கலைமனம் என்பது மனித மரபுகளை, கட்டுப்பாடுகளைத் தாண்டி தனக்கான உள்ளுணர்வுகளைத் துல்லியமாக வெளிப்படுத்திக் கொள்வது. கலைஞனுக்கும் சமூகத்திற்கும் இடையில் பல்வேறுவித போராட்டங்கள் நடைபெற்றாலும் தனக்கான வாழ்வியில் பாதையில், இழந்த உணர்வுகளின் ஆழத்தில் மீண்டும் மனம் சென்று இழப்புகளை மீட்டெடுக்க முயல்கிறது. ஏனோ காலச் சக்கரத்தின் இறுகிய பற்களில் ஒவ்வொரு தனிமனிதனின் விருப்புகள் துண் டிக்கப்பட்டு அந்தர வெளிகளில் தொங்க வைத்துவிடுகிறது. மரபுகளற்ற வெளிகளில் திரைகளின்றி பரிபூரணத்துவத்தோடு இயங்கும் முகங்கள் சிலவே. கலைஞன் பவாசெல்லதுரையும் ஆழ்மனப் பதிவுகளை மீட்டுக் கொணர்ந்து, மனிதத்தை மறந்த அரைமனிதர்களையும், தன் இயற்கை வாழ்வைத் துய்த்த அலாதியான தருணங்களையும், தன் உணர்வுகளோடும், ஆளுமையோடும் வாழும் பெண்களையும் இவர் கதை பரப்புகளில் நிரம்ப வைத்துள்ளார்.
பவாவின் கதைகளில் தனிச்சிறப்பாக வெளிப்படுவது, ஒவ்வொரு கதையின் உள்ளூட்டத்திலும் வீழ்படிவாக விளங்குவது மனித நேயத்தை மீட்டெடுக்கும் முயற்சியும், மனித குலம் இயங்குவதற்கு ஆதார அச்சாணியாய் இருக்கும் தூய அன்பும், தனிமனிதனின் அடிப்படைத் தேவை நிறைவேறாதபொழுது, வன்முறை உயிர்த்தெழும் தீவிரமும், நேசமற்ற மனிதர்களின் உயர்சாதி இறுக்கத்தின் வெறித்தனமும், ஒவ்வொரு இழைகளாக மனிதர்களை இணைத்து இறுக்கிப் பிடித்து வாழ்வைக் கொண்டாட வைக்கும் காதலும், தம் வாழ்வோடு ஒருங்கிணைந்த பண்பாட்டுக் கலைகளும், அவைகள் தனிமனித உணர்வுகளில் உயிரோடு கலந்திருக்கும் பாங்கும், இயற்கையோடு கரைந்து வாழ்ந்த வாழ்வனுபவங்களின் நம்பகத் தன்மையும், நேசமும் உயிர்ப்பும் என்று விரவிக் கொண்டிருக்கும் பல உணர்வுகள் எச்சத்தில்...
தன் மண்ணின் விழுமியத்தோடும், இயற்கையோடும் கலந்த தன்மையால் பவாவின் கதைகளில் மாறாத உயிர்ப்புத் தன்மை மிளிறிக் கொண்டேயிருக்கிறது. என் மனவெளிகளில் ஓயாமல் பயணித்துக் கொண்டிருக்கும் இக்கதைகளில் சில ‘முகம்’ கதை சராசரியான மனித இயல்பை, குடும்ப நிறுவனத்தில் மனித உணர்வுகள் சிதைக்கப்பட்டு தன் மனம் சார்ந்த வாழ்வை வாழ முடியாத மனிதனின் இயல்பும் முகமுடி அணிந்து அருவமாய் இயங்கும் உறவுகளின் போலித் தனமும் வெளிச்சமிட்டுக் காட்டி தன் சுய முகத்தை தொலைக்கும் மனிதர்களை குழந்தை மனத்தின் புனிதத்தை வெளிப்படுத்தி நம் முகத்திரையை கிழிக்கிறார்.
கபடமற்ற மனிதனின் உணர்வுகள் உறிஞ்சப்பட்டு ஆதிக்க வெறியர்களால் சுரண்டப்படும் அவலமும், அதனால் அவரைச் சார்ந்துள்ள குடும்பம் சிதைவுறும் அவலத்தையும், உள்ளத்தை மறைத்து உதட்டளவில் உரையாடும் நவீன நாகரிகத்தின் இழிதன்மையும் கலைத் தன்மையோடு வெளிப்படும் ‘வேறுவேறு மனிதர்கள்’ ஒரு முக்கிய பதிவு.
அன்பைப் பருக முடியாத குழந்தைகளின் ஏக்கத்தையும், மன உலகத்தையும் பதிவு செய்து, தடம் மாறும் வாழ்வின் வலிகளை வெளிப்படையாய் காற்றின் அதிர்வுகளில் செவிப்பறைகளைத் தாக்கி நிலைகுலையச் செய்து, விளிம்புநிலை மக்களின் வலிகளை இனங்காட்டுகறது ‘மண்டித்தெரு பரோட்டா சால்னா’.
கலைஞனின் உயிரோடும், உணர்வோடும் கலந்திருப்பவை கிராமியக் கலைகள். தலைமுறை, தலைமுறையாய் இதிகாசங்களையும் புராணங்களையும் நடித்துக் காட்டி, மனிதர்களின் ஆன்மாவோடு கலநது புத்துயிர்ப்பூட்டி, உழைப்பின் கடுமையை மறக்கச் செய்து ஆடலில் மகிழ்ச்சிப் பிரவாகத்தை கண்டடைவது கலைமனம். கலைகளின் இழப்பு, பண்பாட்டைச் சிதைத்து நாகரிகப் போர்வையின் விளிம்பில் சிக்கி, தத்தளிக்கும் மனங்களை வெளிக் கொணர்கிறது ‘ஏழுமலை ஜமா’ எழுத்தோவியம்.
மனத்தை அழுத்திக் கொண்டிருக்கும் வர்க்கத்தின் உச்சக்கட்ட கோரப் பற்களை உடைத்தெறிகிறது “சிங்காரக் குள மல்லிகாவின் ஆண்மைத் திறம்”. ஆம், பலவேளைகளில் ஆண்கள் ஆமையாய் உள்ளொடுங்கும் நிமிடங்களில் பெண்களின் புலித்திறம் வெளிப்பட்டு வரலாற்றின் கண்களை விழிக்கச் செய்கிறது. இதோ “ஒரு தலைமுறையின் அடிமைத் தனத்தை தகர்த்தெறிந்து விடுதலைக்கு வழிவகுத்திருக்கிறது சிங்காரக்குளம். இரட்டைக் குவளை முறையும், தீட்டும், ஏளனப் போக்கும், போராட்டமும் என பல வலிகளின் உட்பிரிவுகளை ஒரு முகமாய் தாங்கித் துயருரும் அடித்தள மக்களின் உணர்வுகளை அப்பட்டமாய் விளக்கிக் காட்டுகிறது சிங்காரக் குளம். பெண்மையின் ஆற்றலை மனந்திறந்து ஏற்றுக்கொள்ளும் பவாவின் நேர்மை பாராட்டிற்குரியது.
காட்டு வாழ்க்கையை அங்குலம், அங்குலமாய் துய்த்துப் படர்ந்திருக்கும் கலைமனம் அவற்றின் ஏற்ற, இறக்கங்களையும் விழுமியங்களையும் வெளிப்படுத்தி, மனித உணர்வுகள் நாகரிக முதிர்ச்சியில் செயல்படுவதாய் வெளிப்படுத்திக் கொண்டாலும் இயற்கை மடியில் தவழ என்றுமே மறுப்பதில்லை. தாய்மண்ணின் மடியோடு தவழ்ந்து, தவழ்ந்து உறைவதையே பெரிதும் பேறாகக் கருதுகிறது.
“ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்” வாசித்து முடித்தவுடன் என் மனத தோணிகளில், ஆயிரமாயிரம் தேவதைகள் வெண்சிறகோடு சிறகடித்துப் பறந்து பயணிப்பது போன்ற லயிப்பு. நிறைந்த ஆசைகளின் வெளிப்பாடுகள் கற்பனை வெளிகளில் சரம்பாடி இதம் சேர்க்கிறது கவிமனத்தில் இழந்த அன்பினை அழகினை மீட்டுக் கொணர்ந்து சுகம் சேர்க்கிறது நினைவின் அதிர்வுகளில் ராஜாம்பாள் என் நினைவுக் கிளைகளிலும் தொற்றி, உணர்வுக் காம்பினைப் பற்றிக் கொண்டு ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறாள். என் இரவின் மணித் துளிகளை இனிமையாக்கி மகிழச் செய்தது இக்கதை. இதுதானே படைப்பின் உச்சம்.
தன் படைப்பின் மூலம் வாசிப்பை ருசிபடுத்தலே கலைஞனுக்குக் கிடைக்கும் வெற்றி. இதனுள்ஒரு சாதி பேதத்தை தாண்டும் உயிர்மீட்டும் மனிதம் வெளிப்பட்டு வாழ்வியல் குறிக்கோளை எடுத்துக்காட்டும் திறம், பவாவிடம் வாய்த்துள்ளமையால், ஒரு படைப்பாளனாக வெற்றி பெற்றிருக்கிறார்.
நாட்டின் பொருளாதாரம், தனியுடைமை ஆக்கப்பட்டு சூரர்களின் சொர்க்கமாக சமூகம் மாறும்போது, உரிமைகள் பறிக்கப்பட்டு உணர்வுகளில் குருதிகளைத் தேக்கும் மனிதர்கள் தடம் மாறுவது இயற்கையே. அப்படித்தான் ‘சத்ரு’ கதையிலும் இருளன் சித்தரிக்கப்பட்டுள்ளான். இப்பதிவு சமூகத்தில் வாழும் எத்தனையோ அப்பிராணிகளை வெளிச்சமிட்டு காட்டிக் கொண்டிருக்கிறது. இயற்கை பொய்க்கும் நிலையில் மனித சமூகம் வன்முறைச் செயல்பாடுகளில் இறங்கி மனித நேயத்தைத் தொலைக்கும் அவலத்தை சித்தரிக்கிறது. அதனால்தான் இயற்கையின் மீது மனம் கவிந்த நம் முன்னோர்கள், “நீரின்றி அமையாது உலகு” - என்றனர். எவ்வளவு நுட்பமாக இயற்கையைப் பாதுகாக்கும் பொறுப்பை அறியச் செய்திருக்கிறார் பவா. வன்முறையின் ஆணிவேரை, ஆழப்பிடுங்கி வெளிக்காட்டி விநோதப்படுத்துகிறார்.
மனிதர்கள், அவரவர்களின் உணர்வுகளைப் பிறருக்காக தியாகம் செய்து கொள்கிறேன் என்ற பெயரில் சிதைத்துக் கொள்ளாமல் சுதந்திரமாக தன் மனச் சிந்தனைகளின் விடுதலை உணர்வோடு செயல்பட்டு வாழ்வதே வாழ்தலின் இயல்பு. முகமூடி வாழக்கை அருவருக்கத்தக்கது. சிதைவுகள் மீண்டும் சேர்வதுமில்லை வாழ்வதுமில்லை.
குழந்தையை விரும்பும் பெண்ணின் உளவியலுணர்வை மையமிட்டுள்ளது “நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை”. ஆம். கருவறைகள், இருளறைகள் அல்ல. நட்சத்திரங்களையும், முத்துக்களையும் உருவாக்கும் ஒளியறைகள். மானுடத்தை ஜனிக்க வைக்கும் ஆதார உறுப்பறைகள். தாய்மைக்கு ஏங்கும் பெண்ணின் மனவுணர்வு, புற வெளிகளில் காணும் காட்சிகளிலும் படிந்திருப்பதை அழகுபட வருணித்திருக்கிறார்.
தன் உளவலிகளை, மனச்சிதைவுகளை, புறக்காட்சிகளில் காணும் இயேசு பிறப்பு நிகழ்ச்சியின் வழி ஆற்றிக் கொள்ளும் பெண்ணின் இருப்பை அப்பட்டமாய் வெளிக்காட்டுகிறது இக்கதை. குழந்தைப் பெறுதலை முக்கியப்படுத்தும் சமூகத்தின் மனோநிலையும் அதன்வழி பெண்ணின் உணர்வு சார்ந்த வலிகளையும் வெளிப்படுத்துகிறது இக்கதை.
மொத்தத்தில் மனிதனின் கூருணர்ச்சிகளை மையமிட்டு, புடம்போட்டு, சமூகத்தின் தனிமனித உணர்வுகளின் சிதைவு நிலைகளையும், மனிதத்தின் இழப்பையும், சாதிவேரை, ஆழத்தோடு பிய்த்தெறிய முனையும் போராட்டமும், சராசரி மனிதன் சமூக மரபுக் கட்டுக்களுக்கு அஞ்சி, தன் அகத்திற்குள் வாழும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கையும் அவை வெளிப்படுத்த இயலா நிலையில் கற்பனைகளோடு இயங்கும் யதார்த்த வாழ்வின் இயல்பையும் தன் படைப்பின் மூலம் வெளிப்படையாகவே பேசுகிறார் பவா.
இச்சிறுகதைத் தொகுப்பு காட்டும் நில வருணனைகளின் தனிச் சிறப்பும், மனித இயல்புகளை மறுவாசிப்புக்கு உட்படுத்தும் தன்மையையும் இழைத்துக் கொடுத்திருக்கும் பவாவின் உயிர்போடு கூடிய இக்கதைகள் மனிதத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் உச்சத்தை எட்டியுள்ளது.
- த.எ.மாலதி