‘நீரின்றி அமையாது உலகு' என்றார் வள்ளுவர். அவரே மேலும் ஒரு படி போய் தண்ணீர் இல்லையென்றால் மனிதனின் ஒழுக்கமும் போய்விடும் என்று சொல்கிறார். எல்லா உயிரிணங்களின் வாழ்க்கைக்கும் தண்ணீர் தேவை. தண்ணீர் இல்லாமல் உயிர் இல்லை: உலகமும் இல்லை. மனிதனின் உடல் ஆரோக்கியம் அவனைச் சுற்றியுள்ள தண்ணீரின் தன்மையைப் பொறுத்துதான் அமைகிறது. பாதுகாப்பற்ற குடிநீர் அவனுடய வாழ்க்கைக்கு உதவுவதில்லை: வியாதிகள் வரும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். மனிதனின் உடல் தண்ணீரை எப்படிக் கையாள்கிறது, தண்ணீரை எப்படிப் பாதுகாத்து நாம் உபயோகிக்க வேண்டும் என்பது பற்றி இப்போது பார்ப்போம்.

நம் உடலுக்குள் ஒரு நீர் மேலாண்மை

நம் மூளைக்குள்ளே ஹைப்போதாலமஸ் என்ற பகுதிக்குள் இருக்கும் லேமினா டெர்மினாலிஸ் என்ற பகுதியில்தான் உடலின் தண்ணீர் தேவையைக் கட்டுப்படுத்தும் மையம் அமைந்துள்ளது. தண்ணீர் தாகமாக இருக்கிறது என்று மனிதனைத் தண்ணீரைத் தேடி குடிக்க வைப்பதும் அதுதான். குடித்தது போதும் நிறுத்திவிடு என்று சொல்வதும் அதுதான்.

இந்த கண்ட்ரோல் சென்டர் 24 மணி நேரமும் நம் உடலின் வெப்ப நிலை, இரத்த அழுத்தம், இரத்தத்தின் அளவு மற்றும் அதில் உள்ள உப்புச் சத்தின் அளவு முதலானவற்றை கண்காணித்துக் கொண்டே இருக்கும். உடல் வெப்பம் அதிகமானாலும், நீர்ச் சத்து குறைந்து இரத்தத்தின் அளவு சுருங்கினாலும், இரத்தத்தில் உள்ள உப்புச் சத்து அதிகமாகி விட்டாலும் உடனடியாக 'தண்ணீர் குடி’ என்று சிக்னல் கொடுத்து விடும். வறண்டு போன தொண்டை நனையும்படி போதுமான அளவு தண்ணீர் குடித்தவுடன் 'நிறுத்து' என்று மீண்டும் ஒரு சிக்னல். தண்ணீருக்குப் பதில் வேறு எதைக் குடித்தாலும் சிக்னல் நிற்காது. அந்த நேரத்தில் தண்ணீர் மட்டும்தான் உடலுக்குத் தேவை. அதுபோல ஒரு சில மருத்துவக் காரணங்களால், உடலின் நீர்ச் சத்து குறைந்து விட்டால் சிறுநீரகத்திற்குக் கட்டளை அனுப்பி தண்ணீரை வெளியே அனுப்பாதே என்று சொல்லும். உடலில் நீரின் அளவு அதிகமாகி விட்டாலும், உடனடியாக சிறுநீரகத்துக்குச் சிக்னல் அனுப்பி வெளியேறும் சிறுநீரின் அளவை அதிகப்படுத்து என்று சொல்லி விடும். ஆக மூளையில் உள்ள இந்த கண்ட்ரோல் ரூம் நம் உடலின் நீர் மேலாண்மையை தொடர்ந்து செய்வதால்தான் மனிதன் உயிர் வாழ்கிறான்.drinking waterபிறக்கும்போது தோராயமாக நம் எடையில் 78 விழுக்காடாக இருக்கும் தண்ணீர், உடல் வளர்ந்து ஒரு வயது வரும்போது 70 விழுக்காடாகி விடுகிறது. பதின் பருவத்தை அடையும்போது ஆணுக்கு 60 விழுக்காடும் பெண்ணுக்கு 55 விழுக்காடுமாகக் குறைந்து போய் விடுகிறது. வயது வந்த ஆணுக்கு 60 விழுக்காடும் பெண்ணுக்கு 50 விழுக்காடுமாக மேலும் குறைந்து விடுகிறது. தண்ணீர் நம் உடலில் உள்ள தசைகளில் அதிகமாகவும், கொழுப்பில் குறைவாகவும் இருக்கிறது. ஒரு 70 கிலோ எடையுள்ள மனிதனின் உடலில் 42 கிலோ வெறும் தண்ணீர்தான் என்றால் தண்ணீரின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்ளலாம். இதில் செல்லுக்கு உள்ளே இருப்பது 28 லிட்டர், செல்லுக்கு வெளியே இருப்பது 14 லிட்டர்.

ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்? பொதுவாக 6-8 டம்ளர்கள் அல்லது 2 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம். வெய்யில் நாட்களிலும், உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவைகளில் ஈடுபடும் போதும் வியர்வையின் மூலம் உடலில் உள்ள தண்ணீரும் உப்புச்சத்தும் வெளியாவதால் அதிகப்படியாகக் குடிக்க வேண்டி வரும்.

நீர்ச்சத்து சரியான அளவு இருந்தால் என்ன பயன்?

உங்கள் உடலில் நீர்ச்சத்து சரியான அளவில் இருக்கும்போது ஒவ்வொரு செல்லும் சரியாக வேலை செய்யும். உடம்பில் உள்ள வேண்டாத நச்சுக்கள் எளிதில் வெளியேறும். உடம்பின் வெப்ப நிலை சீராக இருக்கும். எலும்பு மூட்டுக்கள் எல்லாம் தேய்மானமும் வலியும் இல்லாமல் வேலை செய்யும். உங்கள் சக்தியை மீட்டெடுத்தது போன்று உணர்வீர்கள். மலச் சிக்கலும் சிறுநீர் பிரச்சினைகளும் வருவதில்லை. தோல் மினுமினுக்கிறது. அடிக்கடி தலைவலியும் வருவது இல்லை

குடிநீர் எப்படி இருக்க வேண்டும்?

1.            வியாதிகளை உண்டுபண்ணும் கிருமிகள் இருக்கக் கூடாது.

2.            தீங்கு விளைக்கும் கெமிக்கல்கள் கலந்து இருக்கக் கூடாது.

3. குடிப்பதற்கு சுவையுடன் இருக்க வேண்டும்.

4.            நிறமும் மணமும் கூடாது.

5.            வீட்டு உபயோகத்துக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும்.

மேலே கண்ட குணங்கள் இருந்தால் அதுதான் முதல் தரமான பானம். இயற்கயின் கொடைதான் தண்ணீர். ஆனால் உலகம் முழுவதும் சுத்தப்படுத்தாமல் அப்படியே உபயோகப்படுத்தும்படியான நீர் ஆதாரம் மிக அரிது. மனிதனுக்கு வரும் தொற்று நோய்களில் பெரும்பாலானவை நம் உணவு, தண்ணீர் மற்றும் காற்றின் மூலம்தான் பரவுகிறது. மீதம் உள்ள தொற்றாத நோய்கள் எல்லாம் நம் மரபணு, வாழ்க்கை முறை, உடல் உறுப்புகளின் தேய்மானம், முதுமை போன்றவைகளால் ஏற்படுகிறது.

ஹெல்த் டிரிங்க்ஸ் என்றவுடன் மக்கள் விரும்பி வாங்கி விடுகின்றனர். அவ்வளவு எளிதாக ஹெல்த்தை விலை கொடுத்து வாங்க முடியாது என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. இன்றளவும் தண்ணீரை விடவும் ஒரு முக்கியமான ஹெல்த் டிரிங்ஸ் இல்லை என்பதுதான் உண்மை. இதில் கொழுப்பு இல்லை, கலோரிகள் இல்லை. சர்க்கரை இல்லை. மேலும் தினம் தினம் உடலுக்கு முக்கியமாகத் தேவையான ஒன்று.

