நாட்டார் வழக்காற்றியலர் என்று அழைக்கப்படக்கூடியவர் களஆய்வின் வழியாக தகவல் சேகரிப்பு, சேகரித்தத் தரவுகளை வகைப்படுத்துதல், வகைப்படுத்தலின் அடிப்படையில் ஆவணப்படுத்துதல், ஆவணப் படுத்தியவற்றைப் பகுப்பாய்தல், சேகரித்தத் தரவுகளைப் பகுப்பாய்வதன் அடியொற்றி விளக்கமளித்தல் போன்ற செயல்களைச் செய்யக் கூடியவராக இருப்பார். இதில், வாய்மொழிக் கதையாடல்கள், குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் புராணம், பழமரபுக்கதை, நாட்டார் கதை, நகைச்சுவைத் துணுக்குகள் குறித்து ஆராயக்கூடியவராக இருந்தால் வாய்மொழிசார்ந்த வகைமைகள் குறித்த புரிதல் மிகமிக அவசியமாகும். இப்புரிதலானது மேற்கூறிய வகைமைகளை வகைப்பாடு செய்வதன் வழியே சாத்தியமாகக்கூடிய ஒன்று. நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் ஒருவர் தான் சேகரித்த வாய்மொழி வழக்காறுகளைத் துல்லியமாக வகைப்பாடு செய்து கொள்ளவில்லையெனில் அந்த ஆய்வானது அறிவியல் அடிப்படையில் அமையாது. நாட்டார் வழக்காற்றியல் கல்விப்புலமானது மானுடவியல் (humanities) என்ற எல்லைக்குள்ளாக இடம்பெற்றிருந்தாலும் சமூக அறிவியல் (social science) என்ற புலத்திற்குள்ளாகவும் தன்னை விரிவாக்கம் செய்ய முயன்று வருகின்றது. அம்முயற்சியின் ஓர் அங்கமாக அறிவியல் அடிப்படையில் வகைப்படுத்துதல் என்ற முறையியலைக் கட்டமைக்க முனைகின்றது. அறிவியலானது வட்டார வேறுபாடுகளைக் கடந்து உலகளாவிய முறையியல் ஒன்றினை முன்வைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றது. நாட்டார் வழக்காற்றியலில் உரைநடைசார் எடுத்துரைப்புகளை (prose narratives) உலகளாவிய அளவில் வகைப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்ச்சூழலில் அவ்வகையான முன்னெடுப்பு வேலை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. இக்குறைபாட்டினைச் சீராக்கும் முயற்சியின் அவசியத்தை ஞா. ஸ்டீபன், “வகைப்படுத்துதல்: முறையியல்களும் வகைமைக் கோட்பாடும்” என்ற தலைப்பிலான நூலொன்றினை எழுதியுள்ளார். 120 பக்கங்கள் கொண்ட இந்நூல் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத்தாரால் 2022ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது.
வாய்மொழிக் கதைத்தொகுப்புகள்
இந்நூலில் இடம்பெற்றுள்ள முதல் கட்டுரையானது “தமிழில் வாய்மொழிக் கதைத் தொகுப்புகள்” என்பதாகும். இக்கட்டுரையானது தமிழில் இதுவரை வெளிவந்துள்ள 300க்கும் மேற்பட்ட வாய்மொழிக் கதைத்தொகுப்புகளைக் குறித்து துல்லியமானதொரு மதிப்பீட்டினைச் செய்கின்றது. ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின்னரே தமிழ்ச்சூழலில் நாட்டார் வழக்காறுகள் சேகரித்து வெளியிடும் பணியானது தொடங்கப் பெற்றது: அது இன்று வரையிலும் தொடர்கிறது. தமிழில் இதுவரையில் தொகுக்கப்பெற்றுள்ள கதைகளை ஆறு. இராமநாதன் வகைப்பாடு செய்துள்ளமையை ஞா.ஸ்டீபன் சுட்டிக்காட்டியுள்ளார். அவையாவன: “எழுதப்பெற்ற கதைகள்”, “அயல்நாட்டு, இந்தியமொழிக் கதைகள்", “தமிழக மக்களிடமிருந்து சேகரித்து வெளியிடப் பெற்ற கதைகள்” என்பனவாகும். இத்தொகுப்புகள் ஆனது இரண்டு நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒன்று, பொதுவாசகர்களுக்கானத் தேவையைப் பூர்த்தி செய்தல்; மற்றொன்று, ஆய்வு நோக்கத்திற்காகத் தொகுக்கப்பெற்றவை. வாய்மொழியாக எடுத்துரைக்கப் பெற்ற நாட்டார் கதைகள் எழுத்துருவாக்கம் பெறுகின்ற போது அவை எவ்வாறெல்லாம் செப்பம் செய்யப்பட்டுள்ளன என்று கீழ்க்காணும் பட்டிலை வெளியிட்டுள்ளார். அவையாவன:
“1.பல்வேறு வடிவங்களை ஒப்பீடு செய்து புதியதொரு பனுவலை உருவாக்குதல்,
2. இலக்கியத்தரம் பேண முயலுதல், 3. மொழிநடையைச் செப்பம் செய்தல்,
4. வாசகர் நோக்கில் கதையை மெருகூட்டல்,
5. பதிப்பாசிரியரே அல்லது தொகுப்பாசிரியரே கதை சொல்லுதல், 6.பிற பண்பாட்டுக் கதைகளைத் தழுவி எழுதுதல், 7.மொழிபெயார்ப்பு செய்தல்” (பக். 19).
ஆனால், இதுவரையில் வெளிவந்துள்ள கதைத் தொகுப்புகளை அவற்றின் இயல்புகளின் அடிப்படையில் நான்கு வகைகளாகப் பிரித்துள்ளார்: “செப்பம் செய்யப்பெற்றவை, மறுபடைப்பாக்கம் செய்யப் பெற்றவை, ஆய்வு நோக்குடையவை, மொழிபெயர்ப்புகள்” (பக். 33). வாய்மொழியாக எடுத்துரைக்கப்படும் கதையானது பொதுவாசிப்புக்கு ஏற்றவாறு எழுத்துமொழிக்கு மாற்றப்படும் வேளையில் அதன் பல பண்புகள் மாற்றியமைக்கப்படுகின்றன. இவற்றைக் குறித்த மதிப்பீட்டினை இந்நூல் முன்வைக்கின்றது. அதாவது, “கதைகளைத் திரிக்காமல், வெட்டியும் சேர்த்தும் மறுபடைப்பாக்கம் செய்யாமல் நேர்மையோடு வாசிப்புக்கு ஏற்றவாறு மொழிநடையை என்ன செய்துள்ளோம் என்ற குறிப்புகளைத் தந்து பதிவு செய்வதை ஏற்றுக் கொள்ளலாம். எவ்வாறு சேகரிக்கப்பட்டது? எவ்வாறு பதிப்பிக்கப்பட்டது? எங்கிருந்து, யாரிடமிருந்து சேகரிக்கப் பெற்றன என்பன போன்ற தகவல்களைத் தராமல் வெளியிடுவது அறம் இல்லை என்பதை உணரவேண்டும்” (மேலது).
கதைக்குடும்பம் எனும் கருத்தாக்கம்:
நாட்டார் எடுத்துரைப்புகளில் உலகளவில் நடைமுறையிலுள்ள வகைமைப்படுத்துதல், அவற்றின் முறையியல்கள் மற்றும் தமிழ்ச்சூழலில் நடைபெற்றுள்ள வகைப்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்து இந்நூலின் இரண்டாம் பகுதியில் விவரிக்கப்படுகிறது. வாய்மொழி எடுத்துரைப்பு சார்ந்த ஆய்வுகளில் வகைப்படுத்துதலே முதன்மையான ஒன்றாகும். வகைப்படுத்தல் முறையாக அறிவியல் அடிப்படையில் அமையவில்லையெனில் ஆய்வின் முடிவு மட்டுமின்றி, நாட்டார் வழக்காற்றியில் கல்விப்புலமானது தன்னை சமூக அறிவியல் என்று அறிவித்துக் கொள்வதற்கான குணாம்சத்தை இழந்து போகும். வகைப்படுத்தலுக்கு அடிப்படையாக அமைவது அளவுகோல் எனப்படும் அலகு(unit)களாகும், இதுவே, “எந்த ஒரு ஆய்வுக்கும் முதற்படியாகும்.” ஒத்த பண்புள்ள கூறுகளை அடையாளங்கண்டு அவற்றை ஒன்றாக்குவதே வகைப்படுத்தல் எனப்படும். நாட்டார் கதைகளை வகைப்படுத்துவதற்கு கதைக்கூறு (motif), கதைவகை (tale-type) ஆகிய இரு அலகுகள் அன்டி ஆர்னி (Antti Aarne), ஸ்டித் தாம்ப்சன் (Stith Thompson) போன்றோர்களால் பயன்படுத்தப்பட்டன. பின்னாளில், இதன் போதாமைகள் உணரப்பட்டு தேவதைக் கதைகளுக்கு ‘செயல்பாடு’ (function) என்ற அலகினை விளாடிமிர் ஃப்ராப் (Vladimir Propp) முன்மொழிந்தார். வகைப்படுத்தல் ஒரே மாதிரியாக அமையவேண்டுமெனில், “ஒரே மாதிரியான, நிலையான அலகுகள்” பயன்படுத்தப்பட வேண்டும். நடைமுறையில் அவ்வாறில்லை என்பது கவனத்திற்கொள்ள வேண்டியதாகும். வாய்மொழிக் கதைகளை வகைப்பாடு செய்வதற்கு உலகளாவிய அளவில் பல்வேறு வகையான அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு நாட்டார் கதை என்பது பல்வேறு கூறுகளின் தொகுதிகளைக் கொண்ட ஒன்றாகும். இக்கூறுகளை அகக்கூறுகள், புறக்கூறுகள் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இவற்றில், அகக்கூறுகள் என்பன பனுவல் சார்ந்த கூறுகளாகிய “கதைக்கூறு, கருத்து, பாத்திரங்கள், காலம், இடம் (கதைக்களம்),” கதைமாந்தர்களின் செயல் போன்றவற்றை உள்ளடக்கியன. புறக்கூறுகள் என்பன “வடிவக்கூறு, கதையின் மீதான நம்பிக்கை, மனப்பான்மை” போன்றவற்றைக் குறிப்பிடுவன. மேற்கூறிய இக்கூறுகள் அனைத்தும் வகைப்படுத்துவதற்குரிய அளவுகோல்களாக அமையாது. ஒவ்வொரு வாய்மொழி இலக்கிய வகைமையிலும் தனித்தன்மையுடன் காணப்படும் கூறுகளை இனம் கண்டு அதிலிருந்து அவ்வகைக்கான கூறுகளை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. மேலும், “அகக்கூறுகளுக்கும் புறக்கூறுகளுக்கும் இடையே உள்ள உறவைப் பிரிக்க முடியாததால் வகைப்படுத்தலுக்கு அவ்விரண்டு கூறுகளையும் அளவுகோல்களாகக் கொள்ளல் இன்றியமையாதது” (பக்.43) என்று ஸ்டீபன் வலியுறுத்துகிறார்.
இவ்விரண்டாம் அத்தியாயத்தில் மேலை நாட்டாரின் வாய்மொழிக் கதைகளின் வகைப்படுத்துதல் குறித்து விரிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, ரால்ப் ஃஸ்டீல் போக்ஸ் (Ralph Stelle Boggs), வில்லியம் பாஸ்கம் போன்றோரின் வகைப்படுத்துதல்கள் புராணம், பழமரபுக்கதை, நாட்டார் கதைகளை உள்ளடக்கியவையாகும். பழமரபுக் கதைகளைக் கிரிம் சகோதரர்கள், சி.டபிள்யூ. வான்சிடோ (C.M. Von Sydow) -உம், புராணக்கதைகள் மற்றும் பழமரபுக்கதைகளை பால் டிரான் –உம், நாட்டார் கதைகளை ஹெடா ஜேசன் -உம், பழமரபுக் கதைகளைப் பெட்ரிஸ் சில்வர்மேன் வெயின்ரிச் (Bedtrice Silverman Weinreich) - உம் வகைப்பாடு செய்துள்ளதைக் குறித்து விரிவாக எழுதியுள்ளனர். இறுதியாக, அனைத்துலக ஆய்வுக்குழு பழமரபுக்கதைகளை நான்காக வகைப்பாடு செய்துள்ளமை குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
