இயற்கையின் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்றவாறே ஒவ்வொரு நிலத்துள் வாழும் உயிரினங்களின் செயல்கள் யாவும் அமைகின்றன. அது மட்டுமின்றி, புற உலகினில் தம்மைத் தகவமைத்துக் கொண்டு வாழும் உயிரினங்கள் பிற உயிரினங்களிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சூழலையும் முதன்மை யம்சமாய் பெற்றே உயிர்களின் வாழ்வு அமைகின்றது. இவ்வுயிரினங்களிலேயே மனிதன் தனித்த வளர்ச்சியை எய்தினான். மனிதனை பொறுத்தமட்டில் வேட்டையாடுதலில் தொடங்கிய பயணம் கால்நடை வளர்ப்பு, சிறு சாகுபடியென புத்துயிர் பெற்று, உற்பத்திக் கருவிகளை உருவாக்கி, நிலையானதொரு வாழ்வைத் தொடங்கினான் எனலாம். எனின், இஃது பெரும் பேராட்டத்தின் விளைவேயாகும்.

ancient tamil war

இனக்குழு வாழ்வில் வேட்டையில் கவனம் செலுத்தியவன், உணவுக்கான பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருந்தது. உணவு பற்றாக்குறையே அதன் முதன்மை காரணி என்பர் சமூகவியலாளர். அதன் பின்னர் தனிநபருக்குரிய சொத்தாய் மாற்றம் பெற்ற காலம் தான் போராட்டத்தின் விளைவுகளை எல்லையில்லாது தோற்றுவித்தது. ஒரு குழு பிற குழுவை அடிமைப்படுத்துவதும், ஓர் குழுவிலுள்ளோரையே அக்குழுவிலுள்ள சிலர் அடிமைப்படுத்தியும், உற்பத்தி செய்யவும், ஏவல் தொழில் செய்யவும் நிர்பந்தப்படுத்தியும் போரிட்டு வெற்றி பெற்று வரவும் என பலவகையில் நிர்பந்திக்கப்பட்டனர்.

குறிப்பாக அடிமைச் சமூகம், மன்னர் சமூகத்தில் மேற்கூறிய காரணங்களே முதன்மை காரணியாய் இருந்தன. போர்கள் அடிப்படையில் செல்வப் பெருக்கம், எல்லையை விரிவுபடுத்துதல், மண்ணாசை, வலிமை கருதுதல், யார் பெரியவன் எனும் போக்கு, ஓர் குடும்பத்திற்குள்ளான முரண் ஆகியன அடிப்படைக் காரணியாய் அமைந்திருக்கின்றன என்பர். இவற்றுள், கி.மு. இறுதி - கி.பி. தொடக்க காலத்தில் நிகழ்ந்த போர் முறைகளையும், அதன் பின்புலங்களையும் சுருக்கமாக நோக்கி ஆராயலாம்.

தொல்காப்பியம் காட்டும் பண்டைய போர்கள்

தமிழுலகில் முதலிலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் பண்டைப் போர் பற்றி பல கருத்துக்கள் காணப்படுகிறது. ஒவ்வொரு நிலப்பகுதிக்கு ஏற்பவே போர்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை ‘புறத்திணையியல்’ எனும் இயலின் வழியாக புரிந்துகொள்ள முடிகின்றது.

உதாரணமாக, 1. மலையும், மலை சார்ந்த பகுதிகளிலும் (குறிஞ்சி) ஆநிரைகளை கவர்தல், அதனை மீட்டலுக்குமான போர்கள். 2. காடும், காட்டைச் சார்ந்த பகுதிகளிலும் (முல்லை) தன்மை மதியாத வேந்தனை எதிர்த்தும், காட்டு வளம் மீது கொண்ட ஆசையின் பொருளாலும் நிகழ்ந்த போர்கள். 3. வயலும், வயலைச் சார்ந்த பகுதிகளிலும் (மருதம்) எயிலை முற்றுகையிட்டு நாட்டைக் கைப்பற்றுதலும், எயிலை காத்து தம் நாட்டை பாதுகாத்தலுக்குமான போர்கள். 4. கடல், கடல்சார்ந்த மணற்பகுதிகளில் (நெய்தல்) வலிமை குறித்தப் போர்கள் - என நான்கு வகைப் போர்கள் நிகழ்ந்ததாக தொல்காப்பியத்தின் புறத்திணையியலில் மிக தெளிவாக தொல்காப்பியர் எடுத்துரைத்துள்ளார்.

இவை அடிப்படையில் ஆநிரை கவர்தல் மீட்டலுக்குமான போர்கள் - அந்நிலப்பகுதியில் ஆநிரைகளே செல்வமாகக் கருதப்பட்டன் மண்ணாசைப் போர்கள் - காடும் அதன் செழிப்பும் முக்கிய காரணமாயிருக்கலாம்; எயில் முற்றுகை பாதுகாத்தல் - நாட்டின் செல்வமும், எயிலைக் கைப்பற்றினால் நாட்டையே கைப்பற்றியதாக கருதியிருக்கலாம்; வலிமைப் போர்கள் - உற்பத்தி பெருக்கமும், பண்டமாற்றும் யார் அப்பகுதியில் ஆள்வது என வலிமையை நிரூபிக்க சேர, சோழ, பாண்டியர் என பலரும் போரிட்டு இருக்கலாம் என கருத இடமுண்டு.

மேற்கூறியவை தொல்காப்பிய இலக்கணம் பதிவு செய்த போர் முறைகளாகும். இப்போர் முறையின் அடிப்படையிலேயே சங்க இலக்கியத்துள் பல பாடல்கள் காணப்படுகின்றன. பண்டைய சமூகச் சூழலையும், போர் பற்றியும், தமிழகத்தை ஆண்ட மன்னர் பற்றியும், வரலாற்று கருவூலமாம்; புறநானூறு, பதிற்றுப்பத்து மற்றும் அகப்பாடல்கள் வழியாகவும், தொல்பொருள் ஆராய்ச்சிகள், செப்பேடுகள், கல்வெட்டுக்கள், மெய்கீர்த்திகள், நாணயங்கள், பயண குறிப்புகள், ஆவணங்கள் என இன்ன பலவற்றிலும் பண்டைய சமூகத்தில் போர், அதன் முறைகளை பலவற்றையும் காண முடியும்.

சங்ககாலம் (சுமார் கி.மு. 500 - கி.பி. 200)

உற்பத்திக் கருவிகளுக்கு ஏற்பவே உற்பத்தி உறவுகள் அமைகின்றன. உற்பத்தி உறவுகளுக்கு ஏற்பவே மக்களின் வாழ்வு அமைந்தன. குறிப்பாக மனிதகுலம் கற்களும், கம்புகளையுமே முதன்மை ஆயுதமாய் பயன்படுத்திய காலம் மாறி இரும்பால் பல உற்பத்தி கருவிகளையும், ஆயுதங்களையும் பயன்படுத்திய காலம் வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகிறது. சங்க நூல்களை ஆராய்ந்து, பல்வகைப்பட்ட ஆயுதங்களை பண்டைய காலத்தில் மக்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். குறிப்பாக,

“அடார், அம்பறாத்துணி, அம்பு, அரம், அரிவாள், ஆயுதக்காம்பு, எஃகு, கண்ணாடி தைத்த கேடகம், கணிச்சிப்படை, கலப்பை, கழிப்பிணிப் பலகை, காழெஃகம், கிளகடி கருவி (தட்டை), குந்தாலி, குறடு, கேடகம், கோடாலி, சக்கரம், சிறியிலை யெஃகம், சேறுகுத்தி, தறிகை, துடுப்பு, நவியம், படைவாள், பூண்கட்டிய தண்டு, மழு, வாள், வில், வேல், வேலுறை” (பக். 82 - புறநானூறு, கழகம் உரை) போன்றவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

பண்டைய போர் மரபுகள்

பண்டைக் காலத்தில் சில வரையறைகளோடு போர்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக போருக்குச் செல்வோர், குறிப்பிட்ட பூக்களைச் சூடுதல் மரபாக இருந்துள்ளது. ஒவ்வொரு மன்னனும் ஒரு குறிப்பிட்ட பூவை சூடி போர்புரிவது மரபு.

பூக்களைச் சூடி போரிடும் மரபைக் கொண்டிருந்தனர். அதனால் போருக்குச் செல்லும் முன்பு பூச்சூட வருமாறு வீரர்களுக்கு அழைப்பு விடுத்தனர். கழாத்தலையாரின் புறப்பாடல் ஒன்றில்,

மூதிலாள ருள்ளும் காதலின்
தனக்கு முகந் தேந்திய பசுயென் மண்டை
இவற்கீ கென்னு மதுவுமன் றிசினே
கேட்டியோ வாழி பாண பாசறைப்
பூக்கோ ளின்றென் றையும்
மழவாய் தண்ணுமை யழிசினன் குரலே” (புறம். பா. 289 : 5-10)

என்று வெட்சிப் போர் புரிய வேண்டி (ஆநிரை கவர்தல்;) போர் பறையை அறிவிக்க, மறவர் பலரும் திரண்டனர். அப்போது மன்னன் அவர்களோடு விருந்துண்ணுகின்றான். அங்கு மறவர்கள் அனைவருக்கும் ‘கள்’ வழங்கப்படுகிறது. பாசறைக் கண்ணே! இனி நிகழ்தற்குரிய போர்க்குரிய பூவை பெறுமாறு சான்றோர் ஒருவர் கூறுகின்றார். புலையன் போர் தொடங்குதற்குரிய தண்ணுமை எனும் போர் இசையை இசைப்பான் அதை கேட்பாய் என பாணனிடத்து கூறும் பாடல் காணப்படுகிறது. “உண்டாட்டு நிகழ்த்துதல் வேந்தன் மரபு” (பக். 180 - 181 புறம் - ஐஐஇ கழகம்) படைக்களன்கள் தருவதும், வேற்றுப்படை வரவை முரசறைந்து தெரிவிக்க, தன் படைகளுக்கும் அறிவித்த செய்திகளை காணலாம். “முரசுக்குத் தோலை மயிர் சீவாது போர்த்தல் மரபு” (பக். 177, புறம் - ஐஐஇ கழகம்) பண்டைய காலத்தில் அரசனே ‘நாட்டைப் பாதுகாக்கும்’ தகுதியுடையவனாக கருதப்பட்டுள்ளான். மேலும், அரசனே படைப் பொருட்களை சிலரிடம் கொடுத்த செய்திகளை தொல்காப்பியம் குறிப்பிடும்.

போர்க் காலத்தில் மறவர்க்கு ஊன்சோறு தருவதும் வழக்கமாக இருந்துள்ளது. அரசன், மறவனென இருவருக்கும் ஒரே வகையான சோறு இடுதல் மரபாக இருந்துள்ளது.

“ஊன் துடி அடிசில் - ஊனும் அரிசியும் குலைய சமைத்த புலவு” (பக். 155, பதிற்றுப்பத்து, புலியூர்கேசிகன் உரை) என்று குறிப்பிடுவதைக் காணலாம். அதே ‘கள்’ வழங்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனை தொல்காப்பியர் ‘உண்டாட்டு’ என்கிறார். அதாவது வெட்சித்திணையில் போர் முடிவுற்ற காலத்தில் ஆநிரைகளை கவர்ந்து வந்தோர் பங்கிட்டுக் கொண்டு உண்டாட்டு (அதாவது மது குடித்தல்) நிகழ்த்துதல் மரபாக இருந்துள்ளது. ஆனால் பதிற்றுப்பத்து போருக்குச் செல்லும் முன் சேர அரசர் மறவர்களின் தகுதி அறிந்து ‘கள்’ வழங்குவதை பாடல்கள் உணர்த்துகின்றன. “கள் இடத்திற்கு இஞ்சியும் பூவுமாகக் கலந்து கட்டிய மாலையை சூட்டியிருப்பர்” (பக். 142, பதிற்றுப்பத்து, பு.சே.)

மேலும், தூங்கு கொளை முழவு - தூங்கலோசைத்தாகிய முழவு; இது கள்ளுண்டு மகிழ்பவரது ஆடலுக்கு ஏற்ப முழங்கும்” (பக். 149, பதிற்றுப்பத்து)

நிணஞ்சுடும் புகை

நினஞ்சுடுதல், “கள்ளுண்பார் இடையிடையே கலந்துக் கொள்ளற்கு; கட்குடம் வைக்கும் கோக்காலிக்கும் ஏணி என்ற பெயரை இட்டு அழைத்தனர் என்பது பெறப்படுகிறது. “மது நுகர்தற் காலத்து இடையிடைக் கறித்து இன்புறுவதற்கு இஞ்சியும்; மோந்து இன்புறுவதற்குப் பூவும் பயன்பட்டன. சாந்து - சந்தன சேறு; இதனை புறத்தே பூசுதல் நறுமணத்திற்கும் பானைக் கசிவைத் தடுத்தற்கும் ஆம்” (பக். 142, பதிற்றுப்பத்து, புலியூர்கேசிகன் உரை) என்று பண்டையோர் எண்ணினர். அவர் அதனை தடுக்க எண்ணினால் போர் நிகழ்த்த வேண்டும். அல்லது பணிந்து போக வேண்டும். இரண்டுமன்றி ஓடி மறைபவர் மறப்பண்பினர் ஆகார். இதனை,

“கடிமரத்தால் களிறு அணைத்து
நெடுநீர துறை கலங்க
மூழ்த்து இறுத்த வியன் தானையொடு” (ஐஏ -ம் பத்து பா. 33 : 3-5)

என்ற பாடல் விளக்கி உரைக்கும்.

“கூதிர் வேனில் என்றிரு பாசறை” (தொல். நூ. 1022) என்ற வழியும், இடைப்புலம், இடைச்சுரம், நாட்பு” - போர் நிகழும் இடம் (பக். 177, புறம் - ஐஐஇ கழகம்) என்ற வழியும் “கூதிர் காலம், வேனிற் காலத்தில் பாசறை அமைத்து போர் புரிந்துள்ளனர். மழைகாலத்தில் போர்கள் நிகழ்ந்த குறிப்புகளில்லை. காலத்தை ஆராய்ந்து போர்க்காலங்களை தேர்ந்தெடுத்தனர் என்பதும் புலனாகிறது.

போரில் விழுப்புண்ணோடு இறப்பதே பெருமையென எண்ணினர். அதனால் இறந்தே குழந்தை பிறந்தால் கூட வாளால் கீறியே புதைப்பதை வழக்கமாகக் கொண்டதை, “குழவர் இறப்பினும் ஊன் தடி பிறப்பினும் ஃ ஆள் அன்று என்று வாளில் தப்பார் (புறம். பா. 74) என்று குறிப்பிடப்பட்டதும், போரிடாதோரை இழிவாகக் கருதியதையும், அவர்களையும் மார்பில் கீறி புதைத்ததையும், “நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇ ஃ காதல் மறந்து அவர்தீது மருங்கு அறுமார் ஃ .... மறம் கந்தாக நல்வுமர் வீழ்ந்த ஃ நீள்கமழ் மறவர் செல்வழிச் செல்க என ஃ வாள்போந்து அடக்கலும் உய்த்தனர் (புறம். பா. 93) என்று புறப்பாடல் எடுத்துரைக்கிறது.

போரில் இறந்தவர்களுக்கு ‘நடுகல்’ நட்டு வழிபடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். “காட்சி, கால்கோள், நீர்படை, நடுகல்” (தொல். பொருள் நூ. 63) குறிப்பிடுகிறது.

“நடுகல் வடிவில் அமைந்த கல்வெட்டுக்களைப் பற்றி சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. போர்க்களத்தில் இறந்த வீரனின் பெயரும், பெருமையும் நடுகல்லில் எழுதும் வழக்காறு பற்றி தொல்காப்பியம் (புறத்திணை - 5) புறநானூறு (பாடல்கள் 221, 223, 232, 260, 261, 263, 264, 265, 282, 287, 314, 328, 329, 335) அகநானூறு (131) மலைபடுகடாம் (வரி 386 - 389) பட்டினப்பாலை (வரி : 78 - 79) புறப்பொருள் வெண்பாமாலை (பொதுவியல் - 8) ஆகிய நூல்கள் காட்டுகின்றன” (பக். 10, தமிழக வரலாறும் பண்பாடும்) அவற்றுள் பெரும்பகுதி குறிஞ்சிப் பாடல்களிலே காணப்படுகிறது. ஆகவே, மலை, மலைசார்ந்த பகுதிகளிலே இப்பழக்கம் ஏற்பட்டிருக்கிறது என கருதலாம்.

போரில் நிகழும் நிகழ்வுகள்

போரின் தொடக்கத்தில் வெற்றிக் காண வேண்டும் என சூளுரைத்தல் இயல்பாக இருந்தது.

வெட்சித்திணையில் சிவந்த வாயுடைய வேலனை எண்ணியும், வள்ளியை எண்ணி கூத்து நிகழ்த்துதலும் நடந்துள்ளது. அதே போல, அரசன் பகைநாட்டின் மீது படையெடுக்கும் முன்பு குடையையும், வாளையும் நல்லநாளில் முன்கூட்டி அனுப்பி வைப்பது வழக்கமாக இருந்தது. இது விழாவாக “குடையும் வாளும் நாள்கோள்”, (தொல். நூ. 1014) என்று உழிஞையில் (மருத நிலம்) குறிப்பிடப்பட்டுள்ளது. இம்முறை வயலும், வயல் சார்ந்த நிலப்பகுதியில் பின்பற்றப்பட்டிருக்கிறது என கொள்ளலாம்.

அத்திணையிலேயே போருக்கு செல்லும் கரந்தை வீரர்கள் உன்ன நிமித்தம் பார்த்ததாகக் குறிப்பு காணப்படுகிறது. உன்னம் - ஒருவகை மரம்; அது நல்லதாயின் தளிர்த்தும் - தீயதாயின் உதிர்ந்தும் காணப்படும் (பக். தொல். தி.சு.பா.) என்பர். இது மரபாக இருந்திருக்கிறது. “உன்ன மரம்... உன்னம் வாடித் தோன்றினாலும் பொருட்படுத்தாது சென்று வெற்றி பெற்றுத் திரும்பும் ஆற்றலைப் “பாரி” பெற்றிருந்தான். செல்வக் கடுங்கோ வாழியாதனும் அத்தகைய தகுதியையே யுடையவன் என்று புலவர் புகழ்வதுண்டு.

“பொன்னின் அன்ன பூவின் சிறியிலைப் புன்கால் உன்னத்துப் பகைவன் எம்கோ (பதிற்று. 61 : 5-6) என்று கபிலர் வாழியாதனை பாரட்டுவார். இருவரும் மலைசார்ந்த பகுதியிலேயே ஆட்சி புரிந்துள்ளனர். ஆக, மலைப் பகுதியிலே இம்மரபு இருந்திருந்தது எனலாம். மேலும், வெட்சிப் படையினர் எதிர் படையினர் அறியாதவாறு ஒற்றர்கள் மூலம் தகவலறிந்து தீங்கிழைக்காது ஆநிரைகளை கவர்ந்த செய்தி தொல்காப்பியத்துள் காணலாம். பகிர்ந்து கொள்ளுதலும், உண்பித்து மகிழ்தலும் இந்நிலத்திலேயே காட்டப்பட்டுள்ளது.

குளிர், பனி என பாராமல் போர்க்களத்தில் புண்பட்ட மறவர்களை நள்ளிரவில் கண்துயிலாது மன்னன் அவர்களைக் கண்டு ஆறுதல் படுத்துதல் வழக்கமாக கொண்டான். இதனை நெடுநல்வாடை நூல் குறிப்பிடும். போரில் பெரும்புண்பட்டு வீழ்ந்த மறவர்க்கு மருத்துவம் செய்யும் முறையும், விறலியர் ஆடி பாடி மகிழ்விப்பதும் உண்டு.

“மருத்துவம் செய்வோர் மனையைத் தூய்மை செய்து ஒப்பனை செய்வதும், இனிய இசை பாடுதலும் நறிய வீனரப் பொருட்களைப் புகைத்து எங்கும் நறுமணம் கமழுமாறு செய்வதும் பண்டைத் தமிழ் மக்கள் மரபு” (பக். 163, ஐஐ – புறம், கழகம்) என்பர். புண்பட்ட வீரரின் கையை மெல்ல எடுத்து மையாகிய மெருகினையிட்டு, வெண் சிறு கடுகைத் தூவி, ஆம்பற் குழலை யூதி ஓசையை செய்யும் மணியை இயக்கி காஞ்சிப் பண்ணைப் பாடி நெடிய மனையில் நறுமணம் கமழும் அகில் முதலியவற்றைப் புகைத்து அன்புடைய தோழியே காப்போம், வருக! என புறப்பாடல் விளக்கும்.

போர்க்காலத்தில் பெண்களின் நம்பிக்கைகள்

மறக்குடி பெண்கள் போர்க்காலத்தில் தன் கழுத்திலிருந்த மாலையை தலைவனுக்குச் சூட்டி போருக்கு அனுப்பிய செய்தி (புறம். பா. 291) காணப்படுகிறது. போர்க் காலத்தில் சில குறிகளின் தன்மைக்கேற்ப அடிப்படையில் பெண்கள் நம்பிக்கைக் கொண்டிருந்துள்ளனர். இதனை,

“போர் முடிவில் ஒரு தலைவன் மனைக்கு சென்றான். அவன் போர்ப்புண்பட்டு இறுதிநிலையில் இருந்தான். எவ்வகையிலும் அவன் இறுதி எய்துவான் ” என்பதைப் பல குறிகளால் அவன் மனையோள் உணர்ந்து கொண்டாள். மறக்குடி மகளிராதலால் ஒருவாறு தேறியிருந்தாளாயினும், தலைவன் தாணிநிழலில் வாழ்ந்த துடியன், பாணன், விறலி முதலியோர் வாழ்வு சீர்குலையுமென நினைத்தாள் : அவர்களும் ஆங்கே இருந்தனர். அவர்களை நோக்கி “தலைவன் மார்பில் உண்டாகிய புண் பெரியவாய் உள்ளன் நண்பகற்போதில் முரலாத தும்பிகள் அப்போதில் வந்து ஒலிக்கின்றன் ஏற்றிய விளக்கும் நில்லாது அவிகிறது; என்னையறியாமல் எனக்கும் உறக்கமுண்டாகிறது; மனைக் கூரையில் இருந்து கூகை குழறுகிறது; விரிச்சி நிற்கும் முதுபெண்டிர் சொற்களும் பொய்ப்படுகின்றன் ஆகவே தலைமகன் இறுதியெய்வது உறுதி” (பக். 159, ஐஐ – புறம், கழகம்) என்று எண்ணுவதையும், இது பண்டைய நம்பிக்கையாக இருந்ததையும் அறியலாம்.

வீட்டினில் இரவமொடு, வேம்பை மனைசெருகுதல் முதலிய செயல்கள் பேய்கள் புண்ணிற்றோனை வந்து தொடாதவாறு காத்தற்கு செய்வன” (பக். 163, ஐஐ புறம், கழகம்) இரவ மரத்தின் தழையும், வேம்பின் தழையும் பேய் நெருங்காமல் இருக்க இல்லத்தின் முன் புறத்திலே செருகுவது பண்டை மரபு. மறக்குடி மகளிர் போருக்கு சென்ற மரபு ஏதும் காணப்படவில்லை. எனின், போருக்கு செல்லும் துணிவோடு இருந்ததையும் அவர்களின் ஆளுமையையும் புறப்பாடல்கள் நன்கு உணர்த்தும். இரவையும் பகலாகச் செய்யும் தீப்பந்தங்கள் பாசறையில் கொலுத்தப்பட்டது. இப்பணியை இடையில் வாள் ஏந்திய மகளிர் செய்ததாக ‘முல்லைப்பாட்டு’ நூல் குறிப்பிடும்.

புறப்பாடல், ஒன்று, ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே ஃ சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே ஃ வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே ஃ ஒன்றுவாள் அருஞ்சமம் முருக்கி (புறம். பா. 312)

என்று கூறுவதைக் காண முடிகிறது. மீனுண் கொக்கின் றூவி யன்ன வானரைக் கூந்தன் முதியோன் சிறுவன் ஃ களிறெறிந்து பட்டன னென்று மூவகை ஃ ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர் ஃ நோன்கழை துயல்வரும் வெதிரத்து ஃ வான்பெயதி தூங்கிய சிதரினும் பலவே” (புறம். பா. 277) என்று போரில் தன் சிறுவயது மகன் களிற்றைக் கொன்று தானும் இறந்தானென கேட்ட முதிய தாய் மகிழ்ந்தாள். அது ஈன்ற பொழுதினில் அடைந்த இன்பத்தை விடவும் பெரியது என்கிறாள்.

காக்கைப்பாடினியாரின் 278 ஆம் பாடல் புறப்பாடலுள் வீரத்தின் முழுமை புரியும். “ஒரு மறவன் ஒருவன் போரில் வெட்டுண்டு இறந்தான். அவன் உடல் துண்டுதுண்டாகி தனித்தனியே கிடக்கிறது. அதனை கண்டோர், போர் முடிவில் ஊருக்கு செல்ல, அங்குள்ள அவன் தாயிடம், ‘உன் மகன் புறமுதுகு காட்டி இறந்தான்’ என கூறினர். கோபமடைந்த அவளோ! மறக்குடி மாண்புக்கு இழுக்கு இது. கண்களை தீயென திறந்து நோக்கி, என் மகன் இவ்வாறு இறந்தானாயின் ‘அவன் வாய் வைத்து உண்ட என் மார்பை அறுத்தெறிவேன்’ என வஞ்சி’னம் கூறி.

கைவாள் ஒன்றை எடுத்துப் போர்க்களம் செல்கிறாள். அங்கே மறவர் பிணங்கள் மலிந்து மிகுந்து கிடக்கிறது. பிணங்களைப் புரட்டிப் பார்க்கிறாள். முடிவில் ஓரிடத்தில் சிதறுண்டு கிடக்கும் உடலைக் காண்கிறாள். உடல் துண்டங்களை ஒன்றாய் இணைத்து பார்க்கிறான். அவள் கோபம் தணிகிறது. குடிப்பெருமையை காத்தான் என மகிழ்ச்சி தோன்றுகிறது. இம்மகிழ்ச்சி தாம் அவனை பெற்ற காலத்தைவிடவும் பெருவியப்பை தந்தது என,

tamil war“நரம்பெழுந்து உலறிய நிரம்பாம் என்தோள் ஃ முளரி மருங்கின் முதியோள் சிறுவன் ஃ படை அழிந்து மாறின என்று பலர் கூற ஃ மண்டமர்க்கு உடைந்தனனாயின் உண்ட என் ஃ முலை அறுத்திடுவேன் நானெனச் சினைஇக் ஃ கொண்ட வாளொடு படுபிணம் பெயராச் ஃ செங்களந்து உழவுவோள் சிதைந்து வேறாகிய ஃ படுமகன் கிடக்கை காணூஉ ஃ ஈன்ற ஞான்றினும் பெரிது வந்தனளே” (புறம். ஐஐஇ பா. 278) என்ற மறக்குடி மகளிரின் சிறப்பையும் வீரத்தின் தனித்தன்மையையும் உணர்த்துவதை காண முடியும்.

இது போன்ற பல பாடல்களை புறநானூற்றில் காண முடியும். யாவுமே வீரத்தின் விளைநிலமாய் தமிழகம் இருந்ததையே உறுதி செய்கிறது. போர்க்காலத்தில் பல நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. அதனை தொல்காப்பியத்தில் ‘காஞ்சித் திணை’யில் தெளிவாக அறிய முடியும். மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமையும்.... ஃ பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு ஃ நிறையருஞ் சிறப்பின் துறை இரண்டு உடைத்தே” (தொல். பா. 1025) பாடலில் பல போரியல் நிகழ்வுகள் காணப்படுகின்றது. அதனை பின்வருமாறு நிரல்படுத்தலாம்.

1. போரில் இறந்ததால் கூற்றுவனின் (எமன்) ஆற்றல் கூறுதல் (பெருங்காஞ்சி)
2. முதியோர் இளையோர்க்கு கூறியது (முதுமைக்காஞ்சி)
3. தகுதியோடு தன் மறப்புண்ணைக் கிழித்து உயிர்துறத்தல் (மறக்காஞ்சி)
4. புண்பட்டு கிடப்பவனை பேய் பேணும் எனும் நம்பிக்கை (பேய்காஞ்சி)
5. இத்தகைய சிறப்புடையவன் இவனென போரில் இறந்துபட்டவனை கூறுதலும்
6. இன்னது செய்ய தவிர்த்தால் இன்னது நிகழும் என வஞ்சினம் கூறலும்
7. அன்புடைய மனைவி புண்பட்ட கணவனை பேய் நெருங்காது காக்கும் நிலையும்.
8. இறந்த கணவன் இறந்த வேலினாலேயே தானும் மாய்த்துக் கொள்ளும் நிலையும்.
9. மகளைப் பெற வந்த அரசனை எண்ணி அஞ்சியதும் (மகட்பாற்காஞ்சி)
10. இறந்த கணவனின் தலையோடு தன் முகத்தையும், மார்பையும் சேர்த்துக் கொண்டு இறந்து போகும் நிலையும்.
11. இறந்த மறவனை எண்ணி சுற்றத்தினர் அழுதலும், மயங்குதலும்.
12. மறவர்கள் தாமாகவே ஏங்கி வருந்தும் நிலையும்.
13. கணவனொடு இறந்த மனைவியை எண்ணி வழி செல்வோர் இரங்கிக் கூறுதலும்.
14. மிகப்பெரிய பாலைப் பகுதியை கடந்து வந்து கணவனை இழந்த மனைவி அரற்றி அழும் நிலையும்.
15. இறந்தவரை எண்ணி வருந்தி மற்றோர் இரங்கி நிற்றலும்.
16. மனைவியை இழந்து கணவன் புலம்புதலும்.
17. கணவனை இழந்து மனைவி நிற்கும் நிலையும்,
18. மனைவி, இறந்த கணவனொடு ஈமம் ஏறிப் பெருந்தீயில் புக முற்படுதலும், தடுத்தவரிடத்து தன் கணவனை எண்ணி (சிறப்புரைத்தலும்) வஞ்சினம் கூறும் நிலையும்.
19. போர்க்களத்தில் சிறுவன் புறமுதுகிட்டான் என கேட்டுத் தாய் வருந்திய நிலையும்.
20. இவ்வுலகில் இறுதி நிலை பலர் சென்ற சுடுகாடே என காட்டை எண்ணியும், வாழ்த்தியும், நிலையாமையே வாழ்க்கை என பேசுதலும் என போருக்குப் பின் போர்க்களத்தால் நிகழ்ந்த சூழலை தொல்காப்பியர் விளக்குகிறார்.

போருக்குப் பின் நிகழ்ந்தவை

பதிற்றுப்பத்தில் சேர மன்னன் ஒருவன் எதிர்மன்னனை வீழ்த்துகிறான். பின்னர் எதிர்நாட்டிலுள்ள பெண்களின் கூந்தலை அறுத்து, அதனை கயிறாகத் திரித்து யானையைக் கட்டி இழுத்து வந்தானெ சங்க இலக்கியப் பாடல் உணர்த்துகிறது.

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்... (புறம். பா. 74) பாடலின்கண் சேரமான் கைது செய்யப்படுகிறான். அவன் நீர் தாகத்தால் நீர் கேட்க தர மறுக்கின்றனர். உணவும் தராமல் கொடுமைபடுத்த பசி பொறுக்காது வயிறு தீப்போல இருந்தது என்றும், உணவு தராமல் இருந்ததையும், நடத்தப்பட்ட முறையையும், “தொடர்படு ஞமிலியின் இடர்படுத்து (ஞமலி - நாய்) என்று நாய் போலத் தொடர்ந்து இடர்படுத்தப்பட்டு கணைக்காமல் இரும்பொறை உண்ணாது மானத்தோடு இறந்தான் என இலக்கிய பதிவில் சுட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் தோற்றுப் போன மன்னனை சிறையிலிடும் பழக்கம் இருந்ததை அறிகிறோம். தோற்றுப் போனவனின் ‘பல்’லினை பிடுங்கி அதனை வாயிற் கதவில் வைத்தான் சேரன் என்று பாடல் - விளக்குகின்றது.

போரில் புறப்புண்பட்டதெனவும், தம்மை இழிவாக பிறர் கருதுவரெனவும் எண்ணி போர்க்களத்திலேயே மாய்த்துக் கொண்டதையும், சிலர் வடக்கிருந்து உயிர் துறத்தலையும் அறிய முடிகிறது.

போரில் நிகழும் கொடுமையான நிகழ்வுகள்

வெட்சியை (மலை) பொறுத்தமட்டில் பகைவர் அரணை அழித்தும், ஆநிரைகளை கைப்பற்றும் போது எதிர் படை மறவர்களை கொன்று குவிப்பதுண்டு. வஞ்சி (சமவெளி) பொருத்த வரையில் வஞ்சி வேந்தன் பகை நாட்டினை தீ வைத்து கொலுத்துவான். இதனை ‘உழபுலவஞ்சி’ என்பர். முன்னர் தீயிட்டு கொளுத்திய அரசனின் வேகம் தணியாது மீண்டும் நாட்டை தீயிட்டு கொலுத்துவதுண்டு. இதனை ‘பெருங்காஞ்சி’ என்பர்.

காஞ்சித் திணை (கடல், சார் பகுதி)யில் புண்பட்ட தலைவனை எண்ணி தம் மார்போடு தழுவிக் கொண்டு தானும் இறப்பாள். மேலும் போரில் ஈடுபட்ட தன் கணவனின் மார்பிலிருந்த வேலை எடுத்து தன்னுயிரையும் போக்கிக் கொள்வாள். உழிஞையில் மன்னன் சினம் அடங்காது அரண்களையும் கோட்டைகளையும், அழகிய அரண்மனைகளையும் இடிப்பதுண்டு. தும்பையை பொருத்தமட்டில் பெரும்போரில் இரு வேந்தர்களும் மடிவதுண்டு. இதை போல பலநூறு நிகழ்வுகளை தொல்காப்பியம் புறப்பொருள் வெண்பாமாலை எடுத்துரைக்கிறது.

பண்டைக் காலத்தில் போரில் எவர் ஈடுபடக்கூடாது? அல்லது ஈடுபடாதோர் யார் என்று சில பாடல் வழி அறிய முடிகிறது. இதனை, “ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும் ஃ பெண்டிரும் பிண்யுடையீரும் பேணித் ஃ தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் ஃ பொன்போல் புதல்வர்ப் பெறாஅ தீரும் ஃ எம்அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின்” (புறம். பா. 9) என்ற பாடல் வழியாக அறியலாம். மேலும், சிலப்பதிகாரத்தில்,

“பார்ப்பார் அறவோர் பசுப் பத்தினிப் பெண்டிர் ஃ மூத்தோர் குழவி எனும் இவரைக் கைவிட்டு ஃ தீத்திறத்தார் பக்கமே சேர்க” (சிலம்பு பா. 21 : 53-55) என்று கூறுவதன் வழியாகவும், பார்ப்பனர், பசு, அறவோர், பத்தினிப் பெண்டிர், நோயுடையீர், மூத்தோர், குழந்தை - ஆகியோர் போரில் ஈடுபடவில்லை என்று உணர முடிகிறது. பல்வேறு போர்களைப் பற்றி தெளிவுற குறிப்பிடும் தொல்காப்பியத்தில் இச்செய்தி காணவில்லை. சுவடிகள் அழிந்திருக்கலாம்.

ஒரு மன்னன் நாட்டை பாதுகாத்தலுக்கு படையே முதன்மையாய் விளங்குகின்றது. பண்டைக் காலத்தில் தானை, யானை, குதிரை ஆகிய மூவகைப் படைகள் இருந்தன. தேர்ப்படையைப் பற்றி சங்க இலக்கியத்தில் ஒரு பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்காப்பியத்துள்,

“தானை யானை குதிரை என்ற ஃ நோனார் உட்கும் மூவகை நிலையும்” (தொல். நூ. 1018 : வரி : 1-2) என்று 3 படைகள் இருந்ததை நெய்தல் திணையில் மட்டும் (கடல் சார் பகுதி) குறிப்பிடுகின்றார். குறிப்பாக வலிமைக் கருதி இருபெரும் வேந்தரும் பெரும்போர் நிகழ்த்தியிருக்கலாம். இப்போரே மற்ற போர்களை விடவும் பெரும்போராக இருந்திருக்கலாம். இப்போரில் “அதன் சிறப்பியல்பாக,

கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் ஃ சென்ற உயிரின் நின்ற யாக்கை ஃ இருநிலம் தீண்டா அருநிலை வகையோடு ஃ இருபாற்பட்ட ஒரு சிறப்பின்றே” (தொல். நூ. 1017) என்று போர்க்களத்தில் மறவனின் உடல் பகைவரால் செலுத்தப்பட்ட அம்புகளாலும், வேல்களாலும் உயிர்நீங்கிய உடம்பு நிலத்தில் விழாமல், அறுக்கப்பெற்ற ‘அட்டைகள்’ போன்று தலையும், உடல் உறுப்புகளும் துடித்துடித்து ஆடும் ஒப்பற்ற தன்மையுடையது என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். அதே போல தன் மன்னன் இறந்தான் என கேள்வியுற்று பலரையும் வெட்டி வீழ்த்தும் மறவனின் சிறப்பும் நெய்தலிலேயே,

“செருவகத்து இறைவன் வீழ்வுற சினைஇ ஃ ஒருவன் மண்டிய நல்லிசை நிலையும்” (தொல். நூ. 1018 : 14-15) என்று குறிப்பிடப்படுகிறது. ஆகவே போர்களில் இந்நிலத்திலேயே வலிமையின் பொருட்டு அனைத்து படைகளையும், படைக்களன்களையும் எதிரெதிரே நிறுத்தி மகாபாரதப் போர் போல நிகழ்த்தியதை உணர முடிகிறது. இதே போன்ற காட்சி யென்று ‘களவழி நாற்பது’ நூலில் காணப்படுகிறது. “கவளம்கொள் யானையின் கைகள் துணிக்க ஃ பவளம் சொரி தருபைபோல் திவள் ஒளிய ஃ ஒண்செங் குருதி உமிழும் புனல்நாடன் ஃ கொங்கரை அட்ட களத்து” (களவழி. பா. ) சேரமானுக்கு கொங்கரும் துணையாக நின்று போர் புரிந்துள்ளனர். இப்பாடலில், யானையின் போரே மிகுதியும் காணப்படுகிறது.

யானையின் துதிக்கையை மறவன் ஒருவன் தம் வாளால் வெட்டுகின்றான். அதனால் யானையின் துதிக்கையிலிருந்து குருதி வடிகிறது. அது பார்ப்பதற்கு ஒரு பையில் இருந்து பவளம் கொட்டுவது போன்று இருந்தது என பொய்கையார் உவமிக்கிறார். எனின் இக்காட்சி வன்மமாய் உள்ளது. இது போன்ற பல காட்சிகளை இலக்கியங்களுள் காண முடிகிறது.

1. கோட்டைக் கதவுகள்
சேர நாட்டில் கணைய மரத்தினை கோட்டை கதவுகளுக்கு வலுவூட்டுவதற்காக குறுக்காக பின்பக்கம் வைத்து கட்டுவதை பழக்கமாக கொண்டிருந்தனர். (கணைய மரம் - வலிமைமிக்க மரம் ஆதலால் எதிரிகள் எளிதில் தாக்காமல் இருக்க இம்மரத்தை கட்டினர்.)

மலைகளின் முடிகளோடும்... பகை நாட்டு புறமதில்கள் அம்புக் கட்டுக்களைக் கொண்டனவான அகன்ற இடைமதில்கள், கோட்டைக் கதவுகளிலே - தொங்கலாக அமைக்கப்பெற்ற கணைய மரங்கள் பலவாகச் செறிக்கப் பெற்றிருக்கும் (பக். 37, பதிற்றுப்பத்து, புலியூர்கேசிகன் உரை.)

கூளிப் படையினர்

போர் செய்ய செல்வதற்கு முன்னர் மலைப் பகுதியாதலால் முறைப்படி வழி அமைத்து தரும் ஓர் படைப்பிரிவு இருந்துள்ளது. இவர்களை ‘கூளியர்’ என்று அழைத்துள்ளனர். கூளிப்படையினரரான இவர் படைகளுக்கெல்லாம் முன்னர் சென்று படை செல்லுவதற்கேற்ற வழியை அமைத்து தந்திருக்கின்றனர். இவர்களைப் பற்றி, ‘கவர்காற் கூளியர்’ என்று பதிற்றுப்பத்து கூறும். அதற்கு விளக்கமாக,

“அவர் மென்மேற் சென்று கொண்டே இருப்பவராதலினால் கூர்நல் அம்பின் கொடுவிற் கூளியர் கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில் கொள்பதம் ஒழிய வீசிய புலவம்” என இவரைப் பற்றி கல்லாடனாரும் (புறம். 23) கூறுவர் ”. (பக். 47, ப. பத்து, புலியூர் கேசிகன்)

இவர்கள் படைக் கருவிகளாக சிலவற்றை பயன்படுத்தியுள்ளனர். ஐயவி துலாம் எனும் ஒருவகை படைக்கருவியும், எஃகம் - என்று சொல்லப்பட்ட வாளினையும் : வம்பு - கைச்சரடு என்பதையும்; தண்டு - ஒரு படைச் சுருவி; படையணிந்தவை என்றும்,

புலித்தோளால் செய்யப்பட்ட “வாளுறை”யையும் பயன்படுத்தி உள்ளனர் என்பதை அறிகிறோம். மேலும் மெய்ம்மறை - என்கிற, அதாவது உடலை மறைத்துக் கொள்ளும் கவசத்தை அணிந்திருந்துள்ளனர். வன்னிலத்தை தோண்டுவதற்கு குந்தாலி என்றும் கணிச்சி என்றும் சொல்லக் கூடிய பொருளையும் பயன்படுத்தியுள்ளனர்.

அகழியும், புற வெளியும்

பாடல் 22-ல் மலரகன் பறந்தலை’ என்ற சொல் உள்ளது. அதற்கு மிக அகன்றதாய் இருக்கும் வெட்ட வெளி என்பர். மதிலின் புற மதிலுக்கும் உட்புற மதிலுக்கும் இடையே ஓர் அகழியை தோண்டியிருந்ததை அறிகிறோம். அகழியை அடுத்து இருந்த பகுதியே ‘வெளி’ ஆகும்.

“புறமதிலைக் கடந்து வரும் பகைவர் இதன்கண் விளங்கும் வீரருடன் கடும் போரிட்டு வென்ற பின்னரே அகமதிலை நெருங்க வியலும்” (பக். 68, ப.ப. புலியூர் கேசி) என்று குறிப்பிடுகின்றார். குறிப்பாக வில்லினை செயற்கை எந்திர பொறியில் வைத்து அது தானே இயங்கி தொடர்ச்சியாக அம்புகளை பகைவர்களின் மீது பொலியும் அளவிற்கு நுட்பமான தேர்ச்சியும் பெற்றிருக்கின்றனர்.

‘ஐயவி’ - ஐயவித்தலாம் எனும் மதில் எந்திரப் பொறியினை காவல் மிகுந்த காட்டுப் பகுதியில் வீரர்கள் மறைந்திருந்து வரும் பகைவரை தாக்கியுள்ளனர் : குண்டு - ஆழம் ; கிடங்கு - அகழி; மதணம் - அகமதிலின் உட்புறத்தே வரிசையாக நான்கு புறமும் அமைந்த காவல் மேடைகள் அமைத்திருந்தனர்.

தார் என்கிற தூசிப் படையை முதன்மைப் படைப்பிரிவாக கொண்டுள்ளனர். இப்படை அரசனுக்குரியது. இதனை ‘தார்’ என்பதை தொல்காப்பியர் அரசனுக்குரிய பொருட்கள் என்று கூறியது நினைத்தற்குரியது.

கள்ளும், ஊன்சோறும்

போர் காலத்தில் கள்ளும், ஊன்சோறும் கொடுத்ததை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கள் குடத்திற்கு இஞ்சி, பூ கட்டிய மாலையை அணிந்திருப்பர். மேலும், குடத்தின் வெளிப்புறத்தில் சந்தனத்தினை பூசியிருந்ததையும் அறிகிறோம்.

“கட்குடத்திற்கு இஞ்சியும் பூவுமாகக் கலந்து கட்டிய மாலையைச் சூட்டியிருப்பர் என்பது இதனால் அறியப்படுகிறது. மது நுகர்தற் காலத்து இடையிடைக் கறித்து இன்புறுதற்கு இஞ்சியும்; மோந்து இன்புறுவதற்குப் பூவுப் பயன்பட்டன. சாந்து சந்தன சேறு; இதனை புறத்தே பூசுதல் நறுமணத்திற்கும் பானைக் கசிவை தடுத்தற்கும் ஆம்” (பக். 142, ப. பத்து, புலியூர்கேசி) என்று குறிப்பிடுவார் புலியூர்கேசி.

போர்க்காலத்தில் வீரர்களுக்கு ஊன்சோறு தருவதும் வழக்கமாக இருந்துள்ளது. அரசன், வீரன் என அனைவருக்கும் ஒரே வகையாக சோறிடுதலை மரபாக கொண்டுள்ளனர். இதனை, ஊன் துடி அடிசில் - அதாவது ஊன் (கறி) அரிசியும் குலைய சமைத்த உணவு ஆகும். கள்ளுண்டு மகிழ்பவரது ஆடலுக்கு ஏற்ப முழவு முழங்கினர். இதனை தூங்கு கொலை முழவு (பா. 43) என்று தூங்கல் ஓசைத் தருகிற முழவு என்று குறிப்பிடுகிறது.

போர் முழக்கம் செய்யும் தொழிலாளர்

போர் செய்கின்ற காலத்தில் “போர் முழக்கங்கள் முழங்க குறுந்தடியால் வேகமாக அடித்துக் கொண்டு செல்லும் தொழிலாளர்கள். அவர்கள் அடிக்கும் போது தோள் பகுதியே புண்பட்டு போய்விடும். அவர்கள் போர்க்களத்தின் முன்னணியிலே நிற்பர். இதனை, “போர் நிழல் புகன்ற சுற்றமொடு ஊர்முகத்து இறாஅ லியரோ பெரும! நின் தானை ஃ இன்னிசை இமிழ் முரசியம்பக் கடிப்பி கூஉப் ஃ புண்தோள் ஆடவர் போர்முகத்து இறுப்பக காய்ந்த கரந்தை மாக்கொடி விளைவயல்” (பா. 40, ப.பத்து) என்று உரைக்கும்.

காவல் மரம்

போர்க்காலச் சூழலின் பகைவரது காவல் மரத்தில் யானையை கட்டுவர். அதற்கு, பகைவரை வெற்றி கொண்டதனைக் காட்டும் அடையாளமாகக் கொண்டுள்ளனர். பகைவர் அதனை தடுத்தால் போர் புரிய வேண்டும். இல்லையெனில் பணிந்து போக வேண்டும். கடி மரம் - காவல் மரம். இதனை பண்டை போர் மரபாகக் கொண்டிருந்ததை அறிகிறோம். இக்கருத்தை,

"கடி மரத்தால் களிறு அணைத்து ஃ நெடுநீர துறை கலங்க ஃ மூழ்த்து இறுத்த வியன் தானையொடு” (ஐஏ –ம் பத்து : பா. 33 : 3-5) என்ற பாடலின் வழி அறிகிறோம்.

மேற் கூறியதன் வழியாக, பழந்தமிழர்களின் புற வாழ்வு முறையும் வரையறைக்கு உட்பட்டே நிகழ்ந்துள்ளது.

நில அடிப்படையின் வாழ்வு முறையாயினும் மன்னர் கட்டமைப்பு நன்கு வேரூன்றிய சமூகமாய் நிலவியிருக்கிறது.

பல்வகைப் போர்களும், போர்களின் ஈடுபடுவதை பெருமையாகவும், விழுப்புண்பட்டு கிடப்பதும், இறப்பதுமே பெருமை என எண்ணினர்.

மன்னர் மறவர்களோடு ஒன்றாக இருந்து உணவு உண்டதும், ‘கள்’ வழங்கியதையும் பழம் நூல்கள் உணர்த்துகின்றன.

பெண்கள் மறத் தன்மையில் தனித்துவ சிந்தனையையும் விழுப்புண்பட்டு இறந்த தன் கணவன், மகனை பெருமையாக கருதினர். விழுப்புண்பட்டோருக்கு மருத்துவம் செய்ததையும், இரவில் வாள் ஏந்திய மகளிர் மன்னரின் பாதுகாவலராக இருந்துள்ளனர்.

போர்கள் செய்கின்ற போது பூக்கள் சூடி போர் புரிந்ததும், போருக்கு முன்னர் ‘கூளியர்’ எனும் படை முன்னர் சென்று பகுதியை சீர் செய்து கொண்டு செல்வதையும் மரபாகக் கொண்டனர்.

கோட்டைக் கதவுகள், அகழிகளோடு அரண்கள் அமைத்து பாதுகாப்பாக இருந்துள்ளனர். ஆநிரை கவர்தல் மீட்டலுக்கான போர் தொடங்கி மிக பெரும் வலிமை குறித்தப் போர்கள் வரை பழந்தமிழகத்தில் நிகழ்ந்திருக்கிறது.

துணை நூற்பட்டியல்

1. கழகத் தமிழ் அகராதி, சை.சி. நூ. கழகம், சென்னை.
2. தொல்காப்பியம், இளம்பூரணர் உரை, தமிழ்ப் பல்கலைக் கழக மறுதோன்றி அச்சகம், தஞ்சாவூர். மு.ப. 2008.
3. தொல்காப்பியம், தி.சு. பாலசுந்தரம் உரை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை - 1, மு.ப. 1953
4. சிலப்பதிகாரம், அடியார்க்கு நல்லார் உரை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1985.
5. நற்றிணை, ஒளவை துரைசாமி, அருணா பப்ளிகே~ன்ஸ், சென்னை-17, 1968.
6. கலித்தொகை, மா. இராசமாணிக்கனார், வள்ளுவர் பண்ணை, சென்னை - 1, 1958.

- முனைவர் பா.பிரபு,  உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம்

Pin It