காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவரும் மூத்த பேராசிரியரும் எனது இனிய மூத்த சகோதரரும் சிறந்த வழிகாட்டியுமாகத் திகழும் டாக்டர் சு. இராஜாராம் ஐயா அவர்களின் அழைப்பின் பேரில் 03.08.2026 அன்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் நடைபெற்ற முனைவர் பட்டப் பொது வாய்மொழித் தேர்வுக்குச் சென்று இருந்தேன்.
வாய்மொழித் தேர்வு நிறைவுற்றதும் பேராசிரியரிடம் "சிராவயல் எங்கு இருக்கிறது? ஜீவா நடத்திய ஆசிரமம் அங்கு இருக்கிறதா? மகாத்மா காந்தி வந்து ஜீவாவைச் சந்தித்த இடமாயிற்றே..." என்று கேட்டேன்.
பேராசிரியர் அவர்கள் அடுத்த கணப் பொழுதுகளில் சிராவயலுக்கே அழைத்துச் சென்று விட்டார்கள்.
அங்கு போய் ஆசிரமம் எங்கு இருந்தது என்று ஒரு தேநீர்க் கடையில் விசாரித்தோம். தேநீர்க் கடைக்காரரும் அக்கடையில் தேநீர் குடிக்க வந்திருந்த முதியவர்களும் ஆர்வத்தோடு ஜீவா ஆசிரமம் நடத்திய இடத்தைக் காட்டினார்கள். அது சரஸ்வதி பள்ளிக் கூடமாக இருந்தது. "அது சிதிலமடையவே, சேது செட்டியார் இடிக்கச் சொல்லி நான் தான் இடித்தேன்" என்று ஒரு முதியவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
மகாத்மா காந்தி வந்து சென்ற ஊர் இன்றைக்கே இவ்வளவு குக்கிராமமாகவும் எந்த ஒரு வசதியுமின்றி இருக்கிறதே என்று நாங்கள் பேசிக் கொண்டோம்.
மகாத்மா காந்தி ஜீவாவைப் பார்க்க ஏன் இந்த ஊருக்கு வந்தார் என்று பழைய வரலாற்றைப் பேராசிரியரும் நானும் பகிர்ந்து கொண்டோம்.
தமிழகக் கம்யூனிஸ்ட் கட்சியின் மும்மூர்த்திகளில் ஒருவராகத் திகழ்ந்த தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி என்னும் சிற்றூரைச் சார்ந்தவர்.
அவர் சிறு வயது முதலே காங்கிரசு பேரியக்கம், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம், தமிழகக் காங்கிரசு சமதர்ம சோசலிச இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம் எனப் படிப்படியாக ஒவ்வொரு கொள்கையாலும் ஈர்க்கப்பட்டு அந்தக் காலகட்டத்தில் கொண்ட கொள்கையிலும் தமது இலட்சியத்திலும் உறுதி உடையவராய்த் திகழ்ந்தார்.
சேரன்மாதேவியில் வ.வே.சு. ஐயர் நடத்திய பரத்வாஜ் ஆசிரமத்தில் ஆசிரியராக இருந்து பணியாற்றிய காலத்தில் அங்கிருந்த ஏற்றத் தாழ்வைக் கண்டு மனம் பொறாமல் காரைக்குடி சிராவயல் வந்து ஆசிரமம் நடத்திக் கொண்டு இருந்தார்.
காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர் வழியைப் பின்பற்றிய ஜீவா, காந்தியடிகள் ‘ஹரிஜன்ங' பத்திரிகைகளால் காந்தி தான் கனவு காணும் இந்தியா எப்படி இருக்கும் என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
அதிலிருந்த இரண்டு கருத்துகள் ஜீவாவுக்கு உடன்பாடில்லை.
1. சுதந்திர இந்தியாவில் வருணாசிரம ஏற்றத்தாழ்வு இருக்காது; ஆனால் வருணாசிரமம் இருக்கும்
2. ஆண், பெண் எல்லா வகையிலும் சமத்துவமாக இருக்க முடியாது.
என்று காந்தியடிகள் எழுதியிருந்த இரண்டு கருத்துகளையும் எதிர்த்து ஜீவா காந்தியடிகளுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
ஜீவாவின் கடிதத்தைப் படித்த காந்தியடிகள் ஜீவாவுக்குப் பதில் கடிதம் எழுதியிருந்தார்.
அதில் காந்தியடிகள், “அன்புள்ள ஜீவா, உங்கள் கடிதம் என்னை மிகவும் யோசிக்க வைத்து விட்டது. என்னால் இரவு தூங்க முடியவில்லை. தமிழ்நாடு வருகிறபோது நான் வந்து உங்களைச் சந்திக்கிறேன்" என்று எழுதியிருந்தார்.
கடிதத்தைப் பெற்ற ஜீவா மகிழ்ந்தார். மகாத்மா காந்தி எப்படி நம்மைப் பார்க்க இங்கு வருவார் என்று நினைத்ததுடன் அதனை மறந்தும் விட்டார்.
மகாத்மா காந்தியடிகள் அடுத்துத் தமிழகம் வந்தபோது காரைக்குடி வந்தார். கம்பனடிப்பொடி சா. கணேசனிடம் ஜீவாவைப் பற்றி விசாரித்தார். அவரைச் சந்திக்க வேண்டும் என்றார். கம்பனடிப்பொடி அழைத்து வருகிறேன் என்றார்.
"இல்லை, நாம்தான் நேரில் சென்று ஜீவாவைச் சந்திக்க வேண்டும்" என்று மகாத்மா குறிப்பிட்டார். சிராவயலுக்குச் சென்று, இருபது மாணவர்களுடன் பணிகளைப் பார்த்துக் கொண்டிருந்த ஜீவாவைச் சந்தித்தார். ஜீவா வியந்தார்.
செட்டி நாட்டின்
அழகிய சிற்றூர்
சிராவயல்.
அங்கே ஒரு காந்தி ஆசிரமம்
அருமைத் தொண்டர் ஜீவா
அதன் தலைவர்.
தமிழ்நாட்டுப் பயணம்
மேற்கொண்ட அடிகள்
சிராவயல் வந்தார்.
பணிகள் அவரைப்
பரவசப்படுத்தின
எப்படி இத்தனை சாதனை
என்பதை அறிய ஆவல் பூண்டார்.
‘ஜீவானந்தம்
உங்களுக்கு
சொத்து எவ்வளவு
இருக்கும்?
அண்ணல் கேட்டார்.
‘பளிச்சென வந்தது
ஜீவாவின் பதில்
‘இந்தியா தான்
என் சொத்து....’
அருமைத் தொண்டனைக்
கட்டிப் பிடித்து
அண்ணலின் திருவாய்
அமுதம் பொழிந்தது:
‘இல்லை ஜீவானந்தம்
நீங்கள் தான்
இந்தியாவின் சொத்து’
என்று இதனைக் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் தமது ‘மகாத்மா’ எனும் கவிதை நூலில் பதிவு செய்துள்ளார்.
இந்நிகழ்வு நடந்த நாள் 27.03.1927. இன்றைக்கு ஒரு நூற்றாண்டு ஆகிறது.
‘அந்த ஊரில் ஜீவா நடத்திய ஆசிரமம் இருந்த இடம் இப்போது ஊராட்சிமன்ற அலுவலகமாக உள்ளது. அந்த இடம் அப்படியே பராமரிக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது. மகாத்மா காந்தி வந்து சென்றதை நினைவுபடுத்தும் வகையில் அந்தச் சிற்றூரில் மகாத்மா காந்திக்கு ஒரு சிறு சிலை மட்டும் உள்ளது.
மக்கள் யாருக்கும் இந்நிகழ்வு குறித்த விழிப்புணர்வு இல்லை. அண்மையில் தமிழக அரசு ஊருக்கு வெளியில் மஞ்சுவிரட்டு மைதானத்தின் அருகில் இந்நினைவைப் போற்றும் வகையில் ஒரு நினைவுக் கட்டடத்தைக் கட்டியுள்ளது. அதுவும் இன்னும் முறையான செயல்பாட்டுக்கு வரவில்லை.
நம் இந்திய தேசத்தின் தந்தை மகாத்மா சிராவயல் வந்து ஜீவாவைச் சந்தித்ததன் நூற்றாண்டு இந்த ஆண்டு. இதனைப் போற்றுகிற வகையில் தமிழ்நாடு அரசும் தமிழகக் கம்யூனிஸ்டு உள்ளிட்ட இயக்கங்களும் விழா எடுத்து இந்த நிகழ்வின் நினைவைப் போற்ற வேண்டும்.
அரசையும் இயக்கங்களையும் தாண்டி மக்கள் ஒவ்வொருவரும் ஜீவாவையும் மகாத்மா காந்தியையும் போற்றுகிற வகையில் இந்நிகழ்வைக் கொண்டாடுவது தங்களது அருங்கடன்களில் ஒன்றாகக் கருதிச் செயலாற்றுவார்களாக!
- பேராசிரியர் உ. அலிபாவா, தலைவர், தமிழியல்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி - 620 024