PARISCELON 450உலகில் 17, 18ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகள், ஆசிய ஆப்பிரிக்க வட தென் அமெரிக்க நாடுகளில் தங்களின் காலனிகளை உருவாக்கிப் பொருளாதாரச் சுரண்டலை மேற்கொண்டன.

விதிவிலக் காக இன்றைய மக்கள் சீனா போன்ற சில நாடுகளில் சில நிலப்பகுதிகளை மட்டும் கைப்பற்றித் தங்களுடைய மேலாதிக்கத்தைச் செலுத்தி வந்தன. சான்றாக ஹாங் காங் பகுதியும் ஷாங்காய் நகரும் பிரித்தானிய ஏகாதி பத்தியப் பிடியில் இருந்தன.

அதே போன்று சீன வியட் நாம் கடற்பகுதிகளில் உள்ள பராசல் தீவுகள் பிரான்சு ஏகாதிபத்திய நாட்டிடம் அடிமைப்பட்டு இருந்தன.

இன்று வியட்நாம், மக்கள் சீனம், தைவான் ஆகிய நாடுகள் இந்த பராசல் தீவுகளின் பகுதிகளைத் தங்கள் நாட்டின் பகுதிகள் என்று உரிமை கொண்டாடுகின்றன. இன்றளவும் இது ஒரு பன்னாட்டு மோதல் பிரச்சினையாக நீடித்து வருகிறது.

18, 19ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய ஏகாதி பத்திய நாடுகளின் பிடியில் இருந்து விடுபட உள்நாட்டு மக்கள் நடத்திய விடுதலைப் போர்கள் ஏராளம். இன் றைக்கு உலகின் ஏகாதிபத்திய நாடாக உள்ள அமெரிக்கா, 18ஆம் நூற்றாண்டில்தான் இங்கிலாந்தின் பிடியில் இருந்து விடுதலை பெற்றது. எனவே மக்களின் உரிமை கள் தான் விடுதலைக்கு அடிப்படையான காரணங் களாகும்.

விடுதலைப் பெற்ற ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் 20ஆம் நூற்றாண்டில் தொடங்கிய தன்னாட்சிக்கான உரிமைப் போர்கள்  தொடர்ந்த வண்ணமே உள்ளன.

தன்னுரிமை கோருகிற பல நாடுகள் பற்றிக் கூட் டாட்சியியல் ஆய்வாளர்கள் சில ஆழமான கருத்துக்களைப் பதித்துள்ளனர். பேராசிரியர் பெயின், 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தேசியத்தைவிட வர்க்கக் கோட்பாடுகள்  அரசியலில்  ஆதிக்கம் செலுத்தும் உணர்வு களாக உருப்பெற்றன என்றார். மற்றொரு கூட்டாட்சியியல் அறிஞரான ஹெட்சர், தேசியமும் அதன் நெருங்கிய உறவான இன அடையாளமும்தான் தற்போது ஆற்றல் பொருந்திய அரசியல் சக்திகளாக முகிழ்த்து வருகின்றன என்கின்றார்.

20ஆம் நூற்றாண்டில் 1947 தொடங்கி 1991 ஆண்டு வரை இன அடையாளத்தின் அடிப்படையில் வங்கதேசப் பிரிவினை ஒன்றுதான் நடந்துள்ளது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 1991ஆம் ஆண்டிற்குப் பிறகு பல தேசிய இனங்களின் கூட்டமைப்பாக இருந்த பெரிய அளவிலான தேசிய அரசுகள் தங்கள் நாடு களுக்குள் இருந்த மக்களின் மொழி-இன அடையாளங் களை உரிய முறையில் கையாளுவதற்குத் தவறிய தால் சோவியத் ஒன்றியம் உட்பட பல நாடுகள் சிதறுண்டு போயின என்று பல ஆய்வாளர்கள் குறிப் பிடுகின்றனர். 1991ஆம் ஆண்டில் நிகழ்ந்த 37 ஆயுதம் தாங்கிய மோதல்களில், 35 மோதல்கள் இன அடிப் படையிலான உள்நாட்டு மோதல்களே ஆகும். பேரா சிரியர் எரிக்சன்-வட அயர்லாந்தில் நடந்த போராட்டம் இலங்கையில் தமிழ்த் தேசியத்திற்கான போராட்டம் ஆகியவற்றுக்கு இன மோதல்களே காரணம் என்கின் றார். இன்றளவும் இந்தப் போக்கு தொடர்கிறது.