தமிழில் உள்ள நாட்டார் கதைகளை வகைப்பாடு செய்வதற்காக “கதைக்குடும்பம்” (Tale Family) என்ற கருத்தாக்கத்தினை ஸ்டீபன் இந்நூலில் முன்மொழிகிறார். இக்கருத்தாக்கமானது ‘ஆய்வு வகைமை’ (analytical category), ‘இனவகைமை’ (ethnic category) ஆகிய இரு கருத்தாக்கங்களை உள்வாங்கலின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாகச் சொல்ல வேண்டுமெனில், இராபார்ட் கால்டுவெல் மொழியியல் ஆய்வில் திராவிட மொழிகள் அனைத்தையும் சோர்த்து அழைத்திட ‘குடும்பம்’ என்ற கருத்தாக்கத்தினைப் பயன்படுத்தியுள்ளதை அடியொற்றி, இந்நூலாசிரியர் கதைத்தொகுதிகளைக் குறிப்பிட ‘குடும்பம்’ என்ற கருத்தாக்கத்தினைப் பயன்படுத்தியுள்ளார். மரபுவழியாக நாட்டார் கதைகளைக் குறிப்பிட நாட்டார் மரபில் இக்கருத்தாக்கம் வழக்கிலுள்ளது. உதாரணமாக, ‘இராஜா - இராணி கதை’ என்ற வகைப்படுத்துதலானது தமிழிலுள்ள இராஜா, இராணி கதாபாத்திரங்களுடன் தொடர்புடைய கதைகள் அனைத்தும் நாட்டார் குழுவினர் இனவகைமையின் அடியொற்றி வகைமைப்பாடு செய்யப்பட்டுள்ளன. ஸ்டீபன் இந்த இரண்டு வகைமைகளின் அடிப்படையிலேயே 'கதைக்குடும்பம்’ என்ற கருத்தாக்கத்தினை வருவித்துள்ளார். இதன் முக்கியத்துவமானது, இந்நூலில் பின்வருமாறு எடுத்துரைக்கப்பட்டுள்ளது: “ஒரு கதைக் குடும்பத்தில் எண்ணற்ற வடிவங்களும், மாற்றுவடிவங்களும் உள்ளடங்கும். இவ்வடிவங்களிலும், மாற்று வடிவங்களிலும் இடம்பெறும் கதைக்கூறுகள், நிகழ்வுகள், கதைவரன் முறை (sequence) போன்றவை பண்பாட்டுக்குப் பண்பாடு அல்லது ஒரே பண்பாட்டுக்குள் வேறுபடலாம். இத்தகைய வேறுபாடுகள் இருந்தாலும் அவை பொதுவான ஓர் அடிக்கருத்தை அல்லது தோற்ற உறவைப் பெற்றிருப்பதால் தனித்தன்மையான வகைமாதிரியான பண்பைப் பெற்றிருக்கும் இக்கதைக்குடும்பம் சுதந்திரமானது” (பக். 83).
வகைமைக் கோட்பாடு:
இயற்கை அறிவியலாகிய தாவரவியல் மற்றும் விலங்கியல் துறைகளில் அதன் ஆய்வுப் பொருட்களாகிய தாவரங்களையும், விலங்கினங்களையும் வகைப்பாடு செய்ததன் வழியே வளர்ச்சி கண்டு, அது வகைப்பாட்டியல் (Taxonomy) என்று அழைக்கப்படுகிறது. இவ்வகைப்பாட்டியலை அடியொற்றி நாட்டார் வழக்காற்றியலில் வாய்மொழி வழக்காறுகளை அறிவியலடிப்படையில் வகைதொகைப்படுத்த முனைந்தனர். இப்பின்புலத்திலேயே தான் வகைமை (genre) குறித்த சிந்தனையானது உருப்பெற்றது. இவ்வகைமைக் கோட்பாட்டினைக் குறித்து இந்நூலின் மூன்றாம் இயல் விளக்குகின்றது. உலகளவில் நாட்டார் வழக்காற்றியில் வகைமைப்பாட்டுச் சிந்தனை இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே தோன்றினாலும்கூட அண்மைக்காலத்தில்தான் “வகைமைக் கோட்பாட்டை உருவாக்கக்கூடிய ஓர் ஆய்வுப்பார்வை கிட்டியுள்ளது” என்ற லாரி ஹாங்கோ -இன் கூற்றினை நூலாசிரியர் மேற்கோள் காட்டுகிறார்.
