தமிழ்ச்சமூகம், கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு தொடர்பாகப் பல்வேறு நூல்களை எழுதி வருகிறார் எழுத்தாளர் ஏர் மகாராசன். தற்போது, தமிழ்நாடு அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து என்ற இவரது அண்மை நூல் தமிழகத்தில் பரவலாகப் பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகிறது. நூலின் அணிந்துரையில் ஊடகவியலாளர் சாவித்திரி கண்ணன், “தமிழ்நாட்டில் எந்தப் புலனாய்வு ஊடகமும் காட்சி ஊடகங்களும் கூடச் செய்திராத ஆய்வை நண்பர் மகாராசன் வெகு குறுகிய காலகட்டத்தில் செய்திருக்கிறார்” என்று குறிப்பிடுவது பெரும் கவனத்திற்குரியதாகும்.
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியும் உயர்கல்வியும் கண்முன்னே சீரழிவதை நினைத்தால் மனம் பதறுகிறது. பழங்காலத்தில் கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு உரியதாக இருந்தது. அனைத்துத் தரப்பினரும் கல்வி கற்க வந்த வரலாறு அண்மையிலானது. மீண்டும் விளிம்புநிலை மக்களைக் கல்விக்கூடங்களிலிருந்து புறந்தள்ளுகிற நவீனத் தீண்டாமைச் சூழல் மறைமுகமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எப்படியாவது கல்வி கற்று முன்னுக்கு வந்து விட வேண்டும் என்ற வேட்கையில் எண்ணற்ற மாணவர்கள் கல்வி கற்க வருகின்றனர். அவர்களுக்கு அரசும் சமூகமும் திருப்பியளிப்பது என்ன? என்ற கேள்வி உள்ளூர எழுகிறது.
சாதிய மனோபாவத்துடன் கையில் அரிவாளுடனும் மதுப்புட்டி, கூலிப், சிகரெட் போன்ற போதைப்பொருட்களுடனும் வலம் வருகின்ற மாணவர்களைச் சாலைகளில் பார்க்கின்ற போது ஒரு நிமிடம் மனம் கனத்துப் போகிறது.
ஆசிரியர் பற்றாக்குறை, பொதுமையில்லாத சுமையான பாடத்திட்டம், கல்வியிருந்து விலகும் மாணவர்களின் எண்ணிக்கை பெருகுதல், பெற்றோர்களின் பொறுப்பின்மை, வாக்கு வங்கி அரசியலுக்காக எதையும் கண்டும் காணாமல் இருக்கும் அரசு, அரசியந்திரத்திற்கு ஆதரவாகச் செயல்படும் அதிகாரிகள், எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற புரிதலற்ற ஊடகங்கள், மக்கள் பிரச்சினைகளுக்கு முகம் காட்டாத வெற்றுக் கோசமிடும் சமூக இயக்கங்கள், இளைஞர் மனதில் மனித விரோதப் போக்குகள் சார்ந்த கருத்தியல்களை நஞ்சூட்டும் சாதிய, மத நிறுவனங்கள், இயக்கங்கள், சங்கங்களின் செயல்பாடுகள் என யாரைக் குற்றம் சொல்வது? என்ற நிலையில் தான் எழுத்தாளர் மகாராசனின் இந்நூல் வெளிவந்திருக்கிறது.
மெல்லக் கற்கும் மாணவர்களைக் கைவிடும் கல்விச் செயல்பாடுகள்: புதியபாடத்திட்டம் உள்ளிட்ட கல்வி அகச்சூழல், மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து: சமூகப் புறச்சூழலும் மாணவர்களின் பிறழ் நடத்தைகளும் என இரண்டு கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
2022 - 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற 11, 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 50,000 மாணவர்கள் பங்கேற்கவில்லை, தேர்வு எழுதவில்லை என்ற செய்தி தமிழகம் முழுக்கப் பேசு பொருளானது. இதற்கு யார் காரணம்? என்ற கேள்வியை எழுப்பி முதற்கட்டுரையில் விவாதிக்கிறார் மகாராசன்.
மாணவர்களின் குடும்பச்சூழலும் பொருளாதார நிலையும் அவர்களின் தீய நடவடிக்கைகளும் காரணமாக இருந்தாலும் மாணவர்களைக் கல்வியிலிருந்து அந்நியப்படுத்தும் புதிய பாடத்திட்டம் முதன்மைக் காரணம் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.
மீத்திறன் மாணவர்கள் (High ability learning Students), சராசரி மாணவர்கள், மெல்லக் கற்கும் மாணவர்கள் என்று கல்வி கற்கும் மாணவர்களைக் கல்வியாளர்கள் மூன்று வகைகளாகப் பிரித்துக் கூறுவர். இன்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையால் உருவாக்கப்பட்டுள்ள பாடத்திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவானதல்ல. இது மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பெருஞ்சுமையாக இருக்கிறது. பாடம் முழுமைக்கும் படித்தால்தான் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலையில் அவர்களால் பாடத்தை எளிதில் உள்வாங்க முடியவில்லை. ஆசிரியர்கள் மெனக்கெட்டும் முடியவில்லை. இதனால்தான் மெல்லக்கற்கும் மாணவர்களின் இடைநிற்றல், விலகல், தேர்வு எழுதாமை நிகழ்கிறது. இதன் காரணமாக அவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் சமூக உதிரிகளாக மாறும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். இதைப்பற்றி அரசும் சமூகமும் அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை.
தமிழகக் கல்வித்துறை கல்வித்திட்டச் சீரமைப்புகளைக் உடனடியாகச் செய்திடல் வேண்டும். சீரமைப்பில் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மட்டுமே பங்கேற்கும்படியான சுதந்தரமான சனநாயக அமைப்பாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகளை அளித்திடல் வேண்டும். வினாத்தாள் மதிப்பெண் பகுப்புமுறை (Blueprint) புதிய பாடத்திட்ட உருவாக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. அது மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும். ஆசிரியர்களுக்குப் பணிப்பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்களைக் கற்பித்தல் செயல்பாடுகளில் மட்டுமே பங்கேற்கச் செய்திடல் வேண்டும். ஆசிரியர்களின் உள்ளக்குரலை மனம் திறந்து கேட்கவும் நியாயங்களை உணர்ந்து கொள்ளவும் கல்வித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும். இன்றைய கல்விச்சூழல் பற்றியும் கல்விசார் பிரச்சினைகள் குறித்தும் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கருத்தாடல்களை முன்வைக்க வேண்டிய தேவையிருக்கிறது என்பதை முதற்கட்டுரையில் காத்திரமாக விவாதிக்கிறார்.
நாங்குநேரி மாணவர் சின்னத்துரை அவரது தங்கை சந்திரா செல்வி மீது நிகழ்த்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல், நாங்குநேரி ஊரின் கள நிலவரம், தென்மாவட்டப் பள்ளிகளில் நிலவும் சாதியம், கிராமத்தில் உள்ள மூத்த இளைஞர்கள் மாணவர்களிடையே சாதிய நஞ்சை விதைத்தல், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உதவும் அரசியல் கட்சிகள், சாதிக்கட்சிகள், சமூக இயக்கங்கள், அரசு அதிகாரிகளின் அபத்த மனநிலை போன்றவற்றைச் சுட்டிக் காட்டுகிறார்.
கொலைவெறித் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட தம்பி சின்னதுரையின் கல்லூரிப் படிப்பிற்கான முழுச்செலவையும் அண்ணனாக நான் ஏற்றுக் கொள்கிறேன் எனக் கல்வி அமைச்சர் கூறுவது இந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வாகும்? என்ற கேள்வியை எழுப்புகிறார். பாதிக்கப்பட்டவருக்கு அரசு இழப்பீடு கொடுப்பது மட்டும் சமூகத் தீர்வாகாது. பாதிக்கப்பட்டவர்கள் விளிம்புநிலையினர். அவர்கள் சுயமரியாதையுடனும் சுதந்திரத்துடனும் சகமனிதர்களைப்போல நிம்மதியாக வாழ வழியமைத்துக் கொடுப்பது அரசின் கடமை என்று குறிப்பிடுகிறார்.
ரோஹித்வெமுலா, சங்கர், இளவரசன், கோகுல்ராஜ், சின்னதுரை என்ற வரிசை நீள்கிறது. இந்தக் கொலைவெறித் தாக்குதலால் பல மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பது தெரிகிறது.
திருவிழாக்கள், குருபூஜைகள், திருமணச் சுவரொட்டிகள், பதாகைகளில் சாதிய மனோபாவம் தலைவிரித்தாடுகிறது. இதில் பெரும்பான்மை பங்கு கொள்பவர்கள் மாணவர்களாகவும் இளைஞர்களாகவும் இருப்பது பெரும் வருத்தத்திற்குரியதாகும். கயிறு, அரிவாள், டீசர்ட் என சாதிய அடையாளம் மாறிக்கொண்டேயிருக்கிறது. அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றாலும் சாதிய மனோநிலை இன்னும் மாறவில்லை என்பது தெளிவாகிறது.
சாதிக்கட்சிகளும் அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் இளைஞர்களிடையே சமத்துவத்தைப் போதிப்பதில்லை. மாறாக, தேசியத்தலைவர்களைச் சாதித்தலைவர்களாக அடையாளப்படுத்தல், இடஒதுக்கீடு பற்றித் தவறான புரிதலை ஏற்படுத்துதல், மாமேதை அம்பேத்கரை எல்லோருக்குமான தலைவர் என அடையாளப்படுத்தாமை, போதைப்பொருள் பயன்படுத்துதலைக் கண்டிக்காமை போன்ற செயல்களில் ஈடுபடுவது ஆரோக்கிமானதல்ல. காவல்துறை, வழக்கறிஞர், நீதித்துறையினர் இணைந்து சமூக உதிரிகளுக்கு ஆதரவாக இருப்பதும் பெரும் அவலத்திற்குரியதாகும்.
தாழ்ந்த சாதி, உயர்சாதி, மேல்சாதி, ஆதிக்கசாதி, இடைநிலைச்சாதி ஆகிய சொல்லாடல்கள் பிழையானவை, செயற்கையானவை. மற்றவர்களால் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்படுத்தப்பட்ட, ஒடுக்கப்படுத்தப்பட்ட என்ற சொற்கள் பயன்பாட்டில் இருந்தன. சமகாலத்தில் இந்தச் சொற்களும் ஏற்றுக்கொள்ளத்தக்கவையல்ல என்ற கருத்தும் கற்றவர்கள் மத்தியில் நிலவுகிறது. அட்டவணைச் சாதியினர், பட்டியலினச் சாதியினர் என்ற சொற்களைப் பயன்படுத்துவதுதான் சரியானது எனக் கருதுபவரகள் உண்டு என்கிறார் மகாராசன்.
பெற்றோர்களின் பொறுப்பின்மையும் மாணவர்கள் சீரழிவதற்குக் காரணமாக அமைகிறது. இன்னும் சிலர் மாணவர்கள் கெட்டுப் போவதற்கு ஆசிரியர்கள்தான் காரணம் என்ற பொதுப்புத்தியுடன் வலம் வருகின்றனர். இது தவறான பார்வை என்கிறார் மகாராசன். இன்று ஆசிரியர்களுக்குரிய ஆகப்பெரிய அதிகாரம் என்பது தவறிழைக்கும் மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் அதிகாரிகளிடமும் மன்னிப்புக் கேட்பது மட்டுமே என்று குறிப்பிடுவதன் வாயிலாகத் தமிழகப் பள்ளி ஆசிரியர்களின் மனநிலையை உணரமுடிகிறது.
சமகாலச் சூழலில் மாணவர்களாலும் பெற்றோர்களாலும் ஆசிரியர்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். பெற்றோர் கும்பலாகப் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களைத் தாக்கும் வன்ம நிகழ்வுகளை அவ்வப்போது செய்தித்தாள்களில் பார்க்க முடிகிறது.
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்களிடம் காணப்படும் சாதிய மனோபாவம் மாணவர்களைச் சமூக உதிரிகளாக மாற்றுகிறது. இது போன்ற ஆசிரியர்களைக் கண்டுபிடித்துக் களையெடுக்க வேண்டும். குறிப்பாக, மாநில, தேசிய அளவிலான பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகப் பாடத்திட்டக்குழுவில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பின்பற்றப்பட வேண்டும்.
அறம்சார்ந்த சமூகக் கல்வி மாணவர்களுக்கு மட்டுமல்லாது ஆசிரியர்களுக்கும் தேவையானதாக இருக்கிறது. ஆசிரியர் மாணவர் உறவு அறுபடாமல் இருக்க இத்தகைய கல்வி அவசியமானதாகும்.
இறுதியாக, “எல்லாரும் சமம்தானே டீச்சர்” எனச் சாதியத்தை அடித்து நொறுக்கி ஆசிரியர்களுக்குப் பாடம் கற்பித்த முனீஸ்வரனை நூலில் பாராட்டியது மட்டுமல்லாமல் இந்த நூலை அவருக்கே தளுகையாக்கியிருக்கிறார் நூலாசிரியர். ஆக, மாணவர்கள் சமூக உதிரிகளாக மாறும் பேராபத்தைத் தடுக்க வேண்டிய பணிகளைச் செய்தாக வேண்டும். இது ஒவ்வொரு சமூக மனிதரின் உடனடிக் கடமையாகும் என்ற சிந்தனையை நூலில் விதைக்கிறார்.
மாணவர், பெற்றோர், ஆசிரியர், கல்வியாளர்கள், அரசியலாளர்கள், சிந்தனையாளர்கள் இணைந்து கைகோர்த்து மாணவர்களின் வாழ்வை உயர்த்திட வேண்டும் என்பதை மையநோக்கமாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது எனலாம். இந்நூலை அனைத்துத் தரப்பினரும் வாங்கிப் படித்து ஒரு பெரும் உரையாடலை, விவாதத்தை எழுப்பினால் சமூகம் ஆரோக்கியம் பெறும் என நம்புகிறேன்.
மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து
மகாராசன் | ஆதி பதிப்பகம்
விலை: ரூ.90 | தொடர்புக்கு: 9159933990
- முனைவர் பி.பாலசுப்பிரமணியன், ஆய்வு ஒருங்கிணைப்பாளர் & உதவிப் பேராசிரியர், முதுகலைத் தமிழாய்வுத்துறை, மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி, வாணியம்பாடி,