இந்தியாவின் தலைமை அமைச்சராகப் பத்து ஆண்டுகள் பதவியில் இருந்த மன்மோகன் சிங் உறுதியான முடிவுகளை எடுக்கும் திறனற்றவராக இருந்ததால், நாட்டின் வளர்ச்சி பின்தங்கிவிட்டது. எனவே தன்னைத் தலைமை அமைச்சராக்கினால் நாட்டின் வளர்ச்சியை வானளாவ உயர்த்துவேன் என்று 2014 தேர்தலில் மேடைதோறும் முழங்கினார், நரேந்திரமோடி.

தலைமை அமைச்சரானதும் காப்பீடு, பாதுகாப்புத் துறை, ஓய்வூதியம் முதலானவற்றில் அந்நிய முதலீட்டுக் கான வரம்புத் தொகையை உயர்த்தினார். கட்டுப்பாடுகள் பலவற்றைத் தளர்த்தினார்; நீக்கினார்.

நரேந்திரமோடி குசராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போது, “அரசின் செலவில் போடப்பட்ட சாலைகளில் தனியார் பேருந்துகள் இயங்குகின்றன; அரசு அமைத்த வானூர்தித் தளங்களில் தனியார் வானூர்திகள் வந்து செல்கின்றன; அதேபோல் அரசு அமைத்த தண்டவாளத்தில் தனியார் தொடர்வண்டியை ஓட்டக் கூடாதா?” என்று தனியார் மயத்தைத் தீவிர மாக ஆதரித்துப் பேசினார்.

எனவேதான், நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் பான்மை எண்ணிக்கை வலிமை பெற்றுள்ள தலைமை அமைச்சராகத் திகழும் நரேந்திர மோடி, பொதுத் துறைகளை ஒழித்துக்கட்டி, முற்றிலும் தனியார் துறை யிடம் நாட்டையே அடகு வைத்திட உலக நாடுகளுக் கெல்லாம் ஆலாய்ப் பறந்து கொண்டே இருக்கிறார், கடந்த 18 மாதங்களில் கிட்டத்தட்ட முப்பது நாடுகளுக்குச் சென்று, வெற்றிவாகை சூடிய மாமன்னராத் தம்பட்டம் அடித்துக் கொண்டு இந்தியாவுக்குத் திரும்புகிறார். பறவைகள் தம்குஞ்சுகளுக்காக அலைந்து திரிந்து இரைதேடி வந்து வாயில் ஊட்டுவதுபோல், நரேந்திர மோடி அயல்நாடுகளுக்குப் பறந்து சென்று அந்நிய முதலீட்டைத் திரட்டி வந்து இந்தியாவின் 126 கோடி மக்களுக்கும் ஊட்டப் போவது  போல முதலாளிய ஊட கங்கள் மோடியைப் பற்றிய படிமத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

2014 தேர்தல் பரப்புரையின்போது அயல்நாட்டில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டுவர முடியாத - கை யாலாகாத காங்கிரசு ஆட்சி என்று சாடினார், மோடி. தான் தலைமை அமைச்சரானதும் கருப்புப் பணத்தை மீட்டு வந்து ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக் கிலும் உருவா 15 இலட்சம் போடுவேன் என்று முழங்கினார். ஒரு பருப்பும் வேகவில்லை. இறுதியாக மோடி அரசு, கருப்புப் பணத்தை வைத்திருப்போர் தாமாக முன்வந்து அரசிடம் வெளியிடும் திட்டத்தை அறிவித்தது. 2015 செப்டம்பர் வரை இத்தன்மையில் கருப்புப் பணம் உருவா 3,770 கோடி தான் வெளிவந்தது.

1997இல் ப. சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது இவ்வாறு அறிவித்த திட்டத்தில் உருவா 37,000 கோடி கருப்புப் பணம் வெளிவந்தது. எனவே மோடியின் கருப்புப் பண மீட்பு முழக்கம் வெறும் வெத்து வேட்டுத் தான். வெளிநாடுகளில் 90 இலட்சம் கோடி உருவா அளவுக்குக் கருப்புப் பணம் இருப்பதாகப் பொருளியல் வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.

ஆனால் மோடியின் வெற்று ஆரவார உரை வீச்சுகள் மட்டும் குறையவில்லை. கடந்த செப்டம்பர் மாத இறுதியில் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றார். அந்நாட்டில் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ‘சிலிகான் பள்ளத்தாக்கில்’ அமெரிக்காவில் முன்னணி யில் உள்ள 47 பன்னாட்டு நிறுவனங்களின் தலை மைச் செயல் அதிகாரிகளிடையே கலந்துரையாடினார். அப்போது மோடி உதிர்த்த முத்துக்கள் சில :

“இந்தியாவில் உள் கட்டமைப்பு வசதிகளை உரு வாக்குவது முதல் சேவைகளை வழங்குவது வரை, பொருள்களை உற்பத்தி செய்வது முதல் மனித வளத்தை மேம்படுத்துவது வரை ‘மின்யுக இந்தியா’ (டிஜிட்டல் இந்தியா) திட்டமானது எண்ணற்ற தொழில் வாய்ப்பு கள் அடங்கிய இணையதள உலகமாகும்.

இந்தியாவில் உள்ள நமது கிராமங்களை நவீனப் பொருளாதார மய்யங்களாக மாற்ற விரும்புகின்றோம். இதனால் உழவர்கள் தங்கள் உற்பத்திப் பொருள்களை எளிதில் சந்தைப்படுத்த முடியும்.

இந்தியாவில் கடந்த ஆண்டு நடுவண் அரசில் நான் தலைமைப் பொறுப்பு ஏற்றபிறகு ஏழ்மை நிலை யைப் போக்குவதில் இணைய வசதி, செல்பேசி ஆகிய வற்றைப் பயன்படுத்தி வருகின்றோம்.

தகவல் தொழில் நுட்பத்தால் வெகுதொலைவில் உள்ள மலைக் கிராமத்தில் புதிதாகப் பிறக்கின்ற குழந்தையைக் காப்பாற்றுவதற்கு அதன் தாய்க்கு உதவ முடியும். தொலைவிட கிராமத்தில் உள்ள குழந்தை சிறந்த கல்வியைப் பெற முடியும்.”

இந்தியாவில் உள்ள நிலைமைகளையும் நரேந்திர மோடியின் கூற்றையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மோடி எவ்வளவு பெரிய மோசடிப் பேர்வழி என்பது புரியும்.

இந்தியாவில் 5 அகவைக்கு உட்பட்ட குழந்தை களில் 47 விழுக்காடு குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடுகளுடன் நலிந்து மெலிந்து கிடக்கின்றன. மகப்பேற்றின் போது இறக்கும் தாய்மார்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. கடன் சுமையால், உற்பத்திப் பொருளுக்கு உரிய விலை கிடைக்காமல், தற்கொலை செய்து கொள்ளும் உழவர்களின் எண்ணிக்கை மோடி ஆட்சியிலும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

பல மாநிலங்களின் தலைநகரங்களில் அரசின் தலைமை மருத்துவமனைகளிலேயே பச்சிளம் குழந்தைகள் போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் மடிந்து கொண்டிருக்கின்றன என்கிற செய்திகள் நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக் கின்றன. ஆனால் மோடியோ போக்குவரத்து வசதியும் இல்லாத தொலைவில் உள்ள மலைக் கிராமத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைக்கும் தாய்க்கும் இணையதள வாயிலாக மருத்துவம் செய்து காப்பாற்றப் போவதாகக் கூறுவது கடைந்தெடுத்த கயமை அல்லவா? மொத்த மக்கள் தொகையில் 65 விழுக்காடு மக்கள் வாழும் கிராமங்களில் 40 விழுக்காடு வீடுகளுக்கு 2015ஆம் ஆண்டிலும் மின்இணைப்பு இல்லை; 70 விழுக்காடு வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை.

ஆனால் மோடியோ, ‘மின்யுக இந்தியா’, ‘தூய்மை இந்தியா’ என்று கூவித் திரிந்து கொண்டிருக்கிறார். கைப்பேசி, கூலி வேலைக்கு நாள்தோறும் நகரங்களுக்குச் செல்லும் பெண்களிட மும் இருக்கிறது. இதனாலேயே அவர்களின் ஏழ்மை நிலை ஒழிந்துவிட்டதா? அவர்கள் பணக்காரர்களாகி விட்டார்களா? அதேபோன்று தரமான கல்வியும் மருத்துவமும் தனியார் வணிகக் கொள்ளையாகிவிட்ட நிலையில் இணையதள வாயிலாக ஏழைகளுக்குக் கல்வியும் மருத்துவ வசதியும் கிடைக்கும் என்று மோடி கூறுவது பித்தலாட்டப் பேச்சுத்தானே!

2015 செப்டம்பர் இறுதியில் அமெரிக்காவின் பன்னாட்டுப் பெருமுதலாளிகளிடம், விரைவில் அந்நிய முதலீடு என்ற பெயரில் இந்தியாவின் இயற்கை வளங் களையும் 35 அகவைக்குள் உள்ள 80 கோடி இளைஞர் களின் உழைப்பையும் சுரண்டிக் கொள்ளையடிப்ப தற்கான கதவுகளை அகலத்திறந்து சிவப்புக் கம்பளம் விரித்துக் காத்திருப்பேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு இந்தியாவுக்குத் திரும்பினார். அக்டோபர் மாதத்தில் பீகார் மாநிலத் தேர்தல் குறுக்கிட்டது.

தான் தலைமை அமைச்சராவதைக் கடுமையாக எதிர்த்த துடன், பா.ச.க.வைக் கூட்டணியிலிருந்தும் விரட்டி விட்ட நிதீஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக வரவிடாமல் படுதோல்வியடையச் செய்து பழிதீர்க்க வேண்டும் என்ற வெறியுடன் மோடியும்,  அமித்ஷாவும் பீகார் மாநிலத் தேர்தலில் பல உத்திகளைக் கையாண்டனர். ஒரு மாநிலத் தேர்தலில் இதுவரை எந்தவொரு தலைமை அமைச்சரும் செய்யாத அளவில் 30 பேரணிகளில் மோடி உரையாற்றினார்.

பா.ச.க. தலைவரும் குசராத் தில் மோடியின் காட்டாட்சிக்குக் கைவாளாக விளங்கிய வருமான அமித்ஷா, பீகாரில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்து கட்சியினரை முடுக்கிவிட்டார். ஆயினும் பா.ச.க. படுதோல்வி கண்டது. நிதீஷ்குமார்-லாலு பிரசாத்-காங்கிரசு மகாகூட்டணி வெற்றி பெற்று ஆட்சி யில் அமர்ந்துவிட்டது.

பீகாரில் தன்னுடைய தோல்வியைக் கண்டும் துவளாமல் இரண்டு நாள்கள் கழித்து (10-11-15) - இலண்டனுக்குப் பயணமாவதற்கு முன், அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காக 15 துறைகளில் 35 வகை யான மாற்றங்களை, ‘இரண்டாவது பொருளாதாரச் சீர்திருத்தங்கள்’ என்ற பெயரில் நரேந்திர மோடி அறிவித் தார். அவற்றுள் கட்டுமானம், பாதுகாப்பு, வானூர்திப் போக்குவரத்து, தனியார் வங்கிகள், தோட்டப் பயிர்கள், ஒளிபரப்பு, இணைய-வணிகம், சில்லறை வணிகம் ஆகியவை முதன்மையானவை.

கட்டுமானத் தொழில்

நரேந்திர மோடி அரசு சீர்திருத்தங்கள் அறிவித் துள்ள 15 துறைகளில் மிகவும் முதன்மையானதாகக் கட்டுமானத் தொழில் கருதப்படுகிறது. குறைந்தது 20,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டவேண்டும்; முதல் ஆறு மாதங்களுக்குள் 50 இலட்சம் அமெரிக்க டாலர் நிதியை இந்தியாவுக்குள் கொண்டுவர வேண்டும்; கட்டுமானப் பணியை முடித்து, மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்கிற நிபந்தனைகள் மன்மோகன் ஆட்சியில் அந்நிய முதலீட்டாளர்களுக்கு விதிக்கப்பட்டன. இப்போது இவை முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டன.

ஏனெனில் 5 கோடி ஏழைகளுக்கு அந்நிய முதலீட்டாளர்கள் வீடு கட்டித் தரப்போகிறோம் என்று மோடி சொல்கிறார். இந்தியா வில் 7 பெரிய நகரங்களில் மட்டும் 8 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டும் விற்பனையாகாமல் பூட்டிக் கிடக் கின்றன. இவற்றின் மதிப்பு நான்கு இலட்சம் கோடி.

மனைவணிகம்-வீடு கட்டுதல் ((Real Estate) என்பது தான் கடந்த 15 ஆண்டுகளில் கொள்ளை இலாபம் தரும் தொழிலாக வளர்ந்துள்ளது. வெளிநாட்டில் பதுக் கப்பட்டுள்ள பணத்தில் ஒரு பகுதி இத்தொழிலுக்குள் வந்து கொண்டே இருக்கிறது என்பது ஊரறிந்த உண் மையாகும். ஆகவேதான் நரேந்திரமோடி ஆட்சியில் அமர்ந்ததும், மன்மோகன் சிங் ஆட்சியில் 2013-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட - சில நல்ல கூறுகளை நிபந்த னைகளாகக் கொண்டிருந்த நிலச்சீர்திருத்தச் சட்டத் தைச் சாறு பிழியப்பட்ட சக்கையாக மாற்றிட, தடாலடி யாக ஓர் அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தார்.

மாநிலங்கள் அவையில் பா.ச.க.வுக்குப் பெரும்பான்மை இல்லாத தால் இதை நிறைவேற்ற முடியவில்லை. ஆயினும் விடாப்பிடியாக மூன்று முறை 2013ஆம் ஆண்டின் நிலச்சீர்திருத்தச் சட்டத்தை மாற்றுவதற்காக அவசரச் சட்டங்களைப் பிறப்பித்தார். இறுதியில், குப்புற விழுந் தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல், உழவர்கள் இச்சட்டத் திருத்தத்தை விரும்பவில்லை என்பது இப்போதுதான் புரிகிறது என்றுகூறி மோடி அரசு இதைக் கைவிட்டது. இதற்கான மாற்று வழி யாகத்தான் கட்டுமானத் தொழில் அந்நிய முதலீட்டா ளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த முதன்மையான மூன்று நிபந்தனைகளை முற்றிலுமாக இப்போது மோடி நீக்கிமயுள்ளார்.

பாதுகாப்புத் துறை

மோடி ஆட்சிக்கு வந்ததும் பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீட்டுக்கு இருநத 26 விழுக்காடு எனும் வரம்பை 49 விழுக்காடாக உயர்த்தினார். இந்த அளவை இப்போது மறைமுகமாக உயர்த்தி இருக்கிறார். நடு வண் அரசின்கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம் பாட்டு வாரியத்தின் ஒப்புதலுடன் எத்தனை விழுக்காடு அளவுக்கு அந்நிய முதலீட்டை அனுமதிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படைத்துறைக்கான தளவாடங்கள், ஆயுதங்கள் உற்பத்தியில் - வணிகத்தில் தற்போது ரிலையன்சு, டாடா, மகேந்திரா, அதானி, பாரத் ஃபோர்ஜ் ஆகிய உள்நாட்டுக் குழுமங்கள் ஈடுபட்டுள்ளன.

இவை இந்த தளர்வைப் பயன்படுத்திக் கொள்ளை இலாபம் பெற வுள்ளன. படைத்துறைக்கான ஆயுதக் கொள் முதலில் இடைத்தரகர் என்ற பெயரில் பெருமளவில் ஊழல் நடந்து வருகிறது. இராசிவ்காந்தி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற போபர்ஸ் ஊழல் குற்றவாளிகள் எவரும் தண்டிக்கப்பட வில்லை. படைத்துறைக்கான ஆயுதக் கொள்முதலில் ஊழல் நடைபெறும் நாடுகளின் வரிசையில் இந்தியா முதல் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாகப் பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு மற்றும் வெளிப்படைத் தன்மைக்கான கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

படைத்துறைக்குத் தேவையான தளவாடங்கள், ஆயு தங்களில் பெரும்பகுதி வெளிநாடு களிலிருந்தே இறக்குமதி செய்யப் படுவதால், ஊழல் இன்றும் தங்கு தடையின்றித் தலைவிரித்தாடும். இது தான் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ (Make in India ) என்பதா?

தனியார் வங்கிகள்

தனியார் வங்கிகள் கடந்த இருபது ஆண்டுகளில் வேகமாகக் கிளை பரப்பி வருகின்றன. இந்நிலையில் தனியார் வங்கி களில் அந்நிய முதலீட்டுக்கு இதுவரை 49 விழுக்காடு என்று இருந்த வரம்பு தற்போது 74 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக, வங்கி யின் நிர்வா கம் மற்றும் கட்டுப்பாட்டாளர் மாறக்கூடாது என்கிற நிபந்தனை ஒப்புக்குச் சப்பாணியாக விதிக்கப்பட்டுள் ளது. பொதுத்துறை வங்கிகள் தொழில்துறை, வேளாண் துறை, சமூக மேம்பாட்டுத் துறை என்று பல துறை களுக்கும் குறைந்தபட்சம் இவ்வளவு தொகை யைக் கடனாக வழங்க வேண்டும் என்று அரசு விதி வகுக்கிறது.

ஆனால் தனியார் துறைக்கு அத்தகைய கட்டுப் பாடுகள் ஏதும் இல்லை. கருப்புப் பணமும், ஹவாலா பணமும் புழங்குவதற்குத் தனியார் வங்கிகள் நல்ல வாய்க்கால்களாக விளங்கும். இந்திராகாந்தி வங்கிகளைத் தேசியமயமாக்குவதற்குமுன், முதலாளிகளுக்கும் வணிகர்களுக்கும், பணக்காரர்களுக்கும் மட்டுமே சேவை செய்துவந்த தனியார் வங்கிகளை மீண்டும் கொண்டுவர மோடி எண்ணுகிறார்.

சில்லறை வணிகம்

பல்பொருள் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்குப் பெரும் எதிர்ப்பு உள்ள நிலையில், ஒற்றை வணிக முத்திரைப் பொருள் விற்பனையில் சில்லறை மற்றும் மொத்த வணிகத்தில் 100 விழுக் காடு வரை அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட் டுள்ளது. இதனால் பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய நகரங்கள் அனைத்திலும் ஆடை, காலணிகள், கணினி, கைப்பேசி விற்பனையில் ஒற்றை வணிக முத்திரை கொண்ட கடைகளைத் திறக்கும். இத்தொழிலில் உள்ள சிறு கடைகளை அவை விழுங்கும்.

1991இல் தாராளமயம், தனியார்மயம், உலக மயம் எனும் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பணக்காரன்-ஏழை இடையிலான ஏற்றத்தாழ்வு விரிந்துகொண்டே செல்கிறது. அந்நிய முதலீடு தொழில் உற்பத்தியை-வேலை வாய்ப்பைப் பெருக்கும் என்று கூறப்பட்டது. இங்கே நடைபெற்ற சேவைத் துறை உற்பத்தி என்பது பணக்காரர்களின் நுகர்வுக்கானதாகவும், முதலாளிகளின் இலாபத்துக் கானதாகவுமே இருப்பதைக் கடந்த 25 ஆண்டுகளில் அனுபவம் காட்டுகிறது.

அதேசமயம் ஆளும் அரசுகள் கல்வி, மருத்துவம், சமூகநலத் திட்டங்கள் முதலான வெகுமக்களின் அடிப் படைத் தேவைகளுக்கான நிதியை ஆண்டுதோறும் குறைத்துக்கொண்டே வருகிறது. ஒரே எடுத்துக்காட்டு - நூறு நாள் வேலைத்திட்டத்திற்காக 2013-14இல் 27,484 கோடி உருவா ஒதுக்கப்பட்டது. 2014-15இல் மோடி ஆட்சியில் இது 17,074 கோடியாகக் குறைக்கப்பட்டது.

எனவே அந்நிய மூலதனத்தின் வரவு அனைத்து மக்களுக்குமான நலவாழ்வுக்கு வழிவகுக்கும் என்ற மாயையை முறியடிப்போம்.

Pin It