வடாற்காடு மாவட்டத்தில் ஜாதி எதிர்ப்புக்காகப் போராடிய தளபதி கிருஷ்ணசாமியின் வரலாற்றை இளைய தலைமுறைக்கு உணர்த்தும் சிறந்த நூல்.

“தளபதியாய் எங்களை வழிநடத்தினாய் !!

அண்ணாவாய் எங்களை அரவணைத்தாய் !!

தென்னாட்டு அம்பேத்கர் எனும்போது எம் உள்ளம் மகிழ்ச்சிக் கடலாகும் !!

m krishnasamy bookஇந்த பாடல், தேர்தல் அரசியல் தலைவரான பள்ளிகொண்டா கிருஷ்ணசாமியைப் பற்றி, அவருடைய நூற்றாண்டு விழாவில் பாடப்பட்ட பாடலாகும். அத்தகைய சிறப்புக்குரிய தலைவரைப் பற்றி, அவருடைய மகன் ப.கி. மனோகரன் எழுதிய நூல் “தென்னாட்டு அம்பேத்கர், தளபதி – அண்ணா எம் கிருஷ்ணசாமி” என்பதாகும்.

தற்போதைய வேலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியான பள்ளிகொண்டாவில் 1916 ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் நாளில் முருகனுக்கும், சின்னத்தாய்க்கும் மகனாக கிருஷ்ணசாமி பிறந்தார். சிறுவயதிலிருந்தே ஆதிதிராவிடர்கள் சந்தித்த ஒடுக்குமுறைகளை நேரில் கண்டு வளர்ந்தார். 1932 இல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவான இரட்டை வாக்குரிமையை எதிர்த்து காந்தி சிறையில் உண்ணாநோன்பு இருந்தார். அம்பேத்கரை அடிபணிய வைக்கும் முயற்சிகள் நடந்தன. இரட்டை வாக்குரிமையை எந்த சூழலிலும் கைவிட வேண்டாம் என்று பெரியார், அம்பேத்கருக்கு தந்தி அனுப்பினார். ஆனால் காந்தியின் நீண்ட பட்டினிப் போராட்டம், அம்பேத்கரையும் வேறு வழியில்லாமல் விட்டுக் கொடுக்க வைத்தது. அப்போது ஏற்பட்ட சமரசம் தான் பூனா ஒப்பந்தம்.

காந்தியின் இந்த செயல் சிறுவயதிலேயே கிருஷ்ணசாமியை சிந்திக்க வைத்தது. அதன் தொடர்ச்சியாக 1934இல் பள்ளிகொண்டாவில் உள்ள உருத்திர அரங்கநாதர் கோவிலுக்கு காந்தி வந்தார். அப்போது ஒரு இளைஞர் காந்தியை நோக்கி, “ஒடுக்கப்பட்ட மக்களை இந்த கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை. எல்லோரும் சமமென்றால் எங்களையும் இந்த கோயிலுக்குள் அழைத்து செல்வீர்களா?” என்று வினவினார். காந்தியும் ஒப்புக் கொண்டு, ஒடுக்கப்பட்டோரை அனுமதித்தால் தான் தானும் உள்ளே வருவேன் என்றார். சனாதன தர்மத்தில் ஊறிப் போன கோயில் நிர்வாகம் ஏற்க மறுத்ததால், காந்தி திரும்பிச் சென்றார். காந்தியிடம் கேள்வி கேட்ட அந்த இளைஞர் தான் கிருஷ்ணசாமி.

1936 இல் தாழ்த்தப்பட்டோர் பாசறையை உருவாக்கி இரவுப் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியவர் கிருஷ்ணசாமி. பாதிரியார் பிலிப்ஸ் மூலமாக இலவச கோதுமையும், பால் பொடியும் கிடைக்கச் செய்தார். பின்பு, ஜாதிக் கொடுமைகளுக்கு எதிராக “ஆதிதிராவிடர் இளைஞர் சங்கத்தை” தோற்றுவித்தார். பள்ளிகொண்டா தேனீர் கடைகளில் இரட்டைக் குவளை முறையும், தீண்டாமையும் கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், கிருஷ்ண சாமியின் வழிகாட்டுதலின்படி போராட்டங்களின் மூலமாகவும், வழக்குகளின் மூலமாகவும் இந்த கொடுமைகள் நீங்கின. தாழ்த்தப்பட்டோரை நுழைய அனுமதிக்காத தெருக்களில், மக்களை திரட்டி மிகப் பெரிய அணிவகுப்புகளை நடத்தி, தெருக்களில் நுழையும் உரிமையை பெற்றுத் தந்தார். இராணுவ உடையுடன் பூட்சுகளை அணிந்து கொண்டு, விடுப்பில் வந்த ராணுவ வீரர்கள் முன்னே செல்ல, அவர்களைப் பின் தொடர்ந்து இளைஞர் பட்டாளம் சென்ற அணி வகுப்புகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.

பறை இசைக்கும் ஒடுக்கப்பட்டோரை ஆதிக்கவாதிகள் அடிமைகளாக நடத்தும் அதே வேளையில், சாவுக்கு பறை இசைக்கவும் பயன்படுத்திக் கொண்டனர். “தம் பரம்பரை இழிவுக்கு காரணமானதும், வேண்டிய வருவாயை கொடுக்க வழியற்றதுமான பறையடிக்கும் தொழிலை கைவிடுவதற்கு அறிகுறியாக, தமது தப்பட்டைகளை கொளுத்தி, தமது வெறுப்பை வெளிப்படையாக தெரிவித்து கொள்வார்களாக. இதற்கான ஒத்துழைப்பையும், ஆதரவையும் தருமாறு ஆங்காங்குள்ள திராவிடர் கழக தோழர்களை கேட்டுக் கொள்கிறேன்” என்று அறிக்கை விடுத்தார் பெரியார். சாவுக்கு பறை இசைப்பதை நிறுத்த தொடர் பிரச்சாரம் மேற்கொண்டார் கிருஷ்ணசாமி. பலரும் பறைத் தொழிலை கைவிட்டனர். கைவிடாதவர்களின் பறைகள் இளைஞர்களால் உடைக்கப்பட்டன. பிற்காலத்தில் ஆர்.கே. எம் பள்ளியில் ஆசிரியராக பொறுப்பேற்ற கிருஷ்ணசாமி, மாணவர்கள் மத்தியில் நூல் வாசிப்பு பழக்கத்தை பெரிதும் வளர்த்தார்.

1938 ஆம் ஆண்டு, இரட்டைமலை சீனிவாசன் அவர்களால், “மதராஸ் மாகாண பட்டியலின கூட்டமைப்பு” (Madras Provincial Scheduled Caste Federation) தொடங்கப்பட்டது. இக்கூட்டமைப்பின் கொடி உதயசூரியன் கொடியாகும்; இதழ் உதயசூரியன் இதழாகும். இவ்விதழின் உதவி ஆசிரியராக பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி பணிபுரிந்தது குறிப்பிடத் தக்கது. 1942 ஆம் ஆண்டு, அம்பேத்கரின் வழிகாட்டுதலின்படி, தந்தை சிவராஜ் தலைமையில் “அகில இந்திய பட்டியலின கூட்டமைப்பு” (All India Scheduled Caste Federation) உருவாக்கப்பட்ட பின், “உதயசூரியன்” இதழ் இரண்டு கூட்டமைப்புகளுக்கும் பொதுவான இதழாக செயல்பட்டது. அதன் அடையாளமாக உதயசூரியன் கொடியும் இதழில் இருந்து நீக்கப்பட்டு, வெள்ளைக் கொடி இடம் பெற்றது. பின்னர், வெள்ளைக் கொடிக்கு பதிலாக, 7 நட்சத்திரங்களுடன் SCF என்ற எழுத்துகளைக் கொண்ட அகில இந்திய சம்மேளனத்தின் கொடி இடம் பெற்றது. பின்னாளில் 7 நட்சத்திரங்கள் 12 ஆக மாற்றப் பட்டன. 1947ஆம் ஆண்டு ஜூலை வரை இவ்விதழ் வெளியானது. 1942ஆம் ஆண்டிலிருந்தே அகில இந்திய பட்டியலின கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக கிருஷ்ணசாமி செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

