தமிழ்க் கவிதை உலகிலும் தமிழ் இசைப்பாடல் உலகிலும் தம் அரிய கவிதைகளாலும் காலத்தை வென்று வாழும் வல்லமையுடைய அரிய பாடல்களாலும் தமிழ் உலகில் என்றைக்கும் நின்று நிலைக்கும் பெருங்கவிஞரான அபிவைத் தாஜுத்தீன் அவர்கள் 24.10.2024 அன்று மாலை 4.00 மணிக்குத் திருவாரூர் மாவட்டம் அபிவிருத்தீஸ்வரத்திலுள்ள தம்முடைய இல்லத்தில் இறைவனின் திருவடி நீழலை அடைந்தார்கள். அவருடைய இழப்பு என்பது தமிழ் இசை உலகிற்கும் பேரிழப்பாகும்.

abivaith tajudheenமிகச் சிறந்த கவிஞர், நேர்த்திமிகு பாடலாசிரியர், அருமையான கட்டுரையாளர், நாடுபோற்றும் நாவலர், நல்ல பதிப்பாளர், பத்திரிக்கையாளர், அரசியலையும் சமூகத்தையும் இணைத்துப் பார்க்கும் சமுதாய விழிப்புணர்வு மிக்க சமூகச் செயற்பாட்டாளர் எனும் பன்முக ஆற்றலுடைய கவிஞர் தாஜுத்தீன் அவர்கள் தம் வாழ்நாளின் இறுதிக்காலம் வரை தொடர்ந்து இயங்கி வந்தார்.

இஸ்லாமிய இசைப் பாடல்களின் நாயகனாகவும் முடி சூடா மன்னனாகவும் கடந்த எண்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் திகழ்ந்து வந்த இசைப் பேரரருவி இசை முரசு நாகூர் இ.எம். ஹனிபா இஸ்லாமியர்களையும் மற்றோரையும் தம் சிம்மக் குரலால் கட்டி வைத்திருக்கும் இசையுலக ஆளுமையாக விளங்கினார். பல்லாயிரம் பாடல்களைப் பாடிக் குவித்த இசைமுரசான இவர் இஸ்லாமியர்களின் நெஞ்சங்களிலும் குறிப்பாகத் தமிழ் மக்கள் அனைவர் நெஞ்சங்களிலும் தமிழ் உள்ள அளவும் வாழும் ஆற்றல் மிக்க மேதையாவார். இவர் பாடிய பாடல்களுள் நானூறுக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியருளியவர் இலக்கியச் செல்வர் கவிஞர் அபிவை டி.எம்.எம். தாஜுத்தீன் அவர்களாவார். அபிவையாரின் பாடல்களை இசைமுரசு நாகூர் இ.எம். ஹனிபா மட்டுமன்றி காயல் ஷேக்முகம்மது, முகவை சீனி முகம்மது, புதுக்கோட்டை இ.எம். பாஷா, திரைப்படப் பாடகர் மனோ, இ.எம். ஜக்கரியா, தேரிழந்தூர் தாஜுத்தீன், அடவங்குடி அப்துல்ரகுமான், மஸ்தான் உள்ளிட்ட பலரும் பாடித் தமிழகத்தில் இஸ்லாமியத் தேனிசை பரப்பியுள்ளனர்.

கவிஞர் அபிவை டி.எம்.எம். தாஜுத்தீன்

கவிஞர் டி.எம்.எம். தாஜுத்தீன் 1935 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 7 ஆம் நாள் தம் தாயாரின் ஊரான நாகை மாவட்டம் நன்னிலம் வட்டம் பாக்கம் கோட்டூரில் தா. முஹம்மது இபுராஹிம், ஆசியாம்மாள் ஆகியோர்க்கு ஒரே மகனாகப் பிறந்தார். தந்தையின் ஊரான திருவாரூர் மாவட்டத்திலுள்ள அபிவிருத்தீஸ்வரத்தில் வாழ்ந்து வந்தார். கவி.கா.மு. ஷெரீப் பிறந்து வளர்ந்த ஊரான அவ்வூரில் கவி.கா.மு. ஷெரீபின் நினைவாக அவர் இருக்கும் சாலைக்குக் கவி.கா.மு. ஷெரீப் சாலை எனப் பெயர் வைத்து அவர் நினைவைப் போற்றி வந்தார். செல்வச் சிறப்பு மிக்க மாமன்மார்களின் அன்பிலும் அரவணைப்பிலும் வளர்ந்த அபிவையார், தொடக்கக் கல்வியைப் பாக்கம் கோட்டூரிலும் ஏனங்குடியிலும் நன்னிலத்திலும் பயின்றார். பின்னர் இவருடைய படிப்பு அபிவிருத்தீஸ்வரத்திலும் கொரடாச்சேரியிலும் தொடர்ந்தது. திரைப்படத் துறையில் இயக்குநர் திலகமாகத் திகழ்ந்த கே. பாலச்சந்தர் இவருடன் பள்ளியில் பயின்றோருள் குறிப்பிடத் தக்கவராவார்.

