பொதுவாக நாம் சிலரை, நீங்கள் சொல்லுவதை ‘"தண்ணீரில்தான் எழுத வேண்டும்"‘ என்று சொல்வோம். அவர் பேச்சை ‘"நீரில்தான் எழுத வேண்டும்"‘ என்றும் சிலர் சொல்வர்.
இந்த தொடர் நம் வாழ்வின் அன்றாடப் புழக்கத்திற்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால், இதற்கு இலக்கியச் சான்று உள்ளது.
பதினேழாம் நூற்றாண்டில், திருவைகுண்டத்தில் தோன்றிய சமயப் பெரியவர் ‘குமரகுருபர சுவாமிகள்’, தான் இயற்றியுள்ள ‘நீதிநெறி விளக்கம்’ என்னும் நூலில், காப்பு செய்யுளாக இயற்றியுள்ள முதற் செய்யுளில்,
‘".....நீரில் எழுத்தாகும் யாக்கை...."‘ எனக் குறிப்பிட்டுகிறார்.
இந்த உடல் நிலையற்றது என்பதை உணர்த்த எழுதப்பட்ட பாடல் உள்ள வரியாகுமிது.
அண்ணல் காந்தியடிகள், தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது, இந்த வரியை ‘தில்லையாடி வள்ளியம்மை’ யின் தமயனார் பாலசுந்தரம் மூலமாக அறிந்து, அதன் முழுப்பாடலையும் அறிய முற்பட்டார்.
பின்னர் ,அந்த முழுப்பாடலையும், ஆங்கிலத்தில் Translitration முறையில் பாலசுந்தரம் எழுதிக் கொடுத்தார்.
அதன் பொருளறிந்து அதை மனப்பாடம் செய்தார்; காந்தியடிகள்.
ஒருமுறை ‘வார்தா சேவாசங்கம்’ சென்று சில நாட்கள் காந்தியடிகளுடன் தங்கியிருந்த ‘பள்ளத்தூர் அண்ணாமலை செட்டியார்’, ஊர் திரும்பும்போது, காந்தியடிகளிடம் Autograph கேட்டுள்ளார்.
அவ்வாறு Autograph இல் நான் கையொப்பிட வேண்டுமெனில் ரூ 5/= அரிஜன சேமலநிதிக்கு கொடுக்க வேண்டும் என்றார்.
அவ்வாறு பணம் கொடுக்கவேண்டுமெனில், நீங்கள் தமிழில் கையொப்பமிட வேண்டுமென்றார்; அண்ணாமலை செட்டியார். அவ்வாறெனில் ரூ 6/= தர வேண்டுமெனக் கூறினார் காந்தியடிகள்.
அத்தொகையை கொடுத்து கூடவே பொன்மொழி ஒன்றும் எழுதிக் கேட்டுள்ளார்; அண்ணாமலை செட்டியார்.
அதில் ‘"....Neeril eluthahum yaakkai..."‘ by Kumarakurupara Swamikal, என எழுதி ‘மோ.க.காந்தி’ என கையொப்ப மிட்டுள்ளார்.
இதையறிந்த அண்ணாமலை செட்டியார், காந்திடிகளின் தமிழ் இலக்கியறிவை உணர்ந்து பெரிதும் வியந்து மகிழ்ந்தார்.
அண்ணாமலை செட்டியார் நிறுவியுள்ள சிதம்பரம்,அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பல்வேறு கட்டிடங்களும் பல்வேறு அறிஞர்களின் பெயர்களை தாங்கி நிற்கும்.
வார்தாவிலிருந்து திரும்பிய பின்னர் அவ்வளாகத்திலிருந்த சிறு நூலகம் ஒன்றினுக்கு ‘"குமர குருபரர் நூலகம்"‘ எனப் பெயரிட்டார்.
அதன் பின்னர் எழுந்ததுதான் அவ்வளாகத்தில் உள்ள மிகப் பெரிய நூலகமான "சர்.சி.பி.இராமசாமி ஐயர் நூலகம்". ஆசிய கண்டத்தின் இரண்டாவது ஆகப் பெரிய நூலகம் எனவும் இதைக் கூறுவர்.
தமிழகத்தின் தென்புறத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றின் வடகரையில் தோன்றிய தமிழ் வளர்த்த சமய அடியாரின் பெருமைகளை, வார்தா நதிக்கரையின் வடகரையில் வாழ்ந்த வடபுலத்து காந்தியடிகள் அறிந்திருந்தார்.
அதானால்தான் தென்னாடு நன்னாடு என்று போற்றப் பெற்றது.
"தென்னாடுடடைய சிவனேப் போற்றி" என்றார் மாணிக்க வாசகர்.
இளங்கோவடிகளும் "தென்னவன் தீதிலன்" என கண்ணகி வாயிலாக, சொல்ல வைத்தார். தமிழ் வளர்த்த சமயப் பெரியவர்கள் தோன்றிய, நாட்டில் இன்று நித்தியாநந்தாக்களும், ஜக்கி வாசுதேவ்களும் பிறந்து தமிழ்ச் சமயத்தை பாழாக்கி விட்டனர்.
வேதனை, வேதனை, வேதனையே.
- ப.தியாகராசன்