என்னருந் தமிழ்நாட்டின் கண்
எல்லோரும் கல்விகற்றுப்
பன்னறும் கலைஞானத்தால்,
பராக்கிரமத்தால், அன்பால்,
உன்னத இமமலைபோல்
ஓங்கிடும் கீர்த்தி எய்தி
இன்புற்றார் என்று மற்றோர்
இயம்பக் கேட்டிடல் எந்நாளோ?
கைத்திறச் சித்திரங்கள்,
கணிதங்கள் வான நூற்கள்
மெய்த்திற நூற்கள், சிற்பம்,
விஞ்ஞானம், காவியங்கள்
வைத்துள தமிழர் நூற்கள்
வையத்தின் புதுமை என்னப்
புத்தகசாலை எங்கும்
புதுக்குநாள் எந்தநாளோ?
தாயெழிற் றமிழை, என்றன்
தமிழரின் கவிதை தன்னை
ஆயிரம் மொழியிற் காண
இப்புவி அவாவிற் றென்ற
தோயுறும் மதுவின் ஆறு
தொடர்ந்தென்றன் செவியில் வந்து
பாயுநாள் எந்தநாளோ,
ஆரிதைப் பகர்வார் இங்கே?
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
எந்நாளோ?
- விவரங்கள்
- பாரதிதாசன்
- பிரிவு: சிந்தனையாளன் - பொங்கல் மலர் 2020