பர்மாவில் ரோஹிங்கியா இசுலாமியர்கள் தாக்கப் படுகிறார்கள். அவர்களுக்கான உரிமைகள் மியான்மர் அரசால் நசுக்கப்டுகின்றன. அமைதிக்கான நோபல் பரிசைப்  (1991) பெற்ற ஆங் சாங் சூகி அம்மையார் பாசிசப் போக்கைக் கடைப்பிடித்து நசுக்குகிறார். இதனால் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அந்த அம்மையாருக்கு வழங்கிய மாண்புறு மதிப்பையும் திரும்பப் பெற்றுக் கொண்டது. அப்பல்கலைக்கழக மாணவர்கள் ஒருமனதாக வாக்களித்து அவரது படத்தையும் பல்கலைக்கழகத்திலிருந்து அகற்றிவிட்டனர். எனவே ஒரு காலத்தில் இராணுவ அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய வீரமங்கை, இன்று மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் நிலையைக் காணும் போது மானுட உரிமைக்காகப் போராடியவர்கள் அரசு அதிகாரம் கிடைத்தால் தாங்கள் செய்த தியாகத் திற்கே துரோகம் செய்கிறார்கள் என்பதுதான் காலம் நமக்குக் கற்பிக்கும் பாடமாகும்.

இன்றைய உலகில் நடைபெறும் இன உரிமைக் கான போராட்டக் களத்தில் தொடர்ந்து கனடா நாட்டின் கியூபெக் மாநிலத்தில் பிரெஞ்சு பேசும் மக்களும், இங்கிலாந்தைச் சார்ந்த ஸ்காட்லாந்தியர்களும். வேல்ஸ் ஐரிஷ்காரர்களும் பெல்ஜியத்தில் வாஷ்ம்கள் பிளமி` இன மக்களும் ஈழத்தில் தமிழ் மக்களும் ஸ்பெயினைச் சார்ந்த கேட்டலோனியர்களும், ஈராக்கில் குர்திஷ் இன மக்களும், பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மக்களும் தொடர்ந்து உரிமைக்குரல்களை எழுப்பி வருகின்றனர்.

எல்லை காந்தி என இந்தியத் தவைர்களால் போற்றப்பட்ட கான் அப்துல்கபார்கானின் மகன் வாலிக்கான், தங்களுடைய இன உரிமைப் போராட்டத்தைப் பற்றி ஓர் அருமையான கருத்தைப் பதிந்துள்ளார் “6000 ஆண்டுகளாக நான் பலுசிஸ்தானி; 1000 ஆண்டு களாக நான் முஸ்லிம்; 27 ஆண்டுகளாக நான் பாகிஸ்தானி” என்று 1974ஆம் ஆண்டு குறிப்பிட்டதை, 2017இல் வெளிவந்த பலுசிஸ்தான் பற்றிய ஆய்வு நூலில் ராஜிவ் தோக்ரா  குறித்துள்ளார்.

ஆப்பிரிக்க நாடுகளின் பல பகுதிகள் உட்பட மொழி, இன, சமய அடிப்படையில் மோதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. ஒரு காலத்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் பிரிந்த அமெரிக்கா, இன்று குர்தி` இன மக்களை ஏமாற்ற முனைகிறது. குறிப்பாக. சதாம் உசைன் சர்வ வல்லமையுடன் ஆட்சி செய்த காலத்தில் குர்து இனப் போராட்டத்திற்கு ஆயுதம் மற்றும் நிதியுதவிகளைச் செய்த அமெரிக்கா, தற்போது அவர்களின் விடுதலைக்குத் தடையாக உள்ளது. ஈராக்கின் பெட்ரோல் வளமும் புவிசார் அரசியலுமே இத்தடைக்கு முதன்மையான காரணங்களாக அமை கின்றன.

இன்று ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கேட்ட லோனியா பிரிவினை உலக அரசியல் அரங்கில் தீவிர மாக அலசப்படுகிறது. கேட்டலோனியா பல ஆயிரமாண்டு களாகத் தனது தனித்தன்மையையும் பண்பாட்டு மொழி உரிமைகளையும் போற்றிப் பாதுகாத்து வருகிறது என்று சுயாட்சி பெற்ற கேட்டலோனிய மாநிலத் தலை வர் பியுஜி டி மோன்ட் குறிப்பிட்டுள்ளார்.

18ஆம் நூற் றாண்டில்தான் கேட்டலோனியாவை  ஸ்பெயின் நாடு கைப்பற்றியது. 1939க்குப் பிறகு ஜெனரல் பிரான்சிசோ பிரான்கோ என்ற சர்வாதிகாரி கேட்டலோனியா மொழி யின் மீதும் மக்களின் மீதும் அடக்குமுறைகளை ஏவி விட்டார். ஸ்பானிஷ் மொழியில் பெயரிட்டவர்கள் மட்டும் பாதுகாக்கப்பட்டனர். மற்ற மொழியினர் தடை செய்யப்பட்டனர். ஸ்பானிஷ் மொழியைப் பேசும் ஏழை மக்களை கேட்டலோனியாவிற்குள் குடியேற ஊக்குவிக் கப்பட்டது. இந்தத் தடைகளை எல்லாம் கடந்து கேட்ட லோனியா மக்கள் தங்களின்  தனித்தன்மையை இழக் காமல் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டதனால் ஸ்பெயின் நாட்டின் வளம் கொழிக்கும் மாநிலமாக இன்று இது திகழ்கிறது.

ஸ்பெயின் நாட்டில் கேட்ட லோனிய மாநிலத்திற்குத்தான் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். 1990க்குப் பிறகு ஸ்பெயின் அரசு கேட்டலோனியா மக்கள் பேசும் மொழியை மற்றொரு நிர்வாக மொழியாக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு அவர்களது உரிமைப் போராட்டம் பயணித்தது. கேட்டலோனியா மாநிலத்திற்குத் தனிக்கொடியும் உள்ளது. பன்முகத்தன்மையைக் குலைக்கும் வகையில் மறைமுகமாகப் பல மக்கள் விரோத நடவடிக்கைகளை ஸ்பெயின் அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்ற அச்சத்தின் காரணமாக மாநில அரசே ஒரு மக்கள் வாக்கெடுப்பை நடத்திப் பிரிவினையை உறுதி செய்தது. தற்போது ஸ்பெயின் அரசு மக்கள் வாக்கெடுப்பை நிரா கரித்து மீண்டும் இன மோதல் போக்கை உறுதியாக்கி யுள்ளது.

ஸ்பெயின் அரசு கேட்டலோனியா மாநில அரசு நடத்திய மக்கள் வாக்கெடுப்பைத் துப்பாக்கிச் சூடு, வன்முறைக் கலவரங்கள் வழியாகத் தடுப்பதற்கு முயற்சி களை மேற்கொண்ட போதிலும், இவற்றையெல்லாம் மீறி 42 விழுக்காட்டு மக்கள் வாக்களித்தனர். அவற்றில் 92 விழுக்காட்டினர் கேட்டலோனியா தனிநாடாக வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். ஆனால் உலகின் வல்லரசு நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் தங்களுடைய சுயநலத்திற்காக குர்தி` இன மக்களின் போராட்டத்தையும் கேட்டலோனியா தனிநாடு கோரிக்கையையும் கண்டுகொள்ளாமல் உள்ளன. மேலும் இந்நாடுகள் ஸ்பெயின் அரசின் பாசிசப் போக்கை ஆதரிக்கின்றன.

உலகில் உள்ள பல மனித உரிமை ஆர்வலர்களும் பல அரசியல் இயக்கங்களும் கேட்டலோனியாவின் மக்கள் வாக்கெடுப்பை ஆதரித்து தனிநாடு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இதன் தொடர் பாகச் செய்திகளும் கட்டுரைகளும் உலக அளவில் வந்தவண்ணமே உள்ளன.

சோயிப் டேனியால் என்கிற ஆய்வாளர் கேட்டலோனி யாவின்  பிரிவினைக்கு ஆதரவான மக்கள் வாக்கெடுப்பு இந்தியைக் கட்டாயமாகத் திணிக்கும் இந்தியாவிற்கு ஓர் எச்சரிக்கை என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார். கேட்டலோனியா தனித்தன்மையைப் பாதுகாத்து கேட்ட லோனியா மக்கள் பேசும் மொழியைத் தேசிய அளவில் ஆட்சி மொழியாக ஆக்கியும் தங்களின் பண்பாட்டு மொழி உரிமைகளை நிரந்தரமாக நிலைநிறுத்திடவே பிரிவினை கேட்கிறார்கள் என்று இந்த ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.

ஸ்பெயின் நாட்டிற்கு வரி வருவாயை அளிப்பதில் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக கேட்ட லோனியா உள்ளது. இதே போன்றுதான் தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் இந்திய ஒன்றிய அரசிற்கு அதிக வரிவருவாயை ஈட்டித் தருகின்றன. மேற்கு வங்கம் மராட்டியம் பஞ்சாப் தமிழ்நாடு கர்நாடகம் ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் திரட்டப்படும் வரிவருவாய் 70 ஆண்டுகளுக்குப் பின்பும் வளராத இந்தி பேசும் வட மாநிலங்களுக்கு இன்றும் பிரித்தளிக்கப் படுகிறது. அதே நேரத்தில் ஒன்றிய அரசு நிதிக்குழுவின் வழியாக அளிக்கும் வரிவருவாய் 5 ஆண்டு களுக்கு ஒரு முறை பகிர்வு செய்யும் போது, அதிக வரிவருவாய் அளிக்கும் ஆறு மாநிலங்களுக்கு ஏறக் குறைய 10 விழுக்காட்டு அளவு நிதியை மிகமிகக் குறைந்த அளவில் பிரித்துக் கொடுக்கிறது. எந்தவித சமூக பொருளாதார முன்னேற்றத் திட்டங்களை இந்தி வட மாநிலங்கள் நிறைவேற்றாமல் மற்ற மாநிலங்களின் வரிவருவாயைப் பிடுங்கித் தின்னும் நிலையில் உள்ளன.

சோயிப் டேனியால் இக்கருத்தை உறுதி செய்வதற்கு,  இரனஜித் ராய் என்ற ஆய்வாளரின் மேற்கோளைச் சுட்டியுள்ளார். இரனஜித் ராயின் கருத்துப்படி-1961 ஆம் ஆண்டில் மட்டும் மேற்கு வங்கம் அளித்த ஒவ் வொரு நூறு ரூபாய் வரி வருவாயில், 16 ரூபாய் மட்டும் தான் மேற்கு வங்கம் திரும்பப் பெற்றது. ஆனால் இந்தி பேசும் பீகார் மாநிலம் 182 ரூபாய் பெற்றது என்று குறிப்பிடுகிறார். தற்போது வந்துள்ள மாநிலங்களின் வரி வருவாய் ஆய்வுப் புள்ளிவிவரங்களும் இதே நிலைதான் தொடர்கிறது என்று மெய்ப்பித்துக் காட்டியுள்ளன. 

இது போன்ற மாநில உரிமைக்கான களங்கள் தமிழ்நாட்டில் தொடரும் போது ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதாக டேனியால் குறிப்பிட்டுள்ளார். தமிழர்களின் வீர அடையாளமாக இருந்த ஜல்லிக்கட்டு நடத்துவதை உச்ச நீதிமன்றம் தடை செய்தபோது, அதற்கு ஒன்றிய அரசு உறுதுணை புரிந்தபோது தமிழ்நாட்டில் மாபெரும் பேராட்டக்களம் அமைக்கப்பட்டது. தந்தை பெரியார் சுட்டிய தனித் திராவிட நாடு கோரிக்கை மீண்டும் உயிர்த்தெழுகிறது என்பதைச் சமூக வலைதளங்கள் வழி அறிந்து கொள்ளலாம் என்றும் இந்தக் கட்டு ரையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்றே மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி வங்க மொழியை எல்லாப் பள்ளிகளிலும் கட்டாயமாக்கி உள்ளார். இந்தித் திணிப் பையும் கண்டித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் வேலை யில் அமர்வதற்குக் கன்னட மொழியைப் பயின்றிருக்க வேண்டும் என்ற ஓர் ஆணையைத் தேசியக் கட்சியான காங்கிரசு அரசு வெளியிட்டுள்ளது.

சரக்கு-சேவை வரிச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்துக் கூக்குரலிட்டனர். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 42ஆம் திருத்தத்தின் வழியாக, 1971ஆம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டுதான் ஒவ்வொரு மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டது.

2026இல் இந்தச் சட்டத்தின்  கால அளவு முடிவுறுகிறது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் மேற்குவங்கம் தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 2026க்குப் பிறகு குறையும் வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பி னர்களின் எண்ணிக்கை உயரும் வாய்ப்புள்ளது. இத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் எல்லா மாநிலங் களும் ஒப்புக் கொள்கிற சரியான ஒரு தீர்வை ஒன்றிய அரசு மேற்கொள்ளவில்லை என்றால் இந்தியாவில் கேட்டலோனியாவின் உணர்வுகள் எதிரொலிக்கும் என சோயிப் டேனியால் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசியலில் இத்தகைய மக்கள்-மாநில உரிமைகளைப் பாதிக்கின்ற கருத்துக்களில் அதிக அக்கறை கொள்ளாமல் மாநிலக் கட்சிகளும் மற்ற அரசியல் கட்சிகளும் இருப்பதால்தான் மீண்டும் மீண்டும் ஒன்றிய அரசியல் அதிகாரங்களைக் குவிப்பதைத் தடுக்க முடியவில்லை. 1) ஒன்றிய அரசு, 2) ஜி.எஸ்.டி. மாநிலங்கள், 3) ஜி.எஸ்.டி. ஒன்றிய அரசின் நேரடி நிர்வாகப் பகுதிகள், 4) ஜி.எஸ்.டி. மாநிலங்களுக்கு இடையேயான ஜி.எஸ்.டி. என நான்கு வகையான வரி முறைகளைத் திணித்து இந்தியப் பொருளாதாரத்தைச் சீரழிவுப் பாதையில் எடுத்துச் செல்வதை ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சர்களும் பாஜகவின் முக்கிய தலைவர்களுமான யஷ்வந்த் சின்கா அருண்ஷோரி சுப்பிரமணிய சாமி ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாநிலங்களின் வரி உரிமையைப் பறித்து சரக்கு-சேவை வரிக் குழுவிடம் அளித்துக் குழப்பத்தையே விளைவித்துள்ளனர் என்பதற்கு அண்மையில் மாற்றப் பட்ட வரிவிகிதங்களே எடுத்துக்காட்டுகளாக உள்ளன. இதுவரை 22 முறை இந்தக் குழு கூடியும் ஒரு சரியான முடிவை எடுக்க முடியாமல் தடுமாறுவதில் இருந்து, அதிக அதிகாரக்குவிப்பு ஒன்றிய அரசில் இருப்பது ஆபத்தில் முடியும் என்பதை மெய்ப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு, கதிராமங்கலம் போராட்டம், நெடுவாசல் ஓ.என்.ஜி.சி குழாய்ப் பதிப்பிற்கு எதிரான போராட்டம், கீழடியில் நடைபெற்று வரும் தொல் ஆய்வுக்கு இந்திய அரசின் நிதி ஒதுக்காத போக்கு ஆகியன தமிழ்நாடு எவ்வாறு வெளிப்படையாகவே புறக்கணிக் கப்படுகிறது என்பதை எடுத்தியம்புகின்றன. இவற்றுக் கெல்லாம் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தினால் ஸ்பெயினில் ஏற்பட்டு வரும் கேட்டலோனியா விளைவுகள் இந்தியாவிலும் எதிரொலிக்காதா? என்பதை ஒன்றிய அரசு ஒதுக்கிவிட முடியாது. மாநிலங்களின் தன்னுரிமையா? தனியாட்சியா? என்ற முழக்கங்கள் ஒலிப்பதைக் காலம்தான் முடிவு செய்யும்.

Pin It