பத்திரிகை ஆசிரியர், நாடக ஆசிரியர், கவிஞர் என இலக்கியப் பயணத்தைத் தொடங்கிய கவிஞர் கே. சி.எஸ்.அருணாசலம், ஒரு கட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இலக்கியப் பேராசான் ஜீவா தமிழ்நாடு கலை இலக்கியப் பெரும் மன்றத்தைத் தொடங்கியபோது அதில் இணைந்த கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம், அந்த அமைப்பின் மாநில பொதுச் செயலாளராகவும்; இலக்கியப் பேராசான் ஜீவா உருவாக்கிய 'தாமரை' மாத இதழின் ஆசிரியராகவும் வளர்ந்தார். அத்துடன் 'சோவியத் நாடு' பத்திரிகையிலும் பணியாற்றினார்.
ஏராளமான கவிதைகளை எழுதிக் குவித்த கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம், தமிழகத்தில் நடந்த புகழ்மிகு கவியரங்கங்களில் கலந்து கொண்டு தன்னுடைய கொள்கை முழக்கத்தைக் கவிஞர் கே.சிஎஸ். அருணாசலம் வலுவாகப் பதிவு செய்தார். தன்னுடைய இறுதிக் காலம்வரை பொதுவுடைமை இயக்கக் கவிஞராகவே வாழ்ந்து சிறந்த சிறப்பு கவிஞர் கே.சி.எஸ். அருணாசலத்திற்கு உண்டு.
'ஜீவாவின் பாடல்கள்', திருச்சிற்றம்பலக் கவிராயரின் 'கவியரங்கக் கவிதைகள்', 'மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்' ஆகிய கவிதை நூல்களைத் தொடர்ந்து நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் 1965 ஆம் ஆண்டு கவிஞர் கே.சி. எஸ்.அருணாசலத்தின் 'கவிதை என் கைவாள்' என்ற கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட்டது. இதுதான் அச்சில் வந்த கவிஞர் கே.சி.எஸ் அருணாசலத்தில் முதல் கவிதை நூலாகும்.
இந்த நூலின் இரண்டாம் பதிப்பை 2022 இல் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
ஏழு பாகங்களாகத் தொகுக்கப்பட்டிருக்கும் இந்தக் கவிதை நூலின் முதல் பாகத்தில் 14 கவிதைகளும்; இரண்டாம் பாகத்தில் 12 கவிதைகளும்; மூன்றாம் பாகத்தில் 11 கவிதைகளும்; நான்காம் பாகத்தில் 12 கவிதைகளும்; ஐந்தாம் பாகத்தில் 13 கவிதைகளும்; ஆறாம் பாகத்தில் 3 கவிதைகளும்; ஏழாம் பாகத்தில் 17 கவிதைகளும் என மொத்தம் 82 கவிதைகள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன.
முதல் பாகத்தில் மூன்றாவதாக இடம்பெற்றிருக்கும் கவிதைக்குரிய தலைப்பான 'கவிதை என் கைவாள்' என்ற தலைப்பையே நூலின் தலைப்பாகக் கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் கொடுத்திருக்கிறார். இந்தக் கவிதையை,
"கவிதை எனக்கொரு கைவாள் – மார்பில்
கவசம் எனக்கு வாய்மை
புவியல் தீயைகள் வீழ - நான்
போர்செயும் ஓர்படை வீரன்!"
என்று தொடங்கும் கவிஞர்,
"சாவினுக்கஞ்சேன் சாகேன் - இந்தச்
சடலம் எனக்கொரு சட்டை
சேவக னாகவே இருப்பேன் – நான்
திரும்பவும் இவ்விதம் பிறப்பேன்!"
என்று கவிதையை முடிக்கிறார். இந்தக் கவிதையில் உள்ள ஒவ்வொரு வரியும் கவிஞரின் பிரகடனமாக அமைந்திருப்பதுடன், ஒவ்வொரு வரியும் அர்த்தமுள்ள வரிகளாக அமைந்திருப்பது கவிஞரின் கொள்கைப் பற்றுக்கும் சமூகப் பார்வைக்கும் மிகச் சிறந்த சான்றுகளாகும்.
பாகம் இரண்டில் இரண்டாவதாக இடம் பெற்றிருக்கும் 'பாசறை' என்ற கவிதை இந்தியா மீது சீனா போர் தொடுத்த காலகட்டத்தில் எழுதப்பட்ட கவிதையாகும். ஆம்! தான் ஒரு கம்யூனிஸ்டாக இருப்பினும் தன்னுடைய தாய் நாட்டின் மீது கம்யூனிச நாடான சீனா போர் தொடுக்க எந்தவித உரிமையும் இல்லை என்பதை அறச்சீற்றத்துடன் இந்தக் கவிதையை கவிஞர் வடித்திருக்கிறார்.
"அன்னையின் பொன்னுடல்
ஆணவப் போர்க்கொடி பதித்தாய்
தன்னில் செஞ்சீனா!
