அன்பார்ந்த தமிழகப் பெருமக்களே!

தமிழகம் வெள்ளையர் கால ஆட்சி 250 ஆண்டு களிலும், 1947 முதல் 1967 காங்கிரசு ஆட்சிக் காலத் திலும், 1967 முதல் இன்று வரையிலும் திராவிடக் கட்சி ஆட்சிகளிலும் வேளாண்மை சார்ந்த நாடாகவே தொடர்ந்து வைக்கப்பட்டுவிட்டது.

இதற்கு விதிவிலக்காக அமைந்தது 1957 முதல் 1963 வரையில் ஆண்ட காமராசர் ஆட்சிக் காலமே ஆகும். காமராசர் ஆட்சிக்குப் பிறகு தமிழகத்தைத் தொழில்வள நாடாக ஆக்கிட திராவிடக் கட்சி ஆட்சிகள் எந்தப் பெரிய முயற்சியையும் செய்யவில்லை.

அதேபோல் வேளாண்மைக்கு இன்றியமையாத மின் உற்பத்தித் துறையிலும், போதிய மின் உற்பத்தி செய்ய எந்தப் பெரிய முயற்சியையும் செய்யவில்லை.

போதாக்குறைக்கு நீர் ஆதாரங்களான 40,000 பெரிய, சிறிய ஏரிகளையும்-அந்தந்த ஏரியின் பரப்பளவையும், கொள்ளளவையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, முடிந்த வரையில், கடந்த 50 ஆண்டுகளில் 30,000 ஏரிகளையாவது அரசு தூர்வாரிக் காப்பாற்றிடவில்லை.

அதேபோல், வனவளம் நிறைந்த தமிழ்நாட்டை வனத்துறை அதிகாரிகளுடனும், மர வணிகர்களுடனும் சேர்ந்து கொண்டும்; அயல்நாட்டுக் கடனைப் பெற்று அந்தப் பணத்தைக் கொண்டு ஏரிகளிலும், பாதுகாக்கப்பட்ட அரசு வனங்களிலும் நிழல் தராத பயனற்ற மரங்களை வளர்ப்பதில் அக்கறை காட்டினர். அந்த அயல்நாட்டுப் பணத்தைத் திராவிட ஆளுங்கட்சி யினரும், எதிர்க்கட்சியினரும், வனத்துறை அதிகாரிகளும் பங்குபோட்டுக் கொண்டனர். மேலும் தமிழக ஏரிகளில் கருவேல மரங்களை வளர்த்து ஏரிகளைப் பாழடித்தனர்.

மின்சாரத்தை இலவசமாக வேளாண்மைக்கு கொடுக்கத் தெரிந்த திராவிடக் கட்சி ஆட்சிகளுக்கு - நீர் மின்சாரம், அனல் மின்சாரம், எரிவாயு, காற்றாலை, மத்தியத் தொகுப்பு வகைகளில் மட்டும் ஏறக்குறைய 8000 மெகா வாட் உற்பத்தியை உண்டாக்க முடிந்த தமிழக அரசு, மற்ற வகைகளில் 4000 கிலோ வாட் மின்சாரத்தை மட்டுமே பெறுகிறது. சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு தி.மு.க. ஆட்சியும் முன்னுரிமை தரவில்லை; அ.தி.மு.க. ஆட்சியும் முன்னுரிமை தரவில்லை.

2016-2017இல் தென்மேற்குப் பருவ மழையும், வடகிழக்குப் பருவ மழையும் பொய்த்துவிட்டன. அதனால் தமிழகம் எங்கும் கடும் வறட்சி ஏற்பட்டு, புன்செய்ப் பயிர்களும், நன்செய் பயிர்களும் கருகின. குடிநீர் பஞ்சம் எல்லா ஊர் மக்களையும் திண்டாட்டத் தில் விட்டுவிட்டது.

144 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட இந்தக் கடுமையான வறட்சி மிக மிகக் கொடுமையானது. எப்படி?

மேட்டூர் அணை முதல் பெரிய பாசன ஏரிகள் உட்பட, எந்த நீர்நிலைக்கும் இன்றுவரை இந்த ஆண்டில் போதிய நீர் வரவில்லை. இந்த 2016-2017 ஆண்டு சராசரியாக தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் பெய்ய வேண்டிய 32 செ.மீ. மழையை விட, 26 விழுக்காடு மழை அதிகமாகப் பெய்துள்ளது. அப்படியிருந்தும் எந்த ஏரியும் முழுக் கொள்ளளவுக்குத் தூர்வாரப்படாததால், ஒரு ஏரி கூட நிரம்பவில்லை. தமிழகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான திறந்தவெளிக் கிணறுகளிலும், ஆயிரக்கணக்கான ஆழ்துளைக் கிணறுகளிலும் நீர்மட்டம் உயரவில்லை. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களில் 3 முதல் 10 அடி வரை நீர்மட்டம் சராசரிக்குக் குறை வாகவே உள்ளது.

2017 அக்டோபரிலும் நல்ல மழை பல பகுதி களிலும் பெய்தது.

எனவே கட்சி சார்ந்த வேளாண் சங்கங்களும், கட்சி சாராத வேளாண் சங்கங்களும், வேளாண் தொழிலாளர் சங்கங்களும், அரசியல் கட்சிகளும், இளைஞர் அமைப்புகளும், வேளாண் பெருமக்களும் ஒன்றுதிரண்டு,

1.            நீர்வரத்து வாய்க்கால்களையும், நீர்ப்போக்கு வாய்க்கால்களையும், சிற்றூர் ஏரிகளையும் நடப்பில் உள்ள புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் தமிழக அரசு தூர்வாரிட வேண்டித் தமிழகம் முழுதும் நாம் போராட வேண்டும்.

உடனே வரப்போகும் வடகிழக்குப் பருவமழை நல்ல அளவில் இருக்கும் என வானியல் ஆய்வு அதிகாரிகள் அறிவிக்கின்றனர். அந்த மழைநீரைச் சேமித்திட அரசு இப்போதே ஆவன செய்யக் கோர வேண்டும்.

2.            அத்துடன் வரும் 2018 பிப்ரவரி தொடங்கி சூலைத் திங்களுக்குள் தமிழகம் முழுவதிலுமுள்ள எல்லாப் பெரிய ஏரிகளையும் - மத்திய அரசிடமும், உலக வங்கியிடமும் நிதி வசதி பெற்று, அந்நிதியைக் கொண்டு ஏரிகளைத் தூர்வாருகிற பணியை மட்டும் தமிழக அரசு செய்ய வேண்டும்.

3.            பன்னாட்டு நிறுவனங்கள் முதலாளி கோக்கோ கோலா, பெப்சி போன்றவற்றிற்குத் தாமிரபரணி ஆறு தொடங்கி, தென்பெண்ணை ஆறு வரை நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்திட அரசு அளித்துள்ள உரிமங் களை விரைவில் திரும்பப் பெறக் கோரிப் போராட வேண்டும்.

4.            நீரியல் மின்சாரம், அனல் மின்சாரம் இவற்றை மட்டும் நம்பியிராமல், உடனடியாக புதிதாக வீடு கட்டு கிறவர்களுக்கும், ஏற்கெனவே உள்ள கட்டடங்களுக் கும் கதிரியல் மின்சாரம் (ளுடிடயச யீடிறநச) பயன்படுத் தப்பட வேண்டும் என்பதைக் கட்டாயமாக ஆக்கி, அதற்குத் தமிழக அரசும், இந்திய அரசும் சேர்ந்து 80 விழுக்காடு மானியம் தரவேண்டும் என்று கோரிப் போராட வேண்டும்.

இந்தியா முழுவதிலும் எண்ணற்ற தொழிற்சங் கங்கள் இருப்பது போலவே, வேளாண் மக்கள் முன் னேற்றத்துக்குப் பாடுபட எண்ணற்ற சங்கங்கள் தமிழகத் தில் உள்ளன.

எல்லாச் சங்கங்களும் இணைந்து போராடினால் அன்றித் தமிழக அரசும், இந்திய அரசும் செவிகளைச் சாய்க்குமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியே!

ஒன்றுபட்டுப் போராடுவோம், வாருங்கள்!

கோரிக்கைகளை வென்றெடுப்போம், வாருங்கள்!

Pin It