சுருளி மலையில் உள்ள விண்ணேற்றிப் பாறையில் சேர மன்னன் இமயத்தில் இருந்து கல்லெடுத்து வந்து உருவாக்கிய கண்ணகி கோட்டத்தை ஆய்வாளர் கோவிந்தராசன் 1963-இல் கண்டுபிடித்தார். இன்று கண்ணகி கோட்டத்தில் கண்ணகி சிலையின் இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதி மட்டுமே இருக்கிறது. அந்தக் கண்ணகி கோட்டத்தை இன்று மங்களதேவி கண்ணகி கோவில் என்று மாற்றுகிற வேலை நடந்து கொண்டிருக்கிறது.
தமிழகக் கேரள எல்லையில் உள்ள இந்தக் கண்ணகிக் கோட்டத்தின் வனப் பகுதி எந்த மாநிலத்திற்கு உரியது என்று இன்றும் இறுதி செய்யப்படவில்லை.
மாநில எல்லை பிரிவினையின் போது தமிழர்கள் இழந்த இடுக்கி மாவட்டத்தின் ஒரு பகுதி அது என்பது குறிப்பிடத்தக்கது.1983-இல் கேரளத் தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதைப் பயன்படுத்தி கண்ணகிக் கோட்டத்தின் ஒரு பகுதியில் துர்க்கை அம்மன் சிலையை கேரள பக்தர்கள் நிறுவிக் கண்ணகிக் கோட்டத்தை உரிமை கொண்டாடத் தொடங்கினர். மேலும் 1986-க்குப் பிறகு ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே விழா நடத்த அனுமதி அளிக்கின்றனர்.
தேனி மாவட்டம், கூடலூர் பளியங்குடியிலிருந்து 6 கிலோ மீட்டர் நடந்து சென்றால் கண்ணகிக் கோட்டத்தை அடைந்து விடலாம்.
12 அடி அகலம் கொண்ட இந்தப் பாதையில் சாலை அமைத்தால் தமிழர்கள் எளிதாகக் கண்ணகிக் கோட்டத்தை அடைந்து விட முடியும். ஆனால், இந்தச் சாலையில் பக்தர்கள் நடந்து செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் குமுளிக்குச் சென்று அங்கிருந்து 16 கிலோமீட்டர் தூரம் ஜீப்பில் பயணித்தும், நடைப்பயணமாகவும் கண்ணகிக் கோட்டம் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.
தமிழக - கேரள எல்லையை முறையாக அளவீடு செய்தாலே கண்ணகிக் கோட்டம் தமிழக எல்லைக்குள் வந்துவிடும். கேரள அரசின் இடையூறு இன்றித் தமிழக பக்தர்கள் கண்ணகிக் கோட்டம் சென்றுவர பளியங்குடிப் பாதையைச் சீரமைத்துக் கொடுத்தால் மக்கள் எவ்வித இடையூறும் இன்றி கண்ணகிக் கோட்டம் சென்று வரலாம்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் பொழுது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயிலைக் கொண்டு முறையாகச் சீரமைத்துப் பராமரிக்க வேண்டும். தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் கண்ணகிக் கோட்டம் தொடர்பாகக் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணப்படும் எனக் கூறியிருந்தது.
தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் இன உணர்வாளர்களால் கோரிக்கைகள் மீண்டும் மீண்டும் வைக்கப்பட்டு வந்தது.
