மார்ச் 2025 இதழின் தொடர்சி:

மலைநாடு என்று அழைக்கப்பட்ட கேரளம் அதற்கேற்றாற் போன்று காடுகள், சோலைகள் என்பனவற்றை மிகுதியாகக் கொண்டிருந்தது. இவற்றைக் காவு என்ற பெயரில் அழைத்துள்ளனர். தாம் வழிபடும் கடவுளர்க்கு இக் காவுகளை இருப்பிடமாக்கியதுடன் அக்கடவுளர்களின் பெயராலேயே சர்ப்பக்காவு, அய்யப்பன்காவு, பகவதிகாவு, முண்டையன்காவு என்றழைத்துள்ளார்கள். காவுகளைச் சுற்றி வாழும் மக்களாலேயே காவுகள் நிர்வகிக்கப்பட்டு வந்தன.இதற்கேற்ப அய்யப்பன் பெயரால் அமைந்த காவும் அப்பகுதி மக்களாலேயே நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது.1950ஆவது ஆண்டுவரை இம்முறையே இருந்துள்ளது. இருப்பினும் அப்பகுதியை ஆள்வோர் அதன் புரவலர்களாகவும் பாதுகாவலர்களாகவும் விளங்கியுள்ளனர். கேரளம் முழுமைக்குமான கடவுளாக அப்போது அவர் இல்லாமையால் கேரளத்தின் பண்டைய இடைக்காலச் சான்றுகள் எவையும் அவரைக் குறித்து இல்லை.

sabarimala 500சமஸ்கிருத நூல்களில் ஐயப்பன் குறித்த பதிவு 19 ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த பூதநாத உபாக்கியானம் (Bhutanathaupakhyanam) என்ற நூலில்தான் முதல் முறையாகக் காணப்படுவதாக ராதிகா சேகர் என்ற சமய ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்து புராண மரபுகள் போன்று ஐயப்ப வழிபாட்டு மரபு வட இந்தியாவில் காணப்படவில்லை என்பது அவரது கருத்தாக உள்ளது. கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு என்ற மூன்று மாநிலங்களுக்குள்ளேயே ஐயப்ப வழிபாடு நிலைபெற்றுள்ளது. எம்.என். சீனிவாஸ் என்ற சமூகவியலாளர் ஐயப்பன் தென் இந்தியத் தெய்வம் என்கிறார். மேலும் ஐயப்ப வழிபாடானது கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் ஆகிய மூன்று மாநிலங்களில் காணப்படவில்லை என்கிறார். அத்துடன் குடகுப் பகுதி, மங்களூருக்குத் தெற்கிலுள்ள மேற்குக் கடற்கரைப் பகுதி ஆகியவற்றுடன் ஐயப்ப வழிபாடு நின்றுவிடுவதையும் சுட்டிக்காட்டுகிறார்.

ஐயப்பன் குறித்த தொன்மையான பதிவாக பத்து அல்லது பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருவல்லா செப்பேடுகள் அமைகின்றன.ஐயப்பன் குறித்து பரவலாக அறிமுகமான பழமரபுக்கதை கந்தபுராணத்தில் இடம்பெறும் தர்மசாஸ்தாதான் ஐயப்பன் என்பதாகும். ஆனால் தொல்லியல் அறிஞர் கோபிநாத் ராவ் இக்கருத்தை ஏற்க மறுக்கிறார். சாஸ்தா (சாத்தன்) என்ற பெயர் தமிழ்நாட்டில் பரவலாக அறிமுகமான ஆட்பெயராக இருந்துள்ளது. பழைய இலக்கண நூல்களில் இப்பெயர் எடுத்துக்காட்டாகப் பயன்பட்டுள்ளது.

ஹரிகரபுத்திரன்

சாஸ்தாவைக் குறிக்கும் பெயர்களில் ஒன்று ஹரிகரபுத்திரன் என்பதாகும். விஷ்ணுபுராணம் என்ற சமஸ்கிருத புராண நூலில் சாஸ்தாவின் பிறப்பு குறித்த கதை இடம் பெற்றுள்ளது. இக்கதையின் சுருக்கம் வருமாறு:

தேவர்களும் அசுரர்களும் இணைந்து செயல்பட்டு பாற்கடலைக் கடைந்து அமிழ்தம்(அமுதம்) எடுத்தார்கள். பின்னர் அதைப் பகிர்ந்து கொள்வதில் இவர்களுக்கிடையில் பிணக்கு ஏற்பட்டது. இதைப் போக்கும் வழிமுறையாக விஷ்ணு அழகான பெண்ணாக உருமாறி அமிர்தத்தைப் பறிமாறினார். இதுவே அவரது மோகினி அவதாரமாகும். மோகினியின் அழகில் மயங்கிய ஹரன்(சிவன்) மோகினியுடன் (ஹரியுடன்) உறவாடினார். இந்த உறவில் பிறந்த குழந்தை இருவரின் பெயரையும் இணைத்துக் கொண்டு ஹரிஹர புத்திரன் என்ற பெயரைப் பெற்றது. ஸ்ரீ பாகவதம், அமுசுமதாகமா(Amsumadagama) சுப்ரபகத்தாகமா (Suprabhedagama) என்ற சமஸ்கிருத நூல்களில் இச்செய்தி இடம் பெற்றுள்ளது. கோபிநாத் ராவ் இதை ஏற்க மறுக்கிறார். தமிழ்நாட்டில் நிலவிய புத்தவழிபாட்டை உள்வாங்கிய ஒன்றாக ஹரிஹர புத்திரன் உருவைக் குறிப்பிடுகிறார்.

வி.நாராயண பிள்ளை என்பவர் கோபிநாத்ராவின் இக்கருத்தை ஏற்க மறுக்கிறார். ஆரியர், ஆரியர் அல்லாத பண்பாடுகளின் இணைப்பே சாஸ்தா வழிபாடு என்கிறார். திராவிடக்கூறுகளைக் கொண்ட ஒரு வழிபாடானது நம் நாட்டில் நிகழ்ந்த இன - பண்பாட்டுக் கலப்பில் சாஸ்தா வழிபாடாக உருவாகியுள்ளது என்பது இவரது கருத்தாக உள்ளது.

மணிகண்டன்

யட்ச வழிபாட்டில் இருந்து உருவானதாக சாஸ்தா வழிபாட்டைக் கூறுவதுண்டு. ஐயப்பன் படிமத்தின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணியின் அடிப்படையில் மணிகண்டன் என்றழைப்பர்.

சிலர் காண்டீக யட்சா என்பதுண்டு. காண்டீக யட்சா காளைத் தலையுடன் காட்சியளிப்பார். ஆனால், ஐயப்பனுக்குக் காளைத் தலை கிடையாது.மேலும் இக் கடவுளை நிறுவும்போது இவருடன் ஸ்ரீபிரபா என்ற இவரது மனைவி சத்யாகா என்ற மகன் ஆகிய இருவரது படிமங்களுடனாவது அல்லது ஸ்ரீபூரணி, ஸ்ரீபுஷ்கலா என்ற இருமனைவியரின் படிமங்களுடனாவது நிறுவுவர்.ஆனால், பிரம்மச்சாரி அல்லது பாலயோகியான ஐயப்பசாமிக்கு மனைவியர் கிடையாது.

ஆதிவாசிகளும் அய்யப்பனும்:

அய்யப்ப வழிபாட்டில் முக்கிய இடம்பெறும் சபரிமலையும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளும் காடுகள் என்பது பரவலாக அறியப்பட்ட உண்மைதான். இக்காட்டுப்பகுதியில் வாழும் இனக்குழுக்களில் (Tribe: ஆதிவாசி) ஒன்று மலைஅரையர். இவர்களின் குலதெய்வமாக அய்யப்பன் விளங்கியமைக்கான சில வழக்காறுகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அத்துடன் தமிழ்நாட்டின் நாட்டார் கடவுளர்களான அய்யனார், கருப்பசாமி என்ற இருகடவுளர்களுக்கும் அய்யப்பனுக்கும் இடையிலான உறவு குறித்தும் இந் நூல் குறிப்பிடுகிறது. அவற்றின் சுருக்கம் வருமாறு:

தமிழ்நாட்டுக் கிராமங்களின் காவல் தெய்வமாக விளங்கிவருபவர் அய்யனார். இவரும் அய்யப்பனும் ஒரே கடவுளர் என்பது ராதிகா சேகர் என்ற ஆய்வாளரின் கருத்தாகும். அய்யனாரின் உதவியாளராகவும் படைத்தளபதியாகவும் விளங்கும் தெய்வம் கருப்பசாமி. இவர் வெள்ளம், தீய சக்திகள் என்பனவற்றில் இருந்து மக்களைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. அய்யனாரும் கருப்பசாமியும் குதிரை மீது அமர்ந்த நிலையிலே உருவாக்கப்பட்டிருப்பார்கள்.

சபரிமலைப் பகுதியில் அச்சன் கோவில் செல்லும் வழியில் கருப்பசாமி கோயில் உள்ளது.சபரிமலையின் சிறப்புக்கூறான பதினெட்டாம் படி அருகிலும் கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது.

சபரிமலையைச் சுற்றிலும் வாழும் மலையரையர்கள் என்ற ஆதிவாசிகள் அய்யப்பன் மீது உரிமை பாராட்டுபவர்கள்.அய்யப்பன் கோயில் பூசாரிகளாக அவர்களது முன்னோர்கள் (மலையரையர்கள்) இருந்துள்ளனர். தம் பாதுகாவலராக இவர்கள் அய்யப்பனைக் கொண்டிருந்தார்கள். இவர்களுக்கும் அய்யப்பனுக்குமான நெருங்கிய உறவு குறித்து போதகர் ரிச்சர்ட்ஸ் (Rev, W.j. Richards) என்ற மேற்கத்தியர் ஒரு பதிவை எழுதியுள்ளார். அப்பதிவை சாமுவேல் மேட்டியர் என்ற பிரிட்டிஷ் போதகர் (Rev.Samuel Mateer) 1883இல் தாம் எழுதி வெளியிட்ட ஆங்கில நூலில் (Native Life in Travancore) அப்படியே மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார். (1883: 75-77) அதன் சுருக்கம் வருமாறு:

தலானனி என்பவர் ஒரு மலையரையர். இவரது ஊர் எருமைப் பறா என்ற மலையரையர் கிராமமாகும். வேட்டை தெய்வமான அய்யப்பனின் பூசாரியாகவும் வாக்குச் சொல்பவராகவும் இருந்தார். அய்யப்பனின் தலைமைப் பீடக் கோயில் திருவிதாங்கூர் மலைப்பகுதியில் சபரிமலையில் இருந்தது. அய்யப்பனின் துணையால் அவர் பெற்றிருந்த ஆற்றல்களால் அவர் புகழ் பெற்றவராக விளங்கினார். மலையரையர்களின் அண்டைப் பகுதியில் வாழ்ந்த சோகன்கள் என்போர் அவர்மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியால் அவரைக் கொலை செய்தனர். கொலையை மறைக்க குழிதோண்டி அவரது உடலைக் காட்டில் புதைத்தனர்.

அய்யப்பனது வேட்டை நாய்களான புலிகள் தம் தலைவரின் நண்பரது உடலை. புதைத்த குழியைத் தோண்டி அவரது உடலை வெளியிலெடுத்துப் போட்டன. இதன் பின்னர் கொலை வெளிப்பட்டது. சோகன்களின் குடியிருப்பில் அம்மை நோயும் பிளேக்கும் பரவின.

இப்பதிவில் இடம் பெற்றுள்ள மீவியற்கைச் செய்திகள் ஒருபுறமிருக்க மலையரையர் என்ற இனக்குழுவிற்கும் ஐயப்பன் வழிபாட்டிற்கும் இடையிலான உறவு வெளிப்படுகிறது.வழக்காறுகள் ஏன் மாறின? என்ன நோக்கத்திற்காக மாற்றம் நிகழந்தது என்ற வினாவின் தேவை உணரப்படுகிறது.

பௌத்தமும் ஐயப்பனும்

சாத்தன் என்பது பௌத்தத்துடன் தொடர்புடையது. அமரசிம்ஹா என்பவர் எழுதிய அமரகோஷா என்ற நான்காம் நூற்றாண்டு நூலில் 'முனீந்திர ஸ்ரீகானா' என்ற தலைப்பில் பின் வருமாறு புத்தரைத் துதித்துள்ளார்.

சாஸ்தாமுனி;

சாக்கிய முனிஸ்துயா;

சாக்கிய சிம்ஹா;

சர்வர்த்த சித்ஹா;

சவுதோதனி சாஸ்தா

பழமையான பௌத்த நூல்களில் சாஸ்தா என்ற சொல் ஆச்சாரியாரைக் (அறிவுரை கூறுவோர்) குறிக்கும் சொல்லாகயிருந்துள்ளது. தமிழ் இலக்கியங்களில் இடம்பெறும் அய்யனார் என்ற சொல் அய்யப்பன் என்ற சொல்லுடன் ஒத்துள்ளது.

பிராமணர் குடியேற்றம்

இதிகாச-புராணமரபு சார்ந்த கேரள இந்துக் கோயில்கள் பிராமணர்களின் இடப்பெயர்ச்சி கேரளத்தில் நடைபெற்ற பின்னரே கட்டப்பட்டன.கி.பி எட்டாம் நூற்றாண்டையொட்டியே இது நிகழ்ந்துள்ளது. குறிப்பிடத்தக்க அளவில் பிராமணக் குடியிருப்புகள் இத்துடன் உருவாயின. மலைப்பகுதிகளைவிட வளமான நன்செய் நிலங்களைக் கொண்ட சமவெளிப் பகுதிகளிலேயே பெருமளவில் பிராமணக் குடியிருப்புகள் நிகழ்ந்ததாக வரலாற்றியலர்கள் கூறுகிறார்கள். இக்குடியிருப்புகளுடன் வைதிக வழிமுறை சார்ந்த கோயில்களும் உருவாயின. இரண்டுக்கும் ஊடாக இருந்த இணக்கம் யாவரும் அறிந்ததுதான்.

சபரிமலைக்கோவில்

நன்செய் விளைநிலங்களுக்குப் புறத்தே காட்டுப்பகுதியில்தான் சபரிமலை ஐயப்பன் கோவில் வளாகம் இடம் பெற்றுள்ளது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இது மட்டுமின்றி பல்வேறு ஐயப்பன் கோவில்கள் காவு என்றழைக்கப்பட்ட மரங்கள் அடர்ந்த சோலைகளிலேயே இடம் பெற்றிருந்தன. இதனால் இக்காவுகள் இங்கு நிறுவப்பட்ட ஐயப்பனுடன் இணைக்கப்பட்டும் ஐயப்பன் தான் எழுந்தருளியுள்ள காவுகளுடன் இணைக்கப்பட்டும் ஐயப்பன் காவுகள் என்ற அடையாளத்தைப் பெற்றிருந்தன என்று வரலாற்றியலர் கணேசன் குறிப்பிட்டுள்ளார். நல்ல கட்டிட அமைப்புடன் கூடிய பெரிய கோயில்கள் கேரளக் கிராமங்களி்ல் அரிதாகவே காணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை “சாஸ்தா வழிபாடு புத்த சமயத்தின் எச்சம்” என்ற கட்டுரையின் ஆசிரியர் நாராயண பிள்ளையும் வெளிப்படுத்தியுள்ளார். சுற்றுச் சுவர்கள் மட்டுமே கட்டப்பட்ட திறந்தவெளியில் கூரை கூட இல்லாது மரங்களும் கொடிகளும் வளர்ந்து காவுகள் காட்சியளிக்கும் என்று எழுதியுள்ளார். (சங்க இலக்கியம் குறிப்பிடும் மன்றம் என்ற அமைப்பை இவை நினைவூட்டுகின்றன) புராணமரபில் இருந்து மாறுபட்ட வட்டார மரபைச் சார்ந்த ஒன்றாக அய்யப்பன் வழிபாட்டை இச் செய்திகள் அடையாளப்படுத்துகின்றன.

பௌத்தமும் ஐயப்பன் வழிபாடும்

குதிரை மேல் அமர்ந்து காட்சிதரும் தமிழக நாட்டார் கடவுள் அய்யனாருக்கும், ஐயப்பனுக்கும் இடையிலான தொடர்பு குறித்து ஆராய்வதன் அவசியம் குறித்தும் இந்நூலாசிரியர் விவாதித்துள்ளார்.

"சாத்தன் அல்லது சாத்தனார் என்னும் பெயர் 'சாஸ்தா' என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. சாஸ்தா என்பது புத்தருக்குரிய பெயர்களுள் ஒன்று என்பது அமரகோசம், நாமலிங்கானு சாசனம் முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும்.எனவே, சாஸ்தா என்னும் சொல்லின் திரிபாகிய சாத்தன் என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராக பண்டைக்காலத்தில் வழங்கப்பட்டு வந்தது."

"பிற்காலத்தில் 'சாத்தனார்' 'ஐயனார்' 'அரிஹர புத்திரர்' என்னும் இத்தெய்வத்தைக் கிராம தெய்வமாகச் செய்து, பண்டையப் பெருமையைக் குலைத்துவிட்டனர்" என்று மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ளது இங்கு நினைவு கூரத்தக்கது. தமது ‘பௌத்தமும் தமிழும்’ என்ற நூலில் ‘சாத்தனார் - ஐயனார்' என்ற தலைப்பில் விரிவான முறையில் அவர் எழுதியுள்ள ஆய்வுத் தன்மையுடன் கூடிய பின்இணைப்பில் இச் செய்தியைக் குறிப்பிட்டுள்ளார்.

நீண்டகாலமாகத் தென்இந்தியாவானது வேத மறுப்புச் சமயங்களான சமணம், பௌத்தம் ஆகியவற்றின் செல்வாக்கிற்கு ஆட்பட்டிருந்தது என்ற வரலாற்றுண்மையைக் கூறும் இந்நூலாசிரியர் கேரளத்தின் மாவேலிக்கரை, குன்னத்தூர், அம்பலப்புழை வட்டங்களில் ஏராளமான புத்தர் உருவங்கள் கிடைத்துள்ளதைச் சுட்டிக்காட்டி ஏராளமான புத்தவிஹாரங்கள் இருந்திருக்கும் என்கிறார். திருவிதாங்கூர் மாநிலத்தின் தொல்லியலாளராகப் பணியாற்றிய கோபிநாத்ராவ் குறிப்பிடத்தக்கக் கல்வெட்டுகளை வெளிக் கொணர்ந்தவர். அவரது கருத்துப்படி குறைந்தது 13ஆவது நூற்றாண்டு வரை தென் இந்தியாவில் பௌத்தம் தழைத்து வளர்ச்சியுற்றிருந்தது.

யுவான் சுவாங் (கி.பி. 602-664)என்ற சீன நாட்டுப் பயணி கேரளத்தின் மலக்குட்டம் பகுதியில் பயணித்துள்ளார். அவர் எழுதியுள்ள பயணக்குறிப்பில் பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ள மலக்குட்டம் பகுதியின் பௌத்த விஹார்களைக் குறிப்பிட்டுள்ளார். அவர் இந்தியா வந்த காலம் கி.பி.630ஆகும். இதனால் அவர் இங்கு பயணிக்கும் முன்னரே பௌத்தம் பரவலாக இப்பகுதியில் அறிமுகமாகியிருந்தமை தெரியவருகிறது.

சபரிமலையில் ஐயப்பன் ஆலயத்தைச் சுற்றியுள்ள காட்டுப்பகுதி பூங்காவனம் என்றழைக்கப்படுகிறது. பௌத்தர்களும் சமணர்களும் தம் வழிபாட்டுத் தலத்தைப் பூக்களுடன் தொடர்புபடுத்தி அழைப்பார்கள். பௌத்த சமய மடங்களில், அறிவின் குறியீடாக வேப்பமரத்தை வளர்ப்பார்கள். ஐயப்பன் கோவில்களின் முன்பாக வேப்பமரம் வளர்க்கப்படுகிறது.

இச் செய்திகள் தவிர கே.ஸ்ரீதரமேனன் என்பவர் எழுதிய வரலாற்று நூலில் இருந்து புத்த சமயத்திற்கும் ஐயப்பன் வழிபாட்டிற்கும் இடையே காணப்படும் சில ஒற்றுமைக் கூறுகளை எடுத்துக் காட்டுகிறார். அவை வருமாறு:

  • சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள், யாத்திரை மேற்கொள்ளும் இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே வன்முறை மேற்கொள்ளாமை, புலால் உண்ணாமை ஆகிய விரதங்களை மேற்கொள்வதுடன் உலக இன்பங்களைத் துய்ப்பதில் இருந்து விலகி இருப்பார்கள். இவை புத்தரின் அகிம்சைக் கோட்பாடு, பற்றுகளைத் துறந்து வாழ்தல் என்பனவற்றை நினைவுபடுத்துகின்றன.
  • இவ்விரத காலத்தில் சாதி வேறுபாடு பார்க்கமாட்டார்கள். இதுவும் புத்தரின் அறிவுரைக்கு உட்பட்டதுதான்.
  • புத்தமதத்தின், 'புத்தம் சரணம் கச்சாமி’, ‘தர்மம் சரணம் கச்சாமி’, ‘சங்கம் சரணம் கச்சாமி,’ என்ற மூன்று சரண மந்திரங்களை நினைவூட்டுவதாக ஐயப்பன் கோவிலுக்குப் பயணிக்கும் பக்தர்கள் கூறும் சரண மந்திரங்கள் உள்ளன.
  • பிரபலமான ஐயப்ப சாஸ்தா கோயில்கள் உள்ள சபரிமலை, அச்சன் கோயில், ஆரியங்காவு எனபன காட்டுப் பகுதிகளில்தான் உள்ளன.இது தனித்திருத்தலை விரும்பும் புத்த துறவிகளை நினைவுபடுத்துகின்றன.
  • கூட்டு யாத்திரையானது ஐயப்பனை வழிபடுவோரை ஒன்றிணைத்து புத்தசங்கம் போன்று அமைகிறது.
  • சபரிமலையில் மண்டல காலத்தில் நிகழும் மண்டல பூஜையானது அக்கோவிலில் நிகழும் முக்கிய பூசையாகும். மண்டலம் என்பது பௌத்தத்தின் தாந்திரீகத்தில் வேர் ஊன்றியுள்ள மண்டலம் என்ற கருத்தாக்கத்துடன் நெருக்கமானதாகும். தனுமகரம் என்ற மலையாளமாதம் பௌஷா என்ற வட இந்திய மாதத்திற்கு இணையானதாகும். அசோகன் பௌத்த மதத்தைத் தழுவியபின்னர், முடிதரிக்கும் விழாவைக் கொண்டாடி, பௌத்தர்கள் புனிதமாகக் கருதும் தேவனாம் பிரியா என்ற பட்டத்தைச் சூட்டிக்கொண்டான்.இது நிகழ்ந்த மாதத்தில்தான் மகரவிளக்கு யாத்திரை நிகழ்கிறது.
  • பிராமணிய வழிபாட்டு நெறியைப் பின்பற்றும் சமவெளிப் பகுதியில் உள்ள கோயில்களைப் போலின்றி அனைவரையும் சபரிமலைக் கோயிலில் அனுமதிக்கும் மரபு இருந்துள்ளது.பின்னால் சாதிப் பாகுபாடின்றி பெண்களையும் வேற்று மதத்தினரையும் அனுமதிக்காத போக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டது.

ஐயப்பனும் வாவரும்

  • ஐயப்பன் கோவிலை வழிபடச் செல்பவர்கள் முதலில் எருமேலி என்ற ஊரில் உள்ள பள்ளிவாசலில் இடம் பெற்றுள்ள வாவர் என்ற இஸ்லாமியரின் கல்லறையை வழிபட்ட பின்னரே சபரிமலைக்குச் செல்வர். இது மிகவும் பழைமையான மரபாகும். இங்குக் குறிப்பிடப்படும் வாவர் ஐயப்பனின் நெருக்கமான நண்பராக மக்களால் கருதப்படுகிறார். இது குறித்து மக்களிடையே பல்வேறு கதைவடிவங்கள் வழக்கிலுள்ளன. அவை வருமாறு:

(1) பந்தாளம் பகுதியை ஆண்டுவந்த மன்னன் ஒரு நாள் வேட்டையாடச் சென்றபோது பம்பை ஆற்றின் கரையில் ஒரு கைக்குழந்தை கிடப்பதைக் கண்டான். குழந்தைப் பேறின்றி இருந்த அவன் அக்குழந்தையை எடுத்துச் சென்று மணிகண்டன் என்று பெயரிட்டு வளர்த்தான். பின்னர் மன்னனுக்கு ஒருமகன் பிறந்தான். இருப்பினும் மணிகண்டனைத் தன் மூத்தமகனாகக் கருதி வளர்த்து அவனைத் தன் வாரிசாக்கினான்.

        இது இராணிக்குப் பிடிக்கவில்லை. நோயுற்றவள் போல் நடித்து, அரண்மனை வைத்தியரை வயப்படுத்தி புலிப்பால் மூலமாகவே இதைப் போக்கமுடியும் என்று கூறும்படிச் செய்தாள்.மணிகண்டன் புலிப்பால் கொண்டுவர காட்டிற்குப் பயணமானான். செல்லும் வழியில் வாவர் என்ற கொள்ளைக்காரனைச் சந்தித்தான். ஐயப்பனுடன் போரிட்டுத் தோற்ற அவன் அவரது நண்பனாகவும், நம்பிக்கைக்குரிய படை அதிகாரியாகவும் மாறினான்.

(2)    வாவரும் அவனது ஆட்களும் படகுகளில் வசித்தார்கள். அவ்வழியாக வரும் வணிகர்களிடமும் காயங்குளம் ஆட்சிக்குட்பட்டிருந்த கடற்கரைப் பகுதியில் வாழ்வோரிடமும் கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இவனது செயல்பாடுகள் காயங்குளம், கருநாகப் பள்ளி ஆகிய துறைமுகப் பகுதிகளை மையமாகக் கொண்டிருந்தன. இவ்வாறு கொள்ளையடித்ததில் பெரும்பகுதியை அவனது கூட்டாளிகளுக்கும் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தமையால் அவனை ஆதரிப்பவர்கள் பெருவாரியாக இருந்தனர்.

(3)    தனது பதின்ம வயதுப் பருவத்தில் சபரிக் குன்றுப் பகுதியில் உதயணன் என்ற கொள்ளையனை அழிக்கும் பணி ஐயப்பனுக்கு வழங்கப்பட்டது. இதை நிறைவேற்றும் வகையில் தனக்கு ஆதரவாளர்களைத் திரட்டி சூபி மார்க்கவாதியாகவும், மருத்துவராகவும் வாழ்ந்து கொண்டிருந்த வாவரிடம் ஒப்படைத்ததுடன் அவரைப் படை அதிகாரியாகவும் ஆக்கினார் ஐயப்பன்.அத்துடன் வாவருக்காகவும் அவரது படைவீரர்களுக்காகவும் எருமேலியில் பள்ளிவாசல் ஒன்றைக் கட்ட ஏற்பாடு செய்தார்.

வாவரின் பரம்பரையினர் மத்திய திருவாங்கூர் மாவட்டங்களில் வாழ்கின்றனர். இவர்களுள் ஒருவரான மல்லப்பள்ளி வட்டம் பதனம்திட்டா என்ற ஊரில் வாழும் ஹாஜி ஏ.ஆர்.வாவறு முசாலியார், என்பவர் நேர்காணல் ஒன்றில் கூறிய செய்திகளின் சுருக்கம் வருமாறு:

நான் வாவரின் பதிமூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவன். சிலர் அவரைக் கொடுமையான போர்வீரராகவும் இதைவிட மோசமாக ஒரு கடற்கொள்ளைக்காரராகவும் சித்தரிப்பர். ஐயப்பனால் தோற்கடிக்கப்பட்ட பிறகு தமது கடந்த காலப் பாவச் செயல்களுக்கு வருந்தி ஐயப்பனின் தோழராகவும் பாதுகாவலராகவும் தம்மை மாற்றிக் கொண்டார். இது என்னுடைய முன்னோர்கள் கூறிய செய்தியாகும். ஆனால் நான் இதை நம்பவில்லை. இந்துக்கள் வாவரை சாமி என்று அழைக்கிறார்கள். அவர் ஒரு புனிதர், கேரளத்தில் அழைப்பது போல சையித் அல்லது தங்கல். வாவரும் ஐயப்பனும் நெருங்கிய நண்பர்கள். ஒரே கருத்துக்களைப் பின்பற்றியவர்கள்.இருவரும் யோகம், தியானம் என்ற இரண்டையும் மேற்கொண்டவர்கள். இருவரும் உயரிய யோகிகள்.யோகத்தின் வாயிலாக இருவரும் அளப்பரிய ஆற்றல்களைக் கொண்டிருந்தனர். இதைப் பொதுமக்கள் அற்புதச் செயல்கள் என்றார்கள்.அமைதி குலைந்த பகுதிகளில் அமைதியை நிலை நாட்டுவதே ஐயப்பன், வாவர் என்ற இருவரின் குறிக்கோளாக இருந்தது. அவர்கள் மேற்கொண்ட போர் என்பது பெரும்பாலும் ஆன்மீகப் போராகவேயிருந்தது.

எருமலையைச் சேர்ந்த அப்துல்கரிம் என்பவரும் வாவரின் மரபைச் சேர்ந்தவராக உரிமை கொண்டாடுபவர். இவர் வாவரைக் குறித்து சில கருத்துக்களைக் கூறியுள்ளார். கடவுளின் நண்பன் என்ற பொருள்தரும் வாலி என்று இவர் வாவரைக் குறிப்பிடுகிறார். ஒரு வகையில் சூபி மரபைச் சார்ந்த புனிதர். அவர் வழிபாடு நடத்திக் கொண்டிருந்த போது இராணிக்காகப் புலிப்பால் தேடிவந்த ஐயப்பனைச் சந்தித்தார். இதன் பின்னர் இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். இச்செய்தியை அடுத்து ஐயப்பனுக்கும் வாவருக்கும் இடையிலான உறவுகுறித்த ஐயப்பனும் வாவரும் ஒரு பழைய பாட்டு என்ற நூலில் இடம் பெற்றுள்ள நாட்டார் பாடலின் சில பகுதிகளைக் குறிப்பிட்டுள்ளார். பூதம் ஒன்றிடம் இருந்து ஐயப்பனை வாவர் காப்பாற்றியதாகவும் தன்னைப் போன்றே வாவரைக் கருதும்படி ஐயப்பன் தன் தந்தையிடம் கூறியதாகவும் ஒரு வாய்மொழிச் செய்தி உள்ளதாம்.

மற்றொரு பழமரபுக் கதைப்படி வாவர் இஸ்லாமிய சமயத்தின் புனிதர். அவரது பெயர் ஹசரத் வாவர் பாபா என்பதாகும். இஸ்லாமிய சமயத்தைப் போதிக்க அவர் அரேபியாவிலிருந்து வந்துள்ளார். இன்னொரு பழமரபுக்கதையின்படி அவர் படாளம் மீது படையெடுத்து வந்தவர்.அவரை எதிர்கொள்ள ஐயப்பன் அனுப்பப்பட்டார். அவர் அரேபியாவில் இருந்து வந்தவர் அல்லர். தமிழ்நாட்டில் இருந்து வந்தவர். இவ்வாறு வாவர் குறித்து ஐயப்பன் வரலாற்றிலும் நாட்டார் வழக்காறுகளிலும் பல்வேறு வடிவங்களில் இடம் பெற்றுள்ள இச்செய்திகள் வெகுமக்கள் கற்பனையையும் ஐயப்பன் வழிபாட்டின் பன்முகத் தன்மையையும் வெளிப்படுத்துவதாக உள்ளன.

வாய்மொழி வழக்காறுகள் மட்டுமின்றி ஆவணச் சான்றும் வாவரைக் குறித்து உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் வாவருடைய குடும்பத்தினருக்கென்று சில உரிமைகள் உண்டு.இவை பந்தாளம் மன்னரால் வழங்கப்பட்டவை. இது குறித்து கேரள உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் மலையாளம் ஆண்டு 884 (தோராயமாக கி.பி.1708) காலத்திய ஆவணங்களை நீதிமன்றத்தில் வாவர் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் முன்வைத்தார். நீதிமன்றம் வாவர் குடும்பத்தின் உரிமையை ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தது.இப்போதும் சபரிமலை யாத்திரிகர்கள் எருமேலி வாவர் பள்ளிவாசலில் தேங்காய் காணிக்கையைச் செலுத்திவிட்டே சபரிமலைக்குச் செல்கின்றனர்

கிறித்தவ உறவு

அருத்தங்கல் தேவாலயம் என்ற கத்தோலிக்கத் தேவாலயம் கரிஞ்சாப்பள்ளி என்ற ஊருக்கு அருகில் உள்ளது. இதை வாவரின் ஊராகக் கூறுவதுண்டு. பல்வேறு சமயங்களைச் சார்ந்த சபரிமலை யாத்திரிகர்கள் தம் பயணத்தின் முடிவாக இத் தேவாலயத்தை வணங்குவதுடன் தம் மாலைகளை இத் தேவாலயத்திற்கு வழங்குவார்கள். இத் தேவாலயத்தின் குளத்தில் அல்லது அருகிலுள்ள குளத்தில் நீராடுவர். அங்கு பணியாற்றிய வெள்ளை நிற ஐரோப்பியக் குருவை நினைவுகூரும் வகையில்’வெளுத்தன் சுவாமியே சரணம் ஐயப்பா’) ‘அருத்தங்கல் பள்ளியே சரணம் ஐயப்பா’என்று முழக்கமிடுவர்( பள்ளி: மலையாள மொழியில் கிறித்தவத் தேவாலயத்தைக் குறிக்கும் சொல்).

இக்கத்தோலிக்கத் தேவாலயம் போர்ச்சுக்கீசிய மறைப்பணியாளர்களால் 1581இல் கட்டப்பட்டதாகும். பெரையர் பெனிகோ என்ற ஐரோப்பியர் இங்கு அருட்தந்தையாக(குரு) பணியாற்றி உள்ளார். இவரது வெள்ளை நிறம் காரணமாக ‘அருத்தங்கல் வெளுத்தச்சன்’ (அச்சன்: தந்தை என்ற பொருள்தரும் மலையாள மொழிச் சொல்) என்று அழைத்துள்ளனர்.

1902 இல் நெருப்பினால் சபரிமலை ஐயப்பன் கோயில் சேதமுற்றது. திருவிதாங்கூர் மன்னர் இதன் மறுசீரமைப்பிற்கு ஆணையிட்டார். மாவேலிக்கரை ஊரைச் சேர்ந்த கொச்சு தோமான் என்ற கிறித்தவர் இதற்கான ஒப்பந்தத்தைச் செய்ததுடன் நிதிநல்கையும் செய்தார்.

* * *

இதுவரை கூறிய செய்திகள் ஐயப்பவழிபாட்டில் பௌத்த மற்றும் பழங்குடிச் சமயங்களின் எச்சங்கள் உள்ளதைஉணர்த்துகின்றன. அத்துடன் பரந்துபட்ட சமயத்தளத்தில் இயங்கியதையும் உணர்த்துகின்றன. ஆனால், இன்று இந்நிலையில் மாறுதல்கள் நிகழ்ந்து வைதீக சமயநெறியின் தாக்கத்திற்கு ஆட்பட்டுள்ளது. இது குறித்து அடுத்த இதழில் காண்போம்.

Jitheesh P.M (2o22) Sabarimala : Social History Of a Temple in Kerala.
left Word Books. New Delhi 110008.

(தொடரும்).

- ஆ.சிவசுப்பிரமணியன்