திருச்சிராப்பள்ளி ஜமால் முகம்மது கல்லூரி தொடங்கப்பட்ட இரண்டாவது ஆண்டில் அக்கல்லூரியில் சேர்ந்து தம் கல்லூரிப் படிப்பைப் பயின்றார். அப்போது அங்கு பணிபுரிந்த புகழ்பெற்ற தமிழ்ப் பேராசிரியரான இறையருட் கவிமணி கா. அப்துல் கபூர் அவர்களின் பேரன்பினைப் பெற்றார். தம் ஆசிரியரான இறையருட் கவிமணி கா. அப்துல் கபூர் அவர்களை, ‘என் வாழ்வில் நான் மறக்க முடியாத மாமனிதர்’ என்றும் ‘என் உடன் பிறவாத சகோதரர்’ என்றும் ‘என்பால் அளப்பரிய அன்பு கொண்டவர் அவர்’ என்றும் அன்பாகக் குறிப்பிட்டு மகிழும் அபிவையார் தொடர்ந்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மேற்படிப்பைத் தொடர்ந்தார்; அங்கு அந்நாளையில் தமிழ் நாட்டில் பெரும்புகழ் பெற்றுத் திகழ்ந்த டாக்டர் மு. வரதராசனாரின் உள்ளன்புக்கு உரியவரானார். அவரிடம் நேரில் அமர்ந்து தமிழ் கற்ற பெருமையினையும் பெற்றார். அப்போது அங்கு பணிபுரிந்த மா.கி. தசரதன், அ.ச. ஞானசம்பந்தன், க. அன்பழகன் ஆகியோரிடமும் இதற்கு முன்பு பள்ளியில் பயின்ற போது பாவேந்தர் பாரதிதாசனின் தம்பி பாலகிருட்டிணன், சக்கரவர்த்தி இராசகோபலாச்சாரியாரின் ஒன்றுவிட்ட தம்பி கிருஷ்ணமூர்த்தி ஆச்சாரியார் ஆகியோரிடமும் தமிழ் கற்றார்.

மாணவப் பருவத்திலேயே வானொலி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற அபிவையாரைத் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் உலகுக்கு அறிமுகப்படுத்தியது. திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்த கவிஞர் செய்தி வாசிப்பாளராகவும் சிறப்பாகப் பணியாற்றினார். அதன் பயனாக டெல்லி வானொலியில் தெற்காசிய நேயர்களுக்கான நிகழ்வுகளில் அடிக்கடிக் கலந்து கொள்ளும் வாய்ப்புகளையும் அவர் பெற்றார். தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் பங்கேற்க அழைக்கப்பட்டார்.

பின்னர் வெளிநாட்டு வாழ்க்கைக்குச் சென்றார். மலேசியத் தலைநகர் கோலாலம்பூர்த் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களில் பகுதி நேரமாக இரண்டாண்டுகள் பணிபுரிந்தார். அப்போது, முதல் முதலாக நிலவில் கால்பதித்த விண்வெளி வீரர் ஆம்ஸ்ட்ராங்கை நேர்காணல் செய்துள்ளார். தொடர்ந்து வானொலியிலும் இலண்டன் பிபிசியிலும் அரிய பணிகளை ஆற்றி எல்லோருடைய பாராட்டுகளையும் பெற்ற அபிவையார், அன்றைய அமெரிக்க அதிபர் ஜான்கென்னடியையும் ருஷ்ய அதிபர் குருஷேவையும் ருஷ்யப் புரட்சி வீரர் லெனினையும் நேரில் சந்தித்த பெருமைக்கும் உரியவராவார்.

பின்பு அவருடைய வாழ்க்கை வணிக வாழ்க்கையாக மாறியது. அரபு நாட்டுச் செல்வபுரியும் குபேரபுரியுமான குவைத்தில் இருபதாண்டு காலம் பணிபுரிந்தார். இவ்விருபதாண்டுப் பணியினூடே தமிழ் வளர்ச்சியிலும் தம்முடைய கவனத்தைச் செலுத்தினார். முழுவதும் அரபு நிகழ்ச்சிகளையே வழங்கி வந்த குவைத் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் மாதமொரு தமிழ் நிகழ்ச்சிகளை வழங்க வழிவகை செய்தார். இருபதாண்டுகளுக்கும் மேலாகக் குவைத்தில் வாழ்ந்து வந்த அபிவையார் குவைத் ஆக்கிரமிப்புக்குப்பின் நாடு திரும்பி இலக்கிய வாழ்வு வாழ முற்பட்டார்.

இருபத்தைந்து நாடுகளுக்கும் மேலாகச் சென்று வந்த அனுபவமுடைய அபிவையாரின் மனம் பதிப்புத்துறையின்பால் சென்றது. அவருடைய நண்பர் கவியரசு கண்ணதாசனை வைத்துக் கவிநேசன் பதிப்பகத்தினைத் தொடங்கினார். அப்பதிப்பகத்தின் வாயிலாக இரண்டு பிரயாண நூல்கள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள், மூன்று கவிதைத் தொகுப்புகள், ஐந்து கதைத் தொகுப்புகள், சிறப்பு மலர்கள் ஆகியவற்றை வெளியிட்டுத் தம் தமிழ்ப் படைப்புகளை வெளிக்கொணர்ந்துள்ளார்.

