மேடையில் ஒரு வேங்கை பாயுமே
விண்ணோக்கி வீசி வருமே
வீறு கொண்டோர் யானை போரிற் கிளம்புமே
வெஞ்சேனை முறுக்கேறுமே...
கோடையின் இடி கொண்டு கொட்டுமே
வார்த்தையில் கொஞ்சுதமிழ் விளையாடுமே..
குன்றங் கொடுத்த தோள் மன்றாட ஆடுமே
கொற்றவன் எழில் தோன்றுமே..
என்று ஜீவாவின் குரல் வளத்தையும், தோற்றப் பொலிவையும் வேங்கையாக ஒப்பிட்டு எழுதியுள்ளார் கண்ணதாசன்.தோழர் ஜீவா சிறுவயதில் காந்தியவாதியாய் தமது வாழ்க்கையை தொடங்கி காங்கிரஸ்காரர், சுயமரியாதை இயக்கத்தவர், தனித்தமிழ் இயக்க ஆர்வலர்-சுயமரியாதை சமதர்ம இயக்கத்தவர், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி தலைவராய், கலை இலக்கியவாதியாய் தனது பயணத்தைத் தொடர்ந்து இறுதியில் இம்மண்ணின் மக்கள் அரசியல் - சமூக - பொருளாதார விடுதலையடைய மார்க்சியத்தை தவிர வேறு எதுவும் மாற்று இல்லை என்ற முடிவிற்கு வந்து பொதுவுடமையாளராக தனது இறுதி காலம் வரை வாழ்ந்த பன்முகத் தன்மை கொண்டவர்.
எளிய மக்களின், தாழ்த்தப்பட்ட மக்களின்,தொழிலாளர்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர்,போராடி வந்தவர் பல ஆண்டுகள் சிறையில் கழித்தவர். அவரது பன்முகத்தன்மையில் ஒவ்வொன்றாக நாம் விரிவாக பார்க்கலாம்.
ஜீவா என்னும் காந்தியவாதி
திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பூதபாண்டி எனும் கிராமத்தில் பட்டம்பிள்ளை-உலகம்மாளுக்கு நான்காவது பிள்ளையாக 1907-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி ஜீவானந்தம் பிறந்தார்.
கோட்டாரில் பள்ளியில் படிக்கும்போதே அன்று நாடு முழுவதும் பரவியிருந்த இந்திய விடுதலைப் போராட்டத்தின் மீதான தாக்கத்தால் ஜீவா தம் இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரது தொண்டரானார். காந்தியக் கொள்கைகளைத் தாங்கி வரும் வெளியீடுகளை ஊன்றிப் படித்தார்.
தனது ஊரில் ஒவ்வொரு சனிக்கிழமையும் காந்தி பெயரில் பஜனைக் கூட்டம் நடத்தி காந்தியக் கொள்கைகளைப் பரப்புரை செய்வதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். சிறுவயதிலேயே பாடல் இயற்றும் ஆற்றல் கொண்ட ப.ஜீவானந்தத்தின் முதல் பாட்டு இந்தியத் தேசியத்தையும் விவேகானந்தரையும் திலகரையும் காந்தியடிகளையும் போற்றுவதாக அமைந்திருக்கிறது. வந்தே மாதரத்தை மந்திரமாக முழங்கும் வகையில் அமையும் அப்பாடல் பின்வருமாறு அமைகிறது.
இது ஜெயம் இது ஜெயமே
ஈசன் நேசமாதல் தேச பாசமிகும்
இந்திய மைந்த ரியற்றும் பிரசங்கம்
எங்கும் முழங்கச் செய்த இணையற்ற சிங்கம்
கந்த மேவும் விவேகா னந்தத் தங்கம் !
காட்டி யூட்டிப் புகழ்மீட்டி நாட்டி நின்றார்
மாட்சி சேரிந்தியர் மதித்திடும் ஜோதி
மாந்தர் போற்ற தாதா மகிழ்ந்துற்றார் கியாதி
சூட்சி சேர்த்திலகர் சுயகோகேல் நீதி !
சொந்த நந்தமாட்சி தந்தார் விந்தை காட்சி
ஆழி சூழுலகம் அதிசயங் கொண்டு
அகமகிழ்ந்திட காந்தி யளித்தனன் தொண்டு
தாழில் லளிகள் லாலா தாஸருங் கண்டு
தந்த மந்திரமாம் வந்தே மாதரமாம் !
இப்பாடலை ஜீவா தனது 17ஆம் வயதில் (1924) பாடியதாகக் கருதப்படுகிறது (வீ.அரசு(ப.ஆ): 2007: ப.3).
