ஏமசந்திரர் எழுதிய அபபிரம்ச பிராகிருத இலக்கணத்தில் புறப்பாடல்கள் சில காணப்படுகின்றன. புறப்பாட்டுக்களில் பெரும்பான்மை போர் குறித்த செய்திகளாகவே உள்ளன. போர் விருப்பம் மிக்க வீரர்களையும் மன்னர்களுக்காகப் போரிடும் வீரர்களையும் களத்தில் புறமுதுகிடுதல் இழிவெனக் கருதும் மறவர்களையும் இப்பாடல்களில் காணமுடிகிறது. வீரயுகப் பாடல்களுக்கு உள்ள பண்புகளை இப்பாடல்களிலும் பார்க்கலாம். சமஸ்கிருத காவியங்களில் வரும் வீரர் (Heros) இயற்கை இகந்த பண்புகள் கொண்டவர்கள். கடவுளர்களின் துணையோடு போர் புரிகின்றவர்கள். அவர்களின் வலிமையும் போர்க்கருவிகளும் மனித ஆற்றலைக் கடந்த ஆற்றல் பெற்றவை. இத்தகைய கடவுள் தன்மை வாய்ந்த வீரர்களைப் பிராகிருத பாடல்களில் காணமுடியவில்லை. இதற்கு மாறாக,

‘இதோ, குதிரைகள்' இதோ போர்க்களம், இதோ கூர்மையான வாள்கள்; இங்கேதான் புறமுதுகு காட்டாத வீரனின் மறம் சோதிக்கப்படுகிறது (பக்கம் 52) என்று உண்மையான போர்க்களம் காட்சிப் படுத்தப்படுகிறது. "பகைவர் எண்ணிக்கை அதிகம் இருந்தால் என்ன? வானத்திலா சென்று ஒளிந்து கொள்ள முடியும்? இரு கைகள் உள்ளனவே, அவற்றால் பகைவரை அழித்து நாமும் மடிவோம்" என வஞ்சினம் உரைக்கும் வீர மறவர்களைக் காணமுடிகிறது. அவ்வகையில் இவை சங்கப் புறப் பாடல்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. அத்தகைய தொடர்புகள் சிலவற்றைச் சுட்டிக்காட்டும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.

எருதே இளைய நுகம் உணராவே

வீரம் செறிந்த ஆண் மக்களோடு காளைகளை ஒப்பிடுவது தமிழர் மரபு. வாளேந்தி யானையை எதிர்த்துக் களத்தில் போரிட்டு வெற்றி பெற்று மீளுதல் (ஆண் மகனாகிய) காளைக்குக் கடமை என்று பொன்முடியார் இயற்றிய புறநானூற்றுப் பாடலால் அறிந்து கொள்ள முடிகிறது. வீரர்களைக் காளைகளாக உருவகிக்கின்ற பாடல்கள் வடமொழி இலக்கியங்களில் இருக்கலாம்.

war sculptureஒன்றிரண்டு அபபிரம்சா பிராகிருதப் பாடல்களில் அன்யோக்தியாக (அன்ய உத்தி) காளைகளை வீரர்களுக்கு ஒப்பிட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒரு பாடல் பின் வருமாறு அமைந்துள்ளது. "ஓ எருதே! நீ நுகத்தைத் தாங்கிக்கொள். வலிமையற்ற இக் காளைகளால் நாங்கள் ஊக்கமிழந்துள்ளோம். நீயின்றி இச்சுமையை எப்பொழுதும் இழுக்க முடியாது. (அதனைச் செய்யாமல்) ஏன் கவலைப் படுகிறாய்.

ஒரு படைத்தலைவனை அல்லது மன்னனை நோக்கிப் பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. தலைவன் இல்லாமல் போர்க்களத்தில் வெற்றி இல்லை என்ற பொருள்படப் பாடல் உள்ளது. இன்னொரு பாடல் - இதுவும் அபபிரம்ச பிராகிருதப் பாடல் தான். "தலைவனின் பெருஞ்சுமையைப் பார்த்து எருது பெரிதும் துன்புற்றது. தன்னை இரு கூறுகளாகப் பிளந்து சகடத்தின் இரு பக்கங்களிலும் பிணைக்கக் கூடாதா? என்று நினைத்தது" இப்பாடலும் அன்யோக்தியாகப் பகைவர் பலரால் சூழப்பட்ட நம்பிக்கைக்குரிய வீரன் தன்னையே நொந்து கொள்வதாகப் பொருள் உணர்த்துகிறது. தான் ஒருவனாக நின்று பகைவரின் படைகளை எதிர்த்துப் போரிட இயலாமைக்கு வருந்துகிறான். தலைவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் அல்லது அவனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை சுடர்விடுவதை வீரனின் கூற்றில் காணமுடிகிறது. மேற்கண்ட பாடல்களின் கருத்தினை ஒரு புறநானூற்றுப் பாடலோடு ஒப்பிட்டுக் காணலாம்.

