில் எனது அறிக்கையில் சர்வதேசக் கடமைகளை நாங்கள் மதிக்கமாட்டோம் என்று விளக்கப்படத்தக்க பொருளுள்ள ஒரு சொல்கூட இல்லை. இந்திய அரசோ, இந்திய ஒன்றியமோ தான் பொறுப்பேற்றுள்ள சர்வதேசக் கடமைகளை மதிக்க மாட்டோம் என்று சிறிய அளவில் கூடக் குறிப்பிடத்தக்க எதுவும் இந்திய அரசின் சார்பில் இங்குச் சொல்லப்படவில்லை என்பதை இங்குப் பதிவு செய்யும் நோக்கத்திற்காகக் குறிப்பிட விரும்புகிறேன்.”
நன்றி : தி இந்து
(உங்கள் நூலகம் ஜனவரி 2011 இதழில் வெளியானது)