தேசத்தின் குரல்

”கெட்ட போரிடும் உலகினை வேரொடு சாய்ப்போம்!”

காசுமீர் சிக்கலையொட்டி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் முரசங்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இரண்டும் அணுவாய்த வல்லமை கொண்ட அரசுகள் என்பதை மனத்திற்கொண்டால் போர் என்ற வாய்ப்பை எண்ணிப் பார்க்கவே பதைப்பாக உள்ளது. 

boom 6001998இல் வாஜ்பாய் தலைமையமைச்சராக இருக்க அணுவாய்த ஆய்வு நடத்தப்பட்டதை ஒட்டி அணுவாய்தத்தை ’முதலில் பயன்படுத்த மாட்டோம்” என்ற கொள்கையை இந்திய அரசு அறிவித்தது. பாகிஸ்தானும் இதே போல் உறுதியளித்தது. அதாவது பதிலடியாக மட்டும் அணுவாய்தத்தைப் பயன்படுத்த இரு நாடுகளும் அணியமாய் இருக்கும். இதுவே ஆபத்துதான். எது முதலடி எது பதிலடி என்பதையே கேள்விக்குரியதாக்க இந்த அரசுகளால் முடியும். இந்த உறுதிமொழியை எப்போது வேண்டுமானாலும் கைவிடுவதற்குக் காரணம் கண்டுபிடிப்பதும் கம்ப சூத்திரமன்று. முதலில் பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழி அணுவாய்த ஆய்வையும் பெருக்கத்தையும் கட்டுப்படுத்தி விடாது. 

ஆய்தப்பெருக்கம் அதற்கேயுரிய அரசியலுக்கு வழிகோலும் என்பதையும் மறந்து விடக் கூடாது. அமெரிக்காவில் படைத்துறை-தொழில்துறை கூட்டிணைவும் (military-industrial complex) சோவியத்து நாட்டில் படைத்துறை அதிகாரத்துறை கூட்டிணைவும் என்ன விளைவுகளை ஏற்படுத்தின எனக் கண்டுள்ளோம். அரசியலுக்காக ஆய்தம் என்ற ஏரணத்தின் இடத்தை ஆய்தத்துக்காக அரசியல் என்ற ஏரணம் பிடித்துக் கொள்ளும். ஆய்தப் பெருக்கமே இப்படி என்றால் அணுவாய்தப் பெருக்கம் என்ன வகையான விளைவுகளை ஏற்படுத்தும்! 

மோதி அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் 2016ஆம் ஆண்டே ”முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கை தேவையற்றது” என்று சொல்லத் தொடங்கி விட்டார். அண்மையில் இப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் முதலில் பயன்படுத்த மாட்டோம் என்பது தேவையற்ற கொள்கை என்று கூறியுள்ளார். அதாவது பாகிஸ்தான் மீது அணுகுண்டு வீசத் தயங்க மாட்டோம் என்று மோதி அரசு எச்சரிப்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும். 

இந்தியா இப்படி அச்சுறுத்தினால் பாகிஸ்தான் மட்டும் வாளாவிருக்குமா? அங்கே இம்ரான் கான் ”இரு நாடுகளிடமும் அணுகுண்டு இருப்பதால் போர் என்ற வாய்ப்புக்கே இடமளிக்கக் கூடாது” என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார். பிறகு, போருக்கு வந்தால் சந்திக்க அணியமாய் இருப்பதாகச் சொன்னார். ஆனால் அணுவாய்தங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்றார். இப்போது அப்படியெல்லாம் உறுதியளிப்பதற்கில்லை என்று அந்த அரசு சொல்லி விட்டது. சின்னச் சின்ன அளவில் துல்லிய்மாகப் பயன்படுத்தும் படியான நுண்ணளவு அணுவாய்தங்கள் பாகிஸ்தானிடம் இருப்பதாக அந்நாட்டு அமைச்சர் ஒருவர் கூறியிருக்கிறார். 

அணுவாய்தங்கள் பற்றியோ அவற்றின் பயன்பாடு, விளைவுகள் பற்றியோ இந்திய நாடாளுமன்றத்திலோ பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலோ இரு நாட்டுப் பொதுவெளியிலோ எவ்வித விவாதமும் நடைபெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத்தில் மட்டுமன்று. அமைச்சரவையில் கூட இது குறித்து விவாதிப்பதில்லை. இருவர், மூவர், நால்வர், ஐவர் கொண்ட சிறு குழு எல்லா முடிவுகளையும் எடுக்கிறது. சிலநேரம் தலைமையமைச்சரான ஒரே ஒருவர் முடிவெடுத்து விடும் ஆபத்தும் உள்ளது. குடியாட்சியத்தின் இன்றியமையாக் கூறாகிய வெளிப்படைத்தன்மை மருந்துக்கும் இல்லை. விவாதமும் இல்லை, வெளிப்படைத் தன்மையும் இல்லை! எல்லாமே பரம இரகசியம்! பிரதம இரகசியம்! உண்மையான குடியாட்சியம் இல்லாத போது அமைதியின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டுதான் இருக்கும். அணுகுண்டே தொங்கிக் கொண்டிருக்கும். இது இந்தியாவுக்கும் பொருந்தும், பாகிஸ்தானுக்கும் பொருந்தும்!