வழக்காற்று வகைமை என்ற கருத்தாக்கமானது அடிக்கருத்து, வடிவம், செயல்பாடு ஆகிய மூன்று கூறுகள் உள்ளடங்கியதன் தொகுதியாகும்.
இம்மூன்று கூறுகளுக்கு இடையிலான உறவினை மதிப்பீடு செய்வதன் வாயிலாக ஒரு வகைமையின் நிலைத்த தன்மையைக் கண்டறிய இயலும். குறிப்பிட்டதொரு பண்பாட்டிலுள்ள மக்கள் குழுக்களிடம் வழக்கில் இருக்கும் வழக்காற்று வகைமையானது அவர்களாலும் ஒரு வகையில் வகைப்பாடு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும். இதனை ‘மரபுசார் வகைமை’ என்பர். அதே போன்று, அந்தக் குறிப்பிட்ட வழக்காற்று வகைமையானது கல்விப்புலம் சார்ந்த ஆய்வாளர்களால் “தெளிவானவையாகவும், வரையறுக்கப் பட்டவையாகவும், பொதுமைப்பட்டவையாகவும்” வகைதொகைப் படுத்தப்பட்டிருந்தால், அதைக் ‘கல்விப்புலம்சார் வகைமை’ என்றழைப்பர். முன்னரே, இவ்விரண்டு வகைமைகளும் ‘இனவகைமை’, ‘ஆய்வுவகைமை’ என்று விவரிக்கப்பட்டுள்ளன. இதனை முன்மொழிந்தவர் டான் பென் அமாஸ் (Dan Ben-Amos) ஆவார். இவ்வகைமைகளை முறையே 'உண்மை வகைமை' (real genre), 'இலட்சிய வகைமை' (ideal genre) என்று லாரி ஹாங்கோ கருத்தாக்கம் செய்துள்ளார். இவ்வகைப்படுத்தல் குறித்து மதிப்பீடு செய்து ஸ்டீபன் பின்வரும் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்:
“வகைமை பற்றிய சிக்கல்களைத் தீர்க்க உலகளாவிய நிலையில் தனித்த வகைமைகளை இனம் காண்பதும் வரையறுப்பதும் வேறுபடுத்துவதும் அவ்வளவிற்குச் சாதகமான போக்குகளாக அமைய இயலாது.” எனவே, இக்குறைபாட்டினைத் தீர்ப்பதற்கு மரபுசார் வகைமை மற்றும் கல்விப்புலம்சார் வகைமை ஆகிய இரண்டின் ஒருங்கிணைவுடன் கூடிய வகைமைப்பாட்டினை இந்நூலாசிரியர் வலியுறுத்துகிறார். அதாவது, “பண்பாடு சார்ந்த வகைமை ஒழுங்கமைப்பைப் புறக்கணித்துவிட்டு செய்யப்படும் வகைமை சார்ந்த ஆய்வுகள் பண்பாட்டிற்குள் பொருளற்றவையாகவே அமையும். வகைமைகள் ஒன்றோடு ஒன்று கொண்டுள்ள உறவுகளையும் தொடர்புகளையும் அவை பண்பாட்டில் ஆற்றும் செயல்பாட்டினையும் கருத்தில் கொண்டு வகைமை ஒழுங்கமைப்பை உருவாக்க வேண்டும். இதற்குப் பல்வேறு வகைமைகளை ஒத்திணைக்க வேண்டியது வரலாம். அதனைப் போன்று வகைமைகளின் எண்ணிக்கையைச் சுருக்குவதன் வாயிலாக ஒன்றோடு ஒன்று மேவிவரும் வகைமைகளை அல்லது குழப்பமான வகைமைகளைத் தவிர்க்கலாம். மேலும் வெவ்வேறு பண்பாடுகளில் சிற்சில வேறுபாடுகளுடன் காணப்படும் வகைமைகளைப் பொதுமைப்படுத்தவும் ஒத்திணைப்பு செய்யவும் துணை செய்யும்” (பக். 99). இப்புரிதலின் அடிப்படையிலேயே ஸ்டீபன் ‘கதைக்குடும்பம்’ என்ற கருத்தாக்கத்தினை உருவாக்கியுள்ளார்.