கடந்த திசம்பர் மாதம் தமிழக அரசின் அறநிலையத் துறை சார்பாக அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கண்ணகிக் கோவிலை கொண்டு வருவதற்கான நடவடிக்கையைத் தொடங்கினர். அதற்கானச் சுற்றறிக்கையும் கீழக் கூடலூர் பகுதி அறநிலையத்துறை மற்றும் அரசுத் துறைகளுக்கு அனுப்பப்பட்டிருந்தது. கேரளா அரசின் டிஜிட்டல் இ சர்வே எண் கேரளா பகுதிக்குள் கண்ணகிக் கோட்டம் இருப்பதாகக் காட்டப்பட்ட பொழுதும் தமிழக வனத்துறை மற்றும் அறநிலையத்துறை சார்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் தமிழக எல்லையில் உள்ள கண்ணகிக் கோட்டத்தை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் எடுப்பதற்கு மறுப்பு இருந்தால் தெரிவிக்கவும் என அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
தமிழ் உணர்வாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கண்ணகிக் கோட்டத்தை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் எடுப்பதற்கான தொடக்க வேலைகளாக இது வரவேற்பைப் பெற்றிருந்தது.
ஒரு மலையேறும் சுற்றுலாத்தலமாகவோ, இறை நம்பிக்கை கொண்ட வழிபாட்டு உணர்வாக இல்லையென்றாலும் இது தமிழர் நிலம், கண்ணகி தமிழ்ப் பண்பாட்டு அடையாளம் என்ற பார்வையில் வாய்ப்பு கிடைக்குமா என்று கடந்த ஆண்டுகளில் எல்லாம் கண்ணகிக் கோட்டத்தை நோக்கிய பயணத்தில் ஈடுபட்டு இருக்கிறோம். ஆறாவது ஆண்டுப் பயணமாக இவ்வாண்டும் அந்தப் பயணம் வாய்க்கப் பெற்றது.
கடந்த 2020-21 காலகட்டத்தில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கண்ணகிக் கோட்டத்திற்கான அனுமதி அளிக்கப்படாத காலகட்டத்தில் செல்ல இயலவில்லை.
இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 2022-ஆம் ஆண்டு சென்ற பொழுது நமக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த ஆண்டுகளில் இருந்ததை எல்லாம் விட மிக அதிகமாக கண்ணகிக் கோட்ட வழிபாடுகளில் வைதீகமும், ஆரிய பார்ப்பனியத் தன்மைகளும் புகுத்தப்பட்டிருந்தது. புதிதாக ஒரு பிள்ளையார் சிலை வைத்து வழிபடவும் தொடங்கியிருந்தார்கள். அதற்கு முன் எந்த ஆண்டும் இல்லாத யாகங்கள் எல்லாம் அந்தக் கோட்டத்திற்குள் வளர்க்கப்பட்டிருந்தது. மலையடிவாரத்தில் பாரதிய ஜனதாவின் மாநில நிர்வாகிகள் பங்கெடுக்கும் ஒரு ஊர்வலம் அமைக்கப்பட்டுத் தமிழ்நாட்டிலிருந்து ஏறுகிற பாதையைச் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கையில் பழங்குடி மக்களிடம் கையெழுத்து இயக்கம் எல்லாம் நடத்தப்பட்டது.
அதுவரைக்கும் தமிழ்நாடு வாணிகச் செட்டியார் சங்கம் பல ஆண்டுகளில் பக்தர்களை வரவேற்றுப் பதாகைகள் வைத்திருப்பார்கள். கடந்த ஆண்டு ஜெகநாத் மிஸ்ரா என்கிறவர் தலைமையிலான ஒரு புதிய சாதி சங்கமும் அதில் தலை எடுத்தது.
பாரதிய ஜனதா அவர்களின் சார்பான சாதிச் சங்கங்கள் என்று மலையடிவாரத்தில் ஒரு வகை அரசியலும் கண்ணகிக் கோட்டத்தில் பிள்ளையார் சிலை வைதீக வழிபாடு நம்பூதிரிப் பார்ப்பனர்களின் ஆதிக்கம் என்றும் இருந்தது.
சிலப்பதிகாரத்தின் மீது தந்தை பெரியாருக்கு மாற்றுக்கருத்து இருந்த பொழுதும் பேரறிஞர் அண்ணாவும் அவரைப் பின்தொடர்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் கண்ணகியைத் தமிழ் பண்பாட்டின் ஒரு அடையாளமாகவே கருதி இருந்தனர்.
