vallalarபத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்த தனித்த ஆளுமைகளில் சிதம்பரம் இராமலிங்கம் என்னும் வள்ளலார் (1823 - 1874) ஒருவர் (இனி வள்ளலார்). இவர் குறித்தப் புரிதல் இன்றைய சமூகப் பொதுவெளியில் எவ்வாறெல்லாம் உள்ளது; ஒரு மனிதர் குறித்தப் பல்வேறு புரிதல்கள் எவ்வாறு உருப்பெறுகின்றன; அவர் மறைந்து நூற்றிநாற்பது ஆண்டுகளுக்கு மேலாகக் கழிந்த பின்பும் அவர் குறித்தப் புரிதலில் உள்ள பல்வேறு பார்வைகளை விளங்கிக் கொள்வது எப்படி எனப் பல்வேறு கேள்விகளை நாம் எழுப்பிக் கொள்ள முடிகிறது. இவ்வகைக் கேள்விகளுக்கான உரையாடல்கள் மூலம் வள்ளலாரை அறிமுகப்படுத்தும் நோக்கம் இப்பகுதியாகும்.

வள்ளலாரை அறிமுகப்படுத்துவதற்கான அடிப்படை எடுகோளாக திருவாளர் ஆ.பாலகிருஷ்ண பிள்ளை (1890 - 1960) பதிப்பித்துள்ள பன்னிரண்டு தொகுதிகளைக் கொள்கிறேன். வள்ளலார் ஆக்கங்களுக்குத் தர்க்கபூர்வமாகவும் முழுமையாகவும் வடிவம் கொடுத்திருப்பவர் ஆ.பாலகிருஷ்ண பிள்ளைதான் (இனி ஆ.பா.). தமிழ் உலகிற்கு வள்ளலாரை முழுமையாகவும் முதன்மையாகவும் அறிமுகப்படுத்திய ஆ.பா. அவர்கள் பற்றியும் பதிவு செய்வது அவசியம்.

‘பருந்தும் நிழலும்’ (1956) எனும் ஓர் மொழிபெயர்ப்புத் தொகை நூல் - மூலமும் உரையும் என்ற ஆக்கத்தை ஆ.பா. உருவாக்கியுள்ளார். இந்நூலில் அவர் பற்றிய ஆசிரியர் குறிப்பு பின்கண்ட வகையில் அமைந்திருப்பதைக் காணலாம்.

“ஆங்கிலத்தினின்று இதைத் தமிழில் பெயர்த்து உரை எழுதி வெளியிடுபவர்: சென்னைப் பச்சையப்பன் கலாசாலையில் தத்துவ நூல் ஆசிரியராகவும் சென்னைச் சட்டக் கலாசாலையில் அறநூல் ஆசிரியராகவும் சென்னை இந்து சமய மத தர்ம பரிபாலன போர்டில் செக்ரடெரியாகவும் கமிஷனராகவும் இருந்த திருவாளர் ஆ. பாலகிருஷ்ண பிள்ளை பி.ஏ., எம்.எல்., அட்வொகேட் அவர்கள்”.

இதன் மூலம் ஆ.பா. அவர்களின் பின்புலத்தை அறியமுடிகிறது. தமிழியல் ஆய்வில் சட்டம் படித்தவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. கா.சுப்பிரமணியப் பிள்ளை (1888 - 1945), சு.அனவரத விநாயகம் பிள்ளை (1877 - 1940), ச.வையாபுரிப்பிள்ளை (1891 - 1956) ஆகியோர் வழக்கறிஞர்களாகவும் தமிழியல் ஆய்வாளர்களாகவும் இருந்தனர்.

அந்த மரபில் உருவானவர் ஆ.பா. இவரது ‘பருந்தும் நிழலும்’ நூலுக்கு சிறப்புப் பாயிரம் எழுதிய சு.அனவரத விநாயகம் பிள்ளை அவர்கள் ஆ.பா. பற்றி எழுதும் குறிப்பு கவனத்தில் கொள்ளத்தக்கது. “எனது நண்பர் ஆ.பாலகிருஷ்ண பிள்ளையவர்கள் இயற்றிய “பருந்தும் நிழலும்’ என்னும் இவ்வுரை நூல் தமிழ் மொழிக்குப் புதிதாயதொன்று.

கார்லைஸ், எமர்சன், தோரோ, ரஸ்கின் முதலிய ஆங்கிலப் பெரும் புலவர் நூல்களை எவரே இவர்க்கு முன் தமிழில் மொழிபெயர்க்கத் துணிந்தார்?”..... (1956. சிறப்புப் பாயிரம்). மேலும் இந்நூலில் முகவுரையாக தமிழ் உரைநடை வரலாறு குறித்து ஆங்கிலத்தில் ஆ.பா. எழுதியுள்ள நீண்ட கட்டுரை அவரது நவீனத் தமிழ்ப் புலமைக்குக் கட்டியம் கூறுகிறது.

ஆ.பா. எனும் மனிதர் ஆங்கில இலக்கிய உலகின் பல்வேறு பரிமாணங்களை அறிந்தவர். தர்க்க பூர்வமாக எழுதும் தமிழியல் ஆய்வு நெறிக்கு உரியவர். சட்ட நுணுக்கங்கள் அறிந்த வழக்கறிஞர். இப்பண்புகள் கைவரப்பெற்ற இப்பெரியவர், தத்துவம் பயிற்றும் ஆசிரியராகவும் சட்டம் பயிற்றும் ஆசிரியராகவும் இந்து அறநிலையத்துறை நிர்வாக அலுவலராகவும் இருந்தவர்.

இந்தப் பின்புலத்துடன் இவர் வள்ளலார் ஆக்கங்களைப் பதிப்பித்திருக்கிறார். சட்டம் மற்றும் அகராதித்துறையில் வல்லுநரான ச.வையாபுரிப்பிள்ளை, சங்க இலக்கியங்களுக்கான ஒரு தனித்த பதிப்பை உருவாக்கியது போல், ஆ.பா. எனும் தத்துவ - சட்ட அறிஞரும் வள்ளலாரைப் பதிப்பித்தார்.

