சமூக நிலை, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் தாழ்நிலையில் உழலும் மக்களுடைய மேம்பாட்டிற்கென அரசு நிருவாகம் கைக்கொள்ளும் நடவடிக்கைகளுள் ஒன்றாக விளங்குவது அம்மக்களைப் பல் வேறு ‘முன்னுரிமைப் பட்டியல்களு'க்குள் (Lists of Reservation) இடம்பெறச் செய்வதே ஆகும். இவ்வகையில், 'பட்டியல் பழங்குடியினர்' (Scheduled Tribes), 'பட்டியல் சாதியினர்' (Scheduled Castes), 'மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்' (Most Backward Class), சீர் மரபினர்’ (Denotified Communities) மற்றும் 'பிற்பட்ட வகுப்பினர்' (Backward Class) என 5 வகைமைகளான முன்னுரிமைப் பட்டியல்கள் தற்போது நடைமுறையில் உள்ளன. அரசு அவ்வப்போது எடுக்கும் 'கொள்கை முடிவுகளு'க்கு (Policy Decisions) ஏற்றவாறு, இம்முன்னுரிமைப் பட்டியல்களில் இடம்பெறும் இனக்குழுக்களின் நிலைமைகளில் உரிய மாற்றம் ஏற்படுவதும் இயல்பானதே. இருப்பினும், ஒரே இனக்குழுவைத் தமிழ்நாட்டின் மேற்குறித்த அனைத்து முன்னுரிமைப் பட்டியல்களிலும் இடம்பெறச் செய்துள்ள தவறான போக்கானது குறவர் இனக்குழுவினர்க்கு இழைக்கப்பட்டுள்ள ‘சமூக அநீதி' (Social Justice) என்பதைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரைக்களமாகும்.'tribes 621குறிஞ்சித் திணையின் தொல்குடியினரான ‘குறவர்' குறித்து நிலவிடும் ‘பன்மிய அழை பெயர்கள்' :-

பண்டைய தமிழகத்தின் 'நிலவியல்' (Topography) அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என ஐந்திணைகளாக அமைந்தனவற்றுள் ‘மலையும் மலை சார்ந்த இடமும்’ என்று அடையாளப்படுத்தப்பட்ட ‘குறவர் இனக்குழுவினர்’ பல்வேறு ‘புறப்பெயர்களா’ல் (Exonyms) குறிப்பிடப்படுவதனால், அவற்றின் அடிப்படையில் உருவான வேறுபட்ட ‘அழை பெயர்களா'ல் (Call Names) அறியப்படும் நிலை உள்ளது.2 இத்தகைய ‘பன்மிய அழை பெயர்களா’ல் (Call Names) வெவ்வேறு இனக்குழுவினரைக் குறிப்பதாக ஏற்பட்ட தவறான புரிதலின் அடிப்படையில், ஒரே இனக்குழுவினர் பல்வேறுபட்ட இனக்குழுவினராகக் கருதப்படும் தவறான புரிதலும் ஏற்பட்டுவிட்டது. சான்றாகக், குறவர் இனக்குழுவினரை ‘மலைக் குறவன்' எனும் போது ‘பட்டியல் பழங்குடியினரா'கவும் ‘குறவன், சித்தனார்' எனும் போது ‘பட்டியல் சாதியனரா’கவும் (26 உள் பிரிவுகளைக் கொண்ட), ‘கொறவர்' எனும் போது ‘மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரா'கவும் 'சீர் மரபின'ராகவும் ‘எருக்கலா’ எனும் போது 'பிற்பட்ட வகுப்பினரா'கவும் அடையாளப்படுத்தி, வெவ்வேறு முன்னுரிமைப் பட்டியல்களில் இடம்பெறச் செய்துள்ள சமூக அநீதி மேலோங்கியுள்ளது.

இக்குறவர் இனக்குழுவினர்க்குச் ‘சமுதாயச் சான்று' (Community Certificate) வழங்கிடும் மாநில வருவாய்த் துறையினரோ இவ்வுண்மையை உணரத் தவறிய நிலையில் அதாவது, ஒரே இனக்குழுவினர் ‘புறத்தாரால்’ (Outsiders) மாறுபட்ட அழை பெயர்களால் வேறுபட்ட இனக்குழுவினராகத் தவறாக அடையாளப்படுத்தப்படும் போது - ஒரே இனக்குழுவைச் சார்ந்த மக்களுக்குப் பல் வேறுபட்ட சமுதாயச் சான்றுகள் வழங்கிடும் போக்கு தொடரக் காண்கிறோம். இத்தகைய சமூக அநீதிக்கு உள்படுத்தப்படுவோராகக் ‘குறவர் இனக்குழுவினர்’ இன்று வரை ஆள்படுகின்றனர்.

குறவர் இனக்குழுவினர் குறித்து அரசு அலுவலர்களிடமும் சமூக அறிவியலாளரிடமும் காணலாகும் 'கிட்டப்பார்வை மனப்பான்மை' -

குறவர் இனக்குழுவினரிடையே நிலவிடும் இத்தகைய பன்மிய அழைபெயர்கள் ஒரே இனக்குழுவினர்க்கானவையே என உணரத் தவறியமையால், ஒரே இனக்குழுவினர்க்கே வெவ்வேறு முன்னுரிமைப் பட்டியல்களில் இடம் அளிக்கும் தவறான போக்கு நேர்ந்துள்ளது. இதன் பின்புலத்தில் உள்ள உண்மையைப் புரிந்துகொள்ளத் தவறியமையால், அரசு அலுவலர்களிடமும் சமூக அறிவியலாளர்களிடமும் ஒரு வகையான ‘கிட்டபார்வை மனப்பான்மை' (Myopic Attitude)' ஏற்பட்டுவிட்டது.

அதாவது, ‘மலைக்குறவன்' என்பது 'பொதுப் பழங்குடிக் குழு'வாக (General Tribal Group), எவ்வகை வாழ்விட வரன்முறையும் அற்றவை'யாக (Without Area Restriction) அமைந்துள்ள நிலையிலும் இவற்றின் பிற அழை பெயர்களில் நிலவிடும் வாழ்விட வரன்முறையைச் சுட்டிக் காட்டி இவ்வினக்குழுவினரைப் பிரித்துக் காட்டிடும் போக்கு தொடரவே செய்கிறது.

இனக்குழுவினராகக் கருதப்படும் தவறான புரிதலும் ஏற்பட்டுவிட்டது. சான்றாகக், குறவர் இனக்குழுவினரை ‘மலைக் குறவன்' எனும் போது ‘பட்டியல் பழங்குடியினரா'கவும் ‘குறவன், சித்தனார்' எனும் போது ‘பட்டியல் சாதியனரா’கவும் (26 உள் பிரிவுகளைக் கொண்ட), ‘கொறவர்' எனும் போது ‘மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரா'கவும் 'சீர் மரபின'ராகவும் ‘எருக்கலா’ எனும் போது 'பிற்பட்ட வகுப்பினரா'கவும் அடையாளப்படுத்தி, வெவ்வேறு முன்னுரிமைப் பட்டியல்களில் இடம்பெறச் செய்துள்ள சமூக அநீதி மேலோங்கியுள்ளது.

இக்குறவர் இனக்குழுவினர்க்குச் ‘சமுதாயச் சான்று' (Community Certificate) வழங்கிடும் மாநில வருவாய்த் துறையினரோ இவ்வுண்மையை உணரத் தவறிய நிலையில் அதாவது, ஒரே இனக்குழுவினர் ‘புறத்தாரால்’ (Outsiders) மாறுபட்ட அழை பெயர்களால் வேறுபட்ட இனக்குழுவினராகத் தவறாக அடையாளப்படுத்தப்படும் போது - ஒரே இனக்குழுவைச் சார்ந்த மக்களுக்குப் பல் வேறுபட்ட சமுதாயச் சான்றுகள் வழங்கிடும் போக்கு தொடரக் காண்கிறோம். இத்தகைய சமூக அநீதிக்கு உள்படுத்தப்படுவோராகக் ‘குறவர் இனக்குழுவினர்’ இன்று வரை ஆள்படுகின்றனர்.

சான்றாகக், 'குறவன், சித்தனார்' என்பது தமிழ்நாட்டில் காணப்படும் பட்டியல் சாதியினர் என அடையாளப்படுத்தப்படும் நிலையில், 'மலைக்குறவன்' என்று பட்டியல் சாதியினர்க்கான சமுதாயச் சான்று கோரும் இனக்குழுவினரைப் பட்டியல் சாதியினரான ‘குறவன், சித்தனார்' என்றோ அதனினும் சமுதாய நிலையில் மாறுபட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது சீர் மரபினர் என்கிற நிலையில், ‘கொறவர்' என்றோ பிற்பட்ட வகுப்பினரான ‘எருக்கலா’ என்றோ தவறாக அடையாளப்படுத்தித் தவறான சமுதாயச் சான்றுகளை வலிந்து வழங்கிடும் அரசு அலுவலரான வருவாய்த் துறையினரிடமும் ஏற்கனவே வழங்கப்பட்ட சமுதாயச் சான்றைக் கூர்நோக்குக் குழுவில் சீர் தூக்கிப் பார்க்கும் பழங்குடி நலத் துறையினரிடமும் உண்மையை உய்த்துணர வேண்டிய சமூக அறிவியலாளரான மானிடவியலாளரிடமும் குறவர் இனக்குழுவினரைத் தவறாக அறிந்தேற்பு செய்திடும் போக்கே இனங்காணப்படுகிறது.

‘மலைக்குறவன்’, 'குறவன், சித்தனார்', 'குளுவன்', ‘கொறவர்', ‘காக்காலன்’, ‘கொறகா', 'எருக்கலா', எனப் பல்வேறு மாநிலங்களில், பல்வேறுபட்ட அழை பெயர்களில் அடையாளப்படுத்தப்படும் இவ்வினக்குழுவினர் அனைவருமே குறிஞ்சித் திணையின் மூத்த குடிகளாகிய 'குறவரே’. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ‘சென்னை மாநிலம்' (Madras Presidency) என ஒரே நிலப்பரப்பாகத் திகழ்ந்து, நாடு விடுதலை அடைந்த பின்னர் ‘மொழிவழி மாநிலங்களாகப்' (Linguistic States) பிரிந்துள்ள நிலையிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பரப்பு முழுவதும் வாழ்ந்து வந்த ‘குறவர் இனக்குழு'வானது இன்று தமிழ்நாடு, கேரளம், கருநாடகம், ஆந்திரம், தெலுங்கானா, மராட்டியம் மட்டும் அல்லாமல், பிற வட மாநிலங்களான மத்தியப் பிரதேசம், இராஜஸ்தானம், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் உள்ளிட்டவற்றிலும் இனங்காணப்படும் இனக்குழுவாகப் பரந்துபட்ட நிலையில் அமைகிறது.4 இம்மக்கள் அனைவருமே 'குர்5 என்கிற ஒற்றை இனக்குழுவினரே; இவர்கள் அனைவருடைய பேசு மொழியும் 'குர்ரு வாத்தா’6 என்கிற ஒற்றை மொழியே. 'குற்றப் பரம்பரைச் சட்டம்'7 எனப் பரவலாக அறியப்படும் ‘குற்றப் பழங்குடிச் சட்டத்தி'ன் (Criminal Tribes Act) வழியே, ‘ஆங்கிலேயக் காலனிய ஆட்சியாளரா’ல் (British Colonial Rulers) பிரித்தாளப்பட்ட மரபார்ந்த இத்தொல்குடியினரை இன்றைய விடுதலையுற்ற இந்தியாவிலும் ஐந்து வேறுபட்ட முன்னுரிமைப் பட்டியல்களிலும் பிரித்துப், பிரித்து இடம்பெறச் செய்துள்ளமை சமூக அநீதி கோலோச்சும் அவல நிலையே.

நிறைவுரை:-

‘சாத்தப்பாடி’, 'மேனப்பாடி', 'காவடி', மற்றும் ‘மேன்றுகுத்தி’, ‘மேலூத்தன்' என்னும் 4 குலப் பிரிவுகளே இன்று அனைத்துக் குறவர் குடியினரது ‘சமூக அமைப்பி’ல் (Social Structure) இனங்காணப்படும் நிலையிலும் இவ்வினக்குழுவினரை எல்லா முன்னுரிமைப் பட்டியல்களிலும் இடம்பெறச் செய்துள்ளமை சரியான போக்கு அல்ல என்பதை உணர்த்தக் காணலாம்.8

ஆங்கிலேயரது ஆட்சிப் பிடியிலிருந்து இந்தியா விடுதலை அடைந்து 77 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் தொடர்ந்து குறிஞ்சித் திணையின் தொல் குடிகளான குறவர் இனக்குழுவினர்க்கு இழைக்கப்படும் இத்தகைய சமூக அநீதிக்கு இனியாவது முற்றுப் புள்ளி இடவேண்டும். ஒரே இனக்குழுவைச் சேர்ந்தோரை அரசின் அனைத்து முன்னுரிமைப் பட்டியல்களிலும் இடம்பெறச் செய்துள்ள தவறான போக்கானது முற்றாக மறையும் வகையில், அனைத்து அரசு அலுவலரும் சமூக அறிவியலாளரும் ஓர் அணியில் ஒருங்கு திரண்டு, குறவர் இனக்குழுவினர்க்கான சமூக நீதியை மீட்டெடுக்க வேண்டும் என்பதே நம் அனைவருடைய விருப்பமாக விளங்கட்டும்.

அடிக் குறிப்புகள்

குறவரும் வேடரும் ஒரே இனக்குழுவினரே எனச் ‘சீ காளத்திப் புராணம்’ குறிப்பது இங்கு ஆழ்ந்து நோக்கத் தக்கது. 'திண்ணப்பன்' எனும் இனக்குழுத் தலைவன் ‘கண்ணப்பன்' என்று ஆன தொன்மைக் கதையைச் சுட்டும்போது, ஒரு பாடலில் அவரைக் ‘குறவர்' என்றும் மற்றொரு பாடலில் அவரையே 'வேடர்' என்றும் குறிப்பது ஆழ்ந்து கருதத் தக்கது.

குமரி மாவட்ட வேளிமலைக் குமாரக்கோவிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘வள்ளிக் கல்யாணம்' எனும் வள்ளி - முருகன் திருமண நிகழ்வின் முகாமைக் கூறாக மீள நடத்திக் காட்டப்படும் 'சடங்கு ஆற்றுகை'யான (Ritual Observance) ‘படுகள நிகழ்ச்சியைக் ‘குறவர் படுகளம்' எனவும் இந்நிகழ்வின் போது கைகளில் வில், அம்பு, வேல், தடி உள்ளிட்டவற்றை ஏந்திய, குறிஞ்சி நில வீரர்களாக வேடமிட்டோரை 'வேடர்கள்' எனவும் குறிப்பிடப்படுதல் குறிஞ்சித்

திணையின் தொல் குடியினர் ஒருவரே என்பதையும் அம்மக்களே ‘குறவர்’ என்றும் ‘வேடர்' என்றும் இரு வேறு அழை பெயர்களில் குறிப்பிடப்படுகின்றனர் என்பயுைம் உணர்த்தக் காணலாம்.

ஒரே இனக்குழுவினரைப் பல் வேறுபட்ட இனக்குழுவினராக அடையாளப் படுத்துவதையும் சமூகப் பொருளியல் தளங்களில் இவர்கள் மாறுபட்டோராக அடையாளப்படுத்துவதையும் சமூகப் பொருளியல் தளங்களில் இவர்கள் மாறுபட்டோராக அமைந்துள்ளதன் அடிப்படையில் அனைத்து முன்னுரிமைப் பட்டியல்களிலும் இம்மக்களை இடம்பெறச் செய்து, அதனை இன்றளவும் நியாயப்படுத்தித் தொடர்வதையுமே 'கிட்டப்பார்வை மனப்பான்மை' என இங்கே குறிப்பிடலாகிறது.

மராட்டிய மாநிலம் சோலாப்பூர் வாழ் 'சாத்தப்பாடி' திருமிகு. மோகன் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நேர் காணல் (நாள் : 09.09.2023; இடம் : கோயம்புத்தூர்) வழியே உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இது ஆகும். தமிழ்நாட்டிலும் ஆந்திரத்தின் பெரும்பான்மைப் பகுதிகளிலும் 'குர்ரு' (Kurru) எனத் தம்மைக் குறிப்பிட்டுக்கொள்ளும் குறவர் இனக்குழுவினர் கருநாடகத்தில் ‘குட்ரு' (Kudru) எனவும் ஆந்திரத்தின் சில குறிப்பிட்ட பகுதிகளில் ‘குன்று' (Kunru) எனவும் தங்களைக் குறித்துக்கொள்வதன் அடிப்படையில், இச்சொந்த அழை பெயரான 'அகப்பெயரான’து (Endonym) *குன்று (Kunru) என்கிற மூலத் திராவிடச் (Proto-Dravidian) சொல்லாக மீட்டுருவாக்கப்படுகிறது.

இதில் இடம்பெறும் 'வாத்தா' எனும் சொல்லானது குறவர் இனக்குழுவினரது ‘பேசு மொழி'யைக் குறிக்கிறது என்பது பெறப்பட்டாலும் இச்சொல் வார் "ஊற்றுதல்” எனும் வினையடியாகத் தோன்றியது அல்லது "வாய் வழி வெளிப்படுதல்” எனப் பொருள்பட வாய் எனும் பெயரடியாகத் தோன்றியது என்று கொள்வதே பொருத்தமுடையதாகக் கருதப்படுகிறது.

'Criminal Tribes Act' என்கிற ஆங்கிலச் சொல்லை முறையற்ற வகையில் ‘குற்றப் பரம்பரைச் சட்டம்' என்று தவறாகத் தமிழ்படுத்தியது மட்டும் அல்லாமல், இன்று வரை இத்தவறான சொல்லாடலைப் பெரும்பாலோர் பயன்படுத்தக் காரணம், மூல ஆங்கிலச் சொல்லில் இடம்பெறும் 'Tribes' என்பதைத் தவிர்க்கவே ஆகும்; அதாவது, இம்மக்களைப் ‘பழங்குடிகள்' (Tribes) என அறிந்தேற்பு செய்யப்படுதலைத் தவிர்க்கும் நோக்கத்திலேயே இத்தவறான தமிழாக்கம் பயன்படுத்தலாகிறது என்பதே உண்மை.

ஒரே இனக்குழுவினரை எல்லா முன்னுரிமைப் பட்டியல்களிலும் இடம்பெறச் செய்துள்ளமை சரியான நடவடிக்கையே எனக் கருதிக்கொண்டிருக்கும் அரசு அலுவலரும் சமூக அறிவியலாளரும் இனியேனும் தங்களுடைய தவறான இக்கருத்தை மீளாய்வு செய்து உண்மையை உணர வேண்டும்.

நோக்கீட்டு ஏடுகள் (தமிழில்)

மகேசுவரன், சி., 2022, "நீலகிரியின் ம(ை)றக்கப்பட்ட மலை வேடன் பழங்குடியினர்”, 33-40. (செப்டம்பர், 2022). உங்கள் நூலகம். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.

மகேசுவரன், சி, 2024. "குமரி மாவட்ட வேளி மலைக் குமாரகோவில் முருகன் திருத்தல ‘வள்ளி திருமணத்’தில் ‘குறவர் படுகளம்’ பெறும் முகாமை” அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு ஆய்வு மலர். பழனி : இந்து சமய அறநிலையத் துறை, தமிழ்நாடு அரசு

(ஆங்கிலத்தில்)

Maheswaran, C., 2012. Koravar : The Community Status Report (Unpublished). M. Palada, Udhagamandalam : Tribal Research Centre.

Maheswaran, C., 2023. "On Undertaking of Dravidian Linguistic Study in the Context of Existence of Multiple Exonyms" (A Case Study of 'Kurru' & Their ‘Kurru Vaaththaa') 392- 396. Proceedings of the 'International Seminar on Dravidian Linguistic Research : Opportunities & Challanges. Annamalai Nagar CAS in Linguistics, Annamalai University.

Radhakrishna, Meena. 2001. Dishonoured by History : 'Criminal Tribes Act' and British Colonial Policy. OrientLongman.

நன்றியுரை :

குறிஞ்சித் திணையின் மூத்த குடிகளாகிய குறவர் இனக்குழுவினர் குறித்த ஆய்வுப் பரப்பின் மீது என் பார்வையைச் செலுத்தத் தூண்டிய அனைத்துக் குறவர் சமுதாய மக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை இங்குப் படைத்து மகிழ்கிறேன்.

- முனைவர் சி. மகேசுவரன், முதுநிலை ஆய்வுத் தகைஞர், இந்தியச் சமூக அறிவியல்கள் ஆய்வுக் குழு, மொழியியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 046