உன்னுயிர் குடிக்கஎம் வாசல்கள் தோறும்
ஒவ்வொரு எமன் காத்திருப்பான்!"
என்று இந்திய மக்களின் ஏகோபித்த குரலாய் கவிஞர் குரல் கொடுப்பது கவிஞரின் தேசபக்திச் சான்றாகும்.
பாகம் மூன்றில், 'தீயை அணைத்த தென்றல்', 'நந்தா விளக்கு', 'மந்திரம் எழுதிய மாணிக்கம்' ஆகிய தலைப்புகளில் காந்திஜி பற்றியும்; 'செக்கிழுத்த செம்மல்' என்ற தலைப்பில் வ.உ. சிதம்பரனார் பற்றியும்; 'மகாகவி வள்ளத்தோள்' என்ற தலைப்பில் மலையாளக் கவிஞர் வள்ளத்தோள் பற்றியும்; 'டிசம்பரில் பூத்த மலர்', 'பாரதி - உதய ஞாயிறு', 'செப்டம்பர் பதினொன்று', 'பாரதிக்கு அழைப்பு' ஆகிய தலைப்புகளில் மகாகவி பாரதியார் பற்றியும்; 'பாவேந்தன் போய்விட்டான்!' என்ற தலைப்பில் பாவேந்தர் பாரதிதாசன் பற்றியும் கவிதை எழுதியிருக்கும் கவிஞர் கே.சி.எஸ் அருணாசலம், 'ஜீவா' என்ற தலைப்பில் இலக்கியப் பேராசான் ஜீவாவைப் பற்றி எழுதி இருக்கும் கவிதையை,
"கம்பனது காவியமும் கண்கலங்கி
விம்மியழ நம்பிக்கை கொண்டிருந்த
நாடெல்லாம் ஓலமிட
கண்ணிருக்கும் இடத்திலிரு
குளமிருக்கச் செய்துவிட்டு
விண்ணவர்க்குத் தமிழுரைக்க
விரைந்தோடிப் போயினையோ?"
என்று முடிக்கிறார். இலக்கியப் பேராசான் ஜீவாவின் தியாக வாழ்க்கையை அறிந்தவர்களால் ஜீவாவைப் பற்றிய இந்தக் கவிதையைக் கண்கலங்காமல் படிக்க இயலாது.
பாகம் நான்கில் இடம் பெற்றிருக்கும் 'புதையல்' என்ற கவிதை பல மேடைகளில் கவிஞர் கே.சி.எஸ். அருணாசலத்தால் பாடப் பெற்றுக் கூடியிருந்தோரின் மகத்தான வரவேற்பைப் பெற்ற கவிதையாகும். இந்தக் கவிதையை இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசன் தன்னுடைய சேர்ந்திசை வழியாகத் தமிழகம் முழுவதும் கொண்டு சென்றார். ஆம்! உழைக்கும் பெண்ணொருத்தி புன்னை மரத்தில் தொட்டில் கட்டி தன் குழந்தையைத் தூங்க வைத்திருக்கும் நிகழ்வை விவரிக்கும் கவிதைதான் இது. இதோ! அந்தக் கவிதையின் ஆரம்ப வரிகள்:
"புன்னை மரத்தில் கொம்பை வளைத்து
தொட்டில் தொங்குது - அதில்
பூவினை யொத்த
மேனி படைத்த
குழந்தை தூங்குது
சலசல வென்று
இலைய சைந்து
சாடை காட்டுது - உடல்
சிலுசிலு க்கும்
தென்றல் தவழ்ந்து தொட்டிலை யாட்டுது!"
இந்தக் கவிதை விரிவாக ஆய்வு செய்ய வேண்டிய அளவுக்குச் செய்திகளைக் கொண்டதாகும். ஒரு கிராமத்து வயலையும்; உழைக்கும் பெண்ணையும்; அவருடைய குழந்தையையும்; இயற்கைச் சூழலையும் வெகு அற்புதமாக இந்தக் கவிதையில் கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் பதிவு செய்திருக்கிறார்.
பாகம் ஐந்தில் 'பாதை தெரியுது பார்' என்ற திரைப்படத்திற்கு கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் எழுதிய 'மூக்குத்தி' என்ற கவிதை இடம் பெற்றிருக்கிறது.
காதலன் தன்னுடைய காதலியை வர்ணித்துப் பாடுவதாக இந்தக் கவிதை அமைந்திருக்கிறது.
காதலி அணிந்திருக்கும் மூக்குத்தி சிவப்புக்கல் மூக்குத்தியாம்; அந்த மூக்குத்தி காதலியின் ஒய்யாரத்தைக் கண்டு கண் சிமிட்டுகிறதாம்; வெட்கத்தினாலே அவளுடைய கன்னம் சிவந்திருக்கிறதாம்; அவள் முகத்தில் தாமரை பூத்திருக்கிறதாம்; அவளுடைய கொண்டையில் அவனுடைய ஆவி சிறையுண்டிருக்கிறதாம்; இந்த ரகசியத்தைத் துள்ளித் திரிகிற கண்கள் சொல்லிச் சிரிக்கிறதாம்; அவளுடைய கட்டழகே ஒரு பட்டியலாம்; உழைத்ததால் அவள் மேனி கறுத்து இருக்கிறதாம்; ஆனால் அவளுடைய பேச்சு தேனாய் இனிக்கிறதாம். மொத்தத்தில் பித்துப் பிடித்தவன் என்று அவனைப் பற்றி பேசிப் பேசி ஊர் சிரிக்கிறதாம்!
ஒரு காதலியை ஒரு காதலன் இப்படியெல்லாம் வர்ணித்து திரைப்படத்தில் வேறொரு பாடல் வந்ததாக என் நினைவில் இல்லை. இந்தக் கவிதையை வரி விடாமல் படித்துப் பாருங்கள் உங்கள் காதலியோ அல்லது உங்கள் மனைவியோ உங்கள் நினைவில் வந்து செல்வார்!
பாகம் ஆறில் 31.05.1963 அன்று மதுரையில் நடந்த தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் முதலாவது மாநில மாநாட்டிலும்; 13.09.1963 அன்று எட்டயபுரத்தில் நடந்த பாரதி விழாவிலும் கவியரங்கத்திற்குத் தலைமையேற்று கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் அரங்கேற்றிய கவிதைகளும்; 10.11. 1963 அன்று திருச்சியில் நடந்த அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் பெருமன்ற மாநாட்டில் கி.வா.ஜ. தலைமையில் கவிஞர் கே.சி.எஸ் அருணாசலம் அரங்கேற்றிய கவிதையும் இடம் பெற்றிருக்கிறது. இந்தக் கவிதைகளில் சொல்லியிருக்கும் அற்புதமான செய்திகளை எல்லாம் இங்கு பதிவு செய்தால் பக்கங்கள் விரியும்; படித்துப் புரிந்து கொள்க!
பாகம் ஏழில் இடம் பெற்றிருக்கும் 'வாக்காளர் புலம்பல்' என்ற கவிதை இன்றைய சூழலுக்கும் பொருத்தமாக அமைந்திருக்கிறது. ஆம்! பணத்தின் வழியாக வாக்குகளை வாக்காளர்களிடமிருந்து தட்டிப் பறித்து வெற்றி வாகை சூடும் விபரீதத்தை ஒரு வாக்காளர் வாக்குமூலமாக இந்தக் கவிதையைக் கவிஞர் பதிவு செய்திருக்கிறார்.
"மாதத்துக் கோர்முறை
முனிசபல் தேர்தலை
வந்துபோகச் செய்யேன் ஆண்டவனே!
ஏதுக் கிதென்பதை அறியாயோ - நீ
என்பணக் கஷ்டத்தைப் புரியலையோ?"
என்றும்;
"போட்டியே இல்லாமல்
எலக்சன் நடந்திட்டால்
போச்சுது போச்சுதென் ஆண்டவனே!
ஏட்டிக்கு போட்டியோர்
பசையுள்ள புள்ளியை
இழுத்துப் போட்டுவை ஆண்டவனே!"
என்றும் கவிஞர் எழுதி இருப்பது இந்தியாவில் நடக்கும் தேர்தல் திருவிளையாடல்களை நினைத்துக் கைகட்டிச் சிரிக்க வைக்கிறது!
இந்த நூலுக்கு அணிந்துரை எழுதி இருக்கும் 'தீபம்' இதழின் ஆசிரியர் நா. பார்த்த சாரதி, "பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், திருச்சிற்றம்பலக் கவிராயர் போன்ற பாரதி யுகக் கவிஞர்களின் வரிசையில் நண்பர் அருணாசலத்திற்கும் சிறப்பான இடமுண்டு என்பதை என் கூற்றால் மட்டும் ஏற்காமல், இந்த அரிய கவிதைத் தொகுதியை அனுபவித்தே வாசகர்கள் உறுதி செய்து கொள்ள முடியுமென்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆம்! இந்து நூலைப் பயிலுபவர்கள் நா. பார்த்தசாரதியின் கூற்றை மெய்யென்பர்.
கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் பிறந்து நூற்றாண்டு கடந்து விட்டது. இவரைப் போன்று இயக்கத்திற்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த படைப்பாளிகளின் படைப்புகளை வெகு மக்களிடம் அதிகமாகக் கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் இலக்கியப் பேராசான் ஜீவா விரும்பிய நல்லிலக்கியம் என்ற நந்தவனம் செழிக்கும்; இல்லையெனில் நச்சு இலக்கியங்கள்தான் வலுவாகக் காலூன்றி தமிழகத்தில் நாட்டியமாடும்!
(கவிதை என் கைவாள்! | கே.சி.எஸ்.அருணாசலம் | வெளியீடு: NCBH, விலை ரூ.190)
- கே.ஜீவபாரதி