குடியாட்சியக் கொள்கைகள் அடிப்படையிலும் பன்னாட்டுச் சட்டங்கள் அடிப்படையிலும் எளிதில் தீர்வுகாணக் கூடிய காசுமீர் சிக்கல் குறித்துப் போர்வெறிக் கூச்சல் கிளம்புவதுதான் கொடுமை கலந்த வேடிக்கை. காசுமீர் தேசத்தின் தன்தீர்வுரிமை, போர் தவிர்த்த அமைதி, படைவிலக்கம், பொதுவாக்கெடுப்பு ஆகிய வழிகளை இந்தியா, பாகிஸ்தான், காசுமீர் ஆகிய முத்தரப்புகளும் அறிந்தேற்றால் போதும். சிக்கலைத் தீர்க்கும் வழி பிறந்து விடும். காசுமீர் தேசம் துண்டாடப்பட்டு இந்தியாவும் பாகிஸ்தானும் ஆளுக்கொரு பங்கைப் பிடித்து வைத்துள்ளன. இரு படைகளும் வெளியேறினாலே போதும், வாகா எல்லை திற்ந்து காசுமீர் தேசம் ஒன்றுகலந்து விடும் -- பெர்லின் சுவர் உடைந்து ஜெர்மன் தேசம் ஒன்றானது போல்! 

காசுமீர் மக்களின் தேசிய ஓர்மையைச் சிதைத்துள்ள இந்தியாவுக்கோ பாகிஸ்தானுக்கோ தத்தமது நாடுகளின் தேசிய ஒருமைப்பாடு பற்றிப் பேச அருகதை இல்லை. எழுபதாண்டுகளாகியும் தீராத நோயாகக் காசுமீர் சிக்கல் நீடிப்பதற்கு அடிப்படைக் காரணம் அரசுகள் குடியாட்சியத்தையோ மனிதவுரிமைகளையோ கிஞ்சிற்றும் மதிப்பதில்லை என்பதே. மனித உரிமைகளையும் மதிப்பதில்லை. மனித உயிர்களையும் மதிப்பதில்லை. போரின் அழிவே பெரிதென்றால், பெருந்திரள் பேரழிவுக் கருவிகளான அணுவாய்தங்களால் ஏற்படக் கூடிய விளைவுகளை எண்ணிப் பார்க்கவும் முடியாது. 

இந்தியாவோ பாகிஸ்தானோ அணுவாய்தத்தைப் பயன்படுத்திப் போரில் வெற்றி காண முடியாது என்பதால் இது வெறும் மிரட்டல்தான் என்ற கருத்தும் உண்டு. மேலும் இந்தியாவோ பாகிஸ்தானோ சீனம், அமெரிக்கா, உருசியா போன்ற நாடுகளின் அக்கறைகளைக் கணக்கில் கொள்ள வேண்டி வரும், ஓர் அணுவாய்தப் போர் மூள்வதாலும் விரிவடைவதாலும் உலகளவில் ஏற்படக்கூடிய விளைவுகளை முற்கணிப்பு செய்ய முடியாத நிலையில் எந்த நாடும் அப்படியொரு பிரளயத்தைத் தவிர்க்கவே கருதக் கூடும் என்ற எண்ணமும் உண்டு. இவ்வாறான கருத்துகள், எண்ணங்களை மதிக்கிறோம். எப்படியாவது போர், அதிலும் குறிப்பாக அணுவாய்தப் போர் தவிர்க்கப்பட்டால் மிக்க மகிழ்ச்சி! ஆனால் –

ஆனால் நமக்குள்ள ஓரச்சம்! ஒரு போர் மூண்டு, அதில் ஒரு தரப்பு தோற்கும் நிலை ஏற்பட்டால், அந்தத் தோல்வியை ஒப்புக் கொள்ள முடியாமல் அணுப் பொத்தானை அழுத்தும் சபலம் வராது என்பதற்கு யார் உறுதி கொடுப்பது? ஏவி விட்ட அணுக்கொலையாட்டத்தைக் கட்டுப்படுத்துவது யார்? ஒரு கத்தி வைத்திருப்பவன் கூட ஏதோ ஒரு கட்டத்தில் தன்னையும் மீறி அதைக் கொலைக் கருவியாகப் பயன்படுத்தும் ஆபத்து உள்ள போது வல்லரசாகக் காணப்படுவதற்கென்றே அணுவாய்தம் தரித்துள்ள அரசு எந்நிலையிலும் அதைப் பயன்படுத்தாது என்று எப்படி நம்ப முடியும்? 

போர் கூடாது! அணுவாய்தப் போர் கூடவே கூடாது! இந்த முழக்கத்தை மக்கள் முழக்கமாக்க வேண்டும்! மீண்டும் ஒரு ஹிரோசிமா நாகசாகியை இந்த உலகம் தாங்காது! அணுவாய்தப் போரில் நாட்டம் கொண்ட எவரும் மனிதகுலப் பகைவராகக் கருதப்பட்டுப் பொதுவாழ்விலிருந்தே அகற்றப்படும் நிலை ஏற்படச் செய்ய வேண்டும்! 

அணுவாய்தங்கள் அனைத்தும் பையப்பைய அழிக்கப்படும் நிலை நோக்கி, அணுவாய்தங்கள் செய்யும் வாய்ப்புகள் அனைத்தும் ஒழிக்கப்படும் நிலை நோக்கி இந்த உலகம் முன்னேற வேண்டும். அது போர்களும் போர்க்கருவிகளும் இல்லாத புத்துலகம் படைக்கும் திசையில் முன்னேறுவதற்கான முதற்படியாக அமையும்.

உடனே செய்ய வேண்டியது காசுமீரைச் சொல்லி இந்தியாவும் பாகிஸ்தானும் போருக்குச் செல்ல விடாமல் வலுவான அமைதி இயக்கம் காண்போம்! சூழ்ந்து வரும் அணுப் போர் கருநிழலைக் கலைத்து விரட்டுவோம்! 

Pin It