தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் ஒன்றான அய்யப்பநாயக்கன் பேட்டையில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து அரசு பள்ளி, கல்லூரிகளில் படித்து இந்திய ஆட்சிப் பணியில் நுழைந்தவர் செல்வம். அவர் பணியாற்றிய துறைகளில் தனி முத்திரை பதித்தவர்.
உலகளாவிய நிர்வாக அணுகுமுறையை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதல் காரணமாக அரசுப் பணிக்கு இடையில் அமெரிக்கா சென்று உலகின் முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹார்வர்டில் பொது மேலாண்மை பயின்றார்.
அங்கு கிடைத்த அகத்திறப்பு ஒரு நிர்வாகியாக அவருக்குள் அபாரமான சிந்தனைகளை உருவாக்கியது. விவசாயம், கல்வி, சுகாதாரம் உள்கட்டமைப்பு, நிதி நிர்வாகம் என்று ஒவ்வொரு துறையையும் இந்தியாவில் எப்படி இனி பார்க்க வேண்டும் என்று அவரிடம் உருவான சிந்தனைப் பகிர்வே இந்த நூல்.
பொதுவாக, இது போன்ற நூல்கள் வெளிநாட்டை வியந்து எழுதுவதும் நமது நாட்டின் போதாமைகளை பட்டியலிடுவதாகவும் இருக்கும்.
மாறாக, இந்நூல் அமெரிக்க அரசின் கொள்கைகள் எவ்வாறு இருக்கின்றன? அவை அந்நாட்டை எப்படி முன்னேற்றம் அடையச் செய்திருக்கின்றன? என்பவற்றை அலசி ஆராய்ந்து கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட முக்கியமான துறைகளில் இந்தியாவை எப்படி முன்னேற்றலாம் என்ற யோசனைகளையும் முன்வைக்கிறது.
சாலைகள், கல்வி நிலையங்கள், நூலகங்கள், சுகாதாரம், சொத்துப்பதிவு, நீர் வளங்கள், விவசாயம், தொழில்கள் மற்றும் நகர திட்டமிடல் ஆகியவற்றில் ஏன் அமெரிக்கா மேம்பட்டும் இந்தியா பின்தங்கியும் இருக்கிறது என்பதை அலசுகிறது. அதன் வழியே இந்திய கொள்கை வகுப்பாளர்களும் அவற்றை செயல்படுத்தும் அதிகாரிகளும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களையும் எடுத்துக்காட்டுகிறார் திரு. செல்வம்.
இனி நூலில் இருந்து...
ஹார்வர்ட் 380 ஆண்டுகளுக்கு மேல் மனித இன மேம்பாட்டுக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறது. இங்குள்ள ஒவ்வொரு செங்கல்லும் கட்டிடமும் ஒவ்வொரு கதை சொல்லும். இதுவரை 48 நோபல் பரிசு அறிஞர்களையும், 25க்கும் மேற்பட்ட நாட்டு தலைவர்களையும், 8 அமெரிக்க ஜனாதிபதிகளையும், 48 புலிட்சர் பரிசு ஊடகர்களையும், இலக்கியவாதிகளையும் உருவாக்கியுள்ளது. உலகின் வரலாற்றை புரட்டிப் போட்ட முடிவுகளும் மனித இனத்தை செழுமைப்படுத்திய தீர்வுகளும் இங்கு எடுக்கப்பட்டுள்ளன.
சாலைகள் வெறும் பாதைகளா?
இந்தியாவோடு ஒப்பிட நான்கில் ஒரு பங்கு மக்கள் தொகையைக் கொண்டது அமெரிக்கா. காரோடுதான் ஓர் அமெரிக்கர் பிறக்கிறார் என்பதால் அமெரிக்காவில் தொடக்கப் பள்ளிகளில் குழந்தைகளுக்கான முதல் பாடம் சாலை ஒழுங்கு. சாலை ஒழுங்கை கற்றுக் கொடுப்பதன் வழியாகத்தான் சமூக ஒழுங்கை கற்றுக் கொடுக்கிறார்கள் என்றுகூட சொல்லலாம். விளைவாக சாலை விதிகளை மீறும் பெற்றோர்களை காவல்துறையிடம் சிக்க வைத்து விடும் குழந்தைகளும் உண்டு. அந்த அளவுக்கு சாலை ஒழுங்கு பராமரிப்பை ஒரு சமூகப் கடமையாக அமெரிக்கர்கள் பார்க்கிறார்கள். சாலை விதிகளை மீறுபவர்கள் தப்பிக்க முடியாது. அபராதம், ஓட்டுனர் உரிமம் ரத்து, சிறை தண்டனை என கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். இங்கு ஒவ்வொரு ஓட்டுனரும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். இதனால் காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் போக்குவரத்து சார்ந்த வழக்குகள் அதிகம் வருவதில்லை. அப்படி வந்தாலும் சிசிடிவி கேமரா சான்றுகளின் அடிப்படையில் வழக்குகள் விரைவில் முடிந்துவிடும். சாலைப் போக்குவரத்தை பராமரிப்பதில் ஒவ்வொரு அமெரிக்கரும் போக்குவரத்து காவலாளிதான்.
கேள்வியே கல்வி
அமெரிக்காவின் கல்விக் கொள்கை மிகவும் தனித்துவம் மிக்கது. குழந்தைகளின் நலனை முதன்மைப்படுத்தி இங்கு பாடத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. கேள்விகள் தான் அமெரிக்க கல்விமுறையின் அடிப்படை. அதாவது ஆசிரியர் மாணவர்களை நோக்கி கேள்வி கேட்பது போல், மாணவர்களும் ஆசிரியரை நோக்கி கேள்வி கேட்க வேண்டும். கேள்விகள் வழியாகவே நமது அறிவு விசாலப்படுகிறது என்பதே அமெரிக்க கல்வியின் அடிப்படை தத்துவம். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே சமத்துவ உறவு உள்ளது. மாணவர்கள் மனம் திறந்து பேசுகின்றனர். ஆசிரியர்களும் ஆதரிக்கின்றனர்.பள்ளிகளிலும் வெளியிலும் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டவும் தெளிவாகப் பேசவும் மாணவர்கள் தயங்குவதில்லை. எட்டாம் வகுப்பு முதல் பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் மாணவர்களை இணைத்து விடுகின்றனர். அதன் மூலம் மாணவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் இருக்கிறது என்பது கண்டறியப்பட்டு, மேற்படிப்பு தொடரப்படுகிறது. மாணவர்கள் ஐபிஎம், நாசா,மைலான் போன்ற நிறுவனங்களுடன் சேர்ந்து ஆய்விலும் ஈடுபடலாம். மாணவர்களின் புதிய சிந்தனைகளையும், எண்ணங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு பல்வேறு நிறுவனங்கள் முன் வருகின்றன...
...சமூகத்தில் கீழான ஓரிடத்திலிருந்து மேல் நோக்கி வந்தவர்களுக்குத்தான் கல்வி எவ்வளவு முக்கியம் என்பது ஏனையோரை விடவும் புரியும். அரசுப் பணியில் அதிகாரமிக்க இடத்தில் உள்ளவர்களே குழந்தைகளை ஒரு நல்ல பள்ளியில் சேர்ப்பதற்கு இத்தனை சிரமத்தை எதிர்கொள்ள வேண்டும் என்றால் சாமானிய மக்களின் நிலைமையை விவரிக்கவும் வேண்டுமா?. சமத்துவம் என்பது பள்ளிக்கூடங்களில் ஆரம்பிக்கிறது என்று நாம் பேரிரைச்சலாக பேசுகிறோம். இந்த நாட்டில் ஒவ்வொரு குழந்தையின் பிறப்புரிமையுமான சமவாய்ப்புக்கான சூழலை பள்ளிக்கூடங்களில் கூட நாம் இன்னும் ஏற்படுத்தவில்லை...
....இந்தியாவில் இல்லாத வளங்கள் இல்லை. நம்முடைய குழந்தைகள் யாருக்கும் சளைத்தவர்களும் அல்ல. சிக்கல் நாம் சிந்திப்பதற்கும் பேசுவதற்கும் செயல்படுவதற்கும் இடையிலான இடைவெளியில் இருக்கிறது. நாம் கற்பனை செய்யும் தொலைநோக்கை, கனவை, எதிர்காலத்தை நம்மாலும் பள்ளிக்கூடங்களில் கொண்டுவந்துவிட முடியும் என்றால், நம்மாலும் உன்னதங்களை உருவாக்கி விட முடியும்....
