womens 350இந்தியாவில் சுவர்களுக்கென்றே தனி வரலாறு இருக்கிறது. அப்படி யிருக்கும் போது அந்தச் சுவர்களை வெவ்வேறு கோணங்களில் நாம் அணுகலாம். இதுவரை நாம் இடித்தெரிந்த கோட்டைகள், சுவர்கள் எல்லாம் மத அடிப்படைவாதம் காலம் காலமாக கட்டிக்காத்து வந்த தீண்டாமைச் சுவர்கள் தான். ஆனால், முதன்முறையாக பெண்களுக் கெதிராக ஆணாதிக்க பார்ப்பனிய மதம் கொண்டுள்ள வெறுப்புணர்வையும் அதன் விளைவாக இந்த சமூகம் பின்பற்றும் மிகக் கடுமையான பாலின ஏற்றத் தாழ்வுகளை வேரறுக்கும் நோக்கிலும், பழைய கோட்டை சமஸ்தான - சாம்ராஜ்ஜியக் கட்டுப்பாடுகளைத் தகர்த்தெரிந்து பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் பொருட்டு கேரளாவில் பெண்கள் ஒன்றிணைந்து கட்டியெழுப்பியதே இந்த “வனிதா மதில் (அ) பெண்கள் மதில்”.

அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி CPI(M)  ஸ்ரீநாராயண தர்மா பரிபாலன யோகம் (SNDP) மற்றும் கேரளா புலையர் மகா சபா (KPMS) ஆகிய கட்சிகளின் முழு ஆதரவுடன் சாதி, மதங்களைக் கடந்து பாலின சமத்துவத்தை பறைசாற்றும் விதமாகவும் சபரிமலை கோவில் நுழைவுக்கு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து கேரளாவில் சங்க் பரிவாரங்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் வன்முறைகளைக் கண்டித்தும் அணிதிரள்வது என்று KPMS - ன் தலைவர் புன்னல ஸ்ரீகுமாரின் தலைமையில் முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னர், அந்த நிகழ்விற்கு அரசு ஆதரவு அளிப்பதாக பினராயி விஜயன் அறிவித்தார். (அரசின் நிதியிலிருந்து இதற்கு பணம் கொடுக்கப்படவில்லை என்பதும் தெளிவு செய்யப்பட்டது)

கடந்த வருடம் டிசம்பர் 10-ஆம் தேதி சர்வதேச மனித உரிமை நாள் கொண்டப்பட்ட அந்த தினத்தன்று, கேரளாவின் இடது ஜனநாயக அரசு (LDF – Left Democratic Front) மற்றும் கேரளாவின் மத சீர்திருத்த அமைப்புகள் இணைந்து அந்த மாநிலத்தின் தனித்துவமான ‘மறுமலர்ச்சி’ காலகட்டத்தை (1920-களில்) நினைவுகூறும் வகையிலும், “அனைவருக்கும் இங்கே அனைத்து உரிமைகளும் இருக்கிறது” என்னும் அடிப்படையில் பெண்களுக்கான உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்ற முக்கியமான காரணத்திற்காகவும் ஜனவரி 1-ஆம் தேதி மிகப் பெரிய பெண்கள் மனித சங்கிலி அமைக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.

கேரளாவில் உள்ள பெண்கள், தலித்துகள் மற்றும் சட்டத்திற்கு விரோதமான வன்முறைப் போக்கு அதிகரித்து வருகின்ற சூழ்நிலையானது, இதுவரை ஒளித்து வைக்கப்பட்டிருந்த சாதிய எண்ணங்களை வெளிச்சப்படுத்தியுள்ளது. இது மீண்டும் சாதியக் கட்டுபாடுகளை சமூகச் சட்டங்களாக மாற்றத் துடிக்கும் இந்துத்துவ சக்திகளை வெளிக்கொணர்ந்துள்ளது.  

இதற்கு உதாரணமாக 22.12.2018 – ஆம் தேதி ‘ஜென்ம பூமி’ என்னும் ஆர்.எஸ்.எஸின் அதிகாரப்பூர்வப் பத்திரிக்கையில் “தெங்கு கேரேன்டவனே பிடிச்சு தலையில் கைய்யட்டும் போல் ஓர்கனம்” (தென்னை மரத்தில் ஏற்ற வேண்டியவனை தலையில் ஏற்றுவதற்கு முன் யோசித்திருக்க வேண்டும்) என்று கேரள முதலைமைச்சரின் சாதியைச் சொல்லி வெளியான கேலிச்சித்திரம் கேரளாவை சாதி-மதப் பிரச்சினைகளைக் கொண்டு துண்டாட துடித்துக் கொண்டிருக்கும் பி.ஜே.பியின் எண்ணத்தைத் தெளிவாக்கியுள்ளது.

யாரிடமிருந்து பெண்ணுக்கு விடுதலை? “வேறு எந்தக் காரியத்துக்காகவும் இந்து மதத்தை ஒழிக்காமல் தாட்சண்யம் பார்ப்பதாயிருந்தாலும் பெண்களுடைய சுதந்திரத்தை உத்தேசித்தாவது இந்து மதமென்பது அழிய வேண்டியது மிக்க அவசியமாகும்”, என்பதை நன்கு உணர்ந்திருந்த தந்தை பெரியார், நுாற்றாண்டு காலமாய் இருந்துவருகின்ற பெண் ஒடுக்குமுறை மற்றும் அடிமைத்தனத்தில் இருந்து தங்களை முழுவதுமாக விடுவித்துக் கொள்வதற்காக அணிதிரள வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை எப்போதும் நினைவுபடுத்துகிறார்.

காரணம் பெண் விடுதலையென்பது எப்பொழுது தங்களின் வாழ்க்கை மீதான முழு அதிகாரத்தை அவர்கள் பெறுகிறார்களோ அது தான் பெண் விடுதலை. சாதி-மதம் மற்றும் இன்னும் சிலவற்றால் அடிமைகளாய் இருக்கும் இந்த உலகில் சமத்துவம் கோருவது என்பது அடிமைத்தனத்தில் பங்கெடுத்துக் கொள்வது போன்று தான்.  இந்த மதிலானது ஆண்களிடமிருந்து பெண்களைத் தற்காத்துக் கொள்வதற்காக அல்ல அடிப்படைவாத மதக் கோட்பாடுகள் ஏற்படுத்தியிருக்கும் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காகத் தான்.

அப்படியிருக்கும் வேளையில் கேரளாவில் மத-சாதியத்தைக் கொன்றழிக்கும் வகையில் “உயர் உயர் உயரோ, உணர் உணர் உணரோ, வனிதா மதிலினில்…ஜாதி விஷத்தின் கரிநாதங்கள் தீண்டில்லா இனி இவரே… திரிச்சு கொண்டு வரேன்டா, மதிலாய் எதிர்க்கும் ஈநங்கள், என்நும் எதிர்க்கும் ஈநங்கள்” (இன்னும் உயரமான சுவர்களை எழுப்பலாம், பெண்ணே விழித்துக் கொள்!…ஜாதி விஷம் இனி இவர்களைத் தீண்டாது! திரும்பி கொண்டு வரவேண்டாம்! நாங்கள் அதை மதிலாய் எதிர்ப்போம்! இனி எப்பொழுதும் நாங்கள் அதை எதிர்ப்போம்!)

என்னும் பிரபா வர்மாவின் அதிகாரப்பூர்வ ‘வனிதா மதில்’ பாடல் கேரளாவின் பெண்களை யெல்லாம் மிக வேகமாக ஒன்றிணைத்தது. பெண்களை அதிகமாகக் கொண்ட மாநிலத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியை மீண்டும் 2000 வருடங்களுக்கு முன்னிருந்த இருண்டகாலத்திற்குள் இழுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் இந்துத் துவத்தையெதிர்த்து பாடல், ஓவியங்கள், எழுத்து, அரசியல், கலாச்சாரம் என அனைத்துத் தளங்களிலும் மக்களை விழிப்படையச் செய்து இரண்டாம் புரட்சிக்காக வலுவான மதிலை எழுப்பியிருப்பது வரவேற்கத்தக்கது.

எப்பொழுதும் மதில்கள் கட்டுவதிலேயே கவனம் செலுத்தும் இந்துத்துவ பரிவாரங்கள், இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த உடனேயே மீண்டும் ஒரு மதில் கட்டினார்கள். இந்து அமைப்புகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினரின் துணைக் கொண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ‘அய்யப்ப ஜோதி’ என்னும் பெயரில் காசர்கோடிலிருந்து திருவனந்தபுரம் வரையில் பெண்கள் ஆண்கள் என அனைவரும் கையில் விளக்கு ஏந்தி சபரிமலையின் பாரம்பரிய சடங்கு உரிமைகளைப் பாதுகாப்ப தற்காக  நின்றனர்.

அதில் சாதி – மத அடிப்படைவாதத்தில் திளைத்திருக்கும் பெண்கள் மற்றும் ஆண்களை ஒன்று சேர்த்தனர். மேலும், நாயர் மற்றும் நம்பூதிரி சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் ஆண்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தோல்வியை சந்தித்த இந்த ‘அய்யப்ப ஜோதி’ அணிவகுப்பை மற்ற மாநிலத்து சங்க் பரிவார ஊடகங்கள் பெறும் வெற்றி பெற்றதாக அறிவித்தது.

இந்த தோல்வியின் விளைவாக அடுத்த மூன்றாவது நாளில் டிசம்பர் 29-ஆம் தேதி ‘வனிதா சங்கமம்’ என்னும் பெயரில் 8 மாவட்டங்களில்  காங்கிரஸ் (United Democratic Front – UDF) போரட்டங்களைத் தொடர்ந்தது. திருவனந்த புரத்தில் இருக்கும் தலைமைச் செயலகத்தின் முன்பும் ஆர்பாட்டம் நடந்தினார்கள். மேலும், இந்தப் போராட்டமானது அய்யப்ப ஜோதிக்கும் வனிதா மதிலுக்கும் எதிரானது என்று சொல்லி வனிதா மதிலின் தனித்துவத்தை திசைதிருப்ப முற்பட்டது காங்கிரஸ். கேரளாவில் சாதி-மதப் பிரிவினைவாதத்தைத் தூண்டுவதற்கே இடதுசாரி அரசு வனிதா மதிலை எழுப்புவதாக காங்கிரஸ் அறிவித்தது. கேரளாவைப் பொறுத்தவரையில் காங்கிரஸின் நிலைபாடு என்பது மிகவும் மோசமானது.

170 அமைப்புகள் - 56 இலட்சம் பெண்கள்

அறிவித்த தேதியின்படியே ஜனவரி 1 அன்று வடக்கில் (ஆரம்ப முனையில்) காசர்கோட்டில் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. சைலஜா தலைமை தாங்க தெற்கில் (முடிவின் கடைசியாக) திருவனந்தபுரத்தில் பிருந்தா காராத் தலைமை வகிக்க மொத்தம் 170-க்கும் மேற்பட்ட சமூக சீர்திருத்த அமைப்புகள் ஒன்றிணைந்து ஏறத்தாழ 56 லட்சம் பெண்களைக் கொண்டு 620 கிலோ மீட்டர்  தேசிய நெடுஞ்சாலையெங்கிலும் அமைக்கப்பட்ட மதில் தான் இந்த “வனிதா மதில்”. அதில், அனைத்து தரப்பு மக்களும்; சமூக ஆர்வலர்கள், திரைப்பட நடிகர்கள், எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்கள், மற்றும் செவிலியர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

வனிதா மதில் எந்தவிதமான மாற்றத்தையும் தந்துவிடப்போவதில்லை என்று சங்க் பரிவாரங்கள் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கையில், அங்கிருக்கும் பழங்குடியின மக்கள் திரளாக வந்து மதில் அமைத்தது, கருத்தைக் களத்திற்கு எடுத்துச் சென்று விழிப்புணர்பு ஏற்படுத்தியதைக் காட்சிப்படுத்துகிறது. மேலும், அட்டப்பாடியில் இருக்கும் பி.ஜே.பி கட்சியைச் சேர்ந்த பெண்களும், கட்சியின் முக்கிய பிரமுகரின் மனைவி உட்பட வனிதா மதில் அமைத்தனர் என்பதை அங்கிருக்கும் நமது DYFI தோழர் அனி பிரான்சிஸிசைத் தொடர்பு கொண்டபோது (Ani Francis)  உறுதிப்படுத்தினார். “வனிதா மதில் ஜிந்தாபாத்” என்னும் முழக்கம் இன்னும் அழுத்தமாக அடுத்த நாள் ஒழித்தது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 3-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடந்த ஆர்பாட்டத்தை பதிவு செய்ய வந்திருந்த செய்தி நிருபர்களை காவிகள் தாக்கத்தொடங்கினர். அதில் கைராளி செய்தி தொலைகாட்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவாளரான சாஜிலா அப்துல்ரகுமான் (கேமரா பெர்சன் ) காவிகளின் தாக்குதலுக்கு உள்ளான போதும் கைவிடாது அந்தப் போராட்டத்தினை அவர் பதிவு செய்துள்ளார். “சங்கிகளின் அரட்டலுக்குப் பயந்து என்னுடைய காமிராவைக் கீழே வைக்க மாட்டேன்” என்று பேட்டியளித்த போது நாம் மதில் வலிமையை புரிந்து கொள்ள முடியும்.

மேற்குறிப்பிட்ட சம்பவத்தைக் கொண்டு ஆராயும் போது United Nations Development Programme (UNDP)  பாலின சமத்துவமின்மை குறியீட்டு அட்டவணையை (GII) 2015-ஆம் ஆண்டு வெளியிட்டது. அதில் பெண்களுக்கு ஆபத்து அதிகமாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் 155-நாடுகள் தேர்வு செய்யப்பட்டன. அதில் இந்தியா 130-வது இடம் என்பது இந்தியாவில் பெண்களின் நிலைமையை உலகறியச் செய்தது.

வனிதா மதிலின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் கேரளாவின் மறுமலர்ச்சி காலகட்டத்தைச் சிறிது தெரிந்து கொள்வது ஏற்புடையது. “கேரள வரலாற்றில் நிகழ்ந்த சமூக சீர்திருத்த இயக்கங்களின் விளைவைப் பற்றி அறியாமையில் இருப்பவர்கள் தான் ‘வனிதா மதிலை’ எதிர்க்கின்றனர்” என்று பினராயி விஜயன் வெளிப்படையாக அறிவித்தார்.

புரட்சிகள் ஏற்படுத்திய மறுமலர்ச்சி

கேரளாவைப் பொறுத்தவரையில் நிலப் பிரபுத்துவம் மற்றும் சாதியச் சுரண்டல்காரர்களின் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட  அமைப்பாகவும் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அடிமைத்தனத்தை நீட்டித்துக்கொள்ளும் திறன் உள்ள ஒரு கட்டமைப்பாகவும் செயல்பட்டது இந்துத்துவம் தான்.  மதமும் நிலப்பிரபுத்துவமும் ஒன்றிணைந்து சாதி ஆதிக்கத்தைப் பலப்படுத்தியிருந்த காலத்தில் சாதியைக் கட்டுக்குள் வைத்திருந்த முலைவரிச் சட்டத்தை எதிர்த்து நங்கேளியின் முலையறுப்புப் போராட்டம் தொடங்கி “மேல்சாதி இச்சைகளுக்கு எங்களின் மானத்தை அடகுவைப்பதா என்று சொல்லி, மானமே உயிர்” என்ற கருத்து மேலோங்கிய போது தோள் சீலைப் போராட்டம் வெற்றி கண்டது.

கேரள மறுமலர்ச்சி என்பது ஒரு விதத்தில் வருணாசிரம சாதிய அமைப்பின் வேரை ஆட்டம் காணவைத்தது. அதன் விளைவாக நாராயணகுரு போன்ற சீர்திருத்த வாதிகள் ஏற்படுத்திய மத சீர்திருத்தங்கள் வழியாக அய்யங்காளியின் தலைமையின் கீழ் நடந்த போராட்டங்கள்,  குருவாயூர் சத்தியாகிரகப் போராட்டம், மற்றும் வைக்கம் சத்தியாகிரகப் போராட்டம் போன்ற புரட்சிகளால் விதைக்கப்பட்ட விதையை இடதுசாரி இயங்கங்கள் தங்களின் இடைவிடாத முயற்சியின் மூலமாக இன்றைய கேரளாவின் அரசியல்-சமூகம்-பொருளாதாரம் ஆகியவற்றில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அய்யங்காளி மற்றும் கிறிஸ்துவ மிஷினரிகளின் பெரும் பங்களிப்பின் மூலமாக தலித்துகள் 1900-களில் ஏறக்குறை எல்லாவிதமான சாலைகளையும் பயன்படுத்தத் தொடங்கினார்கள். அரசியல், இலக்கியம், கலாச்சாரம் என அனைத்திலும் சாதியப் பாகுபாட்டையெதிர்த்து போர்க் கொடி தூக்கினார்கள். அதிலும் குறிப்பாக நம்பூதிரிகள் சமூதாயத்தில் நிலவிய மிகக் கொடூரமான பெண் வன்கொடுமைகளை உடைத் தெரிந்ததில் வி.டி. பாட்டத்திரிபாடின் பங்கு மிக முக்கியமானது. 1930-ஆம் ஆண்டு ‘அடுக்களையில் நின்னு அரங்கதேக்கு’ (அடுப்படியில் இருந்து அரங்கத்திற்கு) என்னும் நாடகம் கேரளாவில் ஒரு அழுத்தமான பெண்ணிய உணர்வை ஊட்டியது.

அதைத் தொடர்ந்து 1931-32ஆம் ஆண்டு கே. கேளப்பன், ஏ.கே. கோபாலன் போன்ற சீர்திருத்தவாதிகளின் தலைமையின் கீழ் நடைபெற்ற குருவாயூர் கோவில் நுழைவுப் போராட்டம் தான் இன்று கேரளாவில் நடக்கும் சபரிமலைப் போராட்டத்திற்கு முன்னொடி. அத்தனை போரட்டங்களின் விளைவாகத் தான் 1936-ஆம் ஆண்டிற்கு பிறகு கேரளாவில் உள்ள கோவில்கள் மற்றும் சாலைகளை அனைத்து சாதியினரும் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

வைக்கம் சத்தியாகிரப் போராட்டத்தில் தந்தை பெரியார் மற்றும் டி.கே. மாதவனின் இடைவிடாத எதிர்ப்புகளாலும் நாகம்மையார் மற்றும் மாதவனின் மனைவி ஆகியோர் அமைத்த பெண்கள் கூட்டணி கிராம் கிராமமாக சென்று சாதியப் பிரச்சினை களுக்கு எதிராகவும், நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும் போராடுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது. வைக்கம் போராட்டத்தை மேலும் வலுவாக்கியது. வரலாற்றில் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கத்தை உடைத்தெரிந்த நாகம்மையாரின் விழிப்புணர்வுப் பிராச்சாரத்தின் விதை இன்று ஏகாதிபத்திய ஆணாதிக்க படையெடுப்பை தடுப்பதற்கு வனிதா மதிலாய் எழுந்துள்ளது.

Pin It