“பட்டியல் இன மக்கள் ஜாதி இந்துக்களின் கொடுமை கண்டு அஞ்ச வேண்டாம்; துணிவுடன் போராடுவோம்” என்று அறைகூவல் விடுத்தது. கூட்டமைப்பின் செயல்பாடுகளை பெரியாரின் ‘விடுதலை’ நாளேடு தொடர்ந்து வெளியிட்டது. நூலாசிரியர் இந்த நூலில் ‘விடுதலை’யின் செய்திகளையே தரவுகளாகப் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார். பார்ப்பனரல்லாதார் இயக்கமான ஜஸ்டிஸ் கட்சி தோழர்கள் தளபதி கிருஷ்ணசாமியுடன் இணைந்து செயல்பட்டிருக்கின்றனர். 1954, ஜன. 23, 24 தேதிகளில் ஈரோட்டில் பெரியார் நடத்திய புத்தர் கொள்கைப் பிரச்சார மாநாட்டை நடத்தினார். பட்டியல் இனக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.என். ராஜ்போஜ் மாநாட்டைத் திறந்து வைத்துப் பேசியிருக்கிறார். பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி பங்கேற்று சிறப்புரை ஆற்றியிருக்கிறார்.

புரோகித ஒழிப்பு - ஜாதி மறுப்புத் திருமணங்களை உறுதியாக ஆதரித்து பரப்பி யிருக்கிறார், தளபதி கிருஷ்ணசாமி. ஆயிரக் கணக்கில் சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார். மணவிழா மேடைகளில் பார்ப்பன - புரோகித - ஜாதி எதிர்ப்புக் கருத்துகளைப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். கிராமங்கள் தோறும் பேசுகிற கூட்டங்களில் பெண் கல்வியையும் பெண்ணுரிமையையும் வலியுறுத்திப் பேசியிருக்கிறார்.

1939இல் தொடங்கிய இரண்டாம் உலகப் போரில், ஒடுக்கப்பட்டோரும், இந்திய – பிரிட்டிஷ் இராணுவத்தில் இணைய அம்பேத்கர் விரும்பினார். கிருஷ்ணசாமியும் இளைஞர்களை அனுப்பினார். அவ்விளைஞர்கள் தான் போருக்கு பின், கிருஷ்ணசாமியின் தளபதிகளாக இருந்து வீரத்தோடு செயல்பட்டனர். அந்த வகையில் அவருடைய தொலைநோக்குப் பார்வை பாராட்டுக்குரியது. போரின்போது ஆங்கிலேய ஆட்சியாளர்களின் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெற்றிருந்தார் கிருஷ்ணசாமி. மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பெயரில், சென்னை மாகாண ஆளுநர் சர் ஆர்தர் ஆஸ்வல்ட் ஜேம்ஸ் ஓப்பால், செங்கல்பட்டு மண்டலத்திற்கு மாநில பிரதம போர் பிரச்சாரகராக (Regional Propagandist) நியமிக்கப் பட்டிருந்தார்.

1940இல் சிறுமேலூர் கிராமத்தில் ஜாதிக் கொடுமைகள் மிகப் பெரிய அளவில் நடைபெறுவதை அறிந்த கிருஷ்ணசாமி, தன்னுடைய சமூக சீர்திருத்தப் படையை அனுப்பி வைத்ததோடல்லாமல், தானும் சிறுமேலூர் கிராமத்தில் 5 நாள்கள் மக்களுடன் தங்கி, அவர்களுக்கு தைரியமூட்டி போராட வைத்தார்.

போராடுவதையே வாழ்க்கையாகக் கொண்ட கிருஷ்ணசாமி 1945இல் கனகாம்பாளை மணந்தார். இணையர்களுக்கு கிருஷ்ணகுமார், மனோகரன் (நூலாசிரியர்), காவேரி ஆகியோர் பிறந்தனர். 1946ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற திருவண்ணாமலை தொகுதி தேர்தலில், சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். பூனா ஒப்பந்தம் நிறைவேறாமல், தாழ்த்தப்பட்டோருக்கு இரட்டை வாக்குரிமை கிடைத்திருந்தால், அவரைப் போன்ற திறமையான தலைவர்கள் பல பேர் வென்றிருப்பார்கள். அம்பேத்கரையும் இதே போல தோற்கடித்தது இந்திய ஜாதிய சமூகம்.

1946 ஆகஸ்ட் 24 இல் அமைந்த இடைக்கால அமைச்சரவையில், பட்டியலின மக்களுக்குரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. ஜெகஜீவன் ராம் பெயர் மட்டுமே இடம் பெற்றிருந்தது. எனவே, பூனாவில் கூடிய பட்டியலின கூட்டமைப்பு, ஜெகஜீவன்ராம் அப்பதவியை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொண்டது. இதனை ஏற்க மறுத்த ஜெகஜீவன் ராம், அமைச்சரவை குழுவிடம், டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான தாழ்த்தப்பட்டோர் சம்மேளனத்துக்கும், தன்னுடைய தாழ்த்தப்பட் டோர் லீகுக்கும் உள்ள வேறுபாடுகளைத் தெரிவித்தார். அம்பேத்கர் தலைமையிலான தாழ்த்தப்பட்டோர் சம்மேளனத்தில் உள்ள தாழ்த்தப்பட்டோர் இந்துக்கள் இல்லை, அவர்கள் மதச் சிறுபான்மையினர் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகவும், ஆனால் லீகில் உள்ள தாழ்த்தப்பட்டோர் தங்களை இந்துக்களாகவே கருதுகின்றனர் என்றும் கூறினார். ஜெகஜீவன் ராமின் இந்த கருத்து அகில இந்திய பட்டியலின கூட்டமைப்பினரை வெகுண்டெழச் செய்தது.

25.12.1946 அன்று சென்னையிலும் ஜோலார்பேட்டையிலும் (தளபதி கிருஷ்ணசாமி தலைமையில்) ஜெகஜீவன்ராமுக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டது. அதில் பெரியார் இயக்கத்தினரும் பங்கேற்றனர்.

தோல் பதனிடும் தொழிலாளர்களுக்கு உற்ற தலைவராகவும் தோழராகவும் அன்பிற்குரிய சகோதரராகவும் விளங்கிய ஜே.ஜே. தாஸை பாராட்ட 1947இல் ஒரு விழாவை ஏற்பாடு செய்திருந்தார் கிருஷ்ணசாமி. அதே கூட்டத்தில், பெரியார் கிருஷ்ணசாமியையும் பாராட்டினார். அதே ஆண்டில், “சமத்தும சங்கு” என்ற இதழை கிருஷ்ணசாமி தொடங்கினார். 3.12.1947இல் வெளியான அவ்விதழின் ஒரு பிரசுரத்தில், “ஆதிக்க மோகம் கொண்ட முஸ்லிம்களுக்கும், கட்சிப் பித்து கொண்ட காங்கிரசுக்காரர்களுக்கும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சாட்டை” என்ற தலைப்பில் அம்பேத்கரின் எழுத்துகள் வெளியிடப் பட்டன. “பாகிஸ்தானில் பட்டியலினத்தவர் பலவந்தமாக மதம் மாற்றப் படுகின்றனர். இந்தியாவில் அவர்கள் பலவந்தமாக அரசியல் கட்சிக்கு (காங்கிரசுக்கு) மாற்றப் படுகின்றனர்” என்ற பேருண்மையை அம்பேத்கர் வெளிக் கொண்டு வந்தது, “சமத்துவ சங்கில்” பதிவு செய்யப் பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1948இல் சட்ட விரோதமான கட்சி என தடை செய்யப்பட்டது. அதனால் 1948 முதல் 1950 முடிய கொடிய அடக்குமுறைகள் ஏவப்பட்டன. கட்சி தோழர்கள் பலர் தலைமறைவாகினர். திராவிடர் கழகமும், பட்டியலின கூட்டமைப்பும், இன்னும் பல முற்போக்கு அமைப்புகளும் கம்யூனிஸ்டுகளுக்கு அடைக்கலம் தந்தன. ஜீவா போன்ற தலைவர்களுக்கு பள்ளிகொண்டாவிலுள்ள செல்லியம்மன் மலை முக்கிய அடைக்கலமாக இருந்தது. அவர்களுக்கு வேண்டிய உணவு தளபதி கிருஷ்ண சாமியின் நம்பிக்கைக்குரிய தொண்டர்கள் மூலம் அனுப்பப்பட்டன. இரவு நேரங்களில் கிருஷ்ணசாமி நடத்திய கோழிப் பண்ணையிலும், நம்பிக்கையான நண்பர்கள் இல்லங்களிலும் தங்க வைக்கப்பட்டு, மிக்க பாதுகாப்போடு அவர்கள் காக்கப் பட்டார்கள்.

1952இல் இராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) குலக்கல்வியை கொண்டு வர எண்ணினார். மனுதர்மத்தைக் காக்கும் இந்த நடவடிக்கையை எதிர்த்து, திராவிடர் கழகமும், பட்டியலின கூட்டமைப்பும், இன்னும் பல இயக்கங்களும் போராடின. இவற்றின் விளைவாக, ராஜாஜி பதவி விலக நேரிட்டது. 1954 ஜனவரியில் பெரியார் நடத்திய ஆச்சாரியார் குலக்கல்வி திட்ட எதிர்ப்பு மாநாட்டில், தளபதி கிருஷ்ணசாமி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

1956 ஆம் ஆண்டு அக்டோபர் 28இல் வேலூர் நகர சபையில் அம்பேத்கர் படத் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. கிருஷ்ணசாமி மிகச் சிறப்பாக வரவேற்கப்பட்டார். திரண்டிருந்த மக்களின் பலத்த கைதட்டலுடன், அம்பேத்கரின் படத்தை பெரியார் திறந்து வைத்தார். இன்றைக்கு சில அம்பேத்கரியர்களும், பெரியாரியர்களும், பெரியாரின் தனித் தமிழ்நாடு கோரிக்கையை எதிர்த்தும், இந்திய தேசியத்தை ஆதரித்தும் பேசுகின்றனர். ஆனால், அம்பேத்கர் உருவாக்கிய இந்திய குடியரசு கட்சி, அம்பேத்கர் மறைவுக்குப் பின், தமிழ்நாட்டில், கிருஷ்ணசாமியின் வழி காட்டுதலில் இயங்கியபோது, 1958ஆம் ஆண்டில், விடுதலை நாளை துக்க நாள் என்று அறிவித்தது. (இந்த விடுதலை பார்ப்பனர்களுக்கான விடுதலை என்ற புரிதலின் அடிப்படையில்). இதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே, 1947இல், சுதந்திர நாளை துக்க நாள் என்று பெரியார் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தளபதி கிருஷ்ணசாமியின் கொள்கைகள் எத்தகையன என்பதனை அறிய, 1960இல் விவசாய மாநாட்டில் அவர் நிறைவேற்றிய தீர்மானங்களே போதும்.

  1. ஆங்கிலேயர் காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்துள்ள ஜாதி இந்துக்களிடமிருந்து நிலங்களை மீட்டு உரியவர்களுக்கே மீண்டும் அரசு ஒப்படைத்தல் வேண்டும்.
  2. தரிசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றை முறையாக கணக்கெடுத்து, ஏழை விவசாயிகளுக்கு தலா 5 ஏக்கர் நிலத்தை அரசு வழங்க வேண்டும்
  3. ஜாதி இந்துக்களின் சமூகக் கொடுமைகளிலிருந்து, தாழ்த்தப்பட்ட மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு, அரசு கடுமையான சட்டம் இயற்ற வேண்டும். இருக்கின்ற வன்கொடுமை சட்டத்தை முறையாக அரசு பயன்படுத்தி, ஜாதி வெறியர்களையும், அவர்களின் கொடுமைகளையும் அடக்க வேண்டும்.
  4. கோயில் நிலங்களை வேளாண் குடிகளுக்கு அரசு குத்தகைக்கு விட பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
  5. அர்ச்சகர் தொழிலை அனைவருக்கும் என ஆக்கிட வழி வகுக்கும் சட்டம் இயற்றிடவும், நடவடிக்கை மேற்கொள்ளவும் அரசை வலியுறுத்துகிறது.
  6. கிராமங்களில் மணியக்காரர், கணக்கு பிள்ளை பணிகளை பரம்பரையாக அனுபவிப்பதை தடுத்து, கல்வியின் அடிப்படையில் தேர்ச்சி பெறுகிறவர்களுக்கு வழங்கிட வேண்டுமென அரசை வலியுறுத்துகிறது.
  7. இரயில்வே புறம்போக்கு நிலங்களில், வீடில்லா ஏழை எளிய மக்கள் வீடு கட்டிக் கொள்ள முறையான பட்டா வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநாடு வலியுறுத்துகிறது

ஆகிய 7 தீர்மானங்கள் அவர் யாரென அடையாளம் காட்டும். இறுதிவரை நேர்மையான அரசியல் வாழ்வை நடத்திய தென்னாட்டு அம்பேத்கர் தளபதி அண்ணா கிருஷ்ணசாமி 30.09.1973 இல் மறைந்தார்.

நூல்: ‘தளபதி - அண்ணா தென்னாட்டு அம்பேத்கர் எம். கிருஷ்ணசாமி’ ஆசிரியர் ப.கி. மனோகரன்.

தொடர்புக்கு - 9444059643

Pin It