இந்தப் பின்புலத்தோடு வள்ளலாரைப் புரிந்து கொள்ள, ஆ.பா. அவர்களின் பதிப்புப் பணி உதவுகிறது. எனவே, அவரது பதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு வள்ளலாரைப் புரிந்து கொள்ள முயலுதல் அவசியம்.

இங்கு ஒன்றைப் பதிவு செய்ய வேண்டும்: வள்ளலார் குறித்த அனைத்து ஆக்கங்களையும் விரிவான விவரக் குறிப்புகளோடு பதிவு செய்யப்பட்டிருக்கும் ஆய்வாளர் வி. தேவேந்திரனின் வள்ளலார் குறித்த இக் கைநூலைப் பார்க்கும் வாய்ப்புள்ளவர்களுக்கு, வள்ளலார் பற்றிய அறிமுகம் மற்றும் புரிதல் அவசியம். அதனை நிறைவேற்றவே இப்பகுதியை எழுதுகிறேன். அதற்கான மூலமாக ஆ.பா. அவர்களின் பதிப்புக்களைக் கொள்கிறேன்.

வள்ளலாரைப் புரிந்துகொள்ள கீழ்க்காணும் வகையில் தொகுத்துக் கொள்வோம். அதன் மூலம் வள்ளலாரின் காலத்தையும் கருத்தையும் உள்வாங்க முடியும். தனிமனித வழிபாடாக அமையாது, தர்க்கப் பாங்கில் ஒரு மனிதனைப் புரிந்து கொள்ளவும் அது உதவும். தமிழ்ச் சமூகத்தில் கடவுளாக வழிபடப்படும் ஒரு மனிதர் பற்றிய புரிதலை உருவாக்குவது என்பது ஒரு சிக்கலான பணி. ஆனால் ஆ.பா. அவர்களின் பதிப்பு வழி, அச்சிக்கலைக் கடந்து வள்ளலாரைப் புரிந்து கொள்ள முடிகிறது.

- சைவ சித்தாந்த மரபில் திருமூலருக்கு தனித்த இடமுண்டு. இவரது காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு என்கிறார்கள். இவரது ஆக்கங்களில் உள்ள மொழி அமைப்பிற்கும் சொல்லப்படும் காலத்திற்குமான உறவு தர்க்கமாக இல்லை. இவரது மொழி தனித்தது. இவரது செல்வாக்கு வள்ளலாரிடம் வளமாகவே உள்ளது. திருமூலரை வள்ளலார் உள்வாங்கியிருக்கிறார். இத்தன்மைகள் குறித்தும் உரையாட ஏதுண்டு.

- தமிழ்ப் பக்திப்பாடல்களாக அமைந்த தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை உருவாக்கியவர்கள், தமிழ்த் தோத்திர மரபை உருவாக்கியவர்கள். கோயில் வழிபாட்டோடு இம்மரபு செழுமையாக வளர்ச்சியுற்றது. இம்மரபில் திருஞானசம்பந்தர் (7 ஆம் நூ.), திருநாவுக்கரசர் (7ஆம் நூ.), சுந்தரர் (8ஆம் நூ.), மாணிக்கவாசகர் (9ஆம் நூ.) ஆகிய நால்வர் முதன்மையானவர்கள். இதில் மாணிக்கவாசகர் பல்வேறு தனித்தன்மைகளைக் கொண்டவர். வள்ளலாரிடம் மாணிக்கவாசகரின் தாக்கம் வலுவாக உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டு மாணிக்கவாசகராக வள்ளலாரை ஒருவகையில் காணமுடியும்.

- தமிழ்ப் பக்தி மரபில் பட்டினத்தார் என்ற பெயரில் மூவரைக் குறிக்கிறார் மு. அருணாசலம் (1909 - 1992). திருமுறைப் பட்டினத்தார் (10 ஆம் நூ.), சித்தர் பட்டினத்தார் (14 ஆம் நூ.), பிற்காலப் (போலிப்) பட்டினத்தார் (17ஆம் நூ.) (தமிழ் இலக்கிய வரலாறு, 10 ஆம் நூ.). இம்மூன்று பட்டினத்தார் பாடல்களின் வடிவத்தில் வள்ளலார் பாடல் வடிவங்களும் அமைந்திருப்பதைக் காண்கிறோம்.

- முருக வழிபாட்டை முதன்மைப்படுத்திய அருணகிரிநாதர் (15ஆம் நூ.) தாக்கத்தையும் வள்ளலாரிடம் காணமுடிகிறது. அருணகிரிநாதரின் இசைமரபு வள்ளலாரிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை விரிவாகவே கண்டறிய முடிகிறது. இவ்வகையில் இரண்டாம் பக்தி இயக்கத்தின் முதன்மையானவராகக் கருதப்படும் அருணகிரியை வள்ளலார் உள்வாங்கியுள்ளார்.

- பதினெட்டாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க பக்திப் பாடல்களைப் பாடிய தாயுமானவர் (1706 - 1744) மரபுகள் பலவற்றை வள்ளலாரிடம் கண்டறியலாம்.

வள்ளலாரின் பக்தி சார்ந்த பாசுரங்கள் என்பவை திருமூலர், மாணிக்கவாசகர், பட்டினத்தார்கள், அருணகிரிநாதர், தாயுமானவர் ஆகிய தமிழ் பக்திமரபில் வளமிக்க ஆளுமைகளின் தாக்கங்களை உள்வாங்கியவை. இதன் மூலம் வள்ளலார், தமிழ் பக்தி மரபின் பத்தொன்பதாம் நூற்றாண்டின் வடிவமாக அமைகிறார்.

ஆனால் இம் மரபை உள்வாங்கி, அதிலிருந்து ஒரு கட்டத்தில் தன்னை விடுவித்துக் கொள்ளவும் செய்கிறார். இவ்வகையில் ஆ.பா. அவர்கள், வள்ளலாரின் ஆக்கங்களைப் பதிப்பித்துள்ள முறை சார்ந்து, கால ஒழுங்கில் அவற்றை எப்படி வகைப்படுத்த இயலும் என்ற உரையாடலும் தேவை. இதனைப் பின்வரும் வகையில் தொகுத்துக் கொள்ள இயலும். இதன் வழி வள்ளலாரைப் புரிந்துகொள்ள முடியும்.

- முதல் திருமுறை அல்லது பெருநூல் பகுதி, இரண்டாம் திருமுறையும் அல்லது திருஒற்றியூர்ப் பகுதி, திருத்தணிகைப் பகுதி, நான்காம் திருமுறைப் பகுதி ஆகியவை முறையே ஏழு, எட்டு, ஒன்பது மற்றும் பத்தாம் புத்தகத்தின் ஒரு பகுதி ஆகியவை ஆகும். ஆ.பா. அவர்களின் இப்பதிப்பு சார்ந்து வள்ளலாரின் இளமைக் காலம் முதல் கி.பி. 1865 ஆம் ஆண்டுவரை உள்ள ஆக்கங்களாக இவற்றைக் கருதலாம்.

- வசனப்பகுதி, வியாக்கியானப்பகுதி, உபதேசப் பகுதி ஆகியவை மநுமுறைகண்ட வாசகம் (1854) நூலைத்தவிர, பிற நூல்கள் கி.பி. 1865 முதல் அவரது இறுதிக் காலம் வரை உருவான ஆக்கங்கள் என்று கொள்ள முடியும். ஆ.பா. அவர்களின் இரண்டாம் புத்தகம், மூன்றாம் புத்தகம், நான்காம் புத்தகம் ஆகியவை இதில் அடங்கும்.

- ஆறாம் திருமுறை முன்பகுதியும் அல்லது பூர்வ ஞான சிதம்பரப்பகுதி, ஆறாம் திருமுறை இடைப்பகுதி அல்லது உத்தர ஞான சிதம்பரப் பகுதி, ஆறாம் திருமுறை முடிந்த பகுதி அல்லது சித்தி வளாகப் பகுதி என்பவையும் கி.பி. 1865 ஆம் ஆண்டு தொடக்கம், அவரது இறுதிக் காலம் வரையில் உருவான ஆக்கங்களாகும். ஆ.பா. அவர்களின் நான்காம் புத்தகத்தின் ஒரு பகுதி, பத்தாம் புத்தகம், பதினொன்றாம் புத்தகம், பன்னிரண்டாம் புத்தகம் ஆகியவை இவ்வகையில் அடங்கும்.

- கீர்த்தனைப் பகுதி, திருமுகப்பகுதி, தனிப்பாசுரப் பகுதி ஆகியவை முதல், ஐந்து, ஆறாம் புத்தகங்களாக ஆ.பா. பதிப்பித்துள்ளார். இவை முதன் முதலாக ஆ.பா. அவர்களே கண்டறிந்து பதிப்பித்தவை பெரும்பான்மையாகும். இவை வள்ளலாரின் அனைத்துக் காலச் சூழலிலும் உருவாக்கப்பட்ட ஆக்கங்கள் ஆகும்.

ஆ.பா. அவர்களின் பதிப்பு நூல்களை, கால ஒழுங்கில் வள்ளலாரைப் புரிந்து கொள்வதற்கான ஒரு முயற்சி சார்ந்து மேலே குறித்தவாறு தொகுத்துக் கொண்டிருக்கிறேன்.

இத்தொகுப்பு சார்ந்து ஆ.பா. அவர்கள் இப்புத்தகங்களில் பேசப்படும் செய்திகளை தமது பாயிரப் பகுதியில் உரையாடலுக்கு உட்படுத்தியிருக்கிறார். அவரது விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வள்ளலாரைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

வள்ளலாரின் தொடக்ககால ஆக்கங்களாக அமையும் ஏழு, எட்டு, ஒன்பது மற்றும் பத்தாம் புத்தகத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ளவற்றின் அடிக்கருத்தாக அமையும் தன்மையை ஆ.பா. பின்வருமாறு பதிவுசெய்கிறார்.

“இதன் முதல் நூல் திரு அடிப்புகழ்ச்சி. இதன் தொடக்கத்தில், நம் பெருமானார் வேதாந்தம் அல்லது உபநிஷத்துக்களின் அடி நடு முடிகளாக விளங்கும் அரும்பெருங் கருத்துக்களைத் தெரிவிக்கும் வடமொழிச் செஞ்சொற்களைக் கொண்டு, இறைவன் திருவடியை வழுத்துகிறார்கள். இதனை அடுத்து “விரிகலை” என்று ஆன்றோர் போற்றும் ஆகமாந்தத்தின் முடிவான உபதேசங்களைக் கொண்டு, எல்லையற்ற இன்பம் தரும் இறைவனது திருவடியைப் போற்றுகிறார்கள்.

இதன் பின்பு, பலவாய் விரிந்த புராண முடிபுகளின் உட்கிடையை விளக்குமுகத்தான், இறைவன் திருத்தாளினை இறைஞ்சுகிறார்கள். இறுதியில், நம் தமிழகத்தின் வரம்பற்ற செம்பொருட் செல்வங்களாகிய தேவார திருவாசகங்கள், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம் முதலிய அருள் நூல்களின் உயிர்ப் பகுதிகளில் சிற்சில கூறித் தம்மை மறந்து அருளமுதம் உண்டு தேக்குகிறார்கள்.

இந்நூலின் தொடக்கம் முழுதும் தத்துவச் செம்பொருள் நிறைந்த வடமொழிச் சொற்கள் நிரம்பியிருத்தலால், அவற்றைச் சிறிதளவிலாவது தமிழ்ப் பெருமக்கள் விரும்பிப் பின்பற்றும் பொருட்டு, இந்நூலின் அநுபந்தத்தில் அவற்றின் விளக்கம் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒருவாறு கூறியிருக்கிறது” (ஆ.பா. பதிப்பு, ஏழாம் புத்தகம், பாயிரம், ப. 11).

ஆ.பா. அவர்கள் “திரு அடிப்புகழ்ச்சி” என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு, மேற்குறித்த கருத்தைப் பதிவு செய்திருந்தாலும் வள்ளலாரின் முதல் ஐந்து திருமுறைகளில் அமைந்துள்ள பாசுரங்களின் உட்கருத்து இந்த அடிப்படையைச் சார்ந்து பெரும்பான்மையாக அமைந்திருப்பதைக் காணமுடியும்.

திருமூலர் காலம் தொடங்கி, தாயுமானவர் காலம் வரை தமிழ்ச் சிந்தனை மரபில் உருப் பெற்றிருந்தவற்றின் தொடர்ச்சியாகவே வள்ளலார் அமைகிறார். வேதாந்த மரபு தமிழ்ப் பக்தி இயக்கப் போக்கில் செலுத்திய செல்வாக்கை, வள்ளலாரிடமும் காண முடிகிறது. வேதாந்தம், சித்தாந்தம் இவற்றின் இணைவாகவே தமிழ்ப் பக்திப் பாசுரங்கள் அமைந்துள்ளன. இதனை திருமூலர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், தாயுமானவர் ஆக்கங்களில் கண்டறிய முடியும்.

இதனை வள்ளலார் தமது மஹாதேவ மாலை எனும் நூலில் பின்வருமாறு பதிவு செய்கிறார்.

“வேதாந்த நிலையாகிச் சித்தாந் தத்தின்
மெய்யாகிச் சமரசத்தின் விவேக மாகி
நாதாந்த வெளியாகி முத்தாந் தத்தின்
நடுவாகி நவநிலைக்கு நண்ணா தாகி
மூதாண்ட கோடியெல்லாம் தாங்கி நின்ற
முதலாகி மனாதீத முத்தி யாகி
வாதாண்ட சமயநெறிக் கமையா தென்றும்
மவுனவியோ மத்தினிடை வயங்குந் தேவே”

(ஆ.பா. பதிப்பு, ஏழாம் புத்தகம், ப. 115).

வள்ளலார் இவ்வாறு வேதாந்தம் மற்றும் சித்தாந்தம் தொடர்பாகக் கொண்டிருந்த நிலைபாட்டை தமது பிற்காலத்தில் கேள்விக்குட்படுத்துகிறார். வேதாந்த மரபுகள் குறித்த விரிவான விமரிசனங்களை முன்வைக்கிறார். அவரது உரைநடைப்பகுதி ஆக்கங்கள், ஆறாம் திருமுறைப் பாடல்கள் ஆகியவற்றில் இதனை நாம் காணமுடியும். இவ்வகையில் ஒரு இயல்பான சமூக மாற்றம் சார்ந்த புரிதலைக் கொண்டிருந்த மனிதராக இருக்கிறார். எல்லாக் காலங்களிலும் ஒரே கருத்தைப் பற்றி மட்டும் பேசியவர் அல்லர். பக்திப் பாசுர மரபில், ஒரே செய்தியே மீண்டும் மீண்டும் பேசப்படும். ஆனால் வள்ளலார் அம்மரபைக் கைக்கொண்டவரில்லை. கால வளர்ச்சியோடு தன்னை வளர்த்துக் கொண்டவர். பத்தொன்பதாம் நூற்றாண்டு சமூக இயங்கியலை உள்வாங்கியவர் என்றே கருத முடியும். அவரது ஆக்கங்கள் முழுமையாக கால ஒழுங்கில் தர்க்கபூர்வமாக வாசிக்கும் வாய்ப்புப் பெற்றவர்கள் இதனை உணர முடியும். மாறாக, பக்தி வயப்பட்ட மனிதர்களால் வள்ளலாரின் இம்மாற்றத்தை வெறும் சீர்திருத்தமாகவே புரிந்து கொள்ள இயலும்.

                                                                             o o o 

வள்ளலாரின் முதல் ஐந்து திருமுறை மரபிலிருந்து மாற்றம் பெற்று புதிதாக அவர் வரித்துக் கொண்ட பகுதிகளாக வசனப் பகுதி, வியாக்கியானப்பகுதி, உபதேசப்பகுதி என அமையும் இரண்டு, மூன்று, நான்காம் புத்தகங்களைக் கருதலாம். இந்த ஆக்கங்கள் குறித்த ஆ.பா. அவர்களின் மதிப்பீடுகளை நாம் இங்கு நினைவு படுத்திக்கொள்வோம்.

“இவ் வியாக்கியானங்களிலிருந்து ஸ்ரீ சுவாமிகளது வித்தியா வடிவத்தைச் சித்தரித்துக் கொள்ளலாம். எவ்வெக் கல்வித் துறையில் எவ்வளவுக் கெவ்வளவு ஞானம் அவர்கள் வாய்க்கப் பெற்றிருக்கிறார்கள் என்பதை மதிப்பிட்டுக் கொள்வதற்கு இந்நூல் மிகவும் பயன்படும்.

ஒழிவிலொடுக்க உரையினின்றும் அவர்களது சித்தாந்த ஞானத்தையும், குறட்பா உரையினின்றும் அவர்களது சித்தமார்க்க ஞானத்தையும், தமிழ் உரையினின்றும் அவர்களது மந்திர சாஸ்திர ஞானத்தையும், தொண்டைமண்டல சதக உரையினின்றும் அவர்களது இலக்கிய இலக்கண தர்க்க ஞானத்தையும், பெரிய புராண உரையினின்றும் அவர்களது வேதாகம தத்துவாநுபவ ஞானத்தையும் அறிந்து கொள்ளலாம். அவர்கள் அறிவு ரூபமான இக்காலத்திய சன்மார்க்க இயக்கத் தலைவர் என்பது அவர்கள் வேதாகமாதிகளுக்கு அறுதியிட்டிருப் பதின்றும் போதரும்” (ஆ.பா. பதிப்பு, மூன்றாம் புத்தகம், பாயிரம், ப. 21).

மேலும் உபதேசப் பகுதி மூலம் வள்ளலார் பதிவு செய்துள்ளதை ஆ.பா. அவர்கள் பின்வருமாறு எழுதுகிறார்.

“ஜாதி ஆசாரம், குலாசாரம், ஆசிரமாசாரம், சமயாசாரம், மதாசாரம், கலாசாரம், சாத்திராசாரம் முதலியன ஒழிந்து சன்மார்க்க சத்திய ஞானசாகரம் ஒன்றே, அதாவது, பெருந்தயவே வடிவமாக இருப்பதொன்றே” (ஆ.பா. பதிப்பு, நான்காம் புத்தகம், பாயிரம், பக். 22).

வள்ளலார் உருவாக்கிய சன்மார்க்க சங்கம் (1865), சத்திய தருமச் சாலை (1867), சித்தி வளாகம் (1870), சத்திய ஞானசபை (1872) ஆகிய அமைப்புகளைப் புரிந்து கொள்ள ‘உபதேசப்பகுதி’, ‘வியாக்கியானப் பகுதி’ ஆகியவை பெரிதும் உதவுகின்றன. இளமைக் காலம் முதல் கடவுளைப் பாடிப் பரவிய மனிதர், பிற்காலங்களில் அதன் வளர்ச்சியாக அமைப்புகளை உருவாக்குகிறார்.

அதற்கான விரிவான உரையாடல்களை நிகழ்த்தியுள்ளார். இப்பகுதிகளில் பேசப்படும் செய்திகள், தனது முன்நிலையிலிருந்து மாற்றம் பெற்ற மனிதராக வள்ளலாரைக் காணமுடிகிறது. தருமச் சாலையின் கிளை நிறுவனங்களாக வைத்தியசாலை, சாஸ்திரசாலை, உபகார சாலை, உபாசனா சாலை, யோக சாலை, விவகார சாலை ஆகிய பல்வேறு அமைப்புக்களையும் உருவாக்கத் திட்டமிட்டிருந்தார்.

மேலும் ‘சன்மார்க்கப் போதினி’, ‘சமரச வேத பாடசாலை’ ஆகிய பாடசாலைகள் உருவாக்கத் திட்டமிட்டார். “சன்மார்க்க விவேக விருத்தி” எனும் இதழையும் நடத்தத் திட்டமிட்டிருந்தார். இவை நடைமுறைக்கு வரும் முன்னே அவரது மறைவு நிகழ்ந்துவிட்டதைக் காண்கிறோம். இத்தன்மைகளின் விரிவான பதிவுகளை அவரது இறுதிக்கால பாசுரமான ஆறாம் திருமுறைகளிலும் பதிவு செய்திருக்கிறார்.

                                                                                       o o

ஆ.பா. பதிப்பித்துள்ள நான்காம் புத்தகத்தின் ஒருபகுதி, பத்தாம் புத்தகம் முதல் பன்னிரண்டாம் புத்தகம் வரை அவரது இறுதிக்காலப் பதிவுகள் ஆகும். இதனை ஆறாம் திருமுறை என்று அழைக்கிறோம். இப்பகுதியில் அமைந்துள்ள “பிள்ளைச் சிறு விண்ணப்பம்”குறித்து ஆ.பா. அவர்கள் தரும் விளக்கம் பின்வருமாறு அமைகிறது.

“தம் உடம்பிலோ அல்லது மண் விண் உலகங்களின் ஆட்சிகளிலோ தமக்கு விருப்பம் இல்லை என்றும்; சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய சாதனங்களிலாவது, பிறப்பிறப்பு, புகழ், சித்திநிலைகள் ஆனவற்றிலாவது தமக்கு ஒருபோதும் ஆசை இருந்ததில்லை என்றும்; சன்மார்க்கர்களோடு இருந்து இறைவனைப் பாடி ஆடுதலிலும், இறைவனோடு கலந்து நின்று, உயிர்த்திரளினை எல்லாம் தாமாகக் கருதி அவற்றிற்கு உற்றவை புரிந்து, அவற்றை எல்லாம் இறைவனுக்கு அடிமை ஆக்குவித்தலிலும், சிதம்பரத் திருக்கோயிலை மறைகளும் ஆகமங்களும் சொன்னவாறு அமைத்தலிலும், சன்மார்க்க சங்கமும் சங்கக் கோயிலும் காண வைத்தலிலும், புலை கொலை ஒருவிய திருநெறியில் உலகெலாம் நடக்க உஞற்றுதலிலும், இவற்றைச் சார்ந்த பிறவற்றிலுமே தமது இச்சை இயங்குகிறது என்றும்; உயிர்த்துன்பம் போக்குதல் உள்ளிட்ட மேற்சொன்ன நவையில் நல்வரங்களைத் தமக்கு அளித்தருளல் வேண்டும் என்றும் இன்னோர் அன்ன இன்மொழியில் இயம்பி என்பும் இளக இறைவனிடம் மன்றாடுதலைப் பன்னாள் ஓதியும் ஓர்ந்தும் உணர்ந்தும், பிள்ளைத் தன்மையின் பெரும் பேற்றினை மேற்கொண்டமைக” (ஆ.பா. பதிப்பு, பத்தாம் புத்தகம், ப. 104).

ஆறாம் திருமுறைப் பாடல்கள் பலவற்றிலும் இறைவனை நோக்கிய தமது வேண்டுதல் என்பது, இதற்குமுன் இருந்த வேண்டுதல் மரபிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருப்பதைக் காணமுடியும். திருமூலர் முதல் தாயுமானவர் வரை உருவாக்கிய பாசுர மரபுகள், இறைவனை எப்படி வழிபட்டனவோ அந்த மரபில்தான் வள்ளலாரும் தமது கி.பி. 1865 ஆம் ஆண்டுகட்கு முற்பட்ட காலங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

முதல் ஐந்து திருமுறைகளாக அவை தொகுக்கப்பட்டுள்ளன. இப்பகுதியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, பின்னுள்ள பகுதிகளில் ஒளி வழிபாட்டை முன்னிருத்தி வள்ளலாரைப் புரிந்து கொள்ளும் பக்தர்கள், அவரைச் சைவ மரபின் ஒரு பகுதியாகவே கருதுகின்றனர்.

இவ்விதம் சொல்லுவதில் அவர்களுக்குச் சிக்கல் இல்லை. சமூக நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட சாதிமறுப்பு, மதமறுப்பு, வேதமறுப்பு, ஆகம மறுப்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தும் வள்ளலாரை முழுமையாக உள்வாங்குவதிலும் சங்கடம் இருப்பதாகவே நாம் புரிந்து கொள்ளவேண்டும். அப்படி அதைப் பேசினாலும் ஒரு சடங்காச்சாரமாகவே பேசுவர்.

வள்ளலாரின் முதல் ஐந்து திருமுறைகளைப் பதிப்பித்து வெளியிட்ட அவரது தலைமாணாக்கராகிய தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்கள், ஏன் ஆறாம் திருமுறையைப் பதிப்பிக்கவில்லை என்ற கேள்வியையும் மேற்குறித்தப் பின்புலத்தில் எழுப்புவதில் உள்ள தர்க்க நியாயத்தைப் புரிந்துகொள்வது அவசியம். ஆறாம் திருமுறையில் உள்ள பின்கண்ட பாடலை மேற்குறிப்பிட்ட பின்புலத்தில் வாசிக்கலாம்.

“சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிறுத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர் அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே”.

(ஆ.பா. பதிப்பு, பன்னிரண்டாம் புத்தகம், ப. 143)

இப்பகுதி மூலம் சாதி, மதம், சமயம், சாத்திரம், கோத்திரம் ஆகியவற்றை வள்ளலார் மறுத்து சன்மார்க்க நிலை தேவை என்று கூறுகிறார். அதற்கான தேடலையே தனது வழிபாடாக அவர் முன்னிறுத்துகிறார். இத்தன்மையை அறிவதன் மூலம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட சமூக மாற்றங்களை உள்வாங்கியவராக அவரைப் புரிந்து கொள்ளலாம். மேலும் அன்றைய ஆட்சி அதிகாரம் குறித்தும் அவர் பதிவு செய்திருக்கிறார்.

அப்பகுதி வருமாறு:

“கருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக
அருணயந்த நன்மார்க்கர் ஆள்க - தெருள்நயந்த
நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்றுநினைத்
தெல்லோரும் வாழ்க இசைந்து.”           

(ஆ.பா.பதிப்பு, பன்னிரண்டாம் புத்தகம், ப. 160)

அவர் வாழ்ந்த காலத்தில் முடியரசு ஆட்சி படிப்படியாக அழிந்து கொண்டிருந்தது. குடியரசு ஆட்சிக்கான பல்வேறு அடிப்படைகள் கால்கோளிடப்பட்டன. இதனால் தான் ‘கருணை இலா ஆட்சி’ என்று அவர் விளிக்கிறார். மநுமுறை கண்ட வாசகத்தில் வள்ளலார் பதிவு செய்துள்ள செய்திகளை இங்கு நினைவுப்படுத்திக் கொள்ளலாம்.

                                                                                             o o o

முதலாம் பகுதியாகிய கீர்த்தனைப் பகுதி மூலம், வள்ளலாருக்கு இருந்த இசையறிவு குறித்த விவரங்களை அறியமுடிகிறது. நமது தமிழ் இசை மரபு என்பது பண்முறையில் அமைந்தது. பரிபாடல், வரிப்பாடல், பக்திப் பாடல்களில் உள்ள பண்முறை ஆகியவை பிற தமிழ் இலக்கிய மரபில் இடம்பெற்றவை. இவ்வகையான இசைமரபு தொடராமல் விடுபட்டுப் போனதைக் காண்கிறோம். ஆனால் வள்ளலார் இசை மரபில் தொடர்ச்சியாகச் செயல்பட்டிருக்கிறார். இது தொடர்பாக ஆ.பா. அவர்கள் (முதலாம் புத்தகம், ப.28) செய்துள்ள பதிவு கவனத்தில் கொள்ளத்தக்கது. அப்பகுதி வருமாறு:

“சீர்காழி ஸ்ரீ நாராயணசாமி பிள்ளை அவர்கள் பிடில் வாசிப்பதில் மஹோன்னத நிலையை அடைந்து அந்தப் பிறநாட்டு இசைக் கருவியை இந்நாட்டில் பரவச் செய்தவர்களில் ஒருவராவார். அவர்கள் பலகால் வடலூர் சென்று, சுவாமிகளைத் தெரி­சித்து, அங்கே அப்போதப்போது சிற்சிலகாலம் வசித்து வந்தார்கள் என்றும்; சுவாமிகளிடத்­திலிருந்தே சங்கீத வித்தையின் நுட்பங்களை அவர்கள் கற்றுக் கொண்டார்கள் என்றும்; பலதடவை சுவாமிகள் பாட, அவர்கள் பிடில் வாசித்து மகிழ்ந்தார்கள் என்றும்; சுவாமிகளுக்கு ஒப்புயர்வற்ற கின்னர ஸ்வரம் என்றும்; தாம் கண்ட மற்றைய பாடல்களில் சிறந்தவை மனமுருக்கும் தன்மையனவாக, சுவாமிகளின் பாடல்கள் மனத்தை உருக்குவதோடு நில்லாது எலும்பையும் உருக்கும் தன்மையன என்றும் சொல்லி ஆனந்தமடைவார்கள் என்றும் அவர்களே நேரே சொல்லக்கேட்ட கீர்த்தனாசாரியார் ஸ்ரீ (சி.ஸி.) ஸ்ரீநிவாசய்யங்கார் அவர்கள் (பி.எ., எல்.டி.) சொல்ல எனக்குத் தெரிந்தது” (ஆ.பா. பதிப்பு, முதல் புத்தகம், ப. 28-29).

இதன் மூலம் வள்ளலாரின் இசைப்புலமையை அறியமுடிகிறது. அவரது பாசுரங்கள் அனைத்தும் இசை வடிவில் அமைந்தவை. அவை வெகுமக்களிடம் மிக எளிதாகச் சென்றடைந்தமை என்பது அதன் இசை வலிமையால்தான். இத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் வள்ளலாரின் கீர்த்தனைப் பகுதியில் (முதலாம் புத்தகம், ஆ.பா. பதிப்பு) வள்ளலார் பாடல்கள் அனைத்திற்கும் ஸ்வரம் - தாளம் அமைத்து பதிப்பித்துள்ளார் ஆ.பா. இசைத் துறையில் இருந்த புலமையாளர்களான ஸ்ரீ (சி.ஸி.) ஸ்ரீநிவாசய்யங்கார்,

ஸ்ரீ (ழி) கோடீசுவர ஐயர், ஸ்ரீ (ழி) இராம கிருஷ்ணய்யர் ஆகியோர் வள்ளலார் பாடல்களுக்கு ஸ்வரப் படுத்தி தந்தார்கள் என்று ஆ.பா. குறிப்பிடுகிறார் (முதலாம் புத்தகம், ப.30-31). இவ்வகையில் வள்ளலாரின் இசைப்புலமைக்கான ஆவணமாக கீர்த்தனைப் பகுதி அமைந்திருப்பதைக் காண்கிறோம்.

ஐந்தாம் புத்தகமாக ஆ.பா. அவர்கள் பதிப்பித்துள்ள திருமுகப்பகுதி, வள்ளலார் குறித்து அறிய உதவும் முழுமையான ஆவணமாகும். கடிதங்கள் என்பது உள்ளத்து உணர்வுகளை நேரடியாகப் பதிவு செய்யவல்லவை. அவ்வகையில் வள்ளலாரின் வாழ்க்கை குறித்த பல்வேறு தகவல்களை அறிய திருமுகப்பகுதியே அடிப்படையாக அமைகிறது.

இதனை முதன் முதல் உலகிற்கு அறிமுகப்படுத்திய ஆ.பா. அவர்களின் பணி முக்கியமான ஒன்று. இக்கடிதங்கள் நமக்குக் கிடைக்க வில்லையெனில் வள்ளலார் குறித்த தொன்மக்கதைகளே வரலாறு ஆகிவிட்டிருக்கும். தொன்ம உலகிலிருந்து எதார்த்த உலகிற்கு வள்ளலாரை இக்கடிதங்கள் அறிமுகப்படுத்துகின்றன. இதில் வள்ளலாருக்குப் பிறர் எழுதிய கடிதங்களும் வள்ளலார் எழுதியவையும் இடம்பெற்றிருப்பது சிறப்பு. இறுக்கம் இரத்தினம் அவர்களின் கீழ்க்காணும் கடிதப்பகுதி, அருட்பா, மருட்பா உரையாடல் குறித்தப் புரிதலுக்கு வழிவகுக்கிறது.

“கூடலூரிலிருந்து மகா-ள-ள-ஸ்ரீ விசுவலிங்க வாத்தியார் அனுப்பிய பிரார்த்தனை பத்திரிகைகள் 200-ம் வந்து சேர்ந்து மதுரை, இராமனாதபுரம் திருவாவடுதுறை, பெங்களுர் முதலிய வூர்களுக்கும் தபாலிலனுப்பிவிட்டு சென்னையிலும் வித்துவான்கள் பிரபுக்கள், பண்டிதர்கள் முதலியோர்க்கும் சேர்ப்பித்தேன்.

எல்லோரும் அதிக வியப்பையும் சந்தோஷத்தையும் அடைந்திருக்கின்றார்கள். ஆனால் தாமோதரம் பிள்ளைக்கும் ஆறுமுக நாவலருக்கும் அவரைச் சார்ந்த மற்றைச் சில பேர்க்கு மாத்திரம் வெறுப்பையும் கோபத்தையும் துக்கத்தையு முண்டு பண்ணிற் றென்று கேழ்விப்படுகிறேன்” (31-3-1869) (ஆ.பா. பதிப்பு, ஐந்தாம் புத்தகம், ப.126).

இவ்வகையில் திருமுகப் பகுதி அரிய ஆவணமாகும். மேலும் ஆறாம் புத்தகமாகிய ஆ.பா. பதிப்பித்துள்ள ‘தனிப்பாசுரப்பகுதி’ பாயிரப் பகுதியில் அருட்பா தொகுத்துப் பதிப்பித்த வரலாற்றை விரிவாகப் பதிவு செய்துள்ளார். தொழுவூர் வேலாயுத முதலியார் ஆறாம் திருமுறையைப் பதிப்பிக்க முன்வராமை குறித்த குறிப்பையும் (ப.20-21) இப்பகுதியில் காணமுடிகிறது.

நாற்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக உழைத்து, 1931 ஆம் ஆண்டு தொடங்கி 1958ஆம் ஆண்டு முடிய பன்னிரண்டு புத்தகங்களாக வள்ளலார் ஆக்கங்களை ஆ.பா. வெளிக் கொணர்ந்துள்ளார். இவற்றில் ‘பாயிரம்’ என்ற பகுதியிலும், அடிக்குறிப்புக்களாகவும் பதிவு செய்துள்ள செய்திகளும் வள்ளலாரைப் புரிந்துகொள்ள உதவுபவை.

இதனை அடிப்படையாகக் கொண்டே மேற்குறித்த செய்திகளைப் பதிவு செய்துள்ளேன். வள்ளலார் குறித்த கைநூலில் திரு அருட்பா தமிழ்ச் சூழலில் அச்சிட்டு வெளியிடப்பட்டிருக்கும் முறைகள், பல்வேறு பதிப்புகள் ஆகியவை குறித்த விரிவான விவரம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

திரு அருட்பா மொழியாக்கம் குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வள்ளலாரின் உரைநடை வடிவில் அமைந்த ஆக்கங்கள் குறித்த விரிவான விவரங்கள் இடம்பெற்றுள்ளன. வள்ளலார் குறித்து நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் தொடர்பான விவரணங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

வள்ளலார் குறித்தக் கட்டுரைகள், கண்டன நூல்கள், வள்ளலார் பதிப்பித்த நூல்கள், சன்மார்க்கச் சங்கங்கள் குறித்த விவரங்கள் ஆகிய அனைத்தும் விரிவான விவரணங்களுடன் ஆவணமாக்கப் பட்டுள்ளன இக் கைநூலில். இதனை வள்ளலார் குறித்த ஆயத்த ஆவண ஏடாகக் (Ready Reference Document) கொள்ளலாம்.

இவ்வேட்டின் அருமை புரிய, அதற்கு மூலவரான வள்ளலார் குறித்தப் புரிதல் அடிப்படைத் தேவையாகும். அந்தப் புரிதலை ஆ.பா. அவர்களின் பதிப்பினை மூலத்தரவாகக் கொண்டு தெளிவுபடுத்தும் முயற்சியை மேற்குறித்தப் பகுதியில் மேற்கொண்டுள்ளேன். இக் கைநூலின் முக்கியத்துவத்தை உணருவதற்கு இப்பகுதி உதவும்.

வள்ளலார் குறித்த ஆய்வுக்குள் செயல்பட விரிவான தளங்கள் உண்டு. பெண் குறித்தப் பதிவை வள்ளலார் ஆக்கங்கள் எப்படி வெளிப்படுத்துகின்றன; அவரைச் சைவ சமய மரபினராக மட்டுமே கட்டமைப்பு செய்வது ஏன்; சித்தர் மரபில் ஒருவராக அவரைச் சேர்ப்பது சரியா; அவர் குறித்து, அவரது காலத்தில் வாழ்ந்த ச.மு. கந்தசாமி பிள்ளை, தொழுவூர் வேலாயுத முதலியார் ஆகியோர் பதிவு செய்திருக்கும் தொன்மக் கூறுகள் அடங்கிய வாழ்க்கை வரலாற்றை எப்படிப் புரிந்து கொள்வது; பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவில் உருவான பல்வேறு சீர்திருத்தவாதிகளுள் இவரும் ஒருவரா; எனப் பல்வேறு பரிமாணங்களில் அவரது வாழ்க்கைப் பயணத்தை நாம் உரையாடலுக்கு உட்படுத்தலாம். அந்த நோக்கம் இங்கு முதன்மையானது அன்று. மாறாக அவரது ஆக்கங்கள் மூலம் அவரது பல்வேறு பரிமாணங்களை, அடிப்படையான தரவுகள் சார்ந்து புரிந்துகொள்ளும் தேவை இங்கு முதன்மைப்படுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் இக் கைநூலின் முக்கியத்துவத்தை உணரலாம்.

இக்கைநூல் உருவாக்கியுள்ள ஆய்வாளர் வி.தேவேந்திரன் எனது ஆசிரியப் பணியின் இறுதிக்கால மாணவர்களில் ஒருவர். மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து சமூகம் பற்றிய இலட்சியமயப்பட்ட பார்வையுடைய இளைஞர். நேர்மை, உழைப்பு ஆகிய பண்புகளைப் பெற்றுள்ள எனது மாணவர்கள் பலர் குறித்து விரிவாகவே என்னால் பதிவு செய்ய முடியும். நேர்மை, உழைப்பு என்பதை சமூகம் சார்ந்த செயல்பாடாகவே கருதுகிறேன்.

சக உயிர்களிடத்தில் கொள்ளும் நேயமும் ஈடுபாடும் இதில் முதன்மையாக அமையும். இத்தன்மை மிக்க பல மாணவர்களை நான் பெற்றிருப்பது எனது பேறு. அவர்களிடத்தில் உயிர்கலந்து உறவாட முடிகிறது. அவர்கள் உலகம், எனது உலகம் ஆகியவை ஒன்றில் ஒன்று கலந்து போகிறது. இவ்வகையான எனது மாணவ நண்பர்களில் தேவேந்திரனுக்கு தனித்த இடமுண்டு.

வள்ளலார் குறித்த அரிய உழைப்பை மேற்கொண்டு இந்த ஆவணத்தை உருவாக்கியுள்ளார். வள்ளலாருக்கு அவர் செய்யும் அரிய கைமாறாக இது அமைகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமூகத்தின் முதன்மையான மனித ஆளுமை குறித்து ஆவணப்படுத்தியதில் தேவேந்திரன் பங்கு முதன்மையானது. தமிழ்ச் சமூகம் தேவேந்திரனை என்றும் நினைவில் கொள்ளும். தேவேந்திரனை அன்புத்தழுவ வாழ்த்தி மகிழ்கிறேன்.

சான்றாதார நூல்

பாலகிருஷ்ணபிள்ளை, ஆ., திரு அருட்பா பன்னிரண்டு புத்தகங்கள், பார்க்கர், சென்னை, மறுபதிப்பு: 2007.

- வீ.அரசு

Pin It