இவருக்கு இறையருட் கவிமணி கா. அப்துல் கபூர் ‘கவித் தென்றல்’ எனும் விருதினை வழங்கி மகிழ்ந்துள்ளார். கவி கா.மு. ஷெரீப் ‘கவிக்குரிசில்’ எனும் விருதினை வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளார். திருவாரூர் இலக்கியக் கழகம் அபிவையாருக்கு ‘இலக்கியச் செல்வர்’ விருதினை வழங்கிக் கௌரவித்துள்ளது. மறைந்த தமிழ்மா முனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ‘சொல்லழகுச் செலவர்’ விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளார். கம்பனடிப்பொடி சா. கணேசன் ‘அமுதகவி அரசு’ எனும் விருதினை வழங்கிப் பாராட்டியுள்ளார். ‘கவிமா மணி’ எனும் விருதினை இசைமுரசு நாகூர் இ.எம். ஹனிபா அளித்துப் போற்றியுள்ளார். ‘அருந்தமிழ் அருவி’, ‘தமிழ் மணி’ எனும் விருதுகளை அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் ‘கவிச் சித்தர்’ விருதினை மாயவரம் இலக்கியக் கழகமும் ‘கன்னித் தமிழ்க் காவலர்’ எனும் விருதினைத் துபாய்த் தமிழ்ச் சங்கமும் ‘கவியரசு’ எனும் விருதினைக் குவைத் தமிழ்ச் சங்கமும் ‘கிரேட் பொயட்’ (Great Poet) எனும் விருதினை இலண்டன் தமிழ்ச் சங்கமும் வழங்கிப் பாராட்டியுள்ளன. மலேசியா அலோர் இஸ்லாமிய சின்னிலக்கிய எழிலார் இயக்கத்தின் சாதனையாளர் விருதினையும் அவ்வமைப்பு வழங்கிப் பாராட்டியுள்ளது.

“அபிவிருத்தீஸ்வரம் டி.எம்.எம். தாஜுத்தீன் அவர்கள் இன்றைய தமிழ்கூறும் நல்லுலகில் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவராகத் திகழ்பவர். அபிவைத் தாஜுத்தீன், அபிவையார், கவிநேசன் இப்படிப் பல பெயர்களில் இவர் எழுதி வரும் கவிதைகள், மரபுக் கவிதைகளாக மட்டுமன்றி, இதயத்தைக் கவர்ந்து இழுக்கும் இசைப் பாடல்களாகவும் பிரபல்யமாகியுள்ளன. அண்ணன் இசை முரசு நாகூர் இ.எம். ஹனிபா அவர்களின் கம்பீரக் குரலில் இந்தக் கவிஞரின் பலப்பல பாடல்கள் இசையாகியுள்ளன” என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தமிழ்நாட்டுத் தலைவரான பேராசிரியர் கே.எம். காதர் முகைதீன் குறிப்பிடுகிறார்.

அபிவையாரின் இஸ்லாமிய இசைப் பாடல்கள்

நானூறுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய இசைப் பாடல்களை இயற்றியுள்ள அபிவைத் தாஜுத்தீனின் பாடல்களில் இறைவனின் ஏக வல்லமையும் அனைத்துலக ஆளுமையும் பாடப்படுவதுடன் இஸ்லாமிய மார்க்க வரலாறு, நபிமார்களின் சீரிய நேரிய வரலாறு, திருக்குர்ஆனும் நபிமொழியும் வலியுறுத்தும் வாழ்வியல் நடைமுறைகள், நபிகள் நாயகத்தின் வாழ்வியல் ஒழுகலாறுகள், இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகள் மற்றும் அடிப்படைக் கடமைகள் ஆகியன மக்கள் உளங்கொளத் தக்க வகையில் எடுத்துரைக்கப் படுகின்றன. இவற்றினைப் பாடுபொருள்களாகக் கொண்டுள்ள அபிவையாரின் பாடல்களில் தேன் மணம் கமழும் அற்புதமான தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. அவற்றுடன் இஸ்லாமியர்களுக்கேயுரிய அரபுச் சொற்களின் தேவை கருதிய பயன்பாடும் இருக்கின்றன.

இசை முரசு நாகூர் இ.எம். ஹனிபா அவர்கள் அபிவையாரைப் பற்றி மகிழ்ந்து கூறுகிறார்.

“தம்பி தாஜுத்தீனை வாழ்த்துவது - என்னை நான் வாழ்த்திக் கொள்வதற்குச் சமமானது! நாங்கள் இருவரும் ஒரே இயக்கத்தில் இருப்பவர்கள். அந்த இயக்கத்தின் துவக்க காலத்தில் தம்பி தாஜ் பிரபலமான பேச்சாளர். தமிழகத்தில் அவர் கால்படாத இடமில்லை - நாங்கள் இருவரும் ஒரே மேடையில் இணைவோம்!

கவிஞரின் எழுத்தையும் பேச்சையும் போலவே - அவர் இளமையும் சுறுசுறுப்பும் துடிப்பும் கொண்டது. நாற்பதாண்டுக்கு மேலாக நாங்கள் - அண்ணன் தம்பி உறவு முறையிலே வாழ்கிறோம்.

கவிஞர் தம் வெளிநாட்டு வாழ்க்கையை நிறைவாக்கிக் கொண்ட பின்னரே எனக்குத் தொடர்ந்து பாடல் எழுதத் துவங்கினார். அதற்கு முன்னர் ஒரு சில பாடல்களே!

மிகப்பெரிய கவிவாணர்கள் எல்லாம் மிகச் சிறந்த கவிதையை எழுதி விடுவார்கள் - ஏட்டில்!