...அமெரிக்க கல்வியானது சுதந்திரமானதாக தெரிகிறது. மாணவர்கள் எதைக் கற்க வேண்டுமோ அதை கற்றுக் கொள்ளலாம் என்ற சூழல் இங்கே இருக்கிறது. நம்முடைய பிள்ளைகளுடைய கல்வி பெருமளவில் நம்மால் திணிக்கப்படுவதாக இருக்கிறது...
உங்கள் நிலம் பாதுகாப்பாக இருக்கிறதா?
இந்தியாவில் 5 கோடிக்கு மேலான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. அதில் 1,69,000 வழக்குகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்ட மற்றும் உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
மொத்த சிவில் வழக்குகளில் 66% நிலம் மற்றும் சொத்து சார்ந்தவை. நிதி ஆயோக்கியன் அறிக்கையின்படி நிலுவையில் உள்ள வழக்குகள் முடிப்பதற்கு குறைந்தது 324 வருடங்கள் ஆகும். இப்படி நிலுவையில் உள்ள வழக்குகள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஏறத்தாழ 2% பாதிக்கின்றன...
...இந்தியாவில் விற்பனை/குத்தகை வாடகை, அடமானம் போன்றவற்றிற்கு 'பத்திரப்பதிவு முறை' நடைமுறையில் உள்ளது. இம்முறையில் பத்திரப்பதிவாளர், விற்பனையாளர், வாங்குபவர் ஆகியோரின் கையெழுத்துக்கள் அதற்கான சாட்சிகள் சரியாக உள்ளதா என்பதை மட்டுமே சரிபார்க்கின்றனர். ஆனால் இந்த சொத்துப் பரிமாற்றத்திற்கான சட்டபூர்வமான உறுதிப்பாட்டை அவர்கள் அளிப்பதில்லை. அதாவது தனது சொத்தைதான் விற்பனையாளர் விற்கின்றார் என அரசு உத்தரவாதம் அளிப்பதில்லை. இம்முறையில் விற்பனையாளருக்கும் வாங்குபவருக்கும் அந்த நிலத்தை விற்கவோ, வாங்கவோ உரிமை உள்ளதா என்பது சரிபார்க்கப்படுவதில்லை.
இந்த முறையில் பதிவாளர் பதிவேடுகளுக்கு மட்டுமே பாதுகாப்பானவர். இந்த முறை காரணமாக இந்தியாவில் நிலப் பிரச்சனை சார்ந்த வழக்குகள் நிரம்பி வழிகின்றன.
விவசாயிகள் தற்கொலை எனும் தேசிய அவமானம்
...ஆராய்ச்சி பணிகளுக்காக அமெரிக்கா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8% தொகையை செலவிடுகிறது என்றால் இந்தியா 0.8 சதவீதம் தொகையை மட்டுமே செலவிடுகிறது .
உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையும்வரை வேளாண்மை செய்தால் போதும். அடுத்து வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டுவதிலும் வர்த்தகத்திலும் ஈடுபட வேண்டும். அப்பொழுதுதான் வேளாண்மை லாபகரமாக அமையும். வேளாண்மையில் முழு சமூகமும் ஈடுபடத் தேவையில்லை. வேளாண்மையை மட்டுமே செய்து கொண்டிருப்பதால் விவசாயிகளின் வாழ்வு சிறக்காது. தொழில் வளர்ச்சி,கண்டுபிடிப்புகள் மற்றும் சேவை துறையை நோக்கியும் இச்சமூகம் முன்னேற வேண்டும். அதுவே நாட்டை வளப்படுத்தும்.
அடுத்த நூற்றாண்டுக்கான நகரங்கள்
1820 களில் நியூயார்க் நகரத்தில் குதிரை வண்டிகள் ஓடின. 1878 ல் பறக்கும் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது மற்ற போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததால் 1900இல் சுரங்க ரயில் அமைக்கப்பட்டது. தனியார் நிறுவனம் அதனை இயக்கியது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சுரங்கரயில் பாதை பெருமளவில் வளர்ந்து நியூயார்க் நகரத்தை முழுவதும் நினைத்தது. 170 வருடங்களுக்கு மேலாக சிறப்பாக இது செயல்படுகிறது.
சுற்றுலாத்தலங்கள் ஏன் நமக்கு அவசியம்
அமெரிக்காவின் சுற்றுலா தலங்களை ஒப்பிடும்போது இந்தியாவின் சுற்றுலா தளங்களும் இயற்கை வளங்களும் பிரமிக்க வைப்பவை. ஆனால் அமெரிக்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிட பத்தில் ஒரு பங்கு அளவுக்கே இந்தியாவுக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாயிலும் இதே அளவு வேறுபாடு பிரதிபலிக்கிறது. காரணம் சுற்றுலாவை நாம் பெரும் தொழில் வாய்ப்பாக இன்னும் கற்பனை செய்யவில்லை. சுற்றுலா தளங்களை பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை நாம் பின்பற்றுவதும் இல்லை. புதிய இடம் ஒன்றுக்கு நாம் செல்லும்போது அந்த இடம் நமக்கு எவ்வளவோ புதிய விஷயங்களை கற்பிக்கிறது.
நம் நாட்டின் ஆட்சி நிர்வாகத் துறை பற்றி...
இந்தியாவில் ஆட்சி நிர்வாகம் என்பது சாமானியனை மிரள வைப்பதாக உள்ளது. ஆட்சி நிர்வாகத்தை அணுகுவது மனதளவில் சாமானியர்களுக்கு தைரியத்தை வழங்கவில்லை. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் அதிகாரமற்றவர்களுக்கும் இடைவெளி அதிகம் உள்ளது. அரசு வேலை என்பது மக்களுக்கு சேவை செய்வதற்கான வழங்கப்பட்டது என்ற கருத்து பெரும்பாலானவரிடம் இல்லை. அரசுப் பணியானது அதிகாரங்களின் குவியலாக உள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளில் அரசு பணி என்பது சமூக சேவையாக பார்க்கப்படுகிறது .அதேபோல் இந்தியாவின் ஆட்சி நிர்வாகத்துறை "மக்களின் சேவைத்துறை" யாக மாற்றம் பெற வேண்டும்.
முன்னதாக செல்வம் அவர்கள் எழுதிய பனையடி என்ற தன் வரலாற்று தன்மையுடன் கூடிய நாவல் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் ஒரு படைப்பாக அமைந்தது.
செரிவான கருத்துக்களைக் கொண்ட இந்நூல் திட்டமிட்ட கூர்மையான மொழி காரணமாக ஒரு பயண கட்டுரையை படிப்பது போன்ற சுவாரசியத்துடன் உள்ளது. புத்தகம் உரையாடல் வடிவில் எழுதப்பட்டிருக்கிறது. மனைவி, குழந்தைகள், நண்பர்கள், பேராசிரியர்கள் என பலருடன் செல்வம் நிகழ்த்தும் உரையாடல் வழியாகவே தகவல்கள் பகிரப்படுகின்றன.இது வாசிப்புக்கு புத்துணர்வளிப்பதுடன் நெருக்கமான அனுபவத்தையும் தருகிறது.
இந்திய ஆட்சியாளர்கள் தொடங்கி மாணவர்கள் வரை வாசிக்க வேண்டிய நூலிது.
பொதுவாக துறை சார்ந்த வல்லுனர்கள் மற்றும் சிந்தனையாளர்களுக்கும், கொள்கை வகுக்கும் ஆட்சி அதிகாரிகளுக்கும் மிகப்பெரும் இடைவெளி உள்ளது.
ஒரு ஆட்சியாளரே செயல்திட்டமுள்ள நல்ல சிந்தனையாளராக இருப்பது பெரும் வாய்ப்பு. இந்த சிந்தனைகள் செயல்வடிவம் பெற வாழ்த்துவோம்.
(ஹார்வர்டு நாட்கள் | இரா.செல்வம் ஐ.ஏ.எஸ். | வெளியீடு: NCBH | பக்கம் 167, விலை ரூ.200)
- இ.தங்கமணி