"எருதே இளைய நுகமுணராவே

சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே

அவல் இழியினும் மிசை ஏறினும்

அவணது அறியுநர்யாரென உமணர்

கீழ்மரத்து யாத்த சேம அச்சன்ன

இசைவிளங்கு கவிகை நெடியோய்"

இச்செய்யுள் அதியமான் நெடுமானஞ்சியின் மகனான பொகுட்டெழினியை ஔவையார் பாடியது. அவனது வீரச் சிறப்பையும் தம் படைவீரர்களை ஊக்கப்படுத்தித் தலைமையேற்று போர் நடத்தும் பாங்கினையும் சுட்டுகிறது, எருதுகள் இளையவை;

இதுநாள்வரை நுகத்தில் பூட்டப் படாதவை ஆனாலோ வண்டியில் பண்டம் மிகுதியாக ஏற்றப்பட்டிருக்கிறது. பள்ளத்தில் இறங்கும் போதும் மேட்டில் ஏறும்போதும் அவ்விடத்தில் எத்தகைய இடையூறு ஏற்படுமோ என்பது தெரியாது. அவ்வாறு இடையூறு ஏற்படுங்கால் உப்பு விற்கும் வணிகர் வண்டியைக் காப்பாற்ற கூடுதலாகச் சேம அச்சு ஒன்று வைத்திருப்பர். அது வண்டியைக் காக்கும் அத்தகைய சேம அச்சுக்கு இணையானவன் பொகுட்டெழினி என்று பொருள் அமைந்துள்ளது. இதற்கு இப்படி ஒரு குறிப்பு பொருளும் கொள்ள முடியும். இது வரை போர்க்களமே கண்டிராத இளைய வீரர்கள் பெரும்படையை எதிர் கொள்கிற நேரத்திலும் துன்புற்ற நேரத்திலும் சேம் அச்சு போல தான் முன்னின்று துணை நிற்பான் என்ற பொருளையும் காணலாம். அப்பிரம்சா பிராகிருதப் பாடல்களில் உள்ளது போல் புறநானூற்றுப் பாடல்களிலும் குறிப்புப் பொருள் இருப்பதை உணரமுடிகிறது.

தன் தோழற்கு வருமே

இன்னோரு அபபிரம்சா பாடலில் போர்க்களக் காட்சி பின்வருமாறு வர்ணிக்கப் படுகிறது "சரிந்த குடல்கள் கால்களைத் தளைத்திருந்தன. வெட்டுண்ட தலை தன் தோள் மீது சாய்ந்து வீழ்ந்து கிடந்தது. இந்நிலையிலும் கைகளில் வாளினை இறுக்கமாய்ப் பற்றிக்கொண்டு தலைவனின் இன்னுயிரைக் காப்பாற்ற போர்க்களத்தில் முன்னேறுகிறான் போர் மறவன்" இந்தச் சாயலில் புறநானூற்றுப் பாடல் ஒன்று காணப்படுகிறது. "சினங் கொண்ட பகைவர் செறிவாகச் சூழ்ந்த அவர்தம் பின்னணிப் படையைப் பிளந்து கொண்டு அவர்

அஞ்சியலறிச் சிதையுமாறு ஒரு வீரன் தனது கூர்மையான வேலைப் படைமுகம் நோக்கி ஏந்தி முன்னேறுகிறான். இவ்விடத்தே இவனைத் தடுத்து நிறுத்துங்கள் தடுத்து நிறுத்துங்கள் என்று ஏனைய மறவர்கள் கூறவும் அவர் தடையைக் கடந்து வீரன் செல்கிறான். கொலையுண்டு வீழ்ந்த மறவர்களின் குடல் தன் காலைத் தளைக்கவும் தன் கன்றை நேசிக்கும் கறவை பசுவைப் போல தன் தோழனைக் காப்பாற்ற விரைந்தான் (புறம் 275). உயிரைத் துச்சமெனக் கருதிப் பகைவர்க்கும் உயிர்க்கும் அஞ்சாது போரிடும் துணிவைக் காண்கிறோம். மேலும் போர்க்களத்தில் வெட்டுண்ட வீரர்களின் குடல் சரிந்து கால்களைப் பிணிக்கும் காட்சியை இருமொழிப் பாடல்களிலும் காணமுடிகிறது. வஞ்சித் திணையின் துறைகளுள் ஒன்று 'பேராண் பக்கம்' என்பதாகும். பகைவர் படையை ஒரு பொருட்டாகக் கருதாமல் போரிடும் வீரர்களின் ஆண்மையை விளக்குதல் என்பது இதற்குப் பொருள்.

வாளும் வேலும்

வாளும் வேலும் வில்லும் தமிழர் பயன்படுத்திய போர்க் கருவிகளாகும். தொல்காப்பியப் புறத்திணை­யியல் சூத்திரங்களில் இக்கருவிகளைக் குறித்த செய்திகளும் பயன்பாடும் அறியப்படுகின்றன. பகைவரைக் கொல்லுவதற்குக் காரணமாக விளங்கும் வாளினைப் போற்றுதல் வாள் மங்கலம் எனப்படும். இது பாடாண் திணையின் துறைகளில் ஒன்று. வேலின் சிறப்பைக் கூறலும் இத்திணையின் துறைகளுள் ஒன்று. வாகைத்திணையில் வேலினது வென்றி என்றொரு துறை உண்டு. அஃது பகைவரை வெல்லக் காரணமாக இருந்த வேலினைப் புகழ்தல் ஆகும். ஒள் வாள் வீசிய நூழில், இங்கு ஒள் வாள் வீசுதல் போரிடுதலைக் குறிக்கும் வாள் வாய்க் கவிழ்தல் என்ற பெயரிலும் வாள் வன்மை குறிப்பிடப் படுகிறது. "கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்" என்ற சூத்திரத்தில் படைக்கருவிகளின் பெயர்கள் வழங்கப்படுகின்றன. சங்கப் பாடல்களில் சொல்லவே வேண்டாம். பல பாடல்களில் போரக்கருவிகளின் பெயர்கள் திரும்பத்திரும்ப வந்துள்ளன. தெறுவர இருபாற் படுக்கும் நின்வாள் (புறம் -50) என்ற பாடல் வரி இருகூறாக்கும் உன்னுடைய வாள் என்ற பொருளில் வருகிறது. கூரிய நுனையையுடைய வேலும் மின் போல விட்டு விளங்கும் (புறம் -42:4) என்றும் வருகிறது.

போர் வீரர்களின் உடலில் அம்பு தைக்கப்பட்டிருந்தன. அக்காட்சி மடல் சேர்ந்த பனை போன்றும் ஆரம் சேர்ந்த வண்டிக்குறடு போன்றும் இருந்ததாம். (அதட்சிணாமூர்த்தி, 2016:238) சில அபபிரம்சா பாடல்கள் போரில் வாளின் சிறப்பையும் வேலின் பயன்பாட்டையும் உணர்த்துகின்றன. ஒரு பாடல், "ஓ, பிரியமானவரே வேலினைக் கரத்தில் ஏந்திக் கொள்ளுங்கள்; வாளினைக் கைவிட்டு விடுங்கள் அப்படியாயினும் உடையாத மண்டைவோடு (யாசிப்பதற்கு பரதேசிகளுக்குக் கிடைத்துவிட்டுப் போகட்டும்" இவ்வரிகள் வீரரின் வாள் வீச்சு பகைவரின் மண்டையைப் பிளந்து விடக்கூடும் என்று அவரைப் புகழ்ந்து (panegyrises) விவரிக்கிறது என்பர். இன்னொரு தலைவி தன் தலைவனின் வாள் வலிமையைப் பின் வருமாறு நயம்பட விவரிக்கிறாள். "என் தலைவனிடம் இரு குறைகளே உள்ளன. என்னிடம் பொய் சொல்லாதீர்கள்! அவர் கொடையளிக்கும் போது நான் மட்டுமே எஞ்சி இருப்பேன்; போரிடும் போது கைகளில் வாள் மட்டுமே எஞ்சி இருக்கும். "வீரனின் வலிமை வெளிப்படுத்தப்படுவதை இங்கு கவனிக்கலாம். வாள் வலிமை குறித்துத் தலைவி கூற்றாக வரும் மற்றொரு பாடல், "தம் படை புறமுதுகிடுவதையும் எதிரியின் படை முன்னேறுவதையும் கண்ணுற்ற என் காதலனின் போர்வாள் பிறைமதியைப் போல ஒளிவிட்டு சுழல்கிறது" என்று பெருமிதம் கொள்கிறாள். இவ்வாறு வாள் முதலிய போர்க் கருவிகளின் வருணனை இருமொழிப் பாடல்களிலும் காணப்படுகின்றன.

போரெனிற் புகலும் மறவர்

சங்ககாலத்தில் வாழ்ந்த மக்கள் போர் புரிதலை விரும்பினார்கள் போர்குணம் மிக்கவர்களாக விளங்கினர். மன்னர்களும் இதற்கு விதிவிலக்கன்று. நீர் மிகுந்தால் அதனைத் தாங்கும் அரணும் இல்லை. நெருப்பு மிகுந்தால் உயிர்களைப் பாதுகாக்கும் நிழல் செய்யும் நிழலுமில்லை. காற்று மிகுந்தால் அதனைப் பொறுக்கும் வலிமையுமில்லை. அவற்றை யொத்த சினம் பொருந்திய போரையுடையவன் வழுதி!

(புறம்-51:1-4) மேற்கண்ட பாடல் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியை ஐயூர் முடவனார் பாடியது. வழுதி எப்பொழுதும் சினம் பொருந்திய போரையுடையவன் என்பது குறிப்பிடத்தக்கது. கோவூர்கிழார் சோழன் நலங்கிள்ளியைக் குறித்துப் பாடிய பாடலில் (புறம் -31) அவ்வரசன் வெல்லும் போரினைச் செய்யும் பாடிவீட்டின் கண்ணே இருக்க விரும்புவான் என்று கூறுவார். அவனது மறவர்கள் வீரக் கழல் அணிந்தவர்கள். போர் என்று கேட்டாலே விரும்பும் பண்புடையவர் போர் செய்யச் செல்கின்ற நாடு நனி தொலைவில் இருந்தாலும் போகமாட்டேம் என்று கருதார். அப்பாடல் வரிகள் வருமாறு:

"நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப் பாசறை அல்லது நீயொல் லாயே

போரெனிற் புகலும் புனைகழல் மறவர்

காடிடைக் கடந்த நாடுநனி சேய்

செல்வேம் அல்லேம் என்னார்  (புறம் - 31)

போர் செய்து புகழ் பெறுதலை (நல்லிசை வேட்டம்) விரும்பினார்கள். புதிதாக மணம் செய்த ஆடவன் நெடுந்தொலைவிலுள்ள எல்லையைக் பாதுகாக்க அரசனிட்ட ஆணையைப் பரிசாக ஏற்றுக் கொள்கிறான் மனைவியின் பிரிவைக் குறித்து கவலைப் படவில்லை. இது பிராகிருதப் பாடல்

போரும் பொருள் ஈட்டலும்

அவ்வாறு போரிடுதல் நாட்டைக் கைப்பற்றவும், பொன்னாலான அணிகலன்களைக் கொள்ளையடிக்கவுமே ஆகும். "மாற்றாரின் மண்ணைக் கவர்தலும் அவர் செல்வத்தைக் கொள்ளையிடுதலும் அக்காலப் போரின் நோக்கங்களாக விளங்கின." எனவே புலவர் பெருமக்கள் பிறர்மண் உண்ணும் செம்மல் என்று மன்னர்களைப் பாராட்டினர் (அ.தட்சிணாமூர்த்தி,2016:229). சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் புலவர்க்குக் கொடுத்தற் பொருட்டு தன்னோடு மாறுபட்ட இரு வேந்தர்களின் நிலத்தை நோக்கினான். அவனுடைய நாடு பெரும் வீரத்தினால் புது வருவாயை உடையதாய் விளங்கிற்று. (பெருவிறல் யாணர்த்தாகி). அவன் பரிகாரமில்லாத கணிச்சி என்னும் ஆயுதத்தைச் சுழற்றி உயிர் வருத்தும் கூற்றம் போன்றவன். (புறம் -42) கிள்ளிவளவன் பகைவர்களது அரண்மனையை அழித்து அவர்களையும் கொன்று மகுடமாகச் செய்யப்பட்ட பசும்பொன்னால் தனது அடி பொலிய வீரக் கழல் செய்து புனைந்து கொண்டான்.

"நீயே பிறர் ஓம்புறுமறமன் னெயில்

ஓம்பாது கடந்தட்டவர்

முடிபுனைந்த பசும்பொன்னின்

அடிபொலி கழல் தைஇ வல்லாலனை (புறம் -40)

பகைவர் நாட்டைச் சூறையாடுதல் போர் தொடுத்தலின் நோக்கங்களுள் ஒன்று.

அபபிரம்சா பாடல்களில் சில எடுத்துக்காட்டுகள்: "வாளின் துணையால் எங்குப் பெருஞ்செல்வம் ஈட்டமுடியுமோ, ஓ.பிரியமானவளே! அந்நாட்டிற்குக் குடியேறி விடுவோம் போர்கள் இன்றி வறுமையுற்றோம். அவையின்றி செல்வமும் வளமுமில்லை." (பக்கம் - 89). "ஊழ் நம்மை அலைக்கழிக்கலாம். கோள்கள் நம்மை இன்னலுக்கு உள்ளாக்கலாம். ஓ, பிரியமானவளே! மனம் தளர்ந்து விடாதே தகுந்த போர் வரும் வேளையில் செல்வத்தை ஒரு விலை மாதைப் போல ஈட்டுவேன் (பக்கம் -88). செல்வம் ஈட்ட விழையும் (desire for wealth) ஒரு மறவன் தன் தலைவியை ஆற்றுவதாகப் பாடல் அமைந்துள்ளது. தலைவனின் போர் வேட்கையும் வெளிப்படுகிறது.

கூற்று வெகுண்டன்ன வீரம்

மறம் என்ற சொல்லுக்குச் சீற்றம், சினம் என்றெல்லாம் பொருள் உண்டு. கூற்றுவனின் சீற்றத்துக்கு வீரர்களின் சினம் ஒப்பிடப்படுவதை இருமொழி மரபிலும் காணமுடிகிறது.

"நீயே மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்

கூற்றுவெகுண்டன்ன முன்பொடு

மாற்றிரு வேந்தர் மண்ணோக் கினையே"

இப்புறநானூற்று வரிகளில் கணிச்சி எனும் படைகலனால் உயிர்களைப் பிணிக்கும் சினமிக்க எமனோடு வேந்தன் ஒப்பிடப்படுகிறான். வேறொரு அபபிரம்சா பாடலில், நீயும் நானும் இணைந்து களம் புகுந்தால் யார் வெற்றியைப் பெறமுடியும் எமனுடைய தலைவியின் கூந்தலைப் பற்றி இழுத்தவன் நிம்மதியாக எப்படி இருக்கமுடியும்? என்று வருகிறது. இங்கும் தமிழ்ப் பாடலில் வருவது போல் கூற்றுவனின் சீற்றம் வீரர்களுக்கு விசேடித்து வந்துள்ளது. வீரயுகப் பாடல்கள் சினத்தை (Wrath) வெளிப்படுத்தும் தன்மையின.

களிரோடு போரிடல்

யானைகளை எதிர்த்து அஞ்சாமல் போரிடுவது வீழ்த்துவது அதனாலே மடிவதும் ஆகிய செய்திகள் பழந்தமிழ் இலக்கியங்களில் ஏராளம் உள்ளன. பொன்னால் செய்யப்பட்ட முகப்பட்டம் அணிந்த பெருமை பொருந்திய களிறு தன் கூரிய தந்தத்தால் குத்தினாலும் அஞ்சி புறங்காட்டி ஓடாத பீடுடைய மறவர்களாய் இருந்தனர். (புறம்-287) அபபிரம்சா பாடலில் ஒரு தலைவி தன் தலைவனின் வீரம் குறித்துப் பின் வருமாறு கூறுகிறாள். "என் தலைவனின் வீரத்தைச் சிங்கத்தோடு ஒப்பிடுவதை நான் இகழ்வாகக் கருதுகிறேன். ஏனெனில் சிங்கம் காட்டில் திரியும் (பாதுகாப்பற்ற) யானைகளைக் கொல்கிறது ஆனால் என் காதலன் வீரர்கள் சூழ வரும் யானைகளை மாய்க்கிறான்" (அப்பிரம்சா இலக்கணம் பக்:115) சிங்கத்தை ஒத்த வலிமையுடையவன் என்பதைத் தன் மானத்திற்கு இழுக்காகக் கொள்கிறாள். இன்னொரு தலைவி, "நூறு களங்களில் போர் செய்து புகழ் பெற்ற தன் காதலன் அங்குசத்தால் அடக்கமுடியாத மதம் பிடித்த யானையை எதிர்த்துப் போரிடுவதைப் பாருங்கள் (பக்கம்-62) என்று பெருமையுடன் கூறுகிறாள். மற்றொரு அப்பிரம்ச பாடல், "அன்னையே எனது மார்பகங்கள் தலைவனை நோக்க தலைவனோ களத்தில் யானைகளை எதிர்த்து மத்தகத்தைப் பிளந்து கொண்டு இருக்கிறான்" (பக்கம்-97). என்று தலைவி கூறுகிறாள். களிறு எறிந்து போர் புரியும் திறத்தை இரு மரபுகளிலும் காண்கிறோம்.

முடிவுரை

மேற்கண்ட பிராகிருதப் பாடல்களைக் கவனித்தால் அவை நாடகப் பாங்கில் அமைந்து தனிக்கூற்றாக (dramatic monologue) விளங்குவதைக் காணலாம். கதை மாந்தர்கள் தனக்குள்ளேயோ பிறர் கேட்கப் பேசுவதைப் போலவோ கூற்றுகள் அமைந்துள்ளன. சங்க இலக்கியப் பாக்களிலும் நாடகப் பாங்கு அமைந்துள்ளதனைப் பலரும் குறிப்பிட்டுள்ளனர். (தெ.பொ.மீனாட்சி சுந்தரன், 1976; பக் 7) பிராகிருதப் பாடல்களில் மன்னர்களைப் குறித்த செய்திகள் வருகின்றன. ஆனால் மன்னர் பெயர்கள் ஏதும் பார்க்க முடியவில்லை.

தமிழ் புறப்பாடல்கள் போல வரலாற்றுச் செய்திகள் இல்லை. சங்ககாலப் பாடல்கள் வீரயுக காலத்தைச் சார்ந்தவை என்று பேரா வையாபுரி பிள்ளை, கலாநிதி கைலாசபதி போன்றோர் சுட்டிக்காட்டி ஆய்வுகள் செய்துள்ளனர். போர் செய்து புகழ் பெறுதல், போர் விருப்பம், செல்வம் ஈட்டவும் பிறர் நாட்டை அடிமைப்படுத்தவும் போர் செய்தல் உயிரைச் துச்சமாக மதித்தல், மன்னனுக்காகப் போர் புரிதல் மறக்குடி மாண்பு இவை யாவும் வீரயுகத்திற்கான பண்புகள் ஆகும். இப் பண்புகள் மேற்கண்ட அப்பிரம்சா பிராகிருதப் பாடல்களிலும் இருப்பதைக் காணலாம். ஆனால் இப்பாடல்கள் நாட்டுப்புறங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு இலக்கண மேற்கோள்களாகக் காணப்படுபவை. மக்கள் மொழிக்கு எழுதப்பட்ட இலக்கணத்தில் காணப்படுபவை. மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த இந்தோ -ஆரிய மக்கள், குறிப்பாக அடித்தட்டில் வாழ்ந்த மக்கள், திராவிட மொழிகளைத்தான் ஒரு காலத்தில் பேசினார்கள் என்று கருத்துரைக்கப் படுகிறது.

பின்னரே இந்தோ-ஆரிய மொழிகளுக்கு மாறினார்கள் (காண்க. வ. ஐ. சுப்பிரமணியம், 2007;பக் 50). அவ்வாறெனில் தமிழ் புறப் பாடல்கள் தமிழ்ப் பாணர்களால் வடமொழிக்குள் ஊடுருவிச் சென்றிருக்கலாம்.

துணை நூல்கள்

1.   சுப்ரமணியம், வ.அய். (2007). மொழியும் பண்பாடும் (தொகுதி ஒன்று), தொகுப்பு ஜெயா அரிகரன், அடையாளம் வெளியீடு, புத்தாநத்தம், திருச்சி மாவட்டம்

2. தட்சிணாமூர்த்தி, அ.(2016) சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிலிமிடெட் சென்னை -98

3. வையாபுரிப்பிள்ளை, எஸ்.(2019) தமிழ் இலக்கிய சரிதத்தில் காவியகாலம் அலைகள் வெளியீட்டகம், சென்னை -89(மறுபதிப்பு)

4. Apabhramsa of Hemacadra (1982). Prakrit Text Book Society, Ahmedabad-9.

5. Kailasapathy, K.(1968). Tamil Heroic Poetry Kumaran Book House, Colombo(Reprint).

6. Meenakshisundaram, T.P. (1974). Tamil-A Birds Eye View. Makkal Nalvaalvu Manram, Madurai.

- ஆ.கார்த்திகேயன், ஓய்வுபெற்ற பேராசிரியர்.

Pin It