இசைக்குக் கவி எழுதுவது என்பது அவ்வளவு இலகுவானதல்ல. அதுவும் கருத்துக்குத் தகுந்தாற்போல் - பொருத்தமான - பாந்தமான வார்த்தையைப் போட வேண்டும் - அதுவும் என் குரலுக்கேற்ற - சுவையான சொல்லைத் தேர்வு செய்ய வேண்டும் - இது ஒரு கலை!

என் குரு நாதர் புலவர் ஆபீதீனுக்கு அடுத்து இந்த ஏற்றமான கலையை நன்கறிந்தவர். என்னைச் சிறப்பாகப் புரிந்தவர் கவிஞர் தாஜ் தான்!

நான் - கவிஞர் - இசையமைப்பாளர் ஒன்று சேர்ந்து விட்டால் அன்று பல பாடல்கள் உருவாகி விட்டன என்று பொருள்!

வார்த்தை வனப்பறிந்த - சொல்லின் சுவை அறிந்த கவிஞர், கொட்டும் தமிழில் கொஞ்சும் மொழியில் - இசையோடிணைந்து சொற்சிலம்பாடி விடுவார்.

கவிஞரின் எழுத்தின் ஏற்றமும் - சொல்லின் சுவையும், சுகமான சொல்லடுக்கும் - அழுத்தமான கருத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் - ரசித்துப் பாடுவேன்.

கவிஞரின் பாடல்களை நான் இன்னும் பாட வேண்டும் - கருணை நாயகன் எனக்கு அருள் பாலிக்க வேண்டும்.

கவிஞர் மலருக்கு வாழ்த்துவதில் மகிழ்வு! பல மலர்கள் தந்த கவிஞர் இன்னும் தர வேண்டும் - அருந்தமிழ் அருவி கொட்டிக் கொண்டே இருக்க வேண்டும் - அதில் கொஞ்சும் தமிழ் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்” என்று இசை முரசு நாகூர் இ.எம். ஹனிபா அபிவையாரைப் பற்றி உள்ளன்போடு கூறுவது அவருடைய புலமைக்கும் ஆற்றலுக்கும் தக்கதொரு சான்றாகும்.

“ஹாஜி இ.எம். ஹனிபா அவர்களுக்கு மெருகூட்டிய பல பாடல்களைத் தந்த அபிவையார் என்று எல்லோராலும் அழைக்கப்படும் செந்தமிழ்ச் செல்வர் அபிவை ஹாஜி டி.எம்.எம். தாஜுத்தீன் அவர்களின் அறிமுகம் கிடைத்த பிறகு எனக்கும் பல பாடல்களை எழுதித் தந்து என் முகவரியை மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வைத்ததை என் வாழ்நாளில் மறக்க முடியாது. உதாரணமாக, ‘கல்புக்குள்ளே தங்களை வைத்தேன் யாரசூல் அல்லாஹ்...’, ‘கோடான கோடி மலர் வாசம் தந்தது...’ என்று அவர் எழுதிய பாடல்களுக்குப் பிறகே என் வளர்ச்சி மேலோங்கியது” என மனதாரக் கூறி மகிழ்கிறார் புதுக்கோட்டை இ.எம். பாஷா.

இஸ்லாமிய மார்க்கத்தின் மேன்மையினையும் அது வலியுறுத்தும் கொள்கைகளையும் அபிவையார் ஒரு பாடலில் தெளிவாகவும் நேர்த்தியாகவும் கேட்போர் மனம் ஈடுபடுமாறும் பாடுகிறார். ‘வானோங்கும் மார்க்கம் வளமான மார்க்கம் தீனோரின் நெறியல்லவா, திரு நபி நாதர் வழியல்லவா, எண்ணங்கள் தூய்மை, எழிலோடு பொறுமை தியாகத்தின் விளைவல்லவா, நபியின் தியாகத்தின் விளைவல்லவா’ என்று தொடங்கும் அப்பாடல், ‘நிறம் ஒன்று, குலம் ஒன்று, இறை ஒன்று என்றே, கனிவோடு நபி நாதர் சொன்னார், இதைக் கனிவோடு நபி நாதர் சொன்னார், மறை ஒன்று, நெறி ஒன்று, காஃபாவும் ஒன்று, அருளோடு நபிநாதர் சொன்னார், என்றும் அருளோடு நபி நாதர் சொன்னார்’ என ஓரிறைக் கொள்கையைக் கனிவோடு எடுத்துரைக்கிறது. ‘பொன்னான வாழ்வே கண்ணான ஒளியாய் புண்ணியம் பூத்திடும் புகழ் மார்க்கம் தழைக்க, குலத்தாலும் இனத்தாலும் நிறத்தாலும் பெருமை கூடாது என்றே உரைத்தார், எங்கும் கூடாது என்றே உரைத்தார், பணத்தாலும் பலத்தாலும் வளத்தாலும் மமதை கூடாது என்றே உரைத்தார், வாழ்வில் கூடாது என்றே உரைத்தார், சமத்துவம் ஓங்க சாந்தியும் விளங்க சர்தார் நபியின் சன்மார்க்கம் முழங்க(வானோங்கும்...), மனத்தாலும் திறத்தாலும் அறிவாலும் அகந்தை கொள்ளாதீர் என்றே உரைத்தார், அகந்தை கொள்ளாதீர் என்றே உரைத்தார், சொல்லாலும் செயலாலும் எழுத்தாலும் வெறியைத் தூண்டாதீர் என்றே உரைத்தார், வெறியைத் தூண்டாதீர் என்றே உரைத்தார், இளகிய மனமும் இனிய நல் மொழியும் மனிதனைப் புனிதனாய் மாற்றிடும் என்றார்’ என்று இஸ்லாம் உணர்த்தும் மனிதர்க்கு வேண்டிய நற்பண்புகளைக் கவிஞர் பட்டியலிடுகிறார். இப்பாடலில் நபிகள் நாயகம் உரைத்ததாகக் கவிஞர் எழுதுவதும் அதனை இசைமுரசு பாடுவதும் கேட்போருக்கு நாயகக் கண்மணி நபிகளாரே நேரில் வந்து கூறிய உணர்வினைத் தருகிறது. இது பாடலாசிரியருக்கும் பாடகருக்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.