கதைவகை அடைவு:
இந்நூலின் இறுதிக் கட்டுரையாக இடம் பெற்றிருப்பது “கதைவகை அடைவும் முறையியலும்” என்பதாகும். அன்டி ஆர்னி, ஸ்டித்-தாம்ப்சன் ஆகியோர் உருவாக்கிய கதைவகை, கதைக்கூறு ஆகிய கருத்தாக்கங்கள் நாட்டார் கதைகளை அடைவு செய்யப் (Index) பயன்படுத்தப்பட்டவையாகும். இந்த அடைவுகளின் உதவி கொண்டு “கதைகளின் மரபுவழித் தன்மையையும் வழக்கியல் மரபையும் அறியலாம். மேலும், ஒப்பீட்டு ஆய்வுகளுக்கு பேருதவியாகவும் அவை அமையும். இவ்விரண்டு கருத்தாக்கங்கள் குறித்த விரிவான விளக்கங்கள் இந்நூலில் அளிக்கப்பட்டுள்ளன. அன்டி ஆர்னி என்ற பின்னிய நாட்டார் வழக்காற்றியலர் 1910 -ஆம் ஆண்டில் ஜெர்மானிய மொழியில் கதைவகை அடைவை (Tale-type Index) வெளியிட்டார். அமெரிக்காவைச் சேர்ந்த நாட்டார் வழக்காற்றியலர் ஸ்டித்-தாம்ப்சன் 1928, 1961 ஆகிய ஆண்டுகளில் மேற்கூறிய அடைவைத் திருத்தி, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, விரிவாக்கம் செய்து வெளியிட்டார். பின்னாளில், ஜெர்மானிய நாட்டார் வழக்காற்றியலர், ஹன்ஸ்-ஜோர்க் யுதார் (Hans-Jorg Utter) அதனைச் செம்மைப்படுத்தி, விரிவாக்கம் செய்து 2004-ஆம் ஆண்டில் வெளியிட்டார். இதனை ஏடியு அடைவு (ATU Index) என்றழைக்கின்றனார். இவ்வகை அடைவுகள் குறைபாடுகள் உடையவையாயினும், அவற்றின் முக்கியத்துவம் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளில் தவிர்க்க முடியாததாக விளங்குகின்றது.
இந்தியாவில் சேகரிக்கப்பட்ட வாய்மொழிக் கதைகளுக்கு ஐந்து கதைவகை அடைவு நூல்கள் வெளிவந்துள்ளன என்றும், தமிழில் போதுமான நாட்டார் கதைகள் தொகுக்கப்பட்டிருந்தாலும் அவை அடைவு செய்யப்படாமல் உள்ளன என்றும் இந்நூலில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஞா. ஸ்டீபனின் இந்நூல் நாட்டார் வழக்காற்றியல் என்ற ஆய்வுப்புலத்திற்குப் பெரும்பங்களிப்பினை நல்கிய ஒன்றாகும். ஆரம்பத்தில் கூறியது போன்று, வாய்மொழிக் கதைகளை வகைப்பாடு செய்ய வேண்டியதன் அவசியத்தையும், வகைப்பாடு செய்வதிலுள்ள முறையில் சார்ந்த இடர்பாடுகளையும், வகைமைக் கோட்பாட்டைக் குறித்து விரிவாகவும், உதாரணங்களுடன் இந்நூல் எடுத்து இயம்புகிறது. அத்துடன், தமிழில் நாட்டார் கதைகளுக்கான அடைவைக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது. இச்செயல்பாடு என்பது நாட்டார் வழக்காற்றியல் கல்விப்புலத்திற்கான கருவிநூலை (tool book) உருவாக்குவதாகும். இவ்வடைவு நூல், பிறமொழி வாய்மொழி இலக்கியங்களுடன் ஒப்பீட்டு ஆய்வு செய்ய அடித்தளமாக அமையும். நாட்டார் வழக்காற்றியல் துறையில் வகைப்படுத்துதல் என்ற பகுதியானது தமிழ்ச்சூழலில் அதிகம் கவனத்திற்குட்படாத பகுதியாகும். அந்த அடிப்படையில் இந்நூல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
- மு.அறிவழகன், உதவிப் பேராசிரியர், நாட்டார் வழக்காற்றியல் துறை, தூய சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை