ATM 450இந்தியாவின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி 2016 நவம்பர் 8 அன்று புழக்கத்திலிருந்த ரூ.1000, ரூ.500 பணத்தாள்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்து ஓராண்டாகிறது.

இந்தப் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் குறிக்கோள் கருப்புப் பணத்தையும் கள்ளப்பணத்தையும் ஒழிப்பது, தீவிர வாதிகளுக்குப் பணம் கிடைக்காமல் தடுப்பது, ஊழலை ஒழிப்பது என்று தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய போது கூறினார்.

இந்த நாட்டில் தேச விரோதிகளும், சமூக விரோதிகளும் பதுக்கி வைத்துள்ள பணம் ‘பீத்த காகிதமாகி’விடும் என்றார். ஆனால் மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை கடந்த ஓராண்டில் படுதோல்வியடைந்திருப்பதுடன், மக்களைச் சொல்லொணா இன்னல்களுக்கு ஆளாக்கி, நாட்டின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்திருக்கிறது.

எந்தவொரு அரசும் ஒரு புதிய நடவடிக்கையை எடுப்பதற்குமுன் அதனால் ஏற்படக்கூடிய விளைவு களை ஆராய்ந்த பிறகே செயலில் இறங்கும். நரேந்திர மோடி இவ்வாறெல்லாம் ஆராயாமல், தனக்கே உரிய ஆணவப் போக்குடன் பணமதிப்பு நீக்க நடவடிக்கை யைச் செயல்படுத்தினார். 2016 நவம்பர் 4 அன்று இந்தியாவில் புழக்கத்தில் இருந்த மொத்தப் பணத்தின் மதிப்பு ரூ.17.97 இலட்சம் கோடியாகும். இதில் ரூ.1000, ரூ.500 பணத்தாள்களின் மதிப்பு ரூ.15.44 இலட்சம் கோடியாகும். அதாவது இது 86.4 விழுக்காடாகும். ஒரே இரவில் 86 விழுக்காடு பணத்தின் மதிப்பை நீக்கு வது எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து மோடி கவலைப்படவில்லை.

பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியிட்ட நாளில் பண மதிப்பிழந்த ரூ.15.44 இலட்சம் கோடிக்கு ஈடுசெய்யும் பொருட்டு அச்சிடப்பட்ட புதிய ரூ.2000 தாள்கள் ரூ.6.5 இலட்சம் கோடிக்கு மட்டுமே ரிசர்வ் வங்கியிடம் கையிருப் பில் இருந்தது. அப்போது புதிய 500 ரூபாய் தாள் ஒன்றுகூட ரிசர்வ் வங்கியிடம் இல்லை.

ஏடிஎம் (ATM)களைப் புதிய 2000 ரூபாய் தாள்களை அளிக்கும் வகையில் மாற்றியமைக்க மூன்று வாரங் களுக்கு மேலாகியது. அதனால் தங்களிடம் இருந்த - மதிப்பிழந்த பணத்தாள்களை வங்கிகளில் மாற்றிக்கொள்ள மக்கள் கூட்டம் திரண்டது. ஏடிஎம் இயந்திரங்கள் மாற்றி யமைக்கப்பட்ட பின் அவற்றில் பணம் எடுக்க மணிக் கணக்கில் மக்கள் வரிசையில் நின்றனர். இவ்வாறு பல மணிநேரம் வரிசையில் நின்றவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்து மாண்டனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கை சுனாமியைப் போல் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது.

மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அரசியல் கட்சிகளும், சமூகச் செயற்பாட்டாளர்களும், பொருளியல் வல்லுநர்களும் கடுமையாக எதிர்த்தனர். 2016 நவம்பர் 13 அன்று கோவாவில் நடந்த நிகழ்ச்சி யில் பேசிய மோடி, “திசம்பர் 30 வரை - அதாவது 50 நாள்கள் பொறுத்துக் கொள்ளுங்கள், என்னுடைய நோக்கத்திலோ, செயற்பாட்டிலோ ஏதேனும் தவறு இருந்தால் என்னைப் பொது இடத்தில் தூக்கிலிடுங்கள்” என்று பேசினார், 30.8.2017 அன்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் பணமதிப்பு நீக்க நட வடிக்கை படுதோல்வியடைந்துவிட்டது என்பது அம்பல மாகியுள்ளது. இத்தோல்விக்குப் பொறுப்பேற்று மோடி, தற்கொலை செய்து கொள்வாரா?

பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்தவர் களை பாரதிய சனதாக் கட்சியினர் ‘மோசடிப் பேர்வழி கள்’, ‘தேச விரோதிகள்’ என்று பழிதூற்றினர். மேலும் எல்லையில் நமது படை வீரர்கள் கடுங்குளிரில் நின்று கொண்டு நாட்டைக் காத்து வருகின்றனர். ஏடிஎம்-இல் பணம் எடுக்க ஒருநாள் நிற்கக் கூடாதா என்று ‘தேச பக்தி’யுடன் கேள்வி கேட்டார்கள்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை நடைமுறைக்கு வந்ததும், மக்களிடம் இருந்த பணம் செல்லாததாகி விட்டதால் அன்றாடச் செலவுக்கே பணம் இல்லாமல் தத் தளித்தனர். வங்கியில் உள்ள தங்கள் பணத்தையும் எடுக்க முடியாத நிலை. பல மணி நேரம் கால்கடுக்க நின்றாலும் ரூ.2000, ரூ.5000க்குமேல் தங்கள் பணத்தை எடுக்க முடியாது. ரூ.2000 தாள்களாகத் தரப்படும் பணத்துக்குச் சில்லரை கிடைக்காமல் திண்டாடினர்.

நவம்பர் மாதம் இந்தியா முழுவதும் ஒருபுறம் அறு வடையும், மறுபுறம் அடுத்த பயிருக்கான விதைப்பும் உழவர்களால் மேற்கொள்ளப்படும் காலம். விளை பொருள்களை விற்க முடியாமல், அடுத்த பயிருக்கான உழவுப் பணிக்கும், இடுபொருள்கள் வாங்குவதற்கும் ரொக்கப் பணம் இல்லாமல் தவித்தனர். மருந்துக்கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் மதிப்பழிந்த பணத்தாள்களை மாற்றிக்கொள்ள அனுமதித்த நடுவண் அரசு இந்தியாவில் உள்ள 93,000 வேளாண் கூட்டுற வுச் சங்கங்களில் பணத்தை மாற்றுவதற்குத் தடை விதித்தது. அதனால் வேளாண்மைத் தொழிலும், ஊழவர்களின் வாழ்நிலையும் கடுமையாக பாதிக்கப் பட்டதுடன், கிராமப்புறப் பொருளாதாரமே சீர்குலைந்தது.

புதிய ரூ.2000, ரூ.500 தாள்கள் புழக்கத்திற்கு வரு வதற்கு ஆறு மாதங்களுக்கு மேலானதால், சிறுகுறு தொழில்களில் 35 விழுக்காடு வேலையிழப்பும் 50 விழுக்காடு வருவாய் இழப்பும் ஏற்பட்டன. சில்லரை வணிகம், உணவு விடுதிகள், தேநீர்க்கடைகள் முதலான வற்றில் விற்பனை சரிந்தது. கட்டுமானத் தொழில் அடி யோடு சாய்ந்தது. கட்டுமானத் தொழிலில் கூலிவேலை செய்த பிற மாநிலத்தவர் தங்கள் சொந்த மாநிலங் களுக்குத் திரும்பினர். இந்தியாவில் உழைப்பாளர் களில் 92 விழுக்காட்டினர் அமைப்புசாரா தொழில்களி லேயே வேலை செய்கின்றனர். இவர்களுக்குக் கூலி பணமாகவே தரப்படுகிறது. கடுமையான பணத்தட்டுப் பாடு ஏற்பட்டதால் அமைப்புசாரா தொழில்கள் அனைத் தும் முடங்கின. இவற்றிலிருந்து மீண்டெழுவதற்கு முன்பாகவே ஜி.எஸ்.டி. என்கிற இரண்டாவது தாக்கு தலுக்குள்ளாகி தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் கேடுகளைக் கண்கூடாகக் கண்ட பிறகும் நரேந்திர மோடியும் பா.ச.க. வினரும் ரூ.4 இலட்சம் கோடி முதல் 5 இலட்சம் கோடி வரையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மாற்ற முடியாமல், அவை மக்கி மண்ணோடு மண்ணாகி விடும் என்று ஆரூடம் கூறிவந்தனர். ஆயினும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பணமதிப்பு நீக்க நடவடிக் கையின் தோல்வியைத் திசைத்திருப்புவதற்காக, முன் னெச்சரிக்கை உணர்வுடன், பணமதிப்பு நீக்க நடவடிக் கையின் நோக்கம், டிஜிட்டல் இந்தியாவை - ரொக்கம் இல்லாத பரிவர்த்தனையை வளர்த்தெடுப்பதேயாகும் என்று கூறிவந்தார்.