இன்னொரு பாடலிலும் இதே போன்று நபிகள் நாயகத்தின் உதயத்தைச் சுட்டிக்காட்டி அதனால் விளைந்த பயன்களையும், ‘உதயமே நபி உதயமே உங்கள் வரவாலே உலகம் சிறந்தது, உங்கள் வரவாலே உள்ளம் மகிழ்ந்தது, உங்கள் மொழியாவும் வழியானதே, உங்கள் வழி யாவும் வாழ்வானதே, இறைவனும் ஒன்று, இறைமறை ஒன்று, ஏந்திடும் மார்க்கம் தீன்குலம் என்று, சாந்தியின் வழியில் சூழ்ந்திடும் நன்மைகள், சகலமும் சன் மார்க்க சரிதங்கள் என்று, அண்ணல் பெருமானின் அன்பு வாழுதே அகிலம் எல்லாமே எதிரொலிக்குதே..., எவ்வழி நல்வழி அவ்வழி நபி வழி, என் வழி இறை வழி என்றது நபி மொழி, சொல்லும் செயலும் சோபிக்க வாழ்ந்து என் வழி தனி வழி என்றது நபிவழி, திருமறையே நபி வாழ்வானதே, திரு நபி வாழ்வே அருளானதே’ என அடுக்குகிறார். இவ் அடுக்கின் ஊடே கவிஞர் சொற்சிலம்பமாடித் தம் வித்தகப் புலமையை எல்லோருக்கும் விருந்தாக்குகிறார்.

இறைவனின் இறுதித் தூதுவரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் தான் இஸ்லாம் பூரணத்துவமடைந்த மார்க்கமாகப் பரிணமித்தது. நபிகளாரின் காலத்தில் மக்களிடமிருந்த மூடப் பழக்கவழக்கங்களிலிருந்து மக்கள் வெளிவருவதற்கும் மக்கள் நற்பண்புகளைப் பெற்று மேன்மையடைவதற்கும் நபிகள் பெருமான் பட்ட பாடுகள் மிகுதி. அவற்றைச் சொல்லி மாளாது. இஸ்லாமிய மார்க்கத்தை இறைவழி நின்று மெருகேற்றி மேன்மைப்படுத்திய நபிகளாரின் வாழ்வும் வாக்கும் செயல்பாடுகளும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லீம்களுக்கும் மிகப்பெரிய பாடமாகும். இதனைப் பல பாடல்களில் உணர்த்திய அபிவையார்,

தாங்கள் இல்லாமல் நாங்கள் இல்லையே

                                     தாஹா றசூல் நபியே

ஓங்கிடும் குர்ஆன் தாங்கி வந்தீரே

உலகம் போற்றும் மார்க்கம் தந்தீரே

முகம்மது நபியே

என்ற பாடலில் முற்றும் முழுதாக உணர்த்தி விடுகிறார். தொடர்ந்து இப்பாடலில் அவருடைய பெருமைகளை,

விண்ணகத்து மன்னராக விளங்கி வந்தீரே

மண்ணகத்து மாண்புரைத்து மகிமை கொண்டீரே

கண்ணியத்தின் காவலரே நபிகள் நாதரே

கருணை மனம் பொறுமை குணம்

அருமை கண்ட யாரசூலே                                                   (தாங்கள்....)

நான்கு மறை வேதங்களைத் தாங்கி வந்தீரே

நாயனவன் தூதராக ஓங்கி நின்றீரே

வேதங்களின் விடிவெள்ளியாய் விளக்கம் தந்தீரே         

வெற்றியின்மேல் வெற்றி கண்ட வேந்தர் நபி நாயகமே                              (தாங்கள்....)

இகம் பரம் இரண்டிலுமே ஏற்றம் தந்தீரே

இறுதி நாளில் மகஷரிலே கைகொடுத்தீரே

அகமிய வாழ்க்கைமுறை அளந்து தந்தீரே

அற்புதத்தின் அற்புதராய் அகிலம் வாழ்ந்த யாஹபீபே                                (தாங்கள்....)

அபுகுவைஸ் மலையோரம் பிறந்த நாதரே

அருமையான குரைஷியராய் வளர்ந்த நீதரே

இதயம்தன்னில் ஈமானை இலங்கச் செய்தோரே

இனிமையான எளிமையான இஸ்லாம் ஈந்த யாஹபீபே                             (தாங்கள்....)