திடமுடன் இடர்கெடவுடன்
உடையணிந்திடவே - திருவுடை
கதரணிந்திடவே (மேலது ப:1684)
என வரும் கதர்ப் பிரச்சாரப் பாடல்தான் ஜீவா எழுதிய முதல் பாடல் என்றும் சிலர் எழுதுகின்றனர். எந்தப் பாடல் முதலாவதாக இருந்தாலும் காந்தியத்தின் மீது அவர் கொண்டிருந்த பற்றுதலை நாம் புரிந்து கொள்ள முடியும்.
பள்ளிப்பருவத்திலேயே 80 வெண்பாக்களை அவர் இயற்றியுள்ளார். கதர் வெண்பா 40 ராட்டிண வெண்பா 40 என பிரித்து எழுதி கதரின் மீதான தனது ஈடுபாட்டை பாக்கள் மூலம் வெளிப்படுத்தினார். இதைப் படித்துப் பார்த்த தமிழ் ஆசிரியர் அவரை மேலும் ஊக்கப்படுத்தினார், பல்வேறு நூல்களை வாசிக்குமாறு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, தமிழ் இலக்கிய நூல்களான திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்றவற்றையும் பாரதி நூல்களையும் தேடித் தேடிப் படித்தார். தேசியத் தலைவர்களின் நூல்களையும் விவேகானந்தர், அரவிந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், தாயுமானவர் போன்ற ஆன்மீக நூல்களையும் படித்து வந்தார்.
காந்தியத்தை பரப்பும் நோக்கில் காந்தி வாசக சாலை ஒன்றை தனது சொந்த ஊரில் அமைத்தார். உடல் உறுதிக்காக விவேகானந்தர் கால்பந்தாட்டக் குழு ஒன்றையும் அமைத்தார். ஜீவா அவர்கள் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது “சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்” என்ற நாவலை எழுதினார்.மேலும் “ஞானபாஸ்கரன்” என்ற நாடகத்தையும் அவரே எழுதித் தயாரித்து அரங்கேற்றி அந்த நாடகத்திலும் அவரே நடித்தார்.
கலைகளின் வழியாக காந்தியடிகளின் கொள்கைகளையும் தேசப்பற்றை மக்கள் மத்தியில் விரிவாகக் கொண்டு செல்லும் நோக்கில் காந்தியக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு நாடகம் நடத்தி வந்த தியாகி விஸ்வநாததாசோடு ஜீவா நெருங்கிப் பழகினார். சில நாடகங்களையும் அவருக்காக எழுதிக் கொடுத்தார்.
ஒத்துழையாமை இயக்கத்தில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்று காந்தியிடமிருந்து அழைப்பு வந்ததை அடுத்து இந்தியா முழுவதும் ஆங்கிலேய அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் காங்கிரசுக்காரர்கள் ஒத்துழைக்க மறுத்து போராடிக் கொண்டிருந்தார்கள். மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களுக்கு செல்லாமல் இருப்பது போன்ற செயல்கள் மூலம் அரசுக்கு ஒத்துழைப்பு தராமல் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட துணி முதலான அந்நியப் பொருட்கள் இந்திய தேசியவாதிகளால் புறக்கணிக்கப்பட்டன, அந்நிய துணிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
இதனடிப்படையில், திட்டுவிளை கிராமத்தில் தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளை தலைமையில் அந்நியத் துணி எதிர்ப்புப் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய தேசபக்தர் திருகூடசுந்தரம் அவர்களின் பேச்சு ஜீவாவை ஈர்த்தது. அவரது பேச்சால் தூண்டப்பட்டு அதே இடத்தில் அந்நியத் துணிகளைத் தீயிட்டுக் கொளுத்தி, வெறும் கோவணத்துடன் வீடு திரும்பிய ஜீவா அன்று முதல் தனது இறுதிக் காலம் வரை கதர் மட்டுமே அணிந்து வந்தார்.
ஜீவாவின் தாயார் மரணத்தின் போது கொள்ளி வைக்கும்போது கட்டிக்கொள்ளும் கோடித்துணிக்காக கதராடையைக் கேட்டிருக்கிறார் ஜீவா. அது மறுக்கப்பட்டதால் தனது தாயாருக்கு கொள்ளி போடவும் மறுத்திருக்கிறார். பின்னர் அவருடைய சகோதரர் நடராஜனை வைத்து தாயாரின் இறுதிச் சடங்கினை உறவினர்கள் முடித்திருக்கிறார்கள்.
வ.வே.சு. ஐயரால் உருவாக்கப்பட்ட சேரன் மாதேவி குருகுலத்தில் சில காலம் தங்கிவிட்டு அங்கு இருந்த சாதியப்பாகுபாடு காரணமாக, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்துள்ள "சிராவயல்" என்னும் கிராமத்தில் காந்தி பெயரில் ஆசிரமம் அமைத்து அதன் தலைவராக ஸ்ரீகும்பலிங்கம் என்பரை அமர்த்தி பொதுச் செயலாளரானார் ஜீவா. அப்போது ஜீவாவுக்கு வயது வெறும் இருபது.
காந்தி ஆசிரமத்தில் உயர் ஜாதியினரும் தாழ்த்தப்பட்டோரும் ஒரே விதமான வாழ்க்கை வாழ்வதற்குப் பழக்கப்பட்டனர். ஆண்களும் பெண்களும் சரிசமமாக நடத்தப்பட்டனர். இரவுப் பள்ளிக்கூடங்களும் கதர் நூற்பு நிலையங்களும் நடத்தப்பட்டன. அங்கு இரு பாலருக்கும் நூல் நூற்க கற்றுத் தரப்பட்டது.
காந்தியைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தாலும், காந்தியின் வருணாசிரமக் கொள்கையில் முரண்பாடுகளைக் கொண்டு இருந்தார் ஜீவா. தனக்கிருக்கும் முரண்பாடுகளைக் கோடிட்டு ஒரு கடிதம் வரைந்தார் ஜீவா. தனக்கு வந்த ஜீவாவின் கடிதத்தைப் படித்த காந்தி தனது கைப்பட ஜீவாவுக்கு "அன்பு ஜீவா....நீண்ட நெடிய உன் மடல் முழுமையையும் வாசித்தேன். எனக்கு நானே பலவாறாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். நீ சொல்லியிருப்பதுதான் சரி....மதராசுக்கு வரும்போது உன்னை நேரில் சந்திக்கிறேன்” என்று கையெழுத்திட்டு அனுப்பி வைத்தார்.
1927 இலங்கை செல்லும் வழியில் தமிழகம் வந்த காந்தி காரைக்குடி மெய்யப்பச்செட்டியார் வீட்டில் தங்கியிருந்தார் . “இங்கே ஜீவாவை நான் சந்திக்கவேண்டும்” என்று அங்கிருந்தவர்களிடம் கூறியுள்ளார். அதற்கு அங்கிருந்தவர்கள் ஜீவாவை அழைத்து வரட்டுமா? என்று கேட்டுள்ளார்கள். அதற்கு காந்தி, ஆசிரமத்துக்கு நாமே சென்று பார்க்கலாம் என்று கூறி, ஜீவாவைப் பார்ப்பதற்கு தானே நேரில் சென்றார். காந்தியை வரவேற்று, தன் கையால் நூற்ற கதராடை ஒன்றைப் பரிசாகக் கொடுத்துள்ளார் ஜீவா.
பரிசைப் பெற்றுக் கொண்ட காந்தி, ஜீவாவிடம், " ஜீவா...உனக்கு ஏதேனும் சொத்துக்கள் உண்டா?” என்று கேட்டுள்ளார். அதற்கு“இல்லை.. இந்த தேசம்தான் என் சொத்து” என்று கூறியுள்ளார் ஜீவா. அதற்கு காந்தி "நீதான் நம் தேசத்தின் சொத்து”என்று கூறியுள்ளார்.
சிறிது நேர நல விசாரிப்புகளுக்கு பிறகு, காந்தியிடம் வர்ணாசிரமம் பற்றிய காந்தியக் கொள்கையின் மீது கேள்வி கேட்டார் ஜீவா.
“காந்திஜி, மனிதனின் குலம் அவனது குணத்தின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறது என்று கீதை சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?” என்று தன்னுடைய முதல் கேள்வியை கேட்டார்.
அதற்கு காந்தி “ஆம், ஏற்றுக் கொள்கிறேன்" என்றார்.
“ நீங்களோ பிறப்பால் வைசியர், ஆனால் அந்தணர்களினும் செந்தண்மை பூண்டொழுகும் உங்கள் குணத்தால், நீங்கள் பிராமணர் ஆவீர்கள். பிறப்பால் பிராமணனாகப் பிறந்த ஒருவன் தவறு செய்வானே ஆனால், அவன் சூத்திரன். இது சரியா?” என்று மீண்டும் கேட்டார் ஜீவா.
“ இல்லை. நான் ஒழுக்கமாக இருந்தால் நான் நல்ல வைசியன், அவன் மோசமானவனாக இருந்தால் அவன் கெட்ட பிராமணன்” என்று சொன்னார் காந்தி.
காந்தியின் கருத்தை ஜீவாவும் அவருடைய நண்பர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை, அதிருப்தியோடு காந்தியடிகள் ஆசிரமத்தை விட்டு வெளியேறினார். அதோடு ஜீவாவிடமிருந்த காந்தியக் கொள்கையும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறியது.
அரசியலிலும் மத கோட்பாட்டிலும் சமூக சீர்திருத்தத்திலும் ஜீவாவிற்கு வேறுபட்ட கருத்துக்கள் உருவாகத் தொடங்கின. இதனால், காந்தி ஆசிரமத்திலிருந்த தலைவர் ஸ்ரீ கும்பலிங்கத்திற்கும் ஜீவாவிற்கும் கருத்து மோதல் ஏற்படத் தொடங்கியது. அதனால் அந்த ஆசிரமத்தை விட்டு தமது நண்பர்கள் மற்றும் மாணவர்களோடு வெளியேறி உண்மை நிலையம் ஒன்றை ஆரம்பித்து சுயமரியாதை இயக்கத்தோடு கூடுதலாக தம்மை இணைத்துக் கொண்டார்.
காந்தியத்தின் மீதும் காந்தியடிகள் மீதும் ஜீவா எவ்வளவு பற்று கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவரை புறக்கணிக்கவும் செய்தார். சுயமரியாதை இயக்கத்தில் இணைந்த ஜீவா, காந்தியைப் புறக்கணிக்கும்படி ‘புரட்சி’ பத்திரிகையில் ‘காந்தி பகீஷ்காரம்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார். அக்கட்டுரையில் காந்தியைப் புறக்கணிப்பதற்கான பத்து காரணங்களைக் குறிப்பிட்டார். அவற்றுள் சில பின்வருமாறு;
"ஹரிஜன முத்திரை வேண்டுமா? மனித சமஉரிமை வேண்டுமா? மனித சமஉரிமை வேண்டுமென்றால் காந்தியைப் பகீஷ்கரியுங்கள்"
"ஐயாயிரம் வருடங்களாக அடிமை பொம்மைகளை உற்பத்தி செய்த இந்து மதம் அவசியமா? ஐம்பது வருடங்களாக உலகத்தைப் புதுப்பித்த அறிவியல் வாதம் அவசியமா? அறிவியல் வாதமென்றால் மதபக்தர் காந்தியைப் பகீஷ்கரியுங்கள்"
"அவமானத்தைத் தரும் அபத்த ‘வர்ணாசிரமம்’ சரியா? ‘எல்லாரும் ஓர் இனம்’ ‘எல்லாரும் ஓர் நிறை’ என்னும் மனித சமானக் கொள்கை சரியா? மனித சமானக் கொள்கை சரியென்றால் வர்ணாசிரம பாஷ்யக்காரர் காந்தியைப் பகீஷ்கரியுங்கள். "
"பார்ப்பனர்களையும் பணக்காரர்களையும் பரிவுடன் பாதுகாக்கும் ராமராஜ்ஜியம் தக்கதா? வயிறு உலர்ந்து வாடும் உழைப்பாளியின் கவலைக் கடலைத் தூர்க்கும் பொதுவுடைமை ஐக்கியக் குடியரசு தக்கதா? பின்னதுதான் தக்கதென்றால் ‘தரித்திர நாராயணரின் பிரதிநிதி’ காந்தியைப் பகீஷ்கரியுங்கள். "
வியர்த்தனென அனுபவம் கண்ட சீர்திருத்தம் வேண்டுமா? வெற்றிமேல் வெற்றி தரும் புரட்சி வேண்டுமா? புரட்சி வேண்டுமென்றால் சீர்திருத்தவாதி காந்தியைப் பகீஷ்கரியுங்கள்...
என்று எழுதினார்.(புரட்சி,11.02.1934, மேற்கோள்:வீ.அரசு(ப.ஆ): 2007:ப.552).
அதைத் தொடர்ந்து அடுத்து வெளிவந்த புரட்சி இதழில் (25.02.1934) எழுதிய கட்டுரை ஒன்றில் காந்தியமும் பொதுவுடைமையும் இரண்டு நேர்க்கோடுகள் (Parellel Lines) இரண்டும் என்றும் ஒன்று சேராது என்று குறிப்பிடுகிறார்.
“காந்தியத்தின் அடிப்படை அஸ்திவாரம் நம்பிக்கை, சமதர்மத்தின் அடிப்படை அனுபவ ஆராய்ச்சியின் தீர்மானம். காந்திஜி ஆத்மார்த்திகவாதி (Spritualst). சமதர்மி, லோகாயதவாதி, சமதர்மி யந்திர வளர்ச்சியைப் போற்றுகிறான், காந்திஜி இயந்திர வளர்ச்சியைத் தூற்றுகிறார். ஆகவே, காந்திஜிக்கும் சமதர்மத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது” (மேலது ப.572) என தனக்குள் இருந்த காந்தியவாதியை முற்றிலும் தூக்கி எறிந்த ஜீவா சுயமரியாதை இயக்கத்தோடும் சமதர்மக் கொள்கையோடும் தனித்தமிழ்க் கொள்கையோடும் தமது பயணத்தைத் தொடர்ந்தார்.
(தொடரும்)