ராஜம் கிருஷ்ணனின் ஒரு நூற்றாண்டு கால வாழ்க்கை மற்றும் அவரது எழுத்துப் பணிகள் குறித்து தோழர் பா.ஜீவசுந்தரி எழுதியுள்ள நூல்தான் "போராளி ராஜம் கிருஷ்ணன் களத்திலும் வாழ்விலும்".
மகளிர் இயக்கங்களின் முன்னோடி இயக்கமான இந்திய மாதர் தேசிய சம்மேளத்தின் நூற்றாண்டு சிறப்பு வெளியீடாகவும் இந்நூல் வெளிவந்துள்ளது. சமுதாய மாற்றத்திற்காகவும், பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் தன் எழுத்துக்களின் மூலம் போராடிய ராஜம் கிருஷ்ணனின் பண்பு நலன்கள், படைப்புகள், பெற்ற விருதுகள், நேர்காணல், வயோதிக காலம், நூல்களின் நாட்டுடைமையாக்க முயற்சி மற்றும் ஆசிரியர் அவருடன் பழகிய நினைவுகளை இந்நூலின் வழியே நம்மிடம் பகிர்ந்துள்ளார்.
நூலின் தொடக்கத்திலேயே "எளிமையான தோற்றம், அழகான சிரிப்பு, பொருள் பொதிந்த பார்வை, ஆபரணங்கள் அதிகமில்லாமல் கழுத்தில் மெல்லிய கருக மணிமாலை, பருத்தி சேலை என எப்போதும் ஒரே மாதிரியான தோற்றம், கம்பீரமான - துணிச்சலுடன் கூடிய பேச்சு, மேடைப்பேச்சிலும் எந்த அலங்காரமும் இல்லாத இயல்பான பேச்சு"என்று ராஜம் கிருஷ்ணனின் குணாதிசயங்களைப் பற்றி ஆசிரியர் விவரித்திருப்பது படிப்போரை வியப்பில் ஆழ்த்துவதோடு மட்டுமில்லாமல், மேலும் அவரைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி விடுகிறது.
1925ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் முசிறியில் யக்ஞ நாராயண சாஸ்திரி - மீனாட்சி இணையருக்கு மகளாக பிறந்தவர் ராஜம் கிருஷ்ணன். 1940களில் தனது எழுத்துலகப் பயணத்தைத் தொடங்கிய இவர் 2010ஆம் ஆண்டு வரை தொடர்ந்து அறுபதாண்டு காலம் எழுத்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.இவர் தமிழ் இலக்கியத்துக்கு நாவல், சிறுகதை, கட்டுரை மற்றும் மொழிபெயர்ப்புகள் மூலம் தனது பங்களிப்பை அளித்தவர். இவரது 'வேருக்கு நீர்' என்ற நாவல் 1973ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருதினைப் பெற்றது. இவர் இந்திய மாதர் தேசிய சம்மேளத்தின் தலைவராக 1976 முதல் 1980 வரையிலும், கௌரவத் தலைவராக 1980 முதல் 1984 வரையிலும் பொறுப்பு வகித்திருக்கிறார்.
பெண்கள் படிப்பதற்கும், எழுதுவதற்கும் அதிகப்படியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த அந்தக் காலகட்டத்தில், தான் சந்தித்த தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து தமிழ்ப் படைப்புலகம் என்றுமே தவிர்க்க முடியாத ஆளுமையாக ராஜம் கிருஷ்ணன் தடம் பதித்திருக்கிறார். பள்ளிச் சிறுமியாய் இருந்தபோதே காந்தியத்தின் மீதும், மகாகவி பாரதியின் பாடல்கள் மீதும் பற்றுடையவராக இருந்தவருக்கு முறையான பள்ளிக் கல்வி கூட கிடைக்காமல் போகிறது. பதினைந்து வயதில் திருமணமும் செய்து வைக்கப்படுகிறது. மிகப்பெரிய கூட்டுக் குடும்பம், அளவு கடந்த வீட்டு வேலைகளுக்கு மத்தியிலும் தன் எழுத்தின் மூலம் தனக்கான தனித்ததோர் அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார்.
ஆரம்ப காலத்தில் அவர் பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பிய கதைகள் திரும்பி வந்த போதும் "பலனை எதிர்பார்க்காமல் முயற்சி செய்து கொண்டே இரு" என்ற பகவத்கீதையின் வாசகத்தை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து முயற்சி செய்து எழுத்துலகில் சாதித்திருக்கிறார். அவரது கணவர் கிருஷ்ணன் பெயருக்குப் பின் மட்டுமில்லாமல், அவரது எல்லா முயற்சிகளுக்குப் பின்னாலும் இருந்து ஊக்குவிக்கும் கணவராகவும் இருந்திருக்கிறார்.
ஓரிடத்தில் அமர்ந்து எழுதுவதை விட களத்திற்கே நேரடியாக சென்று ஆய்வு செய்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் ராஜம் கிருஷ்ணன். கள ஆய்வு செய்து எழுதுவதை எல்லாம் புதினங்களாக ஏற்க இயலாது போன்ற விமர்சனங்கள், கேலிகளுக்கெல்லாம் மனம் தளராமல் குறிஞ்சித்தேன், அமுதமாகி வருக, வளைக்கரம், வேருக்கு நீர், முள்ளும் மலர்ந்தது, அலைவாய்க் கரையில், கரிப்பு மணிகள், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், பாதையில் பதிந்த அடிகள் போன்ற உன்னதமான படைப்புகளை தனது கள ஆய்வின் வழியே வழங்கி தமிழ் நாவல் இலக்கியத்தில் அவர் சிறப்பிடம் பெற்றிருப்பதையும் இந்நூலின் வழியே அறிய முடிகிறது.ராஜம் கிருஷ்ணன் பெண்ணிய நோக்கில் எழுதியுள்ள காலந்தோறும் பெண், உயிர் விளையும் நிலங்கள், இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை, யாதுமாகி நின்றாய் முதலிய கட்டுரை நூல்களைப் பற்றியும் ஆசிரியர் இந்நூலில் விவரித்திருக்கிறார். "ஒருவர் தன் வாழ்நாளில் இத்தனை நூல்களை எழுதி விட முடியுமா?" என்று நூலை படிப்போர் பிரமிக்கும் வகையில் நூலின் இறுதிப் பகுதியில் அவரது படைப்புகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
ராஜம் கிருஷ்ணனின் எளிமை, நேர்மை, உண்மை, கடின உழைப்பு, தொடர் முயற்சி, அர்ப்பணிப்பு, சமூக அக்கறை, பலனை எதிர்பாராமல் பணி செய்வது, பெண் முன்னேற்றச் சிந்தனைகள் போன்ற வியக்கத்தகு பண்புகளை இந்நூல் உலகிற்கு உரக்கச் சொல்கிறது. மொத்தத்தில் "போராளி ராஜம் கிருஷ்ணன் களத்திலும் வாழ்விலும்" எழுத்துலகில் மட்டுமில்லாது எந்தத் துறையிலும் சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.
- வெ.சந்தியா, முனைவர் பட்ட ஆய்வாளர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சேர்க்காடு, வேலூர்