காலத்தின் கண்ணாடி அஹம்மது நபிகள்

சீலத்தின் முன்னோடி முஹம்மது நபிகள்

ஞாலத்தின் கண்ணொளியே யாரசூலல்லாஹ்

ஞாலத்தின் பொன்னொளியாய் நாளும் காணும் யாஹபீபே        (தாங்கள்....)

என எடுத்துக்காட்டுகிறார்.

‘கோடான கோடி மலர் வாசம் தந்தது, அது கோமான் நபி மேனி எங்கும் தழுவிக் கொண்டது, கோடி மனம் கூடி வந்து தேடிக் கொண்டது, பல கோடி மனம் தேடி வந்து தேடிக் கொண்டது, நபிகள் கொண்டு வந்த ஈமானை நாடிக் கொண்டது, வானுலகில் விண்மீன்கள் சுடரொளித்தது, அது வள்ளல் நபி நாயகத்தின் அருளொளித்தது, கானுலகில் பறவையினம் இசை ஒலித்தது, அது காத்தமுன் நபி மதினாவின் திசை கேட்டது, நபிபெருமான் வரவால் இந்த உலகம் மகிழ்ந்தது, எங்கள் கோமான் அருளால் தீனின் ஒளி பிறந்தது’ என்று நபிகளாரின் வரவை விதந்து பாடும் அபிவையார், ‘சிந்தனையில் உருவெடுத்துச் செந்தமிழின் சொல்லெடுத்து எந்தன் உயிர் வாழுகின்ற ஏந்தல் நபி பெயர் தொடுத்துச் சந்தமுடன் நான் பாடுவேன் சகா காலம் சர்தார் நபி புகழ் பாடுவேன்’, ‘திரு நபி போல் ஒரு நபியைக் காண முடியுமா, அவர் செயல் முறையைக் கடந்து இங்கு வாழ்வது நலமா, மனிதர்களே இதைக் கேளுங்கள், நபி மணி மொழியைப் பேணி வாழுங்கள்’, ‘அருள் நபி வழியில் வாழ்வாய் அல்லாஹ்வை தினமும் தொழுவாய், ஆகிரத்தை மறந்திடாமல் உலகில் வாழ்ந்து காட்டுவாய்’, ‘அகிலம் வாழ்ந்திட மகிமை சிறந்திட அஹம்மது நபி பிறந்தார், புனித முகம்மது நபி பிறந்தார், வளமை வாய்ந்திட கருணை வளர்ந்திட கருணை நபி பிறந்தார், தீனின் கருணை நபி பிறந்தார்’, ‘ஆமினாரின் கண் மணியே யாரசூலல்லாஹ், அகிலம் போற்றும் மார்க்கம் தந்த யாரசூலல்லாஹ்’, ‘அண்ணல் நபி நாயகமே வரவேண்டும், உங்கள் அன்பு முகம் நான் காண அல் அமீனே அருள் வேண்டும், மடமைகளைத் தடுத்து அடிமை விலங்கொடித்து மங்கலங்கள் பொங்கும் எங்கள் சங்கை மிகு யாரசூலே’, ‘வள்ளல் நபியே வராததேன் இவ்வேளை இல்லையோ தான் தயாளனே ரசூலே, அனுதினமும் தங்களை நான் தேடுகின்றேன் வாடுகின்றேன், அனுக்கிரகமே நான் பெறவே அல்லும் பகலும் நான் பாடுகிறேன், கண்ணின் மணியே கல்பின் உயிரே ரசூலே, வள்ளல் நபியே வராததேன் இவ்வேளை, இல்லையோ தான், தயாளனே, ரசூலே, அல்அமீனே தங்களை நான் ஆசிக்கின்றேனே, நேசிக்கின்றேனே, அரவணைப்பே நான் பெறவே அகமடங்கி யாசிக்கின்றேனே’, ‘சங்கை மிகும் நபி பெருமான் புகழ் பாடுவோம்’, ‘இனிய நபிகள் ஓர் தொடர் காவியம், அவர் எல்லோரும் நாடுகின்ற அறிவாலயம்’, ‘வர வேண்டும் நபியே தருணம் தங்களின் தரிசனம் தர வேண்டும்’, ‘ஏழையாக வாழ்ந்ததேனோ யாரசூலல்லாஹ், நாளை மகஷர் வேளை உதவும் யாஹபீபல்லாஹ், ஏந்தலராய்த் தான் இருந்தும் ஏற்றமான வாழ்விருந்தும் யாஹபீபல்லாஹ், ஏழையாக வாழ்ந்ததேனோ’, ‘அண்ணல் நபி நாயகமே வரவேண்டும், உங்கள் அன்பு முகம் நான் காண அருள் வேண்டும்’ என்று நபி பெருமானின் வாழ்வையும் பெருமையையும் புகழையும் தம் பாடல்களுள் பெருமளவுப் பாடல்களுக்குப் பாவிகமாய் வைத்துக் கவிஞர் பாடிக் குவித்திருக்கிறார்.