தமிழ்நாட்டில் கண்ணகி இருக்க வடநாட்டுச் சீதை எதற்கு என்று அண்ணா பேசியிருந்தார். சென்னை கடற்கரைச் சாலையில் கண்ணகிக்குச் சிலை வைத்தது அகற்றப்பட்ட பொழுது திமுகவினர் வைக்கிற கட்சி பதாகையிலும் கண்ணகி சிலை இருக்க வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி கூறியிருந்தார். திமுகவின் இளைஞர் அணி அலுவலகமான அன்பகத்தில் இன்றும் கண்ணகி சிலை இருக்கிறது.
சிலப்பதிகாரத்தை தமிழ்நாடு எங்கும் மேடை போட்டு மக்கள் மையப்படுத்தியதில் திராவிட இயக்கத்தினரின் பங்கு முக்கியமானது. அப்படியான ஒரு அடையாளத்தை அரசியல் எதிரிகளிடம் கைவிட்டுவிடாதீர்கள் என்று நாமும் கூறி இருந்தோம்.
திசம்பர் மாதம் அறநிலையத்துறையின் முயற்சிகளின் பங்காக இந்த ஆண்டு கண்ணகிக் கோட்ட விழாவில் அறநிலையத்துறை பல சிறப்பான பணிகளை செய்திருந்தது. மேலும் மலையில் இருக்கும் கண்ணகிக் கோட்டத்திலும் கடந்த ஆண்டு முழுக்க முழுக்க கேரளக் காவல்துறையினரின் ஆதிக்கம் மட்டுமே இருந்தது. இந்த ஆண்டு கோட்டம் தமிழகக் காவலர்களின் ஆதிக்கத்தில் இருந்தது.பளியங்குடி பாதையில் அறநிலையத்துறையானது ஆங்கில மருத்துவ முகாமின் கூடவே சித்த, ஹோமியோபதி மருத்துவ முகாம்களை அமைத்திருந்தது. குறிப்பாக சித்த மருத்துவ முகாமில் வெட்டிவேர் ஊறல் குடிநீர், பானகம் வழங்கப்பட்டதுடன் மலையிறங்கி வருவோருக்கு பயன்படுகின்ற வகையில் எண்ணெய் மசாஜ், தொக்கன சிகிச்சை மற்றும் வர்ம முறையில் வலி நீக்கும் சிகிச்சை போன்ற சித்த மருத்துவ வலிநீக்கு சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.
அறநிலையத்துறை சார்பில் மலையேறுவோருக்குத் தண்ணீர் உணவுப் பொட்டலமும், வாழைப்பழமும் வழங்கப்பட்டது. கடந்த காலங்களில் இத்தகைய அறப் பணியானது சாதியச் சங்களால் நிகழ்த்தப்பட்டு வந்தது. அறநிலையத்துறையின் பங்கேற்பானது 'இத்தகைய அரசியலில் இருந்து' கண்ணகி வழிப்பாட்டைப் பாதுகாத்திருக்கிறதென்றே சொல்லலாம்.
அண்மைக்காலமாக அறநிலையத்துறையின் பணிகளில் குறிப்பிடத்தக்க வரவேற்கக்கூடிய அம்சமாக அதனது வெளியீடுகளை குறிப்பிடலாம். அவ்வகையில் கண்ணகிக் கோட்டம் குறித்த அதாவது சிலப்பதிகாரம், கண்ணகி மற்றும் கண்ணகியின் பயணத்தை ஆய்வு செய்து கண்ணகிக் கோட்டத்தைக் கண்டடைந்த புலவர் கோவிந்தராசனார் தொடர்பான தகவல்களை, கட்டுரைகளை அறநிலையத் துறை சார்பாக வெளியீடாகக் கொண்டு வருதல் நலம் பயக்கக்கூடியதாக அமையும்.
சிலப்பதிகாரத்தை நாடக, தெருக்கூத்து, தோல் பாவைக் கூத்து போன்ற பல்வேறு நிகழ்ச்சிக் கலை வடிவங்களில் உருவாக்கி முழுநிலவு நாளின் இரவில் கம்பம் பகுதியில் கண்ணகி விழாவை நடத்த வேண்டும்.
கண்ணகிக் கோட்ட வழிபாடு தொடர்பான கோரிக்கைகளில் பெரும்பாலானோர் (ஏன்.. அனைவரும் என்று கூட சொல்லலாம்) தமிழ்நாட்டுப் பகுதியான பளியங்குடி வழி மலையேற்றுப் பாதையில் தார்ச்சாலை அமைக்கக் கோருகின்றனர். கடந்த காலங்களிலும் தமிழ்நாடு அரசு சார்பில் அத்தகைய முயற்சிகள் நடந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கம்பத்திலிருந்து 50 நிமிட பயணத்தில் குமுளியை அடைந்து, ஜீப்களின் மூலம் மலையேற வாய்ப்பிருந்தும் பலர் பளியங்குடி பாதையை தேர்ந்தெடுப்பதற்கான காரணம் இயற்கையினூடேயான சாகச பயண அனுபவமே (Naturalistically Adventuring expression) காரணம். ஆனால் அந்த பயணத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போகிற வழியில் குடிநீர் சேவையையும் அரசு நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.
மலையேற்றப் பாதையில் சாலை தேவையா இல்லையா என்பது நமக்கு இரண்டாவதாக இருக்கலாம். ஆனால் கண்ணகிக் கோட்டம் இருக்கும் வனப்பகுதி தமிழ்நாட்டு எல்லையில் இருக்கிறது என்பதை உறுதி செய்ய வேண்டும். கண்ணகிக் கோட்ட வழிபாட்டில் அங்கு வைக்கப்பட்டு வழிபடுகின்ற அந்த துர்க்கை சிலை அகற்றப்பட வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் கொண்டு வைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படும் அந்த பிள்ளையார் சிலை கண்ணகிக் கோட்டத்தின் வழிபாட்டில் ஒரு அங்கமாக மாறிவிடக்கூடாது.
திராவிடம் என்பது ஒரு பண்பாட்டுச் சொல் என்று பேராசிரியர் தொ. பரமசிவம் அவர்கள் கூறுவார். கண்ணகி வழிபாடு என்பது பழைய தமிழ்நாடு சேர நாட்டிலும் தமிழ்நாட்டிலும் தமிழ் ஈழத்திலும் தொடர் ஒரு பண்பாடாகவே இருக்கிறது. இதனுள் ஆரிய வைதீகத்தன்மை கூடுவதையும் அதை சாதி சங்கங்கள் கைப்பற்றுவதையும் பாரதிய ஜனதா அரசியலாக்க முயற்சி செய்வதையும் தடுத்து தமிழ் பண்பாட்டின் ஒரு இலக்கியச் சான்றாக ஒரு தொன்மமாக இருக்கும் கண்ணகி வழிபாட்டை தமிழ்நாடு அரசு பூம்புகார், கம்பம், கூடலூர், மதுரை உள்ளிட்ட சிலப்பதிகாரத்தில் தொன்ம அடையாளங்களாக இருக்கும் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு விழாவாக சிறப்பாக எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசின் சார்பாக சென்னையில் உள்ள கண்ணகி சிலையின் கீழ் மரியாதை செய்வதோடு நிறுத்திவிடாமல் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் சுருளி மலையில் இருக்கும் கண்ணகிக் கோட்டத்திற்கு நேரடியாகச் சென்று அரச மரியாதை செலுத்துவதன் வழியாக அந்த இடத்தின் தமிழ்நாட்டின் உரிமை கோரலைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியும்.
- பன்னீர் பெருமாள், தமிழ்ப்புலம்