நீர்வழி வரும் நோய்கள்

தண்ணீர் சுத்தமில்லாமல் இருக்கும்போது நம் உடல் நோய்களின் பிடியில் சிக்கிக் கொள்கிறது. தண்ணீரில் இரண்டு வகையில் தொற்றுநோய்க் கிருமிகளும் கெமிக்கல்களும் சேருகின்றன. முதல் வகையில் மழை பெய்யும்போது வான்வெளியில் உள்ள, நைட்ரஜன், சல்பர் போன்ற கெமிக்கல்களுடன் காற்றிலே மிதக்கும் வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளும் பூமியை வந்து அடைகிறது. இரண்டாவது வகையில் மனிதனின் கழிவுகளும் தொழிற்சாலைக் கழிவுகளும் குடிநீரில் கலந்து மனிதனின் ஆரோக்கியக் கேட்டிற்கு வழிவகுக்கிறது. இம்மாதிரியான அசுத்தமான நீரை ஆதாரமாகக் கொண்டு வாழும் கிருமிகள், பூச்சிகள், நீர்வாழ் உயிரினங்கள் மூலமாகவும் மனிதனுக்கு தொற்றுப் பரவுகிறது.

நில நடுக்கம், சண்டை, வறுமை பேன்றவற்றால் பாதிக்கப்பட்ட நாட்டில் முதலில் தலை தூக்குவது தண்ணீர் மூலம் பரவும் வியாதிகள்தான். உலகம் வெப்பமயம் ஆதலினாலும் நம் சுற்றுப்புற சூழலில் கிருமிகள் பல்கிப் பெருக வாய்ப்புகள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இன்னமும் நீர் மூலம் பரவும் வியாதிகளான மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா, டைபாய்டு எனப் பலவிதமான நோய்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் சுத்தமான குடிநீர் இல்லாமையும் கழிவு நீர் கலந்த நீரை மக்கள் உபயோகிப்பதும்தான்.

சுத்தமான குடிநீரின் முக்கியத்துவம்

இன்றும் சுத்தமான குடிநீரின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு சற்று குறைவுதான். அதற்கு உலகெங்கும் இதுவரையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் மூலம் பரவிய பெருந்தொற்று பற்றித் தெரிய வேண்டும். சமீபத்தில் நாம் பார்த்த கோவிட் பெருந்தொற்று போல காலரா பெருந்தொற்று

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகம் முழுக்க பரவியது. இந்தியாவில் 1817ல் கல்கத்தாவில் ஆரம்பித்த காலரா பெருந்தொற்று உலகம் முழுக்க பரவியது. ஆறுமுறை பெருந்தொற்றாக உலகம் முழுக்கப் பரவியதால் இலட்சக் கணக்கான மக்கள் இறந்தனர். அந்த எப்பிடெமிக் 1824 வரை இருந்தது.

1854ல் லண்டனில் ஏற்பட்ட காலரா பெருந்தொற்று பற்றிப் பார்ப்போம். அந்தக் காலகட்டத்தில் லண்டன் மாநகரத்து கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் எல்லாம் தேம்ஸ் நதியில் விடப்பட்டு, அந்த ஆறே நாற்றம் அடித்துக் கொண்டிருந்தது. மக்கள் அனைவரும் இந்த நாற்றம்தான் காலராவுக்குக் காரணம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த காலரா தண்ணீர் மூலம் பரவுகிறது என்பதை டாக்டர் ஜான் ஸ்னோ என்பவர் உலகுக்கு விளக்கினார். அங்கே ஏற்பட்ட ஒவ்வொரு காலரா நோயாளியின் இருப்பிடத்தை வரைபடத்தில் குறித்துக் கொண்டு ஆராய்ந்த போது அனைத்து நோயாளிகளும் லண்டன் நகரின் பிராட் தெருவில் இருந்த கையடி பம்பில் இருந்து தண்ணீர் எடுத்து உபயோகித்தவர்களாக இருப்பதைக் கண்டார். அந்த பம்பில் தண்ணீர் குடித்தவர்களுக்கு எல்லாம் காலரா நோய் வந்ததை கண்டுபிடித்து அந்த பம்பின் கைப்பிடியை கழட்டி விட்டார். அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக காலரா நோய் அங்கே கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது.

அதற்குப் பக்கத்து தெருவில் உள்ள குடியிருப்பில் உள்ளவர்கள் அனைவரும் கிணற்று நீரை பம்பின் மூலம் இரைத்து உபயோகப் படுத்தியதால் அவர்களில் யாருக்கும் காலரா வராததையும் கண்டு கொண்டார். மேலும் அந்த பிராட் தெரு பம்பிற்கு அருகாமையிலேயே இருந்த சாராய பாக்டரியில் வேலை செய்தவர்கள் யாருக்கும் அப்போது காலரா வரவில்லை. காரணம் இவர்கள் ஆழ்துளைக் கிணற்று நீரை உபயோகப்படுத்தினார்கள். நுண்ணுயிரியல் படிப்பு எல்லாம் இல்லாத காலத்திலேயே இவர் தண்ணீர் மூலம் அதுவும் பூமியின் மேல் பரப்பில் இருக்கும் தண்ணீர் மூலம்தான் காலரா நோய் பரவுகிறது என்று கண்டார்.

கெமிக்கல்களும் கிருமிகளும் நிறைந்த நீர்நிலைகள்

மனிதக் கழிவுகள் சரியான முறையில் அகற்றப்படாமல் குடிநீரில் கலக்கும்போது மனிதனின் பெருங்குடலில் உள்ள பாக்டீரியாக்கள், வைரஸ்கள், குடற்புழுக்களின் முட்டைகள், பூச்சிகள் என அனைத்தும் அங்கே வந்து சங்கமம் ஆகிவிடுகின்றன. பிறகென்ன? இந்தக் கிருமிகள் அடுத்ததாக எவரின் வயிற்றுக்குள் போகிறதோ, அவருக்கு வியாதிகளின் படையெடுப்பு ஆரம்பிக்கும். தண்ணீரை கிருமி நீக்கம் செய்து உபயோகப்படுத்த வேண்டும் என்ற அடிப்படை ஆரோக்கிய உணர்வு இல்லாமல் கவனக்குறைவாக இருக்கும்போது எளிதில் நோய்வாய்ப்படுகிறோம்.

இன்றைய உலகில் தொழிற்சாலைக் கழிவுகள் மூலம் கெமிக்கல் நச்சுக்கள் நிறைந்த நீர் நிலைகள்தான் எங்கும் தென்படுகிறது. நைட்ரைட், சயனைடு, டிடர்ஜண்ட், கன உலோகங்களின் மூலங்கள், ஆர்கானிக் அமிலங்கள், அம்மோனியா, ஆர்சனிக் என எல்லா கெமிக்கல்களும் கலக்கின்றன. இவைகள் எல்லாம் மனித உடலுக்குள் நேரடியாகவே உள்ளே செல்லுகின்றன. அல்லது அவைகளை சாப்பிட்டு வாழும் நீர்வாழ் உயிரினங்கள் மூலம் மறைமுகமாக மனிதன் பாதிக்கப் படுகின்றான்.

முடிவுரை

இன்றளவும் நீர்வழிப் பரவும் நோய்கள் எல்லாம் பல நாடுகளில் தொடர்ந்து இருந்து கொண்டுதானிருக்கிறது. 2022 ல் உலகம் முழுமையும் 73 விழுக்காடு மக்கள்தான் பாதுகாக்கப்பட்ட குடிநீரை உபயோகித்தார்கள். மீதம் உள்ளவர்கள் அனைவரும் கழிவுநீர் கலந்த குடிநீரைத்தான் உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆண்டு ஒன்றுக்கு 1.5 லட்சம் பேர் உலகம் முழுவதும் காலரா நோயால் இறக்கின்றனர். உலக சுகாதார நிறுவனம் 2030 க்குள் உலகில் காலரா இல்லாமல் செய்ய வேண்டும் என்று முயற்சிக்கிறது. குடிநீரைக் குறைந்த அளவு 20 நிமிடம் கொதிக்க வைத்து- சுட வைத்து அல்ல- கிருமி நீக்கம் செய்து பருகினால் நீர் வழி வரும் தொற்று நோய்களிலிருந்து தப்பலாம். ஆனாலும் சிலர் குடிநீரைக் கொதிக்க வைத்தால் சுவை இருக்காது என்ற காரணத்துக்காகவே கிருமி நீக்கம் செய்யாமல் உபயோகிக்கிறார்கள். கெமிக்கல் நச்சுக்களிலிருந்து விடுபட வேண்டும் என்றால், வடிகட்டி சுத்திகரிக்கப்பட்ட நீரைத்தான் உபயோகிக்க வேண்டும்.

- ப.வைத்திலிங்கம், குழந்தை மருத்துவ நிபுணர்