‘கல்புக்குள்ளே தங்களை வைத்தேன் யாரசூலல்லாஹ், கலிமாவை மனதில் வைத்தேன் யாரசூலல்லாஹ், கனிவு மனம் பணிவு குணம் யாரசூலல்லாஹ், நாளும் கடமையாக்கி வாழ்ந்திடுவேன் யாரசூலல்லாஹ்’ என்று உறுதிமொழி கூறுகிறார். இஸ்லாமிய வாழ்வியலுக்கு வழிகாட்டுகிறார்.

அபிவையாருடைய பாடல்கள் நபிபெருமானாரைப் பாடுவதுடன் இஸ்லாமிய மார்க்கத்திற்குத் தொண்டாற்றிய நபித்தோழர்கள், இறைநேசர்கள் முதலியோரையும் பாடுகின்றன. ‘மங்கையர்க்கரசி அன்னை பாத்திமா, சங்கை மிகுந்த சாந்தம் நிறைந்த மங்கையர்க்கரசி அன்னை பாத்திமா, சந்திரன் தன்னை தன்னகம் அழைத்த சர்தார் நபியின் மடியில் தவழ்ந்த மாணிக்கமே மங்கையர்க்கரசி அன்னை பாத்திமா’, ‘மங்கையர்க்கரசியே மாசிலா மாமணியே சங்கை மிகும் தீன் கனியே சல்லல்லாஹ் நபி மகளே சொர்க்கத்தின் நாயகியே சற்குணத்தின் தாரகையே நற்றவத்தின் குணவதியே நபிக்கரசர் திருமகளே’ எனும் பாடல்கள் நபிபெருமானாரின் திருமகளார் மாதர் குலத் திலகம் பாத்திமா நாயகியாரைப் புகழ்ந்து பாடுகின்றன.

இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவர்கள், தங்களின் இன்னுயிரை ஈந்தவர்கள் அவுலியாக்கள், வலிமார்கள், இறைநேசர்கள் என்றெல்லாம் அழைக்கப் பட்டார்கள். அவர்களுள் தலையாயவராகத் திகழ்ந்தவர் இறைநேசர்களுக்கெல்லாம் தலைவராக விளங்கித் தீன் என்று அழைக்கப்படும் இஸ்லாத்துக்குப் புத்துயிரூட்டிய பெருந்தகை முகைதீன் ஆண்டவர் அப்துல் காதர் ஜெயிலானி (ரஹ்) என்பார் ஆவார். அவரை, ‘பகுதாதில் வாழும் எங்கள் பார் போற்றும் செல்வமே, பண்பான தீனை வளர்த்த கௌதுல் அஃலமே, தீனை வளர்த்த பண்பான கௌதுல் அஃலமே’ என்று விளித்துப் பாடி இப்பாடலில் அபிவையார் அவருடைய பெருமைகளைப் பேசுகின்றார்.

 திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆற்றங்கரைப் பள்ளியில் அடக்கமாகியுள்ள செய்யதுஅலி பாத்திமா நாச்சியாரைப் புகழ்ந்து, ‘ஆற்றங்கரைப் பள்ளி வாழும் செய்யது அலி பாத்திமா, அல்லாஹ்வின் அருள் நிறைந்த செய்யது அலி பாத்திமா, ஏற்றமான தீன் வளர்த்த செய்யது அலி பாத்திமா, எல்லோரும் போற்றும் எங்கள் செய்யது அலி பாத்திமா’ என்ற பாடலையும் கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரக் கடற்கரையில் அடக்கமாகியுள்ள பீமா அம்மையாரைப் புகழ்ந்து ‘மங்கையர் திலகம் சங்கை மிகுந்த மணி முத்து பீமா சுடர் விளக்கு, பொங்கிடும் மங்கலம் தங்கியே வாழ்ந்த புண்ணிய பீமா ஒளி விளக்கு, கண்ணிய ஈமான் மணி விளக்கு, தீன் கண்ணியம் காத்த சுடர் விளக்கு, அலைகள் மோதும் கடலின் ஓரம் ஆட்சி செய்யும் அம்மா, கலைகள் ஞானம் நிலையாய்க் கண்ட கருணை நிறைந்த பீமா’ எனும் பாடலையும் பாடியுள்ளார்.

‘இஸ்லாம் எனும் மாளிகைக்கு ஐந்து தூண்கள், புனித கலிமாவுடன் தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ்ஜு’ என இஸலாத்தின் ஐம்பெருங் கடமைகளை உணர்த்தும் கவிஞர், ‘ஹஜ்ஜுப் பெருநாள் வந்த சரித்திரம் கேளுங்கள், அங்கு இபுராஹிம் நபி செய்த தியாகத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்று ஹஜ்ஜுப் பெருநாளின் பின்னணியினையும் வரலாற்றையும் எடுத்துக் காட்டுகிறார். ‘இப்பாடல் கேட்போரனைவருக்கும் மக்கமாநகரையும் மதினா மாநகரையும் வலம் வந்த உணர்வினைத் தருகிறது.

‘எல்லோரும் ஹஜ்ஜு செய்யலாம் வல்லோனின் காஃபாவைக் காணலாம், வண்ணமுடன் வாழலாம், எண்ணமுடன் சேரலாம், திண்ணமுடன் இறைவனிடம் கைகள் ஏந்தலாம், தொழுது துஆ கேட்கலாம்’,‘பாவங்கள் போக்கிடும் தாபங்கள் தீர்த்திடும் பயகம்பர் வாழும் மதினா, புனித பயகம்பர் வாழும் மதினா, கண்ணான மதினாவைச் சொன்னாலும் வாய் மணக்கும், பொன்னான நபிநாதர் புகழ்பாட வாய் இனிக்கும்’ எனும் பாடல்கள் பயகம்பர் வாழும் மதினா மாநகருக்குப் போக வேண்டும் என்கின்ற உணர்வினைத் தருகின்றன.