ரூ.2000 புதிய பணத்தாள்கள் புழக்கத்துக்கு வந்த அடுத்த மாதமே போலி ரூ.2000 தாள்கள் பல இடங் களில் பிடிப்பட்டன. மொத்தம் உள்ள பணத்தில் கள்ளப் பணம் எனப்படும் போலிப் பணத்தாள் ரூ.400 கோடி அளவிற்கே உள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக் கின்றன. புதிய நவீன தொழில்நுட்ப உத்திகளுடன் அச்சடிக்கப்பட்டதாகக் கூறப்படும் ரூ.2000 தாளைப் போன்ற போலித் தாள்கள் புழக்கத்துக்கு வந்ததால், கள்ளப்பண ஒழிப்பு என்கிற முழக்கம் மூச்சற்றுப் போனது.

2016 திசம்பர் மாதம் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெறுவதாகயிருந்த இடைத்தேர் தலின் போது, புதிய ரூ.2000 தாள்கள் வாக்காளர் களுக்கு வழங்கப்பட்டன. வாக்காளர்களுக்கு அளிப்பதற் கான ரூ.89 கோடியில் எந்தெந்த அமைச்சர்களுக்கு எவ்வளவு பணம் அளிக்கப்பட்டது என்கிற பட்டியல் அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை யினரால் கண்டெடுக்கப்பட்டது. இப்பணம் புதிய இரண்டா யிரம் ரூபாய் தாள்கள் தானே!

மணல் கொள்ளையனான - அமைச்சர் பன்னீர் செல்வத்தின் கூட்டாளியான சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் ரூ.170 கோடிக்கு ரொக்கமாகப் பணம் கைப்பற்றப் பட்டது. அதில் புதிய ரூ.2000 தாள்கள் கட்டுக்கட்டாகக் கிடந்தன. இது பானைச் சோற்றுக்குப் பதம் ஒரு சோறு என்பது போன்றதாகும். பணமதிப்பு நீக்கத்தால், மக்கள் தங்களிடம் உள்ள சிறுதொகைக்கு வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்காகக் கால்கடுக்க நின்று கொண்டிருந்த நேரத்தில், இந்தியா முழுவதும் சேகர் ரெட்டியைப் போல் கருப்புப் பணத்தை வைத்துக் கொண்டிருந்தவர்கள் ரிசர்வ் வங்கி வழியாகவும் மற்ற வங்கிகள் வழியாக வும் தங்கள் கருப்புப் பணத்தை எளிதாக வெள்ளையாக மாற்றிக் கொண்டனர்.

இதை ரிசர்வ் வங்கி 30.8.2017 அன்று வெளியிட்ட அறிக்கை திட்டவட்டமாகத் தெளிவுபடுத்துகிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குமுன் ரூ.15.44 இலட்சம் கோடி மதிப்புக்கு ரூ.1000, ரூ.500 பணத்தாள்கள் புழக்கத்தில் இருந்தன. 2017 சூன் 30 முடிய இதில் ரூ.15.28 இலட்சம் கோடி வங்கிக்குத் திரும்பிவிட்டது. இவ்வாறு வங்கியில் மாற்றப்படாமல் உள்ள பழைய பணத்தாள் மதிப்பு ரூ.16,000 கோடி மட்டுமே என்று ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது. ரூ.4 இலட்சம் கோடி முதல் ரூ.5 இலட்சம் கோடி வரையில் உள்ள கருப்புப் பணம் வங்கிக்கு வராது என்று மோடி அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது என்னவாயிற்று? 98.96 விழுக்காடு பணம் வங்கிகளில் மாற்றப்பட்டுவிட்ட நிலையில் கருப்புப் பணத்தை ஒழிப்பதே பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் குறிக்கோள் என்கிற பேச்சும் பொய்யாகிவிட்டது.

ரிசர்வ் வங்கியின் அறிக்கை வெளியான அன்றே நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஒரு அறிக்கை வெளி யிட்டார். அதில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் நோக்கம் கருப்புப் பணத்தைக் கைப்பற்றுவதல்ல; மாறாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை வங்கிகளில் மாற்றச் செய்வதன் மூலம் அதை வெள்ளை யாக்கி, நாட்டின் பொருளாதாரத்தில் ஈடுபடுத்தச் செய்வ தேயாகும் என்று கூறியிருக்கிறார். அதாவது கருப்புப் பணம் வங்கியில்  செலுத்தப்பட்டதே பெரிய சாதனை என்கிறார். இதைவிட மானங்கெட்ட விளக்கத்தை வேறு எவராலேனும் தரமுடியுமா?

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் மற்றொரு நோக்கம், டிஜிட்டல் பரிவர்த்தனையை விரிவுபடுத்துவது, அதன்மூலம் ஊழலை ஒழிப்பது என்று அருண் ஜேட்லி கூறிவந்தார். 6.9.2017 நாளிட்ட “மணிகண்ட் ரோல் நியூஸ்” என்கிற செய்தி ஏட்டில் “2016 நவம் பரில் ரூ.94 இலட்சம் கோடியாக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனை 2017 மார்ச்சு மாதம் ரூ.150 இலட்சம் கோடியாக உயர்ந்தது. ரொக்கப் பணத் தட்டுப்பாடு தீர்ந்தவுடன் 2017 ஆகத்து மாதம் இது ரூ.110 இலட்சம் கோடியாகக் குறைந்துவிட்டது” என்று கூறப்பட்டுள்ளது. அருண் ஜேட்லி கூறிவருவது உண்மை அல்ல என் பதை இது புலப்படுத்துகிறது. அதேபோல் வரி செலுத்து வோர் எண்ணிக்கை பணமதிப்பு நீக்கத்தால் 25 விழுக் காடு அதிகமாகியிருக்கிறது என்பது அருண்ஜேட்லியின் மற்றொரு வாதம். உண்மையென்னவெனில், 2015-2016ஆம் ஆண்டில் வரிசெலுத்துவோர் எண்ணிக்கை 27 விழுக்காடு உயர்ந்துள்ளது என்பதாகும்.

பணமதிப்பு நீக்கத்தால் தீவிரவாதிகளுக்குப் பணம் கிடைப்பது தடுக்கப்பட்டிருப்பதற்கு எடுத்துக்காட்டாக, காஷ்மீரில் தீவிரவாதிகளுக்குப் பணம் கிடைக்காததால் இராணுவத்தினர்மீது இளைஞர்கள் கல்லெறியும் நிகழ்ச்சிகள் குறைந்திருப்பதைச் சுட்டிக்காட்டும் அருண் ஜேட்லியின் ‘மேதாவித்தனத்துக்கு’ என்ன பரிசு வழங்கலாம்?

பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு (ழுனுயீ) 7.7 விழுக்காடு என்பதிலிருந்து 5.7 விழுக்காடாகக் குறைந்திருக்கிறது. “மன்மோகன் சிங் ஆட்சியில்கூட எட்டு முறை ஜி.டி.பி. குறைந் திருக்கிறதே” என்று எரிச்சலடைகிறார் மோடி. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசு முதலீட்டு விகிதம் கடந்த எட்டு ஆண்டுகளாக 35 விழுக்காடாக இருந்தது. தற்போது இது 30 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அதேசமயம் இந்திய கோடீசுவரர்களின் சொத்து மதிப்பு 26 விழுக்காடு உயர்ந்துள்ளது.

15.8.2017 செங்கோட்டையில் சுதந்தர நாள் உரையாற்றிய நரேந்திர மோடி, “ஏழை மக்களையும் தேசத்தையும் கொள்ளையடித்துப் பணம் சேர்த்தவர் கள் நிம்மதியாகத் தூங்க விடாமல், கருப்புப் பணத் துக்கு எதிராக நடுவண் அரசு நடவடிக்கை எடுத்துவரு கிறது” என்று பேசினார். வாய்ச்சவடாலுடன் எப் போதும் பொய்யே பேசும் நரேந்திர மோடியின் முகத்திரையைக் கிழிப்போம்; ஆட்சியிலிருந்து மக்கள் பேராட்டங்கள் மூலம் விரட்டியடிப்போம்.

Pin It