அசலான கிராமத்து மனிதர்களைப் பற்றிய பல்வேறு படைப்புகள் வந்தவண்ணமிருந்தாலும் தமிழிலக்கியத்தில் விவசாய நிலத்தைப் பற்றியும் விவசாயிகளின் வாழ்க்கை குறித்தும் அரிதாகவே எழுதப்பட்டு வந்திருக்கிறது. தொடர்ந்து தனது இலக்கியச் செயல்பாட்டில் தஞ்சை நிலப்பகுதியையும், விவசாயக் குடும்பங்களின் வாழ்வம்சங்களையும் அச்சில் வார்த்தமாதிரி எழுதி வருபவர் சி.எம்.முத்து. முப்பதாண்டுகளுக்கும் மேலாக கிராமிய வாழ்வை அதன் உயிர்த்தன்மையை மட்டுமே எழுதிக்கொண் டிருக்கும் இவர் தமிழிலக்கிய உலகில் போதிய கவனம் பெறாதது கண்டுணரப்பட வேண்டியதாகும்.

cm muthu 258சி.எம்.முத்து எழுதிய ‘பொறுப்பு’ நாவலை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பெருவாரியாக கிராமம் சார்ந்து வாழ்ந்து வந்த மக்களின் வாழ்வியலை யதார்த்தமான மொழியில் எளிமையான காட்சியமைப்புகளால் விரியும் சித்திரமாக்கியுள்ளது இந்நாவல். அவரது பெரும்பாலான படைப்புகளைப் போலவே இந்நாவல் தஞ்சை மாவட்டத்தில் பெரும்பகுதியாக வசித்துவரும் கள்ளர் சமூகத்தை மையமாகக்கொண்டே எழுதப் பெற்றுள்ளது. மங்கொண்டார், குருக்கொண்டார், குச்சிராயர், ராஜாளியார், கருப்புட்டியார், கரை மீண்டார், விசுவராயர், தென்னம்பிரியர் என கள்ளர் சமூகத்தின் பல்வேறு பட்டப்பெயர்களைக் கொண்டவர்கள் நாவல் முழுதும் விரவியுள்ளனர். இவர்களுடன் நாயக்கர், வாண்டையார், பிள்ளை, தேவர், கோனார் என ஏனைய சாதியினரும் அதே கிராமத்தில் இணக்க மாக வசிப்பதைச் சொல்கிறபோது தமிழக கிராமப்புற சூழல் சாதியக் கட்டமைப்பில் பின்னிப் பிணைந்திருந் தாலும் அடிப்படையில் பகையுணர்ச்சி கொண்டிராத தாகவே இருந்து வந்த காலத்தை நினைவுறுத்துகிறது.

ஊரில் பெருமையான குடும்பமாக விளங்கும் மங்கொண்டாரின் மகனுக்கு திருமண நிச்சயம் செய்வதற்கான புறப்பாட்டுப் பயணத்தை திட்டமிடுவதற்காக அவரது வீட்டில் ஊர்ப்பெரியவர்கள் கூடிப் பேசுவதிலிருந்து நாவல் தொடங்குகிறது. கிராமிய அமைப்பின் பிடிமானம் சாதி என்பதைக் கடந்த மனித உறவும் அக்கறையும்தான் என்பதை இந்த திருமண சம்பந்தத்தை பேசி முடித்த நாயக்கர் மற்றும் வீச்சாத்தேவரின் பொறுப்பான உரையாடல்களும் செயல்பாடுகளும் சுட்டுகின்றன.

மங்கொண்டாரின் மகனுக்கு அவரது மைத்துனர் குருக்கொண்டார் மகளைத் திருமணம் செய்வதென்பது அவர்களது சின்னவயசிலேயே பெரியவர்கள் பேசி யெடுத்த முடிவு. இப்போது திருமணப் பொருத்தம் பார்க்கப் போன இடத்தில் ஜோசியக்காரர் சொன்ன செவ்வாய் தோச மிரட்டலால் கிலியடைந்த மங்கொண்டார் தனது ஒரே மகனின் திருமணத்தை வேறுமாதிரி முடிவு செய்துவிடுகிறார். மாமன் மச்சினன், சொந்தபந்தம் என்றிருந்தாலும் செவ்வாய் தோசமுள்ள பெண்ணை, செவ்வாய் தோசமில்லாத தன் மகனுக்கு கட்ட மன மொப்பாமல் வெளியிடத்தில் சம்பந்தம் பேசி விடுகிறார். இதில் கோபமடைந்த குருக்கொண்டார் முறுக்கிக்கொண்டு வம்புவாதம் செய்கிறார்.

இதுபோலவே மங்கொண்டார் புதிதாக சம்பந்தம் போட்டிருக்கிற தென்னம்பிரியர் வீட்டிலும் முறை மாமனுக்கு பெண் கொடுக்காததால் அவரது மைத்துனர் குச்சுராயர் என்பவருக்கும் கோபம், புகைச்சல். குடும்பங்களிடையே வன்மம் மேலெழும்புகிறது.

சம்பந்திகளாகப் போகிற இரண்டு பேர் வீட்டிலும் தங்கள் பையனுக்கு பெண்ணைத் தரவில்லை, பெண்ணைக் கட்டவில்லை என்பதால் எழுகிற கோபம் முற்றி பெண்ணுக்கு பாதுகாப்பாக ஐம்பது நூறு ஆட்கள் மணப்பெண்ணுக்குக் காவல் என்றெல்லாம் ஆகி கத்தி, அரிவாள், ஆயுதங்கள் என்று பல திசைகளில் ஆவேச மாக நாவல் விறுவிறுப்படைகிறது. பரம்பரை பரம் பரையாக வீம்புக்கும் வீறாப்புக்கும் பேர்போன தத்தமது வீட்டு ஆம்பிளைகள் என்ன செய்யப் போகிறார்களோ என இருவீட்டுப் பெண்களின் அச்சம், அழுகை, இயலாமை, ஏமாற்றம், தவிப்போடு அங்கலாய்த்திருக்க, ஏதோ பெரிய விபரீதம் நடக்கப் போகிறது என்ற எண்ணத்தை வாசகரிடம் ஏற்படுத்தி பல்வேறு திருப்பங்களுடன் நாவல் செல்கிறது.

கிராமிய கதைக்களனுக்கான கிண்டல், குறும்பு, ஆத்திரம், வன்மம், காதல், அன்பு, அனுசரனை, வெட்டிப்பேச்சு, மாட்டுத்தரகு, வியாபாரம், மாடு திருடுதல், விரும்பிய பெண்ணை வீராவேசமாக சென்று தூக்கிவந்து திருமணம் செய்வது, ஊதாரித்தனம், வைப்பாட்டி, ஷோக்கு வாழ்க்கை, ஒருத்தருக்கொருத்தர் மல்லுக்கு நிற்பது என்று சகலவிதமான கலவையுமாக நாவல் சுவையோட்டமாக அமைந்துள்ளது.

கிராமங்களில் ஒண்ணடி மண்ணடியாய் வாழும் உறவுக்காரர்களிடையே உண்டாகும் இயல்பான கோப தாபத்தையும் அதனை அடியோடு மறந்து சொந்தபந்தம் என்று பழையபடி பிணைந்துகொள்ளும் மரபின் வலிமையையும் சொல்வதோடு, அதற்கான மன இருப்பு இயல்பிலேயே வாய்க்கப்பெற்ற எளிய மனிதர் களாக அவர்களை அடையாளப்படுத்துவதாக நாவல் அமைந்துள்ளது. வெட்டு குத்து என மல்லுக்கு நிற்கும் மாமன் மச்சினன்கள் தங்களின் பகையையும் ஆத்திரத் தையும் மறந்து நெகிழ்ச்சியோடு திரும்பவும் கை கோர்த்து உறவின் மகத்துவத்தையும் தனித்துவத்தையும் புரிந்துகொள்வதுதான் நாவலின் மைய இழை. ஆனால் நாவல் உள்ளடக்கியிருக்கும் மனிதர்கள் சுயநலமும் வஞ்சகமும் பகையுணர்ச்சியும் நிலைத்து நின்று சுழன்றிடாத மனிதவாழ்வின் அன்பையும் அறத்தையும் பேணுபவர்கள் என்பதிலிருந்து தமிழர்தம் வாழ்வின் விழுமியங்களை இந்நாவல் வலிமையாய்ப் பேசுகிறது என்பதே நிஜமானதாகும்.

நாவலின் மையமாக அமையும் தஞ்சை மண்ணின் வெவ்வேறு நிலப்பாங்கையும் அதன் தன்மைகளையும் சி.எம்.முத்து இப்படி அறிமுகம் செய்கிறார்.

தஞ்சை மாவட்டத்தில் நாகப்பட்டினத்தையும் தஞ்சாவூரையும் இணைக்கும் சாலையின் தென்புறம் கடற்கரை வரை தெக்குசீமை என்று சொல்கிறதுதான் வழக்கம். மண்ணில் பொன் விளைகிற பூமி அது. செம்மண்ணில் மணல் கலந்து பார்க்கவே வெகு அழகாகயிருக்கும். மழை பெய்தால் உளை வாங்காது. தண்ணீர் பாய்ச்சுகிறதுதான் கஷ்டப்பாடே தவிர ஒன்று போட்டு ஒன்பது எடுக்கலாம். தண்ணீர் தினசரி பாய்ச்சிக் கொண்டே இருக்கவேண்டும். இல்லா விட்டால் பயிர்களை கறையான் அரிக்க ஆரம்பித்து விடும். பல தானியங்கள் விளைகிற பூமி இது. நெல்லைத் தவிர்த்து கரும்பு சோளம், கேழ்வரகு, நிலக்கடலை, கம்பு என்று பணம் கொழிக்கும் பயிர் விளையும். (ப,23)

சாலியமங்கலத்துக்கும் வடக்கே பாவநாசம் வரை மேற்கே தோகூரிலிருந்து (கல்லணைக்கும் அருகே உள்ள ஊர்) கிழக்கே நாகூர் வரைக்கும் கெளார் பூமிதான் (களிமண் பூமி). ஒரு மழை பெய்தால் முழங்கால் அளவுக்கு உளை வாங்கும். அந்த மண்ணில் அதிகப்படியாய் விளைவது நெல் மட்டும்தான். சில இடங்களில் பருத்தியும் விளைகிறது உண்டு. (ப.25)

இவ்விதமாக தஞ்சைமண்ணின் மண்வளத்தைத் தரம் பிரித்துப் பாகுபடுத்திப் பேசுவதோடு அந்நிலத்தில் வாழும் மனிதர்களை இவ்விதமாக அடையாளப் படுத்துகிறது நாவல்.

ஆண் பெண் அத்தனை பேரும் வயலில்தான் வேலை செய்வார்கள். உழைப்பு மட்டுமே அங்கு பெரிய முலதனம். அந்தப்பகுதி மக்களே அப்புராணி களாக இருப்பார்கள். ஒளிவு மறைவில்லாத பேச்சு. சூதுவாதுயறியாத மக்கள். சண்டை சச்சரவு களென்றால் நான் ஆச்சு நீயாச்சு என்று போட்டி போடுவார்கள். (ப.23)

தமிழர்களது பண்புகளும் கலாசாரங்களும் எப்படிப்பட்டவை என்பதற்கு இந்தமாதிரிப் படிப்பு வாசனையறியாத பெண்களே முன்னுதாரணமாய் இருக்கிறார்கள். இவர்களை ஆம்பிளைகள் யாரும் கட்டுப்படுத்தியதில்லை. இயற்கை சுபாவத்திலேயே ஒடுங்கி கூசி நாணிக்கோணிக் கொள்கிறதைப் பார்த்து தமிழர்களது கலாசாரங் களும் பண்புகளும் ஏற்பட்டதா அல்லது கலாசாரங்களையும் பண்புகளையும் புரிந்து கொண்டு பெண்கள் இப்படி நடக்கக் கற்றுக்கொண்டார்களா என்பது பெண்களுக்குத் தான் வெளிச்சம். (ப.10)

பெண்வீட்டார் பெண்ணுக்கு வரதட்சணையாக நகை போட்டு அனுப்பும் நடைமுறையுள்ள இக் காலத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டு பருசப் பணம் வைத்து பெண்ணை மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்துவரும் முந்தைய கால நடைமுறையைப் பற்றிய பதிவு இன்றைய தலைமுறை அவசியம் அறிந்துகொள்ள வேண்டியவொன்றாகும்.

நாம்பள்லாம் கண்ணாலம் பண்றப்ப பொண்ணுக்குப் பருசம் வச்சிதான் கட்டிகிட்டு வந்தம். அப்பல்லாம் பருசம்ன்னு நூறோ எரநூறோ வக்கிறது தான் பளக்கம். அதியமாப் போனா ஐநூறைத் தாண்டாது. இப்பதான் ஆயர் ரூவா நோட்டல்லாம் அரக்காசா மாறி ஆயிப் போயிட்டுல்ல. என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறார் வீச்சாத்தேவர். (ப.65)

பெண் கொடுத்து பெண் எடுப்பது என்று தங்கள் குடும்பங்களுக்குள்ளேயே உறவுகளை சுருக்கிக் கொள்ளும் திருமண முறையினால் உண்டாகும் மரபுரீதியிலான சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு தூரபாரமான உறவுகளிலேயே திருமணம் செய்ய வேண்டியதன் அவசியத்தை உணராத மக்களின் அறியாமையை இடித்துரைக்கிறது நாவல்.

ஒரு குடும்பத்துக்குள்ளயே பொண்ணு எடுத்துக் குறதும் குடுத்துக்குறதும் எத்தினி காலத்துக்குத்தான் நடத்திகிட்டிருக்கமுடியும்? புது ஒறவு புது மனுஷாளை நாம்ப எப்பத்தான் தேடிக்கிறது? ஒலகம் ரொம்ப அகண்டதும்மா... அகண்ட இந்த ஒலகத்துல புதிய சேர்க்கைகள் வரவரத்தான் புள்ளைகளோட தலை மாற நல்லபடியா நடக்கும். எல்லாத்தையும் ஒரு கூட்டுக்குள்ளேயே அடக்கி வச்சிகிட்டா ஒலகம் பெருசுங்குறது நமக்குத் தெரியாமலேயே போயிரும். (ப.134)

தொடக்கத்திலிருந்து சாதிய உறவுகளின் அவஸ்தையான நெருக்கத்தை அதன் கட்டுப்பெட்டித் தனத்தை வலிந்துபேசிவரும் நாவல் இறுதிப்பகுதியில் சாதியின் வலிய இறுக்கத்திலிருந்து மெல்ல மெல்ல விடுபட இதுபோன்று தூரத்து உறவிலான திருமணங்கள் வழிகோலும் என்பதைப் பேசுகையில் நாவலின் நோக்கம் தூய்மையானதாகி விடுகிறது.

நாற்பதாண்டுகளுக்கு முன்பான தஞ்சை மண்ணின் செழுமையையும், அம்மக்களின் வாழ்க்கை முறை யையும், அன்பையும், உழைப்பையும், மனநிலை யையும், சடங்கு நம்பிக்கைகளையும், பொழுது போக்கு¬களையும் இன்னுமின்னும் ஏராளமான சங்கதிகளையும் சொல்லும் இந்நாவல் இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்வதற்கு பலப்பல சுவாரஸ்யங்களையும் தன்னுள் ஏந்தி நிற்பதை வாசிப்பவர் உணர முடியும்.

காட்டேரித் தாத்தா, அவரது தம்பி ராசு, டீக்கடை முருகையா பிள்ளை போன்ற வெவ்வேறு விதமான சுவாரஸ்யமான மனிதர்களும், மாடுகள் கன்றுகள், பாட்டுச்சத்தமும் வயல்வெளிக் கரைகளுமாக, இன்றைக்கு காணக்கிடைக்காத கிராமத்தையும் மனிதர் களையும் நினைவுபடுத்தும் இந்நாவல் பரந்துபட்ட உறவுநிலைகளின் அர்த்தப்பாட்டையும் அதன் உன்னதத்தையும் ஆழமாகப் பேசுகிறது. வலிமையான உறவுநிலைகளின் உன்னதப்பண்புகளைப் புரிந்து கொள்ளும் விதமாக அசலான கிராமத்து மனிதர்களின் குணஇயல்புகளை நூல்பிடித்தாற்போல் சொல்லிச் செல்லும் இந்நாவல் 1990 வரையிலாகக் காணப்பட்ட தஞ்சை கிராமிய மக்களின் அப்பழுக்கற்ற வாழ்க்கை நிலையைப் பேசும் நேர்த்தியான ஆவணமாகத் திகழ்கிறது.

பொறுப்பு

ஆசிரியர்: சி.எம்.முத்து

வெளியீடு: சாகித்திய அகாதெமி

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098

விலை :  150/-