goat 400

அஞ்சூர் நாட்டு தண்ணாயிர மூர்த்தி அய்யனார் கோயில் குறித்த நம்பிக்கைகள், தண்ணாயிரமூர்த்தி அய்யனார் கோயில் குறித்த நேர்த்திக்கடன்கள், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், பூச்சட்டி பார்த்தல், நோன்பிருத்தல், தொட்டில் கட்டிப் போடுதல், நேர்த்திக்கடன்கள், நேர்த்திக் கடன்களின் வகைகள், முடியிறக்குதல், குதிரை செய்ய மண் கொடுத்தல், மணி கொடுத்தல், விளைபொருட் காணிக்கை, ஆடுகோழி பலியிடுதல், பெயரிடுதல், காணிக்கை செலுத்துதல், காது குத்துதல், திருமணம் செய்தல், விளக்கேற்றல், வாழைப்பழம் கொடுத்தல், உணவு வழங்குதல் ஆகிய தலைப்புகளில் செய்திகளை விளக்குவதாக அமைகின்றது.

நம்பிக்கைகள்

தெய்வங்களின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையே வழிபாட்டிற்குக் காரணமாக அமைகிறது. இந்நம்பிக்கைகள் அடிப்படையில் வழிபாடு நடத்தப்படுகிறது.

சமுதாயத்தில் மனிதனும் சமயமும் பிரிக்க முடியாத நிலையில் அமைந்துள்ளன. சமயம் இல்லையேல் மனிதன் இல்லை. மனிதன் இல்லையேல் சமயம் இல்லை. மனிதன் செயல்பாடுகள் அனைத்தும் கடவுள் நம்பிக்கையின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. “வழிபாடு, பழக்கவழக்கங்கள், சடங்குகள் முதலியன நம்பிக்கையின் அடிப்படையில் அமைகின்றன என்பர்”1 வழிபாட்டில் காணப்படும் நம்பிக்கைகள் பண்பாட்டு மரபுகளாக அமைந்துள்ளன. இப்பண்பாட்டு விளக்கங்கள் சிறுதெய்வ வழிபாட்டில் கிராம மக்களால் பெரிதும் போற்றப்படுகிறது எனலாம்.

மக்கள் தங்கள் வாழ்வில் ஏற்பட்டபட்டறிவின் காரணமாக இச்செயலைச் செய்தால்தகும், இச்செயலைச் செய்தால் தகாது என உணர்ந்தனர். இது பிற்காலத்தின் நம்பிக்கையாகவும், வழக்கமாகவும் மாறிவிட்டது. ஆயினும் இத்தகைய நம்பிக்கைகள் எப்பொழுதும் தோற்றம் பெற்றன என எவராலும் கூறஇயலாது. இன்றைய நாகரிக மனிதனிடம் காணப்படும் பல நம்பிக்கைகள் நாகரிகமற்ற பழங்குடி மக்களிடமும் காணப்படுகின்றன”2.

இந்த நம்பிக்கையானது சமூக அமைப்பு, சமயம், சகுனங்கள் ஆகியவற்றோடும் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. சமயத்தின் மீது மக்கள் கொண்ட நம்பிக்கைக்கு அவர்கள் கூறும் காரணம் உண்மை யாகவும் இருக்கலாம். ஆயினும் அவர்கட்குத் தெய் வத்தின் மீது உள்ள நம்பிக்கை மட்டும் உண்மையானது ஆகும்.

நமது நாடு தெய்வ நம்பிக்கை மிகுந்த நாடு, சமூகத்தில் பண்பாட்டு மரபினை அறிவிக்க வல்லவை. அச்சமுதாயத்தின் நம்பிக்கைகளே ஆகும். சில நம்பிக் கைகள் மக்களால் உருவாக்கப்பட்டுச் சமுதாயத்தில் புறக்கணிக்கப்படுகின்றன. “பொதுவாக நம்பிக்கைகள் காலங்காலமாக ஒரு தலைமுறையினரிடம் இருந்து மற்றொரு தலைமுறையினருக்குப் பரவி வருகின்றன என்பர்”3.

