தமிழ் இலக்கிய உலகில் புதிய கவி ஊற்றாகப் பொங்கிப் பீறிட்டு எழுந்த கவிஞன் மகா கவி பாரதி. பாரதியின் எழுத்துகள் எல்லா வகையிலும் தமிழ் உலகில் மாற்றத்தைக் கொண்டு வந்த எழுத்துகள். முப்பத்து ஒன்பது ஆண்டுகளே வாழ்ந்து மறைந்த கவிஞரின் எழுத்துகள் சாகாவரம் பெற்றவை. அவை பன்முக ஆளுமையுடையவை. பாரதி மறைந்து நூறாண்டுகள் ஆகின்றன. ஆனாலும் அவன் இன்றளவும் பேசப்படுகின்றான். இன்னும் பேசப்படுவான். இங்ஙனம் பேசப்படுவதற்கு மூல ஆதாரமாக இருப்பவை அவனுடைய எழுத்தும் வாழ்க்கையும் என்றால் அது மிகையில்லை. அதனால் தான் அவனுடைய வாழ்க்கையையும் எழுத்துகளையும் பார்க்கிறபோது அவற்றுள் காலந்தோறும் தேவைப்படுகின்ற மிகப்பெரிய கருவூலம் ஒன்று இருப்பதைக் காண முடிகிறது.
‘கனவிலும் இன்னாது மன்னோ சொல்வேறு செயல்வேறு பட்டார் தொடர்பு’ என்பார் வள்ளுவப் பெருந்தொகை. பாரதியின் வாழ்வும் வாக்கும் சுத்தமானவை. வாழ்க்கையை வகுத்துக் கொண்டு வாழ்ந்த அவன், ‘நமக்குத் தொழில் கவிதை; நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்று தம் வாழ்க்கையைப் பிரகடனப்படுத்திக் கொண்டு வாழ்ந்தான்.
தெய்வ நம்பிக்கையைத் தம் நெஞ்சத்தில் எப்போதும் தேக்கியிருந்த மகாகவி பாரதி, ‘என் அறிவில் தெய்வத் தன்மை காணப்படுகிறது. நான் ஒரு தேவனைப் போலே சிந்தனை செய்ய வல்லேன். இனி என் செய்கைகளிலும் தெய்வத் தன்மை விளங்குதற்குரிய வழி செய்ய வேண்டும்’ என்று சிந்தித்தான். ‘தெய்வம் என்னுள் எப்போதும் வந்து பொழிந்து கொண்டிருக்கும்படி என்னைத் திறந்து வைத்திருக்கிறேன்’ என்று குறிப்பிடும் கவிஞன்,
“தெய்வம் பலபல சொல்லி - பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்
உய்வ தனைத்திலும் ஒன்றாய் - எங்கும்
ஓர்பொரு ளானது தெய்வம்”
“ஆத்திசூடி இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே;”
எனும் கருத்துடைய பாரதி இறைவன் ஒருவன் என்பதை ஏற்றபின், ‘ஏகனான இறைவனே அனேகனாகக் காட்சி தருகிறான்’ எனும் மாணிக்கவாசகர் வழிப்பட்ட சிந்தனை உடையவனாகத் திகழ்ந்தான்.
‘பரம்பொருள் ஒன்று’ என்ற பாரதி உண்மையை வாழ்த்தினான்.
“உண்மையின் பேர் தெய்வம் என்போம் - அன்றி’
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்;
உண்மைகள் வேதங்கள் என்போம் - பிறிது
உள்ள முறைகள் கதையெனக் கண்டோம்”
எனப் பாடி உண்மையே தெய்வம் என்றான். ‘உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்’. அதனால் உண்மையைப் பேண வலியுறுத்தினான்.
எப்போதும் மலர்ந்த முகமும் இனிய சொல்லும் தெளிந்த சிந்தையும் கொண்டிருந்த பாரதி, ‘இடையறாத தொழில் புரிந்து இவ்வுலகம் பெருமைகள் பெற முயல்வேன். இல்லாவிடின் விதி வசமென்று மகிழ்ச்சியோடு இருப்பேன்’ என்று வாழ்ந்தான். அனைவரும் மகிழ்ச்சியோடு இருப்பதையே அவன் விரும்பினான்.
‘ஒவ்வொருவரும் அகத்தைத் தூய்மைப்படுத்தி வாழவேண்டும்’ என்று அவன் ஆசைப்பட்டான். அதனால்தான் அவன், ‘உள்ளும் புறமும் ஒன்று’ என்றான்; ‘உள்ளும் புறமும் மாசில்லாது செய்யப் பழக வேண்டும்’ என்று வழிகாட்டினான். ‘மனத்தை உற்சாக நிலையில் வைத்துக் கொண்டால் உடம்பிலே தீவிரமுண்டாகும். உடம்பைத் தீவிரமாகச் செய்து கொண்டால் மனது உற்சாகத்துடன் இருக்கும். மனத் தளர்ச்சிக்கு இடம் கொடுக்கலாகாது’ என்று ஓர் உளவியல் மருத்துவனைப் போன்று மனித மனத்தைப் பக்குவப்படுத்தி வாழ்தலைக் குறித்துக் கருத்துரைத்தான்.
அகத்தைத் தூய்மைப்படுத்தி வாழ அறிவுறுத்திய கவிஞன் அகந்தை கொள்ளலாகாது என்றான். ‘அகங்காரம் பிரிவு படுத்துகிறது’ எனக் குறிப்பிட்டான். ‘உலகத்தார் அகங்காரம் என்ற அசுரனுக்கு வசப்பட்டு சகல தேசங்களிலும் நரகத் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். அகங்காரத்தை வெட்டி எறிந்து விட்டால் மனித சாதி அமர நிலையடையும்’ என்று எடுத்தியம்பிய பாரதி,
“தேவர் வந்து நமக்குட் புகுந்தே
நாசமின்றி நமை நித்தம் காப்பார்
நம் அகந்தையை நாம் கொன்று விட்டால்”
என்றும் இயம்புகிறார்.
அகந்தையை அழித்து வாழ வழிகாட்டிய பாரதி அச்சம் தவிர், ஆண்மை தவறேல் என அச்சமின்றி வாழக் கட்டளையிடுகிறான்.
“நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி
அஞ்சி உயிர் வாழ்தல்
அறியாமை தஞ்சமென்றே
வையமெலாங் காக்கும் மகாசக்தி நல்லருளை
ஐயமறப் பற்றல் அறிவு”
என எடுத்துரைக்கிறான். அஞ்சி அஞ்சி அன்றைய நாளில் வாழ்ந்த இந்தியத் திருநாட்டு மக்களின் மனங்களில் புதைந்து கிடந்த தேவையற்ற அச்ச உணர்வை ஆணிவேரோடு பிடுங்கி எறிய அவன் எத்தனித்தான். அதனால்தான் ‘அச்சம் இல்லை, அழுங்குதல் இல்லை, நடுங்குதல் இல்லை, நாணுதல் இல்லை, பாவம் இல்லை, பதுங்குதல் இல்லை, எது நேரினும் இடர்ப்பட மாட்டோம், கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம், யார்க்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம், எங்கும் அஞ்சோம்’ என்று அடுக்கிக் கொண்டே போகிறான்.
அச்சத்தை அகற்றி வாழ அறிவுறுத்தும் கவிஞன் அடிமையுணர்வை அகற்றி வாழவும் அறிவுறுத்துகிறான். யாரும் யாரையும் அடிமைப்படுத்தி வாழ்தல் ஆகாது எனக் கூறும் பாரதி,
“அறிவு கொண்ட மனித உயிர்களை
அடிமையாக்க முயல்பவர் பித்தராம்
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்கள் ஆவதற்கே
சிறிய தொண்டுகள் தீர்த்து அடிமைச்சுருள்
தீயில் இட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்”
என்று கடுஞ்சீற்றத்துடன் மொழிகிறான். தன்னையே அறியாமல் அடிமைப்பட்டுக்கிடக்கும் மாந்தரை,
“எப்போதும் கை கட்டுவார் - இவர்
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கி நடப்பார்”
என்று அடையாளங் காட்டுகிறான்.
மனிதர்கள் தான் மனிதரை அடிமைகளாக்கிப் பார்க்க விழைகின்றனர். ‘மிருகங்களும் பட்சிகளும் பிற சாதி மிருக பட்சிகளை அடிமைப்படுத்துவதில்லை; சுய சாதிகளையும் அடிமையாக்குவதில்லை. சிங்கத்துக்குக் கீழே மற்றொரு சிங்கம் அடிமை கிடையாது. ஒரு நாய், ஒரு கழுதை, ஒரு நரி, ஒரு பன்றி கூடச் சிங்கத்தின் கீழே அடிமையில்லை’ எனப் பலவாறு பகரும் பாரதி, ‘நம்மைப் போன்றதொரு ஆத்மா நமக்கு அச்சத்தினாலே அடிமைப்பட்டிருக்கும் என்று நினைப்பவன் அரசனாயினும், குருவாயினும், புருஷனாயினும் மூடனைத் தவிர வேறில்லை. அவனுடைய நோக்கம் நிறைவேறாது’ என்று எச்சரிக்கவும் செய்கிறான். எல்லோர் சார்பாகவும், ‘இந்தப் பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்’ என்று குரல் கொடுக்கிறான்.
‘ஏழ்மை கொண்ட போழ்தினும் அறந்தவிர்க்கிலாது நில்’ என்று அறத்தை வலியுறுத்தும் பாரதி, ‘சுடுதலும் குளிர்தலும் உயிருக்கில்லை; சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக்கில்லை; எடுமினோ அறப் போரினை!’ என அறத்தைக் கையிலெடுக்க வலியுறுத்துகிறான். அறத்தைப் பேணக் கூறும் கவிஞன், ‘துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம் அன்பில் அழியுமடி கிளியே அன்புக்கு அழிவில்லை காண்’ என்று அன்பை எடுத்துரைக்கிறான். ‘அன்புண்டானால் இன்பமுண்டு. அன்பு கொள்கையில் இருந்தால் போதாது செய்கையில் இருக்க வேண்டும்’ என்றும் சுட்டுகிறான்.
சமூகம் சார்ந்து பலவாறு சிந்திக்கும் பாரதி தமிழின் மேல் தனிப் பற்றுக்கொண்டு திகழ்ந்தான். ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’, தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகையில் செய்தல் வேண்டும்’, ‘சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்’ எனப் பலவாறு தமிழ் மீது பற்றுக் கொண்டு பாடும் கவிஞன், ‘இயன்ற வரை தமிழே பேசுவேன், தமிழே எழுதுவேன்’ சிந்தனை செய்வது தமிழிலே செய்வேன்’ என்று தாய்மொழிப் பற்றை வெளிப்படுத்துகிறான்.
‘இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களுக்குப் போய்த் தேறினவர்களிடம் மனச் சாட்சியும் அறிவுப் பயிற்சியின் விலாசத்திற்குத் தகுந்த படியும் நடக்கும் யோக்யதை மிகக் குறைவாக இருக்கிறது’ என்பதும் பாரதியின் கருத்து.
ஆணும் பெண்ணும் ஒன்றுக்கொன்று உண்மையாக இருந்தால் நன்மையுண்டாகும். சகல அம்சங்களிலும் ஸ்திரீயே மேல். பெண்ணை அடிமை என்று கருதாதே. முற்காலத்துத் தமிழர் மனைவியை ‘வாழ்க்கைத் துணை’ என்றார். ஆத்மாவும் சக்தியும் ஒன்று. ஆணும் பெண்ணும் சமம்’ என்பன பாரதியின் பெண்கள் பற்றிய கொள்கை. அதனால் தான் அவன்,
“ஆணும் பெண்ணும் சமம் எனக் கொள்வதால்
அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்”
எனப் பாடுகிறான்.
“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்”
என்று பாடிய பாரதி, ‘ஒரு தேசத்தின் நாகரிகத்துக்கு அந்தத் தேசத்தின் இலக்கியமே மேலான அடையாளம்’ என்றான். உலகத்து உயிர்களையெல்லாம் நேசித்த பாரதி,
“காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்”
என்று பாடினான். உலகத்து உயிர்களையும் இயற்கையையும் அவன் பிரித்துப் பார்க்கவில்லை.
‘எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும், திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்த நல் அறிவு வேண்டும்’ என்று வேண்டிய பாரதி உழைப்பை நம்பினான். ‘ஓயாமல் தொழில் செய்து கொண்டிரு’, ‘பயனுக்கு அவசரப் படாதே’, ‘நாளெல்லாம் வினை செய்’ என அறிவுறுத்தினான்.
பாரத மணித் திருநாட்டு மக்களிடையே ஒற்றுமையில்லை என்பதை உணர்ந்த பாரதி, ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே - நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே’ என அறிவித்தான்.
கடவுள் நம்பிக்கையில் உறுதியாய் இருந்த பாரதி கண்ணன் பாட்டைப் பாடினான். கண்ணன் எனும் இறைவனோடு தான் இரண்டறக் கலந்த நிலையினை அவன் அதில் காட்டுகிறான். இறைவனைத் தமக்கு எல்லாமாகவும் அவன் பார்க்கிறான்.
‘இன்னறுங் கனிச் சோலைகள் செய்தல் இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல் அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி யொளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்று எல்லோர்க்கும் கல்வி கொடுக்க வலியுறுத்திய பாரதி ‘எல்லா விதமான தானங்களைக் காட்டிலும் வித்யா தானமே மிகவும் உயர்ந்தது’ என்றும் குறிப்பிடுகின்றான். கல்வி கற்று எட்டுத்திக்கும் சென்று கலைச் செல்வங்கள் யாவையும் கொணர்ந்திங்கு சேர்த்து நாட்டை வளப்படுத்தக் கட்டளையிடுகின்றான்.
“காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்
கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர்! உலகத் தீரே!
அஃதொன்றோ இவ்வுலகத் தலைமை இன்பம்
காதலினால் சாகாம லிருத்தல் கூடும்
கவலைபோம் அதனாலே மரணம் பொய்யாம்”
எனக் காதலைப் பாடிய பாரதி கற்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது என்கிறான். ‘ஆணும் பெண்ணும் சமம்’ எனப் பாடுகிறான்.
எல்லாக் கடவுளர்களையும் பாடிய கவிஞன் அந்நாளில் நாட்டிற்கு உழைத்த காந்தி உள்ளிட்ட தலைவர்களையும் பாடினான். ‘இனியொரு விதி செய்வோம் - அதை எந்த நாளும் காப்போம். தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ எனும் குறிக்கோளுடன் வாழ்ந்த பாரதி, “எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓரினம் எல்லோரும் இந்திய மக்கள் எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர்விலை எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்று எல்லோரையும் சமமாகப் பார்க்கும் பார்வையைக் கொணர முயற்சித்தான். சாதிகளை மறுத்தான். ‘குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என்றான். ‘சாதியினால் நீ பிரிந்திராதே. சாதி தீய மனிதர்கள் உண்டாக்கிய சதி. அதனை மிதி. அழி. சமம் என்று கூவு’ என்றும் குறிப்பிட்டான்.
தமிழ், தமிழ்நாடு, இந்தியா, உலகம் எனும் பரந்துபட்ட பார்வையையும் கொள்கையையும் உடைய தீர்க்க தரிசனக் கவிஞனான பாரதி உலகு தழீஇய ஒட்பத்தினைப் போற்றும் பாவலனாகத் திகழ்ந்தான். தமிழைப் பாடிய பாரதி, தமிழ்நாட்டைப் பாடிய பாரதி, இந்தியாவைப் பாடிய பாரதி, உலகைப் பாடிய பாரதி தெய்வப்பற்றையும் தேசப்பற்றையும் ஒன்றாகப் பாவித்தான். தேச விடுதலையை மட்டுமன்றி சமூக விடுதலையையும் பெண் விடுதலையும் பாடினான். ‘பெண் விடுதலை வேண்டும் அதைப் பெரிய கடவுள் காக்க வேண்டும்’ என்று வேண்டினான். பாரதி பாடாத பொருள் இல்லை. பாரதியின் பாடல்களும் உரைநடையும் தனித்துவமானவை. கவித்துவமும் அழகும் மிகுந்தவை. மனித சமுதாயத்திற்கு அவை காலந்தோறும் தேவைப்படுபவை. அதனால்தான் பாரதியும் அவன் கவிதையும் நூற்றாண்டுகளுக்குப் பின்னும் இன்னும் தேவைப்படுகின்றன. அவனும் அவன் படைப்புகளும் இறவாத புகழுடையவை..
- பேராசிரியர் உ.அலிபாவா, தமிழியல் துறைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி.