முன்னுரை:

“நீர்இன்று அமையாது உலகெனின்” (குறள் -20)

என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, ஐம்பூதங்களில் ஒன்றான நீர்ின் முக்கியத்துவத்தையும், உலக உயிர்கள் அனைத்தும் முதன்முதலில் நீரில்தான் தோன்றியது என்றும், எல்லா உயிர்களுக்கும் நீரே முக்கியமான ஆதாரமாகவும் உள்ளது. இந்த நீரின் பயன்பாட்டையும் சங்க இலக்கிய மக்கள் எவ்வாறு பயன்படுத்தினர், எந்தெந்த முறையில் பயன்படுத்தினர், நீரை எப்படியெல்லாம் அறிவியல் நுட்பத்துடன் மேலாண்மை செய்தனர், என்பதை இக்கருத்துப் பேழை மூலம் அறிந்து கொள்ளலாம்.

திருக்குறளில் நீர் மேலாண்மை:

திருவள்ளுவர் நீரின் முக்கியத்துவத்தைக் கருதி ‘வான்சிறப்பு’ என்ற அதிகாரத்தை வைத்து அதில் மழைநீர், ஆற்றுநீர், குளத்துநீர், கிணற்றுநீர்;, என நீரின் பயன்பாட்டு அமைப்புமுறை உருவாக்கி, நீராதாரத்தை தமிழ்மக்கள் தொன்றுதொட்டு எவ்வாரெல்லாம் பயன்படுத்தினர் என்பதை கீழ்வரும் பாடல் மூலம் அறியலாம்.

“வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. (குறள் -11)

பாடல் மூலம் என்ற சங்கால மக்கள் மழைநீரைச் சேமித்து, சேமித்தநீரை திறம்பட பயன்படுத்தி விவசாயத்தை தழைக்கச் செய்தனர்.

சிலப்பதிகாரம் கூறும் மழைநீரின் புகழ்

வள்ளுவன் கூறியதைப்போல இளங்கோவடிகளும் சிலப்பதிகாரத்தில் நீரின் முக்கியத்துவத்தை பற்றிக் கூறியுள்ளார்.

“இடியுடையப் பெருமழை எய்தா ஏகப்

பிழையா வினையுள் வினையுள் பெருவளம் சுரப்ப

மழைபிணித்து ஆண்ட மன்னவன" (சிலம்பு 26-28)

இப்பாடலும் “மழைபிணித்து ஆண்ட மன்னவன்” என்பதன் பொருள். முறையாகப் பெய்யும் மழைநீரை ஏரி, குளங்களில் சேமித்து அவற்றை தக்க முறையில் பயன்படுத்தி நிலவளம் மற்றும் நீர்வளம் இவற்றைப் பெறச் செய்து ஒரு நாட்டை வளப்படுத்தவே கடமையாகவும், அதுவே அவனுக்கு, நாடு போற்றும் புகழாகும் என்று இளங்கோவடிகள் கூறுகின்றார்.

பெரிய புராணத்தில் குடிநீர்த் திட்டம்

சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்தில் திருநாவுக்கரசர் மக்களுக்கு தொண்டு செய்து வாழ்ந்து வந்தார். என் கடன் பணி செய்து கிடப்பதே என்றும் கூறியுள்ளார்.

“குள நிறைந்த நீர்த்தடம் போல் குளிர் தூங்கும் பரப்பினதாய்

வளமருவும் நிழர்தரு தண்ணீர்பந்தர்”

(பெரியபுராணம் - நாவுக்கரசர் புராணம் - பா.வரி. 1787)

மேற்கண்ட பாடலில் மக்கள் செல்லக்கூடிய வழிகள், மற்றும் ஊர்தோறும் கிணறு, குளம், ஏரி, தண்ணீர் பந்தல் போன்றவற்றை அமைத்தும், மக்கள் குடிப்பதற்கு “குடிநீர்த் திட்டம்” என்ற அமைப்மையும் ஏற்படுத்தினார். மழைவரும் நாளில் மழைநீரைச் சேகரிக்க மழைநீர் சேமிப்பு முறையையும், இந்த நீர் அமைப்பு முறையில் சேகரித்தார். இதன்மூலம், சங்ககால மக்கள் மழைநீர் சேகரிப்பும், குடிநீர்த் திட்டமும் பயன்படுத்தி வந்தனர் என்பதை திருநாவுக்கரசர் பாடல் மூலம் நாம் அறிவோம்.

“புணரி தன்னையும் பொன்னிநல் நதி மிக்கநீர் பாய்ந்து

நன்னெடும் பெரும் தீர்த்த முன்றுடைய புனிதமாக்குதோர்

நலஞ்சிறந்தது வளம் புகார் நகரம்” (இயற்கை நாயனார் புராணம்-404)

என்ற பாடலை மருதநில அமைப்பிற்கு ஆற்றுவள ஆதாரமே சிறந்த நீர்வளமாகும். அவ்வாறு இருக்கையில் காவிரியின் மிக்கநீர் பாய்தலால் நாட்டில் உள்ள வயல்கள் எல்லாம் வளம்பெருகி மக்கள், சிறப்புற்று வாழ்ந்தனர் என்பதனை புகார் நகரம் எடுத்துரைக்கின்றது.

அகநானூற்றில் குளங்களைப் பாதுகாக்கும் மன்னர்கள்

“பெருங்குளக்காவலன் போல

அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே” (அகம் -25: 6-7)

என்ற பாடல்வரியில் பனியிலும், மழையிலும் அடர்ந்த இருள்சூழந்த நள்ளிரவிலும் உறக்கம் மறந்து குளம், ஏரி, கண்மாய் போன்ற நீர்நிலைகளை பாதுகாக்கும் பாதுகவலன் போல் மன்னர்கள் இருந்தார்கள் என்பதை அழகான உவமையுடன் ஒப்பு நோக்கப்படுகிறது. சிறு குழந்தையை தாயானவள் கண்ணை இமை காப்பதுபோல், நீர்நிலைகளை உறக்கம் துறந்து மன்னர்கள் பாதுகாத்தனர் என்பதனை இப்பாடல் மூலம் விளங்குகிறது.

நீர் மேலாண்மையில் அறிவியல் சிந்தனைகள்

சங்கப் புலவர் கபிலர் எந்த வடிவில் ஏரியானது இருக்க வேண்டும் என்பதைக் கூறுகிறார்.

“அறைம் பொறையும் மணந்தாய

எண்நாள் திங்கள், அணைய கொடுங்கரைத்

தென்நீர்ச் சிறுகுளம் கீழ்வதுமாதோ

தேர் வன் பாரிதன் பறம்பு நாடே" ( புறம் - 118:1 - 4)

கபிலரின் நண்பரான பாரிமன்னனது பறம்புமலையில் உள்ள ஏரியின் அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டுமெனில் சந்திரனின் எட்டாம்பிறை வடிவில் இருக்க வேண்டும். இந்த ஏரிக்கரையின் நீளம் குறைவாகவும், அதிக நீர் கொள்ளளவு கொண்டதும், பாதுகாப்பானதாகவும் அமைந்திருக்க வேண்டும். இதன்மூலம் சங்ககால மக்கள் ஏரியின் வடிவமைப்பானது எவ்வாறு இருக்க வேண்டும் என்ற அறிவியல் கண்ணோட்டத்துடன் வடிவமைத்துள்ளனர். அது மட்டுமில்லாது உடையாத ஏரிக்கரைகளை உருவாக்கவும் கற்றறிந்தனர். ஏரிக்கரைகளின் நீர் கசிவைத் தடுப்பதற்காக, அப்பகுதியில் கிடைக்கும் மண்ணோடு மண்ணை இறுக்கும் சிலப் பொருட்களைச் சேர்த்து அரைத்து ‘அரைமண்’ என்ற பெயரில் மண் கலவையை உருவாக்கி நீர் கசிவை அடைத்தனர். அப்படிப்பட்ட இந்த அரைமண்ணைத் தான் தற்போது சிமெண்டு என்று சொல்கிறார். இதற்கு உதாரணமாக வீராணம் ஏரியில் புதிய மதகு ஒன்றை அமைப்பதற்கு கரையை வெட்டியப் போது அந்த அரைமண் கலவைப் பாறைபோல் இறுகி இருந்ததை பார்க்கும்போது, சங்கதமிழரின் அறிவியல் சிந்தனை வியப்பூட்டும் வகையில் இருந்தது.

சுருங்கைப் பற்றிய அறிவியல் செய்தி

மணிமேகலையில் பன்னிரண்டாம் காதையான அறவாணர் தொழுதகாதை என்னும் பகுதியில் புத்ததேவன் தோற்றம் பற்றிக் கூறவரும் கூலவாணிகன் சாத்தனார் சுருங்கைப் பற்றியும் கூறியுள்ளார்.

“பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி

இரும் பெரு நீத்தம் புகுவது போல

அளவாச் சிறுசெவி அளப்படு நல்லறம்

உளமலி உவகையோடு உயிர் கொளப்புகும்"

(மணிமேகலை - அறவாணர் தொழுதக்காதை-12:1384 - 87)

சுருங்கை என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய நீண்டக்குழாய். இதனை தூம்பு என்றும் அழைப்பர். தூம்பு என்பது தூம்புகை என்றும் பின்னாளில் தும்பிக்கை என்றும் மாறிற்று. யானையின் தும்பிக்கைப் போன்ற அமைப்பைக் கொண்டே தூம்பு குளத்தில் உள்ள நீரை குளக்கரையின் அடிப்பபகுதி வழியாக வெளியே எடுத்துச்செல்ல இந்த தூம்பு பயன்படுகிறது. இந்த தூம்பானது மூங்கில், பனை மரங்களால் வேயப்பட்டு பூமிக்கடியில் சுரங்கவழியில் நீரானது எடுத்துச் செல்லப்பட்டது. சுரங்கத்தின் வழியே சென்றதாலும் கைப்போன்ற அமைப்பைக் கொண்டுள்ளதாளும் இதனை சுரங்கை என்று அழைத்தனர். மேற்கண்டப் பாடலில் பெருங்குளத்தின் இருமருங்கில் சுரங்கைச் சிறுவழியாக அமைத்து நீரைப் புகுத்தினர். சுரங்கையின் பயன் என்னவென்றால் நீரானது குளத்தில் விரைவாக நிரம்பும்போது குளக்கரை உடைந்துப் போகாமல் இருக்கவும், உபரிநீரை வெளியேற்றவும், நீரை பங்கீட்டு முறையில் பகிரவும், குளக்கரைப் பாதுகாப்பாக இருக்கவும், நீர் வீணாகாது தடுக்கவும் இந்த சுரங்கை அமைப்பு முறை பயன்பட்டது. இதுவே தற்போதுள்ள நிலத்தடி நீர்குழாய்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது. இவ்வாறு சங்க இலக்கிய மக்கள் அறிவியல் நுட்பத்தின் நீர் மேலாண்மையை கையாண்டு வந்தனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கற்சிறை: (கல்லால் ஆன அணை)

சங்க இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டில் மதுரைக்காஞ்சியில் கற்சிறைப்பற்றி கூறப்பட்டுள்ளது.

“வருவுனற் கற்சிறை கடுப்ப விடையறுத்து

ஓன்னா ரோட்டிய செருப்புகல் மறவர் ” (மதுரைக்காஞ்சி - 725-726)

மேற்கண்ட பாடல்களில் ஆசிரியர் மாங்குடி மருதனார் பெருகிவரும் பேரியாற்று வெள்ளத்தை கற்சிறைக்கொண்டு தடுப்பதுப்போல் தம்படைத்தாண்டி வருகின்ற பகைவர்களை தடுத்து நிறுத்தி அழிக்கும் அரண்களாக வீரர்கள் இருந்தனர் என்பதை இப்பாடல் வரி விளக்குகிறது. இதில் கற்சிறை என்பது வெள்ளம் நிறைந்த நீரைக் கற்களால் கொண்டு சிறைப்படுத்தினான் கரிகாலன். காவிரி நதியில் நீரானது கரைபுரண்டு ஓட அவற்றை தடுத்து நிறுத்தி கற்களால் ஆன கற்சிறை ஒன்றை உருவாக்கினான். நீரானது வீணாக ஓடி கடலில் சேராமல், விவசாயத்திற்காக நீரைப் பயன்படுத்த கற்சிறை ஒன்றை ஏற்படுத்தினான். அதுவே பின்னாளில் கல்லணை என்றானது. அதாவது (கல்லால் ஆன அணை கல்லணை) என்றும் அழைக்கப்பட்டது. இந்த அறிவியல் நுட்ப உண்மையை 19-ம் நூற்றாண்டின் இறுதியில் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில பொறியாளர்தான். கல்லணையின் இன்னொரு பெயரான கிராண்ட் அணைக்கட்டு என அழைத்து அவ்வணை உருவாதற்குரிய காரணத்தையும் கண்டறிந்தார். மணற்பாங்கான காவிரி ஆற்றுப்படுகையில் கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி இருகற்களுக்கு இடையில் அரைமண் என்ற தண்ணீரில் கரையாத களிமண் பசையை பூசி கற்களின் பிணைப்பை வலுவானதாகவும், இறுகச்செய்தும் இந்த கல்லணையை உருவாக்கினான் கரிகாலன். தொழில்நுட்பத்தையும் பறைசாற்றுவதாக உள்ளது என்று சொன்னால் மிகையாகாது. இதுவே உலகநாடுகளுக்கு எல்லாம் நீர் அணையை கட்டுவதற்கு முன்னோடியாகவும் உள்ளது.

பட்டினப்பாலைக் கூறும் உறைக்கிணறு

கிணறு தோண்டும் போது மண் சரிந்து விடாமல் இருக்க கிணற்றிற்கு உறைகள் இடும் பழக்கம் இன்றும் காணப்படுகிறது. கிணறு தோண்டுதலில் உள்ள நுட்பம் சங்காலம் தொட்டு இன்றளவும் நடைமுறையிலிருப்பது சங்க மக்களின் தொழில்நுட்ப அறிவினை பறை சாற்றக்கூடிய வகையில் அமைகின்றது. பட்டினப்பாலையில் இந்த உறை கிணறு பற்றி குறிப்பு உள்ளது.

“உறைக் கிணற்றுப் புறச்சேரி” (பட்டினப்பாலை -76 )

கிணறு அமைக்கும் போது அதனை ஆழமானதாகவும் அகலமானதாகவும் அமைப்பர். மண்ணைத் தோண்டிக் கொண்டு கீழ்நோக்கி செல்லும் போது மேலே மண் சரிந்துவிட வாய்ப்புண்டு. குறிஞ்சி, முல்லை, போன்ற நிலங்களில் இதற்கு வாய்ப்பில்லை. இந்நிலங்கள் மலைப்பாங்கானதாகவும், அடர்ந்த காடுகளுடனும் காணப்படுவதால் மண் இறுகி போய் இருக்கும் எளிதில் சரியாது இறுக்கமாகக் காணப்படும். ஆனால் நெய்தல் நிலம் மணற்பாங்கான நிலம் இந்நிலங்களில் கிணறு தோண்டினால் தோண்டத் தோண்ட மணல் சரிந்து விழாமல் இருக்க கிணற்றிற்கு உறைகள் அமைத்துள்ளனா. இந்த உறைகள் எல்லாம் அரைமண் கொண்டு உருவாக்கப்பட்டது.

மணிமேகலையும், தொல்காப்பியமும் கூறும் கற்சிறை

“சிறையும் உண்டோ செழும் புனல் மிக்குழி”

(ஒளவை துரைச்சாமி பிள்ளை (உ.ஆ) மணிமேகலை -5:19)

“வருவிசைப்புனலைக் கற்சிறை போல

ஒருவன் தாங்கிய பெருமையானும்” (தொல் - பொருள். புறத் -8)

என்ற பாடல் வரிகளானது சங்க மக்கள் நீரைத் தடுக்க கரும்பின் கழிகளையும், மணல் மூட்டைகளையும் பயன்படுத்தியுள்ளனர். அதற்கும் கட்டுப்படாமல் நீர் மிகுந்ததால் கல்லாலான தடுப்பை பயன்படுத்தியுள்ளனர் என்றும் இதனையே தொல்காப்பியமும் குறிப்பிடுகின்றது.

நீர்நிலைகளிலிருந்து நீரை வெளியேற்றும் கட்டுமான நுட்ப அமைப்புகள்

குளங்களில் சேமித்த நீரை பயன்பாட்டிற்காக வெளியேற்ற மதகு, மடை, புதவு, குமிழி போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி இருந்தனர்.

புதவு

புதவு என்பது நீர் மோதக்கூடிய இடமாக சங்க இலக்கியங்களில் கட்டப்பெறுகின்றது.

“இழுமென ஒலிக்கும் புனல் அம் புதவின்” (புறம் -176-5)

“நிறைகுளப் புதவின் மகிந்தனென் ஆகி” (புறம் 376:19-20)

“புனல்பொரு புதவின் உறந்தை எய்தினும்” (அகம் 237:14)

“புல்அரைக் காஞ்சி புனல் பொரு புதவின்” (மலை-449)

என்று ‘புதவு’ பற்றியக் குறிப்புகள் சங்க இலக்கியத்தில் இடம் பெறுகின்றன. புதவு என்பது

“தண்ணீர் வெளியேறும் சிறியவழி” (தமிழகப் பாசன வரலாறு ப.எண். 29) என்று தமிழகப் பாசன வரலாறு குறிப்பிடுகின்றது.

சுருங்கை

புதவு போன்றே “சுருங்கை” என்பது நீர்நிலைக் கட்டுமானங்களில் இடம் பெறும் தண்ணீரை வெளியேற்றும் அமைப்பாகும்.

“சுருங்கை என்பது புதவு என்பதும் தண்ணீர் வெளியேறும் சிறிய வழிகள்”

(தமிழகப் பாசன வரலாறு ப.எ. 29)

என்று கோமதி நாயகம் அவர்கள் குறிப்பிடுகிறார்.

மடை

“மடை என்பது தண்ணீரை வெளியேற்றும் ஒரு அமைப்பாகும். மடை என்பது ஆறு, குளம், ஏரி, கால்வாய்களில் தண்ணீர் வெளியேறுவதற்காக அமைக்கப்படுகிறது. இந்த மடையில் ஒரு கதவு இருக்கும் இக்கதவைத் திறந்தால் மடைதிறந்த வெள்ளம் போல் தண்ணீர் வெளியேறும். இந்த அமைப்பில் வெளியேறும் தண்ணீரின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ முடியாது” என்று கோமதிநாயகம் குறிப்பிடுகின்றார்.

பரிபாடலில் இந்த மடை பற்றிய பாடல் உள்ளது.

“வையை உடைத்த மடை அடைத்த கண்ணும்” (பரி 2;;;:66)

மடை என்ற அமைப்பு செயல்படும் விதம் குறித்த செய்திகள் கிடைக்கப்பெறவில்லை.

மதகு

“மதகு என்பது மடை போன்றே அமைக்கப்படுவது. ஆனால் இதன் கதவைச் சிறுகச் சிறுகத் திறக்கலாம். வெளியேறும் தண்ணீரின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ முடியும் இது தற்காலத் திருகு மதகு அடைப்பான் (ளுஉசநற புநயசைபெ ளுாரவவநசள) என்பதற்கு ஒப்பாகும்” என்று மதகின் அமைப்பை வரையறை செய்துள்ளனர்.

“நுரையுடன் மதகு தொறு இழிதரு புனல்” (மேலது 2:67)

என்ற பரிபாடல் வரி மதகு வழியாகத் தண்ணீர் வெளியேறியதாகக் குறிப்பிடுகின்றது. ஓட்டை மதகிலே தண்ணீர் போனால் தோட்டிக்கு என்ன வட்டம் என்ற பழமொழி சங்ககாலம் தொட்டு இன்றளவும் மதகு என்ற சொல் வழக்கிலிருப்பதை உணர்த்துகிறது.

குமிழி

“வனைகலத் திகிரியின் குமிழி சுழலும்

துனைசெலல் தலைவாய் ஓஇறந்து விரிக்கும்

காணுநர் வயாஅம் கட்குஇன் சேயாற்றின்” (மலை-474-76)

என்ற மலைபடுகடாம் பாடல் குமிழி வழியாகத் தண்ணீர் பாய்வது குயவனுடைய வனையும் மட்கலத்தின் சக்கரம் போல குமிழ்த்துச் சுழன்று சென்றது. விரைந்த செலவினையுடைய ஆறு என்று குறிப்பிடுகின்றது.

குமிழி என்பது, குளங்களிலிருந்து தண்ணீர் வெளியேற கல்லால் ஆன பெட்டியொன்றை அமைத்து, அதில் துளையிட்டு, அதன் வழியாகத் தண்ணீர் புகுந்து வரும் அமைப்பு ஆகும். மரத்தால் செய்யப்பட்ட சக்கை கூலம் இக்குமிழியின் துளையை அடைப்பார்கள். குமிழியின் துளை வழியாகத் தண்ணீர் போகும் போது ஒரு சுழல் உண்டாகும் என்று பாசன வரலாறு குறிப்பிடுகின்றது. இக்கருத்து மேற்கண்ட மலைபடுகடாம் பாடல் கருத்துடன் ஒப்புநோக்கத்தக்கதாக அமைகின்றது.

மடை, குமிழி, புதவு, மதகு, சுருங்கை ஆகியன தமிழர்களின் நீர்த்தேக்கக்கட்டுமான நுட்பங்களுக்குச் சிறந்த சான்றாதாரமாகத் திகழ்கின்றன. முன்னோர்கள் பயன்படுத்தியவை தான் சற்று நவீனமயமாக்கலுக்கு உட்பட்டு இன்னும் வழக்கில் இருந்து வருகின்றன. சில அமைப்புகள் எந்த நவீனத்திற்கும் ஆட்படாமல் அப்படியே இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது.

முடிவுரை

உலகின் நிலைபேற்றிக்கு காரணியாக விளங்கும் நீர் இருக்கும் நிலைகளின் பல்வேறு பெயர்களை உரிச்சொல் நிகண்டு குறிப்பிடுகின்றது.

“இலஞ்சி, கயங்கேணி கோட்டாக மேரி

மலங்கள் மடுவோடை வாவி - சலந்தரம்

வட்டங் தடாக நளின மடுப்பொய்கை

குட்டங் கிடங்கு குளம்” (உரிச் சொல் நிகண்டு" - நூ. எ. 21)

என இலஞ்சி, கயம், கேணி, கோட்டகம், ஏரி, மலங்கல், மடு, ஓடை, வாவி, சலந்தரம் வட்டம், நளினி, மடு, பொய்கை, குட்டம், கிடங்கு, குளம் என்று உரிச்சொல் நிகண்டு வகைப்படுத்துகிறது.

இவ்வாறு பலவகையான நீர் நிலைகளை உருவாக்கிய சங்கத்தமிழன் நீரை மேலாண்மை செய்யவும் அறிந்திருந்தான். பெரும்பாலும் சங்க இலக்கிய மக்கள் இயற்கைவளங்களுடன் இணைந்து வாழ கற்றந்தனர். நீரைப்பற்றி அறிந்த மக்கள் நீரின் முக்கியத்துவத்தை அறிந்து, அதை பயன்படுத்தி, பாதுகாத்து, சேகரித்து, சேமித்து வந்தனர். மன்னன் மட்டும் அல்லாது மக்களும் நீர் மேலாண்மைப்பற்றி அறிந்திருந்தனர். நீர் மேலாண்மையைப் பற்றி சங்க இலக்கிய நூல்கள் மட்டும் அல்லது தொல்காப்பியம் காப்பிய நூல்கள், புராண நூல்கள், உரிச்சொல் நிகண்டு, திருக்குறள் என பெரும்பான்மையான நூல்களில் நீர் மேலாண்மைப்பற்றி கூறியுள்ளது.

அதுமட்டுமல்லாது சங்க இலக்கிய மக்கள் நீர் நிலைகளின் பயன்பாட்டை அறிவியல் தொழில்நுட்பத்துடன் கையாண்டு வந்தனர். அது வியப்பூட்டும் வகையிலும், உலக நாடுகளுக்கு முன்னோடியாக தமிழர்கள் இருந்துள்ளார்கள் என்பதை நினைக்கும்போது பெருமிதமே. இதற்கான காரணம், சங்கத் தமிழர்கள் கட்டுமான வல்லுநர்களாகவும், சிறந்த நீர் மேலாண்மை ஆய்வாளராகவும் திகழ்ந்துள்ளார். இந்த கட்டுரையின் நோக்கமானது தொழில்நுட்பம் வளராத காலத்திலே தமிழர்கள் அறிவியல் சிந்தனையுடன் நீரை பாதுகாத்து சேமித்து வைத்தனர். ஆனால் தற்போதைய காலக்கட்டங்களிலும், வரும் காலத்திலும் நீரின் பங்களிப்பு மிக குறைவாகவும், அரிதாகவும் இருக்கும். எனவே நம் முன்னோர்களான தமிழர்கள் கையாண்ட நீர் மேலாண்மையை நம் சமுதாயம் கடைபிடிக்க வேண்டும் அதுமட்டுமல்லாது அறிவியல் நுட்பத்துடனும், மாசற்ற, எந்த வேதியியல் இரசாயனப் பொருட்கள் கலப்பின்றி சுத்தமான இயற்கையுடன் இணைந்து ஆரோக்கியமான சமூதாயத்தை உருவாக்கி, சுத்தமான நீரைப் அனைத்தும் உயிர்களுக்கும் பயன்பெறச் செய்வதே என்னுடைய நோக்கம். அதுவே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவமாக அமையும்.

துணை நூற்பட்டியல்

  1. திருக்குறள் - மு. வரதராசனார்
  2. சங்க இலக்கியம் - பேராசிரியர். வையாபுரி பிள்ளை
  3. சங்க இலக்கியம் மூலமும் உரையும் - சாரதா படிப்பகம் - புலியூர் கேசிகன்
  4. தமிழ் இலக்கிய வரலாறு - சி. சேதுராமன்
  5. பெரிய புராணம் - ம. இராசமாணிக்கனார்
  6. மணிமேகலை மூலமும் உரையும் - ச.வே. சுப்பிரமணியன்
  7. உரிச்சொல் நிகண்டு.

முனைவர் ஜெ.கவிதா,
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
பூ.சா.கோ.அர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,
பீளமேடு, கோயமுத்தூர் - 641004

Pin It