ஒரு சமுதாயத்தின் நம்பிக்கைகளைக் கொண்டு அச்சமுதாயத்தின் அறிவுத்திறனை அளவிட்டுக் கூற இயலும். சிந்தனை வளர்ச்சி மிக்க சமுதாயத்தில் நம்பிக்கைகள் குறைவாகவும் சிந்தனைத்திறன் குறைவாக உள்ள சமுதாயத்தின் நம்பிக்கைகள் மிகுதியாகவும் உள்ளன. வளர்ச்சி அடைந்த ஒரு மனிதனிடம் பல நம்பிக்கைகளும் சில குறிக்கோள்களும் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

அறிவுநிலைக்கு அப்பாற்பட்ட எண்ணங்களையே நம்பிக்கை என்பர். நாட்டுப்புற நம்பிக்கை நாட்டுப்புற மக்களின் அடிப்படைப் பொதுக்கூறு எனலாம். நம்பிக்கைகள் காலங்காலமாகத் தொடர்ந்து வருவதைக் காணலாம். “நம்பிக்கை பெரும்பாலும் அச்ச உணர்வின் அடிப்படையில் தோன்றியதாகக் காட்சி அளித்தாலும், இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்களை உணராத பொழுதும், மனித வாழ்வில் ஏற்படும் சில நிகழ்ச்சிகளுக்குக் காரணம் கற்பிக்க இயலாத பொழுதும் மனித மனமானது சிலவற்றைப் படைத்துக் காரணம் கற்பித்துக் கொள்கிறது. அவைகளே நம்பிக்கைகளாக உருவாகின்றன எனலாம்”4.

நம்பிக்கைகள் நெடுங்காலமாகவே ஒரு தலைமுறையினரிடம் இருந்து மற்றொரு தலைமுறையினரிடம் பரவித் தொடர்ந்து பின்பற்றப் பெற்று வருகின்றன. “நம்பிக்கைகள் என்பன பெரும்பாலும், மாந்தர்தம் அச்ச உணர்வினை அடிப்படையாகக் கொண்டு தோன்றியன வாகும் என க.காந்தி குறிப்பிடுவார்.”5

தண்ணாயிரமூர்த்தி அய்யனார்கோயில் குறித்த நம்பிக்கைகள்

தண்ணாயிரமூர்த்தி அய்யனார் கோயிலில் பக்தர்கள் வழிபடுவதால் தங்கள் பாவங்கள் நிவர்த்தி அடைவதாக நம்பி வருகின்றனர். இங்குள்ள அய்யனார் மிகவும் சக்தியுடையவராக மக்களிடம் நம்பிக்கை உள்ளது. இக்கோயிலில் திருமணங்கள் நடத்துவதால் மணமக்கள் அனைத்துச் செல்வங்களும் பெற்றுச் சீரும் சிறப்புடனும் வாழ்ந்து வருவதாக நம்புகின்றனர். இங்கு இருக்கும் மரங்களின் மீது துணியில் தொட்டில் கட்டி அதில் கல்லை முடித்து வைத்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

மாவிளக்கு எடுத்தல்

கோயிலைச் சுற்றியுள்ள பொதுமக்கள் தங்களுக்கு உடம்பில் கண் கோளாறு, கை கால் வீக்கம், வயிற்றுவலி, நெஞ்சுவலி போன்ற துன்பங்கள் ஏற்பட்டால் தண்ணாயிர மூர்த்தி அய்யனாரிடம் வேண்டிக்கொள்வர். அவ்வேண்டுதல் படி நோய் சரியாகி விட்டால் மாவிளக்கு எடுப்பதாக வேண்டிக் கொண்டு இதனைச் செய்கின்றனர். அம்மன்கோயில்களில் மட்டும் நடைபெறும் இந்நிகழ்ச்சி தண்ணாயிரமூர்த்தி அய்யனார் கோயிலிலும் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பொங்கல் வைத்தல்

வறுமையில் வாடும் ஏழைக்குடும்பப் பெண்கள் திருமணமாகாமல் வாழும்நிலை தொடர்கிறது. திருமண மாகாத பெண்களின் தாயார் தங்கள் குழந்தைகளுக்குத் திருமணம் நிறைவேற்றுவதன் பொருட்டுப் பொங்கல் வைக்கின்றனர். இது போன்று தங்கள் குடும்பத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருப்பதற்கு அருள் புரியவேண்டும் என்றும், வயலில் நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டும் என்று தண்ணாயிரமூர்த்தி அய்யனார்கோயிலில் பொங்கல் வைக்கின்றனர். பச்சரிசி, வெல்லம், சவ்வரிசி, தேங்காய், முந்திரிப்பருப்பு, நெய் போன்றவற்றைக் கொண்டு பொங்கல் செய்து இறைவனுக்குப் படைத்து வணங்குவர்.

பூக்கட்டிப் பார்த்தல்

மக்கள் தாங்கள் செய்யப்போகும் ஒரு செயல் இறைவனுக்கு உகந்ததா என்பதை அறியப் பூக்கட்டிப் பார்க்கும் வழக்கம் காணப்படுகிறது. ஒரு தாளில் சிகப்புப்பூவும், மற்றொன்றில் வெள்ளைப்பூவும் போட்டு மடித்து இறைவனின் முன் வைத்து ஒரு சிறுவனை விட்டு ஒன்றினை எடுக்கச் செய்வர். அதில் சிகப்பு வந்தால்தான் நினைத்தது நடக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். இச்செயல் தண்ணாயிரமூர்த்தி அய்யனார் கோயிலில் நடைபெறுகிறது.

நோன்பிருத்தல்

நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என விரும்பும் பெண்களும், நல்ல மனைவி கிடைக்க வேண்டும் என விரும்பும் ஆண்களும் நோன்பு இருப்பர். திருமணம் ஆகிப் பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாதவர்கள் நோன்பிருப்பர். பக்கத்திலுள்ள தண்ணீரில் அதி காலையில் குளித்துவிட்டு இறைவனை வழிபடுவர். அவ்வாறு வழிபடுதலில் நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்பகுதிகளில் காணப்படுகிறது.

தொட்டில் கட்டிப்போடுதல்

குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் குழந்தையைப் பெறவேண்டும் எனக்கருதி கோயிலுக்கு அருகில் உள்ள மரத்தில் தண்ணாயிரமூர்த்தியை வேண்டித் தொட்டில் கட்டிப் போடுவர். தொட்டில் என்பது மரத்தால் தொட்டில் போன்று செய்து அதில் குழந்தை போன்ற ஒரு பொம்மையை வைத்துக் கட்டுகின்றனர்.

நேர்த்திக் கடன்கள்

நேர்தல் என்னும் சொல் வேண்டுதல் என்னும் பொருளை உணர்த்தும், கடன் என்பது ஒருவரிடம் திரும்பத் தருவதாக வேண்டிப் பெற்றுக் கொள்வதாகும். திரும்பச் செலுத்தும் வரையில் அப்பொருள் கடன்பெற்ற பொருளாகவே இருக்கும். எனவே நேர்த்திக் கடன்கள் என்பதன் விளக்கம் ‘வேண்டிப் பெற்ற கடன்கள்’ எனப்படும். இறைவனிடம் ஒன்றினை வேண்டிக் கொண்டு, அதைப் பெற்றபின் மறுதலையாக ஒன்றினை இறைவனிடம் செலுத்துதல் என்னும் பொருளில் நேர்த்திக் கடன்கள் அமைந்துள்ளன. வேண்டுதல் அனைத்தும் தெய்வத்தை நோக்கி, “நீ இன்னது செய்தால் நான் இது செய்வேன்”6 என்று கூறுவதாகக் காணப்படுகிறது.

இறைவனிடத்தில் வேண்டிக்கொண்டு செய்யப்படும் இந்நேர்த்திக் கடன்கள் நம்பிக்கையின் அடிப்படையிலேயே செய்யப்படுகின்றன. இந்நேர்த்திக் கடன்களைச் செலுத்தும் மக்கள் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்றும், அவன் நம்மைக் காப்பது உண்மை என்றும், அவன் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றித் தங்கள் மீது கருணை காட்டுகிறான் என்றும் உறுதியாக நம்புகின்றனர். இதனால் இறைவன்மீது. தாங்கள் கொண்டுள்ள அன்பைப் பலவகைகளில் வெளிப்படுத்து கின்றனர். காணிக்கைகள், வழிபாடுகள், நோன்புகள் இப்படிப் பல செயல்களைச் செய்வதன் முலம் இறைவன் மீது தாங்கள் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துகின்றனர். நம் மக்களின் இப்பண்புகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறந்து வளர்ந்து வந்திருக்கின்றன என்பதை அறியமுடிகிறது.

நேர்த்திக் கடன்களாகச் சிறுதெய்வக் கோயில்களுக்கு நெல் முதலிய தானியங்கள் தரப்படுகின்றன. குழந்தைப்பேறு இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டிப் ‘பிள்ளைத் தொட்டில்’ செய்து கோயிலில் தொங்கவிடும் வழக்கமும் பரவலாக உள்ளது. எல்லாச் சிறுதெய்வக் கோயில்களும் தெய்வத்திற்குரிய ஆயுதங் களையும் அதாவது வேல், வாள், தடி, கட்டாரி, அரிவாள், சாட்டை, பதுகை, மணி, திருநீற்றுக் கொப்பரை போன்றவற்றை நேர்த்திக்கடனாகச் செய்து கொடுக்கின்றனர். தண்ணாயிரமூர்த்தி அய்யனார் கோயிலுக்கும் நேர்த்திக் கடன்களாக அரிவாள்,மணி, சாட்டை போன்றவற்றை இங்குள்ள மக்கள் செலுத்துகின்றனர்.

நேர்த்திக் கடன் வகைகள்

பொங்கல் வைத்தல், கோயிலுக்கு மணி கொடுத்தல், குதிரை எடுப்புக்கு மண் கொடுத்தல், தானியங்கள் கொடுத்தல், விளக்கேற்றல் போன்றவை நேர்த்திக் கடன்களின் வகையில் அடங்கும். குழந்தை பிறக்க, நோய் நீங்க, குடும்ப விருத்திக்காக, ஊமைக் குழந்தை பேச, கல்விச் செல்வம் பெற எனத் தங்கள் நோக்கங்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காக நேர்ந்து கொள்கின்றனர்.

முடியிறக்குதல்

முடியிறக்குதலை மக்கள் ‘மொட்டை போடுதல்’ எனவும் கூறுவர். தங்களுடைய ஆணவத்தையும் அகங்காரத்தையும், இராசபோகத்தையும் இறைவன் முன்னால் இறக்கி வைப்பதாக நினைத்துக்கொண்டே மொட்டை போடுகிறார்கள். சிறுவர்களும், பெரியவர் களும் பெண்களும் வேண்டுதலின் பெயரில் மொட்டை போடுகின்றனர்.

குதிரை செய்ய மண் கொடுத்தல்

தண்ணாயிர மூர்த்தி அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழாவின் போது குதிரை செய்வதற்கான மண்ணினை நேர்த்திக்கடனாகக் கொடுக்கின்றனர். அவர்கள் கொடுக்கின்ற மண்ணின் மூலம் குதிரைகள் செய்யப்பட்டு விழா நடத்தப்படுகிறது. இது இக் கோயிலில் முக்கிய நேர்த்திக் கடனாக உள்ளது.

மணி கொடுத்தல்

மக்கள் தமக்கு நல்லது நடக்க வேண்டும் என்றும் அவ்வாறு நல்லது நடந்தால் கோயிலில் மணியைக் காணிக்கையாகச் செலுத்துவதாக வேண்டிக்கொண்டு செய்கின்றனர். மணியில் தங்கள் பெயரைப் பொறித்து கோயிலின் முன்பாகக் கட்டுகின்றனர்.

விளைபொருட் காணிக்கை

கோயிலைச் சுற்றியுள்ள பகுதி விவசாயத் தொழிலை முதன்மையாகக் கொண்டதால் கோயிலுக்கு அவரவர் சொந்த நிலத்தில் விளைந்த பொருட்களான நெல், கேழ்வரகு, மிளகாய், பருத்தி, புளி, சோளம், கம்பு போன்றவற்றை அளிக்கின்றனர்.

தங்கள் வயலில் விளையும் விவசாயப் பொருட்கள் உறுதி மிக்கதாகவும், நல்ல மகசூல் கிடைக்கக் கூடிய தாகவும், சந்தையில் நல்ல விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் பக்தர்கள் காணிக்கையாக இப்பொருள்களை அளிக்கின்றனர்.

ஆடுகோழி பலியிடுதல்

தண்ணாயிரமூர்த்தி அய்யனார் கோயிலில் பலியிடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மக்கள் தங்களின் வேண்டுதலின் பெயரால் உயிரினங்களைப் பலியிடுகின்றனர். தங்கள் உறவினர்களுடன் கோயிலுக்கு வந்து ஆடு மற்றும் கோழி இவைகளை பலியிட்டுச் சமைத்து உண்கின்றனர். இது திருவிழா காலங்களிலும், திருவிழா அல்லாத காலங்களிலும் நடைபெறுகிறது. மக்கள் அய்யனாரிடம் தனக்கு நல்ல காரியம் நடக்க வேண்டும் என்றும், உடல்நிலை சரியாக வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டு அதன் நன்றிக்கடனாக ஆடு கோழிகளைப் பலியிடுகின்றனர். பின்னர் அதனைச் சமைத்து இறைவனுக்குப் படைத்துவிட்டு கோயிலுக்கு வரும் எல்லோருக்கும் உணவளிக்கின்றனர்.8

பெயரிடுதல்

தண்ணாயிரமூர்த்தி அய்யனாரைத் தம் குலதெய்வமாக வழிபடும் மக்களும் இப்பகுதியில் வாழும் மக்களும் சாமியின் பெயரைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுகின்றனர். ஏனாதி கிராமத்திலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் தங்களுக்குப் பிறக்கின்ற ஆண் குழந்தைகளுக்குச் சாமியின் பெயரைச் சூட்டுகின்றனர். அவ்வாறு தண்ணாயிரமூர்த்தியின் பெயரைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுவதால் அவர்கள் வாழ்வில் எல்லா நலன்களையும் பெறுவார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பெயர் சூட்டுகின்றனர்.9

காணிக்கை செலுத்துதல்

கோயில் வளாச்சிக்காக உண்டியலில் பணத்தைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். பணத்திற்குப் பதிலாகக் கோயிலுக்கு வேண்டிய பிற பொருள்களையும் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். நகை, தானியங்கள், கோயில் கட்டுமானப் பொருள்கள் போன்றவற்றையும் கோயிலில் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். நிர்வாகிகள் இக்காணிக்கைப் பொருள்கள் எல்லாம் கோயிலின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துகின்றனர்.

காது குத்துதல்

காது குத்துதல் இந்துக்களுக்கு மட்டுமே உரித்தான சடங்கு முறைகளில் ஒன்றாகக் கொண்டுள்ளது. காது குத்துதலை ஒரு நேர்த்திக் கடனாகத் தண்ணாயிர மூர்த்தி அய்யனார் கோயிலில் செய்கின்றனர். ஆண்குழந்தை, பெண் குழந்தை என்ற வேறுபாடின்றி இருபாலருக்குமே இந்நேர்த்திக் கடனை இக்கோயிலில் நிறைவேற்று வதைக் காண முடிந்தது. குழந்தை பிறந்து ஆறு மாதத்திலிருந்து ஐந்து வயது வரை இங்குக் காது குத்துகின்றனர்.10

திருமணம் செய்தல்

திருமணம் ஆகாதவர்கள் தண்ணாயிர மூர்த்தி அய்யனாரிடம் வேண்டிக் கொள்கின்றனர். பின்னர் அவர்களுக்குத் திருமணம் முடிவாகி நிச்சயிக்கப் பட்டதும் தண்ணாயிரமூர்த்தி அய்யனார் கோயிலுள்ள திருமண மண்டபத்தில் திருமணம் செய்து கொள் கின்றனர்’. சாமியின் முன்னால் திருமணம் செய்வதால் வாழ்க்கை நல்ல முறையில் அமையும் என நினைத்துப் பல பொதுமக்கள் இக்கோயிலில் திருமணம் செய்து கொள்கின்றனர். ஏனாதி கிராமத்திலும் அதனைச் சுற்றியுள்ள கிராமத்திலும் உள்ள மக்கள் பெரும்பாலும் இக்கோயிலிலே தங்கள் திருமண நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.11

விளக்கேற்றல்

தெய்வத்தின் முன்னிலையில் இரவு வேளைகளில் எண்ணெய் விளக்குகளை ஏற்றுவதைக் ‘காடை விளக்கு ஏற்றுதல்’என்பர். ஒருவர் ஒரு வாரமோ, ஒரு மாதமோ, ஒரு ஆண்டோ தம் செலவிலே எண்ணெய் இட்டு விளக்கேற்றுவதாக வேண்டுவதுண்டு. இங்குப் பெண்கள் குழந்தை வரம் வேண்டியும் விளக்கேற்றுகின்றனர்.12

வாழைப்பழம் கொடுத்தல்

கோயில் திருவிழாவின் போது வாழைப்பழம் சூறைக் கொடுக்கப்படுகிறது. மக்கள் தங்களின் வேண்டுதலின் பெயரால் தண்ணாயிரமூர்த்தி அய்யனார் கோயிலில் நிறைய வாழைப்பழங்களைக் கொண்டு வந்து பக்தர்கள் முன்னால் சூறை கொடுப்பார்கள். பொது மக்கள் அதனைச் சாமிபழம் என்று எண்ணி எடுத்து சாப்பிடுவார்கள். இது ஒவ்வொரு திருவிழாவின் போது கொடுக்கப்படுகிறது.13

உணவு வழங்குதல்

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு வழங்குவர். இதனைச் ‘சோறு வழங்குதல்’, Ôஅன்னதானம் செய்தல்’ என்ற பெயர்களால் அழைக்கின்றனர். நோய் நொடிகளிலிருந்து இறைவனால் காப்பாற்றப்பட்ட பக்தர்கள் தண்ணாயிரமூர்த்தி தொண்டர்களுக்குச் சோறு வழங்குதல் உண்டு. அரிசியினைப் பொங்கிச் சாம்பார், இரசம், கூட்டு, அப்பளம், சுண்டல், மோர், பாயாசம் போன்றவற்றைத் தயார் செய்து அங்கு வருகின்றவர் களுக்கும், துறவிகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் இலையிட்டு உணவு வழங்கும் பழக்கம் காணப்படுகிறது. இது திருவிழாவின் போது மட்டும் நடைபெறுகிறது.14

அடிக்குறிப்புகள்

1.அ.இராமநாதன், நாட்டுப்புறப்பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல், ப.241

2.க.காந்தி, தமிழர் பழக்கவழக்கங்களும்,     நம்பிக்கைகளும், ப.105

3.மேலது, ப.105.

4.சு.சக்திவேல், நாட்டுப்புறவியல் ஓர் ஆய்வு, ப.153

5.அ.முத்துச்சாமி, சங்க இலக்கியத்தில் ஓர் ஆய்வு,     ப.153

6.அ.இராமநாதன், நாட்டுப்புறப்பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல், ப.17

7.அ.முத்துக்கருப்பணன், கே.பெத்தானேந்தல்,      25.07.2014

8.அ.காளிமுத்து, கே.பெத்தானேந்தல், 25.07.2014

9.வீரணன், மணல்மேடுஈ 26.07.2014

10.அன்னாசி, கே.பெத்தானேந்தல், 26.07.2014

11.சிவாசி, கே.பெத்தானேந்தல், 28.07.2014

12.நாச்சம்மை, கே.பெத்தானேந்தல், 28.07.2014

13.சுந்தரராசன், கே.பெத்தானேந்தல், 29.07.2014

14.திரு.பெரியகருப்பணன், மணல்மேடு, 2.08.2014