இன்னொரு பாடல், ‘ரமலான் புனித ரமலான், இதயம் எல்லாம் கனிந்து கனிந்து இறை உணர்வில் சிறந்த மாதம், ரமலான் புனித ரமலான், ஈகைக் குணமும் இரக்க மனமும் மலர்ந்த மாதம், நல்ல தியாக உணர்வும் நியாய குணமும் சிறந்த மாதம், வாகை சூடும் குர்ஆனைத் தந்த மாதம், இந்த வையகமே வியக்கும் நோன்பு வந்த மாதம், பசி என்பதை யாவருக்கும் உணர்த்தும் மாதம், நல்ல பண்புடனே ஜக்காத்தை வழங்கும் மாதம், வாரி வழங்கும் மாதம்’ என நோன்பின் மேன்மையை எடுத்துக்காட்டுகிறது. ‘முப்பது நாளின் அற்புத நோன்பைத் தப்பாமல் நோற்றிடுவோம் அது எப்போதும் நம்மை ஈமானின் பக்கம் இருக்கச் செய்திடுமே, அருள் சுரக்கச் செய்திடுமே’ எனும் பாடல் நோன்பின் மாண்பினை உணர்த்துகிறது.

மக்கள் நபிவழியில் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நியதிகளையும் வாழ்வியல் நடைமுறைகளையும் அபிவையார் நயமாக எடுத்துரைக்கிறார். ‘பிஸ்மில்லாஹ் என்ற தூய சொற்கொண்டு நாளும் பேசத் துவங்கினால் பெருகும் நன்மை கற்கண்டு, விசுவாசத்தின் விளக்கம் யாவும் அதில் உண்டு, தினம் வெற்றிமேல் வெற்றி விளைந்து வாழ்வில் வளம் உண்டு’ எனும் பாடல் எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போதும் அச்செயலை இறைவனின் திருநாமத்தைக் கொண்டு தொடங்க வேண்டும் எனும் இஸ்லாமிய வாழ்வியல் நெறியை எடுத்துக்காட்டுகிறது. மேலும் பாடல் முழுவதும் உண்டு எனும் சொல் நாற்பத்து இரண்டு முறை கவிஞரால் கையாளப்பட்டுள்ளது. இது கேட்போரை வியப்புடன் கேட்க வைக்கும் திறனதாக இருக்கிறது.

‘கல்வியைப் போல் ஒரு செல்வம் இல்லை, கல்வி கற்காமல் இருந்தால் காலமெல்லாம் தொல்லை, சீனம் சென்றேனும் கல்வி கற்றிட வேண்டும், இது செம்மல் நபிநாயகம் மொழி அறிந்திட வேண்டும், கல்வி இரு கண்களாகும் புரிந்திட வேண்டும், அதைக் காலத்தோடு கற்று நீயும் தெளிந்திட வேண்டும், ஞானம் கற்றிடு இந்த ஞானம் சிறந்திடு, உண்மை பேசும் உயர்ந்த பண்பு கல்வி தந்திடும், உனக்கு உற்ற நல்ல மதிப்பினையே பெற்றுத் தந்திடும், எல்லாமே கல்வியிலே அடக்கமாகுமே, என்றென்றும் உனக்கு வழித் துணையாகுமே, கல்வி கற்றிடு வெற்றிக் கனியைப் பெற்றிடு’ எனும் பாடல் இஸ்லாம் கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை விளம்புவதுடன் இஸ்லாத்தின் முற்போக்குச் சிந்தனைக்குச் சான்றாகவும் விளங்குகிறது.

ஒற்றுமை என்னும் கயிற்றினை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தும் நபிமொழியினை அடியொற்றிச் சமயப் பொறையினை வலியுறுத்தி எழுதப்பட்டுள்ள, ‘ஒற்றுமையாய் நாம் வாழனும் தீய வேற்றுமைகள் இங்கே தீரணும் , இந்து முஸ்லீம் கிறிஸ்தவர்கள் எல்லோரும் இணைந்தே வாழ வேண்டும் எந்நாளும், மனித நேயமே வாழ்வின் ஜீவனாகுமே’ எனும் பாடல் சர்வ சமய சமரசத்தை வலியுறுத்துவதுடன் மதம் கடந்த மானுட நேயத்தையும் வலியுறுத்துகிறது. மனிதகுல வளர்ச்சிக்கான இன்றைய தேவையையும் நயமாக எடுத்துக் காட்டுகிறது. இதனையே இன்னொரு பாடலிலும், ‘மனிதனாக வாழ வேண்டும் மாண்புடன் தம்பி, புனிதனாக வலம் வர வேண்டும் இறைவனை நம்பி’ என அபிவையார் எடுத்துக்காட்டுகிறார். இங்ஙனம் பாடப்பட்டுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் கேட்போருக்கும் படிப்போருக்கும் நிறைபயன் நல்குவன.

- உ.அலிபாவா, பேராசிரியர் & தலைவர், தமிழியல்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி.