“என்னால் கதைப் பின்னல்களைக் கண்டுபிடிக்க முடியாது. ஆகவே, நான் தொன்மங்களைப் பயன் படுத்துகின்றேன். என்னால் கதைகளைக் கண்டு பிடிக்க முடியாது. எனவேதான் வரலாற்றுக்குச் செல்கிறேன்” - கிரீஷ் கர்னாட்.

kannakiகவிதைப் படைப்பாக்க முறைகளுள் தொன்மங் களைக் கையாள்வதும் ஒன்றாக இருக்கின்றது. பண்டைக் கவிதை தொடங்கி இன்றைய கவிதைவரை தொன்மங் களின் ஆளுகை கவிதையில் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது. ஆயின் தொன்மங்களைக் கவிதையில் ஆளும் முறை காலத்திற்குக் காலம் கவிஞர்களுக்குக் கவிஞர் வேறுபட்டுக் காணப்படுகின்றது. தொன்மங்கள் கவிதையில் தொல் படிமங்களாக இடம்பெறுவதும் உண்டு. தமிழில் கண்ணகித் தொன்மத்தை சங்ககாலந் தொட்டுக் காணமுடிகின்றது. நற்றிணைப் பாடல் ஒன்றில் காதலனைப் பிரிந்த காதலியின் சோகம், ‘ஒரு மாமுலை இழந்த திருமாவுண்ணிக்கு’ உவமையாகியுள்ளது.

சிலப்பதிகாரத்தில் கண்ணகித் தொன்மம் காப்பிய வடிவில் விரிவான சித்திரிப்பைப் பெற்றுள்ளது. இக்கண்ணகித் தொன்மம் தற்கால தமிழ்க் கவிதையில், நாடகத்தில், நாவலில் இயல்பாகவும் மறுவாசிப்புச் செய்யப்பட்டும் படைப்பாளர்களால் பயன்படுத்தப் பட்டுள்ளன. தற்காலத் தமிழ்க் கவிதையில் பாரதி தாசனின் ‘கண்ணகி புரட்சிக்காப்பியம்’, புதுக் கவிதையில் மு.மேத்தாவின் ‘கால்களால் நடந்த கதை’, கு.மகுடீஸ்வரனின் ‘இன்னொரு சிலம்பு உடைகின்றது’ என்பனவற்றுள் கண்ணகித் தொன்மம் இடம்பெற்று உள்ளது. இந்திரா பார்த்தசாரதியின் ‘கொங்கைத்தீ’ நாடகம் கண்ணகித் தொன்மத்தைப் பெண்ணிய நோக்கில் மறுவாசிப்புச் செய்துள்ளது. ஜெயமோகனின் ‘கொற்றவை’ நாவலிலும் கண்ணகித் தொன்மம் புதிய நோக்கில் சமகாலச் சிந்தனைகளுடன் மறு எடுத்துரைப்புச் செய்யப்பட்டுள்ளது. கண்ணகித் தொன்மம் மலையாள இலக்கியத் தோடும் பண்பாட்டு மரபுகளோடும் இணைந்து காணப் படுகின்றது.

கண்ணகி பற்றிய பழைய ஏட்டிலக்கியப் பதிவுகள் இல்லையென்றாலும் வாய்மொழி இலக்கிய மரபில் கண்ணகி பற்றி ஏராளமான வழக்காறுகள் உள்ளன. இடுக்கி மாவட்டப் பழங்குடியினரிடையே வழங்கப்படுகின்ற கண்ணகிக் கதைகளைத் தொகுத்து பேராசிரியர் நசீம்தின் தமிழில் நூலாக வெளியிட்டு உள்ளார். தெய்யாட்டங்களில் பாடப்படும் தோற்றப் பாட்டுக்களிலும் கண்ணகித் தொன்மம் இடம் பெற்றிருப்பதை மலையாள வரலாற்றுப் பேராசிரியர் கே.கே.என்.கருப்பு தனது நூலில் விரிவாக ஆய்வுக்குட்படுத்தியுள்ளார். பகவதியம்மன் பற்றிய தோற்றம் பாட்டுக்களில் முற்பகுதி கண்ணகித் தொன்மம் பற்றியதே. கண்ணகி வழிபாடு பிற்காலத்தில் கேரளத்தில் பகவதி வழிபாடாக மாறியிருக்கின்றது. இதுகுறித்துப் பல ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன.

கொடுங்க நல்லூர் பகவதி, திருவனந்தபுரம் அருகேயுள்ள ஆற்றிக்கால் பகவதியம்மன் என்பனவெல்லாம் கண்ணகி வழிபாட்டின் எச்சமே என்பதை ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர். மேலும், பகவதியம்மன் கோவில்களில்‘களமெழுத்து’ எனும் கோலப்பொடியில் கோயில் களத்தில் தெய்வ உருவங்களை வரைவதில் கண்ணகி உருவமும் இடம்பெறுகின்றது. மேலும் ஒற்றை முலைச்சி என்ற பெயரிலும் கண்ணகி வழிபாடு கேரளத்தில் நிலவுகின்றது. நவீன மலையாளக் கவிதையிலும் கண்ணகித் தொன்மம் பல கவிஞர்களால் மறு வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. முற்போக்கு இயக்கத்தைச் சார்ந்தவரும் ஞானபீட விருது பெற்ற வருமான கவிஞர் ஒ.என்.வீ கருப்பு கண்ணகி குறித்துத் தனியாக ஒரு கவிதை எழுதியுள்ளார். அக்கவிதையில் கண்ணகியைப் பெண்மையின் எழுச்சியாகவும் சுரண்டும் ஆளும் ஆதிக்க வர்க்கத்திற்கு எதிரான புரட்சிப் பெண்ணாகவும் படைத்துக் காட்டியுள்ளார்.அக்கவிதை வருமாறு,

“வருகிறாள் கண்ணகி

     வருகிறாள் தன் சிலம்பு

ஒரு கையில் உயர்த்திப்

     பிடித்து, தீக்கனல்

உதிரும் கண்களால்

     முறைத்து நெஞ்சில் உரைத்து

அடித்தலறி சாபமொழி

     மின்னலும் இடியும் மழையும்

புயற்காற்றும் சேர்ந்த

     ஓர் ஐப்பசி மாத அமாவாசையில்

உறைந்த இருட்டைப்போல்

     வருகிறாள் கண்ணகி

இருபுறமும் கூந்தல்

     கலைந்து பறக்கிறது

நெருப்பை எறிந்ததுபோல்

அவள் கேட்கிறாள்:

     எங்கே என் தலைவன்

எங்கே? அவன் உயிரைப்

     பறிப்பதற்குக்

குற்றமென்ன செய்தானவன்? அரிசி

பருப்பு வாங்க உடுத்தும்

     துணிவாங்க தாலி

கட்டிய பெண்ணின்

     சிலம்பு விற்பதற்காக

இங்கே வந்தான் அன்றோ?

     பசித்துச் செத்தாலும்

இருந்து வாழ்வதற்கு

     அறியாதோர், மானம்

துறந்து வாழ்வதற்கு

     இயலாதோர் முதுகு

எலும்பு ஒடிய உழைத்து

     வியர்வையினால் உப்பு

இட்ட கஞ்சியைப் பால்

     அமுதென்று நினைப்போர்!

சொல்லுக: தெற்கு

     இறைவனை என்னுயிரின்

உயிரானவனைக் கொல்ல

     ஆணையிட்டாய்? கொடுமையாய்க்

கொன்றாய்? பின்சிலம்பை

     அடித்து உடைத்தாள் அவள்

தரையெங்கும்

     சிதறிய மாணிக்கக்

கற்களில் சுட்டு

     விரலூன்றி, மறு

கரத்தைத் தலைமேல் வைத்து

     உரக்க சாபமுரைத்தாள்

எரிகிறது பற்றி

     எரிகிறது பெரு

நகரமும் பெரு

     வயல்வெளிகளும், அரச

கூடங்களும் மாட மாளிகை

     வரிசைகளும், படை

வீடுகளும் தேரும்

     நெறிகெட்ட சிம்மா

சனங்களும் பற்றி -

     எரிகிறது: ஜுவாலை

படர்கிறது - மீண்டும்

     இளங்கோவாம் - திரு

வடிகளே, வாரீர்! நின்

     திரு எழுத்தாணியில்

இவளது எரியும்

     வார்த்தைகளைப் படைப்பீர்

இவள் எரிக்கும் இக்

     கோட்டைகளைப் பாரீர்!

நவீன மலையாளப் புதுக்கவிதையில் நாட்டார் கலையிலக்கிய மரபுகளை இணைத்து சமூகவுணர்வுடன் கவிதைகள் பாடியவர் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் ஆவார். படையணி முதலான நாட்டார் சாத்து வடிவங்களில் காணப்படும் இசை மெட்டுக்களைக் கையாண்டு பெரும் வாசகத்திரளை எட்டியவர் கடம்மனிட்ட. சமூக அங்கத்துடன் எழுதும் இவர் சமகாலப் பிரச்சினைகளில் அக்கறை கொண்டவர். இவரது கவிதைகளில் சுற்றுச்சூழல் குறித்த கவனம் மிகுந்துள்ளது. மாசுபட்ட இந்தப் பூமியைப் புதுப்பிக்க ஆதி மனிதர் கிளர்ந்து வரவேண்டும் என்ற குரல் இவரது கவிதைகளில் ஓங்கி ஒலிக்கின்றது. ஆதிமனிதன் (காட்டாளன்) இப்பூமியை மாசுபடுத்திய நவீன மனிதர்களை எதிர்த்து மழு ஏந்துகின்றான். ஆதிமானுடப் பெண் பூமியின் அழிவைக்கண்டு இவரது கவிதைகளில் பெரும் குரலெடுத்துப் பாடுகின்றாள். அலறி ஆர்ப்பாட்டம் செய்கின்றாள். இந்த ஆதிப்பெண் பூமியின் சூழல் அழிவுக்கு மட்டுமல்லாது அடிமைப்படுத்தப்பட்ட கறுத்த மனிதர்களின் விடுதலைக்கும் ஆதரவாகக் குரல் கொடுக்கிறாள். நவீன சமூகத்தை நோக்கி கேள்விக் கணைகளைத் தொடுக்கின்றாள். இந்த ஆதிமானுடப் பெண்ணைக் கடம்மனிட்ட, திராவிட மரபின் ஆதிப்பெண்மையாகத் திகழும் கண்ணியாக உருவகிக்கின்றார். கடம்மனிட்டயின் ‘வேடன் விருத்தம்’, ‘குறத்தி’ ஆகிய கவிதைகளில் சித்திரிக்கப்படும் ஆதிமானுடப்பெண் கண்ணகியே. இனி அவரது கவிதைகளிலிருந்து சில பகுதிகளைக் காண்போம்.

“ஈன்ற புலி காத்துக்கிடக்கும்

ஈரக் கண்களைத் திறந்தும்

கருமூர்க்கன் பாம்பின் வாலாய் நிமிரும்

புருவத்தைப் பாதி வளைத்தும்

நீறாய்ப்போன வனத்தின் நடுவில்

நிற்கிறான் காட்டாளன்

நெஞ்சத்தொரு தீப்பந்தம் குத்தி

நிற்கிறான் காட்டாளன்

ஆகாயத்து அப்பன் செத்து

கிடப்பதுகண்டு நடுங்கி

மலையோரத்து அம்மை அமர்ந்து

தகிப்பதுகண்டு கலங்கி

முலைபாதி முறிந்தவள் ஆற்றின்

கரையில் கனலாய்க் கூக்குரலிட்டாள்

கனவின் குரல் வெட்டுளியாய்

சிதையத்துள் நுழைந்து ஆழப்பதிந்தது

கணையேற்ற கடும்புலிபோல்

வெடித்துச்சிதறிய மாமலைபோல்

உலகையே உலுக்குமட்டில்

அலறினான் காட்டாளன்...

அலைகடலின் வேரைப்பறிக்க

திமிறினான் காட்டாளன்”   (வேடன் விருத்தம்)

‘குறத்தி’ என்கிற கவிதையில் கண்ணகியைக் குறிஞ்சி மலைக் குறத்தியாகச் சித்திரிக்கின்றார். மலையிலிருந்து நதிபோல் குதித்துவரும் குறத்தி நாகரிகச் சமூகத்தின் முன் களத்தில் நின்று மருள் வந்து ஆடுகிறாள். நாகரிக மனிதர்கள் ஆதிவாசிகளான மலைமக்களுக்கு இழைத்த கொடுமைகளை எடுத்துரைக்கின்றாள். கறுத்த மக்களின் உழைப்பில் உயர்ந்த நீங்கள் அவர்களை வஞ்சித்தது சரியா? என வினவுகின்றாள். ‘ஹரிஜனம்’ என்ற சொல்லை கேள்விக்குட்படுத்துகிறாள். விளிம்பு நிலை மக்களுக்கு நியாயம் கிடைக்காவிட்டால் ‘முலை’ திருகி ‘புரம்’ எரிப்பேன் எனச் சூளுரைப்பதோடு அக்கவிதை நிறைவுறுகிறது.

“மலைப்பிரம்பு மடையிலிருந்து

குறத்தி வருகிறாள்

வளைந்த வாசனைப் பனம்பூப்போல்

குறத்தி வருகிறாள்

கருஇலந்தைக் காட்டிலிருந்து

குறத்தி வருகிறாள்

சேற்று வயல்கரையில் ஈர

வரப்புகளிலிருந்து

குறத்தி வருகிறாள்

சீற்றம் சீண்டிவிடப்பட்ட மதயானைபோல்

குறத்தி வருகிறாள்

வேட்டைநாயின் கடைப்பல்லிருந்து

வண்டு கீறிய நெஞ்சுடல்

குறத்தி வருகிறாள்

மலை கலங்க வரும் ஆறுபோல்

குறத்தி வருகிறாள்

..... ..... .....

உளி உலுக்கிய காட்டுப் பாறையின்

கண்ணிலிருந்து

குறத்தி வருகிறாள்

காட்டுத் தீயாய்ப் படர்ந்த தீப்பொறிபோல்

குறத்தி வருகிறாள்

குறத்தி ஆட்டக்களத்தையடைந்து

குறத்தி நிற்கிறாள்

கருநாகக் களத்தில் நின்று

குறத்தி துள்ளுகிறாள்

கருங்கண்ணின் துடை சிவக்கிறது

கருஞ்சாயலின் கட்டவிழ்கிறது

காரிரும்பின் உடல் விறைக்கிறது

குறத்தி மருள் வந்தாடுகிறாள்

அரங்கத்தின் முன்வரிசையில்

காறித்துப்பியும் சும்மா

சிரித்துக் கொண்டும் கண்ணால்

குறத்தியைக் காணும்

நாட்டாண்மைகளுக்கு நேராக

விரல் நீட்டிக் கூறுகிறாள்:

நீங்கள் என கறுத்தமக்களை சுட்டுத்தின்கிறீர்களா?

நீங்கள் அவர்களின் நிறைந்த கண்களைத்

தோண்டியெடுக்கின்றீர்களா?

நீங்கள் எங்களுக்குக் குழிபறித்து குளம்

தோண்டுகின்றீர்களா?

நீங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் எப்படி

நீங்களானீர்களென்று

காட்டு வள்ளிக்கிழங்கை அகழ்ந்து

சுட்டுத் தந்தவர்களல்லவா? - நாங்கள்

காட்டுச் சோலை தெளிநீர் அள்ளிக்

கொடுத்தவர்கள் அல்லவா- பின்னர்

பூத்த மாமர நிழலில் நீங்கள்

காற்றேற்று மயங்கியபோது

கண்ணிமைக்காது அங்கு நாங்கள்

காவல் நின்றவர்களல்லவா

..... ..... .....

உழவுச்சால்கள் பாய்ச்சினோம் நாங்கள்

கொழுமுனையில் உறங்கினோம் நாங்கள்

தளர்ந்த எங்களை வலையில் பற்றி

அடிமைகளாக்கி முதுகை உடைத்தனர்

எங்களின் அறிவை மந்தமாக்கினீர் - நீங்கள்

ஆட்சி அதிகாரங்கள் கருவூலங்கள் பல

அதிகாரபீடங்கள் பெரு நகரங்கள்

மதியந்திகள் நீதிபதிகள்

கழுமரங்கள், சாட்டைவார்கள்

..... ..... .....

ஹரிஜனங்கள் நாங்கள் ஆஹா! அவமானங்களுக்குப்

பலன்கள் போல தரித்திர தெய்வங்கள்!

அடிமை நாங்கள் ஹரியுமில்லை

தெய்வமுமில்லை மாடுமல்ல,

ஓடுமென்றால் ஆறுமல்ல

அடிமைகள் நாங்கள் உதிருமென்றால் பூவுமல்ல,

..... ..... .....

வெந்தமண்ணின் வெடிப்பிலிருந்து

முளைத்தெழுந்த குறத்தி நான்

காட்டுக்கல்லில் கண்ணுரசி தீப்பொறியை

உயர்த்தும் குறத்தி நான்

என் முலைப்பாலுண்டு உள்ளுறைந்து வருகின்ற மக்கள்

அவர்களை நீங்கள் ஒடுக்கினால்

முலைபறித்து வலிதெறிந்து புரமெரிப்பேன் நான்

முடிபறித்து நிலத்தில்அடித்து குலமடக்குவேன் நான்

கருநாகக் களத்தை அழித்து

குறத்தி நிற்கிறாள்

காட்டெருமையின் வெளிச்சம்போல

காட்டுவெள்ளைப் படிமம் போல

முளைக் குருத்தின் கூர்மைபோல

குறத்தி நிற்கிறாள்”        (குறத்தி)

அண்மையில் ராஜீவ் ஆலுங்கல் எனும் திரைப் படப் பாடலாசிரியரும் கண்ணகியைச் சமூகநீதிக்காகப் போராடும் புரட்சி பெண்ணாகப் பாடலொன்று புனைந் துள்ளார். இவ்வாறு நவீன மலையாளக் கவிதையில் கண்ணகி ஆதிமானுடப் பெண்ணாக மூதாயாக - புரட்சிப் பெண்ணாகச் சித்திரிக்கப்பட்டுள்ளாள். கண்ணகித் தொன்மம் நாட்டார் மரபு சார்ந்தே சித்திரிக்கப்பட்டுள்ளது.